Skip to main content

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 5



“சமுத்திரத்தின் மிக மிக ஆழத்தில், சூரிய ஒளியின் பிரசன்னமே இல்லாத ஒரு குகையினுள் நீந்தித் திரிந்த மீனுக்கு கண்கள் இருந்தன”

ஏப்ரில் - மகிழ்

அம்மாவின் மரணம் நிகழ்ந்து அன்றோடு நான்காவது நாள் ஆகிவிட்டிருந்தது.

ஏப்ரில் அழக்கூடத் திராணியில்லாமல் அறைக்குள்ளேயே எந்நேரமும் ஒடுங்கிக் கிடந்தாள். எக்காரணம் கொண்டும் சிங்கப்பூர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி ஊரில் எவரோடும் பேசவே மறுத்தாள். அம்மாவை, இருபதாவது மாடியிலிருந்து விழுந்து சிதைந்த அவரின் உடலை அவளுக்குப் பார்க்கவே தைரியம் இருக்கவில்லை. அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய சூதாடி அப்பாவை, மோசமான தம்பியை, அந்த நாட்டின் வாழ்க்கையை நினைக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அந்தக் கொங்கிரீட் காட்டுக்குள் திக்குத்தெரியாமல் தவித்த இரண்டே சீவன்கள் தானும் அம்மாவும்தான் என்று சொல்லிப்புலம்பினாள். அவளாவது படித்து வெளியேறி இன்னொரு நாட்டில் புகலிடம் தேடிவிட்டாள். அம்மாதான் பாவம். ‘நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தீர்கள் மமா, இங்கு வந்து ஆங்கிலத்தையும் படிக்கப்போகிறேன் என்றீர்களே’ என்று அரற்றியபடியே இருந்தாள். அம்மா அவளுக்காகத்தான் எல்லாவற்றையும் இசைந்து சொன்னார் என்பது அப்புறம்தான் அவளுக்கு விளங்கியது. அவர் தன் முடிவை எடுத்த பின்னரே அவளுடன் பேசியிருக்கிறார். அம்மா ஒரு பறவை. சிறகுகள் நறுக்கப்பட்டு, கம்பிக்கூட்டுக்குள்ளேயே வளர்ந்த பறவை. ஒரு பறவைக்குப் பறத்தல் என்பதே கனவு என்ற நிலைமை எத்தனை மோசமானது? அதனாலேயே தான் பெற்று வளர்த்த குஞ்சுக்கு அம்மா பறக்கக் கற்றுக்கொடுக்க தன்னாலான எல்லா முயற்சியையும் எடுத்தார். ஒவ்வொரு தடவையும் அந்தக் குஞ்சு தடுமாறியபோதும் தடவிக்கொடுத்தார். அதன் சிறுகுகளை அது சேதப்படுத்திக்கொண்டு வந்தபோதெல்லாம் ஒத்தடம் கொடுத்துவிட்டார். அன்றைக்குக்கூட அம்மா ஏப்ரிலுக்காகத்தானே சிரித்தார்? அவளுக்கேன் அது புரியாமற்போனது? அம்மா என்றைக்காவது தனக்காகச் சிரித்து அவள் பார்த்திருக்கிறாளா? எத்தனை கொடுமைகளைத் தாங்கியிருப்பார் அவர். பறவைக்கூட்டில் தனித்துவிடப்பட்ட சிறகற்ற குஞ்சுபோல அம்மா எவ்வளவு தவித்திருப்பார். தன் சக குஞ்சுகள் எல்லாம் வானத்தில் வட்டமிட்டுப் பறக்கையில் தனிமையும் இயலாமையும் தாளாமல் இந்தக்குஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்? தனக்கு ஊண் கொடுத்த தாய்ப்பறவையைக் காணாமல், பாம்புகளும் வல்லூறுகளும் சூழந்த காட்டிலே அது எத்தனை வேதனையை அனுபவித்திருக்கும்? ஒரு நாள் அந்தக் குஞ்சு தன் இரண்டு கால்களாலும் தத்தித் தத்திக் கூட்டின் விளிம்பில் வந்து நின்று பார்த்து மொத்த வானத்தையும் தரிசித்திருக்குமா? அந்நேரம் அது என்ன நினைத்திருக்கும்? பறக்க முயன்றாலாவது தனக்கு இறக்கை முளைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் கணம் யோசிக்காமல் குதித்துத் தன் உயிரை மாய்த்திருக்குமா?

அம்மா அன்றிரவு அனுப்பிய மெசேஜை அவள் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தாள்.
 
“என்னை மன்னித்துவிடு ஏப்ரில். இந்த முடிவு எனக்கானது. ஒரு ஐந்து விநாடிகள் நீளும் பறப்பு எனக்குப் போதும். இத்தனை வலிகளைத் தாங்கியவளுக்கு உயிர்போகும் கணம் கொடுக்கும் வலி மோசமானதில்லை. நான் மகிழ்ச்சியாகவே விடை பெறுகிறேன். நினைக்கவே உடல் காற்றுபோல ஐதாகிவிட்டது தெரியுமா? நீதானே அடிக்கடி சொல்லிக்கொள்வாயே ஏப்ரில். உண்மைதான். வாழ்க்கையின் கடினமான முடிவுகள் எல்லாமே இலகுவில் எடுக்கப்படக்கூடியவைதான். நாம்தான் வீணாக அவற்றைத் தள்ளிப்போட்டுவிடுகிறோம். நான் நாற்பத்தைந்து வருடங்களாகத் தள்ளிப்போட்ட முடிவு இது. உன் மமாவுக்காக வருந்தாதே. அவர் ஈற்றில் சிறகுகள் விரித்து வானத்தின் எட்டாத உயரத்தை நோக்கிப் பறந்துபோனார் என்று நிம்மதியுறு. மகிழை நான் அன்போடு கேட்டதாகச் சொல்லு. அவனை வெறுக்காதே மகள். அவனுக்கு அன்பை ஆசை ஆசையாக மூட்டை கட்டி வைத்திருக்கத் தெரிகிறதே ஒழிய அனுபவிக்கத் தெரியவில்லை. எனக்குத் தெரியும். நீ அவனை வழிப்படுத்துவாய். அந்த வல்லமை உனக்கு உண்டு. என்னை நினைத்து உன் வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே. என்னைத் தேடி நீ சிங்கப்பூர் வராதே. உன் நினைவுகளில் பழைய மமாவின் முகமே எப்போதும் குடியிருக்கட்டும். நீ மகிழ்ச்சியோடு வாழ். எனக்கும் சேர்த்து வாழ். சொன்னாற்போல, சோற்றுக்கு சுட்டு விரலின் முதல் ரேகையளவுதான் தண்ணீர்விடவேண்டும். அதை மறந்துபோகாதே.”

“மமா"
 
ஏப்ரில் ‘ஓ’ என்று அலறினாள். பிரெண்டா மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.

“ஆர் யூ ஓகே? இப்படியே எவ்வளவு நாள்தான் கிடப்பாய்”

“என்னைக் கொஞ்சம் தனியே விடு பிரெண்டா”

“அதில்லை ஏப்ரில் ... மகிழ் திரும்பவும் வாசலில் வந்து நிற்கிறான். கரடியும்தான். என்ன செய்ய?”

“Tell them to fuck off”

பிரெண்டா எதுவுமே சொல்லாமல் அறைக்கதவைச் சாத்திவிட்டு கீழே இறங்கி மகிழிடம் வந்தாள்.

“மகிழ், அவள் இன்னமும் வலியில் துடித்துக்கொண்டிருக்கிறாள். அம்மாவின் மரணத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பேசாமல் அவளை அவள் போக்கிலேயே விட்டுவிடலாம். அவள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும் நானே பேசிப்பார்க்கிறேன்”

“எனக்குப் புரிகிறது பிரெண்டா. இது என் தவறுதான். அத்தனை அவசரமாக பேசிக்கொண்டிருந்தவர்களோடு தெரியாமல் கத்திவிட்டேன். நான் ஒரு அடி முட்டாள். ஏப்ரிலுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவன். அவளைப்பார்த்து ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்கத்தான் … அவள் தனியாக என்னெல்லாம் துன்பம் படுகிறாளோ … நான் இந்நேரம் அவளோடு கூட இருக்கவேண்டும் பிரெண்டா … அவள் கோபக்காரிதான். ஆனால் குழந்தையும்கூட”

“கவலை வேண்டாம் மகிழ். நான் பார்த்துக்கொள்கிறேன். ஏப்ரில் மற்றவர்களைப்போல அல்ல. அசாத்தியத் துணிச்சல் நிறைந்த பெண். நீ வீட்டுக்குப் போ. நான் அவளிடம் சொல்லிக்கொள்கிறேன்.”

000

ஏப்ரில் இல்லாமல் வீடே வெறிச்சோடிப்போய்க் கிடந்தது.

மகிழ் லைட்டுகளைப் போட மனமில்லாமல் பல்கனியில் வந்து உட்கார்ந்துகொண்டான். கரடியைத் தூக்கி மடியில் வைத்துத் தடவிக்கொடுத்தபடி ‘ஏப்ரில்’ என்று முணுமுணுத்தான். கரடி அவள் பெயரைக் கேட்டதும் ‘ஊ ஊ’ என்று அனுங்கினாள். அவளுக்கு எதுவுமே புரிந்திருக்கவில்லை. வழமையான சண்டை என்றால் மறுநாளே அவளும் மகிழுடன் சென்று ஏப்ரிலைக் கூட்டிவருவார்கள். இம்முறை ஏப்ரில் திரும்பாததால் கரடி இருப்புக்கொள்ளாமல் எப்போதும் பதட்டமாகவே இருந்தாள். சில சண்டைகளுக்கு மீள்தல் என்பதே இல்லை என்பது அவளுக்கு எப்படி விளங்கப்போகிறது? மகிழ் மெல்பேர்ன் நகர மையத்தின் இரவு வெளிச்சங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை பெரிய கட்டடங்கள். எத்தனை ஆயிரக்கணக்கான வீடுகள். அவற்றில் வெளிச்சம் இல்லாத பல வீடுகளைப் பார்க்கையில் அங்கும் குடும்பங்கள் இப்படித்தான் பிரிந்து கிடக்கின்றனவோ என்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஏன் மீண்டும் மீண்டும் ஏப்ரிலோடு மோதிக்கொள்கிறான் என்பதே அவனுக்கு விளங்குவதில்லை. தன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனிடம் ஏன் வசப்படுவதாகவே இல்லை. அவன் உயிருக்குயிராக நேசிக்கும் ஒருத்தி. அவளுக்கு நேர்ந்த இந்தக் கொடூரமான துன்பக் காலத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்து ஆதரவாகத் தலையைத் தடவிவிடக்கூட அவனால் முடியாமலிருக்கிறது. ஏப்ரிலின் தாயை நினைக்கவும் வேதனையாக இருந்தது. அவன் பல்கனியை அனிச்சையாக எட்டிப் பார்த்தான். அந்த உயரமே அவனை நடுங்கச் செய்தது. இந்த அச்சத்தில் தவறிப்போய் விழுந்துவிடுவோமோ என்று அவன் பயந்தான். எத்தனை துன்பத்தை அனுபவித்தால் வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல் என்று வயோதிபத்தின் எல்லையில் இருக்கக்கூடிய ஒருவர் முடிவெடுப்பார்? பாவம் ஏப்ரில். இதை எப்படித் தாங்கப்போகிறாள்? மகிழின் கண்கள் அவனையறியாமலேயே கலங்க ஆரம்பித்தன. அவன் செல்பேசியை எடுத்து அவனும் ஏப்ரிலும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான். அலுவலகத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து வேலை செய்தபோது எடுத்த படம் ஒன்று கண்ணில் மாட்டியது.
 
எத்தனை அழகான நாட்கள் அவை.

அவனில்லை. உண்மையில் ஏப்ரில்தான் ஒருநாள் ‘போரடிக்கிறது, பாட்டு கேட்கலாமா’ என்று ஆரம்பித்தவள். எந்த இசையைக் கேட்பது என்பதில் இருவருக்குமே குழப்பம் வந்தது. அவளுக்கு டெய்லர் சுவிஃப்ட்தான் அதிகம் பிடிக்கும் என்றாள். மகிழும் தனக்கு அடேலையும் எட் ஷெரீனையும் தெரியும் என்று அவளை இம்பிரஸ் பண்ணுவதற்காகச் சொன்னான். உண்மையில் அவன் இயர்போனில் கேட்பது என்னவோ இளையராஜாதான். ‘வாசலிலே பூசணிப்பூ’ பாடல் என்றால் அவனுக்கு உயிர். ஆனால் அவன் அதை அவளுக்குச் சொல்லவில்லை. எப்படிச்சொல்வதாம்? அர்த்தம் கேட்டால் என்னவென்பது? ‘She put a pumpkin flower at the entrance’ என்பதா? இப்படியெல்லாம் தமிழில் பாடல்கள் வருவது தெரிந்தால் அவள் அசிங்கமாக நினைக்கமாட்டாளா? ஆனாலும் முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தே கண்டுபிடிக்கும் வித்தை சிங்கப்பூர்க்காரிக்கும் தெரிந்தேயிருந்தது. அவளாகவே ‘ஏ ஆர் ரகுமான் கேட்பியா?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். தனக்கு ஜெயகோ பிடிக்கும், சிங்கப்பூரில் ரகுமானின் இசை நிகழ்ச்சியை அலுவலக நண்பர்களோடு போய்ப் பார்த்ததாகச் சொன்னாள். அவன் உடனே ‘சந்தாரே சந்தாரே’ என்று வெண்ணிலவே வெண்ணிலவேயை இந்தியிலேயே முணுமுணுத்தான். ஏன் ஒரு சிங்கப்பூர் சீனத்திக்கு தமிழ்ப் பாடல் ஒன்றை இந்தியில் பாடிக்காட்டினான் என்று அவனுக்கு இன்றுவரைக்கும் புரியவேயில்லை. அவள் பாடல் நன்றாக இருக்கிறது என்றதும் உடனே அந்தப் பாடலின் வீடியோவை அவளுக்கு அவன் போட்டுக்காட்டினான். கஜோலும் பிரபுதேவாவும் ‘கிளிக்' என்று காதல் கொள்ளும் தருணத்தைக் கவனிக்கச்சொன்னான். அப்போது ஏப்ரில் தலையை ஒருபுறம் சாய்த்து, தாளத்துடன் அந்தப் பாட்டை ரசிக்க ஆரம்பித்தது இன்னமும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. அலுவலகச் சுழல் நாற்காலியில் கால்மேல் கால் போட்டபடி, கைகளைக் குறுக்காக மடித்து தொடைகளில் ஊன்றி, குனிந்து உட்கார்ந்தபடி ஏப்ரில் அந்தப் பாடலைப்பார்த்தாள். தாளத்துக்கு ஏற்ப அந்தக் கதிரையும் அவள் கால்களும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தன. அன்று அவள் படு அலட்சியமாகத் தன் கொண்டையை முடிந்திருந்தாள். அதிகம் ஒப்பனைகள் இல்லாத முகம். பிளாஸ்டிக் முத்துகளால் செய்த காதுக்குத்திகள். பட்டர் நிறக் கழுத்து நீள ஸ்வெட்டருக்கு நீல டெனிம் அணிந்திருந்தாள். உயரம் என்பதால் அவள் ஹீல்ஸ் அணிவதில்லை. நகங்களின் அழகை கியூடெக்ஸ் கொண்டு மறைக்கவில்லை. கிளாஸி என்று மகிழ் மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டான். அப்போதுதான் அவனுக்குமே ‘கிளிக்’ சம்பவம் நிகழ்ந்தது. எப்படி இத்தனை நாட்கள் கூடவே இருந்த இப்பேரழகியைக் கவனிக்காமல் விட்டான்? அவளோடு பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது. அதே சமயம் தயக்கமாகவும் இருந்தது. அவளும் அவனைப்போலவே சிந்திக்கிறாளா? அவன் அவளுக்குச் சரிப்பட்டு வருவானா? நாற்பதை எட்டியிருந்தாலும் இப்போதுதான் இருபதுகளுக்குள் நுழைந்தவள்மாதிரி சிலிர்த்துக்கொண்டு ஏப்ரில் நின்றாள். சீன இனத்துப் பெண்களின் வயதை எவராலுமே எடை போடமுடிவதில்லை. பிறக்கும்போதே அவர்களுக்கு வயது இருபது என்று அத்தாட்சிப் படிவத்தில் குறித்துவிடுவார்களோ என்னவோ. பார்த்தால் பதினாறுபோல தெரிவார்கள். கேட்டால் முப்பத்தாறு என்பார்கள்.
 
ஏப்ரில் அந்தப் பாட்டையே உற்று ரசித்துக்கொண்டிருக்கிறாள். கஜோலும் பிரபுதேவாவும் கைவிரல்களைப் பின்னிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள். மகிழுக்குப் பொறுமையேயில்லை. ஒரு தைரியத்தில் கொட்டிவிட்டான்.

“ஏப்ரில், உனக்கு வேறு அலுவல்கள் இல்லை என்றால் இருவரும் ஒருநாள் இரவு உணவுக்குச் செல்லலாமா? ஹொட் பொட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்...ஒவ்வொரு கடலுணவாக உள்ளே போட்டு எடுத்து, பேசிக்கொண்டே சாப்பிடலாம். எனக்கு சிச்சுவான் பெப்பர் என்றால் பிடிக்கும்... எங்கள் ஊரிலும் உறைப்பு அதிகம்தான் ... ஆனால் சிச்சுவான் மிளகு வேற லெவல்…”

அவள் மறுத்துவிடுவாளோ எந்த பதைபதைப்பில் அவன் தொடர்ந்து உளறிக்கொண்டேயிருந்தான். பேச்சை நிறுத்தினால்தானே அவள் பதில் சொல்லவேண்டியிருக்கும்?
 
மகிழ் தன்னையறியாமலேயே புன்னகைக்க, ஏப்ரில் இல்லாத வீட்டில் இவன் மட்டும் எப்படிச் சிரித்து மகிழலாம்? என்ற கோபத்தில் கரடி அவன் மடியினின்று குடித்து உள்ளே ஓடிப்போய் ஒளிந்துகொண்டது.

000

பிரெண்டா ஆவி பறக்க லக்சாவைக் கொண்டுவந்து அறை மேசையில் வைத்துவிட்டு, குப்புறப் புரண்டு கிடந்த ஏப்ரிலின் முதுகை மொத்தினாள்.

“ஏப்ரில், எதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். இத்தோடு ஏழு நாட்கள் கடந்துவிட்டன. எழுந்து போய் முகத்தைக் கழுவிவிட்டு வா. நான் லக்சா செய்திருக்கிறேன். கொஞ்சமாவது சாப்பிடு.”

“நான் அப்புறம் சாப்பிடுகிறேன். நீ போ பிரெண்டா”

“ம்ஹூம்… இது வேலைக்காகப்போவதில்லை. நீயாகப் போய் முகத்தை அலம்பாவிட்டால் நானே ஈரத்துணியைக் கொண்டு வந்து துடைப்பேன். எது வசதி?”

“Why can’t you guys leave me alone?”

ஏப்ரில் அலுத்துக்கொண்டே எழுந்து மெதுவாக பாத்ரூமுக்குள் போனாள். அங்கே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கே அச்சமாக இருந்தது. முகமெல்லாம் வீங்கி, கண்கள் இரண்டும் எங்கோ ஆழத்தில் போய்ப் புதைந்து கிடந்தன. தலை முழுதும் பொடுகு பூத்துப்போய் உச்சியில் பட்டை பட்டையாக வெளித்தெரிந்தது. முகமெங்கும் பருக்கள். பார்க்கப் பார்க்க எரிச்சலே வந்தது. ஆவேசத்துடன் அவள் குளிர் தண்ணீரைப் பிடித்துத் தன் முகத்தில் வீசி அடித்தாள். தன் கன்னங்களைப் படபடவெனக் கைகளால் அறைந்துபார்த்தாள். பின்னர் ஏதோ நினைத்தவளாய், அங்கேயே உடைகளைக் கழட்டி எறிந்துவிட்டு ஷவருக்குள் நுழைந்து தலையில் குளிர் நீரை முழு வேகத்தில் திறந்துவிட்டாள். அப்படியே டைல்சுகளில் சளிந்தபடியே சாய்ந்து உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தன் நெற்றிக்கு முன்னே வழிந்து கொட்டும் நீரையே பார்த்துக்கொண்டிருந்தாள். குளிர் நீர் பட்டுக் கண்கள் எரிய ஆரம்பித்தன. உடல் நடுக்கத்தில் உதறியது. வெற்று வயிற்றில் குமட்டுவதுபோல அழுகை பொத்து பொத்தென வந்து மறைந்துகொண்டிருந்தது. ‘மமா மமா’ என்று அரற்றியபடியே கிடந்தாள். நேரம் போவதையே அவள் உணரவில்லை. திவலைகள் அவள் உடலில் ஊசிகள்போல குத்தித் தெறித்துக்கொண்டிருந்தன. ‘மமா மமா மமா’, அவள் முணுமுணுத்தபடியே கிடக்க, அம்மா அவளது உடலைக் கழுவித் துடைத்தபடி, குளியலறை வடிகால் துளையூடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வழிந்து ஓடிக்கொண்டிருந்தார்.
 
சாங்கி விமான நிலையத்தில் வைத்து அம்மா சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
“இனி சிங்கப்பூருக்குத் திரும்பி வராதே ஏப்ரில். விடுமுறைக்குக்கூட வர வேண்டாம். மமாவைப் பார்க்க ஆசை என்றால் நான் அங்கு வருகிறேன். எல்லாவற்றையும் இங்கேயே கழட்டி எறிந்துவிட்டுப் போ. இளமை உனக்குச் செய்த துரோகங்களை இனியும் சுமந்து திரியாதே. உன் மமாபோல எல்லாவற்றையும் உள்ளேயே அடைத்துவைத்து, மூச்சைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று கனவு காணாதே. வாழ்க்கையை அதன் போக்கிலேயே விடு. நெடுஞ்சாலை வழி எங்கும் எக்ஸிட்டுகள் எப்போதுமே இருக்கும். ஒன்றை விட்டாலும் மற்றையதில் பார்த்துக்கொள்ளமுடியும். பயப்படாதே. தொடர்ந்து ஓடிக்கொண்டிரு.”

பாத்ரூம் கதவை பிரெண்டா ‘படார் படார்’ என்று தட்டும்போதே ஏப்ரில் சுய நினைவுக்கு வந்தாள். உடனே ஷவரை நிறுத்தி, ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, துவாயை எடுத்துத் துவட்டியபின்னர் அதனால் உடலைச் சுற்றிக்கொண்டே வெளியே வந்தாள். பிரெண்டா ஒன்றுமே சொல்லாமல் தன்னிடமிருந்த பிஜாமாக்களை அவளிடம் கொடுத்துவிட்டு, லக்சாவை சூடாக்கிக் கொண்டுவருகிறேன் என்று சொல்லியபடி சமையலறைக்குப் போனாள். ஏப்ரில் உடையை மாற்றி, சற்றுநேரம் தலைக்கு ஹெயார் டிரையர் பிடித்தாள். சூடான காற்று முகத்தில் அடிக்கக் கொஞ்சம் இதமாக இருந்தது. பின்னர் ஹோலுக்கு வந்து டிவியைப் பார்க்கலாம் என்று ஓன் பண்ணினாள். இந்தியாவில் கோவிட் மரணங்கள் லட்சங்களைத் தாண்டும் செய்தியைப் பார்த்ததும் அதை அணைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

“சூடு போதுமா என்று பார் … இந்தா”

பிரெண்டா லக்சா கிண்ணியை அவளிடம் நீட்ட, புன்னகைத்தபடியே அதை வாங்கிக்கொண்டுபோய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடத்தொடங்கினாள். முதல் வாயிலேயே புரிந்துவிட்டது. ‘பிரெண்டா….’ என்று கத்தினாள். அப்போதுதான் உள்ளே போயிருந்த பிரெண்டா திரும்பி ஓடிவந்தாள்.

“என்ன ஏப்ரில்?”

“சாகப்போகிறாய் நீ. இதை யார் செய்தது சொல்லு?”

“ஏன்? நான்தான் செய்தேன். நன்றாக இல்லையா?”

“பொய் சொல்லாதே. லக்சாவில் மல்லித்தூளும் ஏலக்காயும் மணக்கிறது. இது மகிழ்தானே? அந்த ஶ்ரீலங்கன்தான் கொதிநீருக்குள்கூட ஏலக்காயும் மல்லித்தூளும் போடுகின்ற முட்டாள்”

பிரெண்டா அவளருகில் வந்து தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவளை முறைத்துப்பார்த்தாள்.

“சரி… அவனேதான். என்ன இப்போ? இந்த ஏழு நாட்களும் உனக்கு டம்பிளிங்கும் நூடில்சும் சிக்கின் ரைசும் என்று நாளைக்கு மூன்று வேளையும் எதையாவது சமைத்துக்கொண்டுவந்து கொடுத்தது யார் என்று நினைக்கிறாய்?”

“என்ன சொல்கிறாய்?”

“உனக்கெங்கே தெரியப்போகிறது? சுய நினைவில் இருந்தால்தானே. வாய்க்குள்ளே போவதே என்னென்று விளங்குவதில்லை. பாவம் மகிழ். எந்நேரமும் உன் நினைப்பாகவே கிடக்கிறான். வேலைக்கும் போவதில்லைபோல. காலை வேளையே வந்துவிடுவான். அவனோடு கூட ஒருத்தியும் வருவாள். ஏதோ தான்தான் ஐக்கிய நாடுகளின் சமாதானத் தூதுவர்போல வாலையும் குண்டியையும் ஆட்டிக்கொண்டு. எங்கேயிருந்து அந்த நாயைப் பிடித்தீர்கள்?”
 
ஏப்ரிலுக்கு சிரிப்பில் புரைக்கேறியது. இந்த ஏழு நாளில் அவள் சிரிப்பது இதுதான் முதற்தடவை. அவள் எதுவுமே சொல்லாது தொடர்ந்து லக்சாவை சாப்பிட்டாள். நிஜமான லக்சாவைக் கண்டுபிடித்தவர் இதனை வாய் வைத்தால் தன் நாக்கைக் கிழித்துவிட்டுச் செத்துப்போவார் என்று தோன்றியது. மகிழ் லக்சாவை குழம்புபோல வைத்திருந்தான். தன்னுடைய ஶ்ரீலங்கன் தேங்காய்ப்பால் கறியில் இரண்டு இறாலும் ஒரு மீனும் போட்டால் அது லக்சா ஆகிவிடும் என்று அந்த முட்டாள் முட்டை நினைத்திருக்கிறது. ஏப்ரில் லக்சாவை சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தாள். பிரெண்டா கொஞ்சநேரம் அவளோடு உட்கார்ந்து பேசிவிட்டு அறைக்குள் சென்று வேலையை ஆரம்பித்துவிட்டாள். ஏப்ரிலுக்குப் பொழுது போகவில்லை. மீண்டும் டிவி ரிமோட்டை எடுத்து ஐந்தாறு சனல்களை மாற்றிப்பார்த்து வெறுத்துப்போய் அதை அணைத்தாள். பின்னர் தன் செல்பேசியை எடுத்து அம்மாவின் படங்களைக் கொஞ்ச நேரம் பார்த்தாள். அப்புறம் அது வேண்டாம் என்று நினைத்தவள் அவளும் மகிழும் கூட எடுத்த செல்பிகளை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். எல்லாப் படங்களிலும் மகிழின் வாய் கோணலாகவே தெரிந்தது. வாய் மட்டுமா கோணல்? அவன் அவளை வெளியே போக அழைத்த கணம் ஞாபகத்துக்கு வந்தது. சிறு பையன், ஒரு பெண்ணை டேட்டிங் அழைப்பதற்குள் எத்தனை நடுக்கம் அவனுக்கு? ஒன்று சம்மதிக்கப்போகிறாள். அல்லது மறுக்கப்போகிறாள். இவைதானே சாத்தியங்கள்? இதற்கு அவன் பட்ட பாடு இருக்கிறதே. கால்கள் தாளம்போட, கைகள் டைப்படிக்க, கணினித்திரையைப் பார்த்து அவன் கேட்டதுகூட கொஞ்சம் கியூட்டாகத்தான் இருந்தது. இப்படி ஒருத்தன் தயக்கத்துடனும் ஆர்வத்துடனும் அவளிடம் என்றைக்குமே வெளியே போகலாமா என்று அழைத்ததில்லை. அந்த ஆண்கள் எல்லோரிடமும் சிறு அதிகாரம் குடிகொண்டிருந்தது. தான் அழைத்தும் மறுப்பாளா அவள் என்கின்ற அதிகாரம். மகிழிடம் அது இருக்கவில்லை. அவள் மறுத்துவிடுவாளோ என்ற அச்சமே அவனிடம் இருந்தது. அவள் சொன்ன பதிலும் ஞாபகத்தில் இருந்தது.
 
ஏப்ரில் அவன் பக்கம் திரும்பி நிதானமாகவே சொன்னாள்.

“இப்படி நீ முற்றுப்புள்ளியே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பாய் என்றால் நான் வரமாட்டேன் போ.”

பேசிக்கொண்டிருந்த மகிழ் போட்ட பிரேக்கில் அந்தக் கட்டடமே கொஞ்சம் ஆடிவிட்டது. அவள் பதில் சரியாகப் புரியாமல் அவன் தடுமாறினான். வெறுமனே உணவகத்துக்குச் சாப்பிடப்போவது என்று ஏப்ரில் நினைத்துவிட்டாளோ என்னவோ என்ற சந்தேகம் அவனுக்கு. மிருகக்காட்சிச் சாலையில் பிறந்து வளர்ந்த விலங்கு ஒன்றைக் காட்டில் விட்டதுபோல அவன் விழித்தான். பாத்ரூம் போய் வந்தான். ஆண்களின் வெட்கமும் காதலும்தான் எத்தனை அழகானது? அவன் அடுத்து அந்த அலுவலகத்தில் அவளோடு என்ன பேசுவது என்று குழம்பியதும் ஞாபகத்துக்கு வந்தது. அவள் குடித்து முடித்திருந்த கப்பைக் காட்டி, தான் போய் கிரீன் டீக்கு வெந்நீர் நிரப்பி வரவா? என்று கேட்டான். அது ‘கிரீன் டீ இல்லை, ஏர்ல் கிரே’ என்று அவள் சொன்னபோது, அப்படி ஒரு தேயிலை வகை இருப்பதே தெரியாமல் வழிந்தான் பாவி. விட்டால் ஶ்ரீலங்கன்களின் ஒவ்வொரு வீட்டிலும் தேயிலைச்செடி நிற்கும் என்று கதை விடுவான்.

“The great Sri Lankan fucker”
 
நேரம் போவதே தெரியாமல் செல்பேசியிலிருந்த இரண்டாயிரம் புகைப்படங்களையும் அவள் சிரித்தபடியே தட்டிக்கொண்டிருந்தாள்.
 
000

“சிங்கப்பூர் கரட் கேக் என்றால் எப்படிச் செய்வது என்று தெரியுமா?”

மகிழ் கேட்க கரடி தெரியாமல் முழித்தாள். அவள் கவனம் முழுதும் சமையலறைத் தட்டிலிருந்த கோழி முட்டைகளிலேயே பொதிந்திருந்தது.
 
“நாங்கள் இப்போது கரட் கேக் செய்து இன்று மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏப்ரிலுக்குக் கொண்டுபோய்க் கொடுக்கப்போகிறோம். சரியா?”

கரடி குண்டியை ஆட்டி ஆமோதித்தாள்.

“ஒன்றரைக் கப் அரிசி மா, கால் கப் மரவள்ளிக்கிழங்கு மா, இரண்டையும் போட்டு முதலில நல்லா பிசையோணும்”

மகிழ் மாவைப் பிசையத் தொடங்கியபோது வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான். அடுத்த கணமே கரடி கரடி பறந்துவிட்டது. இவனுக்குக் கணத்தில் பல்வேறு சிந்தனைகள். யாரிடம் திறப்பு இருக்கிறது? ஏப்ரிலா? அல்லது பிரெண்டாவா? ஏப்ரில்தான் மீதமிருக்கும் சாமான்களை எடுக்க ஆளை அனுப்பியிருக்கிறாளா? அவன் பதட்டத்தில் அப்படியே கிண்ணத்தை வைத்துவிட்டு வாசலை நோக்கி ஓடினான்.

ஏப்ரில்தான்.

அதே டெனிம் ஜீன்ஸ், பட்டர் கலர் சுவெட்டர் டொப். ஈரத்தலையை விரித்துவிட்டிருந்தாள் அந்த மஞ்சளழகி. மகிழ் அவளைப் பார்த்த கணத்தில் சந்தோசத்தில் ‘பஃக்கிங் ஹெல்’ என்றான். அவளோ அவனைக் கவனிக்காதவளாய்க் கரடியை அலேக்காகத் தூக்கிக் கொஞ்சியபடியே பல்கனியை நோக்கி நடந்தாள். மகிழ் அவள் பின்னாலேயே போனான்.

“ஏப்ரில் என்னை மன்னித்துவிடு… பிளீஸ்… என்னால்தான் எல்லாமே… மமா இப்படி ஒரு முடிவைத் தேடுவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை… என் தவறு. அன்று நானும் அவரோடு பேசியிருக்கலாம். என்ன மனுசன் நான்… என் தவற்றுக்கு மன்னிப்பே கிடையாது” என்று ஏதோ ஆரம்பித்தான். வழமைபோல பதட்டத்தில் வார்த்தைகளை நிறுத்தத்தோன்றாமல்.
 
அவள் நகர மையத்தையே பார்த்தபடியே நின்றாள்.

“மகிழ்… இட்ஸ் ஓகே”

“இல்லை… மமாவை நாங்கள் இங்கே அழைத்து வந்திருக்கவேண்டும். நான் உன்னை அப்படிப் பேசியிருக்கக்கூடாது… எனக்கு உன்னைப் பயங்கரமாகப் பிடிக்கும் ஏப்ரில். நீ என்றால் எனக்கு உயிர். ஆனாலும் ஏன் நான் அப்படி வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறேனோ தெரியவில்லை”

அவள் கரடியை இறக்கிவிட்டு அவனிடம் திரும்பினாள்.

“கொஞ்சம் நேரம் அமைதியாக இரு மகிழ்”

“இல்லை… நான் நன்றாக யோசித்துப்பார்த்துவிட்டேன் ஏப்ரில். என்னை நீ விட்டுவிடுவதுதான் நல்லது. நான் ஒரு கொடூரக்காரன். எப்போது என்ன பேசுவது என்று தெரியாதவன். நானில்லாவிட்டால்தான் நீ நிம்மதியாக இருப்பாய்”

“பஃக்கர் வில் யூ ஷட் அப்? நான் உன்னைவிட்டு ஓடிப்போனால் உன் பிள்ளையை யார் வளர்ப்பதாம்?”

மகிழுக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை.

“வட் த பஃக்? என்ன சொல்கிறாய்? மெய்யாலுமா?”

ஏப்ரில் அவனிடம் நெருங்கி வந்தாள்.

“முதலே சந்தேகமாகத்தான் இருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர்தான் டெஸ்ட் பண்ணினேன். இரண்டு கோடுகளும் சிவந்து. டிங். டிங். டிங்.”

ஏப்ரில் புன்னகைத்தபடியே அவனது மார்பில் வந்து விழுந்தாள். கிழவி கொஞ்சம் வெட்கமும் பட்டாற்போல. அவன் அவளை இறுக்கி அணைத்தபடியே வயிற்றைக் கொஞ்சம் தடவிப்பார்த்து சந்தேகமாகக் கேட்டான்.

“மனம் மாறிவிட மாட்டாய்தானே?”

ஏப்ரில் அவன் முகத்தை இழுத்து உதடுகளில் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.

“என் அன்புக்குரிய ஶ்ரீலங்கன் பஃக்கர், உந்தன் கழுதை மூளைக்கு எதுவுமே புரியாதா? எனக்கு இந்தக் குழந்தை வேண்டும் மகிழ். நாம்தான் இதை வளர்க்கப்போகிறோம். பிறக்கும்போதே அதற்குப் பறக்கச்சொல்லிக்கொடுத்து, அது விரும்பிப்போகுமிடமெல்லாம் அதற்குத் தெரியாமலேயே பின்னாலே பறந்து சென்று, எங்கள் எதிர்பார்ப்புகள் எவற்றையும் அதனிடத்தில் திணிக்காது, அது அதன் வழியில் அதுவாகவே வளர்வதைப் பார்த்து ரசிக்கப்போகிறோம். ஓகேயா?”

மகிழ் சந்தோசம் தாங்காமல் அவளை அணைத்து அப்படியே தூக்கினான்.

“பார்த்து… இடுப்பு ஒடியப்போகிறது”

அதைக்கேட்ட மகிழ் ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க அவள் ‘என்னடா சிரிப்பு’ என்றாள்.

“எனக்கு ஓகே. நான் யூத்து. பிள்ளைக்குப் பதினேழு வயசாகையில் நான் ஐம்பதில்தான் இருப்பேன். நீ இப்பவே கிழவி. அறுபது வயதில் பொல்லு பிடித்தபடிதான் நீ பள்ளி இறுதி நாளுக்கு வரவேண்டியிருக்கும். பாவம்.”

“என்னைக் கிழவி என்கிறாயா யூ ஶ்ரீலங்கன் ஆர்சோல்” என்று ஏப்ரில் அவன் நெஞ்சில் பலமாகக் குத்துவிட, அவன் விலகி ஓடினான். இவள் பல்கனிக் கதிரையைத் தள்ளிவிழுத்தியபடியே அவனைத் துரத்தினாள்.

இவர்கள் சண்டையைப் பார்த்த கரடி ‘மறுபடியுமா’ என்ற அயர்ச்சியில், தன் படுக்கைக்குள் ஓடிப்போய்ச் சுருண்டுகொண்டாள்.

—- முற்றும் —-


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...