Skip to main content

அப்பித் கொட்டியாதமாய்


ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமுறை சுப்பர் மார்க்கட் கார்ப்பார்க்கில் புலிக்கொடி ஸ்டிக்கர் ஒட்டியிருந்த கார் ஒன்றின் பெயிண்டை கல்லால் கீறி நாசமாக்கியதை பெருமையாக இன்ஸ்டகிராமில் பகிர்ந்துமிருந்தான்.

நேற்றைய தினம் ரசங்க எனக்கு பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்திருந்தான். மெசஞ்சரில் ‘ஹாய்’ சொன்னேன். ‘எப்படி இருக்கிறாய் மசான்?' என்றேன்.
“நாட்டின் நிலைமைகளைக் கவனிக்கிறாயா?”, என்றான்.
“கவனிக்கிறேன். பொரிஸ் ஜோன்சன் என்ற அரை விசரனிடம் நாமெல்லோரும் சிக்கிவிட்டோம்” என்றேன்.
“அட நான் இங்கிலாந்தைப் பற்றிப் பேசவில்லை. இலங்கையைப் பற்றிக் கேட்கிறேன்”
“ம்ம்ம் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது, போராட்டம் வன்முறையில் முடிந்ததைக் கவனித்தேன்”
“மெய்தான், போராடிய மக்களை வேறு தீவிரவாதிகள் என்று ஒரு இராணுவ அதிகாரி சொல்லிவிட்டான்”
“அப்படியா?”
“இப்படித்தானே முன்னரும் போராடிய தமிழர்களையும் முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லியிருப்பார்கள். அதை மடத்தனமாக நானும் நம்பிவிட்டேன் மசான்”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“என்னடா சொல்கிறாய்? எங்காவது மனுசன் நடாமல் தானாகவே வளர்ந்த அரச மரத்தடியில் உட்கார்ந்து விட்டாயா?”
“பகடி விடாதே, அதென்ன பார்த்தீனியமா தானா வளர்வதற்கு? இதே அரச ஊடகத்துறைதானே முன்னரும் இருந்தது? இதே அரசாங்கம்தானே. தீவிரவாதிகள் என்பதற்கான வரைவிலக்கணம் அவர்களுடையதுதானே?”
அவன் கொஞ்சம் லொஜிக்காகப் பேசுகிறான் என்று புரிந்தது.
“இப்போதாவது உனக்கு விளங்கியதே … சந்தோசம். இப்போது என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?”
“ஒன்றுமில்லை … நாமெல்லாம் கூட்டாக ஒன்றிணைந்து எங்கள் நாட்டை மீட்க போராடவேண்டும்”
“ஓகே….” என்று இழுத்தேன்.
“தெரியும், நீ என்னை சந்தேகமாகத்தான் பார்ப்பாய். என்னை நீ நம்ப வேண்டும் என்று நான் எதிர்பாக்கவில்லை. நம்பவும் வேண்டாம். ஆனால் நாங்கள் ஒன்றாகப் போராடுவோம்”
“எதுக்காக?”
“இந்த நாட்டின் தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்று”
“தேசியப் பிரச்சனைகளா? பொருளாதார பிரச்சனையைச் சொல்கிறாயா?”
“இல்லை … யோசித்துப்பார்த்தேன். நாங்கள் அடிப்படையிலேயே மாற வேண்டும். நாட்டின் இனங்களுக்கு என்று தனித்தனி இயல்புகள் இருக்கும்போது வெறும் ஒற்றையாட்சியையும் ஒற்றை மதத்தையும் கட்டிப்பிடித்துப் பிரயோசனம் இல்லை. இங்கே அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யவேண்டும். பல மேலை நாடுகளைப்போல. சமஷ்டிதான் ஒரே வழி. வடக்கு கிழக்கு, தென் கிழக்கு, மலையகம் என எந்த அளவுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு. அவரவர் மொழி, கலாசாரம், பொருளாதாரத்தை அவரவரே கட்டியமைக்கட்டும். முடியாதபோது அருகிலிருக்கும் மாநிலங்களோடோ, மத்திய அரசோடோ ஒன்றிணைந்துகொள்ளட்டும். அதுதானே முக்கியம்? முழு நாட்டின் அதிகாரமும் ஒரு குடும்பத்திடமும் எங்கள் ஆமத்துறுக்களிடமும் இருந்தது போதும். அதனாற்றான் நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது”
“என்னடா சொல்கிறாய்?”
“யோசித்துப்பார். சனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளின் அரசியலைக் கவனி. அங்கே அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. அங்கே அரசியல் கட்சிகளுக்கு மத, இன அடையாளங்கள் இல்லை. இடது, வலது, தீவிர வலது, தீவிர இடது என்ற கொள்கை சார்ந்த கட்சிகளே இங்கிருக்கின்றன. அவர்கள் பேசுவதும் கொள்கைகள் சார்ந்த விசயங்கள்தான். அத்தோடு சுயாதீன காவல்துறை, சுயாதீன ஊடகம், சுயாதீன நீதிக்கட்டமைப்பு, சுயாதீன கஜானா, அவ்வப்போது இந்த அமைப்புகள் தளம்பினாலும் அவற்றின் அடிப்படை மாறாமல்தான் இருக்கிறது? என்ன சொல்கிறாய்?”
“என்ன சொல்வதா? நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் அவ்வளவுதான்”
“நான் மாறிவிட்டேன் மசான். நீயும் கிளம்பு. நாங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம். எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லு. தமிழ் முஸ்லிம் மக்கள்மீது காலம் காலமாக ஏவப்பட்ட கொடுமைகளை நாம் சத்தமாகக் கூவிச்சொல்வோம். மக்கள் ஏமாற்றப்பட்டதை வரிசைப்படுத்துவோம். நாற்பதினாயிரம் மக்களை நாம் கொன்றோம் என்றாயல்லவா? அந்த இன அழிப்பையும் யுத்தக் குற்றத்தையும் விசாரணை செய்யவேண்டும் என்று சூழுரைப்போம். குறை நினைக்காதே. புலிகள் செய்த கொடுமைகளையும் பேசத்தான் வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்களின் போராட்டத்தையும் சேர்ந்து முன்னெடுப்போம். இராணுவம் அபகரித்த காணிகளை மக்களிடமே மீளக்கொடுக்குமாறு குரல் கொடுப்போம். திடீரென்று முளைக்கும் அரச மரங்களையும் அவை காய்த்துக்கொட்டும் புத்தர் சிலைகளையும் அகற்றச் சொல்லுவோம். முஸ்லிம்களை எதிரிகளாக எண்ணி அவர்களை சொந்த இடத்திலிருந்து புலிகள் துரத்தியதையும் அதனை கண்டும் காணாமல் விட்ட தமிழர்களையும் கண்டிப்போம். அம்மக்களை நம் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவர்களையே ஒடுக்கி தீவிரவாதப் பட்டம் சூட்டி ஆட்சிக்கு வந்த அவலத்தையும் சொல்லி நிற்போம். அம்மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க இடம் கொடுப்போம். மலையக மக்களின் பிரச்சனைகளையும் அவ்வாறே தீர்க்கவேண்டும். நாங்கள் ஆரடா எல்லோருடைய பிரச்சனைகளையும் முன்முடிவு செய்து தீர்ப்பதற்கு? அதையதை அவர்களே செய்தல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் நீங்கள் குரல் கொடுத்தபோது நாங்கள் அமைதியாக இருந்தது தவறுதான். இப்போது முழு நாடுமே இதற்காகக் கூடிக் குரல் கொடுப்போம்”
“அப்புறம்?”
“அப்புறமென்ன, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, தகுதியானவர்களை ஆளவைத்து நாட்டின் அரசியல் பொருளாதார சிக்கல்களைக் களைந்துவிடுவோம். என்ன சொல்கிறாய்? வருகிறாயா?”
“வருவதென்ன…. வந்து குரல் கிழியக்கத்தவும் தயார். என்ன ஒன்று நீ கடைசியாகச் சொன்னது நிகழ்ந்து முடிந்தவுடன் முந்தைய பந்திகளை அப்படியே அழித்துவிடுவாயோ என்று சந்தேகமாக இருக்கிறது”
“நீ சந்தேகப்படுவதிலும் உண்மை உண்டுதான் நண்பா. காலம் காலமாக நாம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோனதை அறிவோம். ஆனால் இம்முறை எம்மை நம்பு. நீ முதலில் இலங்கைக் கொடியை அந்த புரபைலில் போடு. நம்பிக்கைதானே வாழ்க்கை. மாலை ஆர்ப்பாட்டத்துக்கும் வா. குளிரும். ஜாக்கட் கொண்டுவா.”
“ஓகே ராசா… நான் ஆர்ப்பாட்டத்துக்கு நகர மையத்துக்கு வருகிறேன். எனக்கொரு இலங்கைக்கொடி கொண்டுவருவாயா?”
“என்ன மயிருக்கு இலங்கைக்கொடி உனக்கு? நீ புலிக்கொடி இருந்தால் கொண்டுவா. வெளியில் பயத்தில் சொல்லாவிடினும் உனக்கு அக்கொடியில் அதீத பற்று இருக்கிறதல்லவா?”
“இல்லை ராசா, அதனைக் கண்டால் பல குரூப்புகளுக்கு இங்கு அலர்ஜி. புலிகள் மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள், நடுவுநிலைமை புலி எதிர்ப்பு என்று ஆரம்பித்துவிடுவார்கள். அக்கொடி அரை நூற்றாண்டின் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்ட ஒரு இனத்தின் அடையாளக் கொடி என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்தக் கொடியைப் பிடிப்பதாலேயே தமிழர் தரப்பு நிகழ்த்திய கொடுமைகளை நான் ஏற்றுக்கொள்கிறோம் என்கின்ற அர்த்தமில்லை என்றாலும் நம்பமாட்டார்கள். நம் எளிமையான உரையாடலை தீவிரமாக ஆய்ந்து எதிர்வினை செய்வார்கள். தீவிரவாதிகளை ஆதரிக்கிறோம் என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். ஊருக்குத் திரும்பமுடியாது நண்பா.”
“அதையும் பார்த்துவிடுவோம். சிங்கக்கொடி பிடிப்பதைவிட புலிக்கொடி பிடிப்பது அத்தனை மோசமில்லை மசான். ஒன்று செய்யலாம். நீங்கள் எல்லோரும் சிங்கக்கொடியைப் பிடியுங்கள். நாங்கள் சிங்களவர்கள் புலிக்கொடியை ஏந்துகிறோம். அப்புறம் என்ன செய்வார்கள்? எம்மையும் புலிகள் என்று சொல்வார்களா? சொல்லட்டுமே... அப்பித் கொட்டியாதமாய். பண்ணுறதை பண்ணுங்கடா.”
"வேண்டாமடா டேய். இதெல்லாம் ஓவராத் தெரியேல்லையா?"
"நீ சும்மா இரு. பொட்டக் இன்ன"
சொல்லியபடியே மூதேசி தனது புரபைலில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு புலிக்கொடியை மாற்றிவிட்டது. பின்னர் அடுத்த நிமிடம் இரண்டு கொடிகளையும் சேர்த்துப்போட்டுக்கொண்டது.
“யார் பெத்த பிள்ளையோ?”

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...