Skip to main content

பொங்கல் நிகழ்வுகள்



அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள்.

பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்லையில் அமைந்திருக்கும் அக்குச்சி அம்மனாக இருக்கலாம். சுடலைமாடனாக இருக்கலாம். வீரமாகாளியாக இருக்கலாம். சிவனாக இருக்கலாம். கன்னி மேரியாக இருக்கலாம். இயேசுபிரானாகவும் இருக்கலாம். திருமணங்கள்போல. பண்டைத்தமிழரின் திருமண நிகழ்வுகள் மத அனுட்டானங்களோடு அமைந்திருக்காது அல்லவா. ஆனால் காலப்போக்கில் மத நம்பிக்கைகள் சார்ந்து அந்த நிகழ்வு மருவிவிட்டது. பின்னர் சுயமரியாதைத் திருமணங்கள் உருவாகின. காலனித்துவத்தின்பின்னர் திருமணத்தைப் பதிவுசெய்யும் நிகழ்வே ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. இன்றைக்கு நம் சமூகத்தில் எல்லாவிதமான திருமண நிகழ்வுகளுக்கும் இடமுண்டு. ஒரு சமூகத்தின் நிகழ்வு காலப்போக்கில் மதம் சார்ந்தோ சூழ்நிலைகள்சார்ந்தோ எப்படி மாறுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பொங்கலும் அப்படித்தான்.
நானறிந்து முகமாலை தேவாலயம் ஒன்றின் பொங்கல் நிகழ்ச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த காலத்தில் சென்றிருக்கிறேன். போதகர் செபம் செய்து முடித்தபின்னர் பொங்கல் சூரியனுக்குப் படைக்கப்பட்டது. நிலம்சார் கொண்டாட்டம் ஒன்றோடு மதம் எப்படி பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு கிடையாது. அதே சமயம் இப்போது எங்கள் யாழ்ப்பாண வீட்டில் வல்லமை அமைப்பினர் பொங்கலைக் கொண்டாடும்போது கோலம், கும்மி, கோலாட்டம், பறை என்று பொங்கலை ஒரு களியாட்டமாகச் செய்வர். ஆனால் எந்தக் கடவுளுக்கும் பொங்கலைப் படைப்பதில்லை. என்னளவில் பொங்கல் என்பது மண்ணினின்று முகிழ்ந்த கொண்டாட்டம். அதனை அவரவர் தம் மத நம்பிக்கை சார்ந்தோ, நம்பிக்கையற்றோர் அது இன்றியோ கொண்டாடலாம். பொங்கலுக்கு வலிந்து மதச்சாயம் பூசுவதோ அல்லது வலிந்து மதச்சாயத்தை முழுதாக அகற்ற முயல்வதோ தேவையற்றது மட்டுமல்ல அவரவர் உரிமையில் கைவைப்பதுங்கூட.
வெளிநாடுகளில் பொங்கல்விழா ஒரு சமூக நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வையையும் மானியத்தையும் மனதில்கொண்டு அவர்களுக்கு நம் அமைப்பு எத்தனை பெரிது என்பதை நிரூபிப்பதுமே பல நிகழ்வுகளின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக இருக்கிறது. அதனால் ஊருப்பட்ட கலை நிகழ்வுகள் மேடையேற்றம் செய்யப்படுகின்றன. நடனம், வாத்திய இசை, பாடல்கள் என்று இந்த லிஸ்ட் நீள்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாமே ஒத்திகைகள் தேவைப்படும் நிகழ்வுகள். ஒரு நடன நிகழ்வை அரங்கேற்ற குறைந்தது ஆறேழு ஒத்திகைகளாவது தேவைப்படும். வாத்திய நிகழ்வுகளும் அப்படித்தான். ஆனால் பகல் வெய்யிலில் இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்படும்போது திடலில் இருப்பவர் பலரும் நிகழ்ச்சியைக் கூர்ந்து இரசிப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் ஆசிரியர் மட்டும் கொஞ்சம் டென்சனாகத் திரிவார். பெற்றோர்கள் வீடியோ எடுப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஏனையவர்கள் தம்மிடையேதான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அன்றைக்குத்தான் பலரும் பலரைப் பல நாட்கள் கழித்துக் காண்பதால் பேசுவதற்குப் பல விசயங்கள் அவர்களிடத்தில் இருக்கின்றன. அதனால் மேடை நிகழ்ச்சியில் நேரத்தை வேஸ்ட் பண்ண எவரும் தயாராகவில்லை. ஆனால் நிகழ்வுக்கு வந்தால் நிகழ்ச்சியைப் பார்ப்பது உங்கள் கடமையாகிறது. நிகழ்ச்சி சரியில்லை என்றால் அதன் ஆசிரியரைக் கூப்பிட்டு விமர்சியுங்கள். சத்தம்போடாமல் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முடிந்தபின் மோசம் என்று விமர்சிப்பதுபோல விமர்சியுங்கள். தவறில்லை. உங்கள் விமர்சனம் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்ததடவை அந்த நிகழ்வு நன்றாக அமையும். அல்லது மேடையே ஏறமாட்டார்கள். இரண்டுமே சிறப்புத்தான். நான் இரண்டு நிகழ்வுகளில் ஒரு random பரிசோதனை செய்தேன். ஒரு புல்லாங்குழல் நிகழ்வு முடிவடைந்ததும் அங்கு வாசிக்கப்பட்ட பாடல் என்ன என்று ஒரு சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். முடிவுகளை வெளியிடவேண்டியதில்லை.
இந்தக் காரணத்தாலோ என்னவோ, நிகழ்ச்சிகளின் தரமும் தரை மோசமாக இருக்கிறது. எனக்கு அடிப்படை இசை அறிவோ நடன அறிவோ இல்லை. அப்படிப்பட்ட எனக்கே சுருதியும் தாளமும் தவறுவது தெரிகிறது. இரண்டு கம்பியில் முட்டாமல் வயலின் வாசிப்பதே பெரிய சில்லெடுப்பாக இருக்கிறது. இந்த மாணவர்களை மேடையேற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை மேடைத்தரம் ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது மாணவர்களுக்கு ஒரு மேடை என்ற அளவிலே அவர்களும் ஏற்றிவிடுகிறார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர்களும் நிகழ்வுகளின் தரமறிந்து அனுமதி கொடுப்பதுமில்லை. இங்கு எல்லாமே ‘அருமை’, ‘great job’ வகைதான். இதனாலே மாணவர்களுக்கு ஒரு மேடை சந்தர்ப்பம், இதையேன் நாங்கள் மெனக்கெட்டு இரசிப்பான் என்று பார்வையாளர்களும் தங்கள்பாட்டில் இருந்துவிடுகிறார்கள். தமிழர்தம் கலை கலாசாரத்தை வளர்த்தெடுக்கிறோம் என்று மேடைபோட்டுக் கூவிவிட்டு அதே கலையை இப்படித் துச்சாதனன் துகிலுரிந்ததுபோலத் துவைத்தெடுத்தால் எப்படி?
இன்னுமொன்று வெளிநாடுகளில் தமிழர் கலை என்பது சிறுவர்களுக்கானது என்றாகிவிட்டது. நானறிந்து மேடைப்பேச்சையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் கற்றுக்கொண்டது யாழ்ப்பாணத்துக் கம்பன் கழக மேடைகளில்தான். இங்கு வந்தபின்னருங்கூட மேடைப் பேச்சுகளின் தரம் அதிகமாக இருப்பது கம்பன் கழக நிகழ்வுகளில்தான். மேடைத்தரத்துக்காக ஜெயராம் அண்ணா முறியும் முறிவு எனக்குத் தெரியும். எனக்கும் கம்பவாருதிக்குமிடையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அவை எல்லாமே தத்துவம், நம்பிக்கை சார்ந்த முரண்பாடுகள். அந்த அடிப்படையில் தார்மீகரீதியாக என்னால் அவர்களது மேடையில் ஏறுதல் இயலாதது. அவ்வளவே. ஆனால் கம்பன் பாடல்களை நம் மூளைக்குள் ஏற்றிவிட்டது அவரும் கம்பன்விழாக்களும்தான். அந்த மேடைகளில் பேசியது யாரென்று பார்த்தால் கம்பவாரிதி, சிவகுமாரன், திருநந்தகுமார், குமாரதாசன், ஆறு திருமுருகன், செல்வவடிவேல், சிவராமலிங்கம், சண்முகதாஸ், மனோன்மணி என்று ஒரு நீண்ட வரிசை. அதேபோன்று திலகநாயகம் போலும் பொன் சுந்தரலிங்கமும் மெல்லிசையென்றால் சாந்தனும் நாதஸ்வரத்துக்கு பத்மநாதனும்தான் இசைக்கச்சேரிகள்மீது ஆர்வத்தைத் தூண்டியவர்கள். சின்னமணியும் ஶ்ரீதேவி குரூப்பும்தான் வில்லுப்பாட்டு கற்பித்தவர்கள். இப்படி நீள்கின்ற லிஸ்ட்டைக் கவனித்தால் ஒன்று புலப்படும். இவர்கள் எல்லோருமே ஆசான்கள். தத்தமது கலைகளில் உச்சம் கண்டவர்கள். அதனால்தான் சொல்கிறேன். ஆசான்கள் மேடையேறவேண்டும். ஒரு இசை நிகழ்ச்சி என்றால் அந்தக் கல்லூரியின் ஆசிரியரும் மேடை ஏறவேண்டும். அப்போதுதான் அது ரசிக்கும்படியும் இருக்கும். இளையராஜா மேடையில் நின்றால்தான் அது இளையராஜா நிகழ்ச்சி. அவர் பாடல்களை அவரின்றிய அவையில் எவரும் பாடிவிட்டுப்போகலாம் என்றால் நாங்கள் வீட்டிலேயே அவற்றைக் கேட்டுவிடுவோமே. ஆசான்கள் மேடையில் தோன்றினால்தான், ஓ, நிகழ்ச்சியென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று அதனை இரசிக்கவும் தோன்றும். பெரியவர்கள் எவரும் மேடையேறவில்லை என்றால் எதற்காக இந்தக் கலைகளைப் படித்தல் வேண்டும் என்ற கேள்வி சிறுவர்களுக்கு எழுந்துவிடாதா? இவையெல்லாமே “performing arts”. படிப்பதற்கும் படிப்பிப்பதற்காகவுமல்ல இவை. மேடையேறுவதற்காகவும்தான். அப்படி ஏறும் பெரியவர்களுக்கு அவர்களின் நேரத்திற்கும் புலமைக்கும் ஊதியம் கொடுக்கவேண்டியதும் அமைப்புகளின் கடமையாகும். புலமைச்சொத்து என்பது இலவசம், நாம் மற்றவருக்குச் சந்தர்ப்பம் கொடுத்து ஊக்குவிக்கிறோம் என்ற மனநிலைகள் ஒரு மோசமான சமுகத்தின் எண்ணங்கள். பவுன்ஸி காசிலுக்கு காசு கொடுக்கமுடிகிறது. ஆனால் ஐந்து பிள்ளைகளை மேடையேற்றும் ஆசிரியைக்குக் கொடுக்கமுடிவதில்லை என்றால் என்ன இது? அவை மாறவேண்டும்.
இவற்றை எழுதுவதால் என்மீதான் வெஞ்சினமும் பகையும்தான் அதிகரிக்கும் என்றும் தெரியும். இது யாரையும் தனிப்படத் தாக்க எழுதவில்லை என்பது சிலருக்கேனும் புரியும் என்று நம்புகிறேன். நேற்று இன்று நிகழும் பிரச்சனை இல்லை. நம் சமூகத்தின் தோல்வி இது. ஆனால் யாரேனும் ஒருவராவது, ஒரேயொருவராவது இதுபற்றித் தீர ஆராய்ந்து ஒரு சின்ன அடி முன்னகர்ந்தால்கூட இப்பத்தி தன் பலனை அடைந்துவிடும்.
அவ்வளவுதான்.


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...