Skip to main content

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 4




"அவன் முகத்தில் எல்லாமே தெரிந்தது. கோபம். குரூரம். இயலாமை. இகழ்ச்சி, வன்முறை. திருமண நிகழ்வுக்குச் செல்லும் சீமாட்டிபோல அவன் அவற்றை நகைகளாக மாட்டிப் பெருமிதப்பட்டான். அவனுக்கும் நான் ஒரு சீமாட்டியாக அக்கணம் தோன்றியிருக்கக்கூடும்"

ஏப்ரில்

நான் பிர்ட்ஜைத் திறக்க கரடியும் வந்து பக்கத்திலேயே நின்றது.

பிரிட்ஜில் கத்தரிக்காயும் தக்காளியும் அழுக ஆரம்பித்திருந்தன. காளானும்தான். கரட் இன்னமும் ஒரு வாரத்துக்குத் தாங்கலாம் என்று தோன்றியது. சோய்யும் புரோகோலியும் வாடிக்கிடந்தன. மரக்கறிகளைக் காகிதத்தால் சுற்றி பிர்ட்ஜுக்குள் வைக்கவேண்டும் என்று அம்மா சொல்வது ஞாபகம் வந்தது.

நான் கரடியோடு பேசியபடியே பிரிட்ஜை நோட்டம் விட்டேன்.

“நான் ஒரு முட்டாள். வாங்கிவிட்டுப் பயன்படுத்தாவிட்டால் பழுதாகிவிடுமே என்ற குற்ற உணர்ச்சியிலாவது சமைப்பேன் என்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம். இங்கே பார்த்தாயா, அவனுக்குள் வைத்து வாட்டாமலேயே கத்தரிக்காய் நசுங்கிக்கிடக்கிறது”

கரடிக்கு எடுத்துக் காட்டினேன். அவள் அதனை முகர்ந்து பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவள் கண் முழுதும் மேல் தட்டிலிருந்த சோசேஜிலேயே இருந்தது. அதன் காலாவதித் திகதியைத் தூக்கிப்பார்த்தேன். இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து கரடிக்குக் கொடுத்தேன்.

“சத்தம் போடாமல் சாப்பிடு. அவன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் என்றால் கத்துவான். நீ ஒரு நாயாம். உனக்கு நாய்ச்சாப்பாடுதான் போடவேண்டுமாம். மீன் தலைகளையும் குதிரை இறைச்சியையும் கலந்து உருட்டிக் காய வைத்துத் தந்து உன் நாக்குச்சுவையையே இவர்கள் கெடுக்கிறார்கள். உனக்குப் பிடித்தமான எலும்பை பிளாஸ்டிக்கில் செய்து தந்து ஏமாற்றுகிறார்கள். இந்த மகிழை நம்பாதே. நாய்கள் வேண்டுமென்று அடம்பிடிப்பார்கள். பின்னர் அதே நாய்களை ஏன் நாயே என்றுகூட இந்த மனிதக்கூட்டம் மதிக்காது. நீ நன்றாக இந்த சோசேஜை சாப்பிடு. அவனைக் கண்டால் இனிமேல் வாலை ஆட்டாதே என்ன?”

கரடி நான் கொடுத்த சொசேஜ் துண்டைக் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்துக்குத் திரும்பினாள். நான் மீண்டும் பிரிட்ஜில் கவனமானேன். ஏன் நான் திருந்துவதேயில்லை? மகிழுக்கும் இவற்றில் எந்த அக்கறையுமில்லை. நானும்தானே வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். ஆனால் அவனுக்கு மட்டும் வேலை நேரத்தில் அசைய முடியாது. உணவு என்பது வேளாவேளைக்கு யாரேனும் மீட்பர் ஒருவர் வேலை மெனக்கெட்டுப் பூமிக்கு வந்து சமைத்துக்கொடுக்கும் அற்புதம் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். மதியம் பன்னிரண்டுக்கு மேலேதான் மீட்பர் வரவில்லையா என்று அறைக்கு வெளியே வந்து கேட்பான். அப்புறம் ஒரு சம்பிரதாயமான சண்டைக்குப் பிறகு ஊபர் ஈட்சில் ஒரு இந்திய மீட்பர் வந்து அப்பார்ட்மெண்ட் மணியை அடிக்கவேண்டியிருக்கும். வீட்டில் மகிழ் செய்யும் வேலைகளையும்கூட என்மேல் உள்ள பயத்தில்தான் செய்கிறான். மற்றும்படி உலக விவகாரங்கள்தான் அவனுடைய ஒரே இலக்கு. ஏகாபத்தியமும் முதலாளித்துவமும் மார்க்சிசமும் சுதந்திரப்போராட்டங்களும் அடுப்பில் சோறும் அவனுடைய ஶ்ரீலங்கன் உறைப்புக் கறிகளையும் சுவையாக சமைத்துத்தரும் என்ற கற்பனை அவனுக்கு. இந்த ஆண்களை மட்டும் சமையலறைக்குள்ளேயே அடைத்துவிட்டால் போதும். உலகின் அத்தனை அதிகார மையங்களும் இரட்டைக்கோபுரங்கள்போல இடிந்து விழுந்துவிடும்.

நான் பழுதான மரக்கறிகளைக் கொண்டுபோய்ப் போடவெனக் குப்பைக்கூடையைத் திறந்தேன். அங்கே முதல் நாள் நான் செய்து பிழைத்துப்போன குழைந்த சோறு இன்னமும் கண்களில் மாட்டியது.

“ஒரு சோறு சமைக்கக்கூடத் தெரியவில்லையா?”

“நீங்கள் சொன்னதுபோலவே செய்தேன் மமா. பாத்திரத்தில் தண்ணிரை விட்டு சுட்டுவிரல் முழுதும் அமிழுகிறதா என்று செக் பண்ணினேன்”

“விரல் முழுதும் விட்டாயா? முட்டாள் முட்டை. சுட்டு விரலின் முதல் ரேகைவரைக்கும்தான் தண்ணீர் விடவேண்டும். சற்று மேலே கீழே போனாலும் சோறு குழைந்துவிடும் அல்லது எரிந்துவிடும்”

தண்ணீர் அளவு சற்று அங்கிங்கே தவறினாலும் ஐம்பது கசையடிகள் கொடுத்துவிடுவார்போல அம்மா சொன்னார்.

“அப்படியென்றால் செரிலுக்கு மிக நீண்ட விரல்கள் அல்லவா மமா? தம்பிக்கு குட்டி விரல். பிழைத்துவிடாதா? சோறு அவிக்கும் பாத்திரம் ஒடுக்கமாக இருந்தால் கொள்ளளவுக் கணக்குப்படி தண்ணீர் விட்டால் அது எரிந்துவிடாதா?”

நான் குதர்க்கம் செய்தால் அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். குதர்க்கம் பேசுபவர்கள் தாமும் எதுவும் செய்யாமல், முயற்சி செய்யும் மற்றவர்களையும் தடுத்து நிறுத்தி இயங்கா நிலையை ஏற்படுத்துவார்கள் என்பார் அவர். பாவம் அம்மா. சிங்கப்பூரில் லொக்டவுன் அவரை வெகுவாகவே பாதித்துக்கொண்டிருக்கிறது. அப்பாவும் தம்பியும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அதுவும் நானும் இல்லாத சமயத்தில் அம்மா எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறாரோ. ஒரு நாளில் இரண்டாயிரம் டொலர்களைக் குதிரைப் பந்தயத்தில் கட்டி அப்பா இழந்ததாக அன்று புலம்பினார். பேசும்போது வழமைக்கு மாறாக வீடியோவை ஓஃப் பண்ணிவைத்துப் பேசினார். அப்பா அடித்திருக்கலாம். அல்லது அழுது அழுது அவரது கண்கள் வீங்கியிருக்கலாம். டிவி பார்ப்பதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்கிறதோ என்னவோ. மனிசிக்கு சமையல் மாத்திரம்தான் ஒரே துணையாக இப்போது இருக்கக்கூடும்.
 
அம்மா சமையலில் ஒரு தேர்ந்த சிற்பியைப்போன்றவர். சமைக்கும்போது அவர் எவரையும் கணக்கிலேயே எடுப்பதில்லை. யாருக்காகச் சமைக்கிறோம் என்று அக்கறை கொள்வதில்லை. அவருக்குச் சமைக்கும் உணவானது தான் எண்ணிய வகையில் வரவேண்டும். அவர் டம்பிளிங் செய்யும்போது நின்று பார்த்தால் நம் கால்கள் கடுகடுக்க ஆரம்பித்துவிடும். அதன் தோல் போர்வை சரியான, சீரான தடிப்பில் வரும்வரைக்கும் விடவே மாட்டார். சம அளவில் அதை வட்டமாக வெட்டுவார். உள்ளே ஓராயிரம் அணுவளவு நறுக்கப்பட்ட மரக்கறிகள். அவரே செய்த சோஸ். அம்மம்மா காலத்திலிருந்து பயன்படுத்தும் ஒரே பிராண்ட் ஷாக்சிங் வைன், எண்ணெய் என்று என்னெல்லாமோ சேர்த்துக் கலந்து குழை குழை என்று குழைத்து, வட்டப் போர்வையை இடக்கையில் தாங்கி, வலக்கை சொப்ஸிடிக்குகளால் குழையலை எடுத்து உள்ளே வைத்து, சுற்றி, நுனிகளை அழகாக சிற்பத்தின் கண்களை வடிப்பதுபோல செதுக்கி, அவர் அவித்து எடுப்பதற்குள் விடிந்துவிடும். எனக்கேன் அம்மாவின் இந்தப் பொறுமையில் ஐந்து சதவீதம்கூட இல்லாமல்போனது? ஏன் சமையல் எனக்குச் சுட்டுப்போட்டாலும் வருவதில்லை? அம்மாவின் அதீதத்தினைக் கண்டு ஏற்பட்ட மிரட்சியா? அல்லது அம்மாபோல நானும் வந்துவிடக்கூடாது என்ற பிடிவாதத்தின் பலனா? அப்பா என்றைக்காவது அம்மாவின் இந்த நுண்ணுணர்வுகளை ரசித்திருப்பாரா? அவருக்குத் தட்டில் டம்பிளிங்குகள் கிடந்தால் அலேக்காக அவற்றைச் சொப்ஸ்டிக்குகளால் தூக்கி வாய்க்குள் போடுவதைவிட வேறு என்ன தெரியும்? அப்போதுகூட டிவியில் உதைபந்தாட்டம் போய்க்கொண்டிருக்கும். ஒரு காதில் டெலிபோனை வைத்து யாரேனும் பந்தயக்காரருடன் பேசிக்கொண்டிருப்பார். எவ்வளவு பணம் தொலைந்துவிட்டது? ஒவ்வொரு தடவையும் அவர் பணத்தை விடும்போது அடிவாங்குவது, பாவம் அம்மா அல்லவா? அப்பா மட்டும் கணம் சகலத்தையும் வீசி எறிந்துவிட்டு அம்மாவைக் கொஞ்சமேனும் காதலித்திருந்தால், கொஞ்சம் அம்மா மேலே கரிசனை கொண்டிருந்தால், சற்று கவனத்துடன் அந்த டம்பிளிங்குகளின் முடிச்சுகளைக் கவனித்திருந்தால், ஒன்றுமே வேண்டாம், என் தங்கமே என்று அம்மா தலையில் ஆதரவாகத் தடவிவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மாவையும் அவருடைய திறன்களையும் அப்பா கொண்டாடி, அதை நாங்கள் பார்த்து வளர்ந்திருந்தால் நான் வேறு ஒருத்தியாக வளர்ந்திருப்பேனே? ‘இப்படியெல்லாம் மூளையைப்போட்டுக் குழப்பாதே ஏப்ரில்’ என்று அம்மா தலை நிமிராமல் சொல்லியபடியே டம்ளிங்கை மடித்துக்கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. சிரித்துக்கொண்டேன்.
 
“அம்மா. அம்மா”

பேசாமல் சொசேஜை கிரில்லில் வாட்டிவிட்டு வியற்நாம் ரோலினுள் வைத்து கொஞ்சம் சோசையும் விட்டுச் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தேன். அதிபர் வெளியே வந்து புறுபுறுத்தார் என்றால் நீயே பிடித்தமாதிரி செய்துவிட்டு எனக்குக் கொடு என்று சொல்லவேண்டியதுதான். நான் சொசேஜையும் தக்காளி சோசையும் பிரிட்ஜிலிருந்து எடுத்து சமையலறைத் தட்டுக்குக் கொண்டுசென்றேன். அப்போது கரடி எதையோ கக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போனேன்.

“கரடி …. ஆர் யு ஓகே?”

அவள் சொசேஜ் துண்டை மொத்தமாகக் கக்கிவைத்திருந்தாள். பின்னர் தண்ணீரைக் குடித்து தன் வாயில் அதன் அருவருப்பை அகற்ற முயற்சி செய்துகொண்டிருந்தாள்.
 
“வட் ஹாப்பிண்ட்… என்னாச்சு?”

சத்தம் கேட்டு அறையிலிருந்து வந்த மகிழ், கரடி கக்கியிருந்த சொசேஜைப் பார்த்துவிட்டான்.

“கரடிக்கு யார் சொசேஜைக் கொடுத்தது? அவளுக்கென்று வாங்கிய சாப்பாடு எங்கே? கண்டதையும் சாப்பிட்டு அவளுக்கு வயிற்றுப்போக்கு வந்துவிடப்போகிறது”

மகிழ் என்னோடு எதுவுமே பேசாமல் புறுபுறுத்தபடியே கரடியைத் தடவிவிட்டான். சோசேஜை எடுத்து குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு அவளுக்கான சாப்பாட்டை எடுத்துத் தட்டத்தில் கொட்டிவிட்டான். பின்னர் என்னிடம் வந்தான்.

“நீ எதுவும் சாப்பிடவில்லையா?”

இதுதான் அவனுடைய தந்திரம். ‘என்ன சாப்பாடு’ என்று கேட்கமாட்டான். கேட்டால் நான் கத்துவேன் என்று தெரியும்.

“இந்த சோசேஜை கிரில் பண்ணிச் சாப்பிடலாம் என்றிருந்தேன். இப்போது மூடு போய்விட்டது. எறிந்துவிடலாமா?”

“ம்ம்ம் கரடி கக்கியதைப் பார்த்தபிறகு இதை யார் சாப்பிடமுடியும்? நாங்கள் ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணலாமா? டோசா ஹட்டிலே டீல் ஒன்று இருக்கிறது. பிரியாணி வாங்கலாம், உனக்கு செஸ்வான் நூடில்ஸ் வேண்டுமா?”

இந்திய உணவினை நினைத்தாலே தலையிடித்தது. ஆனாலும் சரி என்று சொல்லிவிட்டுப் பல்கனியில் வந்து அமர்ந்தேன். மடிக்கணினியை எடுத்துக் கொஞ்சநேரம் வேலை செய்யலாம் என்றால் மனம் ஒன்றவில்லை. தொடர்ச்சியான லொக்டவுன்கள் மன உளைச்சலையே கொடுக்கின்றன. சும்மா வெறுமனே வீட்டில் இருக்கப் பைத்தியம் பிடிக்கும்போல இருந்தது. பீரியட்டும் நான்கு நாட்களாகத் தவறிவிட்டதில் உள்ளூர ஒரு அச்சமும் இருந்தது. எப்படித்தான் திகதிகளைத் தவறவிடுகிறேனோ. சென்ற வருடமும் திகதிகளை மறந்து கவனமில்லாமல் இருந்ததில் அபோர்சன் மாத்திரை சாப்பிடவேண்டிவந்துவிட்டது. மகிழ்தான் கொஞ்சம் குழம்பிப்போனான். ‘இது கொலை இல்லையா?’ என்று கேட்டான். ‘இது கொலை என்றால், நீ ஒவ்வொரு தடவையும் வெளியேற்றும் நாற்பது மில்லியன் விந்துகளும் இலக்கை அடையமுடியாமல் இறந்துபோகும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ என்று நான் சொன்னபோது அவன் முகம் சுழித்தான். அவனைக் குற்றம் சொல்லவும் முடியாது. எனக்குமே முதற்தடவை சங்கடமாகத்தானே இருந்தது. பென்சன் இந்த விசயத்தில் கொஞ்சமேனும் புரிந்துணர்வு கொண்டவன். ஏசனோடுதான் எப்போதும் பிரச்சனை. அவனுக்குத் தெரியாமல் எத்தனை தடவைகள்? ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு பெரும் தவற்றைச் செய்வதுபோலவே தடுமாற்றம் எழுந்ததும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி போகப்போக அடங்கிவிட்டது. இது என் தெரிவு. குழந்தை என்பது வெறுமனே வயிற்றில் வளரும் இன்னொரு உயிர் மாத்திரம் அல்லவே. அதற்குத் தகுந்த தாய் தந்தை வேண்டும். அதனை உருப்படியாக அதன் வழியிலேயே வளர விட்டு, ஆனால் அதே சமயம் அதனை வழிப்படுத்தியபடி பின்னாலேயே செல்லவேண்டும். எத்தனை பெரிய சவால் இது? யார் என்ன சொன்னாலும் ஒவ்வொரு பிறப்பின்போதும் அதைப்பெற்ற தாயின் கனவுகளில் சிலது சிதைவடையவே செய்யும். அந்தக் கனவுகள் குழந்தைக்குத் தாய்ப்பாலாக ஊட்டப்படும். அந்தச் சுமையைச் சுமந்தபடியே அது பாவம் வளர வேண்டியிருக்கும். எனக்கு இது வேண்டாம். நல்ல காலம். மகிழும் இந்த விடயத்தில் நிறையவே புரிந்துணர்வு உள்ளவன்.

“சாப்பாடு வந்துவிட்டது, போய் எடுக்கிறாயா?” என்று அறைக்குள்ளிருந்து மகிழ் மெசேஜ் பண்ணினான். நான் கரடியையும் அழைத்தபடி கீழ்த்தளத்துக்குச் சென்று பார்சலை எடுத்துவந்தேன். சாப்பிடலாமா என்று தோன்றிய எண்ணத்தைத் தள்ளிப்போட்டேன். மகிழும் வரட்டும். இருவரும் ஒன்றாகச் சாப்பிடலாம். நான் மீண்டும் பல்கனிக்கு வந்தேன். மடிக்கணினியைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது. அதை விட்டுவிட்டுப் பேசாமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கரடி வந்து நானிருந்த கதிரைப் பின்னலுக்குள்ளால் என் முதுகை விராண்டினாள். நான் உடனே அவளைத் தூக்கி மடியில் கிடத்தினேன். தூரத்தே நகர மையத்தில் யுரேகா டவரின் உச்சியில் சூரிய ஒளி பட்டு அது தங்க நிறத்தில் தகதகத்துக்கொண்டிருந்தது. ரிச்மெண்ட் பிளாட்போர்மில் ஒரு ரயில் வந்து தரித்து நின்றது. பயணிகள் பெரிதாக இல்லை. ஒரு தாதிப்பெண் மாத்திரம் யாரோடோ செல்பேசியில் பேசியபடி இறங்கிப்போனாள். லொக்டவுனில் நகரமே முடங்கிப்போயிருந்தது. மகிழும் கரடியும் மாத்திரம் இல்லையென்றால் நான் இந்நேரம் செத்துப்போயிருப்பேன் என்று தோன்றியது. நாமாக விரும்பி அடையும் தனிமை கொடியது அல்ல. ஆனால் நீ தனித்துத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி எம்மை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் தனிமை கொடியது. மகிழ் ஒன்றும் பூரணமானவன் கிடையாது. ஒரு சராசரி ஆணுக்குரிய, அதுவும் இந்தியனுக்குரிய அத்தனை பலவீனங்களும் அவனிடம் இருக்கின்றன. ஆனால் அவன் பிடிவாதக்காரன் கிடையாது. சொன்னால் புரிந்துகொள்வான். இந்த உறவுக்காகத் தன்னை நல்லவகையில் மாற்றத் தயாராக இருப்பவன். அதுதானே ஒரு உறவில் வேண்டும்? அலுவலகத்தில் முதன்முதல் சந்தித்த மகிழுக்கும் இன்றைய மகிழுக்கும் எத்தனை வித்தியாசங்கள். அப்பாடி. அப்போதெல்லாம் பெண்களைப்பார்த்தாலே ஆள் வெட்கப்படும். மொத்தமாக மூன்று மாதங்கள் ஒரே புரெஜெக்டில் வேலை செய்தும் ஒழுங்காகக் கண்கொண்டு பேசாத ஆள் அவன். இப்போது அது பற்றிக் கேட்டால் தான் பிசியாக இருந்தேன் என்று கதை விடுவான்.
 
நான் கரடியில் வயிற்றைத் தடவிவிட்டபடியே நினைவுகளில் ஆழ்ந்தேன்.

அது ஒரு மறக்கமுடியாத புரொஜெக்ட். மகிழ்தான் அதன் பிரதான புரோகிராமராக இருந்தான். நான் இறுதி நேரத்தில்தான் டெஸ்டராகப் போய் இணைந்தேன். அவன்தான் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தான். ஆங்கிலம் கொஞ்சம் தடக்கித் தடக்கியே பேசுவான். பெண்கள் அவனை மேலும் தடுமாறச் செய்வார்கள் என்று தோன்றியது. பேசும்போது முகம்கொடுக்காமல் கணினித்திரையைப் பார்த்தபடியே பேசுவான். ஏதாவது புரியவில்லை என்றால் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து சொன்னதையே மீள ஒப்புவிப்பான். அவன் மூளை நரம்புகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டிலேயே இயங்குகிறதோ என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஒரு மென்பொருளின் ஆணைகள் செயற்படுவதுபோலவே அவனது செய்கைகள் அளந்து வைத்தாற்போல இருக்கும். சரியாக ஒன்பது மணிக்கு வேலைக்கு வருவான். பத்து மணிக்கு பாத்ரூம் போவான். பதினொரு மணிக்கு கிரீன் டீ. ஒரு மணிக்கு கீழே போய் சதா சப்வேயில் அரை அடி டேர்கிஷ் பாணும் தந்தூரியும் வாங்கிச்சாப்பிடுவான். பின்னர் மூன்று மணிக்கு இரண்டு கரண்டி சீனி போட்டு கோப்பி. ஐந்து மணிக்கு வீட்டுக்குப் பறந்துவிடுவான்.

எப்போதுமே புரஜெக்டுகளின் இறுதிக்காலங்களில் பணிச்சுமையும் நெருக்குவாரங்களும் அதிகமாக இருக்கும். நீண்டநேரம் நின்று வேலை செய்யவேண்டிவரும். அவுஸ்திரேலிய வெள்ளைகள் எல்லாம் கொஞ்சநேரம் சுற்றிச்சுழன்றுவிட்டு, இரண்டு கோப்பிகளையும் ஒரு டோனட்டுப் பெட்டியையும் எங்களுக்கு வாங்கிக்கொடுத்துவிட்டு ‘நீண்ட நேரம் நிற்காதீர்கள், நான் வீட்டுக்குப்போய்த் தொடர்புகொள்கிறேன்’ என்று சொல்லிக் கழன்றுவிடுவார்கள். குழந்தைகள் உள்ளவர்களும் சிறுவர் காப்பகங்கள் மூடப்பட முன்னர் போய்ப் பிள்ளைகளைக் கூட்டவேண்டும் என்று நழுவிவிடுவார்கள். தனிக்கட்டைகள்தான் கிடந்து மாயவேண்டும். அதிலும் எம்மைப்போன்ற நேர்ந்துவிட்ட சீன, இந்திய முகங்கள்தான் தலை வெடிக்க வேலை செய்யவேண்டியிருக்கும். அந்தப் புரொஜெக்டும் இழுபட்டுக்கொண்டே போனதில் ஒருநாள் புரெஜெக்ட் மனேஜர் புறுபுறுத்துவிட்டான். 

அதன் பின்னர்தான் அவனும் நானும் தாமதமாக நின்று வேலை செய்யவேண்டி வந்தது. தாமதம் என்றால் சமயத்தில் அதிகாலை இரண்டு மூன்று ஆகிவிடும். இந்தா முடிகிறது, இது இறுதித்தடவை என்று முயற்சித்து முயற்சித்து ஒவ்வொரு தடவையும் மென்பொருளைக் கட்டித் தூக்கி, சேர்வரில் போட்டு ஓட்டி, பரிசோதிக்கவே மணித்தியாலங்கள் பறந்துவிடும். அதிலும் மகிழ் எழுதிக்கொண்டிருந்த மென்பொருள் பகுதியில்தான் பல சிக்கல்கள் வந்ததால் அலுவலகத்தில் நாங்கள் இருவரும்தான் இறுதிவரை எஞ்சியிருப்போம். ஆரம்பத்தில் நாங்கள் வேலையிலேயே கவனமாகயிருந்தோம். போகப்போகத்தான் கொஞ்சம் பேசிக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தோம். பின்னர் ஒன்றாக அலுவலக சமையலறைவரை சென்று கிரீன் டீ ஊற்றிக்கொண்டு வந்தோம். எங்களிடம் பேசுவதற்கு நிறையவே இருந்தது அப்போதுதான் தெரியவந்தது. முதலில் புரொஜெக்ட் மனேஜரின் தலை உருண்டது. அப்புறம் சக வெள்ளைகள். நான் தங்கியிருந்த பிளாட்டு நண்பர்களின் தொந்தரவுகளைச் சொல்லத்தொடங்கினேன். அதில் ஒரு அறையில் தங்கியிருந்தவனும் இன்னொரு அறை நண்பியும் காதலர்கள் ஆன பின்னர் நாமெல்லாம் அங்கு இருக்கவே சங்கடப்படவேண்டி வந்துவிட்டது. அதை நான் சொன்னபோது அவன் ஆச்சரியப்பட்டான். ‘ஒரே வீட்டில் தெரியாத ஆண்களும் பெண்களும் வாடகைக்கு இருப்பார்களா?’ என்று கேட்டான். ‘அதில் என்ன தவறு’ என்று நான் கேட்க ‘அதுதானே’ என்றான் அவன். நானே அதிகமாகப் பேசினேன். அவன் கேட்பான். அவனிடமும் நிறையக் கதைகள் இருந்தன என்பது பழகிய பின்னர்தான் தெரிந்தது. நான் என்ன நினைப்பேனோ என்ற கூச்சத்தில் அமைதியாக இருந்தானாம். முட்டாள் முட்டை. அவன் முதன்முதலாக என்னை வெளியே செல்வதற்கு அழைத்த நாள் அப்படியே ஞாபகம் இருக்கிறது. That was cute.

நான் கரடியைத் தடவிக்கொடுத்தபடியே பழையதை யோசித்துக்கொண்டிருக்கையில் அம்மாவின் பேஃஸ் டைம் கோல் வந்தது. வேலை நேரத்தில் வேண்டாம் என்று நான் அதை எடுக்கவில்லை. அப்புறம் இரண்டாவது தடவையும் அலறியபோது செல்பேசியை மியூட் பண்ணினேன். ஆனால் அம்மாவின் முகம் தொடர்ந்து செல்பேசித்திரையில் மின்னிக்கொண்டே இருந்தது. ஏதோ அவசரமாக இருக்கும் என்று இம்முறை அழைப்பை எடுத்தேன்.

“மமா வேலையாக இருக்கிறேன். ஏதாவது அவசரமா?”

“என்னை மன்னித்துவிடு ஏப்ரில். இந்த மனிதனோடு இனிமேலும் நான் குடும்பம் நடத்த முடியாது.”

நான் அதிர்ந்துபோய் எழுந்தேன். அதை எதிர்பார்க்காத கரடியும் தடக்கி விழுந்து, ‘ஊ’ எனக்கத்திவிட்டு என்னையே கவலையாகப் பார்த்தாள். அம்மாவுடைய நாற்பத்தைந்து வருடத் திருமண வாழ்க்கையில் ஒருநாளேனும் இந்த வார்த்தைகளை அவர் உதிர்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அப்படி என்ன நிகழ்ந்தது?

“மமா… பொறுமையாக இருங்கள். அப்படி என்ன நடந்தது? முதலில் வீடியோவை ஓன் பண்ணுங்கள்.”

அம்மா வீடியோவைப் போடவில்லை. அந்தப்பக்கம் அவர் அழுதுகொண்டேயிருந்தார். நான் மீண்டும் ‘மமா தயவுசெய்து அழாதீர்கள்’ என்றேன்.

“நீ அப்போது கேட்டாயல்லவா? நான் உன்னிடமே வந்துவிடவா ஏப்ரில்?”

நான் தயங்கினேன். இந்த லொக்டவுன் காலத்தில் அவுஸ்திரேலியர்கள் மாத்திரமே நாட்டுக்குள் வரக்கூடிய சூழ்நிலையில் அம்மாவை எப்படிக் கூப்பிடுவது?

“நிச்சயம் நீங்கள் வரவேண்டும் அம்மா. இந்த கொரணாக் காலம் முடியட்டும். விமானங்கள் ஓட ஆரம்பித்துவிட்டதும் முதல் விமானத்திலேயே உங்களைக் கூப்பிட்டுக்கொண்டுவிடுகிறேன்”

அப்போது அறைக்கதவைத் திறந்துகொண்டு மகிழ் வெளியே வந்தான்.

“மகிழ் கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்கிறாயா? நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய பிரசெண்டேசன்தான் அடுத்தது”

நான் அவனிடம் உள்ளே போகுமாறு சைகை செய்துவிட்டு பல்கனிக் கதவுகளைப் பூட்டினேன்.
 
“மமா சொல்லுங்கள். என்ன நிகழ்ந்தது. அப்பா ஏதாவது சொன்னாரா? துடைப்பங் கட்டையால் அடித்துவிடு அவரை.”

“அவர் இந்த வீட்டை வங்கியில் அடகு வைத்து அத்தனை பணத்தையும் பந்தயத்தில் இழந்துவிட்டார் ஏப்ரில். எப்போதோ நிகழ்ந்தது. இன்றுதான் எனக்குத் தெரியவந்தது. என் நகைகளையும் திருடி விற்றுவிட்டார். உனக்கு சின்ன வயதில் ஆசையாக நான் வாங்கிப்போட்ட நெக்லசைக்கூட விடவில்லை இந்த மனுசன். தம்பியும் ஒரு பாடசாலை மாணவியுடன் தப்பாக நடந்து சிறைக்குப் போய்விட்டான். திரும்பவும் கசையடியாம். இது மூன்றாவது தடவை என்கிறார்கள். என்னால் முடியவில்லை ஏப்ரில். ஒரு பெண் எவ்வளத்தைத்தான் தாங்கமுடியும் சொல்லு? நான் அப்படி என்ன தவறு செய்தேன்? யாருடனாவது வம்பு தும்புக்குப் போயிருப்பேனா? யார் குடியையும் கெடுக்க முயன்றிருப்பேனா? உன்னை வளர்த்ததுபோலத்தானே தம்பியையும் வளர்த்தேன்? இந்தக் குடிகாரச் சூதாட்டப் பிசாசையும் வைத்துக்கொண்டு உங்கள் இருவரையும் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பேன்? எனக்கேன் இந்த வயதில் இப்படி ஒரு தண்டனை?”

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா இந்தளவுக்கு உடைந்து நான் பார்த்ததில்லை. ஒரு மனிசியின் தலையில் எவ்வளவு பாரத்தைதான் வைக்கமுடியும்? எவ்வளவுதான் துன்பத்தை ஒருவர் தாங்கமுடியும். முன்னராவது பரவாயில்லை. அப்பா குடித்துவிட்டு எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவதுண்டு. கொராணா வந்து அந்த மனிதனை நாள் முழுக்க வீட்டுக்குள் வைத்துச் சமாளிப்பதென்றால் எவரால் முடியக்கூடிய காரியம் அது?
 
மகிழ் வந்து கண்ணாடிக் கதவைத் தட்டி ஏதோ கத்தினான். நான் போய்த் திறந்தேன்.

“Will you fucking stop talking for a while please? The whole world can hear your Chinese shit”

என்னிடமிருந்த எரிச்சல் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனிடம் பாய்ந்தது.

“Fuck off arsehole, you don’t tell me what to do. You stupid Sri Lankan moron”

அவன் மீண்டும் தன் அறைக்கதவை அடித்துச் சாத்திவிட்டு உள்ளே போனான். நான் அம்மாவிடம் வந்தேன்.

“ஏப்ரில் எனக்காக நீங்கள் இருவரும் சண்டைபோட வேண்டாம். என் விதியை நான் பார்த்துக்கொள்கிறேன்”

“அவன் கிடந்தான் மமா. நான் இப்போதே செரிலிடம் பேசுகிறேன். அவளும் கணவனும் உங்களை வந்து அழைத்துப்போவார்கள். நீங்கள் அந்தாளிடம் எதுவும் சொல்லவேண்டாம். கொஞ்ச நாள் செரிலோடு இருங்கள். அதற்குள் நான் இரகசியமாக ஒரு அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துவிடுகிறேன். எதற்கும் கவலைப்படவேண்டாம். நான் செரிலுக்குப் பணம் அனுப்புகிறேன். உங்களை இங்கே வரவழைப்பதற்கான வேலைகளையும் உடனே தொடங்கலாம். நீங்கள் தைரியமாக இருங்கள். அந்தக் கூழ் முட்டையின் செயலுக்காக நாங்கள் ஏன் வருந்தவேண்டும்? மமா, நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா. வாழ்க்கையில் எந்தக் கடினமாக முடிவுகளும் இலகுவில் எடுக்கப்படக்கூடியவைதான். நாம்தான் தேவையேயில்லாமல் அவற்றைத் தள்ளிப்போட்டுவிடுகிறோம். நீங்கள் நாற்பத்தைந்து வருடங்கள் தாமதித்தாவது இந்த முடிவை எடுக்கிறீர்களே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். எங்கே என் மமாவின் முகத்தைப் பார்ப்போம்?”

அம்மா விசும்பியபடியே வீடியோவைப் போட்டார். அம்மாவைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அவரின் கண்ணோரங்கள் அடிவாங்கிச் சிவந்திருந்தன. இடது காது வீங்கியிருந்தது. அழுது அழுது கண்ணீர் வற்றி … எனக்குத் தாங்கமுடியாமற்போனது.

“மமா, இதனை விடமுடியாது. இப்போதே நான் சிங்கப்பூர் பொலீசுக்குத் தகவல் கொடுக்கிறேன். அந்தாளை உள்ளே தள்ளவேண்டும். உங்கள் அருகிலேயே வரக்கூடாது என்று தடையுத்தரவு எடுக்கவேண்டும். அப்பனா அவன். சூதாடி பியான்”

“வேண்டாம் ஏப்ரில். இதற்குமேல் அந்தாளை உரு ஏற்றவேண்டாம். நீ செரிலிடம் சொல்லிவை. நான் முடிவெடுத்துவிட்டேன். இந்த மனிதன் என் வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம். நாற்பத்தைந்து வருடங்கள் ஒரு கோவேறுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எந்த சுகத்தையும் அனுபவித்ததில்லை. இனி எனக்காகவே நான் வாழ்வதாக முடிவெடுத்துவிட்டேன்”

“இதுதான் என் மமா. நீங்கள் இங்கே அவுஸ்திரேலியாவுக்கே வந்துவிடுங்கள் மமா. பொக்ஸ் ஹில்லிலே நாங்கள் ஒரு அப்பார்ட்மெண்ட் எடுப்போம். அங்கே மாண்டரின் பேசத்தெரிந்தாலே போதும். ஆங்கிலம் தேவையில்லை. சுற்றிவர சீனத்தவர்கள். நிறைய வயோதிபர்கள் பந்து விளையாடுவார்கள். கார்ட்ஸ் ஆடுவார்கள். நீங்கள் வந்து உங்கள் டம்பிளிங் ரெசிப்பியை இங்கே சொல்லிக்கொடுங்கள். வேண்டாம், நாங்கள் யூடியூபில் சிங்கப்பூரின் ஒரிஜினல் உணவுகளைப்பற்றி ஒரு சனல் தொடங்குவோம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சிங்கப்பூர் உணவுகள். ஒருநாள் டம்பிளிங். ஒருநாள் சிக்கின் ரைஸ். ஒரு நாள் கரட் கேக். ஒருநாள் குவே தியோ. இந்த ஊரின் உணவு ஏனைய ஆசிய உணவுகளைவிட எவ்வளவு வித்தியாசம் என்பதைக் காட்டுவோம். மமா நீங்கள் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்குக்கூடப் போகலாம். அங்கே உங்கள் கைங்கரியத்தைக் காட்டலாம். முதல் பத்துக்குள் வந்தால் நானும் மகிழும்கூட உங்களோடு கலந்துகொள்ளலாம். நான் ‘என் மமா' என்று செல்லமாக உங்களைக் கட்டிப்பிடித்துக் கண் கலங்குகிறேன். ரேட்டிங்குகள் எகிறும் மமா”

நான் சொல்லிக்கொண்டே போக அம்மா முகத்தில் சின்னதாகச் சிரிப்பு வந்தது.
 
“எனக்கு ஆங்கிலத்தில் ஹலோ சொல்லக்கூடத் தெரியாதே”

நானும் சேர்ந்து சிரித்தேன்.

“அதெல்லாம் நாங்கள் வகுப்புக்குப் போய்ப் படித்துக் கொள்ளலாம். இங்கே இருக்கும் ஒரு ஶ்ரீலங்கனுக்கு ஹலோ என்றால் என்ன பதில் சொல்வதென்றே தெரியாது. நீங்கள் வேறு.”

“எலியை விழுங்கவே திணறுகிற பாம்பு யானையைப் பார்த்து வாய் விரிக்கக்கூடாது ஏப்ரில்”

அம்மா உற்சாகமாகிவிட்டார் என்பது விளங்கியது. நானும் விடவில்லை.

“ஏன் மமா, அது அப்போ குட்டி அனகொண்டாவா இருந்து வளர்ந்தாப்பிறகு யானையை விழுங்கலாம்தானே?”

அம்மாவும் சிரிக்க நானும் சிரித்தேன். கரடியும் என்னோடு நெருக்கமாக உராய்ந்தபடி நின்று அம்மாவைப் பார்த்து வாலாட்டியது. அப்போது மீண்டும் கண்ணாடிக் கதவு திறந்தது.

“நான் திரும்பத் திரும்ப வந்து சொன்னாலும் கேட்கமாட்டாயல்லவா? என் ப்ரெசெண்டேசனே உன்னால் பாழாகிவிட்டது... you stupid dog”

மகிழ் ஓடிவந்து என் செல்பேசியைப் பிடுங்கி எறிந்தான். எனக்குக் கோபம் கொழுந்துவிட்டது. ‘How dare you’ என்றபடி அருகிலிருந்த ஓர்கிட் மரச்சாடியை எடுத்து அவன்மீது விட்டெறிந்தேன். அது பறந்து போய் அவன் காலடியில் விழுந்து சிதறியது. இந்தச் சச்சரவைக் கண்டு நடுங்கிய கரடி ஓடிப்போய் அவளுடைய படுக்கையில் போய்ச் சுருண்டுவிட்டாள்.

“இந்த வீட்டில் உன்னால் அமைதியாக இருக்கமுடியாவிட்டால் இப்போதே வெளியே போய்விடு.”

“நான் ஏன் போகவேண்டும்? நான் இங்குதான் இருப்பேன். நீ வேண்டுமானால் போ.”

“என் பெயரில்தான் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நீதான் போகவேண்டும்.”

இருவரும் கோபத்தில் மாறி மாறி கத்தினோம். இந்த நாயை ஏன் நான் காதலித்தேன் என்று நினைக்கையில் வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. இத்தோடு இதற்கு முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் இவன் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது. போன தடவை சண்டை நிகழ்ந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு சண்டை. இந்த ஆண்களே சுயநலவாதிகள். எல்லாமே நீதான் என்று சுற்றிச் சுற்றி வருவார்கள். ஆனால் அவர்களுடைய இருப்புக்குக் கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். அப்பாவைப்போல, பென்சனைப்போல, ஏசனைப்போல. மகிழை ஒரு புனிதன் என்று நம்பியது என் தவறு. அந்த நாய்களுக்கும் மகிழுக்கும் அத்தனை வேறுபாடுகள் இல்லை. இத்தனை நாளும் வேறுபாடு இருந்ததுபோல நடித்தானே ஒழிய எல்லாமே நாய்கள்தான். நாய். நாய். நாய்.

நான் புறுபுறுத்தபடி என் பொருட்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தேன். சற்று நேரம் கழித்து என் செல்பேசியையும் எடுத்துக்கொண்டு மகிழ் பின்னாலே வந்து நின்றான். அவனைப்பார்த்து ‘என்ன’ என்று கோபமாகக் கேட்டேன்.

“உன் செல்பேசி… ஏப்ரில் … அது வந்து, ஒரு முக்கியமான கிளையண்ட் பிரசெண்டேசன். நான் ஆறு மாதங்களாகச் செய்ததை டெமொ பண்ணும் வேலை. நிறுவனத்தின் அத்தனை இயக்குநர்களும் அங்கு இருந்தார்கள். உங்கள் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் எப்படிப் பேசுவது சொல்லு?”

“அதுவல்ல பிரச்சனை என்று உனக்கு நன்றாகவே தெரியும் மகிழ். நீ கொட்டிய வார்த்தைகள்தான் பிரச்சனை. அது உன் உள்மனதில் தூங்கிக்கிடந்தது, சமயம் பார்த்து வந்துவிட்டது. உனக்குத் தேவை ஒரு பெண் அருகாமை. நினைத்த நேரத்தில் பேசுவதற்கு, நினைத்த நேரத்தில் உறவு கொள்வதற்கு, வெளியில் நானும் ஒருத்தியோடு வாழ்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்கு. நீ நாயை வளர்ப்பதற்கும் என்னோடு குடும்பம் நடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை மகிழ். நான்கு நாள்கள் கரடி உன்னைத் தொடர்ச்சியாகக் கடுத்தால் என்றால் ஐந்தாவது நாள் மிருக வைத்தியரிடம் சொல்லி அவளைக் கொலை பண்ணக்கூடியவன் நீ, வேண்டாம். உன்னோடான இந்த வாழ்க்கை இன்றோடு முடிந்துவிட்டது”

“அப்படிச் சொல்லாதே சித்திரை. தவறுதான். ஏதோ கோபத்தில் தெரியாத்தனமாக உளறிவிட்டேன். நான் சொன்னது எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. பிளீஸ்.”

திரும்பப் பெற்றுக்கொள்கிறானா? சுனாமிக்குப் பின்னர் கடல் தன் அலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது போலவா? அத்தனை உயிரையும் அழிவையும் கடலால் திருப்பித்தர முடியுமா என்ன? என் தவறு. திரும்பத் திரும்பத் தவறு செய்துகொண்டேயிருக்கிறேன். என் அப்பாபோல. பந்தயத்தில் தோற்ற பணத்தைப் பந்தயத்திலேயே எடுக்க முயன்று ஈற்றில் வீட்டையும் நாற்பத்தைந்து வருடக் குடும்பத்தையும் நொடியில் அவர் சீரழித்ததுபோல. ஆண்களிடம் தொலைந்துபோன என் அன்பையும் காதலையும் அவர்களிடமே திரும்பவும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏப்ரில். இது போதும் உனக்கு. நாற்பத்திரண்டு வயதிலாவது திருந்திவிடு. அம்மாபோல அறுபத்தைந்து வயதில் அந்த முடிவை எடுக்காதே. நீதான் அடிக்கடி சொல்வாயே. வாழ்க்கையின் கடினமான முடிவுகளை இலகுவிலேயே எடுத்துவிடமுடியும். நாம்தான் தேவையேயில்லாமல் அவற்றைத் தள்ளிப்போட்டுவிடுகிறோம்.

‘ஏப்ரில் பிளீஸ்’ என்று மகிழ் கெஞ்ச அவன் கையிலிருந்த என் செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டேன். அறை வாசலில் நின்ற கரடியைத் தூக்கி அணைத்துக்கொண்டேன்.

“கரடி. இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளு. நான் வந்து உன்னைப் பாதகர்களிடமிருந்து மீட்டுக்கொள்கிறேன்.”

சொல்லி அவளுக்கு ஒரு முத்தமும் கொடுக்க அவள் ஒருவித பதட்டத்துடனேயே என் முகத்தை நக்கினாள். அவளை இறக்கிவிட்டு மகிழைத் திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு நான் லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

‘Fucking moron’ என்று புறுபுறுத்தபடி.

— தொடரும் —

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .