Skip to main content

பனங்கொட்டை பாத்தி


பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு. முதலாவதற்கு வைத்தியர் ஒருவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்க அழைக்கப்படுகிறார். இரண்டாவதற்கு ஒரு பொறியியலாளரைக் கூப்பிடுகிறார்கள். அந்த வைத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துப்பார்த்தேன். க.பொ.த சாதாரணத் தரத்தில் தமிழ்ப் பாடத்தில் அவர் சிறப்புத்தேர்ச்சி எடுத்திருக்கக்கூடும். சிலவேளைகளில் பாடசாலை நாட்களில் தமிழ்ப் பேச்சுப்போட்டிகளை அவர் மனனம் செய்து ஒப்புவித்திருக்கலாம். மற்றும்படி அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அவர் கடைசியாக வாசித்த தமிழ் நாவல் பொன்னியின் செல்வன் முதலாவது பாகமாக இருந்தாலே ஆச்சரியம். யார் கண்டார். இரண்டாவது பாகத்துக்கும் அவர் சென்றிருக்கலாம். சரி அத்தனை பாகங்களையும்தான் வாசித்தார் என்று வைப்போமே. ஏன் வெண்முரசின் இருபத்தாறாயிரம் பக்கங்களையும் வாசித்த உத்தமத் தமிழ் மகானாகவே அவர் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காகத்தான் அவரைப் பிரதம விருந்தினராக ஒருங்கமைப்பாளர்கள் அழைத்தார்களா? மயிர். ஒரே காரணம் அவர் வைத்தியர் என்பதால்தான். இதே நிலைதான் விளையாட்டுப்போட்டியிலும். அந்தப் பொறியியலாளருக்கு கிரிக்கட்டில் கவர் டிரைவ் எது என்று கேட்டால் கவட்டுக்குள்ளால் அடிப்பது என்றே விளக்கம் கொடுப்பார். உதைபந்தில் ஓப் சைட் இருக்கா என்று ஆச்சரியப்படுவார். டிவியில் ஒலிம்பிக்ஸ் போனால் மாற்றிவிட்டு நெட்பிளிக்சில் நவரசாவை நான்காம் தரம் பார்த்து மகிழும் பிரகிருதி. எப்படி விளையாட்டுப்போட்டி ஒன்றுக்கு அவர் பிரதம விருந்தினர் ஆகிறார்? பொறியியலாளர் என்பதால் மாத்திரமே.

அந்தக்காலத்தில் சிரித்திரனில் வெளியான நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது. மணமேடை ஒன்றில் மாப்பிள்ளையும் பொம்பிளையும் நிற்கிறார்கள். மணமகன் மணமகளிடம் இரகசியமாகக் கிசுகிசுக்கிறான்.
“அன்பே என்னைப் பார்த்ததும் காதல் வந்துவிட்டதா?”
அவள் தலை நிமிராமலேயே காதல் மேலிட முணுமுணுப்பாள்.
“இல்லை. கேட்டதும். என் நாதா ஒரு இஞ்சினியர் என்று கேட்டதும்”
அந்த மணமகளின் மூளைதான் நம் பாத்தியில் கிடக்கும் பனங்கொட்டைகள் அத்தனையினதும் கொட்டு மண்டைகளுக்குள்ளும் கிடக்கிறது. வைத்தியர், பொறியியலாளர், விஞ்ஞானி, பெரு நிறுவனத்தின் முகாமையாளர் என்றால் போதும். அவர்கள் எல்லோரும் சிட்டி ரோபோபோல ‘they can dance, they can sing, they can count, they can do anything’ என்றுதான் நம்மவருக்கு நினைப்பு. அவர்களிடம் எவ்வளவு முட்டாள்தனமான, பிற்போக்குத்தனமான எண்ணங்களும் சிந்தனைகளுக்கும் இருக்கலாம் என்ற எந்த யோசனையும் சக பனங்கொட்டைகளிடம் இருப்பதில்லை. ஒருவர் தமிழ் வைத்தியர் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழ்ப்போட்டி ஒன்றில் நடுவராக அவரை அழைத்திருந்தார்கள். அவருக்கும் தமிழ்ப்போட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று நான் கேட்டபோது ஒருங்கிணைப்பாளர்கள் சொன்ன பதில்
“படிச்சாள்தானே, பேசண்டுக்கு நாடியையும் கையையும் பிடித்தே வைத்தியம் சொல்லிடுவார். ஆள் வீரன். லொஜிக்கா ஜட்ஜ் பண்ணுவார்”
அந்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கையையும் காலையும் ஆட்டி வானுக்கும் மண்ணுக்கும் தாவிக்குதித்து 7.0 ரிச்டர் அதிரக் கத்திப் பேசிய ஒரு பேச்சுக்கு முழு மார்க்சையும் அள்ளிப்போட்டுவிட்டு, எனக்கு வேற சொல்லுது.
“அந்தப்பிள்ளை பிச்சுத் தள்ளிட்டுது என்ன? இப்பிடியான பிள்ளையள் வரேக்க ஜட்ஜிங்ல கஷ்டப்படத்தேவையில்லை”
அடுத்தது சூமில் நிகழும் கூத்துகள். ஒரு கவிதா நிகழ்வுக்கு வலிந்து அழைக்கப்பட்டேன். கவனிக்க. அதனைக் கவியரங்கு என்று குறிப்பிடமாட்டார்கள். தலைவருக்கு இன்னமும் அவரது பின் வீட்டுக் கவிதாவின் நினைப்பு மயிர் கொட்டிய பின்னரும் நரைக்காத காரணத்தால் அது கவிதா நிகழ்வு ஆனதென்க. அந்தக் கவிதா நிகழ்வில் நான்காவதாகத் தன் கவிதையை ‘அர்ப்பணம்’ செய்ய ஒரு கவிஞர் அன்மியூட் செய்யப்பட்டு அழைக்கப்பட்டார். நனோ விஞ்ஞானி, நவீன பாரதி, நல்லூர்க்கடியான் நவரத்தினம். சிங்கனைத் தனியே நவரத்தினம் என்று அழைக்கக்கூடாதாம். டேய், நானும் நல்லூரடிதான். நீ எனக்கு அடியானா?
அவரைப்பற்றிய அறிமுகத்தை தலைவர் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.
“நனோ தொழில்நுட்பத்தில் உலகப்பெரும்புகழ் பெற்று பெருமையுடன் வாழும் நம் நவீன பாரதிக்குக் கவிதை எழுதவும் படிக்கவும் நேரம் கிடைப்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.”
மூதேவி. உண்மையில் அந்த மூதேவி ஒரு கவிஞனாக இருக்கும் பட்சத்தில் ‘கவிதை எழுதிக் களித்துக்கிடக்கும் தருணங்களுக்கிடையே இவருக்கு எப்படி நனோ தொழில்நுட்பத்திலும் நாட்டம் ஏற்படுகிறது என்றே தெரியவில்லை, பாவம் பிழைப்புக்காகச் செய்யவேண்டியிருக்கிறது’ என்றுதான் விளித்திருக்கவேண்டும். அதுதான் ஒரு உண்மைக் கவிஞனின் விருப்பாகவும் இருக்கும். எனக்கு என் வேலை பிடித்தமானதுதான். ஆனால் நாளைக்கே ‘ராசா, நீ சீவியத்துக்கும் வேலை செய்யவேண்டாம், உனக்குக் கிடைக்கும் சம்பளத்தை நாங்கள் தருகிறோம், நீ தொடர்ந்து உலகமெங்கும் பயணம் செய்தபடியே எழுது’ என்று யாராவது உறுதிமொழி கொடுத்து சொத்தை எழுதித்தந்தால் who will give a fuck about job? ஆனால் வீடின்றி வேலையின்றி பட்டினியோடு கிடந்து எழுதுமளவுக்கு எனக்கு எழுத்து ஒன்றும் ஜென்ம சாபல்யம் கிடையாது. இது என் புள்ளி. ஆளாளுக்கு இந்தப்புள்ளி மாறுபடலாம். இதில் பெருமையோ சிறுமையோ கிடையாது. இதெல்லாம் அந்த ‘கவிதா நிகழ்வு’ தலைமைக் கவிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்ன ஒன்று அவர் அந்த நல்லூர்க்கடியானின் நல்ல பல கவிதைகளைக் குறிப்பிட்டு வெறுமனே அவரை அழைத்திருக்கலாம். அப்படி நல்ல பல கவிதைகள் எதுவும் கிடைக்காவிட்டால் வெறுமனே பின்வருமாறு அழைத்திருக்கலாம்.
“வாரும் நவரத்தினம்,
வந்து எமைப் பாடாய்ப் படுத்திவிட்டுப் போம்.
காரும் சூலும் கொண்டு பெய்யனப் பெய்யும் மழையாம் தமிழ்.
பாவம்.
பாலையும் முல்லையும் அறிந்து அது பால் சொரிவதில்லை.
ஏந்தினால் ஏந்தும். அல்லது சீக்கிரம் சிந்திவிட்டுச் சிட்டெனப் பறந்துபோம்.
வாரும் நவரத்தினம்,
நவரசத்தில் ‘பாயாசம்’போல நல்ல கவிதை
ஒன்றையேனும் பறைந்துவிட்டு
இச்சூமிலிருந்து மறைந்துபோம்”
மேற்சொன்ன வாந்தியைக் கவிதை என்று நினைத்து என்னை வேறு கவிதா நிகழ்வுகளுக்கு அழைத்துவிடாதீர்கள். அந்தக் கவிதா, ராதிகா பிரச்சனையையெல்லாம் நான் எப்போதோ மறந்துவிட்டேன் தோழர்ஸ்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருபத்துமூன்றாவதாகப் பேசிய கவிஞர் (அது ஏதோ, சனியன் தொடர் கவியரங்கோ என்னவோ, ஆருக்குத் தெரியும்) நிஜமாகவே அற்புதமான பல நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். நான் அவருடைய கவிதைகள் எவற்றையும் வாசிக்கவில்லை. எனக்கும் பிறர் சொல்லித்தான் தெரியும். இறந்துபோன பின்னர் ஒரு பீலிங்கில் வாசித்து அஞ்சலி செலுத்தலாம் என்று என் நூலகத்தில் அவர் தொகுப்பைக் கிடப்பில் போட்டிருக்கிறேன். அந்தக் கவிஞரை அழைக்கும்போது அவருடைய வருமானம் தரும் தொழிலைத் தலைவர் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவர் இந்த வைத்தியர், பொறியியலாளர், நனோ விஞ்ஞானி ரகத்துப் பணியாளர் இல்லை. அதனால் அவர் என்ன வேலை செய்தாலும் அது தலைவருக்கு முக்கியமில்லை. தவிர பணிச்சுமைக்கு நடுவே அவரால் கவிதை எழுத முடிவதும் தலைவருக்கு ஏனோ ஆச்சரியத்தைக் கொடுப்பதில்லை. உண்மையில் தொழிற்சாலைகளில், உணவகங்களில், மராமத்துப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத்தான் பணிச்சுமை அதிகம். ஆனால் அதை எல்லாம் யோசிக்கக்கூடிய ஒரு மூதேசி, தான் தலைமை வகிக்கும் கவிதா நிகழ்வின்போதே மியூட் பண்ணாமல் செல்பேசியில் கொத்துரொட்டி ஓர்டர் பண்ணிக்கொண்டிருக்குமா? புடுக்கருக்கு மைல்டு ஸ்பைசிவேற கேக்குது.
இந்த அதிமுக பனங்கொட்டைகளை எந்த அருவாள் கொண்டும் பிளக்க முடியாது. ஏன் இவற்றைப் பிளக்கவேண்டும் என்றும் நான் யோசிப்பதுண்டு. பிளந்தாலும் உள்ளே வெறுங் கோறைதான் இருக்கப்போகுது. பேசாமல் அப்படியே போட்டு எரித்துவிட்டு, அடுத்தநாள் கரியை எடுத்து பல்லுத் தீட்டவேண்டியதுதான்.

000

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...