Skip to main content

ஒரு பனங்கொட்டை உதயமாகிறான்


நாளைக்கு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வந்துவிடும் என்றார்கள்.

அருமைநாயகம் சேர் சுட்டெண் வாங்கியிருந்தார். ஆனால் தகவல் எதுவும் வந்திருக்கவில்லை. பெறுபேற்றுக்காகக் காத்திருந்த இந்த மூன்று மாதங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்திருந்தது. மறுபடியும் இன்னொருமுறை பரீட்சைக்குப் படிக்கும் முனைப்பும் அருகியிருந்தது. மீண்டும் அசேதன இரசாயனத்தை நினைத்தாலே SO2 மூக்குக்குள் போய்க் குமட்டிக்கொண்டு வந்தது.
கணேஸ் வீதியிலிருக்கும் சிவன் கோயிலுக்குக் காலையிலேயே போய்க் கும்பிட்டேன். எல்லோரும் நல்லூருக்குத்தான் போய்க் கும்பிடுவார்கள். அங்கே கோட்டா தீர்ந்திருக்கும். எனக்கென்னவோ சிவனை ஒருவரும் வழிபடமாட்டார்கள் என்பதால் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்பினேன். பத்து ரூபாய்க்கு ஆச்சியிடம் கச்சான் வாங்கிச் சாப்பிட்டேன். அதுவும் பெறுபேற்றுக்காகத்தான். அவவிடம் வாங்காவிட்டால் ரிசல்ட்ஸ் நல்லா வராது என்று ஒரு சனியன் உள்ளிருந்து எச்சரிக்கை செய்தது. சைக்கிளை எடுக்கும்போது மூன்று மாதத்துக்கு முன்னர் தோற்றிய பரீட்சையின் விடைத்தாள்களில் சரியாக சுட்டெண்ணை எழுதியிருப்பேனா என்ற சந்தேகம் நானூறாவது தடவை வந்துபோனது. பௌதீகம் பார்ட் வன்னில் வரிசை மாறிப் புள்ளடி குத்தியதில் அறுபதாவது கேள்விக்குப் பதிலளிக்கப்போனபோது இரண்டு புள்ளடிப்பெட்டிகள் இன்னமும் மீதமிருந்ததைப் பார்த்து அதிர்ந்ததும் ஞாபகத்துக்கு வந்தது. நிச்சயம் பானுவுக்குப் பின்னர் கோட்டையில் கொடியேற்றப்போகிறேன் என்று தெரிந்தது. பேசாமல் பளையில் போய்ப் படித்திருக்கலாம். அங்கிருந்து டவுனுக்கு டியூசனுக்கு வந்துபோயிருக்கலாம். இந்த வள்ளலில் ஐந்து பேருக்கு டபிள் மத்ஸ் படிப்பித்து பீஸ் வாங்கிக்கொண்டிருந்தேன். பாடசாலையில்வேறு பௌதீகம் படிப்பிக்க ஆரம்பித்திருந்தேன். எந்த மூஞ்சியோடு படிப்பித்த மாணவர்களோடு சேர்ந்து நானும் பரீட்சை எழுதப்போகிறேனோ தெரியாது. வடக்கு வீதி சண்டேசுவரருக்குக் கை தட்ட மறந்ததும் அப்போதுதான் ஞாபகம் வந்தது. அறுத்துப்போட்ட டீசேர்ட் நூல் போதாது என்று அப்போதே யோசித்தேன். ச்சிக்.
சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் கோயிலுக்குள் போனேன்.
‘என்ன ஐசே, நாளைக்கு ரிசல்ட் வருதாம், உமக்கென்ன எண்டர் பண்ணுவீர்தானே’ என்று சிவன் ஸ்டோர்ஸ் முதலாளி சிரித்தபடியே பேப்பரை எடுத்துத் தந்தார். பெறுபேறுகள் வெளியாகும் செய்தி மூன்றாம் பக்கத்தில் ஒரு துணுக்காக வந்திருந்தது. தலைபோகிற செய்திக்குத் தலைப்புப் பக்கத்தில்கூட இடமில்லை. வீட்டுக்குப்போய் முற்றத்தில் அமர்ந்து பாணோடு பேப்பரையும் சாப்பிட்டேன். வழமைக்கு மாறாக நிறைய பேப்பர் கிளாஸ் மீட்டல் வகுப்புகளின் விளம்பரம் கண்களில் பட்டது. படித்ததெல்லாம் மறந்துபோனதுபோல ஒரு பீலிங். கடைசியாகப் படித்த சடத்துவத் திருப்பமும் ஏவுகணை இயக்கமும் மட்டுமே ஞாபகத்தில் இருந்தன. அரைக்கோளத்துக்குள் தடியை வைத்து மனசுக்குள் கொட் விதி நிறுவ முயன்று தோற்றுப்போனேன். லோனியின் புத்தகத்தையும் யாருக்கோ தானம் செய்துவிட்டாயிற்று. கைகள் நடுங்கியதில் பாண் உதிர்ந்து மடியிலிருந்த பேப்பரில் கொட்டியது. கீழே பரவிக்கிடந்த சம்பல் துகள்களைக் கழுத்துவெட்டிச் சேவல் ஒன்று கொத்திச்சாப்பிட வந்தது. அதன் கேறல்கூட என் பெறுபேற்றைச் சொன்னாப்போல இருந்தது. ஏழரைச் சனிவேறு. அது தெரியாமல் போன சனிக்கிழமை பொச்சர் கடையில் மிதிவெடி வாங்கிச் சாப்பிட்டதையிட்டு என்னையே நொந்துகொண்டேன். பேதி வந்தவர் கக்கூசுக்கு ஓடுவதுபோல அடிக்கடி சாமியறைக்குப் போய்த் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்தேன்.
பத்து மணிக்கு சந்திரன் மாஸ்டரிடம் சென்றேன். மாஸ்டரை இயக்கம் மிரட்டியதில் அவர் அறவானாக மாறி இப்போது கூசிழிவுப் படங்கள் எதையும் வெளியிடுவதில்லை. அன்று புதுக்குடித்தனம் என்ற படம் ஓடியது. விக்னேசும் மந்த்ராவும். இருக்கும் மனநிலையில் மந்த்ரா ஓகே என்றே தோன்றியது. அரை மணிநேரம் சினிமாப்பாடல்கள் ஆரம்பித்தன. அப்புறம் படம். படம் ஆரம்பிக்கவே கிளம்பிவிட்டேன். எங்கே போவது என்று தெரியவில்லை. சயன்ஸ் ஹோல் ஒழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். அது பாடசாலை நாள் என்பதால் அதிகம் கூட்டம் இல்லை. அருள் அண்ணர் பிளேன்ரீ குடித்துக்கொண்டிருந்தார். இனிமேல் இங்கேதான் சைக்கிளை பார்க் பண்ணவேண்டும். பீஸ் கட்டவேண்டும். என்னோடு கூடப்படித்தவர்கள் எல்லாம் எண்டர் பண்ணிவிடுவார்கள். பார்ட்டி வைப்பார்கள். ஆசிரியர்களைப் பாராட்டி கிப்ட் கொடுப்பார்கள். மூதேவிகளே இதே வாத்திமார்தானே எனக்கும் படிப்பித்தது. ஆனால் நான் அதைச் சொல்லமுடியாது. தோற்றுப்போனவர்கள் பேசமுடியாது. தோற்றுப்போனவர்களை வைத்து ஏன் எவரும் படமே எடுக்கவில்லை என்று தோன்றியது.
எடுத்தால் நாந்தான் ஹீரோ. ராதிகா ஹீரோயின்.
இந்தக் களேபரத்தில் ஒரேயொரு இதம் ராதிகாதான். அவளுக்கும் கம்பஸ் கிடைக்கப்போவதில்லை. அவளும் இரண்டாவது தடவை படிக்க வருவாள். இம்முறை அத்தனை கெட்டிக்காரர்களும் கொழும்புக்குப் போய்விடுவார்கள் என்பதால் எனக்குப் போட்டி குறைவாக இருக்கும். இந்த ஒரே காரணத்துக்காகத்தான் நான் கோகிலராணியைத் தவிர்த்து வந்தேன். அவள் கெட்டிக்காரி. எப்படியும் எண்டர் பண்ணிவிடுவாள். திமிர் பிடித்தவள். பணக்காரி. திருவிழாக்கூட்டத்து மணலில் புரளும் கச்சான் கோதுக்குக் கிடைக்கும் மரியாதையைக்கூட அவள் எனக்குக் கொடுக்கமாட்டாள். சவம், நான் யாரென்றுகூட அவளுக்குத் தெரியாது. ஆனால் ராதிகா அப்படியல்ல. நல்லவள். நாலுபேரை மனுசராக மதிக்கத் தெரிந்தவள். கோகிலராணிகளுக்கு யாராவது டாக்குத்தர் கிடைக்கட்டும். வாழ்நாள் முழுதும் கிளினிக்கில் கிடந்து இரண்டுபேரும் அத்தனை பேரின் வாயையும் ஆவெண்டு பார்த்து மருந்து கொடுக்கட்டும். இரவு புட்டுச் சாப்பிடும்போது இரண்டு டாக்குத்தர்கள் என்னத்தைப் பேசுவார்கள்? ‘எனக்கொரு பேஷண்ட் வந்தது, ஆர் தெரியுமா? அரசரத்தினத்திண்ட மூத்த மகன், கிட்னில ஒரு பெரிய கல்லு, கோட்டையைப் போய்க் கடிச்சிருப்பான்’. ‘ஓ அப்பிடியா, அவைண்ட குடும்பத்தில இது இருக்குப்போல, போன மாசம்தான் அவர்ட்ட அக்காண்ட மகளும் கல்லெண்டு வந்தவ, டயமண்ட் சைஸ். கலியாண மோதிரத்தில குத்தச் சொன்னனான்’. இருவரும் மற்றவர் பகடிக்குச் சிரித்து மகிழக்கூடும். ச்சைக். ஆருக்கு வேணும் இது? ராதிகா தங்கம். ஆனாலும் நயினாவோ குறிஞ்சியோ நல்ல ரிசல்டை வாங்கி ராதிகாவுக்குப் படிப்பிக்க ஆரம்பித்தால்தான் சிக்கல் ஆகிவிடும் என்ற அச்சமும் வந்தது. ரிசல்டும் இல்லை, ராதிகாவும் இல்லை எனும்போது வலி இன்னமும் அதிகமாகியது.
பெருமாள் கோயிலுக்குச் சென்று கும்பிட்டேன். வழியில் ஐ.ஐ.எஸ் வந்தது. கணினி படிக்கும் கூட்டம். எல்லோருமே முன்னே நகர்ந்துகொண்டிருக்க நான் மட்டும் கொட்டிலை நோக்கிப் போகிறேனே என்று விசனம் வந்தது. ஒரு வீடியோக் கடையில் அப்போது வெளியாகியிருந்த ‘இசையில் தொடங்குதம்மா’ அலறிக்கொண்டிருந்தது. சைக்கிளை மதிலோடு சாய்த்துவைத்துக் கொஞ்சநேரம் அந்தப் பாட்டைக் கேட்டேன். ம்ஹும். மனம் ஒன்றவில்லை.
றக்கா ரோட்டிலிருந்த ராதிகா வீட்டிற்குப் போனேன். கிணற்றடியில் அவள் அம்மாக்காரி உடுப்புக் காயப்போட்டுக்கொண்டிருந்தார். வெளியே ராதிகாவின் சைக்கிளைக் காணவில்லை. அவளும் கணினி வகுப்புக்குப் போயிருக்கலாம். அல்லது உள்ளே வீட்டுக்குள் இரவு ஏற்றிவிட்டிருந்த சைக்கிளை இறக்க மறந்திருக்கலாம். கொஞ்சநேரம் சுற்றிவிட்டுத் திரும்பும்போது அந்த வழியால் கஜன் வந்தான். ‘முத்தத்தில சைக்கிளை காணேல்ல மச்சான், ஆள் இல்லை’ என்றேன். அவனோ நம்பாமல் போய்ப் பார்த்து உறுதிசெய்துவிட்டு என்னிடம் திரும்பினான்.
‘மச்சான் ஒருத்தருக்கும் சொல்லாத, எனக்கு ரிசல்ட் வந்திட்டுது, 3A,B. உள்ளால பார்த்திட்டன்’
எனக்கு டிக் என்றது. கஜனுக்கு கிடைக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சொன்னபோது பொறாமை வந்தது. இத்தனை நாளும் ராதிகா வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்காதவனுக்கு நம்பிக்கை கொடுத்தது அந்த ரிசல்ட்தான் என்பதும் தெரிந்தது. ஒரு யாழ்ப்பாணப் பனங்கொட்டை அமெரிக்க மாப்பிள்ளையாகும் கணம் அது என்று தோன்றியது. ஆனால் ஒரு ஜொனியனுக்குப் பெட்டையோடு கதைக்கிறதுக்கு நல்ல ரிசல்ட் தேவையேயில்லை என்று மனம் பெருமிதம் கொண்டது. சொன்னாப்போல நானும் ராதிகாவுடன் பெரிதாகக் கதைத்து அறியேன். ஒரு பிறந்தநாள் வைபவத்தில் ‘இந்தப் பற்றிஸ் தட்டை அங்கால குடும்’ என்று அவள் நீட்டியபோது ‘சரி’ என்று வாங்கியது மாத்திரமே எனக்கும் ராதிகாவுக்குமான ஒரே புள்ளி. பெண்கள் என்னோடு பேசும்போது நான் முரளியாக மாறிவிடுகிறேன். சமயத்தில் 'இதயம்' முரளி. இன்னொரு இடத்தில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க'. அல்லாவிடில் ‘உன்னுடன்’. அண்மையில்கூட ராதிகாவைக் கைலாசப்பிள்ளையார் கோயிலடியில் கண்டபோது ‘ஊட்டி மலை ரோஜாச்செடியை’ பாடல்தான் பின்னணியில் ஒலித்தது. பாடலின் ஆமை வேகத்துக்கு அவள் சைக்கிள் நிற்குமா என்ன? பல்லவிக்கு முன்னமே பறந்துவிட்டாள். எனக்கும் ராதிகாவுக்குமான சீன் இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவள் வீட்டடிக்குப் போய், அவர்கள் வீட்டு மாமரத்தில் எத்தனை பூ, அதில் எத்தனை காய்க்கிறது, எத்தனை பழுக்கிறது, ஒரே ஆண்டில் அன்ரியின் பூபோட்ட சீத்தைச் சோட்டி எப்படி சிவப்பிலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறியது என்பதான வரைபுகளுக்கு டாட்டா கலக்சனை மாத்திரமே நான் செய்துகொண்டிருந்தேன்.
'கங்கிராஜுலேஷன்ஸ்' என்று கஜனுக்குச் சொன்னபோது என் வாய் குழறியது. அவன் ‘தாங்ஸ் மச்சான்’ என்றான். நீயும் எண்டர் பண்ணுவாய் என்றான். ‘மூதேசி அதை நீ சொல்லக்கூடாது’ என்று மனதுள் தூற்றினேன். ஒரு சாதாரண வட்டக் கணக்கு நிறுவலைக்கூடப் பாடமாக்கி எழுதும் ஒருவன் எனக்கு ஆறுதல் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பரீட்சைகள் எல்லாமே முட்டாள்களுக்கு மகுடத்தைச் சூடி புத்திசாலிகளை ஓரம் கட்டுவதற்காகவே நடத்தப்படுகின்றன என்று தோன்றியது. ஒரு உண்மையான புத்திசாலி நல்ல பெறுபேற்றை எடுக்கவே கூடாது. வரலாற்றின் அத்தனை புத்திசாலிகளும் வகுப்பில் பூச்சியம் எடுத்தவர்கள்தான். தோமஸ் அல்வா எடிசன். ஐன்ஸ்டீன். அப்துல் கலாம். ஆர்தர் சீ கிளார்க். அன்ரன் பாலசிங்கம்.
சைக்கிள் பிரியா வீட்டுக்கு நகர்கிறது. அங்கு போய்க் கொஞ்சநேரம் மேசைப்பந்து விளையாடலாம். நான் போகும்போது மொத்த பட்சுமே அங்கு நின்றது. ஆறுபேர் மேசைப்பந்து விளையாட, இன்னொரு ஆறு தாள் விளையாட, மீதிக்கோஷ்டி கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்தது. சிட்டுவேசனுக்கு ஏற்றதுபோல டிவியில் யாரோ சேது படத்து சிடியைப் பிளே பண்ணியிருந்தார்கள். நான் கொஞ்சநேரம் கிரிக்கட்டில் பீல்ட் பண்ணினேன். ஒரு கட்ச் பிடித்தேன். எப்போதுமே தவறுகின்ற பிடிகள் இன்றைக்குச் சரியாகப் பிடிபட்டபோது சகுனம் சரியில்லை என்று தோன்றியது. பிரியா வீட்டுச் சாமியறையில் போய் மீண்டுமொருமுறை பட்டையை அடித்தேன். அன்ரி வந்தார். ‘நாளைக்கு ரிசல்ட் வருதோ இல்லையோ, எண்ட திருநீறு எல்லாத்தையும் முடிக்கப்போறியள்’ என்றபடி தாண்டிப்போனார். நான் மறுபடியும் ஹோலுக்குள் நுழைந்தபோது யாரோ ஒரு நாய் புறக்கம்மாஸ் அடித்தது. கீர்த்தி டிவியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.
படத்தில் மொட்டைத் தலை சேது கேற்றைத் தாண்டி நடந்துகொண்டிருந்தான்.
விசர் பிடித்தது. வெளியேறலாம் என்று நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பிரியா வீட்டு கேற்றடிக்கு வந்தேன். அப்போதுதான் தினேஷ் வந்தான். தினேஷ் அருமைநாயகத்தாரின் மகன். எனக்கு அடி வயிற்றில் மல்டி பரல் கும்மத் தொடங்கியது. ‘அண்ணா, அப்பா கோல் பண்ணினவர்’ என்றான். ‘சொல்லும், என்னவாம்’ என்று நான் விட்டேற்றியாகப் பாவனை செய்தேன். யாருக்கு வேணும் ரிசல்ட்? அவன் என் ரிசல்டைச் சொன்னான். அந்தக் கணம் மாத்திரம் நினைவிலிருக்கிறது. அதன்பிறகு அவன் சொன்னதோ செய்ததோ எதுவுமே ஞாபகத்தில் இல்லை. ஒருமுறை பிரியா வீட்டைத் திரும்பிப்பார்த்தேன். பின்னர் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். எங்கே போவது என்று தெரியவில்லை. நல்லூருக்குச் சைக்கிள் போனது. கும்பிட்டேன். நல்லூரடியில் சில இளைஞர்கள் கூட்டமாக நின்று கொசப்படித்துக்கொண்டிருந்தார்கள். ‘போங்கடா, போய்ப் படியுங்கடா’ என்று சொல்லத்தோன்றியது. யாழ்ப்பாணத்தின் சொத்தே இந்தப் படிப்புத்தான் என்று ஏன் இவர்களுக்கு விளங்குவதேயில்லை? இத்தனைபேர் எங்களுக்காகப் போராடி மடியும்போது நாங்கள் கொஞ்சமேனும் படித்து முன்னேறி இந்தச் சமூகத்துக்குத் திருப்பிக்கொடுக்கவேண்டாமா?
சைக்கிள் உழக்கும்போது ஹாண்டிலில் முழங்கால் முட்டியது. அருகிலிருந்த சைக்கிள் கடையில் போய் சீற்றை உயர்த்திக்கொண்டேன். யோகர் சுவாமிகள் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை’ என்று தடியை ஊன்றிக்கொண்டு போஸ் கொடுத்தார். சீற் உயரம் போதவில்லை என்று கடைக்காரரிடம் சொல்ல அவர் இதற்குமேல் ஏத்தமுடியாது என்றார். சலித்தபடியே எம்பி சைக்கிளில் ஏறினேன். ரிசல்டை வீட்டில் போய்ச் சொல்லலாம் என்று தோன்றியது. கஜனிடம் போகலாமா? அவன் இன்னமும் ராதிகா வீட்டடியிலேயே சுற்றிக்கொண்டு நிற்கலாம். கஜனிடம் ரிசல்ட் சொன்னால்தான் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். ஐயய்யோ சுட்டெண் மாறியிருந்தால் என்னாவது? குறிஞ்சியும் அருமைநாயகம் சேரிடம்தான் சுட்டெண் கொடுத்திருப்பான் அல்லவா? இது அவனுடைய ரிசல்ட்தானோ? வேண்டாம். அம்மாவிடமாவது சொல்லுவோமா? ம்ஹூம். அப்போ என்னதான் செய்யலாம்?
குதிரையைக் கோகிலராணியின் வீட்டை நோக்கி வேகமாகத் தட்டிவிட்டேன்.

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .