சிட்டுவேசன் ரூமை நிலாப்தீன் வியப்போடு சுற்றிச் சுற்றி வந்தார்.
அறைச் சுவர்கள் முழுதும் பத்திரிகைத் துணுக்குகளும் இணையச் செய்தித்தளங்கள், முகநூல், டுவிட்டர், வைபர் போன்ற சமூக ஊடகங்களில் வந்த அலசல்கள் எனப் பலவும் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொலைச் சம்பவமும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர் விபரம், பிறந்த ஊர், வாழும் ஊர், குடும்பச்சூழல், சொத்து, மதம், சாதி, கொலை நிகழ்ந்த இடம் என எல்லாத் தகவல்களும் திரட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் கோடுகளால் இணைக்கப்பட்டுக் காரணங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
“இவ்வளவு புரபைஃலிங்கையும் நீங்களே தனியாப் பண்ணிங்களா சேர்? அதுவும் நாங்கள் கேக்காமலேயே. இதில ஒரு பத்து பர்சண்டைக்கூட டிபார்ட்மெண்ட் செய்யில்லை தெரியுமா? யூ ஆர் எ லெஜண்ட் சேர்”
நிலாப்தீன் ஆச்சரியமாகச் சொல்ல ஜெயரத்தினம் பெருமிதத்துடன் புன்னகைத்தார்.
“உளவுக்கையும் உழவுக்கையும் ஒருக்கா காலை வச்சிட்டா பிறகு விடேலாது ஐஸே. எங்கை நீர்தானே பெரிய தமிழ் வித்துவான். சரியா திருப்பிச் சொல்லும் பார்ப்பம்? உளவுக்கையும் உழவுக்கையும் ஒருக்கா காலை...ம்ம்ம்”
நிலாப்தீன் தொண்டையைச் செருமிக்கொண்டு சொல்ல முனைந்தார். பின்னர் ஜெயரத்தினம் தன்னை நக்கல் அடிக்கிறார் என்பதை அறிந்ததும் அமைதியானார். ‘யாழ்ப்பாணத்தானோட அஞ்சு நிமிசம் பறைஞ்சாபுறவும் அவனிண்ட செவுளில அறையாம இரிந்தா அவன் பெரிய ஞானி’ என்று உம்மா அவருக்கு அடிக்கடி சொல்லுவதுண்டு. சிட்டுவேசன் ரூம் அமைந்திருந்த அந்தப் பழைய வீட்டுக்கு அருகே நின்ற நெல்லி மரத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு விடாமல் கத்திக்கொண்டிருந்தது. ஜெயரத்தினம் வெளியே சென்று திண்ணையில் தொங்கவிடப்பட்டிருந்த குழைக்கம்பியை எடுத்து, அதன் அரைவாசி இலைகளை உருவி ஆட்டுக்குப் போட்டுவிட்டு மீண்டும் அறைக்குள் திரும்பினார். வரும்போது அவர் கையில் இரண்டு கிளாசுகள் இருந்தன. அறை அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விஸ்கிப் போத்திலையும் கொக்கோ கோலாவையும் அவர் வெளியே எடுத்தார்.
“ஐரிஷ்கார மருமகன் கொண்டு வந்து குடுத்தது. ஒரிஜினல் ஆர்.பி.ஜி ஐஸே. இலேசில யாழ்ப்பாணிக்கு உத நான் குடுக்கமாட்டன். நீர் டிபார்ட்மெண்ட் ஆள் எண்டபடியா கேக்கிறன். உமக்கும் ஒரு கிளாஸ் ஊத்தவா? ரெண்டு பெக் போட்டீர் எண்டா இன்வெஸ்டிகேசன் பிச்சுக்கொண்டு போகும்.”
“இல்லை சேர். இஸ்லாத்தில தண்ணி அடிக்கிறது பாவம். சிகரெட் இரிந்தா தாங்கை. குடிக்கிறன்”
“சிகரட் பிடிச்சா அவ கண்டு பிடிச்சிடுவா. குடிக்கிறதும் அவவுக்குப் பிடிக்காது. நல்ல காலம் பைபாஸ் செய்தவை ஒவ்வொரு நாளும் இரண்டு மிடறு பிராண்டி அருந்தினால் நல்லம் எண்டு ஆரோ ஒரு புண்ணியவான் யூடியூபில சொன்னதால அவ கண்டும் காணாமலும் இருக்கிறா. மனுசிக்கு விஸ்கிக்கும் பிராண்டிக்கும் வித்தியாசம் தெரியாது.”
ஜெயரத்தினம் நிலாப்தீனுக்கு வெறும் கோக்கை மாத்திரம் ஊற்றிக் கொடுத்துவிட்டுத் தன் கிளாசில் மருந்துக்கு விஸ்கியையும் மீதியைக் கோக்காலும் நிரப்பினார். மேசையிலிருந்த அகப்பங்காம்பைக் கையில் எடுத்து ஒரு பேராசிரியர்போல ஒவ்வொரு தகவல்களையும் சுட்டிக்காட்டி விளக்க ஆரம்பித்தார்.
“வடிவாக் கவனியும் நிலாப்தீன். முதற் கொலை நடந்தது ஆவரங்காலில். கொல்லப்பட்ட சோபிகாவுக்கு முப்பத்தெட்டு வயது. ஹவுஸ் வைஃப். மனுசன் மோட்டர் சைக்கிள் டீலர் கடை வச்சிருக்கிறார். அடிக்கடி இவவும் போய் கடைல நிக்கிறது வழக்கம். பணக்காரர்கள். மாசச் சம்பளத்தில டிரைவரோட காரும் வீட்டில இருக்கு. சோபிகாவின் இரண்டு அக்காவும் ஒரு அண்ணாவும் வெளிநாட்டில். அவர்கள்தான் பிசினசில் முதலிடுகிறார்கள் என்று கேள்வி. யாழ்ப்பாணத்திலேயே மூன்று வீடுகள். கொழும்பில் ஒரு பிளாட். கணவன் வழியாலும் சொத்துகளும் அதிகம். மூன்று பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு பதினொரு வயது. இரண்டாவது பெடியன் பத்து வயசு. கடைசிப்பிள்ளை பிறந்தது போன வருசம். அக்சிடண்ட். வச்சிருக்கிறது மோட்டர் சைக்கிள் டீலர்ஷிப். ஆனால் யாழ்ப்பாணி வழமைபோல ஹெல்மெட் போடேல்ல”
நிலாப்தீன் தட்டில் வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறை வடை ஒன்றை எடுத்துக் கடித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார். நல்லகாலத்துக்கு இதிலே முஸ்லிம்கள் எவரும் மவுத்தாகவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அல்லது ஜெயரத்தினத்தின் வாயில் சிக்கிச் சீரழிந்திருப்பார்கள்.
“இரண்டாவதாகக் கொல்லப்பட்டவர் ஜோனி செபாஸ்தியன். கொழும்புத்துறை மனுசன். கத்தலிக். பாடும் மீனில மிட் பீஃல்டா கலக்கினவர். இப்ப நாப்பது வயது. ரெண்டு ட்றோலர் வச்சிருக்கிறார். பார்ட் டைமா புட் போல் கோச். மீன்பிடில நல்ல வருமானம். பயங்கரக் காசுக்காரர். மூன்று அண்ணாமார் பிரான்சில. கொழும்புத்துறைல இருக்கிற காணில இப்ப அஞ்சு மாடி வீடு கட்டுறினம். இரண்டு பொம்பிளைப்பிள்ளையள். மூத்ததுக்கு பதின்மூன்று. கனகாலம் கழிச்சு இவையளுக்கு இரண்டாவது பெட்டை பிறந்திருக்கு. ஆறு மாசக் கைக்குழந்தை
நிலாப்தீன் யெஸ் என்று சொன்னபடி தலையாட்டினார்.
“மூன்றாவது ஒரு பெக்கியூலியர் கேஸ். பெயர் லேனிகா. முப்பத்தி நாலு வயசு. இரண்டு வயசிலேயே முழுக் குடும்பமும் அவுஸ்திரேலியாவுக்குப் போய்ச் செட்டிலாயிற்று. அங்கேயே வளர்ந்து, அங்கேயே மாப்பிளை பார்த்துக் கலியாணம் முடிச்சிருக்கு. ஆள் எக்கவுண்டண்ட். மாப்பிள்ளையும் ஏதோ ஒரு ஓஃபிஸ் வேலைதான். இவையளுக்கு ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை. பதினொரு வயசு. கொல்லப்பட்டபோது லேனிகா ஐந்து மாசம் பிள்ளைத்தாச்சி. பங்சனுக்கு ஊருக்கு வந்த இடத்தில் இது நடந்திருக்கு”
நிலாப்தீனுக்குக் கொஞ்சம் தலையைச் சுற்றியது.
“கடைசியா, முந்தநாள் சம்பவம். தாஜ்மகால் மண்டபத்துக் கக்கூசில. செத்தவா பெயர் ரமாதேவி. ஓபின் யுனிவேர்சிட்டி லெக்சரர். மனுசன் சரவணன். பள்ளிக்கூட பிரின்சிபல். லேட் மரீஜ். காசு அவையளுக்கு ஒரு பிரச்சனையில்லை. நிறையச் சீதனம். வெளிநாட்டில சொந்தக்காரர். கொஞ்சம் லெவல் காட்டிற குடும்பம். ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை. திரிக்சா. ‘வானிலிருந்து நல்லூரானுக்கு பூப்போட்ட பூப்பெய்திய பெண்’ என்று இண்டர்னெட்டில நியூஸ் போட்டான். பாத்திருப்பீர். யூ நோ வன் திங் நிலாப்தீன்?”
நிலாப்தீன் என்னவென்று ஆர்வத்துடன் கண்களை உயர்த்தினார்.
“செத்துப்போன ரமாதேவியும் பிரக்னெண்ட்தான். ஆனா இந்த வயசில, அதுவும் லெக்சரரா இருக்கேக்க கர்ப்பமா எண்டு ஆக்கள் பழிப்பினமெண்டதால அவர் ஆருக்கும் இத வெளிய சொல்லயில்லை. மனுசனுக்குக்கூட. வெக்கத்தில மூத்திரம் வருது எண்டு சொல்லாம அடக்கி வச்சிருந்திட்டு கடைசில கழுசான் நனைஞ்சு நாறுறமாதிரி. லிட்டரலி இவவும் நாறிப்போனா. பிணமா. போஸ்ட்மோர்ட்டத்திலதான் தெரிஞ்சிருக்கு பாவம் பிள்ளைத்தாச்சி எண்டு.”
“உததான் மீன் கரைஞ்சா ஆணத்தில எண்டு உம்மா வூட்டில சொல்லுவா சேர்”
ஜெயரத்தினம் நிலாப்தீன் சொன்னதைச் சட்டை செய்யாமல் தொடர்ந்தார்.
“ஸோ, லெட்ஸ் கெட் டு த பொயிண்ட். இப்ப ஓரளவுக்கு நீர் பிடிச்சிருப்பீர். இந்த எல்லாக் கொலைகளுக்கும் நாலு பொதுவான விசயங்கள் இருக்கு”
“எனக்கு இரண்டுதான் தெரியுது சேர். நீங்களே எதுக்கும் எல்லாத்தையும் சொல்லுங்கோ”
ஜெயரத்தினம் விஸ்கி கலந்த சோடாவை ஒரு மிடறு குடித்துவிட்டு அறைக்குள்ளிருந்த கரும்பலகையில் ஒவ்வொரு புள்ளிகளாக எழுதத்தொடங்கினார்.
நம்பர் வன் : செத்த எல்லாருமே பெரிய பணக்காரர்.
நம்பர் டூ: அத்தினை பேரும் முப்பத்தஞ்சு வயசுக்கும் அம்பத்தஞ்சு வயசுக்கும் இடையில இருக்கிற ஆக்கள்
நம்பர் திரீ: எல்லாருக்குமே ஒண்டு கைக்குழந்தைகள் இருக்கு. இல்லாட்டிப் பிள்ளைத்தாச்சிகளா இருந்திருக்கினம்.
முக்கியமா நம்பர் போஃர்: எல்லாக் கொலைகளும் அவர்கள் வீட்டில நடந்த சாமத்தியச் சடங்கின்போது நிகழ்ந்திருக்கு.”
நிலாப்தீன் இடை மறித்தார்.
“இல்ல சேர். ஜோனி செபஸ்தியன் வீட்டில நடந்தது சாமத்திய வீடா இரிக்க சான்ஸ் இல்லை. அவிங்க கிரிஸ்டியன்தானே?”
ஜெயரத்தினம் சிரித்தார்.
“ஜோனி செபஸ்தியன் வீட்டிலகூட அண்டைக்கு சாமத்தியவீடுதான் நடந்தது. கிறிஸ்டியன்ஸ் சாமத்திய வீட்டில வெள்ளை அக்கோபா துணில பிள்ளைக்குச் சட்டை போடுவினம். வெள்ளைக்காரி கலியாண வீட்டில உடுத்திறதுமாதிரி. பாஃதர் வந்து பெண்ணை ஆசீர்வதிப்பார். அவர் போனாப்பிறகு காஞ்சிபுரம் கட்டி அங்கேயும் ஆரத்தி எல்லாம் நடக்கும். அவையளும் சாத்திரம் எல்லாம் பாப்பினம். அடிப்படைல அவ்வளவும் பனங்கொட்டைதான் நிலாப்தீன். அதுக்குப் பிறகு நீங்கள் கொட்டைக்குப் பட்டையைப் போட்டாலும், சிலுவையப் போட்டாலும், ஏன் தொப்பியைப் போட்டாலும் குணத்தை மாத்தேலுமா என்ன?”
“உதத்தான் அரபிக் குதிரைன்னாலும் பிறவிக்குணம் போகாதுன்னு உம்மா சொல்லுவா. ஆனா நான் எதுவும் சொல்லமாட்டன் சேர். நீங்க என்னித்த வேணும்னாலும் பேசலாம். நான் பேசினா கொமுயூனல் புரப்ளம் ஆயிடும். எனக்கெதுக்கு வீண் வம்பு?”
நிலாப்தீன் காலியாக இருந்த டிரேயில் பருத்தித்துறை வடையைத் தேடி ஏமாந்தார். ஜெயரத்தினம் அதைக் கவனிக்காமல் தொடர்ந்து பேசினார்.
“பிறகு இந்த லேனிகா. அபத்தத்தை பார்த்தீங்களா நிலாப்தீன். வெளிநாட்டில வளர்ந்து படிச்ச பெட்டை. தமிழே அதுக்கு தகதிமிதோம். ஆனா அதுகள்கூட பிள்ளைக்கு சாமத்தியவீடு செய்ய ஊருக்கு வந்திருக்குதுகள். வாட் எ புல் ஷிட்? சண்டைல தப்பிறதுக்கு அகதியா ஓடின பெட்டை. இப்ப தன்ர பெட்டைக்கு சாமத்திய வீடு செய்ய ஊருக்கு திரும்பி வந்த இடத்தில, பாவம் கொல்லப்பட்டுக் கிடக்கு. பதெடிக் இல்லியா?”
“சுண்டங்காயைத் தின்னுவானேன்? சூடெழும்பிச் சாவானேன்?”
“இதுவும் உங்கட உம்மா சொன்னதா நிலாப்தீன்?”
கேட்டபடியே ஜெயரத்தினம் திரும்பிப்பார்த்தார். பருத்தித்துறை டிரே காலியாகிக் கிடந்ததைக் கவனித்து, அதை எடுத்துக்கொண்டு ‘அம்மா’ என்றபடி பெரிய வீட்டுக் குசினிக்குப் போனார். திரும்பியபோது டிரேயில் பருத்தித்துறை வடையோடு வாழைப்பழ சீப்பு ஒன்றையும் கொண்டுவந்தார்.
“ஆக நத்திங் இஸ் ரண்டம் நிலாப்தீன். இந்த எல்லாக் கொலைகளுக்குமான மோட்டிவ் ஒன்றாத்தான் இருக்கவேண்டும். அவற்றைச் செய்ததும் ஒரே ஆளாகத்தான் இருக்கோணும். அல்லது அந்தாள் ஏதாவது குரூப்புக்குக் காசு குடுத்துச் செய்திருக்கலாம். ஆனால் பட்டப்பகலில் செய்யப்பட்ட கொலைகள் என்பதால் தனியான ஒரு சைக்கோ கொலையாளியாக இது இருக்கத்தான் சான்ஸ் அதிகம். ஒரு அதிர்ச்சி அலையைக் குடுக்கோணும் எண்டதும் இஞ்ச இன்னொரு மோட்டிவ்”
“கொலையாளி சமூகத்துக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல டிறை பண்ணுறானோ?”
ஜெயரத்தினம் சிரித்தார்.
“இரண்டு விசயங்கள். கொலையாளி ஆண் என்று நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனா ஆணா இருக்கத்தான் சான்ஸ் அதிகம். இப்போதைக்கு அப்பிடியே வச்சிருப்பம். அடுத்தது சமூகத்துக்கு மெசேஜ் என்றால் கொலை செய்யத் தேவையில்லை நிலாப்தீன். பேஸ் புக்கில ஒரு கொலை நாவலை எழுதிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம். இது தனிப்பட்ட பிரச்சனையாத்தான் இருக்கோணும். ஒரு பெப்புக்காக வேண்டுமென்றால் சமூகப் பிரச்சனை என்று சில கில்மாக்களைச் சேர்த்திருக்கக்கூடும். கருணாநிதி ஈழத்தமிழருக்காக இண்டர்மிட்டண்ட் டயட் செய்ததுபோல”
மிக்சரில் கிடந்த மரவள்ளிப் பொரியலை நிலாப்தீன் கடித்தார்.
“இது மிச்சம் கிரிஸ்பியா நல்லா இரிக்கி சேர். வூட்ட போகேக்க ஒரு பக்கெற் வாங்கிக்கொண்டு போனும்”
“பொரிக்கிற எண்ணைல பிளாஸ்டிக் கொக்கோ கோலா போத்திலை போடுதுகள். அதாலதான் மரவள்ளிப் பொரியல் மொறுமொறு எண்டு வருதாம் நிலாப்தீன். யாழ்ப்பாணிஸ் யு நோ. பனம்பாணியில பெண்டரைத் தோச்சுப்போட்டு கட்டெறும்பிட்ட கடி வாங்கின ஆக்கள்”
நிலாப்தீனுக்கு அப்போது கவட்டுக்குள் கட்டெறும்பு ஊருமாப்போல இருந்தது. ஜெயரத்தினம் கரும்பலகையின் ஒரு பக்கத்தில் பெரிதாக இரண்டு கேள்விக்குறிகளைப் போட்டார்.
“ஒன்று யார் இந்தக் கொலையைச் செய்தது எண்டது. மற்றது ஏன் இந்தக் கொலையைச் செய்தது எண்டது. இரண்டில ஒண்டைக் கண்டுபிடிச்சாலும் மற்றதைக் கண்டுபிடிப்பது இலகுவாகிவிடும்”
“தெரியும் சேர். ஆனா அதுதானே பிரச்சனை”
ஜெயரத்தினம் பெருமையுடன் ஒரு புன்னகை பூத்தபடி விஸ்கியை இன்னொரு மிடறு குடித்தார். பிறகு பெரிதாக இன்னொரு கேள்விக்குறியை இட்டார்.
“இது என்ன சேர்?”
“அடுத்தது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் நாங்கள் இப்போ கண்டுபிடிக்கோணும்.”
“விளங்கேல்ல சேர்”
“அடுத்ததா கொலையாளி யாரைக் கொல்லத் திட்டம் போடுறான் என்று கண்டுபிடிக்கோணும். அதைப் பிடிச்சிட்டம் எண்டால் கொலையாளியைப் பிடிச்சமாதிரித்தான். அனேகமா அது ஒரு சாமத்திய வீட்டிலதான் நடக்கப்போகுது”
“அப்டின்னா எல்லா சாமத்திய வூட்டிலயும் மப்டில பொலிசை போடுவமா சேர்?”
“அதுக்கு உங்கட லங்கா பொலிஸ் எண்ணிக்கை காணாது நிலாப்தீன். யாழ்ப்பாணத்திண்ட சனத்தொகையை விட சாமத்திய வீடுகளிண்ட எண்ணிக்கை அதிகம் தெரியுமா? மப்டில போடுறதுக்கு இந்தியாவிலயிருந்து அமைதிப்படைமாதிரி சாமத்தியப்படையை எடுப்பிச்சாத்தான் இது நடக்கிற காரியம்.”
“என்ன செல்லிறீங்க சேர்?”
“இது சாமத்திய சீசன் நிலாப்தீன். ஐ மீன் சாமத்தியப்படுற சீசன் இல்லை. ஆனா இந்தக் காலத்திலதான் வெளிநாட்டுக்காரர் லீவு எடுத்து வாறவை. அதால நிலுவைல வருசக்கணக்காக காத்துக்கொண்டிருந்த சாமத்திய வீடுகள் எல்லாம் இப்பதான் ஊரில நடக்கும். அதுவும் கோவிட்டுக்குப் பிறகு வெயிட்டிங் லிஸ்ட் நல்லாக் கூடிட்டுது. எனக்குத் தெரிஞ்ச அலுக்கோசுக் குடும்பம் ஒண்டு. இஞ்ச கிடந்து கஷ்டப்பட்டிட்டு, இப்ப வெளிநாடு போய் நாலு காசு பாத்திட்டினம். மூத்த மகளுக்கு கலியாணம் செய்ய ஊருக்கு வந்திருக்கிறினம். வந்த இடத்தில கலியாணப் பொம்பிளைக்கு சாமத்திய வீட்டையும் சேர்த்துச் செஞ்சிருக்குதுகள். மாப்பிள்ளைதான் வந்து தண்ணி வாத்தது. ஆனால் அவையள் ரெண்டு பேரும் அதுக்கு முதலே தனியா நுவரேலியாவுக்குப் போய்ட்டு வந்திட்டினம். யாழ்ப்பாணத்தார்ட விசர்க்கூத்துகள் கடைசில செத்த வீட்டில பிணத்துக்கு சாமத்திய வீடு செய்யிறதில போய் முடியும் பாரும்”
“இதுகளப் பார்த்து நீங்கள் ஒண்டுமே செய்ய மாட்டீங்களா சேர்”
“ஏன் இல்லை? நல்லாவே செய்வம். கிட்டடிச் சொந்தம் எண்டா பத்தாயிரம் ரூவா மொய். கொஞ்சம் தூரத்துச் சொந்தம் எண்டா ஐயாயிரம். பக்கத்து ஒழுங்கை ஓட்டோகாரரிண்ட மகள் எண்டா இரண்டாயிரம் ரூவா. மொய்யைக் குடுத்து வாழ்த்தீட்டு, குடுத்த காசுக்கு வடிவாச் சாப்பிட்டிட்டு, சிலவேளை டேக் எவே பார்சல் எடுத்திட்டும் வாறது”
“பேரைக் கேட்டா சுல்தானு. செயலைப்பார்த்தா சைத்தானு மாதிரில்லா இங்கிட்டு விசயம் இரிக்கி”
“சரி விடும். விசயத்துக்கு வருவம், நாங்கள் எங்கட ஸ்கோப்பை இன்னும் சின்னதா சுருக்கப் பார்க்கலாம். எல்லாக்கொலையும் வலிகாமத்திலதான் நடந்திருக்கு. சிலது வீடுகளில. சிலது மண்டபத்தில. ஆனால் எல்லாருமே பெரிய கைகள். காசுக்காரர்கள். ஷோ காட்டிறதில ஆர்வமான குடும்பங்கள். அனேகமாக எல்லாருமே பொம்பிளையை வீட்டிலயிருந்து மண்டபத்துக்குக் கொண்டுவர பென்ஸ் கார்தான் வாடகைக்கு எடுத்திருக்கினம். வீட்டில சாமத்திய வீடு நடந்தாலும் பெட்டையை கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் தேங்காய் உடைக்க வைக்கவும் பென்ஸ் கார்தான் அவையளுக்கு வேணும். நான் இப்ப பென்ஸ் வாடகைக்கு விடுற டீலரிட்ட விசாரிச்சு, அடுத்த இரண்டு கிழமைக்கான புக்கிங்க்ஸ கண்டுபிடிச்சிட்டன். மொத்தமா இருபத்து நாலு சாமத்தியவீட்டுக் கச்சேரிகள் புக்காகி இருக்கு”
“அம்பிட்டா சேர்?”
“அதில இரண்டு வடமராச்சில, மூன்று தென்மராட்சி. ஒண்டு எழுவைதீவு”
“எழுவைதீவா? அங்கிட்டு எப்டி பென்சு போகும்? அங்கில்லாம் சனங்க இன்னும் இருக்கா சேர்?”
“இருக்காவா? சீசன்ல பார்த்தா, நானூறு வருசத்துக்கு முன்னால பறங்கி வந்து இறங்கினமதிரி ஊர் இருக்கும் ஐசே. எல்லாம் வெளிநாட்டு எழுவை தீவான்ஸ். அரைவாசி இப்ப வெள்ளைல கலியாணம் கட்டி, பரிகாரத்துக்கு ஊர்க்கோயிலுக்கு அதுகளையும் கூட்டிவருங்கள். ஊரே சின்னக் கோவாமாதிரி மாறிடும். பென்ஸ் கார் போக றோட்டு அகலம் காணாது எண்டு வேலியைப் பிரிச்சு நடுறாங்கள். ஆர்மி அந்தக்காலத்தில செயின் புளக் போறத்துக்கு வேலியைப் பிரிச்சமாதிரி.”
ஜெயரத்தினம் கண்ணடித்தார். யாழ்ப்பாணத்தவர்களது ஊர் அரசியலில் தலையிடவேண்டாம் என்று உம்மா எச்சரித்தது நிலாப்தீனுக்கு ஞாபகம் வந்தது. அவர் எதுவுமே பேசாமல் வாழைப்பழம் ஒன்றை உரித்துச் சாப்பிட்டார்.
“எனிவே, பாக் டு த பொயிண்ட், இப்ப பதினெட்டு பேர் மிச்சம் இருக்கினம்.”
“இல்லை சேர். எனக்கு இது செரியா படல. பென்ஸ் இல்லாடி பி.எம்.டபிள்யூ, ஹம்மர் லிமோகூட கொழும்பில வாடகைக்கு எடுக்கலாம். கொலை செய்யப்பட்ட ரமாதேவி வூட்டில ஹெலியே வாடகைக்குப் புடிச்சிருக்காங்க. ஹெலியைப் புடிக்கிற உங்காளுங்களுக்கு லிமோ பிடிக்கிறது விசயமே இல்லை. நாம போற ஆங்கிள் தப்பு”
ஜெயரத்தினம் புருவங்களைச் சுருக்கி யோசித்தார்.
“ஓகே நிலாப்தீன். எதைச் சொன்னாலும் இல்லை எண்டு மறுக்கிறது பெரிய விசயமில்லை. ஐடியா குடுக்கோணும். யோசியுங்க நிலாப்தீன். ஏதாவது கிளூ சொல்லுங்கோ”
ஜெயரத்தினம் சொல்லியபடியே காலியான தன் கிளாஸில் விஸ்கியை மருந்துக்கு ஊற்றி மீதியைக் கொக்கோ கோலாவால் நிரப்பினார். வெளியே கட்டப்பட்டிருந்த ஆடு திரும்பக் கத்த ஆரம்பித்தது. ‘இது ஒண்டு வேறை’ என்று சலித்தபடி ஜெயரத்தினம் வெளியே சென்று அதற்கு மீதிக் குழையை உருவிப் போட்டுவிட்டு வந்தார்.
“குட்டித்தாச்சி ஆனதிலயிருந்து இப்பிடித்தான். எப்பப்பார்த்தாலும் தீனிக்குக் கத்திக்கொண்டிருக்கு.”
ஜெயரத்தினம் சொல்லும்போது நிலாப்தீனின் கண்கள் பளீரென மினுங்கின. அவர் குதூகலத்தில் கத்தினார்.
“சேர் …. என்ன சொன்னீங்க?”
“எங்கட ஆடு குட்டித்தாச்சி எண்டு … ஏன் கேக்கிறீர்?”
“செத்த எல்லா வூட்டிலயும் ஒன்னு கைக்குழந்தைங்க, இல்லினா பொம்பளை எல்லாம் புள்ளத்தாச்சிங்களா இருந்திருக்காங்க சேர்.”
ஜெயரத்தினத்துக்குப் புரிந்துவிட்டது. அவர் விஸ்கியை மடமடவெனக் குடித்துவிட்டு ‘ஆய்க்’ என்று மேசையில் வைத்தார்.
“நெருப்பு நிலாப்தீன்”
“சிகரெட்டுக்கா சேர்?”
“இல்லை, இப்பதான் நெருப்பா உங்கட மூளை வேலை செய்யுது. ஆக நாங்கள், இவர்களில் எத்தினை பேர் வீட்டில கைக்குழந்தைகள் இருக்கெண்டு பாக்கோணும். இல்லாட்டி யாரெல்லாம் பிள்ளைத்தாச்சி எண்டு.”
“ஆனா சாமத்திய வீட்டுக் கொலைகளுக்கும் கர்ப்பத்துக்கும் என்ன சம்பந்தமா இருக்கும் சேர்? கள்ளக்காதலன் பிரச்சனையா?”
“சான்ஸ் இல்ல நிலாப்தீன். எங்கட கலாசாரத்தில ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். அத்தோட ஆண், பெண் இரண்டு பேருமே இங்கே கொல்லப்பட்டிருக்கினம். தவிர லேனிகா வெளிநாட்டில இருந்து இப்பத்தான் ஊருக்கு வந்தவா. யாழ்ப்பாணத் தமிழன் வீரன்தான். ஆனா உலக அளவில இப்பிடிக் கட்டிடம் கட்டிற அளவுக்கு ஆள் ஸ்ட்றோங் இல்லை. உள்ள வெறும் சுண்ணாம்புக்கல் ஐஸே”
“ஓகே சேர். ஆனா இதுவெல்லாம் தற்செயல்போலத் தெரியேல்ல”
“ஓம், நிச்ச்சயமா தற்செயல் இல்லை. நாங்கள் எல்லா வீட்டிலயும் விசாரிப்பம். யார் வீட்டில கைக்குழந்தைகள் இருக்கு. யார் வீட்டில பெண்கள் பிரக்னண்டா இருக்கிறினம் எண்டு”
“ஆனா அதை எப்பிடிக் கண்டுபிடிக்கிறது சேர்? ஒவ்வொரு வூட்டில போயி நீங்க புள்ளத்தாச்சியான்னு கேக்க முடியுமா? இல்ல பக்கத்து வீட்டிலதான் கேக்கேலுமா?”
“கேட்டாலும் உண்மை வராது. யோசியுங்கோ நிலாப்தீன். இவையள் எவருமே இளம் தம்பதிகள் அல்ல. வயசுக்கு வந்த பொம்பிளைப்பிள்ளை வீட்டில இருக்கு. எல்லாருமே லேட் கொன்சீவ்ட். அதால மாட்டரை அடக்கித்தான் வாசிப்பினம்.”
“எனக்கு விளங்கேல்ல சேர், பிள்ளைக்கு பீரியட் வந்ததை உலகமெல்லாம் அறிவிச்சு ஷி இஸ் ரெடி டு ஹாவ் எ செக்ஸ் என்று ஆக்களக் கூப்பிட்டுச் சொல்ல முடியுது. ஆனா தாங்கள் கொன்சீவ் ஆனதுக்கு வெக்கப்படுவினம் எண்டா என்ன இது அபத்தம்?”
“ஷட் அப் நிலாப்தீன். எங்களை இன்சல்ட் பண்ணாதீங்க. இது எங்கட கலாச்சாரம். பண்பாடு. அதை நாங்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியலயும் வளர்த்தெடுப்பம். சும்மா முற்போக்கு எண்டு எங்களுக்கு தண்ணி காட்டாதீங்கோ. இப்பிடி எல்லாப் பண்பாட்டையும் ஒழிச்சிட்டு நாங்கள் என்ன அம்மணமா நிக்கிறதா? உண்மைல பிள்ளைதான் தன்ர சாமத்திய வீட்டுக்கு ஆசைப்படுது. நாங்கள் செஞ்சு வைக்கிறம். அவ்வளவுதான்.”
“என்ன சேர் நீங்களே மாத்திப் பேசுறீங்க? அப்பிடின்ன அடுத்த நாளே பிள்ளை பக்கத்து வீட்டுக்காரனை கூட்டிக்கொண்டு அறைக்குள்ள போனா நீங்க வுடுவீங்களா?”
“அசிங்கமா பேசாதீம் நிலாப்தீன். அது சின்னப்பிள்ளை. அதுக்கென்ன தெரியும்? நாங்கள்தான் நல்லது கெட்டதை சொல்லி விளக்கவேணும.”
நிலாப்தீனுக்குத் தலையைச் சுற்றியது. அவர் கோபத்துடன் விஸ்கிப் போத்திலை அப்படியே தூக்கிக் கடகடவென்று அண்ணாந்து குடித்தார். பின்னர் அதை மேசையில் அடித்து வைத்துவிட்டு எழுந்து வெளியே போனார். ஜெயரத்தினத்துக்கு நிலாப்தீன் எங்கு போகிறார் என்பது தெரியவில்லை. துப்பு துலக்க வந்த இடத்தில் சமூகக் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்தால் இப்படித்தான் வந்தவர்கள் வெளியேறிவிடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. அப்போது நீலாப்தீன் போன வேகத்திலேயே உள்ள வந்தார்.
“உந்த ஆட்டுக்கும் சாமத்திய வூடு பண்ணிங்களா சேர்?”
“அந்தளவுக்குப் போகேல்ல. ஆனா பொருத்தம் பார்த்து ஒரு கிடாயைக் கூட்டிக்கொண்டு வந்து, அமாவாசை கழிஞ்சு நாலாம் நாள் வளர் பிறைல, இரண்டு பேரையும் சேர்த்துக் கட்டி வைக்கிறனாங்கள். அப்பத்தான் கிடாய்க்குட்டி பிறக்கும், இறைச்சிக்கு விக்கலாம்.”
ஜெயரத்தினம் கண்ணடித்தபடியே சொல்ல நிலாப்தீன் ரிலாக்ஸ் ஆகி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.
“ஓகே, பாக் டு த பொயிண்ட். ஆக வீடுகளில போய் நீங்கள் பிள்ளைத்தாச்சியா எண்டு குவாலிடேடிவ் சர்வே செய்துகொண்டிருக்க ஏலாது. இதுக்கு வேற ஐடியா இருக்கு”
“என்னது?”
“யாழ்ப்பாண டவுனுக்குள்ள இரண்டு பேமசான கைனோகோலஜிஸ்டுகள் இருக்கிறினம். அவையளிண்ட கிளினிக்கிலதான் ஸ்கானிங் மிசினுகளும் இருக்கு. அவையளிண்ட பேசண்ட் ரெக்கோர்டுகளை எடுத்திட்டம் எண்டால் நாங்கள் இந்த லிஸ்டில யாராவது பிரக்னண்டா எண்டு கண்டுபிடிச்சிடலாம்”
“நோ வே சேர். எல்லாக் கர்ப்பம் தரித்தவர்களும் கைனோகோலஜிஸ்டுகளிட்ட போகவேணும் எண்டதில்லை. என்ர மனிசிக்கு மிட் வைஃப்தான் புள்ளபேறு பார்த்தா”
“அதெல்லாம் அந்தக்காலம். இது யாழ்ப்பாணம் நிலாப்தீன். எங்களுக்கெண்டு ஒரு தேச வழமை இருக்கு. காசிருந்தா நாங்கள் காய்ச்சலுக்கும் கான்சர் ஸ்பெசலிஸ்டிட்ட செக்கண்ட் ஒபினீயன் கேப்பம். ஆனா கான்சர் வந்தா பரியாரிட்ட ஆமணக்கு எண்ணேயை வாங்கித் தலைல ஊத்துவம். கர்ப்பம் எண்டா கைனோகோலஜிஸ்டிட்ட போனாத்தான் எங்களுக்கு நிம்மதி. டவுட்டே கிடையாது. இவையள் எல்லாரும் கிளினிக்குக்குக் கட்டாயம் போயிருப்பினம்”
“ஓகே சேர், ஆனா கிளினிக்கில பேசண்ட் லிஸ்ட் எடுக்கிறதெண்டா சிக்கல். கோர்ட்டில பெர்மிசன் வாங்கோணும். பிரைவசி லோ”
“நான்தான் டிபார்ட்மெண்டிலயே இல்லையே நிலாப்தீன். எங்கட கலாச்சாரம் ஒரு திறந்த புத்தகம். இஞ்ச பிரைவசிக்கு எந்த இடமும் இல்லை. எங்கட ஓட்டோக்காரத் தம்பி மெல்வினிட்டச் சொன்னாப்போதும். பத்தாயிரம் ரூவாய்க்கு அவ்வளவு பிரைவேட் விசயமும் இந்த மேசைல வந்து கிடக்கும். ஏன் நுகேகொடல இருக்கிற உங்கட வீட்டுப் பிரைவசிகூட எடுக்கமுடியும். அரேஞ் பண்ணவா?”
நிலாப்தீன் ஏதோ யோசித்துவிட்டுப் பின்னர் மகிழ்ச்சியோடு விஸ்கிப் போத்திலை மீண்டும் எடுத்து முட்ட முட்டக் குடித்தார்.
“அப்பிடீன்ன போன ஒரு வருசத்துக்கான லிஸ்டையும் சேர்த்துக் கேளுங்க சேர். அதில செத்துப்போனவங்களோட பெயரும் இருந்தா அடுத்த மூவ் எடுக்கிறது மிச்சம் ஈஸியாப்போயிடும்”
“குட் பொயிண்ட். இப்ப கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள்கூட அந்த கிளினிக்குகளுக்குப் போனவர்களாகத்தான் இருந்திருக்கக்கூடும். சம்திங் ரோங் தெயார். நான் இப்பவே மெல்வினுக்குக் கோல் பண்ணுறன்”
ஜெயரத்தினம் தன் செல்பேசியை எடுத்தபோது, திரையில் சுபத்திராவிடமிருந்து சில மிஸ்கோல்கள் வந்திருந்ததைக் கவனித்தார். உடனே அவளுக்கு அழைப்பை எடுத்தார்.
“ஹலோ சுபத்திரா மிஸ். சொறி, போன் சைலண்டில இருந்துது. கூட்டம் எப்பிடிப் போச்சு? அப்பச் சரி மிஸ். ஓம். நீங்கள் நாளைக்கு வாங்கோ. பேசலாம். ஓமோம். நான் வி.சியிட்ட கதைச்சனான். அவர் எப்பவுமே ஓ.கே. சரி, சரி. பை பை.... நான் எடுக்கிறன்... ஓ ஓ, நான் லிங்கைப் பாக்கிறன். வட்சப்பிலதானே. ..ஓகே பை மிஸ்”
ஜெயரத்தினம் போனைக் கட் பண்ணிவிட்டு மெல்வினுக்கு அழைப்பெடுத்தார். அவனைத் தன் வீட்டுக்கு உடனே அவசரமாக வருமாறு சொல்லிவிட்டு நீலாப்தீனிடம் திரும்பினார்.
“சாமத்திய வீடு. அம்மாக்காரி கடைசி இரண்டு வருசத்தில கர்ப்பம் தரிச்சிருக்கிறா. கைனோகோலஜி கிளினிக். இதுதான் எங்கட நூலு. இது அறுபடாமல் போயிடும் என்றால் பட்டம் ஏறிடும். இப்பத்தான் வானம் கொஞ்சம் வெளிச்சமாதிரி இருக்கு நிலாப்தீன்.”
ஜெயரத்தினம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிலாப்தீன் கொஞ்சம் தள்ளாடினாற்போலத் தோன்றியது.
“எனக்குன்னா மந்தமாத் தெரியுது சேர். இந்த விஸ்கி மிச்சம் நல்லா இரிக்கி. எனக்கும் ஒரு கிளாஸ் தாங்களேன்”
--- தொடரும் ---
Comments
Post a Comment