Skip to main content

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 3


“அந்தப் பூங்கா ஓர வாங்கிலில் அமர்ந்திருக்கும் தாத்தாவும் பாட்டியும் என்றாவது சண்டையிட்டிருப்பார்களா?”

மகிழ்


நாங்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்து மூன்றாவது மாதமே லொக்டவுன் வந்துவிட்டது.

ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகவே போனது. பிறந்தநாள் பார்ட்டிகள், திருமணங்கள், நடன அரங்கேற்றங்கள், தமிழ் நிகழ்ச்சிகள் என்று வார இறுதிகளைக் காவுகொடுக்கத்தேவையில்லை என்பதே பெருத்த நிம்மதியாக இருந்தது. அதிலும் சிலவற்றுக்கு ஏப்ரிலையும் அழைத்துச்செல்லும்போது சீவன் போய்வந்துவிடும். முதலில் உடையிலிருந்துதான் பிரச்சனை ஆரம்பமாகும். கொண்டாட்டங்களுக்கு அவள் சிங்கப்பூரில் அணிவதுபோல மிடி உடைகளையே அணிந்துவந்தாள். ஓரிரு மக்ஸி உடைகளும் அவளிடம் இருந்தன. ஆனால் புலம்பெயர்ந்திருந்த தமிழ் கலாச்சாரம் அவளிடம் சேலையையும் சுடிதாரையுமே எதிர்பார்த்தது. ஒரு நிகழ்ச்சியில் நண்பன் ஒருவனின் அம்மா வெளிப்படையாக என்னிடம் சொன்னார்.

“சீனத்திகளுக்கு இடங்கொடுத்தா மடத்தைப் பிடிச்சிடுங்கள். அந்தப் பெட்டையை சீலையைக் கட்டிக்கொண்டு இந்தப் பார்ட்டிகளுக்கு வரச்சொல்லு. ஒரு பொட்டையும் வச்சுவிடு”

நான் பதிலே சொல்லாமலிருக்கவும் அவருக்குக் குஷியாகிவிட்டது. இரண்டாவது தடுப்பூசியையும் அப்போதே ஏற்றிப்பார்த்தார்.

“இப்ப ஏன் அந்தப் பெட்டையோட ஒண்டா இருக்கிறாய்? நாங்கள் இஞ்ச வந்து கொஞ்சம் டெவலப் ஆயிட்டம் எண்டதால உது பரவாயில்லை. ஆனா ஊரில விசயம் கசிஞ்சா ஒருத்தரும் உனக்குப் பொம்பிளை குடுக்கமாட்டினம்”

நான் இது எதையும் ஏப்ரிலுக்குச் சொல்லவில்லை. எல்லோரும் ஏப்ரிலிடம் அட்டகாசமாக ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். ஆனால் என்னோடு தமிழில் அறிவுரை சொல்வார்கள். அதில் சின்ன நக்கல் இருக்கும். கண்ணடிப்பு இருக்கும். அவளுக்கு இவர்களின் சேட்டைகள் கொஞ்சம் புரியவே செய்தது. ஒரு கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் நிகழ்வுகள் என்றாலே காலையிலேயே அவளுக்குக் குழப்பன் காய்ச்சல் வந்துவிடும். ஆண்களையாவது சமாளிக்கலாம், ஆனால் உங்கள் நாட்டுப் பெண்கள் பார்க்கும் பார்வையும் அவர்களின் பேச்சும் வாந்தி வர வைக்கிறது என்று அவள் புலம்ப ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் இவர்கள் கொடுத்த ரோதனையில் எங்கே அவள் பிரிந்து போய்விடுவாளோ என்று நான் பயந்ததும் உண்டு. என் சக ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இது ஒன்றைத்தான். நீங்கள் ஒரு பெண்ணை மாய்ந்து மாய்ந்து காதலித்தால், அதுவும் சீனத்தியை, ஏப்ரில் போன்றொரு சீனத்தியை, அதிலும் திருமணம் செய்யாமல் அவளோடு ஒன்றாக வாழ்வது என்று முடிவு செய்தால் தயவு செய்து உங்களது இரண்டாவது வளையத்திலிருக்கும் நண்பர்களையும் உறவுகளையும் வெட்டிவிடுங்கள். இரண்டாவது வளையத்தவர்கள் எப்போதுமே தற்காலிகமானவர்கள். உங்களோடு தம்மையும் தம் செல்வத்தையும் ஒப்பிடுகின்றவர்கள். நீங்கள் எங்காவது தடக்கி விழுந்தால் உள்ளூர சிரித்தபடியே குசலம் விசாரிப்பவர்கள். வருடத்தில் அதிகம் போனால் ஐந்தாறு தடவைகள்தான் நீங்கள் அவர்களை சந்திக்கவும் செய்வீர்கள். அவர்களை இழந்துவிடுவோமோ என்று நீங்கள் ஒருபோதும் கவலை கொள்ளவேண்டியதில்லை. அந்த வகை மனிதர்கள் பாம்புச்சட்டைபோல கழட்டக் கழட்டப் புதிதாக உருவாகக்கூடியவர்கள். உங்களுக்கு முதல் வளையம் போதும். நான்கு நண்பர்கள், மூன்று உறவுகள், ஏப்ரில் என்றொருத்தி. அவ்வளவும்தான். வாழ்க்கை சொர்க்கமாகும். அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இப்படியெல்லாம் ஏப்ரிலைக் கொண்டாடித் தீர்க்கிறேனே ஒழிய அவளோடு வாழ்வது என்பது என்னவோ பங்கி ஜம்பிங் செய்வதுபோலத்தான். அதிலும் லொக்டவுனில் ஜம்பிங் செய்யும்போது இடுப்பில் கட்டிக்கிடக்கும் கயிறு அடிக்கடி அறுந்து மலையிலும் மடுவிலும் போய் மோதியதில் படுகாயங்களும் ஏற்பட்டன. இந்தக் குட்டி பிளாட்டினுள் நாள் முழுதும் நானும் ஏப்ரிலும் மாறி மாறி ஒரே முகத்தை எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருக்கமுடியும்? காலை எழுந்ததும் ஆகாரம். அப்புறம் வேலை. வேலை முடியவே இரவாகிவிடும். பொருட்களை எல்லாம் இணையத்திலேயே வாங்கி விடுவதால் அவை அனுப்பப்படும்போது அவ்வப்போது கீழே இறங்கிப்போய் எடுத்துவருவது மட்டும்தான் வேலை. ஆளாளுக்கு வேலை முடிவடையும் நேரம் தினமும் மாறுவதால் நடைப்பயிற்சியைக்கூடத் தனியாகத்தான் நாம் செய்துகொண்டிருந்தோம். அல்லாவிடில் சோபாவில் அமர்ந்திருந்து நெட்பிளிக்ஸ் பார்த்தோம். முன்னர் என்றால் வார இறுதியில் எங்காவது புறப்பட்டுப் போய்விடுவோம். சமயத்தில் வாரக்கணக்காக ஊரிலேயே இருக்கமாட்டோம். ஆனால் லொக்டவுன் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
 
நாட்கள் ஆக ஆக, வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சினக்க ஆரம்பித்தது. எரிச்சல் ஏற்பட்டது. சின்னச்சின்ன அடிபாடுகள் எழ ஆரம்பித்தன. ஒரே சமயத்தில் பாத்ரூம் போகவேண்டி வந்தால் யார் முதலில் போவது என்பதில்கூட அடிபாடு ஏற்பட்டது. திடீரென்று எங்கள் ஊரின் புட்டும் சிக்கின் குழம்பும் சிங்கப்பூரின் சிக்கின் ரைசைவிட நன்றாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தேன். புட்டை சாப்பிடுவதற்குப் பதிலாக இந்தக் கட்டடத்தின் கொங்கிரீட் கற்களைக் கடித்துச் சாப்பிடலாம் என்றாள் அவள். சண்டை. அடுத்ததாக எனக்குத் தாய்மொழிப் பற்று புதிதாக முளைத்தது. வீட்டில் தமிழ் பேசாமல் சதா அவளோடு ஆங்கிலத்திலேயே பேச எரிச்சலாக வந்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை நினைத்துவிட்டால்’ என்று சாப்பாட்டு மேசையில் ஏறி நின்று மேடைப்பேச்சு செய்ய ஆரம்பிப்பேன். சண்டை. அவளுக்கு அலுவலக வீடியோ மீட்டிங் நடக்கும்போது பின்னாலே சென்று புத்தக அலுமாரியில் சாண்டில்யனைத் தேடுவேன். சண்டை. குளித்துவிட்டுத் துடைத்த துவாயை அப்படியே மணக்க மணக்க கட்டிலில் காயப்போடுவேன். சண்டை. இப்படி எல்லாவற்றிலும் சண்டை ஏற்பட ஆரம்பித்தது.
 
சமயத்தில் இந்தச் சீனத்தியை விட்டுவிட்டு அம்மா காட்டும் ஒரு சீதையைத் திருமணம் செய்யவேண்டும் என்றும் தோன்றுவதுண்டு. ச்சிக், அதற்குப் பேசாமல் மாடியிலிருந்து கீழே குதித்துவிடலாம் என்று மறுகணமே மனம் என்னைத் திட்டத்தொடங்கும். ஏப்ரில் மாதிரியொரு தேவதை யாருக்குமே கனவில்கூட கிடைக்கமாட்டாள். எனக்கோ எதிரே உயிரும் உடலுமாக வந்து உலாவுகிறாள். அவளை விட்டுவிடுவேனா? உடனே அப்படித் தப்பாக எண்ணிய குற்ற உணர்ச்சியில் அவள் மீது காதல் பீறிட்டுக்கொண்டு வரும். ஓடிப்போய் ‘ஓ பட்டர் பிளை பட்டர் பிளை’ என்று பாடியபடி அணைக்கப்போவேன். அந்தப்பாட்டு யாருக்காவது பிடிக்காமல் போகுமா? ஆனால் அவளோ ‘what the fuck is this?’ என்று என்னைத் தள்ளிவிடுவாள். நான் கோபத்தில் திரும்பி வந்துவிட்டால் ஐந்து நிமிடத்தில் கிழவி என்னைத் தேடிவரும். ‘I am sorry honey’ என்று கைகளால் என் கழுத்தை வளைத்து திடும்மென்று என் மடியில் உட்காரும். அப்புறம் என்ன? ‘அருகில் நீ… வருவாயோ, உனக்காக.. திறந்தேன்.. மனதின்.. கதவை’ என்று மீதிப்பாடல்தான். ஆனால் வெளியில் மூச்சுக்காட்டமாட்டேன். ஏப்ரில் நல்லவள்தான். என்மேல் நிறையவே நேசம் கொண்டிருப்பவள். என்ன ஒன்று, அவ்வப்போது சீனத்தி டிராகனாக மாறி தீச்சுவாலைகளை உமிழ்ந்துவிடுகிறாள். அப்போது பதுங்கினால் எனக்கு வெற்றி. இல்லை கொஞ்சம் ரோசம் தோன்றி, தமிழீழத்தைப் போராடித்தான் பெறுவேன் என்று ஆர்.பி.ஜி தூக்கினேனாயின் டங்குவார் அறுந்துவிடும். அதை நான் அவளோடு வாழ ஆரம்பித்த சில மாதங்களிலேயே நன்றாக அறிந்துகொண்டேன்.
 
ஆனாலும் லொக்டவுனும் கொரானாவும் என் புத்தியைப் பேதலிக்கச் செய்துவிட்டன. வீணாக வீம்பு செய்யத்தொடங்கினேன். டிராகனுக்கு முன்னாலே தீக்குச்சியை உரச ஆரம்பித்தேன். அதனால் எங்களுக்குள் சண்டை சகட்டுமேனிக்கு வர ஆரம்பித்தது. மேசை அரக்கியிருந்தால் சண்டை. கதிரை இடம்மாறியிருந்தால் சண்டை. டிவியில் செய்தி போட்டால் சண்டை. கொரிய நாடகங்கள் பார்த்தால் சண்டை. ரஜனிக்காந்த், கமலஹாசன் எல்லோருமே உவ்வாக்கள் ஆனார்கள். நான் டிவி பார்க்கும்போதுதான் அவள் சிங்கப்பூரிலிருக்கும் தாயோடு பேஃஸ்டைம் பேசுவாள். நான் என் அம்மாவோடு வைபரில் பேசினால் இவள் வக்கியூம் கிளீனரை இயக்குவாள். சண்டை. சண்டை. சண்டை.
இப்படி இலங்கைக்கும் சீனத்துக்குமான நல்லுறவு கொஞ்சம் கொஞ்சமாக நாசமாவதை இருவருமே உணர ஆரம்பித்தோம்.

திருமணம் முடித்தவர்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எம்மைப்போன்று கூடிவாழும் சோடிகளுக்கு லொக்டவுன் வாழ்க்கை மிக மிகக்கடினம் என்பது விரைவிலேயே புரிந்துவிட்டது. அதிலும் ஒரு தமிழ் ஆணும் சீனத்துப் பெண்ணும் வாழ்கின்ற லொக்டவுன் வாழ்க்கை இரட்டை நரகம் என்றே சொல்லவேண்டும். திருமண வாழ்வுக்கும் அது அன்றி வெறுமனே கூடி வாழ்கின்ற வாழ்வுக்கும் மெல்லிய நூலும் அதில் தொங்கும் ஒரு தங்கக்கட்டியும் மட்டுமே வித்தியாசம் என்ற ஒரு எண்ணம் பலகாலமாக என்னுள்ளே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் பிய்த்துக்கொண்டு போகலாம் என்ற சாத்தியம் இருக்கும்போதுகூட இணை பிரியாமல் வாழும் வாழ்க்கைதான் உண்மையான காதல் என்று கூறித்திரிந்தவன் நான். ஏப்ரிலும் நானும் ஒன்றாக வாழ முடிவெடுத்தபோது எனக்குள் ஒருவிதப் பெருமிதமே கூடியிருந்தது. மகன்றில்கள் மணம் முடித்து அறியுமா என்ன? சங்க இலக்கியத்தில் திணைகள் எங்கும் திரிந்த தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலிருந்த ஒரே பிணைப்பு காதல் மாத்திரமே. இப்படியெல்லாம் பீற்றிக்கொண்ட ஆள் நான்.
 
ஆனால் எல்லாமே வெறும் வாய்ச்சவடால்தான். இப்போது ஒப்புக்கொள்கிறேன். திருமணத்தில் பெரும் சக்தி இருக்கிறது. அது ஒரு சீனத்துச்சுவர்போல. அதனுள் நுழையும்போது குதிரையில் அழைத்துச் செல்வார்கள். மேளதாளங்கள் முழங்கும். ஊரே கூடி வரவேற்கும். ஆனால் உள்ளே போய்விட்டால் பின்னர் அது நரகமானாலும் மீள்தல் எளிதல்ல. ஆரம்பத்தில் எம்மை அழைத்து வந்தவர்கள் எல்லாம் அடுத்து அவரவர் வேலையைப் பார்க்கப்போய்விடுவர். கோட்டைக் கதவுகள் மூடப்பட்டுவிடும். சுவரில் ஏறித்தன்னும் இந்தப்பக்கம் வந்துவிடமுடியாது. வீரர்கள் அம்பு எய்வார்கள். எரி குண்டுகளைத் தள்ளிவிடுவார்கள். எண்ணெய்களை ஊற்றி எம்மை ஏற முடியாமல் வழுக்கிவிழச் செய்வார்கள். திருமணப் பந்தத்தை முறிப்பது என்பது முயற்கொம்புக்கு ஒப்பானது. அவமானம் பிடுங்கித்தின்னும். ஊரே நம் முதுகைப்பார்த்துக் காறித்துப்பும். எம்மைக் காரணம் காட்டியே ஒவ்வொருவரும் தத்தமது உறவுகளை யோக்கியமாக்கிக்கொள்வார்கள். இத்தனையையும் தாண்டி விவாகரத்துதான் ஒரே தீர்வு என்று முடிவெடுத்து, தட்டுத்தடுமாறி சுவரில் ஏறினாலும் மேலே ஒருத்தர் வக்கீல் அங்கி போட்டபடி நின்று ஒரு கோப்பினை நீட்டுவார். வீடு போகும். வாகனம் போகும். டிவி போகும். பிரிட்ஜு போகும். வங்கியிலிருக்கும் வைப்பு போகும். நகை போகும். பிய்ந்துபோன ஜட்டியைக்கூட மார்க்கட் பிளேசில் விற்றுக் காசு பார்க்கவேண்டிய நிலைமை வரும். கூடவே வழக்கறிஞருக்குக் கூலி கொடுக்கக் கடன்படவேண்டும். அதை அடைக்கவே அடுத்த பத்துவருடங்கள் கழிந்துவிடும். கலியாணத்துக்குக் கடன் கேட்டால் எவருமே கேள்வியின்றிக் கொடுப்பார்கள். விவாகரத்து என்றால் டன் கணக்கில் அறிவுரை மாத்திரமே இங்கே கிடைக்கும். இவையெல்லாவற்றையும் ஒரு கணம் யோசித்துவிட்டு, சனியன் கொஞ்ச நாள்தானே, வாழ்ந்து தொலைக்கலாம் என்று வாளாவிருக்கிறோம் அல்லவா? அதுதான் திருமணப் பந்தத்தின் அற்புதச் சக்தி. ஒரு திருமணத்தைத் தக்கவைப்பதற்காக இந்தச்சமூகம் பத்து லட்சம் சக்கரவியூகங்களைக் கட்டி வைத்திருக்கிறது. உள்ளே போகக்கூடாது. போனால் திரும்பி வர முயலக்கூடாது.
 
வந்தால் அபிமன்யூ நிலைதான் நமக்கும்.

ஆனால் லிவிங் டுகெதர் அப்படியல்ல. ஒக்ஸிடோசின் என்ற ஒரு ஹோர்மோர்ன் மாத்திரமே இங்கே இருவரையும் கட்டிவைத்திருக்கும் ஒரே பிடிமானம். அதுவும் நாளாக மக்கிவிடும். மற்றபடி கூடி வாழும் வாழ்க்கையின் கோட்டைக் கதவுகள் எப்போதுமே திறந்தே கிடக்கின்றன. வேண்டுமான நேரத்தில் பிய்த்துக்கொண்டு போகலாம். கதவுக்கு அப்பால் வாடகை சொகுசு வண்டிகள் எமக்காக எந்நேரமும் அங்கே காத்து நிற்கும். கோர்ட்டு சூட்டுப் போட்ட அதன் டிரைவர் நமக்காகக் கதவைக்கூடத் திறந்துவிடுவான். ஒரு சின்னப் பொறி போதும். காடே விட்டெரியும். வெறுமனே தோய்த்த யங்கியோடு தோய்க்காத ஜட்டியைத் தவறிப்போய் மடித்து வைத்த குற்றத்துக்காகவே உறவுகள் இங்கே பிரிந்திருக்கின்றன. எனினும் கைவிலங்கு மாட்டாமல், கதவைப் பூட்டாமல் இருந்தாலும்கூட சில கைதிகள் தப்பிக்க முயலாமல் இருக்கிறார்கள் அல்லவா? இந்தச் சிறைச்சாலையில் வாழ்ந்துபார்த்தவர்களுக்குத்தான் அந்த அற்புதம் புரியும்.
 
உதாரணத்துக்கு எனக்கும் ஏப்ரிலுக்குமிடையே நிகழ்ந்ததையே சொல்கிறேன். சின்ன விசயம்தான்.
ஒருநாள் நான் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது பாத்ரூமிலிருந்து அவள் குரல் கேட்டது. அந்தக் குரலிலேயே டிராகன் மூசுகிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. என் கழுத்தில் ஏறி அது இப்போ நர்த்தனமாடப்போகிறது.

“ஏய் இங்கே வா?”

கோபத்தில் கூப்பிடும் எஜமானரிடம் நாய் பம்மிக்கொண்டுபோவதுபோலப் போனேன்.

“என்னது ஏப்ரில்?”

“அதைத்தான் நான் கேட்கிறேன். என்னது இது?”

“டொய்லட்.”

“உனக்கு அதில் என்ன தெரிகிறது?”

“டொய்லட்டில் வேறென்ன தெரியும்? கொமேட்தான்”

“நன்றாக உற்றுப்பார், என்ன தெரிகிறது?”

“ப்ஃக்கிங் கொமேட் ஹனி, வட் எல்ஸ்?”

அவள் என் காதினைத் திருகிப்பிடித்து தலையைக் கீழே தள்ளிக்கொண்டுபோனாள்.

“அந்த சீற்றைப்பார், என்ன தெரிகிறது?”

“வேறும் சீற்றுத்தான் தெரிகிறது”, வெள்ளை சீற்றில் இடப்பக்கம் சின்னதா ஒரு வெடிப்பு இருந்தது. அவசரமாக அதில் குந்தும்போது சமயத்தில் குண்டியை நன்னிவிடுவதுண்டு. அவளுக்கும் நன்னியிருக்கலாம். ஐயையோ.
 
“உனக்கும் நன்னிவிட்டதா? நான் அதை மாற்றவேண்டும் என்று குறித்துவைத்திருக்கிறேன். லொக்டவுன் முடியட்டும். மாற்றலாம்”

“அதுவல்ல முட்டாள் முட்டையே, சரியாக உற்றுப்பார்”

என் தலையைக் கிட்டத்தட்ட அந்த சீற்றுக்கு மிக அருகேயே அவள் அழுத்திவிட்டாள். சவத்தை. மீன் நாற்றம் அடித்தது. சீனர்கள் மீன்களை அவித்துக் குழம்பு வைப்பதில்லை. வெறுமனே சில இலைகளோடு சுடுதண்ணியில் போட்டுவிட்டு வேகமுன்னமேயே சாப்பிடுவார்கள். அதன் பலன் பின்னாலே இங்கே தெரிகிறது. ச்சைக்.

“என்ன யோசிக்கிறாய்? நான் தேடிக் கண்டடைந்த ஶ்ரீலங்கன் சீமானே, இப்போது என்ன தெரிகிறது?”
நான் நன்றாகக் கண்களைத் திறந்து பார்த்தேன். தெரிந்துவிட்டது. சீற்றில் சின்னதாக சில மூத்திரத் துளிகள் தெறித்துக்கிடந்தன. ஷிட். செத்தேன்.

“இதுவா … நீர்த்துளிகள், பிளஷ் பண்ணும்போது தெறித்திருக்கவேண்டும்”

“பஃக்கர்… பொய். இந்தக் கூழ் முட்டையின் வாயிலிருந்து வருவதெல்லாம் பொய். பெய்யும்போது சீற்றைத் தூக்கிவிட்டுப் பெய் என்றால் மேல் சீலிங்கிலிருக்கும் சிலந்தியைப் பார்த்துக்கொண்டு பெய்வது. கொமெட்டைத் தவிர அத்தனை இடங்களிலும் உங்கள் சிலோன் டீயை வடிப்பதுபோல வடித்து வைத்திருக்கிறாய். அத்தனையும் மஞ்சள்”

இதுதான் எனக்கு அவளிடம் பிடிப்பதில்லை. சீற்றில் ஒரு சிறு துளி. ஆனால் ஏதோ உலகம் முழுதும் பெய்துவைத்திருப்பதுபோல அவள் சோடனை செய்வாள். அநியாயத்துக்குத் தேயிலை வேறு அவளிடம் அடிவாங்குகிறது. பேசாமல் அம்மா அனுப்பிய வேதநாயகம் மாஸ்டரின் மகளின் சாதகத்துக்கே சம்மதம் சொல்லியிருக்கலாம். எதிர்ப்போ எந்தக்கூச்சலுமோ இருந்திருக்காது. அவளாகவே கக்கூசைக் கழுவிக் களைத்துப்போய் வெளியே வந்து, டிவி பார்த்துக்கொண்டிருக்கும் என்னிடம் ‘உங்களுக்கு ஏதாவது டீ வேண்டுமா?’ என்று கேட்டிருப்பாள். பயங்கர ஒல்லியாக இருக்கிறாள் என்று அப்போது மறுத்தபோது எனக்கு இருபத்தாறு வயது. ஆயிரம் பெண்களின் சாதகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்போது எந்த முட்டாளாவது முதலாவது சாதகத்துக்கே சம்மதம் சொல்வானா என்ன? அப்போது மறுத்தது. பின்னர் அடுத்ததையும் மறுத்து, மற்றதும் சரிவராமல், பின்னர் ராகுவும் கேதுவும் தொடர்ச்சியாக மாறி என் விதியில் விளையாடி, ச்சைக், டிக்டொக்கில் வீடியோவைத் தட்டுவதுபோல சாதகங்களைத் தட்டிக்கழித்ததன் வினைப்பயன் சீனத்தி ஒருத்தி என் முகத்தை கக்கூஸ் கொமெடுக்குள் அழுத்தி நிற்கும் நிலைக்கு இட்டுச்சென்றுவிட்டது.

நான் அப்போது அவளிடம் அழாக்குறையாகச் சொன்னேன்.
 
“சீற்றைத் தூக்கி வைத்தால் அது தானாக மீள விழுகிறது சித்திரை. ஒரு கையால் அதனைப் பிடித்துக்கொண்டு மறுகையால் எனதைப் பிடித்துக்கொண்டு பெய்வது கடினமாக இருக்கிறது. கடவுள் ஆணை”

அவள் அதனைக் காட்சிப்படுத்திப் பார்த்திருக்கவேண்டும். அப்பாடி. சிரித்துவிட்டாள். ஆனால் சிரிப்பை அடக்கிக்கொண்டே காதைப்பிடித்து என் தலையை நிறுத்தினாள். ஏப்ரிலை சித்திரை என்று விளிக்கும்போதெல்லாம் இப்படித்தான் அவள் சிரிப்பதுண்டு. ஒரு கணம் சுவாலையைப் பீய்ச்சும் டிராகன் மறுகணமே பனிச்சாரலைக் கொட்ட ஆரம்பித்துவிடும். இதுதான் ஏப்ரில். இதற்காகத்தான் நான் இவளைக் காதலிக்கிறேன். இந்த டிராகன்தான் இந்தப்பூமிப்பந்தின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றி பிரபஞ்சம் முழுதும் அழைத்துச்செல்கிறது. எனக்குச் சிறகுகள் வளர்த்துப் பறக்கப்பழக்குகிறது. அந்தச் சுவாலையும் பனிச்சாரலும் இல்லையென்றால் என்ன மயிருக்கு இந்த வாழ்க்கை? சொல்லுங்கள். இந்த அற்புதமான உறவை நாம் ஏன் திருமணத்தால் உறுதி செய்யவேண்டும்?

“Oh, I fucking love this stupid dragon”
 
கரடி வந்து தன் மூக்கால் கைகளை முட்டியபோதுதான் நான் சுயநினைவுக்கே வந்தேன். ஷிட். எப்படி ஏப்ரிலை நேற்று போகவிட்டேன்? இத்தோடு இது மூன்றாவது தடவை. ஆ ஊ என்றால் தனிமை வேண்டும், உன்னோடு வாழமுடியாது என்று புறப்பட்டு பிரண்டா வீட்டுக்குச் சென்றுவிடுவாள். அப்படி என்ன மூக்குமேலே கோபம் அவளுக்கு? நானும்தான் மாய்ந்து மாய்ந்து காதலிக்கும் பெண்ணை ‘போய்த்தொலை’ என்று சொல்லுமளவுக்கு ஏன் மோசமானவனாக மாறுகிறேன்? இந்நேரம் அவள் என்ன செய்வாள்? தூங்கிக்கொண்டிருப்பாளா? இல்லை என்னைப்போல அவளும் நடுச்சாமத்தில் விழித்திருந்து பழையதை எண்ணிக்கொண்டிருப்பாளா? அழைத்துப்பார்க்கலாமா?
அழைப்பு வொய்ஸ் மெயிலுக்கு போனது.
 
“நீங்கள் ஏப்ரிலை அழைத்திருக்கிறீர்கள். இச்சமயம் என்னால் உங்களோடு பேசமுடியவில்லை. எதுவென்றாலும் மெசேஜ் பண்ணுங்கள். தெரிந்த இலக்கம் என்றால் நானே திருப்பி அழைக்கிறேன். மற்றபடி வீட்டிலேயே இருக்கவும். பாதுகாப்பாகவும் இருக்கவும்.”

ஊருக்கெல்லாம் நோய்த்தடுப்புக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு அவள் மட்டும் சிலுப்பிக்கொண்டு போய்விட்டாள். ஏப்ரிலின் குரலைக் கேட்பதற்காகவே மறுபடியும் இரண்டுமுறை அழைப்பை ஸ்பீக்கர் மோடில் எடுத்தேன். பொங்கலுக்குப் போடவென இடித்துவைத்த சர்க்கரைத்துகள்களைப்போல அவள் குரல் கொஞ்சம் கரகரவென்று ஆனால் இனிப்பாக இருக்கும். அவளின் குரலைக்கேட்ட கரடியும்‘நூ நூ நூ’ அனுங்கியபடி செல்பேசித் திரையை நக்க ஆரம்பித்தாள். நான் அவளுக்குச் சாப்பாடு கொஞ்சம் போட்டுவிட்டு ஐபோன் family sharingல் சென்று ஏப்ரிலின் லொக்கேசனைப் பார்த்தேன். இன்னமும் பிரெண்டா வீட்டில்தான் இருக்கிறாள்.
 
விறுவிறுவென ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

“சித்திரை, என்னை மன்னித்துவிடு. தயவு செய்து வீட்டுக்கு வா. கரடியும் நானும் உன்னை மிஸ் பண்ணுகிறோம், கரடி உன் வொய்ஸ்மெயிலைக் குரலைக்கேட்டதுமே அழத்தொடங்கிவிட்டது. அவளுக்காகவாவது வா.”

அனுப்பினேன். ‘Delivered’ என்று வந்தது. அடுத்த கணமே அது ‘Read’ என்று மாறியது. கழுதைக் கிழவி முழித்திருக்கிறது. மறுபடியும் அழைப்பெடுத்தேன். ம்ஹூம். ‘நீங்கள் ஏப்ரிலை அழைத்திருக்கிறீர்கள்’தான். நான் உடனே கரடியின் முகத்தைப் படம் பிடித்து அவளின் கண்களில் கண்ணீர் கிராபிக்ஸ் செய்து ஏப்ரிலுக்கு அனுப்பினேன். மறுபடியும் ‘Read’. திரும்பவும் கோல் பண்ணிப்பார்த்தேன். ரிங் போனது. ஒன்று. இரண்டு. மூன்று. ‘நீங்கள் ஏப்ரிலை அழைத்திருக்கிறீர்கள்’. ஓ பஃக்கர், இவளை எதற்காக லவ் பண்ணித் தொலைத்தோம்? அங்கேயே கிடக்கட்டும். நான் கரடியைக்கூட்டிக்கொண்டு நடைப்பயிற்சிக்குப் போகலாம் என்று முடிவெடுத்தேன். அவளைப்பார்த்து ‘தயாராகு’ என்றேன். அவள் உடனே வாசலடிக்கு ஓடிப்போய் உட்கார்ந்துகொண்டாள். நான் உடற்பயிற்சி உடையை அணிந்து வெளியே வரும்போது ‘கிளிங்' என்று செல்பேசி மின்னியது.

“ஶ்ரீலங்கன், என்னை வந்து அழைத்துப்போ. வரும்போது மக்டொனால்ட்சில் கோப்பியும் வாங்கிவா. சாய் லாட்டே. தெரியும்தானே. ஆனால் நான் சமாதானமாகிவிட்டேன் என்றுமட்டும் கனவு காணாதே”

இந்தச் சீனத்தியும் நானும் படும்பாடு என்று முணுமுணுத்தபடி அவளுக்கு உடனேயே அழைப்பெடுத்தேன். ம்ஹூம்.

“நீங்கள் ஏப்ரிலை அழைத்திருக்கிறீர்கள். இச்சமயம் என்னால் உங்களோடு பேசமுடியவில்லை….”

சர்க்கரைக் குரல் கரகரவென பேச அப்படியே பொங்கல் பானையை உதைக்கவேண்டும்போல இருந்தது. ‘பேப்பூழல். அவ கூப்பிட்டால் போய் நிற்பதற்கு நான் என்ன அவள் வீட்டு வேலைக்காரனா?’ என்று புறுபுறுத்தபடி கரடியிடம் சொன்னேன்.

“நாங்கள் பின்னர் நடக்கப்போகலாம். இப்போது போய் முதலில் ஏப்ரிலைக் கூட்டிவருவோம். வந்து காரில் ஏறு”

என்ன புரிந்ததோ, கரடி உற்சாகத்துடன் பாய்ந்து என் முகத்தை நக்கிவிட்டு காரை நோக்கி வேகமாக ஓடிப்போனாள்.

— தொடரும் —
    




Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...