விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்ற...