Skip to main content

வாணி ஜெயராம்

 


“எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும் நேரம், யுகங்கள் கணங்கள் ஆகும், நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்” என்று மேலே போய் “வா, வா, மீண்டும் மீண்டும் தாலாட்டு” என்று பல்லவியே முதல் மாடிக்குச் சென்றுதான் ஓயும். ஆனால் அந்தப்பெடி ரகுமான் பல்லவியில் செய்தது போதாது என்று சரணத்தைத் தூக்கி அடுத்த மாடியில ஏத்திவிட்டிருக்கும். “சாம வேதம் நீ ஓது, வாடைத்தீயைத் தூவும்போது” என்று சொல்லி கூரையில் ஏறிவிட்டு, இதுக்குமேலே போனால் பேதம் என்று “வா இனி தாங்காது தாங்காது, கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக” என்று பெடி மீண்டும் பாட்டைக்கொண்டுவந்து பல்லவியில் இணைத்துவிடும். இந்தக் கொம்பசிசனை அதிகம் பேஸ் உள்ள ஒரு குரல்காரி பாடமுடியாது. சித்ராவினுடையது போன்ற மென்மையான குரல் வேண்டும், ஆனால் ஹை பிட்சில் குரல் கம்பிமாதிரி நிக்கோணும். அதுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் சுவர்ணலதா. அடுத்தது வாணி ஜெயராம்.

வாணி ஜெயராம் பாடிய பாடல்களை இலகுவில் மேடைகளில் பாடிவிடமுடியாது. “காதலின் பல்லவியோ, அதில் நான் அனுபல்லவியோ” எனும்போது அந்த “யோ”வில் கம்மென்று பிடிச்சுக்கொண்டு நிக்கோணும். அவ்வளவு மென்மையான குரலை வைத்துக்கொண்டு அந்தப் பிட்சில் அந்த நோட்டில் கொஞ்சமும் கீச்சிடாமல் இயல்பாகப் பாடுவதென்பது கடினம். அந்த ரிஸ்கை தயவுசெய்து “வாணி அம்மா டிரிபூயூட்” என்று சொல்லி யாரேனும் பாடித்தொலைத்துவிடாதீர்கள். அப்படியே பாடினாலும் பதிவு செய்து வெளியிட்டு எங்களுக்கு அரளி விதையை அரைத்துத் தந்துவிடாதீர்கள். பிளீஸ். ஒரு பாடகரின் பெருமையே அவருடைய குரல்தான். பின்னர் அவருக்கு டிரிபியூட் என்று அவர் குரலை விடுத்து உங்கள் குரலில் ஒன்றைப் பாடி வைப்பதில் என்ன பெருமை வந்துவிடப்போகிறது? அவர் பாடல்களைத் தொடர்ந்து கேட்பதும் அவற்றின் நுணுக்கங்களைப் பேசுவதுமே உண்மையான டிரிபூயூட்டாக அமையும்.

இப்போது யோசித்தால் வாணி ஜெயராமின் பெரும்பாலான பாடல்கள் உயர் சுருதியிலேயே அமைந்திருக்கின்றன. உயர் சுருதி வசப்பட்ட பாடகிகளே வேறு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். சுசீலா, ஜானகி முதற்கொண்டு நித்யஶ்ரீவரை உயர் ஸ்தாயியை ஆட்கொள்ளக்கூடிய பாடகிகள் ஏராளம். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் குரலின் ஆதார ஸ்தாயி வலுவானது. அதனால் அவர்கள் செவ்வாய்க்கிரகம்வரைக்கும் சென்று திரும்புவார்கள். நமக்கும் அது தோன்றாது. ஆனால் வாணியின் குரலின் ஆதாரம் மிக மென்மையானது. சித்ரா, மின்மினி, ஜென்சி போன்ற பாடகிகளின் குரல்களை ஒத்தது அது. ‘தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன், அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி’ என்று சித்ரா உச்சம் போகும்போது கரணம் தப்பினால் மரணம் என்ற டென்சன் கேட்கும் எமக்கும் இருக்குமல்லவா? அதற்குக் காரணம் அவரின் குரலமைப்பே அப்படித்தான். அப்படியொரு குரலை வைத்துக்கொண்டு வாணி ஜெயராம் “வான் மேகங்கள், வெள்ளி ஊஞ்சல்போல்” என்று பாடுவது மட்டுமின்றி ஊஞ்சலில் ஒரு சங்கதிவேறு போடுவார். அதுதான் அவருடைய சிறப்பு.

“அந்தமானைப் பாருங்கள் அழகு” பாடலின் சரணம் அப்படிப்பட்டது. “நடமாடும் கலைக்கூடம்” என்று சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடலில் பாடுவதாகட்டும். “பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்” பாடலில் “ஆயிரம் ஆயிரம் ஆயிரம்” என்பதாகட்டும். எல்லாவற்றிலும் இந்த விசயத்தை நாம் கவனிக்கமுடியும். இதற்குத் தகுந்தமாதிரி இளையராஜா ஒரு அற்புதமான தனிப் பாடலை இவருக்குப் பாடக்கொடுத்தார். அதுதான் “கவிதை கேளுங்கள்”. மீள ஒருமுறை அப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். பல்லவியில் சாதாரணமாகத் தொடங்கும் பாடல் சரணத்தில் அடுத்த கியரை மாற்றிவிடும். “நேற்று என் பாட்டு சுருதி விலகியதே” என்று ஆரம்பித்து சரணம் முடித்து பல்லவி தொடங்கும்போது chords மாறிடும். அது இளையராஜா! அப்படியொரு பாட்டுக்கான சூழல். அதற்கமைய கொம்பசிசன். அதன் ஆழத்தைப் புரிந்து பாடக்கூடிய திறமையுள்ள பாடகி. வேறென்ன பாட்டுக்கு வேணும்?

இப்போது வாணி ஜெயராம் பாடாத, ஆனால் அவர் குரலில் நன்றாக வந்திருக்கக்கூடிய வேறு பாடல்களை யோசித்துப் பார்க்கிறேன். உடனே ஞாபகத்துக்கு வருவது “அழகு மலராட” பாடல்தான். இவர் குரலுக்கு அது நன்றாகவே பொருந்திப்போயிருக்கும் (ஜானகி அற்புதமாகப் பாடினார் என்பது வேறு, ராஜா பாட்டில்லையா). “மலர்களே மலர்களே”கூட வாணி அற்புதமாகப் பாடியிருப்பார். “உருகியதே எனதுள்ளம், பெருகியதோ விழி வெள்ளம்” எனும்போது அந்தக்குரல் அப்படியே தேன்போல வழிந்திருக்கும் (again, சித்ரா பின்னியிருக்கிறார் என்பது வேற விசயம்).
இளையராஜாவின் பல பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அதில் ஜேசுதாஸோடு இணைந்து வாணி பாடிய ஒரு கைதியின் டிரி திரைப்படப் பாடல் என்னை மிகக் கவர்ந்த ஒன்று. சொல்லவே வேண்டாம். “என் பாடம் நான் சொல்ல, பெண் பாடம் நான் சொல்ல, வா மெல்ல, மெல்ல, மெல்ல” என்று சரணத்தில் இருவருமே நெருப்பு எடுப்பார்கள். அற்புதமான கொம்பசிசன். அதிலே வாணி ஜெயராம் பாடும் வரிகள்தான் அவர் குரலுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.

“ஏபிசி நீ வாசி, எல்லாம் என் கைராசி, ஸோ ஈசி”

இதனை இன்றுதான் எல்லாப் பாடல்களையும் கேட்டபடி எழுதுகிறேன். பிறகென்ன? உந்த மனிசி ஒண்டும் செத்துப்போகயில்ல. பிறகெதுக்கு ரிப்பும் அஞ்சலியும்?

****

வாணி ஜெயராம் பிளே லிஸ்ட்



Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .