Skip to main content

கண்ணிலான் பெற்றிழந்தான்



ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் முகம் கழுவி, சாமி கும்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் தயாராகிவிடவேண்டும். உயர்தரம் படிக்கும் அக்காவுக்கு என்று தனியாக ஒரு எண்ணெய் விளக்கும் அறையும் கொடுக்கப்பட்டிருந்தது. மீதி எல்லோருக்கும் என்று பொதுவாக ஒரு மேசையும் விளக்கும் இருந்தது. அவரவர் தத்தமது விளக்குச் சிமினிகளைத் துடைத்தல் வேண்டும். சிமினியைத் துடைப்பது என்பது பிறந்த இரண்டு நாள் குழந்தையை ஈரத்துண்டால் குளிப்பாட்டுவதுபோல. மிகக் கவனமாகத்
துடைக்கவேண்டும். அதிலும் மேசை லாம்புச் சிமினி மிக மென்மையானது. எப்பன் என்றாலும் வெடித்துவிடும். அதற்குள் கையை விட்டுத் துடைப்பதும் சற்றுச் சிரமமானது. அதன் வாய்ப்பகுதியின் விளிம்பு கையைப் பதம் பார்த்துவிடும். கூடவே திரியையும் உயர்த்தி சீராகக் கத்தரித்துவிடவேண்டும். இல்லாவிடில் தீபம் ஒரு பக்கத்தால் எரிய ஆரம்பித்து சிமினியில் புகை படிந்துவிடும். எண்ணெய் தீர்ந்துபோயிருந்தால் அதையும் நிரப்பி மேசையில் வைத்துத் தீபத்தை ஏற்றி, அது செட்டில் ஆனபின்னர் சிமினையைப் பொருத்தினால் அன்றைய இரவின் படிப்பு ஆரம்பிக்கும்.

படிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த இரண்டு விளக்குகள் தவிர அம்மாவிடம் ஒரு குசினி விளக்கு இருக்கும். அது வெறும் குப்பி விளக்குத்தான். பிரிட்டோன் மிக்சர் போத்திலின் மூடியில் ஓட்டை அடித்து, சைக்கிள் டியூபின் வால்வுக் கட்டையை அதில் பூட்டி, வேட்டித்துண்டை உருட்டிச் செருகிவிட்டால் போதும். ஒரு குப்பி விளக்கு தயாராகிவிடும். என்ன ஒன்று, அடுப்புப்புகைக்கு போட்டியாக அதன் புகையும் வீட்டுக்கூரையில் கதீடிரல் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும். அந்தப் புகையை சுவாசித்ததால் அக்காலங்களில் அம்மாவின் மூக்கில் கரி படிந்திருப்பதுண்டு. எம்மூக்கு ஓட்டைகளுக்குள்ளும் விரலை விட்டு எடுத்தால் கறுப்பு நிறம் ஒட்டிக்கிடக்கும். கக்கூஸ் போவதற்கும் கிணற்றடியில் தண்ணி அள்ளப்போவதற்கும் அதே குப்பி விளக்குத்தான் எங்கள் துணை. இன்றைக்கும் எங்காவது பாழடைந்த கக்கூசுகளைக் காணக்கிடைத்தால் அவற்றின் யன்னல் ஓட்டைகளைக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் மேற் பகுதியில் புகை மண்டிக்கிடக்கும். சமயத்தில் கார்பன் பொருக்குகளும் ஒட்டிக்கிடக்கும். எல்லாம் குப்பிவிளக்கின் உபயம்தான்.
ஒரு கால கட்டத்தில் பாடசாலைகளே தம் மாணவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் அரை லீட்டர் கணக்கு. நாங்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு எண்ணெய்ப்போத்தலுடனும் கலனுடனும் வரிசையில் நின்றது ஞாபகம் வருகிறது. பரியோவான் கல்லூரியின் ஹொஸ்டல் கண்டீனில்தான் அந்த எண்ணேய் விநியோகம் நடந்தது. எண்ணெய் விநியோகம் யாழ்ப்பாணத்தின் எந்த மூலையில் இடம்பெற்றாலும் எப்படியோ எமக்குத் தகவல் வந்துவிடும். ஆளாளுக்கு கலனையோ போத்திலையோ எடுத்துக்கொண்டு ஓடுவோம். ஒருமுறை பரமேஸ்வராச் சந்தியிலிருந்த சங்கக்கடையில் கொடுக்கப்பட்ட அரை லீட்டர் மண்ணெண்ணெய்க்காக நாச்சிமார்கோயிலடிவரை நீண்டிருந்த வரிசையில் போய் இணைந்துகொண்டேன். அதிலே எனக்குச் சந்தோசம்தான். காரணம் அப்போது இராமநாதன் வீதி முழுதும் தேவதைகள் குடிகொண்டிருந்தார்கள். சில தேவதைகள் எண்ணெய்க்காக வரிசையிலும் வந்து நின்றிருந்தன. வேறென்ன வேணும்?
ஒரு முறை பரியோவான் கல்லூரியில் ஜெனரேட்டர் மூலம் படிப்பதற்காக மின் விளக்குகளை ஒழுங்கமைத்தார்கள். வில்லியம் ஹோலில்தான் அது நடந்தது. மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை ஹோலில் மின் விளக்குகள் எரியும். சில வாத்திமார் மேடையில் அமர்ந்திருந்து தத்தமது வேலைகளைப் பார்ப்பார்கள். நாம் மூச்சுக்காட்டாமல் படிக்கவேண்டும். என் நினைவுகளில் காசியும் நந்தகுமார் சேரும் லைப்ரரி மிஸ்ஸும் அம்மேடையில் உட்கார்ந்திருந்தது ஞாபகம் இருக்கிறது. சுண்டுக்குளிப் பெட்டைகளும் படிக்க வந்ததாக இன்னொரு மெமரி சொல்கிறது. ஆனால் இப்போதெல்லாம் என் ஞாபகங்கள்மீது எனக்கே நம்பிக்கை இல்லாததால் நண்பி ஒருத்தியிடம் கேட்டுப்பார்த்தேன். ‘தான் வரவில்லை, ஆனால் வகுப்பில் சிலர் அப்படிப் போனதாகத்தான் நினைவு, வாட்சப் குரூப்பில் கேட்டுச்சொல்கிறேன்’ என்றவள்தான், நேற்றிரவிலிருந்து பதிலில்லை! நிச்சயம் ராதிகா வந்தாள் என்றே தோன்றுகிறது. கொழும்புத்துறையிலிருக்கும் அவளைப் பாதுகாப்பாக அவளறியாமலேயே வீடுவரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டே நாம் வீடு திரும்பியதாக ஞாபகம். கும்மிருட்டினூடாக வீடு திரும்பும் அந்த அனுபவமே ஒரு சுகம். அதிலும் சோமசுந்தரம் அவெனியூவில் சைக்கிள் உழக்கும்போது வலது பக்கம் அமைந்திருக்கும் பெரும் திண்ணை வீடுகளின் வெளிச்சமும் நடுவில் சடைத்து வளர்ந்து நிற்கும் மாமரங்களில் காய்த்துத் தொங்கிய மாங்காய்களின் நிழல்களும் இன்னமும் பசுமையாகத் தெரிகின்றன. திரும்பும் வழியில் வைமன் றோட்டில் சில நாய்கள் எப்போதும் எமக்காகவே காத்திருந்து துரத்துங்கள். ரூட்டை மாத்தி மேஜர் கணேஸ் வீதி பிடித்தால் சிவன் கோயிலுக்கு சற்று முன்னே ஒரு பேய் வசித்து வந்தது. நாயா பேயா என்ற பிரச்சனையில் நாங்கள் பல சமயம் பலாலி வீதியால் சுற்றிப்போன சந்தர்ப்பங்களும் உண்டு.
ஒன்பதரைக்கு வீடு திரும்பும்போது படித்துக் களைத்துப்போன பெடியனுக்கென்று அம்மா ஏதாவது ஸ்பெசலாக ஒன்றைச் செய்து வைத்திருப்பார். வெங்காயப் பொரியல், முட்டைப் பொரியல், மீன் சினைப்பொரியல், இவை எதுவுமே இல்லை என்றால் எனக்குப் பிடிக்குமென்று புட்டு மாவில் சில சிப்பிகளையும் கோபுரங்களையும் மான் வடிவங்களையும் சரிக்கட்டி அவித்து வைத்திருப்பார். சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சநேரம் டைனமோ சைக்கிளில் வானொலி கேட்டுவிட்டு நானும் அம்மாவும் படுத்துவிடுவோம். அக்காமார் தொடர்ந்து படிப்பார்கள்.
இத்தோடு ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தையும் சொல்லியே ஆகவேண்டும். சிறுவயது முதலே அம்மா ஒரு விசயத்தை மண்டையில் ஏற்றிவிட்டார்.
“நீ இந்த ஊரிலேயே வாழ முயற்சிக்காதே. வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடு. உன் அப்பரின் அரசாங்க சம்பளத்தில் உன்னை எங்களால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் முடியாது. ஆக படிச்சு நீயாத்தான் போகோணும். அதால படிச்சு உருப்படுற வழியைப் பார்”
அம்மாவின் அந்த அறிவுரை எந்தளவுக்கு சரி, உகந்தது என்ற கேள்விகளுக்கு அப்பால், அது என்னளவில் பெரும் துணையாகவே என் வாழ்க்கை முழுதும் வந்தது. உயர்தரத்தில் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கு அந்த வார்த்தைகளும் ஒரு காரணம். சோர்ந்தபோதெல்லாம் ஊக்குவித்ததும் அந்த வார்த்தைகள்தான். அது எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்துமா என்றால் இல்லைதான். ஆனால் அம்மா எனக்குக் கொடுத்த ஆகப்பெரிய கொடையாக அவ்வார்த்தைகளைப் பார்க்கிறேன். அது சுயநலமாகவே தோன்றினாலும். எப்போதுமே சமூகத்தின் கொடுமைகளுக்காக எதிர்த்துப் போராடும் மனநிலை என்னிடம் உருவாகவே இல்லை. Chicken out என்பார்கள். இதனாலேயே செயற்பாட்டு இயக்கங்கள்மீதும் அதில் ஈடுபடுபவர்களிடமும் அதீத பிரமிப்பு எனக்கு உண்டு. அவர்களிடம் கேள்வியே எழுப்பமுடியாத அன்பு உண்டு. என் எளிய குணத்தை அறிந்த கணத்தில் நான் முடிவு செய்தது ஒன்றைத்தான். சரி ஊருக்குத்தான் உபயோகமில்லை. ஆனால் அநியாயம் செய்யாமலாவது வாழ்வோம். அவ்வளவுதான் என் வாழ்க்கை. என் மூத்த அக்காவுக்கும் எனக்குமிடையிலான பெரு வித்தியாசம் அது. ஒரு பாம்பு முன்னால நிண்டு சீறிக்கொண்டிருந்தால் என் மூளை ஆய்வு மோடுக்குப் போய்விடும். என்ன பாம்பு இது? மண்ணெண்ணெய் எத்த வேண்டுமா அல்லது அடிக்கவேண்டுமா? கடித்தால் விசம் ஏறுமா? எத்தனை நிமிடங்களில் சாவு நேரிடும்? பேசாமல் ஓடிப்போய்விடுவோமா? பாம்பை அடிப்பது மிருக வதை அல்லவா? அதிலும் நாகபூசணியின் குழந்தைகள் நாங்களே அடிப்பதா? இது பாவம் இல்லையா? இப்படியெல்லாம் நான் யோசிக்கும்போதே அக்கா பாம்பின் தலையில் கையில் கிடைத்த விறகுக்கட்டையால் ஒரு போடு போட்டுவிட்டு அதனை எரிப்பதா புதைப்பதா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கும்.
இவற்றை இப்போது எழுதுகிறேன் என்பதன் அர்த்தம் இப்போதைய இளந்தலைமுறையும் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பழகவேண்டும் என்பதல்ல. அப்படி எவராவது சிந்தித்தால் தம்மை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். ஒன்றை மறந்துவிடலாகாது. எங்கள் அனுபவத்தை நினைவு மீட்டுவதில்தான் சந்தோசமே ஒழிய, மீள அதனை வாழுங்களேன் என்று கேட்டால் நாமெல்லோரும் மயிரைப் போனோம். அந்த வாழ்க்கை ஒன்றும் எம் தெரிவு அல்ல. ஆயினும் கிடைத்த வாழ்க்கையை களித்துக் கழித்தோம். அவ்வளவே. மற்றபடி மின்சாரமும் எண்ணெயும் அத்தியாவசியப்பொருட்களும் மனிதர்களின் அடிப்படை உரிமை. அவையின்றி வாழ்வது என்பது இன்றைய உலகில் மிக மிகக் கடினமானதொன்று. 'கண்ணிலான் பெற்றிழந்தான்' என்று கம்பர் சொல்லும் துன்பத்துக்கு இணையானது அது.
ஆக இந்தப் பத்தியின் நோக்கம் என்ன என்று யோசித்துப்பார்க்கிறேன்.
கடந்த சில மாதங்களாக ஊரின் நிலைமைகளை அவதானிக்கும்போது ஏற்பட்ட கலவையான எண்ணங்களின் தொகுப்பே இப்பத்தி. இதற்கென தெளிவான நேரிடையான ஒரு நோக்கம் கிடையாது. தன் அறிதலுக்கான ஒரு முயற்சி. அவ்வளவே. உங்கள் பகிர்வுகளின் மூலம் அம்முயற்சி சிறிது மேம்படவும் கூடும். எதுவுமே போராடாமல் கிடைத்துவிடாது என்பது எவ்வளவு யதார்த்தமோ அதுபோலவே போராடுவதால் மாத்திரம் எல்லாமே கிடைத்துவிடப்போவதில்லை என்பதும் நம் இனம் கற்றுக்கொண்ட யதார்த்தம். இதனைப் புரிந்துகொண்டே செயற்படவேண்டும் என்று தோன்றுகிறது. எல்லோராலும் என் அக்காவாக மாற முடியாது. என்னைப்போல இருப்பதால் சமூகத்துக்கு ஒரு சதமும் பிரயோசனப்படப்போவதும் இல்லை. இந்த இரண்டு பாத்திரங்களுக்குமிடையே எங்கோ ஒரு சமரசப்புள்ளி இருக்கிறது. அதனைக் கண்டடையவேண்டும்.
கண்டடைவோம்.

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .