Skip to main content

காளான் பஜ்ஜி



ஆர்த்திகனின் ‘ARN’ காளான் கடை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மத்தியிலும் மிகவும் பிரபலம். என் அம்மாகூட பல தடவைகள் இந்தக்கடையைப்பற்றிய காணொலியை யூடியூபில் பார்த்துவிட்டுச் சிலாகித்ததுண்டு. இம்முறை ஊருக்குச் சென்றபோது ஆர்த்திகனோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. கூடவே அவர்களது காளான் உணவுடனும்.

பலாலி றோட்டில், பரமேஸ்வராச்சந்திக்கும் தபால்பெட்டிச்சந்திக்கும் இடையே வீதியோரமாக இவர்களின் பெட்டிக்கடை அமைந்துள்ளது. கடையில் நின்று வியாபாரம் செய்வது ஆர்த்திகனின் தம்பியான குமரன். ஆர்த்திகனும் அவ்வப்போது அதில் இணைந்துகொள்வதுண்டு. பின்னேரங்களில் காளான் பஜ்ஜியும் சூப்பும் கட்லட்டும் விற்பார்கள். தவிரக் காளான் பிரைட் ரைஸ், காளான் டெவில் போன்றவையும் ஓர்டருக்கு விநியோகம் செய்தார்கள். யாழில் நின்ற ஒன்றரை மாதங்களில் ஐந்தாறு முறையாவது அந்த பஜ்ஜியும் சூப்பும் சாப்பிட்டிருப்போம். நாங்கள் நின்ற காலம் வேறு ஒரே அடை மழையா, பெட்டிக்கடை முன்னே நின்று மொறு மொறு பஜ்ஜியும் ஆவி பறக்கும் கார சூப்பும் உட்கொள்ளும் அனுபவமே பரவசமாக இருந்தது.



யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சுப்பர் மார்க்கட்டுகளுக்கு காளான் விநியோகம் செய்வதும் இவர்கள்தான். வீட்டிலேயே பெரும் காளான் பண்ணை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். தவிர வேறும் பலரோடும் ஒப்பந்தம்போட்டு பயிற்சி கொடுத்து அவரவர் வீடுகளில் சிறு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கிறார்கள். ஆர்த்திகனுடைய வீட்டுக்கும் சென்று அவருடைய காளான் பண்ணையைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காளான் உற்பத்தியின் ஒவ்வொரு படிமுறைகளையும் மிக நேர்த்தியாக அவர் விளக்கியபடியே சுற்றிக்காட்ட ஆச்சரியமே விரிந்தது. அன்று இரவு உணவாக வீட்டில் நின்ற நாட்டுச் சேவல் ஒன்று சட்டிக்குள் பறந்து, அற்புதமான கோழிக்கறியாக கோப்பைக்குள் விழுந்ததைக் கண்டு மென்று உண்டு தீர்த்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
ஆர்த்திகனிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் தனது தொழில் முயற்சிகள் பற்றியும் எப்படியெல்லாம் தேங்கிவிடாமல் தொடர்ந்து முன்னோக்கி இதனை அபிவிருத்தி செய்யவேண்டும், எந்த வேகத்தில் செய்தல்வேண்டும் என்றெல்லாம் விவரிக்கும்போது கேட்டுக்கொண்டேயிருக்கலாம். இத்தனைக்கும் ஆளுக்கு வயசு இருபத்தாறுதான். யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பட்டப்படிப்பை முடித்து அண்மையில்தான் அவருடைய பட்டமளிப்பு விழாவும் நிகழ்ந்தது. ஆனாலும் அதற்குள் தனியாக ஒரு சிறு தொழிலை ஆரம்பித்து, படித்த படிப்பையும் பயன்பாட்டில் கொண்டுவந்து, சளைக்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் கொண்டாடப்படவேண்டியவர் என்று தோன்றியது.


ஒரு தொழில் முயற்சி வெற்றிகரமாக நடைபெறும்போது அதனைப் பார்த்துப் பெருமிதமும் உவகையும் அடைவது இயல்புதான். ஆனால் அதன் பின்னர் இருக்கின்ற கடின உழைப்பையும் நிச்சயமற்றதன்மையையும் பதட்டத்தையும் அருகிலேயே நின்று அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. நாங்கள் அங்கு நின்ற காலத்தில் திடீரென்று ஒரு வாரத்துக்கு எங்கு தேடியும் எரிவாயு சிலிண்டர்களை வாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கே பெட்டிக்கடைக்கென வைத்திருந்த ஒரு சிலிண்டர் தீர்ந்து இரண்டாவது சிலிண்டர் அரைவாசியில் நிற்கிறது. ஆர்த்திகனும் குமரனும் அலையோ அலையென்று அலைகிறார்கள். ம்ஹூம். ஒரு நாள் கிளிநொச்சியில் எங்கோ கொடுக்கிறார்கள் என்று ஓடிப்போய் வெறுங்கையோடு ஆர்த்திகன் திரும்பி வந்தார். சிலிண்டர்கள் வருகின்றன. ஆனால் இறக்கிய மறுகணமே காணாமற்போய்விடுகின்றன. பெரு நிறுவனங்களும் நட்சத்திர விடுதிகளும் முதலாளிகளும் சிலிண்டர்கள் வந்த கையோடு எடுத்துப்போய்விடுகிறார்கள். ஆனால் சிறு தொழில் செய்வோரின் நிலைமைதான் படுமோசம். கூடவே எங்கள் வீட்டிலும் சிலிண்டர் தீர்ந்துவிட மின் அடுப்பு ஒன்றை ஓடிப்போய் வாங்கிவந்தோம். மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
ஒரு நாள் ஆர்த்திகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.
‘உடனே சிலிண்டர்களைத் தூக்கியோண்டு ஓடிவாங்கோ, சந்தியில் ஒரு லோடு வந்து நிக்குது’
அப்போது வீட்டில் இரண்டு மூன்று மோட்டர்சைக்கிள்கள் நின்றிருக்கும். ஆளாளுக்கு ஒரு வெற்று சிலிண்டரைத் தூக்கி மோட்டர்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பறந்தோம். அந்நாட்களில் மண்ணெண்ணெய் கொடுக்கிறார்கள் என்றவுடன் கலனை எடுத்துக்கொண்டு சைக்கிளில் பறந்த ஞாபகம்தான் வந்தது. ம்ஹூம். ஏமாற்றம்தான். இப்படி இரண்டு மூன்று தடவைகள் நிகழ்ந்தன. ஒருநாள் இயலாக்கட்டத்தில் பத்து கிலோ சிறிய சிலிண்டர்தான் கிடைத்தது என்று அதனை எங்கிருந்தோ அறா நட்டத்தில் ஆர்த்திகன் வாங்கி வந்தார். கடையை மூட முடியாது அல்லவா. இந்த அமளி நிகழ்ந்து ஓரிரு வாரங்களில் திடீரென்று எரிவாயு சிலிண்டர்கள் தாராளமாக வர ஆரம்பித்தன.
இப்போது சிலிண்டர் விலை இரட்டிப்பாகிவிட்டது. பற்றாக்குறைவேறு. ஏனைய உற்பத்திப்பொருட்களும் விலையேறிவிட்டன. இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில்தான் ஆர்த்திகன் போன்றோர் தொழில் செய்கிறார்கள். அந்த அற்புதமான பஜ்ஜிக்கும் சூப்புக்கும் பெட்டிக்கடை கொடுக்கும் இனிமையான அனுபவத்துக்கும் பின்னாலே இத்தனை துன்பங்கள் இருக்கின்றன என்பதை இப்போது நினைத்துப்பார்க்கையில் அவற்றின் சுவை இன்னமும் அதிகமானாற்போல.


இனிய நண்பர் ஆர்த்திகனும் அவருடைய குடும்பத்தினரும் எத்தகு இடர் வந்தாலும் தொடர்ந்து தம்முடைய தொழிற்பயணத்தில் வெற்றி நடை போட அன்புடன் வாழ்த்துகிறேன்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...