செல்வி திரிக்ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதிதான ஒரு நாற்றத்துடன் உடல்கள் எல்லாம் கசகசத்துக்கொண்டிருந்தன. நிறையப் பட்டுவேட்டிகளும் காஞ்சிபுரங்களும் தாவணிகளும் குறுக்கும் மறுக்கும் ஓடித்திரிந்தன. பிரதான மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் நாதஸ்வரக் கோஷ்டியினரின் கச்சேரி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இரண்டு பக்திப் பாடல்களை இசைத்துவிட்டு இப்போது கண்ணான கண்ணேயும், கண்டாங்கி கண்டாங்கியும் மூத்த வித்துவான் வாசிக்க முயன்றுகொண்டிருந்தார். அருகே அமர்ந்திருந்த அவருடைய பத்து வயது ஒப்பு, பால்போச்சியைச் சூப்புவதுபோல பீப்பி முனையைச் சப்பிச் சப்பி இழுத்துக்கொண்டிருந்தது. ‘குடுக்குற மொய்யுக்கு டபுள் மடங்க்கா ஓட்டோக்கு கூலி வருது’ என்ற காஞ்சிபுரம் ஒன்றின் புலம்பல் ‘தேவன் கோயில் மணியோசை’யில் கரைந்துபோனது.
பிரதான மேடையில் ஹக்கலையிலிருந்து தருவிக்கப்பட்ட விதம்விதமான ரோசாப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் திரிக்ஷா, கால்களை ஒடுக்கி, கொஞ்சம் கூனலுடன், பவ்வியமாக அமர்ந்திருந்தாள். எறும்புக்குப் படங்கு போர்த்தியதுபோல ஒரு சேலை. கைகள் எங்கும் மெஹந்தி. அதை மறைக்கும் நகைகள். கோப்பெருந்தேவியாக நடித்த பாலர் பள்ளிச் சிறுமிக்கு வேசத்தைக் கலைக்காமல் அப்படியே சாமத்திய வீடு செய்வதுபோல இருந்தது அக்காட்சி. தேவியின் கையில் கும்பம் ஒன்றைக் கொடுத்துவிட்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் நின்ற சேடிப்பெண்கள் எவரோ மொய் வைத்துக்கொடுத்த என்வலப்பால் அவளுக்குச் சாமரம் வீசினார்கள். திரிக்ஷாவின் மாமியும் அத்தையும் அவளுக்குப் பால் ரொட்டி ஆரத்தி செய்ய முன்னே வர, திரிக்ஷா எழுந்து நிற்பதற்குச் சேடிகள் உதவி செய்தார்கள். எல்லோரும் தயாரானாலும் புகைப்படக்காரரைக் காணவில்லை.
“இந்த டொமினிக் எங்கை?”
அதற்குள் கக்கூசுக்குப் போன டொமினிக் அவசரமாக ஓடிவந்தார். அவருடைய முகம் தெப்பலாக வேர்த்திருந்தது. எல்லோரும் மறுபடியும் ஆரத்திக்குத் தயாரான கணத்தில், அவர்களை நிறுத்தச்சொல்லிவிட்டு இப்போது வீடியோக்காரர் பட்டறி மாற்றினார். திரிக்ஷா மிரட்சியுடன் சபையிலிருந்த தெரிந்தவர்களைப் பார்த்து அபத்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவளின் பெரியம்மாக்காரி ஒருவர் அருகில் சென்று, இனியும் சின்னப்பிள்ளைபோலப் பல்லுத்தெரியச் சிரிக்காமல் பாந்தமாகப் புன்னகைக்குமாறு அவளை அறிவுறுத்திவிட்டு அப்பால் போனார். நாதஸ்வரக்காரர் சுத்த தன்யாசியில் ‘தொட்டால் பூ மலரும்’ முடித்து அப்படியே ‘மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே’ என்று தாவினார்.
“இப்ப ஆரத்தி எடுக்கலாம். தங்கச்சி கொஞ்சம் வெக்கப்பட்டு சிரியுங்கோ… அப்பிடி இல்லை, சின்னதா”
டொமினிக் கேட்க திரிக்ஷா அந்தரமாகச் சிரித்துவைத்தாள். அவர் வியூ பைஃண்டரில் படத்தை பார்த்துவிட்டு முகத்தைச் சுழித்தார்.
“என்ன தங்கச்சி. வடிவா சிரிக்கத் தெரியேல்ல. அதோட உந்த பால்ரொட்டியும் முகத்தை மறைச்சிட்டுது. அம்மாமார் கொஞ்சம் ரொட்டியைக் கீழ இறக்கி மெதுவா ஆரத்தி செய்யுங்கொ. வேணுமெண்டா இரண்டு ரொட்டியைத் தூக்கி அங்கால வச்சாலும் நல்லம். இப்பிடி சுறுக்கெண்டு சுத்தினா என்னெண்டு நாங்கள் படமெடுக்கிறது?”
அவர்கள் மீண்டும் தயாரானார்கள்.
“பிள்ளை, சிரிக்கிறதுக்கும் இனி உமக்குக் கிளாஸ் எடுக்கோணுமா? கண்கள் இரண்டால் பாட்டில அந்தப் பெட்டை வெக்கப்பட்டு சிரிக்கும், பார்த்திருக்கிறீரா? என்ன நீர் படமே பாக்கிறதில்லையா? இல்லை. சரி... எதையோ செய் பிள்ளை”
டொமினிக் அதனைப் புதுப்பாட்டு என்று நினைத்துத்தான் சொன்னார். ஆனால் அந்தப்படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பின்னர்தான் திரிக்ஷாவே பிறந்தாள் என்பது ஏனோ அவருக்கு உறைக்கவில்லை. அவருக்குக் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. திரிக்ஷா ஒருவிதமாகத் தலையைச் சரித்து வெட்கப் புன்னகை உதித்தபோது அவளிடம் மீதமிருந்த மழலையும் வெகுளித்தனமும் உதடு வழி வழிந்து ஓடித் தொலைந்துபோனதை அவர் உணர்ந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் திரிக்ஷாவின் பதினொராவது பிறந்தநாள் இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சிக்கும் டொமினிக்தான் வந்து புகைப்படம் எடுத்திருந்தார். திரிக்ஷாவின் அம்மா பிள்ளைத்தாச்சியாக இருந்தபோதும் அவர்தான் படம் எடுத்தார். திரிக்ஷா பிறந்ததிலிருந்து ஒவ்வொரு முக்கிய கணங்களையும் அவர் படம் பிடித்திருக்கிறார். ஆனால் பதினொரு வயதுச் சிறுமிக்கு மாதவிடாய் வந்ததை இத்தனை பட்டவர்த்தனமாக அறிவித்து விழா எடுக்கவேண்டியதன் அவசியம் அவருக்குப் புரிவதேயில்லை. எம் குழந்தை இப்போது உடலுறவுக்கும் கர்ப்பம் தரிப்பதற்கும் தயாராகிவிட்டாள், வந்து திருமணம் செய் என்று ஊரறியப் பறையடிப்பது சட்டத்துக்குத் தெரியவந்தால் பெற்றோர்கள் கூண்டில் ஏறவேண்டிவரும் என்று அவருக்குத் தோன்றியது. பாவத்துக்குத் துணை போகாதீர்கள் என்கிறது லூக்காவின் நற்செய்தி. ஆனால் தான் இங்கே வெறும் சாட்சியம்தானே என்று அவர் அமைதியானார். புகைப்படம் எடுப்பது அவரது தொழில். கேள்வி கேட்டால் தொழில் போய்விடும் என்று அவருக்குத் தெரியும். ஊரில பத்து சாமத்தியவீடு நடந்தாத்தான் படமெடுக்கிறவனுக்கு வாழ்வு. பெண்கள் ஒவ்வொரு மாதமும் தம் மாதவிடாய்க்கு சாமத்தியவீடு செய்தாலும் வந்து படமெடுப்பதற்கு அவர் ரெடியாகவே இருந்தார்.
“தங்கச்சி. மெதுவா விஜய் எண்டு செபம் செய்யிறமாதிரி சொல்லிக்கொண்டிரும். அப்பத்தான் அளவா பல்லுத் தெரியுது. எங்கை, விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்”
திரிக்ஷா விஜய்ய்ய்ய்ய்த்துக்கொண்டிருக்க, ஆரத்தி எடுத்து முடித்த மாமியார்க்காரி வாஞ்சையோடு அவள் தலையைத் தடவி விட்டார். அதற்குச் சிறுமி விகற்பமில்லாமல் பதிலுக்குச் சிரிக்க, அந்தக் கணங்களை டொமினிக் தவறவிடாமல் உடனே புகைப்படம் எடுத்து வைத்தார். கூடவே அங்கு ஓடித்திரிந்த சிறுவர் சிறுமிகளையும் காண்டிட் ஷொட் பிடித்தார். திரிக்ஷாவை நெருங்கிச்சென்று, கமராவுக்கு லென்ஸ் மாற்றி அவளுடைய ஆபரணங்களைத் தனித்தனியாகப் புகைப்படம் பிடித்தார். அவள் கண்களை மாத்திரம் நெருங்கி புகைப்படம் எடுத்தபோது கண்களில் அவரும் கமராவும் தெரிந்ததை வியூ பைண்டரில் கவனித்து ‘சனியன்’ என்றபடி உடனேயே அதை அழித்தார். யாரோ கொக்ககோலா கொண்டு வந்து திரிக்ஷாவிடம் கொடுத்தார்கள். கொஞ்சநேரம் கழித்து ஒப்பினைக்காரப் பெண் திரிக்ஷாவை ‘காக்ரா சோளி’ அணியக் கூட்டிப் போகவேண்டும் என்றார். அவருக்கு இந்த அலங்காரத்தை முடித்துவிட்டு இன்னொரு திருமண மண்டபத்துக்குச் சென்று மணமகளுக்கு கூறை மாற்றி உடுத்திவிடவேண்டும் என்கின்ற அவசரம். நாதஸ்வரம் ‘குமுதம்போல் வந்த குமரியே, முகம் குங்குமமா சிவந்ததென்னவோ’ என்று ஊதிக்கொண்டிருந்தது.
திரிக்ஷாவின் அப்பா வேகமாக மேடைக்கு ஓடிவந்தார்.
“பலாலில இருந்து வெளிக்கிட்டாங்களாம். இன்னும் அஞ்சு நிமிசத்தில ஹெலி வந்திடும். ரமா எங்கை?”
இரண்டு பேர் திரிக்ஷாவின் தாயாரான ரமாவைத் தேடிக்கொண்டு போனார்கள். டொமினிக் தன்னுடைய ட்றோன் கமராவை வெளியே எடுத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார்.
“ஹெலி வந்திறங்கிறதை பிள்ளை தனியா அண்ணாந்து பாக்கிறமாதிரி ஒரு ஷொட் வைக்கோணும். அத்தோட பிள்ளையை அம்மாவும் அப்பாவும் ஹெலில ஏத்திறமாதிரியும் ஒரு ஷொட். நானும் கமராவில எடுப்பன். நீ ட்றோனை சரியா சுத்திச் சுத்தி எடு. ஆனால் ஹெலில அடிபட விட்டிடாடத. சனியனுக்கு லைசன்ஸ் இன்னும் எடுக்கேல்ல.”
டொமினிக் தன்னுடைய உதவியாளருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். திரிக்ஷாவின் தந்தையிடம் அவருடைய அக்காக்காரி வந்து தன்னுடைய மகனும் கூடவே ஹெலியில் செல்லலாமா என்று கேட்டார். இதனை ஒட்டுக்கேட்ட ரமாவின் அண்ணி, அவருடைய மகளும் ஹெலியில் ஏறவேண்டும் என்று உடனே கோரிக்கை வைத்தார். ஹெலியில் மூன்று பேர் ஏறவே இடமிருந்தது. மீதி மூன்று இடங்களையும் வீடியோக்காரரும் புகைப்படப்பிடிப்பாளரும் எடுத்துக்கொண்டுவிடுவர் என்று திரிக்க்ஷாவின் தந்தை அவர்களுக்குச் சொல்லிப்பார்த்தார்.
“என்ர மகள்தானே தோழி. தோழி இல்லாமல் எப்படி சாமத்தியப்பட்ட பிள்ளையை தனியா ஹெலியில ஏத்திறது?”
“இல்லை அது வந்து, அம்மா அப்பா நாங்களும் …”
“அனுருத்தன்தான் திரிக்ஷாவிண்ட சொந்த மச்சான். சொல்லக்கூடாதுதான். ஆனால் நாளைக்கு சொந்தத்துக்க செய்யிறதெண்டா நீ என்னட்டதான் பல் இளிச்சுக்கொண்டு வருவாய். அவனையும் ஏத்து”
“இல்லையக்கா … எங்கள் மூண்டு பேருக்குமே வடிவா இடமிருக்காது”
“தெரியும். உங்கட சகவாசமே வேண்டாமெண்டுதான் நாங்கள் கொழும்புக்குப் போனாங்கள். நீங்கைதான் தேடிவந்து வெத்திலை வச்சுக் கூப்பிட்டியள். இப்ப கேவலம் ஒரு ஹெலியில ஏத்த ஏலாம நிக்கிறியள். நாங்கள் நினைச்சா ஒரு ஹெலியே வாங்குவம் தெரியுமா? பாவமெண்டு செம்புத்தண்ணி குடுத்து வீட்டுக்க எடுத்தா குணத்தைக் காட்டிட்டியள்”
இந்தச் சில்லெடுப்பு விளங்காத திரிக்க்ஷாவின் பேத்தி இவர்களிடையே புகுந்தார்.
“அப்பன், அந்தக் ஹெலிகப்டரில நானும் ஒருக்கா ஏறட்டே? எனக்குக் கோட்டைக்கு மேலால ஒருக்கா ஹெலில சுத்திப்பாக்கோணும் எண்டு கனநாளா ஆசை. அது மேலயிருந்து பாத்தா நட்சத்திரம்மாதிரி இருக்குமாம்.”
“ஏனனை நீயா இப்ப சாமத்தியப்பட்டனி? அடியே ரமா, இந்தச் சனியன் பிடிச்சவள் எங்கை போயிட்டாள்? கூப்பிட்டா வந்து நிக்காது. சாமத்தியவீடும் மயிரும். வந்திட்டாளவை”
திரிக்க்ஷாவின் தந்தை சடாரென்று குரலை உயர்த்த அவருடைய அக்காவும் ரமாவின் அண்ணியும் ஒவ்வொரு திசையில் அழுதுகொண்டு சென்றார்கள். டொமினிக் தன் உதவியாளரை ட்றோனை வெளியே எடுத்துப்போய் டெஸ்ட் பண்ணுமாறு அங்கிருந்து அனுப்பி வைத்தார். வந்திருந்த கூட்டத்தினருக்கு இந்தச் சண்டையில் தமக்குச் சாப்பாடு கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை எழுந்தது. ஹெலிகப்டரின் சத்தம் இன்னமும் நெருக்கமாகக் கேட்க ஆரம்பிக்க அதற்கிணையாக ஜெனரேட்டரும் டுபுக் டுபுக் என்று இரைந்துகொண்டிருந்தது. ‘பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா’ வாசித்துக்கொண்டிருந்த நாதஸ்வர வித்துவான் இந்தச் சத்தங்களுக்கிடையே தொடர்ந்து வாசித்தால் அனுபல்லவியில் ஹம்சத்வனி கிழிந்துவிடும் என்பதை அறிந்து, நாதஸ்வரத்தைச் சரித்து வைத்தார். தவில்காரரை நிரவல் வாசிக்கச் சொல்லிவிட்டு வெற்றிலையை மடித்து வாயில் போட்டார். இப்போது ஹெலிச்சத்தம், ஜெனரேட்டர் ஒலி, தவில் ஓசை, திரிக்ஷாவின் தந்தையின் கதறல் என நாற்திசையிலிருந்தும் வந்த பேரொலிகள் சேர்ந்து பெரும் ஒலி அடிப்பை மண்டபமெங்கும் நிகழ்த்த ஆரம்பித்தன.
“மேக்கப் அறைல பாத்திங்களா? வெளிக்கிடுறாவோ தெரியா. ஹெலில ஏறேக்க உடுத்த எண்டு பச்சை சாறி வாங்கி வச்சிருந்தவா”
சிலர் மேக்கப் அறைக்கு விரைய, மண்டபத்துள் பெண்ட் எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களும் இளைஞர்களும் ஹெலியைப் பார்க்கக் கிளம்பிப்போனார்கள்.
“கோல் அடிச்சுப் பாத்திங்களா? எக்கணம் வீட்டை போயிருப்பா”
“அங்கை வரேல்லையாம். ராணியக்கா சொன்னவா”
அன்றைக்கே வேறு சில சாமத்திய வீடுகளுக்கும் திருமணங்களுக்கும் போக இருந்தவர்கள் திரிக்ஷாவை வந்து வாழ்த்தி கடித உறை கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறினார்கள்.
“எங்கையாவது சத்தமில்லாத இடத்தில போய் ஆருக்கும் போனில அளந்துகொண்டிருக்கும். நேரங்காலம் தெரியாதது.”
தனக்கு நேரமாகிவிட்டது என்று ஒப்பினைக்காரப் பெண் கத்திக்கொண்டு புறப்பட்டுப்போய்விட்டார். திரிக்க்ஷாவை, வெளியே மைதானத்திலிருக்கும் ஹெலி பாடுக்கு அழைத்துச் செல்லும் படலம் ஆரம்பித்தது. தோழிகள் எல்லாம் ஒன்று கூடினார்கள். அழுதுகொண்டு போன ரமாவின் அண்ணி, மறுபடியும் மேக்கப்பை டச் செய்து, முகம் மலரத் திரும்பி வந்தார். ஆனால் கோபித்துக்கொண்டு போன மாமியை எங்கேயும் காணமுடியவில்லை. மேடையிலிருந்து திரிக்க்ஷா அழகுப் பதுமையாக இறங்கி வர, பின்னே தோழியர் தொடர்ந்தனர். நாதஸ்வரக்காரர் அவசரமாக வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு நாதஸ்வரத்தைக் கையிலெடுத்தார். இப்படியொரு சிட்டுவேசனில் எப்படியான பாட்டு வாசிப்பது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. பின் ஏதோ நினைத்தவராய் “சந்திரனைத் தொட்டது ஆம்ஸ்ட்றோங்கா?” என்று ஆரம்பித்தார். பாவம் ஒப்பு, திடீரென்று பழக்கமில்லாத பாட்டைக் கேட்டதும் திணறிவிட்டது. இராகமும் பிடிபடாமல், சுருதியும் சுன்னாகம் போனதில், பீப்பியைத் தொடர்ந்து சப்பித் தின்று மென்றுகொண்டிருந்தது.
திரிக்ஷாவும் தோழிகளும் மண்டபத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த செங்கம்பளத்தில் நடந்து செல்கையில் கூட்டத்தினர் எல்லோரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். ஐந்தாறு பேஸ்புக் லைவ்வுகளில் லவ்வுகளும் லைக்குகளும் பறந்துகொண்டிருந்தன. ‘யு லுக் ஸோ பியூட்டிபுள்’, ‘லவ்லி’ என்று மெசேஜுகள் வரத்தொடங்கின. ‘பெண்களைக் கடைச்சரக்காகக் காட்டுதல் தவறு’ என்று ஒருத்தர் கொமெண்டு போட்டார். நடு மண்டபத்தைப் பவனி நெருங்கியதும், டீஜே ‘ஜாஃப்னா ஜாக்சன்’ ஐஸ் கட்டிப் புகை இயந்திரத்தை அழுத்திவிட, எங்கும் வெள்ளைப்புகை பரவி, தாஜ்மகால் மண்டபம் அடுத்த கணமே ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் செய்யும் சாமத்திய வீட்டு விழா மண்டபம்போலக் காட்சி கொடுத்தது. டொமினிக் இந்தக் களேபரத்துக்குள்ளும் சரியாக ஐ.எஸ்.ஓ, ஆபேர்ச்சர் செற் பண்ணி கட கடவென சிறுமிகளின் பவனியைப் படமெடுத்துத் தள்ளினார். திரிக்ஷாவை வேகமாக நடக்காமல் நளினத்துடன் நடக்குமாறு அதே பெரியம்மா மறுபடியும் நெருங்கிவந்து அறிவுரை சொல்லிவிட்டு நகர்ந்தார். ‘சந்திரனைத் தொட்டு’ முடித்த நாதஸ்வரம் இப்போது ‘சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி’ என்று வாசிக்க ஆரம்பித்தது. சபையில் இருந்த பாட்டி ஒருவர் ‘பதினொரு வயசுப் பெட்டைக்கு வாசிக்கிற பாட்டைப் பாருங்கோ, நாசாமாப் போவாங்கள்’ என்று அங்கலாய்த்தார். ஒரு லண்டன் புலம்பெயர் ரிட்டேர்ன் ஒருத்தி ‘வட் எ லோட் ஒஃப் புல்ஷிட்’ என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள். அவள் கணவன் ‘வந்த இடத்தில கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தாமல் ஆரத்தி எடுத்தமா, அட்டியலைக் குடுத்தமா எண்டிருக்கோணும்’ என்று அறிவுரை சொல்ல, அவள் ‘வட்டெவர்’ என்று தோள்களைக் குலுக்கிவிட்டு இன்ஸ்டாவுக்கு ஓடினாள்.
“இந்த மனுசி எங்கே போனது? தேவையான நேரத்தில கண்ணுக்க நிக்காது. சவம்”
திரிக்ஷாவின் பவனி, மண்டபத்துக்கு வெளியே வரவும் ஹெலி வந்திறங்கவும் சரியாக இருந்தது. வேகமாகச் சுற்றிய ஹெலியின் இராட்சத விசிறிகள் திரிக்க்ஷாவுக்கு மறுபடியும் செம்மண் புழுதியால் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவைச் செய்து ஓய்ந்தது. சற்று நேரத்தில் ஹெலிகப்டரிலிருந்து பைலட் கீழிறங்கி வந்தார். திரிக்க்ஷாவின் தந்தை அவரிடம் சென்று பவ்வியமாகப் பேசினார்.
“வி கோ டு நல்லூர் டெம்பிள் சேர். புட் புளவர் டு கதிரோ தெய்யோ. கோ டு ரவுண். தென், கோ டு மானிப்பாய் அண்ட் கம் பாக், ஓகே?”
“வட் மானிப்பாய்?”
“மானிப்பாய் மை ஹோம் ரவுண். வி வோண்டு சீ அவர் ரவுண். வி ஆர் பர்ஸ்ட் டு டூ இட்”
அவர் பெருமையுடன் சொல்ல பைலட் செல்பேசி மேப்பில் மானிப்பாய் எங்கிருக்கிறது என்று தேடினார்.
“கிவ் டென் மினிட்ஸ். மை வைப் கெட்டிங் ரெடி”
பைலட் தன்னால் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே காத்திருக்கலாம். அதற்குமேலே என்றால் மேலதிகமாகச் செலவாகும் என்றார்.
“இவள் சவத்தை எங்கைதான் போய்ச்சேர்ந்தாள்?”
இப்போது மொத்தக் கூட்டத்தினதும் கவனம் ஹெலியிலேயே நிலைத்திருந்தது. திரிக்க்ஷா ஹெலியை நோக்கி நடக்க, வழியெல்லாம் தோழியர் மலர் தூவிக்கொண்டு முன்னால் செல்ல, திரிக்க்ஷா காஞ்சிபுரம் சேலையின் இறுக்கத்தில் தத்தித்தத்தி நடந்துபோனாள். டொமினிக்கின் ட்ரோன் வேகமாக அங்கேயும் இங்கேயும் சுற்றிக்கொண்டிருந்தது.
திரிக்க்ஷாவின் தந்தைக்கு பொறுமை போய்விட்டது.
“ச்சிக். இந்த அரியண்டம் பிடிச்சவள் எங்கை போனாள்? எல்லாச் சேட்டையளுக்கும் ஒரு அளவு இருக்கு”
கக்கூசில் தேடிப்பார்த்தீர்களா என்று ஒரு அறிவாளி அப்போதுதான் குரல் கொடுக்க, ஐந்தாறு ஆண்கள் கக்கூசை நோக்கி ஓடினார்கள். போன வேகத்திலேயே ஒருவன் திரும்பி வந்து பெண்கள் கக்கூசில் போய்ப் பார்ப்பதற்குப் பெண்கள் வரவேண்டும் என்றான். உடனே சில பெண்கள் எழுந்து அங்கு விரைந்தார்கள். பைலட்டுக்கு ஒருத்தர் போய் கொக்கோகோலா வேண்டுமா என்று கேட்க, அவர் மறுத்து நேரம் ஆகிறது என்று கடுகடுத்தார். ஹெலிக்குள் ஏறி உட்கார்ந்திருந்த திரிக்க்ஷாவை ட்றோனும் டொமினிக்கும் வீடியோகாரரும் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்தார்கள். உள்ளே ஏற முயன்ற சிறுவர்களை ஒருத்தன் நின்று ‘அங்காலை போங்கடா’ என்று கலைத்துக்கொண்டிருந்தான்.
“எண்ட ஐயோ…”
பெருத்த ஓலமொன்று கக்கூஸ் பக்கமிருந்து கேட்க எல்லோரும் கக்கூஸை நோக்கித் திரும்பினார்கள். அதைத்தொடர்ந்து திடீரென்று “என்ர சிவனே” என்று ஒரு அலறல் கேட்டது. அப்புறம் “என்ர அம்மாளாச்சி”, “முருகா” என அவசர அவசரமாக கடவுள்கள் எல்லாம் கக்கூசுக்குக் கூவி அழைக்கப்பட்டார்கள். இறுதியில் “ஐயோ என்ர ரமா” என்று கதறலுடன் அத்தனையும் சேர்ந்து ஒப்பாரியாகின. ஹெலியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மொத்தக்கூட்டமும் இப்போது கக்கூசை நோக்கி ஓடியது.
“என்ன நடந்தது? ... வழியை விடுங்கோ...”
திரிக்க்ஷாவின் தகப்பன் கத்திக்கொண்டே கூட்டத்தை விலத்தியபடி நுழைந்தார். சிலர் ஏலவே அலறி மூர்ச்சையாகிவிட்டிருந்தார்கள். பலர் இன்னமும் ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். திரிக்ஷாவின் ஒன்றுவிட்ட மாமனாருக்கு வலிப்பு வந்துவிட்டிருந்தது. இன்னொருவர் பைபாசுக்கு அவசரமாகத் தயாரானார். அங்கே ரமா இருந்த காட்சியைக் கண்டதும் திரிக்க்ஷாவின் தகப்பனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது.
ரமா என்கின்ற ரமாதேவி கக்கூஸ் கொமேடில் செத்துப்போய் உட்கார்ந்திருந்தார்.
“ஐயோ ரமா… ரமாக்குட்டி… எண்ட செல்லமே”
திரிக்க்ஷாவின் அப்பா கீச்சிட்டுக் கத்தியபடி ரமாவின் உடலை நெருங்க, சிலர் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்கள். அத்தைக்காரி மட்டும்தான் ஆட்களை ஒதுங்கச் சொல்லி, பொலிசுக்கும் அம்புலன்சுக்கும் அழைப்பெடுக்குமாறு யாரையோ பணித்தார். செய்தி மெல்ல மண்டபம் முழுதும் கசியத்தொடங்க, சொல்லாமல் கொள்ளாமல் கூட்டம் கட கடவெனக் காலியாக ஆரம்பித்தது. ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’ என்று ஹெலிகப்டர் சீனுக்கு வாசித்துக்கொண்டிருந்த நாதஸ்வரக் கோஷ்டி நிலைமை சரியில்லை என்பதை அறிந்ததும் கச்சேரியை இடை நிறுத்திவிட்டு மூட்டை கட்டிக்கொண்டு பறந்துவிட்டது. ஒரு இளைஞன் அவசர அவசரமாகத் தனது யூடியூப் சானலில் ‘யாழ்ப்பாணத்து சாமத்திய வீட்டில் மர்மக்கொலை, நேரலையில் உங்கள் சுன்னாகம் சுதன்’ என்று யூடியூபில் லைவ் போட்டு பெல் ஐகானை அழுத்தச் சொல்லிக்கொண்டிருந்தான். எல்லோரும் அங்கிருந்து பறப்பதற்கு ஓட்டோக்காரர்களுக்கும் வான்காரருக்கும் மோட்டர் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கும் அழைப்பெடுக்க ஆரம்பித்தனர்.
‘யு காண்ட் பிலீவ் வட் ஹப்பிண்ட். எனக்கு உடனேயே டிக்கட்டை மாத்திப்போடுங்கோ கரன். நான் இப்பவே ஓடிவரப்போறன். என்னால இந்த கன்ரியில ஒரு செக்கனும் இருக்க ஏலாது. ஓமோம், ரமா மச்சாளைத்தான். ஆரோ கொண்டிட்டாங்கள் அப்பா. பட்டப்பகலில, கக்கூசில வச்சு, கழுத்திலயும் நெஞ்சிலயும் குத்தி. வடிவான காஞ்சிபுரம் கட்டி நகையெல்லாம் போட்டு. ஐயோ, சொல்லவே வயித்தப் பிரட்டுது. ஐ காண்ட் ஸ்டே ஹியர் எனிமோர். எங்களை மாதிரிப் படிச்ச டொக்டர் எஞ்சினியர்மாரெல்லாம் கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும் போனதாலை, ஊரே குட்டிச்சுவரா மாறிட்டுது. டிரக்சும் வாள்வெட்டும். சாச்சச்சச்சா. இவ்வளவு காலத்தில கனடாவில ஒரு குடுக்காரனை நாங்கள் பாத்தறிவமா?”
வெளிநாட்டுக்காரி ஒருத்தி கனடாவிலிருக்கும் தன் கணவனிடம் வாட்சப்பில் அப்டேட் கொடுத்துக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே ஓடினாள். அங்கே இவ்வளவு நேரமும் காத்திருந்து வெறுத்துப்போன பைலட் ஹெலிகப்டரில் அமர்ந்திருந்த திரிக்க்ஷாவிடம் வந்து “வட் கான் வி டு?” என்று கேட்டார். ஆங்கில மீடியத்தில் படிக்கும் திரிக்க்ஷாவும் ‘யு நீட் டு ஆஸ்க் மை டாட்’ என்று தெளிவாக அவருக்குப் பதில் சொன்னாள். தனக்கு நேரமாகிறது என்று பைலட் சொல்ல அவள் இறங்கிப்போகலாமா என்று அருகே படம் பிடித்துக்கொண்டிருந்த டொமினிக்கிடம் கேட்டாள். டொமினிக் இந்த அமளி எதிலுமே ஆர்வத்துடன் கலந்துகொள்வதாயில்லை. அவருக்கு இலவசமாகக் கிடைக்கும் இந்த ஹெலிப் பயணத்தைத் தவறவிடவும் இஷ்டமில்லை.
“வேண்டுமெண்டா நாங்கள் ஹெலில போய்ட்டு வருவமா? இல்லாட்டி வீண் காசுதானே?”
வீடியோகாரரும் அதற்கு ஒத்துழைக்க, மூவரையும் ஏற்றிக்கொண்டு வானவெளியில் சாமத்திய வீடு கொண்டாட ஹெலி மெதுவாக எழுந்து நல்லூரை நோக்கி ஓட்டம் பிடித்தது.
உள்ளே கழிவறைக் கொமெடில் தகதகவென பச்சைக் காஞ்சிபுரத்தில் நகை நட்டுகளுடன் ரமாவின் உடல் நிதானமாக உட்கார்ந்திருந்தது. நெஞ்சிலும் கழுத்திலும் கத்தி வெட்டுக் காயங்கள். ஆனால் சிறு துளி இரத்தக் கறைகூட எங்கேயும் இருக்கவில்லை. காயங்கள் எல்லாம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு பிளாத்திரி போடப்பட்டிருந்தது. இருபத்தொரு பவுனில் தாலி, அட்டியல், பதக்கம் சங்கிலி, சிமிக்கி என்று தகதகவென மின்னியபடி அன்றுதான் எம்பார்மிங் செய்யப்பட்டு வந்த பிரேதம்போல ரமாவின் உடல் மலர்ச்சியாகக் கிடந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் பேசுபொருளாய்த் தான் ஆகப்போகிறோம் என்ற பிரக்ஞையுடன் அத்தனை மொபைல் கிளிக்குகளுக்கும் அது மெதுவாகப் புன்னகை சொரிந்தது.
“பிள்ளை கையை மடிச்சு பூவை போடுற மாதிரி போடும். ஆனா போடாதியும். நான் சொல்லேக்க போட்டால் போதும்”
டொமினிக் ஹெலிகப்டரின் ஹெட்செட் மைக்கினூடாக திரிக்க்ஷாவுக்கு அறிவுறுத்த, அவள் புன்னகை ததும்பும் முகத்துடன் மெதுவாக பூமாரி சொரிய ஆரம்பித்தாள்.
கீழே, நல்லூர் தெற்கு வீதியில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு மன்னார்க் கழுதை, வானிலிருந்து ஒரு ரோசாப்பூ வந்து தன் குண்டியில் விழுந்ததைச் சட்டை செய்யாமல், வாலைச் சுருட்டி அடித்துவிட்டு, நிம்மதியாக மூத்திரம் போனது.
-- தொடரும் --
Comments
Post a Comment