கசுனுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்திருந்தது. பச்சை அம்பரலங்காயாக இருக்கவேண்டும். அல்லது திருட்டுத்தனமாக குசினித் தட்டிலிருந்து எடுத்துத் தின்ற அச்சாறு வெங்காயமாகவும் இருக்கக்கூடும். அப்போதுதான் அவன் தாய் தொழிற்சாலையில் வேலை முடித்துவந்து, குளித்து, வீட்டு உடுப்புக்கு மாறி எல்லோருக்கும் தேநீர் தயாரிக்கலாம் என்று அடுப்பைப் பற்றவைக்கப் போயிருந்தாள். அதற்கிடையில் போய் அம்மா ‘கக்கா’ என்றால் எப்படியிருக்கும்?
“போயிரு. முடிஞ்சோன கூப்பிடு, நான் வாறன்”
கசுனுக்கு ஒரு பழக்கம். கக்கா இருக்கப்போகும்போதெல்லாம் கூடவே தன்னோடு ஒரு டைனோசரையும் கூட்டிப்போவான். அதற்கு அவன் முத்தா என்று பெயர் வைத்திருந்தான். முத்தா என்றால் பூட்டன். டைனோசர்கள் நம் பூட்டன் காலத்தில் வாழ்ந்தவை என்று தாய் அவனுக்குச் சொல்லியிருந்ததால் வைத்த பெயர். முத்தா ஒரு காலுடைந்த டைனோசர். யாரோ வயதாகிவிட்ட குழந்தை குப்பையில் தூக்கிப் போட்ட டி-ரெக்ஸ் அது. ஆனால் அது ஒரு டி-ரெக்ஸ் என்பதோ, அதற்கு ஒரு கால் உடைந்துபோனதோ கசுனுக்குத் தெரியாது. அவனைப்பொறுத்தவரையில் டைனோசர்களுக்கு முன்னிரு கால்களும் சிறியவை. பின்னாலே ஒருகால் மாத்திரம் இருக்கிறது. முத்தாவின் காலத்தில் அவன் வீட்டு வளவிலேயே ஓடித்திருந்தவை இப்போது பொம்மைகளாக உருமாறிவிட்டன. அவ்வளவுதான் கதை.
அம்மா சொன்னதும் கசுன் கொல்லைப்புறத்துக்கு ஓடிவந்து, முத்தாவை முன்னாலே நிறுத்திவிட்டு, கழுசானை இறக்கிக் கக்கா இருக்கக் குந்தினான். முத்தாவுக்குப் பேச்சுக்கொடுத்தபடியே இருந்தான். கைக்கெட்டிய புற்களைப் பிடுங்கி அதற்குச் சாப்பிடக்கொடுத்தான். கக்கா குண்டியில் முட்டியதும் முத்தாவையும் தூக்கிக்கொண்டு எழுந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். முத்தா புல்லைச் சாப்பிடவில்லை என்று புறுபுறுத்தான். அவர்கள் வீட்டின் பின்னாலேயே ஒரு ரயில் தண்டவாளம் இருந்தது. கசுன் முத்தாவின் வாயில் சிறு புல்லைத் திணித்துக்கொண்டிருக்கையில் தூரத்தே ஒரு ரயில் வருகின்ற சத்தம் கேட்டது. உடனே அவன் எழுந்து தண்டவாளத்தின் திசை பார்த்துக் குந்தியிருந்தபடி முத்தாவையும் திருப்பி வைத்தான்.
இருவரும் ரயிலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
000
கொழும்புக் கோட்டை ரயில் நிலையம் அப்படியே இருந்தது.
அதே பழைய வெள்ளைநிறக் கட்டடம். உச்சியில் ஓடுகிறதா இல்லையா என்ற சந்தேகத்தைக் கொடுக்கும் கடிகாரம். நெரிசல். இரைச்சல். அந்த ரயில் நிலையத்துக்கே உரித்தான ஒருவகைப் புழுதியும் வெக்கையும் பழ நாற்றமும் சேர்ந்தாற்போல ஒரு மணம். எனக்குத் தெரிந்து கடந்த முப்பது வருடங்களில் அந்த ரயில் நிலையம் மாறவேயில்லை என்று தோன்றியது. கொஞ்சம் பாதுகாப்புக் கெடுபிடி குறைவாக இருந்தது. அவ்வளவுதான். நான் என் சூட்கேசுகளோடு இணலுக்காக வாசற் கட்டடத்துக்கடியில் ஒதுங்கியிருந்தேன். அக்கா எனக்கு டிக்கற் ஒழுங்கு செய்திருந்தார். அதைக் கொண்டுவந்து கொடுக்கவேண்டியவருக்குக் கோல் பண்ணிப்பார்த்தேன். தான் வருவதற்கு அரை மணிநேரம் ஆகுமென்று அவர் சொன்னார். காத்திருக்க ஆரம்பித்தேன்.
தண்ணீர் விடாய்த்தது. சூட்கேசுகளை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த பசாருக்குச் சென்றேன். குளிர் தண்ணீர் வாங்கத்தான் போனேன். ஆனால் அங்கிருந்த கொத்மலை பால் பக்கற்றைக் கண்டதும் திட்டம் மாறிவிட்டது. ஒரு பக்கற்றை வாங்கினேன். அப்புறம் மாலு பணிஸ் ஒன்று. பிறகு ஒரு ரோல்ஸ். சிங்களவர்களின் பருப்பு வடைக்கு ஈடு இல்லை. ஆக அதில் இரண்டு. கடைசியாக ஒரு தண்ணீர்ப் போத்தல். ‘கீயத’ என்றதற்கு ‘முந்நூறுவா சேர்’ என்று கடைப்பையன் சொல்லவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். மொட்டைத் தலையிலும் கொண்டையைக் கண்டுபிடிக்கும் சாணக்கியம் படைத்தவன் இவன் என்று மனதுக்குள் அந்தப்பையனை வியந்தவாறு, சூட்கேசுகளோடு ரயில் நிலையத்துக்குத் திரும்பினேன்.
இந்த இரண்டு சூற்கேசுகளையும் எப்படிக் காவிக்கொண்டு பிளாட்பாரத்துப் பாலத்தில் படியேறப்போகிறேன் என்று யோசனையாக இருந்தது. டிக்கற் கொண்டு வருபவரிடம் உதவி கேட்கலாம் என்றால் வந்தவர் டிக்கற்றைக் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டார். அங்கு எல்லோருக்கும் எல்லா நேரமும் யாராவது தொலைபேசி எடுத்தபடியே இருக்கிறார்கள். அல்லது இவர்கள் எடுக்கிறார்கள். சில நேரங்களில் சிரித்தார்கள். பல சமயங்களில் அவர்கள் பேசும் விசயங்கள் லோகியல் பிரச்சனைகளாகத்தான் தெரிந்தன. எல்லோரும் கத்திக் கத்தியே பேசினார்கள். ஒருவர் கத்தலை மீறியே மற்றவரும் கத்தவேண்டியிருப்பதால் கத்தல் ஒலி போகப் போகக் கூடிக்கொண்டேயிருந்தது. காதலிக்கும் ஆண்களும் பெண்களும் இயர்போன் செருகி, வயரின் மைக்கை வாயருகில் பிடித்துக்கொண்டு கதைத்தார்கள். பல இளம் பெண்களின் டெனிம் ஜீன்சுகளில் பின்னாலே பிங் கலர்ப் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. ஆண்களின் டெனிம்கள் கீழே மடிக்கப்பட்டிருந்தன. மத்திய வயது இலங்கையர்கள் தம் தொந்தியை நினைத்து ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அலுவலக ஆண்கள் இறுக்கமாகச் சேர்ட்டுகளை இன் பண்ணித் தம் வண்டியைத் தள்ளியபடி நின்றார்கள். காசுவலாக உடை அணிந்தவர்களும் கடத்துக்கு உறைபோட்டதுபோல டைட்டாகவே சேட்டோ டீசேர்ட்டோ போட்டிருந்தார்கள். பாவாடை சட்டைப் பெண்கள் தம் சட்டையின் கடைசி இரண்டு பட்டன்களை வண்டிக்குத் தோதாகப் பூட்டாமல் விட்டிருந்தார்கள். சேலை மாந்தரும் இடுப்பு மடிப்பை இறக்கிவிட்டு வண்டியைத் தவழ விட்டிருந்தார்கள். என் வண்டிமீதான தாழ்வுணர்ச்சி சக வண்டிக்காரர்களைக் கண்டதுமே எங்கோ காணாமற்போனது. பசாரில் வாங்கிய அத்தனை உண்வையும் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டேன்.
ரயில் வர இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. ஐம்பது ரூபாய்க்குச் சுடச்சுட வறுத்த கச்சான் வாங்கினேன். எப்பன்தான் கிடைத்தது . அருகில் நின்றவர்களிடம் எந்தப் பிளாட்போர்ம் என்று விசாரித்தால் ஆளாளுக்குக் குழப்பினார்கள். மூன்று அல்லது நான்காக இருக்கலாம். சிலவேளை ஐந்திலும் வரலாம். வரும்போது அறிவிப்பார்கள் என்றார்கள். எனக்கு டிக் என்றது. எப்படி இந்த சூட்கேசுகளுடன் பாலத்தில் ஏறி குறுக்கும் நெடுக்குமாக அலையப்போகிறேனோ என்கின்ற பதட்டம். ஆனால் மூன்றும் நான்கும் அருகருகே இருந்தன. நான் அங்கேயே போகலாம் என்று குறுக்குப் பாலத்தில் ஏறப்போனேன். நான் சூட்கேசுகளைத் தூக்கத் தடுமாறியபோது சக வண்டிக்காரர் ஒருவர் உதவிக்கு வந்தார். நான் தாங்க்ஸ் சொன்னதுக்குச் சங்கடமாக ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு தன் பிளாட்போர்முக்கு ஓடி மறைந்தார்.
ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மாறி மாறித் தொடர்ந்துகொண்டிருந்த அறிவிப்புகளில் கொழும்பு யாழ்ப்பாண ரயிலைத் தேடும் படலம் ஆரம்பித்தது. இந்த டென்சனைச் சொல்லிமாள இயலாது. எந்த பிளாட்போர்ம் என்பதைத் தவறவிட்டுவிட்டோமானால் கதை முடிந்தது. தமிழில் ஒரு அறிவிப்பு வரும்போதே அடுத்தொரு ரயில் நிலையத்துக்கு வரும். ஆனால் இந்த அறிவிப்பு முடியத்தான் அதன் அறிவிப்பு சிங்களத்தில் தொடங்கும். நான் கச்சானைக் கொறித்தபடி அறிவிப்புகளையே செவிமடுத்துக்கொண்டிருந்தேன். என் ரயில் தவிர ஏனைய எல்லா ரயில்களும் அங்கு வந்துகொண்டிருந்தன. ருகுணு குமாரியும் பொடி மனிக்கியும் ஒரே சமயத்தில் வந்து சேர்ந்தன. ரயில்களுக்கு ஏன் பெண்களின் பெயர்களை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடலில் வாழும் சமுத்திர தேவியை எதற்காகக் கரைக்கு இழுத்துவந்து ரயிலாக ஓடவிடவேண்டும்?
நேரம் ஆக ஆக, நிறையக் குங்குமப் பொட்டுகளும் திருநீறுகளும் நானிருந்த பிளாட்பாரத்தில் கூடவும் கொஞ்சம் நிம்மதி வந்தது. அதேநேரம் அவர்கள் கிழக்குக்கோ அல்லது மலையகத்துக்கோ செல்லும் பயணிகளோ என்ற குழப்பமும் ஏற்பட்டது. அருகில் நின்ற வண்டிக்காரரிடம் 'இங்கைதானே யாழ்ப்பாண டெரெயின் வரும்?’ என்று கேட்டேன். அதற்கு ‘ஓமோம்’ என்றவர், என் சூட்கேஸ் ஸ்டிக்கரை வாசித்து, ‘நீங்க அவுஸ்திரேலியாவிலிருந்து வாறிங்களா?’ என்று திருப்பிக்கேட்டார். பனங்கொட்டைக் கிரிக்கட்டில் ஒரு சிக்கல் என்னவென்றால், கொட்டை எயாரிலேயே ஸ்விங்க் ஆகக்கூடியது. புல்டொஸ்தானே என்று விசுக்கினீர்கள் என்றால் பல்லுப் பறந்துவிடும். அதுவும் ஹோம் கிரவுண்ட் என்றால் கேட்கவே வேண்டாம். கவனமாகத் தடுத்தாடவேண்டும். நான் ஓமென்றபடி அவரருகிலேயே உட்கார்ந்தேன். யாழ்ப்பாணத்தில் எவ்விடம்? எப்ப வெளிநாட்டுக்குப் போனது? புரொக்டர் சுப்பிரமணியத்தைத் தெரியுமா? ஓ அவர்ட வீட்டுக்கு நேர் பின்வீடா? அந்த ஒழுங்கைக்க தீவார் நிறையப்பேர் என்ன? கலியாணம் கட்டியாச்சா? எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் அடுத்தடுத்துக் கேள்விகள் அவரிடமிருந்து வரத்தொடங்கின. நானும் சளைக்கவில்லை. நான்காவது பெடியனுக்கு போனகிழமைதான் பல்லுக்கொழுக்கட்டை கொட்டினாங்கள் என்று நான் சொல்லும்போது அவருக்கு ஒரு போன் வந்தது. நான் விடுதலையானேன்.
இப்போது எது பிளாட்போர்ம், எங்கு ஓடவேண்டும் என்ற பதட்டங்கள் இல்லை. கொஞ்சம் நிம்மதியாகச் சாய்ந்து உட்கார்ந்தேன். காகங்களும் நிலையத்துப் புறாக்களும் தண்டவாளத்தில் மனிதர்கள் வீசியெறிந்த உணவுச்சிதறல்களைத் தேடிக்கொண்டிருந்தன. பிரமாண்ட ரயில்களுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் அவை பழக்கப்பட்டிருந்தன. அவை வரும்போது விலத்தியும் பின்னர் திரும்புவதுமாய், சக பறவை கண்டெடுத்த துகலைப் பறிப்பதுமாய், தன்னதைக் காப்பதுமாய் அந்த வாழ்வின் இன்னல்களுக்கு அவை இசைவாக்கப்பட்டிருந்தன. முன்னேயிருந்த பிளாட்போர்மில் இரண்டு தென் கொரியப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். காற்சட்டை, பனியன், சிலிப்பர் அணிந்து சிறு விசிறியால் விசுக்கியபடி டிக்கற்றை நிமிடத்துக்கொருமுறை செக் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருக்கைக்கு அருகிலேயே ஒரு வண்டிக்காரர் நின்றபடி அவர்களையே ஆவென்று வாய் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொரு இளவயது வண்டி, இயர்போனில் யாரோடோ பேசிக்கொண்டு மிக வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தது, இவர்களைக் கண்டதும் அதுவும் நின்று ஆ பார்த்தது. ஒரு பாவாடை சட்டை வண்டியும் ஆ பார்த்தது. ஒரு சேலை வண்டியும் ஆ பார்த்தது. ஐந்து வயதுக் குழந்தை ஒன்று தாயிடமிருந்து பிரிந்து, இவர்களுக்குக் கிட்டவாக வந்து நின்று எந்த அந்தரமும் இல்லாமல் ஆ பார்த்தது. இவற்றையெல்லாம் நான் தொடர்ந்து ஆ பார்த்துக்கொண்டிருக்கையில் குறுக்கே யாழ்ப்பாண ரயில் மெதுவாக உள்ளே வந்து சேர்ந்தது.
ரயில் வந்ததும் பிளாட்போர்ம் முழுதும் ஒரு அவசரம் தொற்றிக்கொண்டது. எல்லோரும் ரயிலோடு சேர்ந்து ஓடினார்கள். இருக்கைகளை முன்பதிவு செய்தவர்கள்கூட ஓடினார்கள். நானும் ஓடினேன். பின்னர் ரயில் நின்றதும் என் கொம்பார்ட்மெண்டைத் தேடித் திரும்பி வரவேண்டியிருந்தது. ரயில் புறப்படப்போகிறதே என்ற அவசரத்தில் இடித்துப்பிடித்து, இரண்டு சூட்கேசுகளையும் இழுத்துக்கொண்டு, உள்ளே போய் என் இருக்கையைத் தேடிக்கண்டுபிடித்து, சூட்கேசுகளை மேலே தூக்கி வைத்து, யன்னலோர திரைச்சீலையைத் திறந்துவிட்டு அவசரமாக உட்கார்ந்து தண்ணீர் குடித்தேன்.
ஆனால் பயணிகளுக்கு இருந்த அவசரம் ரயிலுக்கு இருக்கவில்லை.
என்னுடையது ஏ.சி கொம்பார்ட்மெண்ட் என்பதால் நெரிசல் இருக்கவில்லை. அருகில் ஒரு தமிழ் இளைஞன் செல்போனில் பேசியபடியே வந்து உட்கார்ந்தான். மெலிந்த தேகம். முழங்காலில் பீத்தல் போட்ட டெனிம் ஜீன்ஸ், இறுக்கமான டிசேர்ட், பாட்டா அணிந்திருந்தான். கொஞ்சம் பதட்டமாக இருந்தான்போலத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் எங்கிருந்தோ ஒரு இளம்பெண் ஓடிவந்து எங்கள் பெட்டியில் பாய்ந்து ஏறினாள். அவளோடுதான் இந்த இளைஞன் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அவள் முதுகுப் பையை அவன் வாங்கிக்கொள்ள, இருவரும் உள்ளே வந்தார்கள். அவளும் பின்பக்கம் அந்தப் பிங் கலர் பூவேலைப்பாடு செய்த டெனிம், இறுக்கமான டிசேர்ட் அணிந்து சாண்டில்ஸ் போட்டிருந்தாள். தலைமயிரைப் பின்னியிருந்தாள். டெனிமுக்குப் பின்னிய தலைமயிர் கொஞ்சம் பொருந்தாமல் இருந்தது. எப்போதாவது இதனை எழுதும்போது அவள் விரித்துப்போட்ட ஈரத்தலைமயிர் சொட்டச் சொட்ட வந்தேறினாள் என்று மாற்றவேண்டும். அவள் மூச்சு வாங்கியபடியே தன்னைத் தாமதமாக்கிய மனேஜரைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். அவர்களுக்குத் தனித்தனியாகவே இருக்கை கிடைத்திருந்தது. அவள் இருக்கைக்கு அருகே இருந்தவரோடு கதைத்து, அவரை எனக்குப் பக்கத்தில் மாற்றி அவர்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்தார்கள். என்னருகே இப்போது இன்னொரு வண்டி. சிங்கள வண்டி. ‘யாப்பணத?’ என்ற கேள்விக்கு நான் சொன்ன ‘ஔ’விலேயே வண்டி கண்ணை மூடித் தூங்க ஆரம்பித்துவிட்டது.
ஐந்தாவது குழந்தை இப்போது வயிற்றில் என்ற செய்தியைச் சொல்லச் சந்தர்ப்பமே கொடுக்காமல்.
அரை மணி நேரம் தாமதமாகத்தான் ரயில் புறப்பட்டது. வண்டி மருதானையைத் தாண்டும்போது பக்கத்து வண்டியிலிருந்து குறட்டைச் சத்தம் வர ஆரம்பித்தது. அந்தக் காதல் ஜோடி தம் முதுகுப்பைகளை முன்னாலே ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அதன்மேல் தம் செல்போனை நிலை நிறுத்தி அதில் திரைப்படம் ஒன்றைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படம். தொடக்கத்திலேயே யாரோ யாருக்கோ சவால் விட்டார்கள். சண்டைக் காட்சிகளின் சத்தம் ரயில் சத்தத்தையும் மீறிக் காதுகளைக் கிழித்தது. குளிரூட்டிய ரயிலில் இருபதுகளிலிருக்கும் தலைவனும் அவன் தோளில் தலை சாய்த்துக் கிடக்கும் தலைவியும் கூடியிருந்து களிக்கும் திரைப்படம் பெயரே தெரியாத ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்பதை என்னால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாமலிருந்தது. ஒரு நவீன குறுந்தொகை ஸ்டைல் பாடல் ஒன்று மனதுள் தோன்றி மறைந்தது.
ரயிலே வாழி!இறால் வடைகளையும் தேநீர், கோப்பிகளையும்ரசீது பரிசோதகரையும் நீ விரட்டிவிடுவாய்.தடித்த கம்பளிகளை அணிந்தபடிகொழுந்து பறிக்கப் போனவருக்கும்உச்சிப் பொழுதிலும் குலப்பன் எடுக்கும்கூதல் சூழ் மலைநாட்டில் பூத்தஇளஞ்சிவப்பு வேங்கைப்பூக்களைத்தன் துகிற்புறத்தே அணிந்தவள்என் அருகினில் இருக்கிறாள்.அவளும் நானும் களித்திருக்கையில்கந்தகத் தெலுங்குத் திரையும்சுந்தரமானதாம்.
ரயில் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. நான் யன்னலுக்கூடாகப் பராக்குப் பார்க்க ஆரம்பித்தேன்.
பெருநகரத்தின் அமளிகளிலிருந்து விடுதலை பெற்று ரயில் இப்போது விளம்பரப் பதாகைகள் நிறைந்த வயல்களினூடாகவும் குடியிருப்புகளினூடாகவும் ஊடறுக்க ஆரம்பித்தது. கடவைகளில் காத்திருந்தவர்களிடம் வேலை முடிந்து வீடு செல்லும் அவதி தெரிந்தது. ஒரு வயல் வரம்பில் தன் மகளைப் பின்னால் இருத்திக்கொண்டு ஒரு தந்தை ஸ்கூட்டர் ஓட்டிப்போனார். ஒரு முச்சந்தி நெரிசலை பொலீஸ்காரர் ஒருத்தர் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த ரயிலைப் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் பாவாடை சட்டை அணிந்த பாட்டியும் அவர் பேரனும் தம் கைப்பைகளோடு ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை நோக்கி விரைவதைக் கண்டேன். வெளியே தலையை நீட்டி, அவர்களிருவரும் ரயிலைப் பிடிக்கும்வரை விடுப்புப் பார்த்தேன். நிலைய உத்தியோகத்தரும் அந்தப் பாட்டியும் எதையோ சிரித்துப் பேசும்போது போய் ஒட்டுக்கேட்கவேண்டும்போல இருந்தது. ரயில் மறுபடியும் ஒலி எழுப்பியவாறு புறப்பட்டது.
சமயத்தில் நாமெல்லோருமே யாரோ ஒரு ரயில் பயணியின் யன்னலோரக் காட்சிகளோ என்று தோன்றுகிறது. அந்த ஒருவரின் பார்வைக்காகத்தான் நாமெல்லாம் இயங்குகிறோமா? அந்த ஐந்து நொடி அவதானிப்புத்தான் நம் முழுவாழ்க்கையா? நாமெல்லாமே ஒரு வண்ணாத்திப் பூச்சியின் கனவு என்று சுவாங்சூ சொன்னதுபோல. உண்மைதானே. வாழுங்காலத்தில் சில ஆயிரம் பேருக்கு நம்மைத் தெரியப்போகிறது. சிலர் இறந்தபின்னரும் நினைவுகூரப்படுவார்கள். அதுவும் எத்தனை காலத்துக்கு? அதிகம் ஒரு மூவாயிரம் வருடங்கள் தாங்குமா? அந்த ரயில் தாண்டிப்போய் அந்த யன்னலுக்கு ஏனைய காட்சிகள் புலப்படவும் நம் கதை நிரந்தரமாக அழிந்துபோகும்.
மழை துமிக்க ஆரம்பித்தது. ஒரு சிறுவன் தன் வீட்டின் பின்வளவில் குந்தியிருந்து மலம் கழித்தபடியே எனக்கு டாட்டா காட்டினான். அவனருகிலேயே ஒரு பொம்மை. டைனோசராக இருக்கவேண்டும். அதுவும் உட்கார்ந்து ரயிலை விடுப்புப் பார்த்தது. வீட்டுக்குள்ளிருந்து அவன் அம்மா குடையோடு அவனை நோக்கி ஓடி வருகிறாள். நான் இமைக்க மறந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். தாய் வந்து அவன் கையைப் பிடித்து இழுக்கவும், அவன் அந்த டைனோசரையும் விடாமல் பிடித்துக்கொண்டு தாயோடு நடக்கவும், மூவரும் தண்ணீர் குழாய்க்கருகே செல்லவும், மழை பலத்து அக்காட்சி மறையவும் சரியாக இருந்தது.
நான் யன்னலை மூடிவிட்டு உள்ளே பார்த்தேன். எதுவுமே மாறவில்லை. பக்கத்துக் குறட்டையும் அந்தக் காதல் சோடியும் அப்படியே இருந்தன. ஓடிப்போய் ரயிலால் குதித்து அந்தச் சிறுவன் வீட்டின் முன்னால் போய் நின்றால் என்ன என்று தோன்றியது. நான் இந்தப் பயணத்தைச் செய்ததே அந்தச் சிறுவனைப் பார்க்கத்தானோ? மழை அடித்து ஊற்றி யன்னல் இடுக்குகளினால் உள்ளேயும் கொஞ்சம் சிதற ஆரம்பித்தது. நான் இருக்கையைச் சாய்த்து கண்ணை மூடித் தூங்குவதற்கு முயன்றேன்.
அவனுக்குக் குண்டி கழுவிக் குளிப்பாட்டி, ஈரம் துடைத்து, உடம்பு முழுதும் பவுடர் பூசிவிடுகிறாள் கசுனின் தாய். அப்படிப்பூசும்போது அவன் தொப்புளில் வாயை வைத்து புர்புர் என்று அவள் செய்ய, அவன் கிக்கிகீ என்று சிரிக்க எச்சில் பறந்தது. அவர்களின் சிரிப்புக்குக் காரணம் விளங்காமல் விழித்துக்கொண்டிருந்தது அந்த டைனோசர்.
என் முகத்தில் பறந்துவந்து விழுந்த மழைத்துளியை அந்தச் சிறுவனின் எச்சில் என்று எண்ணித் துடைக்காமல் விட்டுவைத்தேன்.
Comments
Post a Comment