ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இடைக்கிடை லோஷன் சொல்லும் ஈழத்து நிலவரங்கள். இப்படி யூடியுப் பரிந்துரைப்பதை ரசித்துப்பார்ப்பார். ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை.
அது இந்தக் கிரிக்கட்.
கிரிக்கட் என்றால் யார் விளையாடுகிறார்கள் என்ற கணக்கில்லை. பிக் பாஷ் பார்ப்பார். அவுஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பார்ப்பார். பெண்களுடைய கிரிக்கட்டையும் இரசிப்பார். டிவியில் எப்போதெல்லாம் கிரிக்கட் போகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்ப்பார். சென்றவாரம் அம்மாவுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது கொஞ்சம் பதட்டமாக இருந்தார். என்ன பிரச்சனை என்று கேட்டபோது “நீ போனை வை. நான் பிறகு அடிக்கிறன். கோலி வந்திட்டான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவுஸ்திரேலியா இந்தியா தொடரை இங்குள்ள இலவச சானல்களில் பார்க்கமுடியாது. காயோ என்று ஒன்றிருக்கிறது. அதற்குக் காசு கட்டவேண்டும். அது வேலை செய்யக்கூடிய டிவி வேண்டும். அம்மா எப்படி இந்த ஆட்டத்தைப் பார்க்கமுடியும்? கேட்டேன்.
“யூ டியுபில போகுது. ஆக்களை பார்த்தா கார்ட்டூன்மாதிரித்தான் தெரியும். ஆனால் ஸ்கோர் போடுவாங்கள். கொமென்ரியும் கேக்கும்”
பிரமிப்பாக இருந்தது. யூடியூபில் சிலர் அனிமேசன் லைவ்வாக கிரிக்கட்டைப் போடுவதுண்டு. அதனைத்தான் இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கிறார் என்று தெரிந்தது.
“இதுக்குப் பேசாம காயோ வாங்கலாமே?”
“அதெல்லாம் எனக்குத்தெரியுமா? நீதான் வாங்கித்தரோணும். எவ்வளவு காசெண்டாலும் பரவாயில்லை. நான் தாறன்”
ஆஸ்பத்திரியில் சாகக்கிடக்கும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்தியரிடம் பேசுவதுபோல அம்மாவின் குரல் கெஞ்சியது.
“சரி நான் வாங்கித்தாறன்”
“ஆ… இப்பவே வாறியா, நான் வேண்டுமென்றால் புட்டு அவிச்சு முட்டை பொரிக்கவா? நீ செட் பண்ணுறதுக்குள்ள சமைச்சிடுவன்”
அம்மாவைப் பற்றிய தகவல்களை உடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பிவைக்கவேண்டும்போலத் தோன்றியது.
“அனே … அது அமேசனில வாங்கோணும். இந்த மட்சு மூண்டு நாளில முடிஞ்சிடும். நான் அடுத்த மட்ச் தொடங்கமுதல் வாங்கித்தாறன்”
அம்மாவின் குரல் தொங்கிவிட்டது.
“சரி அப்ப ஆறுதலா வா. நான் மிச்ச மட்ச் பார்க்கோணும்.”
அவ்வளவுதான். புட்டு, முட்டைப்பொரியல் பற்றி எந்தக் கதையுமில்லை. மனிசி கட் பண்ணீட்டுது.
Comments
Post a Comment