நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கி ஊர் முழுவதுமே முடங்கியிருந்த நாட்கள் அவை. அந்தக் காலத்தில்தான் நாங்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்திருந்தோம். அம்மா என் தம்பியைத் தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வருவார். நானோ அப்பா எனக்குப் புதிதாக வாங்கிக்கொடுத்த ஸ்கேட்போர்டில் ஓடிவருவேன். சமயத்தில் அப்பாவும் எங்களோடு நடைப்பயிற்சியில் சேர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அவர் வந்தாலும் எம்மோடு ஒன்றாகச் சேர்ந்து நடக்கமாட்டார். நாங்கள் மெதுவாக நடக்கிறோம் என்று குறை சொல்லிக்கொண்டு அவர் தன்பாட்டுக்குப் பாட்டுக் கேட்டபடியே ஓடத் தொடங்கிவிடுவார். அதற்காக அம்மா அவரைக் கோபித்துக்கொள்வதுண்டு. நான் எதுவுமே சொன்னதில்லை.