Skip to main content

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 2


 

நிலாப்தீன் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.

கொக்குவிலுக்குப் போகும் வழியில் நாச்சிமார் கோயிலடி கடந்ததும் கொஞ்சத்தூரத்தில் அந்தப் பெட்டிக்கடை இருந்தது. அதிகாலையிலேயே சிறுவன் ஒருவன் கடையைத் திறந்து வைத்து, முன்றிலைக் கூட்டித் துப்புரவாக்கி, மஞ்சள் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து இறங்கிய நிலாப்தீன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை நெருங்கினார்.
“தம்பி, இங்கிட்டு ஜெயரத்தினம்னு ஆரும் இரிக்கினமா? அவர்ட வூடு எங்கிட்டெண்டு சொல்லமுடியுமா?”
அவன் வாளியைக் கீழே குனிந்து வைத்துவிட்டு அப்படியே காற்சட்டையை இழுத்துவிட்டபடி நிமிர்ந்தான். பொலிஸ் வாகனம் என்றதும் சற்று மிரண்டிருக்கவேண்டும்.
“ஆரு சேர்? பாட்டு டீச்சரிண்ட வீடா? ”
நிலாப்தீனுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஜெயரத்தினம் சிஐடியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு இப்போது பாட்டு சொல்லிக்கொடுக்கிறாரா என்ன?
“இல்லை … அவர் மிச்சக்காலம் வவுனியால இரிந்தாரு”
“அதான் சேர். ஜெயரத்தினம் மிஸ்ஸிண்ட வீட்டைத்தானே கேக்கிறிங்கள்? வவுனியால பேமஸா பாட்டுக்கிளாஸ் நடத்திட்டு இப்ப இஞ்ச வந்து செட்டிலாயிட்டினம்”
நிலாப்தீன் சுதாரித்தார். அவன் டீச்சர் என்று ஜெயரத்தினத்தின் மனைவியைச் சொல்கிறான் என்று தெரிந்தது.
“ஆ அவிங்கதான், அந்த மிஸ்ஸிண்ட வூட்டுக்காரர்… பொலிசில இருந்து ரிட்டயர் ஆன மனுசன்தானே?”
“அது தெரியா சேர். ஆனா டியூசனில பீஸ் குடுக்காட்டி பொலிஸ்காரன்மாதிரி டென்சன் ஆயிடுவார். எண்ட அக்காவும் அங்கைதான் சங்கீதம் படிக்கிறா. நான் போறதில்லை. சங்கீதம் எண்டா பெரிய சங்கீதம் சேர். அரபிக்குத்து எல்லாம் அவையள் படிக்க மாட்டினம். போன கிழமைகூட நாச்சிமார் கோயிலில அவையள் வந்து பாடினவை. டீச்சர்கூட எங்கட கடைலதான் செருப்பு விட்டவா.”
அவன் அடுக்கிக்கொண்டு போனான்.
“சரி, அவிங்க வூடு எதுன்னு மட்டும் சொல்லுறியா? போதும்.”
“இப்பிடியே நேரா போனீங்கள் எண்டால் தாஜ்மகால் கலியாண மண்டபம் வரும். அதுக்கு அங்காலை ஶ்ரீ இஸ்டோர்ஸ் எண்டு ஒரு பலசரக்குக் கடை இருக்கு. அதோடை ஒட்டி ஒரு ஒழுங்கை. அதுக்குள்ளதான் வீடு”
“சரி தாங்க்ஸ்”
“சாமத்திய வீட்டு கொலை கேஸா சேர்? அப்போ டீச்சர் வீட்ட பின்னேரம் கிளாஸ் நடக்காதா? ”
நிலாப்தீன் அவனை முறைத்துவிட்டுத் திரும்பி நடந்தார். வாகனத்தின் கதவைத் திறக்கும்போது அவன் புறத்தாலே கூப்பிட்டுக்கொண்டு வந்தான்.
“புதிசா போறிங்கள் சேர். வாழைப்பழம் பிஸ்கெட்டு வாங்கியோண்டு போங்கோ. எங்கட கடைலயே வாங்கலாம். கப்பல்ல ஒரு சீப்பை வெட்டவா?”
“கப்பலா?”
“கப்பல்…வெள்ளைக்காரண்ட வாழைப்பழம். புட்டுப்போல இனிக்கும் சேர். கோழிக்கூடு எண்டுவினம்”
நிலாப்தீனுக்கும் அவன் சொல்வது சரி என்றே பட்டது. வீட்டு வளவுக்குள் இருபது குலைகள் போட்டிருந்தாலும் யாழ்ப்பாணிகள் தம் வீட்டுக்கு வரும் விருந்தினர் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்காவிட்டால் மரியாதைக்குறைவாக நினைப்பார்கள் என்று உம்மா சின்ன வயதில் சொல்லியது அவருக்கு ஞாபகம் வந்தது. நிலாப்தீன் அவனிடம் ஒரு சீப்பு பழத்தை வெட்டச்சொன்னார். அப்புறம் ஒரு லெமன் பஃப் பிஸ்கெற்றையும் எடுத்து வைத்தார்.
“லெமன் பஃப் எல்லாம் பழசு சேர். இவையள் வயசான ஆக்கள். டார்க் சொக்கிலேட் வாங்கியோண்டு போங்கோ. அப்பிடியே சஸ்டேஜன் டின்னையும் எடுங்கோ சேர். டீச்சருக்கு சலரோகம். அவவுக்கு பைல்ஸும் இருக்கு. கச்சேரி எல்லாம் கதிரைல இருந்துதான் பாடுறவா. பாவம்”
நிலாப்தீன் தலையிலடித்தபடியே அவன் தள்ளிவிட்டதையெல்லாம் சேர்த்து வாங்கிக்கொண்டு வாகனத்துக்குத் திரும்பினார். அவன் சொன்ன அந்த ஒழுங்கையை எட்டுவதற்கு மேலும் இரண்டு பேரிடம் விசாரிக்கவேண்டியிருந்தது. ஜெயரத்தினத்தின் வீடு இருந்த ஒழுங்கை குறுகலாக இருந்தது. வாகனத்தை ஒழுங்கைக்குள் விட்டால் கதவைத் திறக்கமுடியாமற் போகலாம் என்று ஓட்டுநர் சொன்னார். அதனால் அவர் முகப்பிலேயே வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு, வாழைப்பழப் பையோடு ஒழுங்கைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சனப்புழக்கமே இல்லாத ஒழுங்கை அது. புதிய ஆளின் வாசம் பிடித்ததும் நாய்கள் எல்லாம் வரிசையாக உயிரை எடுக்குமாப்போலக் குரைத்தன. பொலிஸ்காரர்களையும் இராணுவத்தையும் இந்த ஊரின் நாய்கள் எப்படியோ இனம் கண்டுவிடுகின்றன, ஆனால் ஊருக்குள்ளேயே இருக்கும் திருடர்களுக்கு மட்டும் வாலை ஆட்டிவிடுகின்றன என்று அவருக்குத் தோன்றியது.
“மிஸ்டர் ஜெயரத்தினம் வீடு இதுவா?”
திடீரென்று கேற்றடியில் புது ஆளைக் கண்டதும் விறாந்தையில் கதிரை போட்டு பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த சோட்டி ‘அப்பா’ என்றபடி உள்ளே ஓடியது. சற்று நேரம் கழித்துப் பின் வளவிலிருந்து ஒருவர் முன்னே வந்தார். அவர் கையில் விளக்குமாறு இருந்தது. சட்டை அணியவில்லை. மாரித் தவக்களையைப்போல வண்டி உப்பியிருந்தது. அதே தவளை நெடுஞ்சாலை வண்டிச்சக்கரத்தில் சிக்கிச் சப்பளிந்ததுபோல குண்டி ஒடிந்து கிடந்தது. அவர் அணிந்திருந்த கழுசான் எதிலே தொங்கிக்கொண்டிருந்தது என்பதே ஒரு பெரிய இராணுவ இரகசியம்போல நிலாப்தீனுக்குத் தோன்றியது. ‘யாழ்ப்பாணத்தானுக்கு மண்டைலயும் ஒண்டுமில்ல, குண்டிலயும் ஒண்டுமில்ல' என்று சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அவருடைய உம்மா புலம்பியது இப்போதும் அவருக்கு ஞாபகம் இருக்கிறது. உம்மா சொன்னது எதுவும் வெளியே யாருக்காவது தெரியவந்தால் கதை கந்தல் என்று தன் எண்ண ஓட்டத்தை நிலாப்தீன் கட்டுப்படுத்தினார்.
“வட்? ஹவ் கான் ஐ ஹெல்ப் யூ?”
“மிஸ்டர் ஜெயரத்தினம்…”
“யெஸ்? ஸ்பீக்கிங்”
ஏதோ தொலைபேசியில் பதில் சொல்வதுபோலப் பேசிய ஜெயரத்தினத்தைப் பார்க்க நிலாப்தீன் மலைத்துப்போனார். ‘அந்தக்காலத்தில புலிக்கே தண்ணி காட்டின மனிசன். இங்கிட்டு வந்து எலிக்கு…’ என்று தோன்றிய கொஞ்சம் அசிங்கமான சிந்தனையை அவர் அடக்குவதற்குப் பிரயத்தனப்பட்டார்.
“ஹாய் … இன்ஸ்பெக்டர் ஜெயரத்தினம்…. சேர், திஸ் இஸ் நிலாப்தீன், சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்…ஹெட் குவாட்டர்ஸ்”
ஜெயரத்தினம் அவசரமாக பக்கத்து வீடுகளைத் திரும்பிப்பார்த்தார். பின்னர் நிலாப்தீனை அமைதி காக்கும்படிக் சாடை காட்டிவிட்டு, தன் கழுசான் பொக்கற்றுக்குள்ளிருந்த திறப்பை எடுத்து கேற்றைத் திறந்துவிட்டார்.
“உள்ள வாரும். நீர் வருவீர் எண்டு தெரியும் ... வெயிட் எ மினிட். தமிழ் பேசுவீரா நிலாப்தீன்?”
“வாட் டு யு மீன்?”
“ஐ மீன், சொறி, கான் யு ஸ்பீக் டமில்?”
“இல்ல, அந்த வட் இல்லை. என்ன கேள்வி சேர் இது? அந்த வட்”
“ஓ சொறி… இங்கிலீஷ்ல கதைச்சீரா, அதான் டவுட் வந்திட்டுது”
“சுத்த தமிழன் சேர் நான். ஐ மீன், தமிழ் முஸ்லிம். அல்லது முஸ்லிம் தமிழ். அது டிப்பெண்ட்ஸ். உம்மா யாழ்ப்பாணம்தான் சேர். என்ர வாப்பா மருதமுனை. தமிழ் வாத்தியார். நான் நல்லா பழமொழி, கவிதகூட எழுதுவன் சேர், சொல்லுறன் கேக்கிறிங்களா?”
“வாட்?”
“எலுமிச்சம் பழம்போல
இலங்கையெல்லாம் பொண்ணிருக்கு - இந்த
கறுத்தப் பொடிச்சியில
ஒங்குட கண்போன மாயமென்ன?”
“வாட் த ஹெல் இஸ் இட்?”
“கவித சேர்”
ஜெயரத்தினத்துக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“யூ ஆர் பஃனி நிலாப்தீன். அடக்கி வாசியும். எண்ட மனிசிவேற கறுப்பு. கேட்டா நெருப்பு எடுத்திடும்”
தயக்கமாகச் சொன்ன ஜெயரத்தினம் பின்னர் தப்பித்தவறி அவர்கள் கதைத்தது மனைவிக்குக் கேட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் சுதாரித்தார்.
“இல்லை அவ அவ்வளவு கறுப்பில்ல, பொது நிறம் எண்டுதான் சொல்லுறவா”
“ஓகே சேர்”
“வன் மோர் திங் நிலாப்தீன். நான் இப்பிடித் தமிழனா என்று கேட்ட உடனேயே ஏன் கவித சொன்னீர்? தமிழன் எண்டா கவித தெரிஞ்சிருக்கோணுமா என்ன? எனக்குக் கவித எண்டாலே கக்கூஸ் வந்திடும். அதுக்காக நான் தமிழன் இல்லை எண்டு ஆயிடுமா? நாங்கள் ஆரெண்டத ஆருக்கும் நிரூபிக்கத் தேவையே இல்லை”
“அதுக்கில்ல சேர். எனக்குமே நெறைய ஊர்ல வேலை பார்த்ததுல தமிழும் பிறந்த ஊரிண்ட ஸ்லாங்கும் வரமாட்டேன் என்னுது. சிலரு என்னோட தமிழ் முஸ்லிம் தமிழே இல்லின்னுறாங்க”
“எண்ட தமிழும்தான் யாழ்ப்பாணத் தமிழ் இல்லை எண்டுவாங்கள். அதுக்கெல்லாம் டென்சன் ஆயிடுவமா?”
“அதான் சேர். யாழ்ப்பாணத்தாரோட கொஞ்ச நேரம் பேசினாலே டென்சன் ஆயிடுறன். விட்டா அவனுகாதான் தமிழை காப்பத்தறதா நெனச்சுக்கொண்டிருக்கானுக. கடுப்பாகுது சேர்”
“ஆகக்கூடாது நிலாப்தீன். ஒரு சி.ஐ.டி ஒருநாளும் டென்சன் ஆகக்கூடாது. இவங்கள் ஒருநாள் நம்மளைத் தமிழன் எண்டுவாங்கள். அடுத்த நாள் பட்டையைப் போட்டு சைவம் எண்டுவாங்கள். நாமத்தை போட்டு வடக்கத்தியான் எண்டு சொல்லுவாங்கள். பிறகு டக்கெண்டு கறுப்பா சட்டையைக் குடுத்து திராவிடன் எண்டுவாங்கள். வெள்ளையும் சொள்ளையுமா வந்து நிண்டு மிசனரி எண்டு சொல்லி செபிப்பாங்கள். குல்லாவை போட்டு முல்லா எண்டுவாங்கள். வெட்டியா இருக்கிறவனுக்கு இதுதான் வேலை நிலாப்தீன். அதுக்கு நாங்கள் ரியாக்ட் பண்ணினால் அவனுக்கு டபிள் கண்டெண்ட். ஆக, தயவு செஞ்சு இங்கை நிக்கேக்க டென்சன் ஆயிடாதேயும். பூனைண்ட கொட்டைய வெட்டி ஆட்டுக்குக் கட்டிட்டு கிடாய் எண்டு விக்கிற ஊர் ஐஸே இது.”
“அய்யிய்யோ. நேத்திரவுதான் மட்டன் கொத்து சாப்பிட்டனே. பூனையா சேர் அது?”
“நோ நோ. இறைச்சி மறிதான். ஆனா மறி இறைச்சி எண்டு சொன்னா டேஸ்ட் இல்லை எண்டு வாங்க மாட்டான் நம்மட ஆள். அதால அதுக்கு இரண்டு விதையைக் கட்டிவிட்டா சந்தோசமா வாங்கிக்கொண்டுபோய் கறி வச்சு அடிப்பான். ஐயையோ. அவுவுக்குக் கேட்டிடப்போகுது. நான் சொல்லுறது இதைத்தான். இஞ்ச எல்லாத்துக்கும் உரிமை கொண்டாடுவாங்கள். அதுவும் படிச்சவன் எண்டால் இன்னும் கவனமா இரும். அவன் எல்லாத்துக்கையும் மூக்கை ஓட்டுவான்.”
“உள்ளது ஒரு பிள்ளைன்னா ஒன்பதுதரம் சின்னத்து வெச்சானாம் உஸ்மாயிலு. மெய்தான் சேர். அதிக்காக நாம டென்சனாயிடக்கூடாது. சொறி சேர் வந்த விசியத்தை வுட்டுட்டு வேற விசயத்துக்குப் போயிட்டம்”
“வந்த விசயமே அதுக்குத்தான். சரி விடும். ஓ யெஸ். சாமிகா கோல் பண்ணிச் சொன்னவா. நானும் அவளும் நாலாவது பட்ச். நிக்கரவெட்டியால ஒண்டா வேலை செஞ்சனாங்கள். பிறகு சண்டை நேரத்தில நான் வவுனியாவுல சிக்கிட்டன். அவள் அப்படியே வளர்ந்து டெபுடி ஜெனரலாகிட்டாள். தெரியுந்தானே. தமிழாக்கள வளர விடமாட்டாஙகள். நான் எரிச்சலில ரிட்டயர் ஆயிட்டன். கள்ளக்கூட்டம்.”
“கேள்விப்பட்டனான் சேர், ஆனால் நீங்கள் டிபார்ட்மெண்டில மிச்சம் பேமஸ். அத்தினி பேரும் உங்களச் சொல்லிச் சொல்லி பெருமையா பேசிவம். யு ஆர் எ ரோல் மொடல் சேர். பிராக்டிகல் சிலபஸ்ல உங்க ஸ்டைல்தான் பாவிக்கிறது. ஆனா பாரிங்க, இங்கிட்டு, ஒங்க ஊரிலயே ஒரித்தருக்கும் உங்களைத் தெரியேல்ல”
ஜெயரத்தினம் பெருமூச்சு விட்டார்.
“இஞ்ச ஒருத்தருக்கும் நான் சிஐடில இருந்த விசயத்தை சொல்லேல்ல நிலாப்தீன். மனிசி பாட்டுக்கிளாஸ் வைக்கிறா. நான் அவவிண்ட டியூசனை நடத்துறன். எதுக்கு சோலி? எவன் எப்ப எங்கிருந்து கிளம்பி வந்து யாரைப் போடுவான் எண்டது ஆருக்குத் தெரியும் சொல்லும்? அதுவும் நாங்கள் டிபார்மெண்டில செஞ்ச வேலையளுக்கு”
“ஞாயம்தான் சேர். தொழுகிறன் அல்லாஹ்க்காக, வைக்கோல் களவெடுத்தன் மாட்டுக்காக எண்ட கதையா நம்மிட கதை போயிடிச்சு”
ஜெயரத்தினம் நிலாப்தீனை கொஞ்சம் சந்தேகத்துடனேயே உள்ளே வரவேற்பறைக்கு அழைத்துச்சென்றார். இவர் கையிலிருந்த வாழைப்பழப் பையை அவர் கையில் கொடுத்தார்.
“அந்தப் பெட்டிக்கடை தம்பிதானே இதை உங்கட தலையில கட்டிவிட்டது?”
“ஆமா சேர். அவனுக்கு ஒங்க வூட்டை நல்லாத் தெரியும்”
“பின்ன? யாரு எண்ட மிஸிஸ தேடி வந்தாலும் அவன் சஸ்டேஜனைத் தலைல கட்டிவிடுவான். வீட்டில பத்து டின் சேர்ந்தோன, நானே கொண்டுபோய் அவனிட்டக் குடுத்து காசு வாங்கிடுவன். மனுசன் குடிப்பானா சஸ்டேஜனை? நாங்கள் எப்பவுமே ஆட்டுப்பால்தான்”
நிலாப்தீனுக்கு முகம் சுருங்கிப்போனதை ஜெயரத்தினம் கவனித்துவிட்டார்.
“நோ நோ, நீர் கொண்டுவந்ததைக் குடிப்பம். டிப்பார்ட்மெண்ட் ஆளுக்கு எங்கட ட்ரிக்குகள் தெரியோணும் எண்டதுக்காகச் சொல்லுறன்”
யாழ்ப்பாணத்தானோட புகையிலை பிசினஸ் பண்ணி போண்டியாகித்தான் அல்லாஹின் தூதர் அரபு தேசத்துக்கு ஓடினார் என்று உம்மா சொல்லுவது உடனே நிலாப்தீனுக்கு ஞாபகம் வந்தது. உம்மா ஒரு ஆச்சரிய மூட்டை. வூட்டுக்குள் இருந்து ஆயிரம் கருத்துகள் இப்படிச் சொல்வார். ஆனால் வெளியே போனால் தன் வாய்க்கும் சேத்து ஹிஜாப் அணிந்துவிடுவார். நிலாப்தீனுக்கு அந்தப்பழக்கம் இல்லை. அவ்வப்போது எதையாவது உளறி வைத்து அவர் சிக்கலில் மாட்டிவிடுவதுண்டு. யாழ்ப்பாணத்தில் நிற்கும் காலத்தில் எல்லோருடனும் இனிமேல் கவனமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். நிலாப்தீன் அமைதியாக அந்த வீட்டு ஹோல் முழுதையும் நோட்டம் விட்டார். ஒரு ஷோகேஸில் ஜெயரத்தினத்தின் மனைவி பெற்ற விருதுகளும் புகைப்படங்களும் இருந்தன. சுவர்கள் எல்லாவற்றிலும் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள். திருமணப் படங்கள். பேரப்பிள்ளைகளின் படங்கள். எங்கோ பனி விழும் ஊர்களில் இவர்கள் எல்லோரும் கூடி நின்று குளிரில் நடு நடுங்க எடுத்த படங்கள் எனத் தொங்கவிடப்பட்டிருந்தன.
“பிளீஸ் சிட் டவுன் நிலாப்தீன். இது எல்லாம் எங்கட பிள்ளையள், பேரப்பிள்ளையள். எனக்கு இரண்டும் பெட்டையள்தான். சண்டை நேரமே சந்திரிகாவைப் பிடிச்சு அவையளை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டன். வன் மரீட் அன் ஐரிஷ் மேன் யு நோ. சின்னவா ஒரு குஜராத்தியைக் கட்டிட்டாள். என்ர அவவுக்குக் கவலைதான். ஆனா மத்த சாதிக்குள்ள இருந்து பிடிச்சுக்கொண்டு வராம வெள்ளைக்காரனை பிடிச்சவரைக்கும் எனக்கு நிம்மதி. இல்லாட்டி ஊரில தலைகாட்ட ஏலாது பாரும்”
நிலாப்தீன் ‘ங்கே’ என்று முழித்தார்.
"இப்ப அவையள் எல்லாம் அங்கேயே செட்டில். நாங்களும் கொஞ்ச நாள் விசா எடுத்துப்போய் அந்தப் பிரிட்ஜுக்க பட்டரோடையும் சிக்கினோடையும் இருந்து பார்த்தம். சரிவரேல்ல. நீர் வெளிநாடு போயிருக்கிறீரா நிலாப்தீன். வெளில சும்மா முற்றத்தில பனிக்கட்டி இருக்கும் ஐஸே. அவ்வளவு குளிர். மனுசன் வாழுவானா அங்கை? நான் ரெண்டு தரம் வழுக்கியும் விழுந்திட்டன். அவ விழேல்ல. ஏனெண்டா அவ வீட்டை விட்டே வெளிக்கிட மாட்டன் எண்டுட்டா. இது சரிவராது எண்டு ரெண்டு மாசத்திலயே நாங்கள் திரும்பிட்டம். என்னதான் இருந்தாலும் எங்கட ஊரை மாதிரி வருமா சொல்லும்? டீ குடிக்கிறீரா? இல்லாட்டி கூலா தேசிக்காய்த்தண்ணி ஏதும் கரைக்கச் சொல்லட்டா? ஐஸ் கட்டி போட்டு”
“டீ போதும் சேர்”
ஜெயரத்தினம் உள்ளே போய் அந்தச் சோட்டியிடம் ஏதோ கிசுகிசுத்தது வெளியே கேட்டது. சோட்டிதான் பாட்டு டீச்சராக இருக்கவேண்டும் என்று நிலாப்தீன் அனுமானித்தார். ஜெயரத்தினம் ஏன் தன் மனைவியை அறிமுகம் செய்யவில்லை என்று நிலாப்தீனுக்கு யோசனையாக இருந்தது. அந்தப் பெண்மணியும் ஒன்றும் சொல்லாமல் குடுகுடுவென்று உள்ளே ஓடிவிட்டது. முகத்தைக்கூட சரியாகப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லமுடியவில்லை. ‘நம்ம வூட்டில பொம்பளைங்க பர்காக்குள்ள பூந்துடுவாங்க. யாழ்ப்பாணத்தில குசினிக்குள்ள பூந்துடுவாங்க’ என்ற உம்மாவின் திரு மொழிகள் மனதுள் தோன்ற, நிலாப்தீன் தன் எண்ண ஓட்டத்துக்குத் தடை போட்டார். நாடு இருக்கும் நிலையில் எதை நினைத்தாலும் தப்பாகிவிடும் சாத்தியம் இருக்கிறது.
இதற்கிடையில் ஜெயரத்தினம் திரும்பி வந்துவிட்டார். தட்டில் கேசரியும் பருத்தித்துறை வடையும் கொண்டுவந்து நீட்டினார். நிலாப்தீன் ஒரு வடையைக் கையில் எடுத்தார். ஜெயரத்தினம் படக்கென்று ஒரு கேசரியை எடுத்து வாயில் போட்டார்.
“சுகர், அவவுக்குத் தெரிஞ்சா ரிமாண்டில போட்டிடுவா”
இரகசியமாகச் சொல்லிவிட்டு பெரும் சத்தத்துடன் அவர் சிரித்தார். அவர் தன் பெருத்த வண்டியைக் குலுக்கிக்கொண்டு எதிரேயிருந்த சோபாவில் புதைந்தபோது, கிருபானந்த வாரியார் ஸ்விம்மிங் பூலில் தலைகுப்புற சரிந்தாற்போல நிலாப்தீனுக்குத் தோன்றியது. கட்டுப்படுத்தினார்.
“ஓகே நிலாப்தீன், ஜோக்ஸ் அபார்ட். என்ன விசயமா என்னைத் தேடி வந்தனீர். ஐ கான் கெஸ் இட். ஆனா நீரே சொல்லும். ஹவ் கான் ஐ ஹெல்ப் யூ?”
“உண்மைதான் சேர். ரெண்டு ஸ்பை சந்திச்சு அரை மணித்தியாலம் ஆகியும் கேஸுக்குள்ள வராமலிருக்கிறது சரியில்லை. உங்களுக்குத் தெரியும்தானே சேர். யாழ்ப்பாணத்தில கடைசி மூன்று கிழமைல நாலு கொலையள் விழுத்திரிக்கி. எல்லாமே சீரியல் கில்லிங். ஒரே ஸ்டைலில விழுந்த கொலையள். நானும் இரண்டு நாளா விசாரிச்சிட்டன். எல்லாமே குழப்பமா இருக்கு சேர். எங்கிட்டு ஸ்டார்ட் பண்ணுறதுன்னு தெரியேல்ல”
ஜெயரத்தினம் புருவத்தைச் சுருக்கி விரல்களால் மெதுவாகத் தடவினார்.
“ஐ நோ. அதுக்குத்தான் வந்தனீர் எண்டு தெரியும் நிலாப்தீன். ஆனால் கேஸுக்கு ஹெல்ப் பண்ண யோசனையா இருக்கு. எனக்கு இப்ப எழுபத்தஞ்சு வயசு. ரிட்டயர் ஆகிப் பதினைஞ்சு வருசம் ஆகிட்டுது. ஊருக்குத் திரும்பி வந்து இப்பதான் மூண்டு வருசம். பழசு ஒண்டும் வேணாம் எண்டு இப்ப மனுசிண்ட பாட்டு டியூசன், பங்சன், ஆட்டுக்கு குழை எண்டு குத்தி முறியிறன். ஒரு முழு டிபார்ட்மெண்டால செய்ய முடியாததை தனியாளா நான் எப்பிடிச் செய்யமுடியும்?”
அந்தக் கேள்வியில் தொனித்த பெருமையை நிலாப்தீன் கவனிக்கத் தவறவில்லை.
“இல்லை சேர். உங்களாலதான் முடியும். அந்த நாலு பேத்தில மூண்டுபேர் பொம்பிளையள். கனடாவிலயிருந்து இங்கிட்டு வந்து நின்ன குடும்பத்திலயும் நடந்திரிக்கி. இத விசாரிக்க என்னை அனுப்பியிருக்கிறாங்க. ஆனால் எனக்கு இந்த ஊரில எதுவுமே விளங்குதில்ல. எதப் பேசினாலும் பிரச்சனையாக்கறாங்க. யாரை நம்புறது எண்டும் தெரியேல்ல. அதான் உங்களிட்ட ஹெல்ப் கேட்கலாமென்னு”
‘படாங்’ என்று உள்ளே சமையலறையில் சில்வர் பேணி ஒன்று உருண்டது. ஜெயரத்தினம் எழுந்து போனார். சோட்டியிடம் அவர் ஏச்சு வாங்கினாற்போலத் தோன்றியது. சற்று நேரம் கழித்து ஜெயரத்தினம் டீ எடுத்து வந்தார். சில்வர் பேணியை டிரேயில் வைத்து அது ஆடாவண்ணம் அவர் கவனமாக நடக்கும்போது அதே கிருபானந்த வாரியார் இப்போது ஷோர்ட்ஸ் அணிந்து டீ கொண்டுவருவதுபோலத் தோன்றியது. இப்படியெல்லாம் நினையாதே என்று நிலாப்தீன் மறுபடியும் சொல்லிக்கொண்டார். அவர் எழுந்து சென்று டீயைப் பெற்றுக்கொண்டார்.
“அவ கொஞ்சம் டென்சனாகிறா நிலாப்தீன். தெரியும்தானே. இப்பத்தான் நிம்மதியா வெளிய போய் வாறம். திரும்பவும் பொலீஸ், செக்கியூரிட்டி எண்டா ஊருக்க இருக்கேலாது”
“விளங்குது சேர். அசைஞ்சு தின்னிது மாடு. அசையாமத் தின்னிது வூடு என்னு உம்மா சொல்லுவாங்க. அவிங்க பேச்சையும் கேக்கணும்தானே. ஆனா ஒரு கேஸ்தான். நாளைக்கு இன்னொரு வூட்டில கொலை வுழுந்தா நம்மாள நிம்மதியா இருக்கேலுமா? யோசிங்க சேர். நான் வேணும்னா மிஸ்கிட்ட பேசவா?”
ஜெயரத்தினம் யோசித்தார்.
“அதெல்லாம் வேண்டாம். எனக்கொரு பத்து நிமிசம் தாங்கோ. அவவுக்கு விளக்கமாச் சொன்னா பொறுமையாக் கேட்பா. நான் கதைச்சிட்டு, குளிச்சு வெளிக்கிட்டு வாறன். அதுவரைக்கும் நீங்கள் டிவி பாருங்கோ”
ஜெயரத்தினம் ரிமோட்டை எடுத்து டிவியை ஓன் பண்ணி யூடியூபில் வடிவேல் பகிடி ஒன்றைப் பிளே பண்ணினார். சத்தத்தை நன்றாகக் கூட்டி வைத்துவிட்டு, உள்ளே தயக்கத்துடன் திரும்பிச்சென்றார். நிலாப்தீன் டீவியில் கவனம் செலுத்தாமல் அந்த வீட்டு ஹோலிலிருந்த படங்களை மறுபடியும் நோட்டம் விட்டார். ஜெயரத்தினத்தின் ஒரு மகளும் அவள் திருமணம் முடித்த அந்தக் குஜராத்தியும் வைத்தியர்கள்போலத் தெரிந்தார்கள். அல்லது செவிலியர்களாகவும் இருக்கக்கூடும்.
“ஒண்டு சொல்வழி கேட்டுக்கொண்டு வீட்டுக்க இருங்கோ. இல்லாட்டி அவையளோடயே போயிடுங்கோ. திரும்பி வரவேணாம்”
நிலாப்தீன் காது கொடுக்கவில்லை. அடுத்த மகளும் ஐரிஷ்காரனும் ஏதோ உணவகம் நடத்துகிறார்கள்போல. பாஸ்டா கிண்ணம் ஒன்றை அந்த ஐரிஷ்காரன் இரண்டு கைகளாலும்.
“நான் என்ன மண்ணுக்கு இந்த வீட்டில இருக்கிறன்? நான் சிந்துஜாட்ட போப்போறன். குளிரில நடுங்கிச் செத்தாலும் சாவனே ஒழிய திரும்பி வரமாட்டன்”
ஜெயரத்தினத்தின் மனைவியுடைய படங்கள் மட்டும் ஏராளம் தெரிந்தன. அவர் மேடையில் பாடும்போது அழகாகவும் இளமையாகவும் தெரிந்தார்.
“எண்ட பேச்சுக்கு எப்பதான் மரியாதை இருந்துது?”
நிலாப்தீன் ரீமோட்டை எடுத்து டிவியின் சத்தத்தை மேலும் அதிகரித்தார்.
“இந்தக் கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது”
“வாசலில வந்து பாருங்களன். விளக்குமாறு பிய்யும் சொல்லிட்டன்”
வடிவேலும் சோட்டியும் போட்டி போட்டார்கள். நிலாப்தீன் மீண்டும் டிவியின் சத்தத்தை அதிகரித்தார். ஜெயரத்தினத்துக்கும் மனைவிக்கும் நிறைய வயது வித்தியாசம் இருக்கலாம் என்று தோன்றியது. குறைந்தது பதினைந்து வருடங்களாவது. ஜெயரத்தினம் எப்படி இவ்வளவு வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தார் என்று ஆச்சரியம் வந்தது. அதிக வயது வித்தியாசத்தில் யாழ்ப்பாணத்தில் வாத்திமார்தான் காதலித்துத் திருமணம் முடிப்பதுண்டு என்று அவர் உம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறார். தம்முடைய வகுப்பறையில் இருக்கும் மாணவிகள் எல்லோரும் ஏதோ சுயம்வரத்துக்கு வந்தவர்கள் என்ற நினைப்பு பல யாழ்ப்பாண வாத்திகளுக்கு இருப்பதுண்டு என்று உம்மா புலம்புவார். அவர் ஒருபோதும் கொழும்பில் யாழ்ப்பாணத்து ஆண் வாத்திமார்களிடன் நிலாப்தீனின் தாத்தாவையோ தங்கையையோ வகுப்புக்கு அனுப்பியதில்லை.
“உங்களுக்கென்ன? ஆராவது பொட்டில சுட்டா பொசுக்கெண்டு போய்ச்சேர்ந்திடுவியள். நாந்தான் அந்தரப்படோணும்”
இத்தனை படங்கள் இருந்தும் சீருடையில் நின்று ஜெயரத்தினம் எடுத்த கம்பீரமான படங்கள் அந்த வீட்டில் இல்லாதது நிலாப்தீனுக்குக் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. யுத்தகாலத்தில் டிபார்ட்மெண்டே வியந்து பார்த்த சிஐடி அலுவலகர் ஏதோ விட்னெஸ் புரடெக்சனில் மறைந்திருப்பதுபோல அஞ்சி வாழவேண்டியிருப்பது சமூக அவலம் என்று நிலாப்தீனுக்குத் தோன்றியது.
“போங்கோ, வந்திருக்கிற அந்த சோனியோட போய்க் குடும்பம் நடத்துங்கோ.”
நிலாப்தீன் கோபமாக ரிமோட்டின் வொலியூமை ஏறி மிதித்தார். அதற்குமேல் கூட்டுவதற்கு இடமில்லாமல் சோனி டிவி டிங் என்றது. நிலாப்தீன் புறுபுறுத்தார். நான் சோனின்னா நீயெல்லாம் பனங்காய்ப் பாணி.
“என்ன நிலாப்தீன்? நல்லா வடிவேல் கொமெடி பார்த்திங்களா? சத்தத்தை இவ்வளவு கூட்டி வச்சிருக்கிறீங்கள்?”
திடீரென்று ஜெயரத்தினம் பின்னால் வந்து நின்றதும் நிலாப்தீன் திடுக்கிட்டார்.
“என்ன சேர்? விளங்கேல்ல?
நிலாப்தீன் கத்த, ஜெயரத்தினம் சிரித்தபடியே வந்து ரிமோட்டை வாங்கி டிவியை அணைத்தார். சற்று முன்வரை சுவருக்கு அப்பாலே நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் பற்றிய எந்தச் சலனங்களும் ஜெயரத்தினத்தின் முகத்தில் தெரியவில்லை.
“எவ்ரிதிங் இஸ் சோல்வ்ட் நிலாப்தீன். பாத் இஸ் கிளியர். எப்பவுமே பொறுமையா எடுத்துச் சொன்னா அவையள் டென்சன் ஆக மாட்டினம். ஆனால் கள்ளவேலை பாத்தியள் எண்டா கத சரி”
“ஆனா உள்ள சத்தம் கேட்டிச்சே சேர்?”
“அது அன்பு நிலாப்தீன். கோயிலில சாமி சுத்தேக்க சங்கு ஊதிறமாதிர. இந்த ஊரில அன்பை சத்தமாச் சொல்லுவம். வம்பை சத்தம் போடாமச் சொல்லுவம்”
“நீங்க சொன்னாச் செரியா இரிக்கும் சேர்”
நிலாப்தீனுக்கு ஜெயரத்தினத்தைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. முற்றிலும் வேறாக அவர் தெரிந்தார். அவர் இடையை டெனிம் ஜீன்ஸ் ஒன்று இறுக்கப்பற்றியிருக்க மேலே போலோ டிசேர்ட் போட்டிருந்தார். கையில் அப்பிள் கடிகாரம் அணிந்திருந்தார். பிரெஞ்சுத் தாடி வைத்திருந்தார். நெற்றியில் பட்டை விபூதி, சந்தனத்தோடு ஆளைப் பார்க்கையில் ஜீன்ஸ் அணிந்து வந்து முன்னே நிற்கும் நவீன யாழ்ப்பாண வள்ளுவர்போலத் தோன்றினார்.
“கமோன் நிலாப்தீன். ஐ காண்ட் வெயிட். கொலையள் எல்லாம் நடந்து இவ்வளவு நேரம் ஆயிட்டுது. நாங்கள் இன்னும் விசாரிக்கவே ஆரம்பிக்கேல்ல”
“அத இப்பதான் சொல்லுவீங்களா சேர்?”
நிலாப்தீன் சின்னதாகத் தலையிலடித்துக்கொண்டார்.
“சரி, கொஞ்ச நேரத்தில பாட்டுக் கிளாசுக்குப் பிள்ளையள் வந்திடுங்கள். நாங்கள் சிட்டுவேசன் ரூமுக்குள்ள போய்ப் பேசுவமா?”
“சிட்டுவேசன் ரூமா சேர்? அப்பிடியெண்டால்?”
நிலாப்தீனுக்கு எந்த மண்ணுமே விளங்கவில்லை. ஜெயரத்தினம் தன்னைப் பின் தொடருமாறு நிலாப்தீனிடம் சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக கொல்லைப்புறத்துக்குச் சென்றார். அங்கே சின்னதாக ஒரு பாழடைந்த பழைய வீடு இருந்தது. ஜெயரத்தினம் அதன் கதவைத் திறப்புப்போட்டுத் திறந்து உள்ளே நுழைய நிலாப்தீனும் பின்னாலேயே சென்றார். அங்கிருந்த ஒரே யன்னலும் சாத்தப்பட்டு, வீடு பகலிலும் கும்மிருட்டாக இருந்தது. ஜெயரத்தினம் வாசல் கதவைச் சாத்திவிட்டு சுவிட்சைப் போட்டார். திடீரென்று பரவிய வெளிச்சம் நிலாப்தீனின் கண்களைக் கூசியது. அவர் கண்களைக் கசக்கிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக கண்களின் கலக்கம் அகல, அந்த அறையின் சுவர்களில் கிடந்தவை எல்லாம் அவருக்குத் தெரிய ஆரம்பித்தன. நிலாப்தீன் வாயடைத்துப்போனார்.
“என்ர அல்லாஹ்”
— தொடரும் —

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...