கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்றோவின் கதைகள்கூட மிக எளிமையான நடையில்தான் இருப்பதுண்டு. ஶ்ரீரங்கத்து தேவதைகளின் எளிமையும் அதன் ஒருவிதமான சின்னப்பிள்ளைத்தன்மையும் விட்டேற்றிக்குணமும்தான் இன்றைக்கும் அதனை உயிர்ப்பாக வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இக் கதைகளில் வருகின்ற “நாம் ஐவர்” சங்கம் பற்றி யோசித்துப்பார்க்கிறேன். நாங்களும் ஒரு நான்கைந்துபேர் இந்த வேலை பார்த்திருக்கிறோம். சுஜாதா சண்முகநாதன் மிஸ்ஸிடம் கிளாஸ் போயிருப்பாரென்றால் அங்கேயே தனியாக ஒரு “குமாரசாமித் தெரு தேவதைகள்” எனப் புத்தகம் போட்டிருப்பார் என்று தோன்றுகிறது. இக்கதைகளில் வருகின்ற பாட்டியும் ரங்கராஜனின் தங்கை வத்சலாவும் அற்புதமான பாத்திரங்கள்.
ஒரு கதையில், கோபாலன் கல்கி இதழுக்குள் அவன் மல்லிகாவுக்கு எழுதிய காதல் கடிதத்தை ஒளித்துவைத்ததை அறியாத ரங்கராஜன் அதனை அப்படியே கொண்டுபோய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். கடிதத்தை எழுதியது ரங்கராஜன் என்று தவறாக நினைத்து அவள் அவனைத் தந்தையிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள். தந்தை முறைப்பாடு வைக்க ரங்கராஜனின் பாட்டியிடம் வருகிறார்.
“உங்க பேரன் பண்ணியிருக்கிற காரியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“என்ன பண்ணிட்டான்? சாதுவாச்சே அவன்?”
“சாதுவா? இத படிங்கோ. லெட்டர் எழுதியிருக்கான். கடுதாசி. என் பொண்ணுக்குக் காதல் கடுதாசி”
“உங்க பொண்ணுன்னா எந்தப்பொண்ணு? மரவை மரவையா வீடு நிறையப் பொண்ணு வெச்சிண்டிருக்கே”
இது சுஜாதா. இப்படி நூறு விசயங்கள் மிக மெலிதான கேலியுமாக ஆழமான அரசியலுமாக நூல் முழுதும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்னர் விளங்காத சில விசயங்கள் இப்போது விளங்குகிறது. அவை எல்லாவற்றையும் தவிர்த்து இப்படியொரு தொகுப்பை இன்று வாசிக்கும்போதும் ரீபிரெஷிங்காக இருக்கிறது. ரீபிரெஷிங்குக்கு ஒரு அழகான தமிழைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.
சுஜாதாவின்மீதான தமிழ் இலக்கியச் சூழலின் இருட்டடிப்பு கவலைக்கிடமானது. கடந்த முப்பது நாட்கள் சென்னை புத்தகச்சந்தை தன்முனைப்பு ஆரவாரங்களுக்கு நடுவில் சுஜாதா என்ற எழுத்தாளர் சௌகரியமாகக் காணமலாக்கப்பட்டார் என்றே தோன்றுகிறது. அதிலும் நானறிந்து சுஜாதா வாசகராக இருந்த சிலர் இப்போது எழுத்தாளராகி சிறு வெளிச்சம் அடைந்தவுடன் தீடீரென்று சுஜாதாவா, அவள் ஒரு தொடர்கதையில் மிக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று பேட்டிகொடுக்கும் நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படியெல்லாம் மிதிக்கத்தேவையில்லை. வாசிப்பின்வழி அவரோடு முரண்படலாம். அவர் எழுதியது பலதை நிராகரிக்கலாம். அதற்காக நகரம் எல்லாம் சிறுகதையே இல்லை என்றால் நரகம்தான் கடைசியில்.
இன்று மெல்பேர்ன் வாசகர் வட்டக்கூட்டத்தில் ஶ்ரீரங்கத்து தேவதைகளை எடுத்துப் பேசுகிறோம். சென்ற முறை செந்தில் ஜெகன்னாதனின் “மழைக்கண்”. ஶ்ரீரங்கத்து தேவதைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது சித்திரைத் தெருவுக்குப் பதிலாக பழைய பூங்கா வீதியும் றக்கா ரோட்டும் இங்கிலிஷ் கொன்வெண்ட் அழகிகளும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட் ஆட்டங்களும் என் அம்மா தனக்கென வைத்துக்கொண்ட அறங்களும்தான் ஞாபகம் வருகிறது. சண்முகநாதன் மிஸ் வீட்டு பொமனேரியனை அவருடைய மகள் கூப்பிடும்போது வகுப்பிலிருந்த அத்தனை பெடியளும் இளையராஜா கோரஸ்போல கூட்டுச்சேர்ந்து கூப்பிட்டது ஞாபகம் வருகிறது. றக்கா றோட்டுக் கோகிலவாணிக்கு ஜூட் அண்ணா வயசுப் பெடியள்முதல் எனக்கு இரண்டு வயது இளையவர்கள்வரை வட்டம்போட்டது ஞாபகம் வருகிறது. கோகிலவாணிக்கு ரஞ்சன் கொடுத்த கடிதத்தை அவள் கலட்டிச் சந்தியில் வைத்துக் கிழித்துப்போட்டதும் அந்த சம்பவத்தைக் கொண்டாடும்முகமாக நான் நண்பர்கள் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்குக் கச்சான் பக்கெற் வாங்கிக்கொடுத்ததும் ஞாபகம் வருகிறது. இத்தனைக்கும் ராதிகாவுக்கு நான் யார் என்றுகூடத் தெரியாது. ஆனால் ரஞ்சனை அவள் கிழித்துப்போட்டாள். அதுதான் முக்கியம். அந்த ராதிகா ஈற்றில் யாரைத் திருமணம் முடித்தாள் என்றும் இப்போது அவள் நிலை என்ன என்றும் இரண்டு மணிநேரமாக கௌரியோடு பேசிக்கொண்டிருக்கையில் ஜீவியும் மதியும் நம்மை முறைத்துப்பார்த்ததும் ஞாபகம் வருகிறது.
இதை எழுதுகையில் வரிக்கொருதரம் வந்த, அவள் பெயர் கோகிலவாணியா ராதிகாவா என்ற ஞாபகக் குழப்பம் எனக்கு வயது நாற்பத்து மூன்று ஆகிவிட்டது என்கிறது.
Comments
Post a Comment