அன்று ஷாமந்த் தன் பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்திருந்தான். சம்பிரதாயமான உரையாடல்கள். அதிகமாகப் பெரியவர்கள்தான் பேசிக்கொண்டோம். சிறுவன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தான். கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொன்னான். பின்னர் அவர்கள் விடைபெற்றுக்கொண்டார்கள். முற்றத்தில் இறங்கும்போதுதான் அவன் தயக்கத்துடன் என்னைக்கேட்டான்.
“இந்த வீட்டில்தானா நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள்?”
நான் ஓம் என்றேன்.
“அப்படியானால் நீங்கள் குறிப்பிட்ட நெல்லி மரம் எங்கு நிற்கிறது?”
நான் எங்கள் வீட்டுக் கிணற்றடியைக் காட்டினேன். பக்கத்திலேயே கோழிக்கூடு சிதிலமடைந்து கூரையற்றுக் கிடந்தது. அதனருகில்தால் அந்தச் சிறு நெல்லி சடைத்து வளர்ந்து நின்றது. அந்த மரத்தில்தான் குட்டியனையும் அவனின் தாயையும் கட்டிவைத்திருப்போம். இப்போது அந்த நெல்லி மரம் பட்டுவிட்டது. பிடுங்கப்பட்ட கூரையில்தான் நான் ஒய்யாசமாய்க் கிடந்து சிறு நெல்லிகளை உப்பு மிளகாய்த்தூள் சரையில் ஒற்றி எடுத்துத் தின்பதுண்டு. நெல்லிக்கு நேர் எதிரே வீட்டின் குசினி யன்னல் கிடந்தது. சமையலின்போதும் அம்மாவுக்கு ஒரு கண் என் மேலேயே இருந்திருக்கும்.
எனக்கு நூலில் எதையெல்லாம் எழுதினேன் என்று இப்போது மறந்துபோய்விட்டது. அவற்றில் எவையெல்லாம் கற்பனை என்பதும் ஞாபகமில்லை. அத்தனையும் உண்மை கிடையாது. ஆனால் ஒரு காலத்தின், ஒரு நிலத்தின் சில குறிப்பிட்ட மனிதர்களின், குறிப்பாக சிறுவர்களின், பதின்மத்தவர்களின் வாழ்வியலை அது பிரதிபலித்தது என்பதில் மாற்று இருக்கமுடியாது. ஷாமந்த் அந்த நூலை வாசிக்கும்போது தனக்கென்றோரு நெல்லி மரத்தை வளர்த்து அதில் ஏறி விளையாடியிருப்பான். ஆட்டுக்குட்டியும் வளர்த்திருக்கக்கூடும். என் வீட்டுக்கு வந்ததினால் அவனின் கற்பனை உலகு சிதறுண்டும் போயிருக்கலாம்.
பாவம் சாமந்த். அவன் தேடி வந்தது ஜேகே என்ற எழுத்தாளரை அல்ல, கொல்லைப்புறத்துக் காதலிகளில் வந்த குமரனையும் அந்தச் சிறுவன் வாழ்ந்த வீட்டையும்தான். புனைவின் நிலங்களையும் மனிதர்களையும் காலப்பிறழ்வினூடு தேடிச்செல்வதன் சங்கடங்களை சாமந்த் அன்று அனுபவித்தான்.
நேற்றையதினம் எங்கள் வாசகர் வட்ட உரையாடலின்போது கலா அக்கா ஒன்று சொன்னார். தனக்குத் தெரிந்த ரசியா டோல்ஸ்டாயின் ரசியா என்றார். டோல்ஸ்டாயின் மொஸ்கோ என்றால்கூட கொஞ்சம் தகும். ஆனால் ரசிய நிலம் எத்தனை பரந்தது. டோல்ஸ்டாயின் மொஸ்கோவை நினைத்து இப்போது சென்றால் நாம் அடையப்போகும் ஏமாற்றங்கள்தான் எத்தனை? தாஸ்தாவஸ்கியின் பல நாவல்களை அடுத்தடுத்து வாசித்த கிளர்ச்சியில் ஒருநாள் கூகிள் மேப்பில் சென் பீற்றர்ஸ்பேக்கை சுற்றிச் சுற்றி வந்தேன். முதலில் என் கற்பனை சென் பீற்றர்ஸ்பெக் நகரம் எந்நேரமும் பனிப்பொழிவுடனும் இருட்டாகவும் இருக்கும். இங்கே என்னடாவென்றால் அந்நகரம் முழுதும் பகல் வெளிச்சமும் டிராபிக்கும் இருந்தது.
நண்பர் அசோக் மதுரைக்காரர். ‘ஜேகே, உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகளை வாசித்தபின்னர் நல்லூரைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது’ என்று ஒருமுறை சொன்னார். நான் எழுதிய நல்லூர் முப்பது வருசத்துக்கு முந்தைய யாழ்ப்பாணத்துக் கோயில். இந்தியன் ஆர்மி யாழ் நகரை நோக்கி முன்னேறும்போது எங்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்துத் திறந்துவிட்ட கோயில். எங்கள் குடும்பம் சாமான் சக்கட்டுகளோடு கோயிலின் உள்ளேயிருந்த ஆளுயரக் கடிகாரத்துக்கு அருகேயிருந்த தூணுக்கடியில் அப்போது குடியிருந்தது. அங்கேயே கட்டிக்கொண்டுபோன சாப்பாடுகள். சாமம் முழுதும் கேட்டுக்கொண்டிருந்த குண்டுச் சத்தங்களுக்கு எத்தனை சிறுவர்கள் அன்று படுக்கையிலேயே மூத்திரம் கழித்திருப்பார்கள். கோயில் உட்பிரகாரம், கேணியடி என எல்லாவிடமும் அகதிகள் நிறைந்திருந்தார்கள். திலீபனின் உண்ணாவிரதப்போராட்டம் முதற்கொண்டு சொக்கப்பனை கட்டி பெரும் எடுப்பில் உருவெடுத்த கம்பன்விழாக்கள்வரை இதே நல்லூர்த்திடலில்தான் நிகழ்ந்தேறியது.
இன்றைக்கு நல்லூர் வெளிவீதியைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டுவிட்டது. வடக்கு, கிழக்கு வீதிப்பிரகாரங்களைப் பிரித்து வேலி அடைத்ததில் மனிதர்கள் நடமாட்டமின்றி மணல் முழுதும் புல் வளர்ந்து கிடக்கிறது. போதாதற்கு இரண்டு கழுதைகள்வேறு சுற்றித்திரிகின்றன. என்ன சவத்துக்கு கழுதைகளை அங்கு இட்டுவந்தார்கள் என்றே விளங்கவில்லை. இதனையெல்லாம் எங்கனம் நான் அசோக்குக்கு எடுத்துரைப்பேன்?
புனைவுகளின் நிலங்களும் மனிதர்களும் ஒருவிதத்தில் வெறுமனே தரிசனங்கள்தாம். அவை வாசிக்கப்படும்போதெல்லாம் வாசகரின் மன ஓட்டத்தைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருப்பவை. எழுதப்படும்போதே புது உருக்களை எடுப்பவை. சாமந்த் அன்பின் நிமித்தம் எனக்கு ஒர் பரிசில் கொண்டுவந்திருந்தான். அவன் கையாலேயே வரைந்த என்னுடைய ஓவியம் ஒன்று. சமூக வலைத்தளங்களில், காணொலிகளில் கண்ட என் முகத்தை வரைய அந்தச் சிறுவன் எடுத்த பெரு முயற்சி. அதை அவன் எனக்குத் தந்த கணத்தில்தான் என்னை முதன்முறையாக நேரிலும் பார்க்கிறான். அவனுக்குள்ளேயே எனக்கொரு வடிவு கொடுத்திருந்தான். அதன் ஒரு பிரதி ஓவியமாக மாற்றம் பெற்றிருந்தது. முன்னாலே இப்போதைய நான் உட்கார்ந்திருக்கிறேன். இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கமுடியாமல் அவன் தடுமாறியது புரிந்தது.
புனைவின் நுதனமான இக் களியாட்டத்தை முதன்முறையாக அவன் அனுபவித்ததை உணர்ந்தபோது புன்சிரிப்பே மலர்ந்தது.
Comments
Post a Comment