“எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும் நேரம், யுகங்கள் கணங்கள் ஆகும், நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்” என்று மேலே போய் “வா, வா, மீண்டும் மீண்டும் தாலாட்டு” என்று பல்லவியே முதல் மாடிக்குச் சென்றுதான் ஓயும். ஆனால் அந்தப்பெடி ரகுமான் பல்லவியில் செய்தது போதாது என்று சரணத்தைத் தூக்கி அடுத்த மாடியில ஏத்திவிட்டிருக்கும். “சாம வேதம் நீ ஓது, வாடைத்தீயைத் தூவும்போது” என்று சொல்லி கூரையில் ஏறிவிட்டு, இதுக்குமேலே போனால் பேதம் என்று “வா இனி தாங்காது தாங்காது, கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக” என்று பெடி மீண்டும் பாட்டைக்கொண்டுவந்து பல்லவியில் இணைத்துவிடும். இந்தக் கொம்பசிசனை அதிகம் பேஸ் உள்ள ஒரு குரல்காரி பாடமுடியாது. சித்ராவினுடையது போன்ற மென்மையான குரல் வேண்டும், ஆனால் ஹை பிட்சில் குரல் கம்பிமாதிரி நிக்கோணும். அதுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் சுவர்ணலதா. அடுத்தது வாணி ஜெயராம்.