Skip to main content

தறிகெட்ட கதை




நான் படிப்பெல்லாம் முடித்து வேலை செய்ய ஆரம்பித்திருந்த காலம். கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அது. நான் இணைந்த காலத்தில் அங்கே பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் அணியிலும் ஓரிருவர். அவர்களில் ஒருத்திதான் பெல்லா. பெல்லா என்றால் அழகானவள் என்று அர்த்தம். இத்தாலிக்காரி. பெல்லா என் பெயரின் அர்த்தத்தையும் கேட்டாள். ஜேகே என்றால் ஜெயக்குமரன் என்று சொன்னேன். அதாவது வெற்றிகரமான இளைஞன் என்று பொருள். ‘வாவ் ஸோ ஆப்ட்’ என்றாள். ஆப்ட் என்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் தாங்ஸ் சொன்னேன். பெல்லாவோடு, சந்தித்த இரண்டாவது நாளே நான் டூயட்டும் பாடியிருந்தேன். அப்போது கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் பேமசாகியிருந்த நேரம். இதையே கிசோகர் என்றால் உண்மையைப் புட்டு வைத்திருப்பான். அந்தக் கைங்கரியம் எனக்கில்லை.

எங்கள் அணியிலேயே பிரசாத் என்றவனும் கூட இருந்தான். எனக்கு அவன் சீனியர். மினுவாங்கொடவைச் சேர்ந்தவன். வெறுமனே தற்செயல்தான். பிரசாத்துக்கு இங்கிலிஷ் சுட்டுப்போட்டும் வராது. எனக்கும் வராது. ஆனாலும் ஜொனியன் என்பதால் தெரியாத இங்கிலிஷை பிரிட்டிஷ்காரனுக்கே படிப்பிக்கும் வெடிவல்லமை என்னிடம் இருந்தது. அதனால் பெல்லா என்னோடே நெருங்கிப்பழகுவாள். நான், பெல்லா, பிரசாத் மூவரும் 154 பஸ் எடுக்கவேண்டுமென்பதால் ஒரே ஓட்டோவில்தான் பஸ் ஸ்டாண்ட் போவதுண்டு. அவள்தான் காசு கொடுப்பாள். உண்மையில் நான் நூறிலேயே போகலாம். ஆனாலும் பிரசாத்தை பெல்லாவோடு தனியே அனுப்பக்கூடாது என்று 154 எடுத்து பின்னர் 100 எடுப்பேன். அது கிடக்கட்டும்.
ஒருநாள் புரஜெக்ட் மனேஜர் துன்பம், டெலிவரி பிரஷர், அமெரிக்காகாரனுக்குப் பகல் போன்ற பல காரணங்களால் நாங்கள் மூவரும் இரவிரவாக அலுவலகத்திலேயே நின்று வேலை செய்யும்படியான சூழ்நிலை. பொஸ்டன்காரர் எழும்ப லேட் ஆகும் என்பதால் இரவு உண்வுக்கு வெளியே போகலாம் என்று பெல்லா பிளான் போட்டாள். ஒரு உணவகம் சொல்லுங்களேன் என்றாள். இத்தாலிக்காரியோடு போகும்போது அவள் சாப்பாட்டுக்குக் காசு கொடுப்பாள் என்பதால் எனக்குத் தெரிஞ்ச பணக்கார ஓட்டலான சைனீஸ் டிறாகனுக்கு போகலாம் என்று நான் சொன்னேன். அங்கே உள்ள கணவாய்ப்பொரியல் பிடிக்கும். சூப் என்று சொல்லித்தரும் குழம்பும் பிடிக்கும். பிரசாத் வேண்டாம், பிஸ்ஸாஹட்டுக்குப் போகலாம் என்றான். இத்தாலிக்காரிக்கே பிஸ்ஸாவைக் காட்டி மடக்கலாம் என்பது அவன் பிளான். எனக்கும் வேறு கடைகளைத் தெரிந்திருக்கவில்லை. சைனீஸ் டிராகனுக்குப் பிறகு என் லிஸ்டில் இருந்த எக்ஸ்பென்சிவ் ஹோட்டல் ரொலக்ஸ் என்னுமளவுக்கு நான் ஒரு யாழ்ப்பாணத்தான்.
பிஸ்ஸா ஹட்டுக்குப் போனோம். நான் அதற்கு முன்னர் பிஸ்ஸாவைத் தொட்டே பார்த்ததில்லை. அதனால் எந்தப்பிஸ்ஸாவை ஓர்டர் பண்ணுவது என்று தெரியவில்லை. பெல்லா கப்ரிகியோசா என்று என்னவோ உச்சரித்தாள். பிரசாத் மார்கரிட்டா என்றான். எனக்கு அங்கிருந்த எதையும் உச்சரிக்கும் தைரியம் வரவில்லை. பிஸ்ஸாவா பிட்சாவா என்றே ஒரு குழப்பம். நான் வெறுமனே சிக்கின் கால்களை மாத்திரம் ஓர்டர் பண்ணினேன். குடிப்பதற்கு கோக். மூவரும் வந்து ஒரு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சாப்பாடு வந்து சேர்ந்தது. பிரசாத் ஸ்டைலாக டிசியூவை மடியில் விரித்து வைத்தபடி கத்தி கரண்டியால் பிட்ஸாவை வெட்டிச்சாப்பிட ஆரம்பித்தான். எனக்கு கத்தி வெங்காயம் வெட்ட. முள்ளுக்கரண்டி முட்டை அடிக்க. மற்றபடி அவற்றால் சாப்பிடத்தெரியாது. எப்படியோ, டேபிள் மானர்சுக்காக முள்ளுக்கரண்டியால் சிக்கின் காலைக் குத்தி, பற்களால் சதைகளைக் கிழித்துக் கடித்துக்கொண்டிருந்தேன். என் கடவாய்ப்பல் சூத்தைக்குள் அந்தச் சதைகள் சில்லுப்பட்டு இரண்டு நாளில் பிரச்சனை கொடுக்கப்போகின்றன என்று அப்போது தெரியாது. பெல்லா சறுக்கென்று தன் பிட்ஸாவை வெறும் கைகளால் எடுத்துச் சாப்பிடத்தொடங்கினாள். என்னையும் ஒன்றை எடுத்துச் சாப்பிடச்சொன்னாள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கு அந்தரமாக இருந்தது. பெல்லாவின் உதட்டோரங்களில் பிட்சாவின் தக்காளி சோஸ், பிரெஞ்சு முத்தத்தின் பின்னர் கலைந்துபோகும் லிப்ஸ்டிக்போன்று அப்பியிருந்தது. நான் சாப்பிட்டால் என் மூஞ்சியில் அந்த சோஸும் அப்பி குரங்கின் பின்புறம்போல ஆகிவிடுமோ என்ற பயம் வந்தது. காலானாலும் கோழியே போதும். பிரசாத் இன்னமும் பிடிவாதமாக பிட்சாவை கத்தியால் வெட்டிக்கொண்டிருந்தான். அவன் மனதில் இத்தாலிக்கே பீட்சா எப்படிச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு ஓடிக்கொண்டிருந்திருக்கலாம்.
பிட்ஸா எப்படி என்று அவன் பெல்லாவிடம் கேட்டான். அவள் ‘ஓகே’ என்றாள். சிசிலியை அடிக்குமா என்றான். எங்கள் ஊர் பிட்சாவில் இப்படி நிறையச் சாமானைக் கொட்டமாட்டார்கள் என்றாள். அடி ரொட்டி வேறு மொத்தமாக இருக்கிறது என்றாள். பிரசாத்துக்கு முகம் கறுத்துவிட்டது. ‘உது அமெரிக்கன் ஸ்டைல்’ என்று ஏதோ சொன்னான். எனக்கு பெல்லாவின் இத்தாலிய பிட்சாவின் விவரணத்தோடு அம்மா சுடும் ரொட்டியே பொருந்திவந்தது. உடனே எங்கள் ஊரான யாழ்ப்பாணத்தில் ரொட்டி மொத்தமாக இருக்காது என்றேன். மிக மெலிதான ரொட்டி. அதில் கொஞ்சம் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய்ச்சொட்டை நறுக்கிப் போட்டுத் தட்டுவோம் என்றேன். பிரசாத் அது சப்பாத்தி என்றான். இல்லை, சப்பாத்தி ஆட்டா மாவில் செய்வது. இது அமெரிக்கன் மாவில் செய்வது. இது எங்கள் ஊர் ரொட்டியடா மூதேசி என்றேன். சிலவேளை ரொட்டிக்குள் கிழங்குக் கறியைக் கொட்டி சுற்றித் தட்டுவோம். கிழங்கு ரொட்டிக்கு அபிராமிதான் பேமஸ் என்றேன். பெல்லா உடனே ‘கல்ஸவுன்’ பிட்ஸாவா என்றாள். என்ன சனியனோ சம்பலோடு தொட்டுச் சாப்பிட்டால் சொர்க்கம் என்றேன். ‘I would love to taste it one day’ என்றாள். பிரசாத் அதிகம் பேசவில்லை. அவன் தனது முதல் துண்டையே கத்தியால் வெட்டத் திணறிக்கொண்டிருந்தான். முடிவில் தன் மொத்த பிட்சாவையும் மூதேவி முடிக்கமாட்டாமல் டேக் எவே எடுத்துவந்தான். பெல்லாவும் இரண்டு துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு மீதியை டேக் எவே எடுத்து என்னிடம் கொடுத்தாள். இந்தா, கொண்டுபோய் பிடித்தால் காலையில் சாப்பிட்டுப்பார் என்றாள்.
மீண்டும் அலுவலகம் வந்தவுடன் நான் இணையத்தில் கல்சவுனைத் தேடிப்பார்த்தேன். ம்ஹூம். அப்போதைய கூகிளுக்கு அவ்வளவு அறிவு இல்லை. நான் உடனே மூடிய பீட்ஸா என்று தேடினேன். உடனே கல்ஸவுன் வெளியே வந்தது. அதைப்பார்த்தால் கிழங்கு றொட்டிமாதிரி இருக்கவில்லை. பெரிய தாட்டான் பற்றிஸ் மாதிரி இருந்தது. அடுத்தநாள் அதிகாலை டாக்சி பிடித்து நான் வீடு போகிறேன். முந்தைய நாள் பெல்லா தந்த பிட்சா பெட்டியையும் மறக்கவில்லை. வீட்டுக்கு வந்த கையோடு பிட்சாவுக்கு மேலே கிடந்த குப்பைகளை வழித்துக் கொட்டிவிட்டு, கீழ் ரொட்டியைக் கொஞ்சம் சூடாக்கி பழங்கறியோடு தொட்டுச்சாப்பிட்டேன். போறணையிலிருந்து அரைகுறையாக எடுத்த ரோஸ்பாண்போல அது இருந்தது. நான் உடனே அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரவிருந்த கஜனிடம் ஐந்து கிழங்கு ரொட்டிகளை அபிராமியிலிருந்து வாங்கிவரச்சொன்னேன். ரொட்டியை வட்டமாக மடிக்காமல் பற்றிஸ்போல மடித்து வாங்கு என்றேன். அவன் பாத்து வாங்கியாறன் என்றான். அவன் பாத்து செய்யிறன் என்றால் ஒன்றுமே செய்யமாட்டான் என்று எனக்குத் தெரியும். அன்றிரவு முகமாலை, ஓமந்தை செக்கிங் எல்லாம் தாண்டி அவன் கொழும்பு வந்து சேரும்போது ஐந்து ரொட்டிகளில் ஒன்று சப்பளிந்துவிட்டது. இரண்டை அவன் வரும் வழியிலேயே சாப்பிட்டிருந்தான். ஆக இரண்டுதான் தேறியது. ஆனால் அவை பற்றிஸ்மாதிரி இருக்கவில்லை. கூடவேயிருந்த தேங்காய்ச்சம்பல் அவிஞ்சு பாண்டல் நாத்தம் நாறியது. நான் சம்பலைத் துடைத்து எடுத்துவிட்டு உருப்படியாக இருந்த இரண்டு ரொட்டிகளை அடுத்தநாள் காலை கொஞ்சம் சூடாக்கிவிட்டு கொண்டுபோய் பெல்லாவிடம் கொடுத்தேன். இதுதான் யாழ்ப்பாணத்து கல்ஸவுன் என்றேன். ஷேப் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் ருசி தரம் என்றேன். அவள் கடித்துப்பார்த்துவிட்டு ‘நைஸ்’ என்றாள். ஆனால் சாப்பிட்டு முடிக்கவில்லை. பின்னர் ஐந்து நிமிடங்களில் ஹாண்ட் பாக்கைத் தூக்கிக்கொண்டு அவள் பாத்ரூம் போனதைக் காட்டி பிரசாத் சிரித்தான். பெண்கள் ஹாண்ட் பாக்கோடு பாத்ரூம் போவதை இதை எழுதும் மூதேவி ஒருகாலத்தில் பார்த்துச் சிரித்திருக்கிறது. காரணம் தெரியாமல். Forget it.
அதன்பின்னர் நாங்கள் மூவரும் பிட்சா ஹட் என்றில்லை, வேறு எந்த உணவகத்துக்கும் சேர்ந்து போகவில்லை. அந்த பொஸ்டன் புரெஜெக்டும் புகைந்துபோய்விட்டது. நான் சில மாதங்களிலேயே சிங்கப்பூர் போய்விட்டேன். ஆனால் பிரசாத்தும் பெல்லாவும் எனக்குத் தெரியாமல் தனியாகக் கட்டை போட்டிருக்கிறார்கள் என்பதை பின்னாளில்தான் அறிந்தேன். அடுத்தவருடமே அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இரண்டாவது வருடம் திருமணம் முடித்தார்கள். இப்போது மூன்று குழந்தைகள். கோவிட்டின்போது பெல்லாவின் தாத்தா இறந்துபோனார். போன ஈஸ்டருக்கு பிரசாத்தும் அவர்களின் இரண்டாவது மகளும் சிசிலிக்கரையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாமே முகநூலினூடாக நான் அறிந்தது. மற்றபடி அவர்களோடு எனக்குப் பெரிதாகத் தொடர்புகள் இல்லை. தாத்தா மரணத்துக்கு ரிப்பினேன். பெல்லாவின் பிறந்தநாளுக்கு மாத்திரம் நான் வாழ்த்து அனுப்புவேன். பிரசாத்துக்கு அனுப்புவதில்லை. அவன் வாழ்ந்தென்ன. செத்தென்ன.
சிங்கப்பூரில்தான் எனக்கு பென்கின் அறிமுகமானாள். பென்குயினில் ஜி இருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? பின்னரேன் அதைத் தவிர்த்து உச்சரிக்கிறாய் என்று அவள்தான் என்னைத்திருத்தியவள். தமிழில் அதை வாசித்துப் பழகியதால் வந்தவினை என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தேன். பென்கின்தான் எனக்கு குஸ்குஸ்ஸை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவள். அதனை அவள் குசுகுசு என்று சொல்லியபோது அப்படிச்சொல்லாதே தமிழில் அது ஒரு கெட்டவார்த்தை என்றேன். அப்படியென்ன வார்த்தை என்றாள். சொன்னேன். அது கெட்டவார்த்தை என்றால் இவற்றையெல்லாம் என்னவென்பீர்கள் என்று ஒரு வரிசையைச் சொன்னாள். கிசோகர் என்றால் முழுதையும் எழுதியிருப்பான். பெண்கள் கெட்டவார்த்தை பேசும்போது அரியண்டமாக இருக்கும் என்று இதை எழுதும் மூதேவி அப்போதுவரைக்கும் நினைத்துக்கொண்டிருந்தது. அதை மாற்றியவள் பென்கின். அதிலும் டிக் ஹெட் என்பதை அவள் உச்சரிக்கும்போது அப்படியே ஆகிவிட்டால் என்ன என்றிருக்கும். டிவைன்.
குசுகுசுவைச் சாப்பிட்டோம். சில பல தானியங்கள், பிளம்ஸ் எல்லாம்போட்டு அவித்துக் கொடுத்தார்கள். நன்றாகவே இருந்தது. பென்கினுக்கு குசுகுசுவும் எங்கள் ஊர்ப் புட்டும் ஒன்று என்று சொன்னேன். அப்படியா என்றாள். நான் அடுத்தநாள் அவித்துக்கொண்டுபோய்க் கொடுத்தேன். அதிகம் இல்லை. புட்டும் முட்டைப்பொரியலும். எல்லாவற்றையும் கலந்து ஒரு லஞ்ச் பொக்சில் போட்டுச் சின்னதாக ஒரு பிளாஸ்டிக் கரண்டியும் வைத்து நீட்டினேன். பென்கின் சாப்பிட்டாள். ‘ம்ம்ம் நைஸ்’ என்றாள். இரண்டாவது கரண்டியோடு அவளும் ஹாண்ட்பாக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அரைமணிநேரம் கழித்து பென்கின் திரும்பிவரும்போது அவளது வெளிர் மூக்கு வீங்கி சைனாக்காரி நோர்த் இண்டியன்மாதிரி மாறியிருந்தாள். இத்தனைக்கும் பென்கின்…
நிற்க.
நான் ஏன் உண்மையை எழுதுவதில்லை என்று என் நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. இதுதான் காரணம். உண்மையை எழுதும்போது கதைகள் தறிகெட்டுப் பயணிக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில் உண்மைக்கு ஒரு நீதியோ ஒழுங்கோ காரணங்களோ இருப்பதில்லை. உண்மை ஒரு நோக்கத்தை நோக்கிப் பயணிப்பதுமில்லை. Poetic justice என்று ஒரு மண்ணும் நிஜத்தில் நிகழ்வதில்லை. நீதிகளின்பாற்பட்டு சம்பவங்கள் அமைவதற்கு வாழ்க்கை ஒன்றும் அம்புலிமாமா கிடையாது. உண்மைச்சம்பவங்களில் நீதியைத் தொடமுடியாமல்தான் கதைகளை நாங்கள் புனையவேண்டியிருக்கிறது. பாருங்கள் பெல்லாவுக்கு எங்கள் கிழங்கு ரொட்டி பிடிக்கவில்லை. True. பிட்சாவை கத்தி கோடரிகொண்டு வெட்டும் ஒரு காட்டெறி இப்போது சிசிலியின் மாப்பிள்ளை. True. குசுகுசு சாப்பிடும் பென்கினுக்குப் புட்டு பிடிக்கவில்லை. True. எட்டில் செவ்வாய் என்றாலும் பரவாயில்லை, ஆனால் புட்டுப்பிடிக்காத பொம்பிளையைக் காதலிக்கமுடியுமா என்ன? Neither true, nor false. அது பென்கின் என்னைக் காய்வெட்டியபிறகு நான் சொன்ன காரணம் என்க. True.
அப்படியானால் இந்தக்கதையை என்னத்துக்கு எழுதவேண்டுமென்று கேட்பீர்கள் அல்லவா? அது அறிய, எனக்கு அமைந்ததுபோல, மெக்சிக்கோவில் இளங்கோவுக்கு அமைந்ததுபோல ஒரு எல்லோரா வாழ்க்கையில் கிடைக்கவேண்டும். True.
எல்லோரா என்ன சொல்வாள் தெரியுமா?
“May be you just read it for the pleasure of it”, False.
அதைச்சொன்னது ஹெமிங்வே. True.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...