Skip to main content

எஸ். பி. பி


பாட்டு வழமைபோல சரணத்தில்தான் பிக்கப் ஆகும்.
மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
அந்த இரண்டு வரிகளையும் திரும்பவும் பாடுமாறு ராஜா சொல்லியிருக்கக்கூடும்.
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே.
இம்முறை அந்தப் பொய்யிலே சின்னதாகச் சிரிப்பும் சேர்த்து.
ஓ வசந்த ராஜா.
***

முதல் சரணம் முழுதும் ஆண் குரல். இரண்டாம் சரணம் முழுதும் பெண் குரல். அத்தோடு பாடலை முடித்துவிடுவதாகத்தான் திட்டமிட்டிருக்கவேண்டும். ஆனால் பாடல் ஒலிப்பதிவின்போது ஜி. கே. வெங்கடேஷ் மனம் கேட்கவில்லை போலும். மூன்றாவதாகவும் ஒரு சரணம் உருவாகிறது. இம்முறை ஆணும் பெண்ணும்.
ஆண்தான் ஆரம்பிப்பார்.
“கண்ணோடு கண்கள்
கவிபாட வேண்டும்”
பெண் குரல் தொடரும்.
“கையோடு கைகள்
உறவாட வேண்டும்”
இந்தப்பாட்டு இதற்குமேலும் நீளமுடியாது என்பதை மனுசன் உணர்ந்தோ என்னவோ, கடைசி இரண்டு வரிகளுக்கும் கொடுக்குமே ஒரு உன்மத்தம். எத்தனைமுறை கேட்டாலும் தீராது அது.
“கன்னங்களின் இதம் பதம்
காலங்கள் வாழ்க”
ஈற்றில் இருவருமே சேர்ந்து பாடுவார்கள்.
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க. ***

இதுவும் சரணம்தான்.
ஆண் குரல் ஆரம்பிக்கும்.
“காதலெனும் போதை, காட்டிவிட்ட ராதை,
கல்யாண நாளை தேடி ஏங்குகிற பாவை”
பதிலுக்கு சித்ரா. மனுசி காதல் பாட்டில், அதுவும் வெட்கத்தோடு பாடுவதென்றால் சும்மா விடுமா.
“வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும்
வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்”
ஆண்குரல் தொடரும்.
“அந்த அந்தரத்துச் சந்திரனைப் பிடிப்போமா?”
சித்ரா,
“நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா”
மனுசன் சரணத்தை முடித்துவைக்கும் அழகு இருக்கிறதே.
“ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா?”
சித்ரா செய்வதறியாமல் மிக மெதுவாகப் ‘ப்ரியா ப்ரியா இந்த ப்ரியா’ என்று பல்லவியைத்தோடங்க,
மனுசன் அங்கேயும் விட்டுவைக்காமல் ஒரு ‘ம்’ போடும்.
ப்ச்ச்.

***

முதலில் ராஜா ஆரம்பிக்கிறார்.
“ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு
ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
அட தென் பாண்டி குயிலினம் நான்... தான்”
இவர் அங்கிருந்து தொடருவார்.
“நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..”
இளையராஜா ஓகோ என்பார். நக்கல். இவர் விடமாட்டார்.
“ஊர்கோடியே மாலை அணிந்திட தான் தாவிடும் ஆடிடும்”
இளையராஜா. Again.
“ஓ.ஓ”
இந்தாள் விடாது. அடுத்த வரியில் குரலில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்.
“என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா?”
இளையராஜா அதற்கு ‘அடடாடா...’ என்பார். இது தனக்குத் தானே சொல்லுவது. மெட்டு அவரோடது அல்லவா. இப்படி இருவரும் மாறி மாறி நக்கல் அடித்து பாடும் பாடல் இது. இந்தப் பாடலில்தான் எத்தனை நயம், இசை, நேசம்.
இராட்சசர்கள். அதே சமயம் இரட்சகர்கள்.

***

ஜேசுதாசின் காந்தக்குரலில் ஆலாபனை ஆரம்பிக்கும். தொடர்ந்து புல்லாங்குழல் இசை. நதியின் சலசல ஓசை.
இவர் ஆரம்பிப்பார்.
“அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா?”
பாடி முடிக்க ஜேசுதாசின் சுரவரிசை ஆரம்பிக்கும்.
“ப... ம ப நி…..”
அதுமுடியவும் இவர் தொடருவார்.
“உயிர் பிறந்திடும் முன்னே ஒலியும் பிறந்தது.
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது.
சத்தங்கள் யாவும் இசை தானே துணிந்து பாடு மனிதா.”
அந்தக்கலவரத்திலும் ஒரு சிரிப்பு. கிட்டத்தட்ட பாடறியேன் படிப்பறியேனின் இன்னொருவடிவம் இது.
இப்போது இருவரும் போட்டிபோட ஆரம்பிப்பார்கள்.
“நி ச க ச நி நி ச ச ச
நி ச க ச நி நி ச ச ச
நி ச நி ச க க
ச க ச க ம ம
க ம க ம ப நி
ப ப ப”
"மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது"
தொடர்ந்து இருவரும் மாறி மாறி சுரமும் வரியுமாய்ப் பாடிக் கடைசியில் இவர் உச்சம் தொடுவார்.
"ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை"
"கீதம் இன்றி நானும் இல்லை"
அதுவரை ஆலாப்பும் சுரமும் மட்டுமே பாடிக்கொண்டிருந்த ஜேசுதாஸ் இறுதிப் பல்லவியில் மொழிக்கு மாறுவார்.
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது.

***

திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்.
தூத்துக்குடி வானொலி நிலையம்.
இரவு மணி 8.45.
புட்டும் கோப்பையுமாய் நாங்கள் எல்லாம் ஹோலில் கூடியிருப்போம். அடுத்த பதினைந்து நிமிடங்களும் பாட்டுக் கேட்டுக்கொண்டே சாப்பிடலாம். சாப்பிட்டபடியே ரேடியோவின் டைனமோவைச் சுற்றுவது யார் என்பது எவருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒலிபரப்பாகிறது என்பதில் தங்கியிருக்கும்.
அறிவிப்பாளர் படம் மதுமதி என்று சொன்னவுடன் போதும், ஓட்டமெட்டிக்காக சைக்கிள் மிதிக்கும் பொறுப்பு என்னிடம் வந்துவிடும்.
சின்னதான ஆலாப்புத்தான். உடனேயே பாட்டு தொடங்கிவிடும். “யார் வீட்டு ரோஜா” ஸ்டைலில் இண்டர்லூட் இசை. கிளைமக்ஸ் பாடலாக இருக்கவேண்டும். படமெல்லாம் எவர் பார்த்தது? ஆனால் சரணத்தில் மெலடி மீண்டுவிடும்.
“ஸ்ரீராமனின் சீதை வரம் பூபூக்கும் நேரம்.
ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்.
திசைகள் எல்லமே தடுமாறும்,
இந்தத் திருமகள் பாதம் பட்டால்.
உதயம் சொல்லாமல் இடம் மாறும்
உந்தன் விழிமலர் ஜாடைக்கண்டால்.
இப்படி அவளை வர்ணித்துக்கொண்டே பாடியவர் ஒரு கட்டத்தில் இயலாமல்,
"மதுபாலா என் மதுபாலா - உன்னை
மனதுக்குள் வரைந்தேன் வெகுநாளா”
என்பார். மீண்டும் பல்லவி. பாடலின் இறுதி வரிகள் இப்படி முடியும்.
“தாயாக மாறவா? தாலாட்டுப் பாடவா?” ***

சிவன் ஸ்டோர்ஸ் கடைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் ஒரு வீடியோக்கடை இருக்கிறது. அதில் வழமையாக “ஒரு மந்தாரப்பூ”, “நிலாக்காயும் நேரம்” டைப் பாடல்கள்தான் ஒலிக்கும். அன்றைக்குப் பார்த்து கடையைத் தாண்டும்போது “ம் ..ம்…” என்று ஒரு பெண் ஹம்மிங். தொடர்ந்து மிருதங்கம் தடங்தக்ததாங் என்று ஆரம்பிக்க ஒருவித கந்தசஷ்டி கவச டியூனில் காதல் பாட்டு.
சைக்கிளை அப்படியே மதிலோடு சாய்த்துக்கொண்டு கேட்க ஆரம்பிக்கிறேன். முதல் இன்டர்லூர் வீணை. இரண்டாவது இன்டர்லூட் ஜலதரங்கம். கூடவே மிருதங்கம், புல்லாங்குழல், இத்யாதி இத்யாதி. இது எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும் பாட்டின் ஆதார ஜீவன், அந்தச் சனியன் பிடித்த மெட்டு. பேய் பிடித்தவன் போல வீட்டுக்கு வந்தேன். அன்றைக்கு பிடித்த பைத்தியம். மொனோ ரேடியோ. ஸ்டீரியோ. டைனமோவில். சார்ஜ் குறைந்த பற்றரியில். சிடி பிளேயர். வோல்க்மன், எம்பி3. ஐபொட். சப் வூபர். பொஸ் என எல்லாவகை கேள்கருவிகளிலும் கேட்டாலும் தீராத இசை இந்தப்பாடல்.
பாடலின் இரண்டாவது சரணத்தில் ஒரு இரகசியம் இருக்கிறது.
சுஜாதாதான் தொடங்குவார்.
“சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம்போல சொல்லாமல் நின்றேனே”
இவர் தொடருவார்.
“சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது”
பெண்குரல் இப்போது கொஞ்சம் சீண்டிப்பார்க்கும்.
“எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது”
இவர் விடுவாரா? கொஞ்சம் சிரிப்போடு பாடுவார்.
“எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது”
இந்தப்பதிலைப் பெண் எதிர்பார்த்திருக்கவில்லை. கூடவே உனக்கெப்படித்தெரியும் என்கின்ற சந்தேகம். ஊடலில் முதற்புள்ளி. இம்முறை சுஜாதாவையும் செல்லமாகச் சிரித்துக்கொண்டே பாடச்சொல்லி ரகுமான் கேட்டிருக்கலாம். அவர் குரலும் கொஞ்சுமல்லவா.
“ம்ம்ம்... அனுபவமோ”
கொஞ்சம் நக்கலும் சேர்த்து. பெண் இப்படிச்சொல்லும்போது அந்த இடத்தில் ஆண் அசடு வழியவேண்டும். அதுதான் அழகு. ஆனால் அவருக்குச் சந்தர்ப்பம் இல்லை. சரணம் முடிந்து மிருதங்கம் பல்லவிக்குப் பாதை போடுகிறது. இதில் வரிகளுக்கு இடமேயில்லை. ஆனால் தலைவர் விடுவாரா?
இயலுமானால் இயர்போனைப் போட்டுக் கேளுங்கள். சுஜாதா முடித்து அந்த மிருதங்க இசைக்கு மத்தியிலும் ஒரு காதல் சிரிப்பு ஒன்றை வாய்க்குள் சிரிப்பாரே. அம்மாடி. அந்தச் சிரிப்பின் மூச்சு வெளிவரும் இடத்தில் பல்லவி தொடங்க,
"என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே"
டிவைன்.

***

வித்தியாசாகர் இசை.
“Walking in the moon light, I am thinking of you” என்ற பாடல் மலையாளத்தில் மாத்திரமின்றி தமிழிலும் பரவலாகக் கேட்கப்பட்ட ஒன்று. கொழும்பிலிருந்த எங்களுக்கும் வந்து சேர்ந்த புகழ்பெற்ற பாடல். ஹரிஹரன் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். இன்றுவரைக்கும் மலையாளத்தின் கிளாசிக்குகளில் ஒன்று அது.
அதனைத் தமிழில் ‘மொழி’க்காகக் கொண்டுவருகிறார் வித்தியாசாகர். எவ்வளவு பெரிய ரிஸ்க். ஆனால் பாடியது யாரு?
ஊடல் பாட்டுத்தான். காதலியிடம் ஒரு வார்த்தை தவறிப் பிழையாகச் சொல்லிவிட்டான். அதனால் அவள் கோபமாகி முகத்தைத் தூக்கிவைத்தபடி திரிகிறாள். இப்போது அவள் பின்னாலேயே திரிந்து ஆடிப் பாடி மன்னிப்புக் கேட்கவேண்டும். இந்தச் சிட்டுவேசனுக்குப் பாட்டுப்பாட இவரை விட்டால் உலகில் வேறு யார் உண்டு?
“எங்கே?

குறுநகை எங்கே?

குறும்புகள் எங்கே?
கூறடி.
கண்ணில்
கடல் கொண்ட கண்ணில் 

புயல் சின்னம் ஏதோ தெரியுதடி.
செல்லக் கொஞ்சல் வேண்டாம்,
சின்னச் சிணுங்கல் போதும்.
பார்த்துப் பழக வேண்டாம்,
பாதிச் சிரிப்பு போதும்.

காரப்பார்வை வேண்டாம்
ஓரப்பார்வை போதும்.
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்.
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை
நீ தீரம் செய்யடி”
கொஞ்சி, குழைந்து, சிரித்து, சிணுங்கி, கெஞ்சி, கூத்தாடி, ஏங்கி, தவித்து, எல்லாவற்றுக்குமிடையில் சங்கதி போடவேண்டிய இடத்தில் சங்கதியும் போட்டு,
“கண்ணால் பேசும் பெண்ணே
எனை மன்னிப்பாயா?” ***

பாட்டுக்கேட்டுக்கொண்டு படிச்சா படிக்கிறது மண்டைக்குள்ள ஏறாது என்று அம்மா ஏசுவதுண்டு. இந்த ரேடியோவால்தான் அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வருவதுண்டு. ரேடியோவைத் தந்தால்தான் நான் படிப்பேன் என்று தர்ணா போராட்டம் எல்லாம் நிகழ்த்தியிருக்கிறேன்.
ஆனால் அம்மா சொல்லுவது என்னவோ ஒருவகையில் உண்மைதான். சில பாடல்களைக் கேட்கும்போது எதுவுமே செய்யத்தோன்றாது. பேசாமல் கேட்டுக்கொண்டேயிருப்பேன். பாட்டு முடிந்தபின்னர் கொப்பியைத் திறக்கலாம் என்று யோசனை இருக்கும். பின்னர் பாட்டு முடிந்ததும் ரிவைண்ட் பண்ணித் திரும்பவும் அதே பாட்டைக் கேட்பேன். இப்படி நான்கைந்து ரிவைண்டுகள் போகும். அப்போது ரிவைண்டாக இருந்தது இப்போது ரிப்பீட்டாகப் போய்விட்டது. ஆனாலும் பாடல்கள் மாறவில்லை.
அப்படியான பாடல் ஒன்றுதான் இது. எம்.எஸ்.வி மெட்டு. அதற்காகவே ஆயிரம் முறை இதைக்கேட்கலாம். இளையராஜா இசைக்கோர்ப்பு. இண்டர்லூடிலும் பாடலின் தாளக்கட்டிலும் அவர் செய்த அற்புதங்களுக்கு இன்னொரு ஆயிரம் தடவை. பெண் குரல் சுசீலா. கணீர் என்ற அந்தக்குரலுக்காக ஒரு ஆயிரம் தடவை.
அப்புறம் நம்மாளு குரல்.
Just think.
“மழைக்கு ஏங்கிய மாந்தளிரே“
உந்த மாந்தளிரில் மாத்திரம் எத்தனை சாகசங்கள் என்று கவனியுங்கள். எம்.எஸ்.வி ஐநூறு விதமான சங்கதிகளைச் சொல்லியிருக்கக்கூடும். அதற்குள்ளிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து பாடலின் காதலுக்குத் தகுந்ததாய்ப் பாடவேண்டும். முழுப்பாடலுக்குமே அந்த ஒரு ‘’மாந்தளிரே” மாத்திரமே போதும். ஆனால் அப்படி விட்டுவிடமுடியாது. ஏனெனில் அந்தப்பக்கம் சுசீலா. எம்.எஸ்.வி பாசறையில் பழம் தின்று கொட்டை போட்ட மனுசி. அவர் ‘வியர்த்து வாடி மெய் சிலிர்க்க’வில் ‘கொஞ்சம் மேலே பாரு கண்ணா’ என்று பதில் சங்கதிகள் போடுவார்.
உந்தச்சங்கதிகளைத் தள்ளிவை, எங்கள் விசயத்துக்கு வா என்று சொல்லியபடி இவர் பாடுவார் இப்போது.
“அடுத்த கட்டம் நடப்பதெப்போ?
உனக்கு என்னைக் கொடுப்பதெப்போ?”
பாடலின் பல்லவி சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
தில் தில் தில் மனதில்.
ஒரு தல் தல் தல் காதல். ***
1994ம் ஆண்டு.
“பவர் தரும் ஒளிச்சுடர்” என்று இலங்கை வானொலி வர்த்தசேவையில் ஒரு நிகழ்ச்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. ஞாயிறு காலை பதினொரு மணிக்கு என்று நினைக்கிறேன். சண்முகநாதன் மிஸ்ஸின் வகுப்பு பத்து தொடக்கம் பதினொரு மணிவரைக்கும். மிஸ் கிளாஸ் முடித்ததும் சைக்கிளில் வீட்டுக்கு பறப்பேன். போயிறங்கிய கையோடு செருப்பை அப்படி எத்தி எறிந்துவிட்டு, ஓடிப்போய் டைனமோ சைக்கிளில் அமர்ந்து ரேடியோவைப்போட்டால் நடராஜசிவமும் இராஜேஸ்வரி சண்முகமும் நிகழ்ச்சியை ஆரம்பித்து ஒரு பாடலையும் ஒலிபரப்பியிருப்பார்கள்.
மொத்தமாக ஐந்து பாடல்கள் ஒவ்வொரு வாரமும் போட்டியிலிருக்கும். வாரவாரம் புதிதாக ஒரு பாடல் உள்ளேவர, வாக்குகளில் குறைந்த பாடல் வெளியே போகும். யார் வாக்களித்தார்கள், எப்படி வாக்களித்தார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் எங்களுக்கு போட்டி முக்கியம்.
“அக்கறையில்லா இந்த வாழ்க்கையிலே”, ”பாட்டு எசப்பாட்டு”, “தென்மேற்குப்பருவக்காற்று” போன்ற பாடல்கள் பொதுவாக மூன்று, நான்கு, ஐந்து இடங்களில் இருக்கும். ஆனால் பல வாரங்கள் தொடர்ச்சியாக முதலிரு இடங்களைப்பிடித்த பாடல் “கொஞ்சிக் கொஞ்சியும்”, “அஞ்சலி அஞ்சலியும்”. அஞ்சலி அஞ்சலிகூட சில வாரங்களில் பின்வாங்கிவிட்டது. ஆனால் கொஞ்சிக் கொஞ்சி நின்று பிடித்தது. எனினும் அதே வருடம் “ஊர்வசி ஊர்வசி” வெளிவந்து, நிகழ்ச்சியில் அறிமுகமாகிய அடுத்தவாரமே முதலிடத்தைக் கைப்பற்றிவிட எனக்கென்றால் கோபமோ கோபம். கொஞ்சிக் கொஞ்சியை ஓரம் கட்டிய ஒரே காரணத்தால் கொஞ்சநாள் ரகுமானுடனும் ஊர்வசி பாட்டோடும் சின்னப்பிள்ளைத்தனமாகக் கடுப்பாகவும் இருந்ததுண்டு.
வீராவை ராஜாவின் ரீஎன்ரி திரைப்படமாக அப்போது நாங்கள் நினைத்ததுண்டு. ரஜனி படம். எஸ்பிபி பாடல். கேட்கவும் வேண்டுமா? அநாயாசமாகப் பாடலைப் பாடுவது எப்படி என்று தெரியவேண்டுமென்றால் கொஞ்சிக் கொஞ்சியைக் கேட்டால் போதும். சும்மா இந்தாப்பிடி என்ற மாதிரிப் பாடுவார் தலைவர்.
“மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொற்கோள் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட”
என்று பாடிவிட்டு அடுத்ததாக “இயற்கையின் அதிசயம் என்று ஒரு சுர வரிசையைத் தூக்கிப்போடுவார் போடுவார். Just like that.
என்ன மனுசனப்பா. ***
அழகன் படம். 91ல் வெளியானது. பாலச்சந்தர் திரைப்படம். ஆனால் இசை மரகதமணி. இன்றைக்கு அந்தப் பாடல்கள் எல்லாம் ஹிட்டாகிய சூழ்நிலையில் கேட்பது என்பது வேறு. ஆனால் வெளியான சூழ்நிலையில், அதுவும் புதுப் புது அர்த்தங்கள் மாதிரியான அல்பத்துக்குப் பிறகு, பாலச்சந்தர் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்றே தெரியாமல் பாடல்களைக் கேட்டு வியப்பது என்பது பிறிதொரு அனுபவம் அது.
அப்போது திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் ஆறு போத்தல் மண்ணெண்ணெய். ஒரு வாடகை ஜெனரேட்டர் வேண்டும். அதற்கு எங்காவது கலியாணவீடு, சாமத்தியவீடு இடம்பெறவேண்டும். நிகழ்வின் வீடியோ கொப்பியைப் பார்க்கிற சாட்டில் ஜெனரேட்டரை வாடகைக்குப் பிடித்து படங்களைப் பார்க்கமுடியும். ஐந்து படங்கள்வரை ஒரே இரவில் பார்ப்பதுண்டு. முதலில் அந்தப் பாழாய்ப்போன சாமத்தியவீட்டுக் கொப்பி. பின்னர் காசு கொடுத்த பழசுகளுக்காக ஒரு சிவாஜி படம். பின்னர் ரஜனி கமல் படங்கள். அப்புறம்தான் பாலச்சந்தர் படங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படி அதிகாலை இரண்டு மணியளவில் பார்த்தபடம்தான் அழகன். அழகன் மாதிரி படத்தை முழுமையாகப் பார்த்து உள்வாங்கும் வயது அப்போது இல்லை. ஆக படத்தைப் நித்திரை முழித்துப் பார்த்தமைக்கு ஒரே காரணம் அதிலிருந்த இரண்டு பாடல்கள்.
இரண்டும் தலைவர் பாடிய பாடல்கள். தொண்ணூறுகள் முழுதும் கேட்டுத் தேய்த்த பாடல்கள் அவை. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஒரு மொனோ ரேடியோ. மாக்ஸ்வெல் காசட். ரெக்கோர்டிங் குவாலிட்டி அப்படி இப்படி. பிளே பண்ணினால் பாடல் ஒரு ஆலாப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கிற்து.
“சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா இன்னும் இருக்கா”
உயர்தரம் படிக்கும்போது இரவு பதினொரு மணிக்கு இந்திய வானொலி ஒன்று இவ்வகை மெலடி பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பும். தூக்கம் வரட்டுமே என்று ஒலிபரப்புவார்களோ என்னவோ. ஆனால் இப்படியான பாடல்களைக் கேட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கிற தூக்கமும் பறந்துவிடும். இந்தப்பாடல் கொடுத்த பீலிங்குக்காகத் தேடிப்போய்க் காதலில் விழுந்த பலரை நான் அறிவேன். அப்படி ஒரு பாடல். அப்படி ஒரு சிட்டுவேசன். Of course, அப்படி ஒரு குரல்.
அதே படத்தில் அடுத்த பாடல் ‘’சாதி மல்லிப் பூச்சரமே”. அதில் அந்த “கேட்டுக்கோ ராசாத்தி, தமிழ் நாடாச்சு, இந்த நாட்டுக்கு நாமாச்சு” வரிகளைப் பாடும்போது குரல் மேல்ஸ்தாயிக்கு உயிரோட்டத்துடன் போய்த் திரும்பும். அப்படியே பல்லவிக்குத் தாவும்போது “ஆசையென்ன ஆசையடி”யில் எக்ஸ்றாவாக ஒரு சங்கதி.
தேன். ***
பிரியா என்பவன் ரகுமானின் வெறியன். சாதாரண ஸ்டீரியோ ரேடியோவில் ரகுமானைக் கேட்கக்கூடாது என்று அவன் இரண்டு பானைகளுக்குள் பொக்ஸைப் பொருத்தி துணியால் கட்டி, பாடல்களின் பேஸ் சவுண்டைக்கூட்டவென என்ன காரியமெல்லாமோ செய்வான். எங்கள் குரூப்பிலேயே அவன் ஒருவனிடம்தான் சி.டி பிளேயர் இருந்தது. அதனால் ரகுமான் பாடல் கேட்பதற்காகவே பிரியா வீட்டில் நாங்கள் கதியெனக்கிடந்த காலம் ஒன்றிருந்தது.
அவனுடைய கலக்சனில் எனக்கு இந்தப்பாடல் என்றால் உயிர். இதை அவனுடைய செற்றில் போட்டால் ஆரம்ப பேஸ் இசையிலேயே பானை அதிரத்தொடங்கிவிடும். தொடர்ந்துவரும் விசிலில் சுற்றிவைத்திருந்த துணி கிழியும். ஒரு மெலடிப்பாட்டுக்கு அப்படி ஒரு ஆரம்பம். பின்னர் சின்னதாக ஒரு புல்லாங்குழல் இசை. அது முடிய இவர் குரலில் பாடல் தொடங்கும்.
“தொட தொட மலர்ந்ததென்ன பூவே, தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா? பரிசங்கள் புதிதா?
மழைவர பூமி மறுப்பதென்ன?”
அந்த “பூமி” என்ற சொல்லைப்பாடும்போது அவர் குரலில் இயல்பாக ஒரு சுற்றல் இருக்கும். இப்போது கேட்டுப்பாருங்கள். நான் சொல்வது புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சுப்பர் சிங்கர் நிகழ்வில் ஒரு போட்டியாளர் இந்தப்பாட்டைப் பாடினார். நடுவராக இருந்த ஶ்ரீனிவாஸ் அந்தப் “பூமி”யைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அது ரவுண்டாக வரவேண்டும் என்று விடாப்பிடியாக போட்டியாளருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் பெடியன் பாவம். உந்த மனுசன் இவ்வளவு நுணுக்கமாகப் பாடித்தொலைத்தமைக்கு அவர் என்ன செய்வார்?
ரகுமானின் அற்புதமான முதல் இருபது பாடல்களுக்குள் இலகுவாக வந்துவிழக்கூடிய பாடல் இது. அதற்கு இவர் குரலும் ஒரு காரணம். இந்தப்பாடலை ஒருவித மிதப்புடனே இவரும் சித்ராவும் பாடியிருப்பார்கள். “காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை” எனும்போது என்னவோ எனக்கு மணிவாசகர் பாடல்கள்தான் ஞாபகம் வருவதுண்டு. தேனிலும் இனிய குரல். கடைசிப்பல்லவியில் “பூவே”யில் ஒரு பிர்கா சங்கதிபோட்டு அப்படியே அந்தப் பூமியை மீண்டும் புதிதாக ஒருமுறை சுற்றிச் சுழற்றியடித்துவிட்டு வந்து முடிப்பார்.
“தொட தொட மலர்ந்ததென்ன பூவே, தொட்டவனை மறந்ததென்ன?”
எங்கென மறந்தம்? ***
பார்த்தி கொஞ்சம் வித்தியாசம். இவனுக்கு தேவா என்றால் போதும். அதிலும் தேவாவும் இவரும் சேரும் கூட்டணி என்றால் அவனுக்கு அப்படி ஒரு பிடிப்பு. நான் நினைக்கிறேன் அதற்கு முக்கிய காரணம் “பாண்டு மாஸ்டர்” படம்தான். இந்த ஒரு பீரியட்டில் தேவா ரகுமான், ராஜாவையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்று சொன்னாலும் மிகையில்லை. தேவா என்றால் அண்ணாமலை, பாஷா, ஆசை என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரிந்த காலத்தில் நானும் பார்த்தியும் 'என் ஆசை மச்சான்', 'பாண்டு மாஸ்டர்', 'வான்மதி', 'கல்லூரி வாசல்', 'உன்னுடன்' என்று கூவிக்கொண்டிருந்தது வேறு விசயம்.
தமிழில் வந்த மிகச்சிறந்த இசைத்தொகுப்புகளில் ஒன்று பாண்டு மாஸ்டர். எல்லாப்பாடல்களுமே அற்புதம். இன்றும் என் தரவழி ரிப்பீட்டில் கேட்கும் பாடல்கள் இவை. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த பாட்டு “பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது”. வழமைபோல சரணத்தில் சித்ராவும் இவரும் பின்னியெடுத்திருப்பார்கள். கடைசியில் “கீதா சங்கீதா”வில் சீமான் ஒரு ஆலாப்பு போடும். எவனும் கைவைக்கமுடியாது.
பார்த்திக்கு இந்தப்படத்தில் பிடித்த பாடல் ‘புதிய நிலாவே’. எனக்கும் அந்தப்பாடல் பிடிக்கும்தான். ஆனால் அவனுக்குப் பயங்கரமாகப் பிடிக்கும். எந்நேரமும் அந்தப்பாட்டையே போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பான். அதைவிட அதைப்பற்றித்தான் எந்நேரமும் பேச்சு. டேய் வேற பாட்டுக்குப்போடா என்று நாங்கள் அழாக்குறையாகச் சொல்வதுண்டு.
இன்றைக்கு என்னைவிட பார்த்திதான் விசர் பிடித்துக் கிடப்பான் என்பதில் சந்தேகமில்லை.
அந்தச்சமயம் வந்த பல சரத்குமார் படங்களில் இவர் பாடியிருப்பார். அத்தனையும் மரண ஹிட்டுகள். அத்திப்பழம் சிகப்பா, மைனா மைனா மஞ்சள் மைனா, காற்றுப்பூவைப் பார்த்துக் கூறாதோ, பிரியா பிரியா, இப்படிப் பல பாடல்கள். இப்போது புதிய நிலாவைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது பார்த்தி ஞாபகம் வருகிறது. அவனோடு சேர்ந்து கேட்ட பாடல்களும் எங்கள் கதைகளும் ஞாபகம் வருகிறது. நினைவு தெரிந்த காலம் முதல் இந்த மனுசன் எங்களோடு இசையினூடு எப்போதுமே கூட இருந்திருக்கு.
இனியும் இருக்கும். ***
சம்பவங்களுக்கு சாட்சி பப்பா.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை.
ஐந்தாம் ஆண்டு கடைசி நாள் வகுப்பு.
குழந்தைவேல் மாஸ்டர் கிளாஸ் டீச்சர்.
பத்துவயசுதான். ஒரு பாட்டுக்கு என்ன அர்த்தம் என்று விளங்காது. வரிகள் தெரியாது. ஏன் ஒரு பாட்டு பிடிக்குது என்று தெரியாது. இசையில் ச.ப.ச விளங்காது. ஆனாப் பிடிக்கும். அப்பிடிப் பிடிக்கும்.
அது புதுப் புது அர்த்தங்கள் வெளிவந்து யாழ் நகரம் முழுதும் அதன் பாடல்கள் ஒரு சுற்று வந்துகொண்டிருந்தது. படத்தின் அத்தனை பாடல்களிலும் இவர் இருந்தார். எங்கள் வீட்டில் அக்காமார் அந்தக் கஸட்டையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்ததில் எனக்கும் எல்லாப் பாடல்களும் மண்டைக்குள் ஏறிவிட்டிருந்தது.
அன்றைக்கு குழந்தைவேல் சேர் ஒவ்வொருத்தரா ஏதாவது நிகழ்ச்சி செய்யச்சொன்னார். சிலர் பேசினார்கள். சிலர் கவிதை சொன்னார்கள். சிலர் மை செல்ஃப் ஒப்புவித்தார்கள். என் முறை வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. வேண்டாதவன் ஒருத்தன் இவர் பாடுவார் சேர் என்று உளறிவிட்டான். எனக்கு பாட்டு என்றால் உயிர். ஆனால் பாடு என்றால் கொல்லக்கொண்டுபோவதுபோல. சேர் முன்னுக்குக் கூப்பிட்டுப் பாடச்சொல்லிவிட்டார். நான் தயங்கிவிட்டு ஆரம்பித்தேன்.
“குருவாயுரப்பா குருவாயுரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி”
முளைச்சு மூணு விடேல்ல, அதுக்குள்ள காதலா என்று சேர் பாட்டை நிறுத்திவிட்டு வேறு பாட்டைப் பாடச்சொன்னார். இம்முறை நான் பாடியது ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’. இந்தத்தடவை ஏனோ சேர் என்னை நிறுத்தவில்லை. பாடித்தொலைக்கட்டும் என்று எண்ணியிருக்கவேண்டும். எனக்கும் ஒரு சுதி வந்துவிட்டது. சரணத்தில்,
“நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே.
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே”
‘சிரிக்காத நாளில்லையே’ பாடும்போது அவரைப்போலவே ஒரு சிரிப்பு வேறு. பாடி முடிய, எல்லாருக்கும் கைதட்டிக்கொண்டிருந்த ஒரு சீவன் மாத்திரம் எனக்கும் கை தட்டியது வேற விசயம்.
சொல்லவரும் புள்ளி இதுதான். இந்தச்சம்பவம் மிகச் சாதாரணமான சுவாரசியங்கள் ஏதுமற்ற ஒன்று. இதை என்னைத்தவிர வேறு எவரும் ஞாபகமும் வைத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் எனக்கு இது ஒரு ஞாபகப்புள்ளி. அந்த ஐந்தாம் ஆண்டு வகுப்பில் முந்நூறு நாள் கற்றிருப்பேன். இப்போது முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அந்த நாள் மட்டும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் அந்தப்பாட்டைக்கேட்கும்போது என் ஐந்தாம் ஆண்டு வகுப்பு கண்களின் நிழலாடித் திரும்புகிறது. அவரைப்போலவே சிரிக்க முயன்று மொக்கீனப்பட்டதை நினைத்து வெட்கம் வருகிறது. இந்த, இந்தத் தருணங்களக் கொடுப்பதுதான் இசை. அந்த இசையை எமக்குக் எடுத்துவரும் இறை தூதர்கள் இவர்கள்.
இறை தூதர்கள் மரிப்பதில்லை. ***
வயது பதினாறு.
வன்னி வாழ்க்கை. அந்த வயல் வெளி, டிரக்டர்கள், இரணைமடுக் குளக்கட்டு, மாடுகள், பட்டிகள், கிறவல் வீதிகள், அந்த ஊர்ப் பெண்கள், பின் தொடரும் என் சைக்கிள், கூடவே இசை.
அது சின்னக்கவுண்டர் படத்து ‘முத்து மணி மாலை’ பாடல் வெளியான டைம். வன்னியில் விதைப்பு நேரம். அந்தச் சமயத்தில் எங்கள் வயதினருக்கு ஒரு வேலை இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள். சுத்தமான பசுப்பாலில் டீ. குடித்தவுடன் பனிக்காக தலைக்கு துவாயை சுற்றிக்கட்டிக்கொண்டு கறுப்பிக்குளத்து வயல் காணிகளுக்குப் போகவேண்டும். ஐந்தரை மணியளவில் மெதுவாக சூரியன் உதிக்கும்போது ஆயிரக்கணக்கில் கிளிப்பிள்ளைமார் விதைப்பு நெல்லை பதம் பார்க்கவென வருவினம். சாரை சாரையாக திருவிழாவுக்கு சேலை கட்டிவரும் பெண்கள் கூட்டம்போல அள்ளு கொள்ளையாக வந்து வயலில் இறங்கி விதை நெல்லை பிடுங்கித் தின்னுவினம். நாங்கள் சாரத்தை விசுக்கிக்கொண்டு ‘கூ’ என்று கத்தியபடி ஓடுவோம். உடனே அதுகள் கூட்டமாக அப்படியே எம்பி இன்னொரு பாத்திக்குள் நுழையும், அங்கே இருந்து மேகலா கத்திக்கொண்டு ஓடிவருவாள். நான்காம் வாய்க்காலில் இன்னொருத்தன், ரமேஷ் என்று வையுங்களேன். ஓடி வருவான்.
ஒருநாள் வெறும் ‘கூ’ வுக்குப் பதிலாக ஏதாவது சினிமாப்பாட்டு பாடலாம் என்று ஐடியா கொடுக்கிறேன்.
அவள் ஆரம்பிக்கிறாள்.
“கொலுசுதான் மெளனமாகுமா
மனசுதான் பேசுமா?”
அவளால் ஓடிக்கொண்டே பாட முடியாது. மூச்சு இரைக்க இரைக்க விட்டு விட்டுப் பாடுவாள். அதுவே தனி அழகு.
“மேகந்தான் நெலவ மூடுமா
மவுசுதான் கொறயுமா?”
எனக்கும் மூச்சிரைக்கும். அந்த பாலாய்ப்போனவரின் குரல் சிரிப்பில் கொஞ்சம் நஞ்சம் இருந்த மவுசும் குறையும்.
“நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே”
அவள் பாடும்போது கிளிகள் ஏன் நாள் முழுக்க வயலுக்கு வந்து நெல்லு சாப்பிடக்கூடாது? என்று ஏங்குவேன். இது, இந்தக்கணம் ஏன் அப்படியே உறையக்கூடாது?
“வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே”
அவளின் தலையில் கட்டியிருந்த துவாய் நழுவி விழுந்தது. அந்தப் பனியிலும் முத்துமணி மாலையாய் முகத்தில் வியர்வைத் துளிகள். கிளிகள் விதை நெற்களை பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. இப்போது அவள் முறை. பாடவேண்டும். கொஞ்சம் தயங்கினாள். எங்கேயோ பார்த்தாள். வரிகளை மறந்து விட்டாளா? இல்லை இப்போது ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் அவள் பார்வையோ என்மேல் இல்லை. எங்கே?
“தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா...”
சின்னதாய் சிரித்துக்கொண்டே அவள் பார்வை பதிந்த திசை நோக்கி திரும்பினேன். அங்கே ‘கூ’ என்று கத்தியபடி கிளிகளை துரத்திக்கொண்டிருந்தான் ரமேஷ்…அவளின் மாமா.
வயலின் அழ ஆரம்பிக்கிறது. ***
தொண்ணூறுகளில் ஊருக்கு ஊர் இசை நிகழ்ச்சிகள் வைப்பது பிரபலமாக இருந்தது. ஒவ்வொரு கோவில் திருவிழாவின் பூங்காவனத்தின்போதும் ஒரு வில்லுப்பாட்டு, ஒரு பட்டிமன்றம், ஒரு இசை நிகழ்சி இருக்கும். சாந்தனோ, சிட்டோ, சுகுமாரோ யாரோ ஒரு கோஷ்டி வந்து பாடும். அந்தச்சமயம் எல்லாம் கச்சேரிகளிலும் பாடப்பட்ட பாடல்கள் சின்னத்தம்பி படத்துப்பாடல்கள்தான். அதிலும் அந்த ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டைப் பாடாத பாடகர் அப்போது கிடையாது. அதை மீட்டாத இசைக்கருவி கிடையாது. நாதசுரம் முதல் பூவரசம் இலை பீப்பி வரை போவோமா ஊர்கோலம்தான்.
இதற்குள் ஒரு தனித்துவமான இசைக்கோஷ்டிதான் தமிழீழ இசைக்கோஷ்டி. தமிழீழ வைப்பகம், தமிழீழ பொருண்மியம், தமிழீழ காவல்துறை, தமிழீழ அரசியற் துறை, நிதித்துறை என்ற பல தமிழீழ வரிசைகளில் இசைக்கோஷ்டியும் அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்தது.
அவர்கள் ஒருமுறை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மைதானத்தில் (இப்போது அது பூங்காவாக மாறிவிட்டது) ஒரு நிகழ்ச்சி வைத்தார்கள். எனக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம். பொதுவாக இயக்க நிகழ்ச்சிக்குப் போகப்போகிறேன் என்றால் அம்மா விறகுக்கட்டை எடுப்பார். ஆனால் ஏனோ இந்த நிகழ்ச்சிக்கு அனுமதித்தார்.
அன்றைக்கு நிகழ்ச்சி முழுதும் இயக்கப்பாடல்களையே பாடிக்கொண்டிருந்தார்கள். பரணி பாடுவோம், நம்புங்கள் தமிழீழம், செவ்வானம் சிவந்தது ஏன், அடைக்கலம் தந்த வீடுகளே போன்ற அந்தக்காலத்து ஹிட் பாடல்கள். ஈழத்து யேசுதாஸ் சிட்டுதான் குழுவின் ஆஸ்தான பாடகர். ஆனால் நேரம் போகப் போகக் கூட்டத்துக்குப் பொறுமை போய்விட்டது. சினிமாப்பாட்டு வேண்டும் என்று கூச்சல் எழுப்ப ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் அறிவிப்பாளர் ஒரு பிரபல சினிமாப்பாடல் பாடப்போகிறேன் என்று ஆரம்பித்தார். அது ‘நானாக நானில்லைத் தாயே’. அந்த ஒரு பாட்டுக்கு கூட்டம் போட்ட கைதட்டல் இருக்கிறதே. கந்தர்மடம்வரைக்கும் சத்தம் கேட்டிருக்கும்.
பரியோவானில் உயர்தரம் படிக்கும்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தோம். ஆனந்த் இசைக்குழு என்று ஒரு கோஷ்டி. அவர்களைக் கூப்பிட்டு, எங்களிலும் சிலர் பாடி, சில வாத்திமாரையும் இழுத்துவிட்டு ஒருமாதிரியாகச் செய்த இசை நிகழ்ச்சி அது. மாணவர் சார்பில் பாடவென கண்ணாவும், ரதீசும், நானும் தேர்வு செய்யப்பட்டிருந்தோம். காரணம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் நாங்கள் இருந்ததுதான். அகிலன் அப்போது பாடசாலையில் இல்லை.
நான் முடிவு செய்த பாடல் ‘சங்கீத மேகம்’. அப்போது மேடைக் கச்சேரிகளில் பிரபலமான பாட்டு அது. ஆனால் முதல் ரிகர்சலுக்கு என்னால் போகமுடியாமற் போய்விட்டது. அந்த டைமில் கண்ணா அந்தப்பாட்டை எடுத்துவிட்டான் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எனக்கு எந்தப்பாட்டும் மைண்டுக்குள் வரமாட்டேன் என்றுவிட்டது. சனியன், ஒரு நாளைக்கு ஆயிரம் பாட்டு முணுமுணுப்போம். ஆனால் பாடென்று கேட்டால் ஒண்டும் வராது. நான் பின்னர் குமுதம் போல் வந்த குமரியைத் தேர்ந்தெடுக்க அதைச் சிவத்திரன் சேர் பாடுவதாகச் சொன்னார்கள். அந்தாளுக்கும் பரியோவானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அத்தோடு போங்கடா நீங்களும் உங்கட நிகழ்ச்சியும் என்று நான் பாடாமல் உச்சிவிட்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கண்ணா அந்தப்பாட்டை அழகாகவே பாடியிருந்தான். நான் வயிறு எரிந்தாலும்கூட.
அந்தப் பாட்டின் வரிகளை இப்போது கேட்கும்போது உண்மையிலேயே கொஞ்சமே நிம்மதி வருகிறது.
“சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே”
அவ்வளவுதான் கதை. ***

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .