மழை நின்றும் தூவானம் அடங்காத மனநிலை எனக்கு. வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வு நிகழ்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மனது இறுதி நாள் நிகழ்வினதும் அதற்கான பயணத்தினதும் கணங்களையே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வை இவ்வண்ணமே நடத்தவேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. மன்றை அன்புடையோர் அனைவரும் நிறைத்திருக்க ஒரு பக்கம் ஜனகனின் ஓவியங்களும் மேடையில் அற்புத நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேணும். வெள்ளியின் பட்டறைக் காட்சி நாட்டிய அரங்காய் அமைதல் வேணும். என் மதிப்புக்குரிய முதலாந்தலைமுறை இலக்கிய ஆர்வலர் மட்டுமன்றி இங்கு வளர்ந்த இரண்டாம் தலைமுறை இலக்கியவாதிகளும் வெள்ளி பற்றிப் பேசிடுதல் வேணும். லாகிரியின் மேடைகளைப்போல, நூலை எழுதியவருடன் ஒரு தீவிர வாசகர் சோஃபா உரையாடலை உட்கார்ந்து செய்யவேண்டும். இப்படி ஏராளமான எண்ணங்கள். கனவு காண்பதும் கதை எழுதுவதும் தனித்த செயல். எளிது. ஆனால் எப்படி அவற்றை நடைமுறைப்படுத்துவது? அப்போதுதான் என் அன்புக்குரிய மெல்பேர்ன் வாசகர் வட்ட நண்பர்களிடம் வெள்ளியின் கொண்டாட்டத்தை நிகழ்த்தித்தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர்களோ எந்தத் தயக்கமுமின்றி மனமுவந்து இந்...