Skip to main content

சின்னான்




“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்லாமல் இந்தப் புலம்பெயர் புலிகள்தான் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்”

இதுதான் ஈழப்பிரச்சனை பற்றிப் பெரும்பான்மை சிங்களவரிடம் கேட்டால் கிடைக்கின்ற பொதுவான பதில். சில தமிழரும் முஸ்லிம்களும்கூட இப்படிப் பேசுவதுண்டு. இவர்கள் தமக்குள் மாத்திரமின்றி பன்னாட்டு அலுவலகங்களில் இடம்பெறும் சாதாரண உரையாடல்களிலும்கூட இப்படியான பதில்களையே கொடுத்துக்கொண்டிருப்பார்கள். மிக மோசமான இன வன்முறையும் படுகொலையும் வெளிப்படையாக இடம்பெற்ற ஒரு நாட்டிலே. அது பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி எப்படிப் பெரும்பான்மை சமூகத்தால் இந்த மனநிலையோடு பேசமுடிகிறது என்ற பல சமயங்களில் நமக்கு வியப்பாக இருக்கும். ரோஹிங்கியா, பாலத்தீன, ஆர்மீனியா, கம்போடியா போன்று எங்கேயோ எப்போதோ நடைபெற்ற ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பற்றி நமக்குத் தெரியவருகிறது. அவற்றின்மேல் கரிசனம் கொள்ளமுடிகிறது. குரல் கொடுக்கவும் தூண்டுகிறது. ஆனால் தம் நாட்டில் தம் இனத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை எப்படி ஒரு சமூகம் கண்டும் காணாமலிருக்கக்கூடும்?

இதற்கான உளவியலை நாம் பெரிதாக ஆராய்ந்து தேடி அறியவேண்டியதில்லை.

ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுவாக வெள்ளாளச் சாதியைச் சேர்ந்தவரிடம் ‘ஈழத்தில் சாதிக் கொடுமை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள். இல்லை என்று பதில் வரும். பெரிதாக நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். இந்தியா அளவுக்கு நாங்கள் மோசமில்லை என்பார்கள். முன்னர் இருந்தது, புலிகளின் எழுச்சிக்குப்பின்னர் சாதி ஒடுங்கிவிட்டது. அவங்கள் எல்லாம் நல்லா முன்னேறிட்டாங்கள் என்பார்கள். அவையவைக்கு என்று சில பழக்கங்கள் உண்டு, சாதிக்குள்ள சாத்திரம் பார்த்துக் கலியாணம் செய்வம். ஆனா கொடுமை எல்லாம் கிடையாது. அவங்களுக்கு இப்ப எல்லா உரிமையும் குடுத்திருக்கு. அனுபவிக்கிறாங்கள் என்பார்கள். அவர்களின் பதிலைக் கேட்கையில் இன்றைக்கு உண்மையில் வெள்ளாளர்தான் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாறிவிட்டார்கள் என்ற எண்ணம்கூட சமயத்தில் வந்துபோகும்.

அதிகாரக் குழுக்களின் பல மனநிலைகளுள் ஒன்று, அது யாரை அடிமைப்படுத்தி வாழ முயல்கிறதோ அவர்களுடைய தேவைகளையும் பிரச்சனைகளையும் அதுவே முன்முடிவுடன் தன் இருப்புக்குப் பாதகமில்லாமல் தீர்மானித்துக்கொள்வது. சிங்களவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளையும் உரிமைகளையும் முடிவு செய்வதுபோல. மேலைத்தேயக் காலனித்துவம் தானே இன்றைக்கும் ஏனைய நாடுகளின் தலைவிதிகளைத் தீர்மானிப்பதுபோல. அரசியல்வாதிகள் மக்களின் விதியைத் தீர்மானிப்பதுபோல. அதிகாரச் சாதிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. காலத்தின் போக்கில் தம் இருப்புக்குப் பாதகம் நிகழும்போதும் எதிர்ப்புகள் உருவாகும்போதும் அவை மெல்லத் தம்முடைய குரலை மாற்றிக்கொள்வதுண்டு. சமநிலையைப் பேணுகிறோம் என்று சில மேம்போக்கான முயற்சிகளை அவை செய்துகொள்ளும். அதற்கிணையாகப் பிரசாரங்களையும் அது நிகழ்த்தும். அதிகாரமும் பலமும் இருப்பதால் அதன் குரலே அதிகம் எடுபடுவதுமுண்டு.

ஈழத்துச் சமூகத்தில், குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியமும் இவ்வகையான போலி மாற்றங்களையே காலத்தின் போக்கில் உள்வாங்கி வந்திருக்கிறது. தொடர்ச்சியான போர், புலம்பெயர்வு, உலக மயமாக்கல், திறந்த பொருளாதாரம், இலவசக் கல்வி, அருகே தமிழ் நாட்டில் நிகழும் பகுத்தறிவுப் போராட்டங்கள் எனப் பல புறநிலைக் காரணிகளால் சாதியக் கட்டமைப்பின் வீரியம் முன்னைவிடச் சற்று மாற்றமடைந்திருக்கக்கூடும். அதற்காகச் சாதியின் பெயரால் இன்றும் நிகழுகின்ற நேரடியான, மறைமுகமான கொடுமைகளை நாம் எவ்வகையிலும் கடந்துபோய்விட முடியாது. ஓர் அதிகாரச் சமூகத்தின் மனநிலையிலிருந்து யாராவது அந்தக் கூற்றினைச் செய்யும்போது அதனை மறுதலிப்பது முக்கியமாகிறது. பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பைவிடக் குற்றம் சுமத்துகின்றவரின் தரப்பை அதிகம் கேட்கவேண்டும் என்று சொல்லப்படுவதன் நேர்மையான காரணத்தைத்தான் நாம் இங்கும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பக்கம் ஆதாயங்கள், சமரசங்கள் இன்றி நாம் நிற்கும்போது ஒரு சமூகமாக நாம் முழுமையை நோக்கி முன்னேற ஏதுக்கள் அதிகம்.

ஆனால் இந்த நிலையை ஒரு சமூகம் அடைவதற்குத் தொடர்ச்சியான அரசியல், சமூக, இலக்கியச் செயற்பாடுகள் அவசியமாகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. உலகெங்கும் பெரும்பான்மைச் சமூகமானது வெறும் மந்தைக் கூட்டம்தான். அது பிறர் வழி நடத்தும் பாதையை எந்தப் பிரக்ஞையுமின்றி வழித்தொடரும். அதற்குக் குடிக்கத் தண்ணீரும் புசிக்க உணவும் கலவிக்குத் துணையுமிருந்தாற்போதும். இப்படிப்பட்ட சமூகத்தின் மூளையில் காலம்காலமாகப் புரையோடிப்போயிருக்கும் எண்ணக் கருத்துகளை மாற்றுவதென்றால் இலகுவான காரியமா? இந்தப் பனங்கொட்டைகளைப் பிளக்கும் முயற்சியில் எத்தனை அருவாள்களின் கூர்முனைகள் மழுங்கிப்போயிருக்கும்? ஆனாலும் இதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. தேசிய அரசியல்முதல் கிராமியச் செயற்பாட்டுத்தளம்வரை பல கூட்டத்தினர் இதனைச் செய்துகொண்டேயிருக்கின்றன. இலக்கியம் இதற்கான மிக ஆதாரமான கோட்பாட்டுத் தளத்தை இவர்களுக்கு அமைத்துக்கொடுக்கிறது. மக்களின் வலிகளை அது ஆவணப்படுத்துகிறது. இந்த மந்தைகளை இருட்டிலும் சரியான திசையில் ஓட்டிக்கொண்டுசெல்லும் மேய்ப்பர்களுக்குத் திசைகாட்டியாக இருக்கிறது. இந்தப்பாதையில் பல தவறுகள், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம், சுயநலச் செயற்பாடுகள் எனப் பல இடம்பெறக்கூடும். ஆனால் நிகர விளைவாக நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சந்திரன் சண்முக எழுதிய ‘சின்னான்’ என்ற நாவல்கூட அதற்கான ஒரு முயற்சிதான்.

நெடுந்தீவில் நிகழும் கதை இது. தன் எட்டு வயதில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்கள் சிறையிலிருந்துவிட்டு ஊருக்குத் திரும்பும் சின்னானின் வாழ்க்கைதான் இந்த நாவல். பறை வாசிக்கும் காத்தானின் மகனான சின்னானும் அவருடைய சுற்றத்தினரும் அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த சாதியின் பெயராலேயே ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். சிறை வாழ்க்கையிலும் சின்னான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார். பின்னர் ஒரு கிருத்துவப் பாதிரியாரின் ஆதரவால் சிறையிலேயே சிங்கள மொழியில் கல்வி பயின்று நன்னடத்தையின் பேரின் முப்பது ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்புகிறார். ஆனால் அப்போதும் கோயில் தர்மகர்த்தாவும் அவனது பரிவாரங்களும் சின்னானை நிம்மதியாக இருக்க விடுவதாயில்லை. அவரை மீண்டும் சிறையில் அடைக்கும் முயற்சியில் அந்தத் தர்மகர்த்தா முழு முயற்சியுடன் ஈடுபடுகிறான். சாதித் தடிப்பும் சாதியின் பெயரால் நிகழும் கொடுமையும் இத்தனை வருடங்கள் கழிந்தும் ஊரில் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதை சின்னான் அறிகிறார். இந்த நிலையை சின்னான் எப்படிச் சமாளித்தார் என்றும் அவர் உண்மையிலேயே யார் என்று அறிவதும் மீதிக்கதை.

சின்னான் வெறுமனே எழுபத்திரண்டு பக்கங்கள் நீடிக்கும் ஒரு சிறிய நாவல்தான். எனினும் நாவல் முழுதும் யாழ்ப்பாணத்தில், அதிலும் தீவுப்பகுதிகளில் நிகழும் மிக மோசமான சாதியப்பாகுபாடு தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தரப்பின் பாத்திரங்களினூடாக அது நிகழ்கிறது. எப்போதும்போல இந்தப் பாகுபாட்டுக்கு வேறு வழியின்றி இசைவாக்கப்பட்ட மூத்த தலைமுறைக்கும் இது பொறுக்காமல் வெகுண்டெழுகின்ற இளைய தலைமுறைக்குமிடையேயான உரையாடல் நிகழ்கிறது. கொலை நிகழ்கிறது. சாதிக்கொரு கிணறு வெட்டி ஒருத்தர் மற்றவரை நீர் அள்ளவிடாமல் தடை செய்யும் கீழ்மை, ஒவ்வொரு சாதிகளுக்கும் நின்று கும்பிடுவதற்காக ஒதுக்கப்பட்ட பல்வேறு பிரகாரங்கள், பிரகாரங்களைத் துப்புரவு செய்யும்போது தவறுதலாக வேறொரு பிரகாரத்தை மிதித்துவிட்டால் ஏற்படக்கூடிய தீட்டு எனக் கோயிலையும் மதத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தையும் பின்பற்றி எழுந்த சாதியப்பாகுபாடுகள் நாவல் முழுதும் தொடர்ச்சியாகக் காட்டப்படுகின்றன.

இவற்றுக்கு ஒரு தீர்வாக நாவலில் சின்னான் ஓரிடத்தில் கூறும் வார்த்தைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

“என் அண்ணன் படித்து ஆளாகி தனக்கு என்றொரு கோயிலைக் கட்டியிருக்கவேண்டும். இந்த மதத்துக்கு இன்ன கோயில் என்று இருக்கும்போது, இன்ன சாதிக்கு இன்ன கோயில் என்று கட்டிக் கும்பிட்டிருக்க வேண்டும். எமக்கென்றும் கடவுள்கள், அவர்களுக்கு நாமே பூசாரிகள் என்றிருக்கவேண்டும்.”

இப்படி சின்னான் விவரித்துக்கொண்டுபோகிறார். இந்தத் தீர்வு சமயத்தில் ஆதிக்கச் சாதிகளாலும் முன்மொழியப்படுவதுண்டு. மிக ஆபத்தான இந்தத் தீர்வில் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, இது சாதிப்பாகுபாட்டையும் அதனடிப்படையிலான ஒடுக்குமுறையையும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். சாதிக்கொரு கோவில், ஒருவர் கோயிலுக்கு மற்றவர் போகமுடியாது, காலடி வைக்கமுடியாது என்பது ஆதிக்கச் சாதிகளுக்கு எத்தனை வசதியான ஒன்று பாருங்கள். அவர்கள் தமது நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வார்கள். சின்னான்கள் எத்தனை கோயில்களைக் கட்டிக்கொண்டாலும் அவற்றை அவர்கள் கணக்கெடுக்கப்போவதில்லை. தவிர எதற்காகத் தமக்கு உரித்தான கோயில்களை விட்டுவிட்டு சின்னான்கள் இன்னொரு கோயிலைக் கட்டிக்கொள்ள வேண்டும்? கடவுள் என்றொன்று இருக்குமென்றால், மதம் என்றொன்று இருக்குமென்றால் அது எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாகத்தானே இருக்கவேண்டும்? தான் மானசீகமாக நம்பும் கடவுளுக்கு அதன் சந்தியிலேயே ஏறி நின்று பாலூற்றி அர்ச்சனை செய்யும் உரிமை சின்னானுக்கும் இருக்கிறதல்லவா? அவருடைய பிறப்பின் நிமித்தம் அந்த உரிமையைப் பறிக்கும் கொடுமையைத்தானே நாம் தடுக்கவேண்டும்? அதை விடுத்து சின்னானைப்போய் நீயே ஒரு கோயில் கட்டி வழிபடு என்று சொல்வது நரித்தனம் இல்லையா?

சமூக நீதியின் மிக நுட்பமான இச்சிக்கலும் அதற்கான தீர்வும் சின்னான் நாவலில் மிக அலட்சியமாக இப்படிக் கடக்கப்பட்டுவிடுகிறது. சின்னானை வாசிக்கும்போது தோன்றும் பெரும் குறையே இந்நாவல் முழுதும் இருக்கின்ற இந்த மேம்போக்குத்தனம்தான். சின்னானின் தீவு வாழ்வும் சிறை வாழ்வும் நானூறு பக்கங்கள் நீடிக்கக்கூடிய ஆழமான பல அனுபவங்களைக் கொண்டது. அதனை வெறுமனே எழுபத்திரண்டு பக்கங்களில் அவசர அவசரமாகத் தொகுக்கும்போது எல்லா விசயங்களும் மிக மேலோட்டமாகவே அமைந்துவிடுகின்றன. சின்னான் தீவிரமாகப் பேச முயற்சி செய்யும் விசயமும் இதனால் சற்றே நீர்த்துப்போய்விடுகிறது. அதிலும் எழுபத்திரண்டு பக்கங்களில் பல விசயங்களைச் சொல்லிவிடவேண்டும் என்ற அவசரத்தில் எல்லாமே அவிந்தும் அவியாமலும் கலந்து கொடுக்கப்படுகிறது. காலப்பரிமாணம்கூட சில இடங்களில் தவறிவிடுகிறது. உதாரணத்துக்கு சின்னான் முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஊருக்குத் திரும்புவதாகக் கதை நிகழ்கிறது. அப்போது அவனுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியானால் இது 2020ம் ஆண்டுக்குப் பின்னர் நிகழ்ந்த ஒன்று. முப்பது ஆண்டு கணக்குப் பார்த்தால் சின்னான் சிறைசென்றது1990ம் ஆண்டு என்றாகிறது. கதையில் சின்னான் சிறையிலிருந்த காலத்தில் குமுதினிப்படகு படுகொலைகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நிஜத்தில் குமுதினிப் படுகொலைகள் இடம்பெற்றது 1985ம் ஆண்டு. இது ஓர் எளிமையான கணக்கு. ஆனால் நெடுந்தீவுக் கதையில் குமுதினி படுகொலையை எங்கேயாவது செருகவேண்டும் என்ற அவசரத்தில் நாவலில் பத்து வருடங்கள் கழித்து படுகொலை இடம்பெற்றுவிட்டது. வரலாற்றுச் சம்பவங்கள் புனைவில் இடம்பெறும்போது அவற்றையும் நாம் புனையமுடியாது. இதேபோன்ற நிறையக் குழப்பங்கள் நாவல் முழுதும் கிடக்கின்றன. இலக்கியத்தை ஈடுபாட்டுடன் உள்வாங்கி வாசிக்கும் வாசகர்களுக்கு இவை அயர்ச்சியையே கொடுத்துவிடும். இதனால் கதை சொல்ல முனைகின்ற ஆதாரச் செய்தி கவனிக்கப்படாமற்போய்விடும்.

அறுபதுகளிலிருந்தே ஈழத்தின் சாதியப்பிரிவினைகளையும் ஒடுக்குமுறைகளையும் பல தலைமுறை எழுத்தாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். வரலாறு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை இலக்கியங்கள் பதிவு செய்தே வந்திருக்கின்றன. எங்கெல்லாம் மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாமிருந்து சீரிய இலக்கியங்கள் தலையெடுத்திருக்கின்றன. சமகால ஈழத்துச் சமூகத்தில், அது உள்நாடாக இருக்கட்டும் அல்லது புலம்பெயர் சமூகமாக இருக்கட்டும், சாதி ஒரு நீறு பூத்த நெருப்பாகக் கழன்றுகொண்டே இருக்கிறது. புலம்பெயர் சமூகம் இதனைக் கொஞ்சம் விஞ்ஞானரீதியாக நிகழ்த்துகிறது. அவுஸ்திரேலியாவின் பல தமிழ் அமைப்புகளின் தலைவர், செயலாளர்கள் எல்லாம் வெள்ளாளர்களாகவே இருப்பர். பிரபலத் தமிழ்ப் பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைப்பவர்களும் இவர்களே. இங்குள்ள கோயில் தர்மகர்த்தாக்களும் இவர்களே. கேட்டால் அவங்களுக்கு இதெல்லாத்தையும் கொண்டு நடத்தத் தெரியாது என்று பச்சையாகவே சொல்வர். சமூகத்தின் நிகழ்வுகளுக்குப் பிரதம விருந்தினராக வந்து பொன்னாடைகளைப் பெற்றுக்கொள்பவர்களும் அவர்களே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கக்கூடும். ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம். ஈழத்திலும் இதன் இன்னொரு வடிவமே இன்றும் இருக்கிறது. சமீப காலத்தில் திடீரென்று முளைத்திருக்கும் சைவ நெறி ஈடுபாடு சற்றே அடங்கியிருந்தாற்போலத் தெரிந்த இப்பிரிவினைகளை மீளப் புதுப்பிக்கிறது.

இப்படியான சூழ்நிலையில்தான் சின்னான் நாவல் அதன் வெளிப்படையான குறைகளையும் மீறி அவசியமானதொன்றாகிறது. அதனாலேயே இது வாசிக்கப்படவேண்டிய நூலாகிறது. அது சொல்லும் கருத்து நம் சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட்டு, நாம் நிகழ்த்துகின்ற இந்த இரகசிய, வெளிப்படையான சாதிப் பிரிவினைச் செயற்பாடுகள் கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாகிறது. சின்னான் கதையை எங்கேயோ நெடுந்தீவில் நிகழும் ஒன்றாகக் கருதாமல் நம் சுற்றத்துக்குள்ளேயே இது நடக்கிறது என்ற பிரக்ஞையை நமக்கு நாமே உருவாக்கவேண்டிய தேவையும் இங்கே வலிதாகிறது.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”