Skip to main content

கரண்டிக் கிராமம்



நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கி ஊர் முழுவதுமே முடங்கியிருந்த நாட்கள் அவை.

அந்தக் காலத்தில்தான் நாங்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்திருந்தோம். அம்மா என் தம்பியைத் தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வருவார். நானோ அப்பா எனக்குப் புதிதாக வாங்கிக்கொடுத்த ஸ்கேட்போர்டில் ஓடிவருவேன். சமயத்தில் அப்பாவும் எங்களோடு நடைப்பயிற்சியில் சேர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அவர் வந்தாலும் எம்மோடு ஒன்றாகச் சேர்ந்து நடக்கமாட்டார். நாங்கள் மெதுவாக நடக்கிறோம் என்று குறை சொல்லிக்கொண்டு அவர் தன்பாட்டுக்குப் பாட்டுக் கேட்டபடியே ஓடத் தொடங்கிவிடுவார். அதற்காக அம்மா அவரைக் கோபித்துக்கொள்வதுண்டு. நான் எதுவுமே சொன்னதில்லை.

ஒருநாள் நாங்கள் இப்படி நடந்துபோகும்போது வழியிலிருந்த சிறு புல் மேட்டிலே ஓரிரு கரண்டிகள் நாட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அவற்றின் தலைப்பகுதிக்கு கண், மூக்கு, வாய் வைத்து தலை முடியும் வரையப்பட்டிருந்தது. எனக்கு அதைப்பார்க்கச் சிரிப்பு வந்தது. ஏன் அப்படிக் கரண்டிகளை நட்டு வைத்திருக்கிறார்கள் என்று நான் அம்மாவிடம் கேட்டேன். அவருக்கும் எதுவும் தெரியவில்லை. அடுத்தநாள் போகும்போது கரண்டிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியிருந்தது. மூன்றாம் நாள் அவற்றை எண்ணிப்பார்த்தபோது இருபத்தியெட்டு இருந்தது. சிறிய பிளாத்திக்குக் கரண்டிமுதல் பெரிய மரக்கரண்டிவரை விதம் விதமான கரண்டிகள். என் வயதையொத்த சிறுவர்கள் தாம் வீட்டிலிருந்து கொண்டுவந்த ஒப்பனை செய்யப்பட்டக் கரண்டிகளை அந்தப் புல் மேட்டில் நட்டுவைப்பதைக் கண்டேன். அதைப்பார்க்க எனக்கும் அப்படிச்செய்யவேண்டுமென்ற ஆசை வந்தது. அம்மாவிடம் கேட்டு நானும் சமையலறையிலிருந்த சில பழைய அகப்பைகளை எடுத்துச் சோடனை செய்தேன். கறுப்பு மையால் தலை முடியும் மண்ணிறத்தில் கண்களும் மூக்கும் வாயும் அவற்றுக்கு வரைந்தேன். அப்பாவைப்போல மீசையும் தாடியும் வைத்தேன். இன்னொரு அகப்பையை எடுத்து அதற்கு அம்மாபோல நீளமாக முடி வைத்து சேலையும் கட்டி நெற்றியில் பொட்டு இட்டேன். அத்தோடு இரண்டு சிறிய கரண்டிகளுக்கும் ஒப்பனை செய்தேன். அது நானும் என் தம்பியும்.

மறுநாள் நான் வடிவமைத்த கரண்டிகளை எடுத்துச்சென்று அந்தப் புல்மேட்டில் நடப்போனேன். அங்கே இப்போது நூற்றுக்குமதிகமான கரண்டிகள் சேர்ந்து அது சிறு கிராமமாகவே மாறியிருந்தது. நான் என் கரண்டிகளை ஒரு ஓரமாக ஊன்றி வைத்தேன். அம்மா, அப்பா, நடுவில் நானும் தம்பியும். அந்தச்சமயத்தில் வேறும் இரு சிறுவர்கள் வந்து தம் கரண்டிகளை நட்டதைப் பார்த்தேன். நாம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். ஒருத்தியின் பெயர் பெங் நீ. மற்றவன் டேவிட். அவர்கள் குடும்பமும் நாங்கள் செல்லும் பாதையிலேயே நடைப்பயிற்சிக்குச் செல்வதை நான் கவனித்திருக்கிறேன். ஆனால் அன்றுதான் நாங்கள் பேசிக்கொண்டோம். அதன்பிறகு நடைப்பயிற்சிக்குப் போகும் சமயங்களில் நாங்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தோம். நடைபாதைக்கருகிலேயே விளையாட்டுத்திடல் ஒன்றிருந்தது. சமயத்தில் அதில் விளையாடுவோம். அல்லது புல்வெளியில் உதைப்பந்து விளையாடுவோம். சில வாரங்களில் ஜிம், ராகுல், பௌசியா என மேலும் பல சிறுவர்கள் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். எங்கள் பெற்றோர்களும் பரஸ்பரம் நண்பர்களாகி தமக்கிடையே தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் நடைப்பயிற்சியை ஆரம்பித்தார்கள். நாம் சேர்ந்து விளையாடும்போது அவர்கள் தமக்கிடையே கதைகள் பேசினார்கள். பின்னர் அவரவர் வீடுகளுக்குக் கலைந்துபோவோம். எனக்கு ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும்போது கவலையாக இருக்கும். அடுத்த நாள் மாலை விளையாட்டுக்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். சமயத்தில் காலையிலேயே நடைப்பயிற்சி தொடங்கலாமே என்று அம்மாவிடம் கேட்டு ஏச்சு வாங்கியதுமுண்டு.

மாதங்கள் கழிந்தன. நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் ஊர் முடக்க உத்தரவு நீக்கப்பட்டது. அம்மா மீண்டும் அலுவலகத்துக்குப் போக ஆரம்பித்தார். தம்பி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்குத் திரும்பவும் செல்ல ஆரம்பித்தான். எனக்கும் பாடசாலை தொடங்கிவிட்டது. அது முடிந்து அப்பா வந்து கூட்டிச்செல்லும்வரை நான் பாடசாலையின் சிறுவர் பராமரிப்பிலேயே காத்திருக்கவேண்டும். நாம் எல்லோருமே வீடு வந்துசேர மாலை ஆறுமணிக்கு மேலே ஆகிவிடுகிறது. அம்மா சமயத்தில் ஏழுமணிக்குப் பிறகுதான் வந்து சேர்வார். அப்போது போய் அம்மாவிடம் நடைப்பயிற்சிக்குப் போகலாமா என்று கேட்டால் எரிந்து விழுவார். அப்பாவோ வீட்டிலிருந்தே தம்பியோடு விளையாடு என்பார். தம்பியோடு எப்படி விளையாடுவது? அவனுக்கு எந்த விளையாட்டினதும் சட்ட திட்டங்கள் சரிவரத் தெரியாது. எல்லா விளையாட்டுப் பொருட்களையும் அவன் குழப்பிவிடுவான். லெகோ கட்டைகளை நான் அடுக்க ஆரம்பித்தால் உடனே அதைப் பிடுங்கி எறியத் தொடங்கிவிடுவான். எனக்கு அழுகை அழுகையாக வரும். அம்மாவும் அப்பாவும் பாவம் என்று நான் எதுவுமே சொல்வதில்லை. எனக்கும் தம்பிக்குமாகவே அவர்கள் இருவரும் கடினமாக உழைக்கிறார்கள் என்று அம்மா அடிக்கடி எனக்குச் சொல்லுவார். எல்லாப் பெற்றோரும் அப்படியானவர்கள் இல்லைதானே. ஆனாலும் கரண்டிகளையும் அந்த நண்பர்களையும் என்னால் மறக்கவே முடியவில்லை.



என் பிறந்தநாள் வந்தது. பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் கேட்டார்கள். ஐபாட் அல்லது பிளே ஸ்டேசன் என எது வேண்டுமானாலும் கேள் என்று அப்பா சொன்னார். நான் அதுவெதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னை அன்று மாலை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச்செல்லுங்கள் என்றேன். எனக்கு அந்தக் கரண்டிக் கிராமத்தைப் பார்க்கவேண்டும். என் நண்பர்களோடு விளையாடவேண்டும். அதைத்தான் நான் என் பிறந்தநாள் பரிசாகக் கேட்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முகம் வாடிவிட்டது. சரி என்று அன்று மாலையே என்னை அவர்கள் நடைப்பயிற்சிக்கு அழைத்துச்சென்றார்கள். என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நான் கையோடு சில கரண்டிகளுக்கு ஒப்பனை செய்து அந்தக் கரண்டிக் கிராமத்தில் நட்டுவைக்கலாம் எனக்கொண்டு போனேன். இத்தனை நாட்களில் அங்கே ஆயிரத்துக்குமதிகமான கரண்டிகள் முளைத்திருக்கக்கூடும் என்று என் உள்மனது சொன்னது. பெங் நீ இந்நேரம் அங்கே திடலில் விளையாட ஆரம்பித்திருப்பாள். நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

கரண்டிக் கிராமத்தை எட்டியதும் நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். ஐயோ, என்ன இது?

அங்கே எல்லாக் கரண்டிகளுமே நிர்மூலமாகிக் கிடந்தன. அடித்து ஊற்றிய மழையில் அவை வீழ்ந்திருக்கலாம். அல்லது கங்காருக்கள் மிதித்திருக்கக்கூடும். பல கரண்டிகளைக் காணவில்லை. யாருமே கரண்டிகளை நடுவதற்கு இப்போது வருவதில்லை என்று தோன்றியது. என் நண்பர்களையும் காணவில்லை. அம்மா என் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டார். கரண்டிக் கிராமத்தைத் தொடர்ந்து பேணுவதற்கு ஆட்கள் இல்லையாம். ஊர் வழமைக்குத் திரும்பியதால் எல்லோரும் தத்தமது வேலைகளில் பரபரப்பாகிவிட்டார்கள் என்று அம்மா சொன்னார். முன்னர்மாதிரி எல்லோரும் குடும்பத்தோடு நடைப் பயிற்சி செய்வதில்லை. அவரவருக்குத் தம் குழந்தை, குட்டி என்று ஆயிரம் சோலிகள் என்றார். எனக்கு அது விளங்கவேயில்லை. கரண்டிக் கிராமத்தைக் கட்டுவதை விடவும் அப்படி என்ன முக்கியமான வேலை இந்த உலகத்தில் இருக்கமுடியும்? என் நண்பர்கள் எல்லாம் எங்கே? என் நண்பர்களை மறுபடியும் எப்படிப் பார்ப்பேன்? அவர்களையும் அவர்களது பெற்றோர்கள் நடைப்பயிற்சிக்குக் கூட்டிவருவதில்லையா? ஏன் இந்தப் பெரியவர்கள் எங்களுடைய உலகைப் புரிந்துகொள்ளாமல் எந்நேரமும் அவர்களைச் சுற்றியே சிந்திக்கிறார்கள்? எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

திடீரென்று ஒரு யோசனை வந்தது. நான் என் கண்களைப் புறங்கையால் துடைத்துவிட்டு அந்தக் கரண்டிக்கிராமத்தருகே போய்க் குந்தினேன். அங்கு சிதறிக் கிடந்த கரண்டிகளைத் தட்டிச் சுத்தம் செய்து நான் மீண்டும் நடத் தொடங்கினேன். அவற்றுக்கிடையே புதிதாக நான் கொண்டுவந்த கரண்டிகளையும் நாட்டினேன். நான் செய்வதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் என் உதவிக்கு வந்தார்கள். பத்தே நிமிடங்களில் அந்தக் கரண்டிக் கிராமத்தை நாங்கள் ஓரளவுக்குப் புனர் நிர்மாணம் செய்துவிட்டோம். எல்லாவற்றையும் சரிசெய்து வீடு திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த சோலர் விளக்குகளை நான் பிடுங்கி எடுத்துப்போய் கரண்டிக் கிராமத்தில் நட்டுவிட்டு வந்தேன்.

அடுத்தநாள் மாலை வேலை முடிந்து அப்பா தாமதமாகவே வந்தார். ஆனாலும் அசதியைப் பாராது என்னிடம் வந்து ‘நடைப் பயிற்சிக்குச் செல்வோமா?’ என்று கேட்டு உற்சாகமாக எம் எல்லோரையும் அழைத்துப்போனார். எனக்கென்றால் சந்தோசம் தாளவில்லை. வீட்டுக்கு வெளியே இறங்கியதும் நான் ஆர்வமிகுதியில் ஓடத்தொடங்கினேன். அவர்களை விட்டுவிட்டுப் படுவேகமாகப் பறந்துபோய் அந்தக் கரண்டிக்கிராமத்தைச் சென்றடைந்தேன். என்னே ஆச்சரியம். என் கண்களையே நம்பமுடியவில்லை. எங்கள் கரண்டிக் கிராமத்தில் மேலும் புதிதாகப் பல கரண்டிகள் முளைத்திருந்தன. கூடவே பல சோலர் விளக்குகளும் சேர்ந்து,

அந்தக் கிராமமே பெரும் ஒளி வெள்ளத்தில் மிதக்கக் கண்டேன்.

*** முற்றும் ***

இச்சிறுகதை தமிழ் மகளிர் உள் கலாச்சார அமைப்பின் வருடாந்த இதழில் வெளியானது. நன்றி.

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .