தவணைப் பரீட்சையில் முதல் நான்கு இடங்களையும் பெறும் மாணவர்களுக்கு வகுப்பில் பதவிகள் கிடைக்கும். முதலிரண்டு மாணவர்களும் வகுப்பின் தலைவர், உப தலைவர் ஆவார்கள். மூன்றாவது இடத்துக்கு கப்பேர்ட்(cupboard) மொனிட்டர் பதவி. அவருடைய வேலை வகுப்பிலிருக்கும் கப்பேர்ட்டினைப் பராமரிப்பது. அதன் பூட்டுச் சாவி அவர் கையில்தான் இருக்கும். அந்தக் கப்பேர்ட்டுக்குள்தான் சோக்குக் கட்டிகளும் துடைப்பானும் சில புத்தகம் கொப்பிகளும் இருக்கும். கரும்பலகையை (எங்கள் பாடசாலையில் அது சுவரில் அடிக்கப்பட்ட பச்சைப் பூச்சு) சுத்தப்படுத்துவதும் அந்த மொனிடருடைய வேலைதான். அடிக்கிறதுக்கு தடி முறித்து வருவதும் அவர்தான். நான்காவது பதவி ஸ்வீப்பிங் மொனிடர். வகுப்பைக் கூட்டித் துப்புரவாக வைப்பதற்கு அட்டவணை போட்டு அவனவன் வெள்ளனவே வந்து வகுப்பைக் கூட்டுவதை உறுதிசெய்வது அவரது பொறுப்பு. இப்பதவிகளுக்கான “succession plan”கூட அப்போது அரசியல் சட்டத்தில் வரையப்பட்டிருந்தது. தலைவர், உபதலைவர் எவராவது காய்ச்சல், அக்காளுக்கு சாமத்தியவீடு என்று லீவு போட்டுவிட்டால் கப்பேர்ட் மொனிடர் வகுப்பு மொனிடர் பதவியை எடுப்பார். ஸ்வீப்பிங் மொனிடர் கொஞ்சம் எடுவையோடு தான் டெபுயூட்டி என்று கொலரைத் தூக்கிவிட்டுக்கொள்வார். அப்போது 0.1 புள்ளியால் ஸ்வீப்பிங் மொனிடர் பதவியைத் தவறவிட்டவனுக்கு அப்படிப் புகையும். சின்னத்தனமாகத்தான் தெரிகிறதல்லவா? ஆனால் இதன் உளவியல் புரிந்தால் ஏனின்று புற்றீசல்போலக் கிளம்பி உள்ளூராட்சி உறுப்புரிமைக்காக நம்மாட்கள் அடிபடுகிறார்கள் என்பது விளங்கும்.
ஆறாம் ஆண்டு முதல் தவணைப் பரீட்சையில் தர்மசீலன் மூன்றாமிடத்தைப் பெற்று எங்கள் வகுப்பின் முதலாவது கப்பேர்ட் மொனிட்டராக வந்திருக்கவேண்டும் என்று எனது முப்பத்திரண்டு ஆண்டுகள் பழமையான மெமரி கார்டுகள் சொல்லுகின்றன. தர்மசீலன் எப்போதுமே மிக அமைதியாக இருப்பான். அதிர்ந்து பேசமாட்டான். நாங்கள் எல்லாம் டேய், மச்சான், நாயே, பேயே என்று எமக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தபின்னரும் நீங்க, வாங்க என்றுதான் அவன் பேசுவான். பின்னர் கொஞ்சமாக வாரும், போம் என்று முன்னேறியிருக்கவேண்டும். என் ஞாபகத்தில் தர்மசீலன் டேய் என்று எவரையும் விளித்துப் பார்த்ததில்லை. எங்களுக்கு அடிக்க தடி முறித்து வருமாறு வாத்தி அவனை அனுப்பினால் ஒரு நோஞ்சான் மச்சுப்போன முருக்கைத் தடியைத் தேடிக் கொண்டுவருவான். அதால அடிச்சால் தடிக்குத்தான் நோகும்.
தர்மசீலனுடைய கையெழுத்து மிக அழகாக, கொஞ்சம் ஒரு பக்கம் சரிந்து (மயூவினுடைய சரிவுத் திசைக்கு எதிர்த்திசையாக) ஒரே சீராக இருக்கும். தலையங்கங்கள் சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டிருக்கும். கொப்பிக்கு உறையிடப்பட்டு, தர்மசீலன். எஸ், 6C என்று அழகாக ஆங்கிலத்தில் எழுதி, பொலித்தீன் கவரிடப்பட்டிருக்கும். இதனாலேயோ என்னவோ அவன் நோட்ஸுக்கு வகுப்பில் பெரும் மவுசு. முந்தைய நாள் என்ன படித்தோம் என்பதை மீட்டுவதற்கு வாத்திமார் வாங்கிப்பார்ப்பதும் அவன் கொப்பியைத்தான். காய்ச்சலுக்கு லீவு போட்டவன் அடுத்த நாள் போய்க் கேட்பதும் அவன் கொப்பியைத்தான். மறுக்காமல் கொடுப்பான். கொப்பி முடிந்து ஒற்றையின்றித் திணறினால் தன்னுடையதிலிருந்து கிழித்துக்கொடுப்பான். ஆண்டு ஆறிலிருந்து உயர்தரம்வரை அவனோடு ஒன்றாகப் படித்திருக்கிறேன். பல ஆண்டுகள் ஒரே வகுப்பில் இருந்திருக்கிறோம். பல தவணைகள் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறேன். உயர்தரத்திலும் அப்பர் சிக்ஸில் அவனோடு அமர்ந்திருந்ததாக ஞாபகம். என் கையெழுத்து ஒரு சதத்துக்கு உதவாது. பலதடவை அதனை வாசிக்கமுடியாமல் அவனுடையதை வாங்கித் திரும்பவும் எழுதியிருக்கிறேன். பரீட்சைக்கு சில நாட்கள் முன்னர் கேட்டால்கூட ‘மறக்காமல் நாளைக்கு கொண்டந்திடும்’ என்று சொல்லித் தந்துவிடுவான். ச்சைக். அவன் ஒரு மனுசன். அப்பவே.
நாங்கள் ஆண்டு ஏழில் நுழைந்த சமயம் பாடசாலையில் சுப்பர் புரபிசன்ஸி (Super Profieciency) என்றொரு வஸ்துவைக் கொண்டுவந்தார்கள். பொதுவாக ஆண்டின் மூன்று தவணைப் பரீட்சைகளிலும் சராசரி எழுபத்தைந்து புள்ளிகளுக்கு மேலே பெற்றால் ஜெனரல் புரபிசன்ஸி (General Profiecieny) கொடுப்பார்கள். அதுக்கே நாக்கு தள்ளிவிடும். முதல் தவணையில் எல்லோரும் பிச்சு உதறுவோம். ஆனால் மூன்றாம் தவணை டைப்படித்துவிடும். இந்தச் சூழலில் சுப்பர் புரபிசன்ஸிக்கு சராசரியாகத் தொண்ணூறு புள்ளிகள் எடுக்கவேண்டும். அதுவும் மூன்று தவணைகளுக்கு. ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் இந்த வருடம் எப்படியாவது சுப்பர் புரபிசன்ஸி எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பிப்போம். ஆண்டிறுதியில் ஜெனரல் புரபிசன்ஸி எடுக்கவே கையிலைக்கருகே கிடந்த காரைக்கால் அம்மையார் நிலையை எட்டிவிடுவோம். நம் நிலைமை இப்படியிருக்க தர்மசீலன் சுப்பர் புரபிசன்ஸியை மிக இலகுவாக எடுத்துவிடுவான். அதுபற்றி அலட்டிக்கொள்ளவும் மாட்டான். இதனாலேயே ய அவன்மீது எவருக்கும் பொறாமை வந்ததேயில்லை. வாத்திமார் தொடங்கி அத்தனை நண்பர்களும் அவனிடம் அன்பு பாராட்டுவார்கள். அதிலும் அருமைநாயகத்தாருக்கு நம்மைக் கண்டாலே ஏனோ ஆகாது. ஆனால் தர்மசீலனிடம் மாத்திரம் அன்பாக இருப்பார்.
உயர்தரத்தில் நாங்கள் பொதுவாக பாட்டு, மினி சினிமா, வகுப்புக்கு மட்டம் அடித்து கிரிக்கட் விளையாடுவது என்று திரிந்த காலங்களிலும் அவன் எங்களோடு சேராமல் தானும் தன் பாடுமாக இருப்பான். மாணவ தலைவனாக யார் மீதும் தன் அதிகாரத்தைக் காட்டாமல் அன்பாகவும் நட்பாகவும் நடந்துகொண்டான். பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் சில வருடங்கள் அவனைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் புலம்பெயர்ந்த பின்னர் அந்தச் சந்தர்ப்பம் அமையவில்லை. இந்த இருபத்து நான்கு வருடங்களில் எப்போதேனும் நான்கு நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் தர்மசீலனின் பேச்சு வந்தே தீரும். அந்த ஆண்டு ஆறு கப்பேர்ட் மொனிட்டரிலிருந்து கதை ஆரம்பிக்கும். இனியும் தொடரும்.
Shit, I hate writing this. ஒருத்தன் செத்தாப்பிறகு இவ்வளவு நீளமாக எழுதத்தோணுகிறது அல்லவா. வாழும்போது ஒரு கோல் எடுத்தாவது கதைத்திருக்கவேண்டாமா?
பாடசாலை நண்பர்களின் வட்ஸப் குழாமில் நண்பன் கண்ணாவின் பேச்சையும் தர்மசீலனின் மனைவியின் பேச்சையும் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தேன். தர்மசீலனுக்கும் ரெனீசியாவுக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள்தான் ஆகின்றன. ஒரு மகன். ரெனீசியாவின் பேச்சைக் கேட்கையில் தர்மசீலன் இறுதிவரை அப்படியே மாறாமல் இருந்திருக்கிறான் என்று தெரிகிறது. மனைவியோடு ஒரு நாளேனும் அதிர்ந்து பேசவில்லையாம். நன்றாக சமைப்பானாம். தனக்கும் தர்மசீலந்தான் சமையல் சொல்லிக்கொடுத்தது என்கிறார் அவர். இறுதிக்காலத்தில் தான் இறந்தபின்னர் எப்படி மிக எளிமையாக மரணச்சடங்கைச் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறான். Funeral service இலக்கங்களைக்கூட எடுத்துக் கொடுத்திருக்கிறான். அதைக்கேட்கையில் ஆறாம் ஆண்டில் “மச்சான் ஒருக்கா வரலாறு நோட்ஸ தாறியா, எழுதீட்டு நாளைக்குக் கொண்டுவந்து தாறன்” என்று கேட்கையில் மனம் கோணாமல் கொடுத்த சக வயதுச் சிறுவன் தர்மசீலனே ஞாபகத்தில் வந்து போனான்.
ரெனீசியா தன் பேச்சில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகிறார். இங்கு வந்திருக்கும் உங்களில் பலர் ஆண்கள். ஒரு பெண்ணொடு எப்படிப் பழகவேண்டும் என்பதை நீங்கள் தர்மசீலனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்கிறார். தர்மசீலன் பிசிக்கலாகவோ, இமோசனலாகவோ, செக்சுவலாகவே எந்த வன்முறையையும் எப்போதுமே தன்மேல் பிரயோகித்ததில்லை, எனக்கான பிரைவசியும் சுதந்திரமும் எப்போதுமே இருந்தது என்கிறார். தர்மசீலன் இருந்த காலத்தில் என்னையும் என் மகனையும் எவ்வளவு மரியாதையோடு நடத்தினீர்களோ அப்படியே இனிமேலும் செய்யவேண்டும். அவர் இல்லாதபோதிலும் அந்த பாதுகாப்பை நான் உணரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கும் இளம் விதவைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் இதனைத்தான் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு உங்கள் வீட்டிலுள்ள, உங்களுக்குத் தெரிந்த பெண்களோடு அன்பாகவும் கண்ணியத்தோடும் பழகுங்கள். இப்படி ரெனீசியா சொல்லியதை இங்கே எழுதியதற்கான முக்கிய காரணம், நாமெல்லோரும் மீண்டும் மீண்டும் இதனை வாசித்து மண்டைக்குள் ஏற்றவேண்டும் என்பதற்காகவே. நம் தமிழ்ச்சூழலில் ஒரு மனைவியை இழந்த ஆண் இப்படிப் பேசியிருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு பெண் இப்படியாகப் பேச வேண்டிய நிலையில் நம் சமூகம் இருக்கிறது என்பதே எவ்வளவு கீழ்மை. அவருடைய வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிப் பதிவுசெய்துகொள்வதும் அதன்வழி நடப்பதும் நம் எல்லோருடைய கடமையாகும்.
முன்னமே ஒருமுறை எழுதியதுதான். அதை கண்ணாவும் தன் பேச்சில் கோடிகாட்டியிருந்தான். மரணம் எம் வாழ்வு முழுதும் கூடவேயிருந்து துரத்துகின்ற நிழல். நாம் விழித்திருக்கும்போது தூங்கும் கனவு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அது ஒளிந்திருக்கிறது. எக்கணமும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவரது மறைவு ஏதோ ஒரு கூட்டத்தை துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டேயிருக்கிறது. நம் வாட்சப் குழுக்களில் மரணங்களுக்கான RIPகளும் பிறந்தநாள் வாழ்த்துகளும் அடுத்தடுத்து விழும்போது அந்தச் செய்திகள் சுமந்துவரும் அபத்தத்தை வியந்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்வு இல்லையா?
தர்மசீலன் இன்று ஒரு நினைவு ஆகிவிட்டான். நாளை நாமும் நினைவு ஆகிவிடுவோம். காலப்போக்கில் அந்த நினைவுகளும் அழிந்துவிடும். Fight Club என்கின்ற அதி உன்னதமான திரைப்படத்தின் மறக்கக்கூடாத வரிகள் இவை.
“You are not special. You're not a beautiful and unique snowflake. You're the same decaying organic matter as everything else. We're all part of the same compost heap. We're all singing, all dancing crap of the world.”
இது புரிந்தால் வாழ்தல் எளிதாகிவிடும். என்ன ஒன்று, நாளையே இது எமக்கு மறந்தும் போய்விடும். இதுவும் ஒருவித சுடலை ஞானம்தான். அந்த ஞானம் பிணத்தை எரித்து முடித்து, சுடலையை விட்டு நீங்கி, இரண்டு ஒழுங்கை தாண்டியதுமே தன்னாலே வேதாளம்போல மீளப் பறந்துவிடும்.
அதை இயலுமானவரை பறக்காமல் பிடித்து மடியில் கட்டிக்கொண்டவர் ஞானி.
Comments
Post a Comment