Skip to main content

காலத்தின் காலடி


நூலகம் அமைப்பைப் பற்றி எத்தனை தடவை சிலாகித்தாலும் போதாது என்றே தோன்றுகிறது. என்னுடைய ஈழம் சார்ந்த, தமிழ் சார்ந்த பல தேடல்கள் எல்லாம் நூலகம் தளத்திலேயே போய் முடிவடைந்திருக்கின்றன. அநேகமான உசாத்துணைகள் எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். யாழ்ப்பாணப் பொது நூலகம் என்பது எங்களுடைய வரலாற்றுரீதியான ஒரு கலாசார சொத்து என்றாலும் ஒரு முழுமையான நூலகத்துக்கான பலனை உலகம் முழுதும் கொடுத்துக்கொண்டிருப்பது என்னவோ நூலக இணையம்தான். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஐக்கிய நாடுகளின் நிறுவனரீதியான பங்களிப்புடன் செய்யக்கூடிய ஒரு பெரும் முயற்சியை, ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, தன்னார்வப் பணியாளர்களின் உதவியோடு தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்வதென்பது ஒரு பெரும் சாதனை. அதுவும் எந்தவித சர்ச்சைகளும் குழப்படிகளும் பொதுவெளிக்குள் வரவிடாத ஒழுங்கமைப்புடன் இருக்கும் அமைப்பு. ஈழத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கு ஒரு மாதிரி அமைப்பாக நூலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

சின்ன உதாரணம் ஒன்று.
ஒரு சிறுகதைக்காக ஈழத்தின் நாட்டுக்கூத்து முயற்சிகள், சித்தர்பாடல்கள் பற்றித் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது நூலகம் தளத்தில் ‘காலத்தின் காலடி’ என்றொரு நாட்டுக்கூத்துத் தொகுப்பைக் காணக்கிடைத்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட நூல் இது. 97ம் ஆண்டு பதிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்து வருடங்களாக அந்தத் தமிழ்ச்சங்கம் அரங்கேற்றிய நாட்டுக்கூத்துகளின் நூலுருவம் அது. 92 முதல் 96வரையான நாட்டுக்கூத்துகள். ஒரு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் தொடர்ச்சியாக ஐந்துவருடங்கள், அதுவும் யுத்தகாலத்தில் பேராதனையில் நாட்டுக்கூத்துகளை எழுதி அரங்கேற்றியிருக்கிறது என்றால் அது எத்தகை சாதனை?
நூலின் முதலாவது படைப்பு ‘வாலி வதை’. 92ம் ஆண்டு அரங்கேறியிருக்கிறது. அதன்பின்னர் கதிரேசனிலும் கண்டி இந்து கலாசார மண்டபத்திலும் ரூபவாஹினியிலும்கூட அந்தக் கூத்தை மேடையேற்றியிருக்கிறார்கள். ஜோர்ஜ் டெல்வின் எழுதி அரங்காற்றுகை செயதது. அதில் வாலி சுக்ரீவனை நோக்கிக் கோபத்துடன் போரிடச் செல்லும் பாடலைப் பாருங்கள்.
“கழுத்தினில் மாலை தாங்கி விழிகளின் பொறிகள் ஏந்தி
நெறியது பிறழ்ந்தபோதும் வெறியதில் பித்தம் கொண்டு
வழியெல்லாம் கால்கள் பார்த்து குதியதில் வாலி தேடி
கவியெல்லாம் கிளைகள் தாவ புயலாகப் புகுந்திட்டானே”
93ம் ஆண்டும் டெல்வினுடைய கூத்துதான் அரங்கேறுகிறது. இம்முறை ‘இராவணன் வதம்’. இராவணன் தூதனாக வரும் வாலியின் மகன் அங்கதனைப்பார்த்துப் பாடும் பாடல் ஒன்றிலிருக்கும் அரசியலைக் கவனியுங்கள்.
“என்னாசை அங்கதனே கேள்
பொன்னான உன் தந்தையும் எங்கே?
மாய்த்தோரின் படையணியில் சேர்ந்து
ஏய்ந்தேனோ மாய்கிறாய் நீயும்
உன்தையும் நான்தான் எந்தையும் ஆவாய்
பொன்முடி கொண்டு என்னுடன் அமர்வாய்
அரசை ஏற்பாய் ஆசை தீர்ப்பாய்
ஆசை கொண்டே காசினியை ஆள்வாய்”
அதற்கு அங்கதன் பதில் சொல்கிறான்.
“வேங்கையை வென்றவனுக்கு
நாய்கள் தரும் பரிசும் ஏனோ
சோகமாய்த் தேம்பிடும் தேவி
சேமமாய்ச் சேர்ந்திடப் பணியும்
முடிதனை நொருக்கியே கரைதனின் தளிர்ப்போம்
உயிர்தனைக் குடிப்போம்
வீரமுழக்கம் இட்டேஇங்கு
தடைகளைத் தகர்த்து படைகளை அழிப்போம்”
94ம் ஆண்டு சி.ஜே.முரளிதரன் என்பவரின் கூத்து அரங்கேறுகிறது. இந்த ஆற்றுகையும் வெறுமனே பேராதனையில் மாத்திரமின்றி கண்டி திரித்துவக் கல்லூரியிலும் கதிரேசனிலும் அவை ஏறுகிறது. கூத்தின் பெயர் ‘கர்ணன்’. போர்க்களத்தின் கர்ணன் அருச்சுனனின் அம்புபட்டு வீழுந்து கிடக்கிறான். பாடல் இது.
“கதலியின் கனியில் ஊசி
கனிந்திடச் சேருமாப்போல்
கணைதனை ஏற்று மார்பில்
கலங்கிட சுற்றும்பார்த்து
இரப்பவர்க்கில்லையெனா வழங்கிடும் வள்ளல் கர்ணன்
செய்நன்றி கொன்றிடாமல்
மெய்பட நிலத்தில் வீழ்ந்தான்”
‘கதலியின் கனியில் ஊசி’ உவமானம்தான் எத்தனை அழகு.
95ல் மீண்டும் அதே முரளிதரனின் படைப்பு. பெயர் “புதுயுகம் படைப்போம்”. சாதி, மதம், இனம், சமூக அன்னை, ஆண், பெண், இளைஞர்கள் எல்லாம் பாத்திரங்களாக இடம்பெறுகின்ற நவீன சமூக நாடகம் இது. இடையிடையே பாரதியும் வருகிறான். அதில் இனம் என்கின்ற அரக்கர் பாத்திரம் பாடும் பாடலைப் பாருங்கள்.
“எனையொத்த தனிவீரன் உளரோ இப்புவிமேலே - கேளாய்
எந்தன் பனையொத்த - கரத்தாலே
அணைபாயும் குருதிதான் பாராய்”
96ல் மீண்டும் முரளிதரன் களத்தில் இறங்குகிறார். கூத்தின் பெயர் ‘அபிமன்யு’. அந்தக்கூத்தில் உத்தரைக்கும் உத்தரையின் தோழிக்கும்கூட பாடல்கள் இருக்கின்றன.
“காலத்தின் காலடி” நூலின் முன்னுரைகளும் அக்காலத்தின் கண்ணாடிகளாகவே தெரிகின்றன. பேராதனைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னுரையிலிருந்த ஆதங்கம் ஒன்றைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. வித்தியானந்தன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நாட்டுக்கூத்துகளுக்குக் கிடைத்த விமர்சனங்களைப்போல தாங்கள் ஐந்துவருடங்களாக மேடையேற்றிய நாடகங்களுக்கு எந்த விமர்சனங்களும் வரவில்லை என்று அவர்கள் குறைப்பட்டிருக்கிறார்கள். சரிநிகர் பத்திரிகை மாத்திரமே இந்த நாடகங்கள் பற்றிய சிறு குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. ஏனைய பத்திரிகைகள் கணக்கிலேயே எடுக்கவில்லை. அந்த முன்னுரை இன்னொரு புள்ளியையும் தொடுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதை, கவிதை முயற்சிகள் தமிழிலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கிய நிலையிலும் நாடக முயற்சிகள் ஓரளவு போட்டிபோடும் நிலையிலும் இருந்தாலும் நாட்டுக்கூத்து அரங்க அளிக்கைகள் மாத்திரமே நிபுணர்களுக்கு சவால் கொடுக்கும் நிலையில் இருக்கிறது என்று அவர்கள் பெருமிதப்பட்டிருக்கிறார்கள். நான் மொறட்டுவப் பல்கலையில் படித்த காலத்தில் இந்த மூன்றிலுமே நாங்கள் பின்தங்கித்தான் இருந்தோம் என்று நினைக்கிறேன். நாங்களும் நாடகங்களும் சிறுகதைகளும் செய்திருந்தாலும் அவற்றில் ஒரு முதிர்ச்சி இருந்ததாகச் சொல்லமுடியாது. நிச்சயமாக இந்த நூலில் இருக்கும் கூத்துகளின் தரத்தை எமது படைப்புகள் நெருங்கியே இருக்கவில்லை. ஆனால் தற்போதைய பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வகை முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. என் ஒரே வேண்டுகோள் இதுதான். ஒரு சங்கமாக பல முயற்சிகளை செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே சமயம் ஒரு முயற்சியை மிக மிகத் தரமாகவும் ஆழமாகவும், ஒரு குறித்த கருவைத் தேர்வு செய்து, நேரம் எடுத்து, நவீன சமூக வலைத்தளக் கவனங்களுக்கு எடுபடாமல் ஓர்மமாக முயலுவது என்பது மிக முக்கியம். அதுதான் நிலைக்கும். அதுதான் முப்பது வருடங்கள் கடந்தும் யாரையும் போய்ச்சேரும். அதை அவர்கள் செய்யவேணும் என்பது என் பெருவிருப்பம்.
இந்த ஐந்து நாடகங்களையும் அரங்கேற்றிய ஜோர்ஜ் டெல்வின் குரூசும் ஜூட் முரளிதரனும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என்று பேராசிரியர் தில்லைநாதன் குறிப்பிடுகிறார். மன்னாரின் கூத்து முறைகள் தனித்துவமானவை. அதை நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று நடித்தது சிறப்பானது என்று அவர் தன் அணிந்துரையில் மாணவர்களை சிலாகிக்கிறார். இதில் முரளிதரன் பொறியியற்பீடத்தைச் சேர்ந்தவர். டெல்வின் குரூஸ் பற்றிய தகவல்கள் இல்லை.
இந்த கூத்துகளையும் இவர்களின் கதைகளையும் படித்தபின்னர் எனக்குள் ஏற்பட்ட உவகையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. அன்றொருநாள் மாலை எங்கள் வீட்டுக்கருகிலிருக்கும் சவுத் மொராங் மலைப்பகுதியில் நடைப்பயிற்சியிலிருந்தேன். கொழும்பிலிருக்கும் என் இனிய நண்பர் ஞானசுகந்தனுக்கு அழைப்பெடுத்துப் பேசியபடி. அப்போது கொழும்பில் அதிகாலை ஐந்து மணி. அவர் எழுந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். அந்நேரம்பார்த்து நான் நடந்த பாதையோரம் புற்களை மேய்ந்துகொண்டிருந்த கங்காரு ஒன்று என் சலனத்துக்கு திடீரென நிமிர்ந்தது. இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு என்னையே உற்றுப்பார்த்துக்கோண்டிருந்தது. ஏழடி உயரமான பெரிய உருப்படி அது. நான் உடனேயே வீடியோவை ஓன் பண்ணி ஞானசுகந்தனுக்கு அந்தக் கங்காருவைக் காட்டினேன். ஆச்சரியத்தில் அவர் “ஊருக்குள்ளயும் இது வருமா” என்று கேட்டார். “இல்லை, அதன் ஊருக்குள்தான் நான் வந்துவிட்டேன்” என்றேன். கொழும்பில் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து டீ குடித்துக்கொண்டிருக்கும் ஒருத்தருக்கு எங்கோ அவுஸ்திரேலியாவிலிருக்கும் சவுத் மொறாங் என்ற மலையில் மேயும் கங்காரு காட்சி கொடுக்கும் என்று எவர் கண்டார். அந்தக்கணம் என்னவோ தற்செயல்தான். ஆனால் அது கொடுக்கும் அனுபவம் நிரந்தரமல்லவா?
‘காலத்தின் காலடி’ நூலும் எனக்கு அப்படித்தான். 90களில் எங்கோ பேராதனைப் பல்கலைக்கழக மண்டபத்தில் அங்குள்ள மாணவர்கள் அரங்கேற்றிய கூத்துகளின் தொகுப்பு இது. அவை மேடையேறும்போது நான் யாழுப்பாணம், பளை, வன்னி, நெலுக்குளம் என்று இடம்பெயர்ந்து அலைந்திருக்கிறேன். அவை பின்னர் புத்தகமானதும் எனக்குத் தெரியாது. அது நூலகத்தில் ஏறியதையும் அறியேன். நான் சொந்த நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து கொழும்பு, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என்று குடியேறி, சும்மா ஒரு சிறுகதைக்கென சித்தர்பாடல்களைத் தேடும்போது தற்செயலாக அந்த நூல் என்னை வந்து சேர்கிறது. ஞானசுகந்தனுக்கு வீடியோவில் கங்காருவைக் காட்டியதுபோல உங்களுக்கு இந்தக் கட்டுரை அமைக்கிறது. இந்த வலைப்பின்னலை ஒரு ஜாலம் என்று சொல்லாமல் வேறென்னென்பது?
அந்த ஜோர்ஜ் டெல்வின் குரூசும் ஜூட் முரளிதரனும் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இங்கே ஒருத்தன் அவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்வது தெரிந்தால் அவர்கள் என்ன என்ணக்கூடும்? “விண்ணில் ஓடும் மேகங்களே, எந்தன் வீரனிடம் சேதி சொல்லுங்களே” என்று பாடல் பாடிய அந்த உத்தரை எங்கே? அந்த அக்காவுக்கு இப்போது ஐம்பது வயது இருக்கலாம். தான் இப்படி ஒரு நாடகம் நடித்ததை எப்போதாவது ரயிலில் பயணிக்கும்போதோ பூங்காவில் நடக்கும்போதோ அல்லது காலையில் ஆறுதலாக டீ குடிக்கும்போது அவர் எண்ணிப்பார்ப்பதுண்டா? அவர் பெயர் கல்யாணியாக இருக்கவேண்டும். அந்த அருட்சகோதரர் சூ. கருணாகரன் எங்கிருக்கக்கூடும்?
நண்பர்களே முடிந்தால் இந்த உதவியைச் செய்யமுடியுமா? இந்தக் கூத்துகளை எழுதியவர்களையும் நாடகங்களில் நடித்தவர்களையும் இயலுமானவரை சமூகத் தளங்களில் தேடிக்கண்டுபிடிப்போமா? உங்களில் யாருக்காவது இவர்களில் எவரையும் தெரியுமானால் அறியத்தாருங்கள். அவர்கள் முகநூலில் இருப்பின் அறிமுகப்படுத்துங்கள். எல்லோருடைய பெயர்களும் இந்த நூலில் கிடைக்கிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இவர்கள் செய்த அருமுயற்சிகள் பற்றி இன்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உரத்துச்சொல்லுவோம். எந்தப்பத்திரிகைகளும் தம்மைக் கணக்கே எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தின் சிறு துளியையாவது நாம் குறைக்க முயலலாம்.
‘காலத்தின் காலடி’ நூலை எமக்காக என்றோ வெளியிட்ட அந்தப் படைப்பாளிகளுக்கு பெரு நன்றி சொல்லி நிற்போம். அதைக்கொண்டுவந்து சேர்த்த நூலகத்துக்கும் சேர்த்து.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...