Skip to main content

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 5


“பரணி எண்டா எலி. பூரத்துக்கு யானை. பகை மிருகங்கள். ரெண்டுக்கும் யோனிப்பொருத்தமே இல்ல. ஆனா ஒரு சாந்தியைச் செய்திட்டம் எண்டால் சரி. மாப்பிளை பகுதிட்ட சொல்லிப்பாருங்கோ. அவருக்கும் சொந்த வீட்டில கேது இருக்கு. இந்தச் சம்பந்தம் தவறினா இனி நாப்பதுக்கு மேலதான் அவருக்கும் கலியாணம்.”

சிவகடாட்சம் செல்பேசியில் பேசியவாறே ஓட்டோவிலிருந்து இறங்கினார். பின்னாலேயே மெதுவாக தயாளினியும் வெளியே வந்தார். காந்தாரி கிளினிக்கில் கூட்டம் அலை மோதியது. தயாளினி ஓட்டோக்காரருக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
“திரும்பக் கூட்டிண்டு போக வரோணுமா மிஸ்? நம்பரை போனில நோட் பண்ணுங்கோ. சைபர், ஏழு, ஏழு”
சிவகடாட்சம் உடனே திரும்பி ‘தேவையில்லை’ என்று ஓட்டோவை அனுப்பிவிட்டு, தயாளினியோடு கிளினிக் கட்டிடத்துக்குள் நுழைந்தார். பெயருக்குத்தான் காதில் செல்போன் ஒட்டிக்கொண்டிருந்ததே ஒழிய, அந்தப்பக்கமிருந்து கதைத்தவரின் வரலாறு முழுதும் கிளினிக்கில் நின்ற அனைவருக்கும் கேட்டது.
“ஒரே பெட்டை சேர். வம்சம் விருத்தியாகாட்டி எங்கட பேரை சொல்லுறதுக்கு ஆரு இருப்பினம்? அதான் யோசிக்கிறன்”
“பேர சொல்லுறதுக்கு பிள்ளையைப் பெத்துப் பிரயோசனம் இல்லை. உம்மட பூட்டன், பூட்டிண்ட பேர நீர் இப்ப சொல்லிக்கொண்டா திரியிறீர்? அப்துல்கலாமையும் அய்ன்ஸ்டீனையும் அவையளிண்டா பிள்ளையளா சொல்லிக்கொண்டு திரியுதுகள்? இஞ்ச பேமசானா பெயர் சொல்லுவினம். அதை விடும். உம்மட பெட்டைக்கும் முப்பத்திநாலு வயசு ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தீர் எண்டால் யோனிப் பொருத்தமே பாக்க வேண்டியிராது”
அந்தப் பக்கம் சற்று அமைதியானது. சிவகடாட்சத்தை எதிர்த்துப் பேச எவருக்கும் தைரியம் வருவதில்லை. அவருடைய திருமணப் பொருத்தங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கின்றன. இன்றைய திகதிக்கு ஒரேயொரு விவாகரத்துதான் அவர் முற்றாக்கிய பின்னரும் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் அவருடைய தவறில்லை. அது ஒரு காதல் திருமணம். குடும்பத்தினர் தம் திருப்திக்காகப் பொருத்தம் பார்த்தார்கள். அதில் ஆணின் குறிப்பு வாக்கியப் பஞ்சாங்கத்தின் பிரகாரம் எழுதியதால் விளைந்த வினை என்பது சிவகடாட்சத்தின் வாதம். ஒரு கட்டம் மாறினால்கூட விவாகமே வில்லங்கமாகிவிடும் என்ற பகுத்தறிவு யாழ்ப்பாணிகளுக்கு வரப்போவதேயில்லை என்று அவர் புறுபுறுப்பதுண்டு. சோதிடம் ஒரு விஞ்ஞானம். இன்றைக்குத் தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்வதால் நேர வித்தியாசத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்படும் திருக்கணிதப் பஞ்சாங்கமே மிகச்சரியானது என்பார் அவர். தன்னுடைய அருமை இந்த யாழ்ப்பாணிகளுக்கு என்றைக்குமே தெரியப்போவதில்லை என்று புலம்புவார். இந்தியாவில் அவரைச் சோதிட விஞ்ஞானி என்று கொண்டாடுகிறார்கள். நரேந்திர மோடியை ஒருமுறை சந்தித்திருக்கிறார். பி.ஜே.பி சகவாசம் உண்டு. அடுத்த பத்மஶ்ரீ லிஸ்டில் அவருடைய பெயரும் இருப்பதாக ஒரு கதை உலாவுகிறது. முதலமைச்சர் ஆகி, நாட்டின் இனப்பிரச்சனையையும் தீர்த்துவிட்டார் என்றால் நோபல் சமாதானப் பரிசுக்கும் சாத்தியம் உண்டு என்று சுபத்திரா சொல்லியிருக்கிறாள். எந்தச் செம்புலத்துக்கு எந்தத் தண்ணி பொருத்தம் என்று பார்க்கும் தொழிலையும் செய்துகொண்டு நம் தமிழ் இனத்தையும் மீட்டெடுக்கவேண்டும் என்பது என் தலைவிதி என்பார் சிவகடாட்சம்.
“சரி, நான் மாப்பிள்ளை வீட்டில பேசிப்பாக்கிறன். ஏதோ சாந்தி செய்யோணும் எண்டியளே, அது என்ன?”
“ஓ அதுவா, நீங்கள் திரௌபதி கோயிலுக்குப் போகோணும். எங்கட வரலாற்றிலேயே தீர்க்க சுமங்கலியா சகல பொருத்தங்களுடனும் வாழ்ந்து பெடலெடுத்தது அந்த மனுசிதான். அவவிண்ட கோயிலில பிள்ளை மஞ்சத்தண்ணில குளிச்சு, மூண்டு முறை சுத்தி, அடி அழிக்கோணும். அதுக்குப்பிறகுதான் சாந்தி முகூர்த்தம் நடக்கோணும், சரியா?”
“அந்தக்கோயில் எங்கே இருக்கு சேர்?”
“ஹோஸ்பேட்டுக்கு போகோணும். ஹம்பிக்குப் போற வழி. ஹம்பி கேள்விப்பட்டிருக்கியளா?”
“இல்லை சேர்”
“நினைச்சன். கஞ்சப் பிசினாறிகள் பக்கத்தில இருக்கிற கண்டிக்கே போறதில்லை, ஹம்பிக்கு எங்கை போறது? எண்ட மச்சான் ஒருத்தன் இந்தியா டூர் கொம்பனி நடத்திறான். பத்து நாள் டிரிப். மைசூர், ஹம்பி எண்டு சுத்திட்டு வரலாம். புல் பக்கேஜ். காசு நீங்கள் குடுக்கத்தேவையில்லை. வெளிநாடுகளில எங்களுக்கு எக்கவுண்ட் எல்லாம் இருக்கு. அங்கை இருக்கிற ஆக்கள் டொலரிலயோ, யூரோவுலயோ, பவுண்ட்சிலயோ லோக்கல் எக்கவுண்டுக்கு மாத்தினா போதும். உங்களுக்கு ஒரு செலவுமில்லை. எல்லாமே பிறீ.”
தயாளினி மெதுவாகக் கணவருடைய கையைக் கிள்ளினார். சிவகடாட்சம் அதனைக் கவனிக்கவில்லை. அவர்தான் மச்சானைப் பினாமியாகப் போட்டு அந்த டூர் கொம்பனியை நடத்திக்கொண்டிருக்கிறார். இது தவிரப் புடவை பிஸ்னஸ், ஒரு திருமண மண்டபம், யாழ்ப்பாணம் கொழும்பு ரூட்டு ஓடும் ஒம்னி பஸ். இரண்டு ஹையேஸ் வண்டிகள் என்று பல பிசினசுகள் உண்டு. பல பினாமி பெயரில்தான் ஓடுகின்றன. தமிழர்களுக்குத் தாம் பணக்காரர்களாக இருக்கவேண்டும். ஆனால் தம் தலைவர்கள் நாட்டுக்காக எல்லாவற்றையும் இழந்து ஜட்டியுடன் நிற்கவேண்டும். இந்த உளவியலை நன்றாகவே புரிந்தவர் சிவகடாட்சம். அதனால் தலைவராக வருவதற்கு முடிவெடுத்த பின்னர் தன் பல முதலீடுகளைப் பினாமி பெயரில் மாற்றிவிட்டார்.
“மச்சானிண்ட நம்பரைத் தாறன். மாப்பிள்ளை பொம்பிளை கலியாணத்தண்டே வெளிக்கிட்டா, நேராய்ப் போய் சாந்தியும் கழிச்ச மாதிரி இருக்கும். ஹனிமூனில சாந்தி முகூர்த்தமும் ஆனமாதிரி இருக்கும். கலியாணம் முடிச்சோன இரவே ஓட்டலுக்கு ஓடுறதுதானே இப்பத்த பாஃஷன். தமிழனுக்கு இண்டைக்கு வீடில்லாமப் போனதுக்குக் காரணமே இப்பிடி ஓட்டலுகளில போய்ப் பிள்ளை பெறுறதாலதான் தம்பி”
அவர் படு சத்தமாகச் சிரிக்க தயாளினி இம்முறை அழுத்தமாக நுள்ளினார்.
“மெதுவாக் கதையுங்கோ அப்பா. உலகம் முழுக்க ஊரோச்சம் வைக்கிறியள். இப்பிடியே கதைச்சுக்கொண்டு திரிஞ்சியள் எண்டால் முதலமைச்சர் பதவி இல்ல, முனிசிபல் கவுன்சில்கூட உங்களுக்கு கிடைக்காது”
சிவகடாட்சம் அப்போதுதான் சுதாரித்து காந்தாரி கிளினிக்கை நிமிர்ந்து பார்த்தார். அதுவரை இவர் பேசியதை விடுப்புக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சடாரென்று தம் செல்பேசியை நோண்ட ஆரம்பித்தார்கள்.
“சரி நான் பிறகு கதைக்கிறன். ஓம், பீஃசை அக்கவுண்டுக்கு மாத்திவிடுங்கோ. மாப்பிள்ளை பகுதி என்ன கேட்டாலும் ஓமெண்டுங்கோ. வெளிநாட்டாக்கள் எதுக்கு இருக்கினம்? அவையளிட்ட கேளுங்கோ. வெக்கப்படாதீங்கோ. கேக்கிறது எங்கட உரிமை. தரவேண்டியது அவையளிண்ட கடமை. எங்களை வித்துத்தானே அவையெல்லாம் அகதியானவை? அந்தக் கடனை அவையள் அடைக்கத்தானே வேணும்? ஒவ்வொரு வருசமும் அவையள் கிளப்பிக்கொண்டு வரேக்க பல்லை இளிச்சுக்கொண்டு ஆட்டுக்கறியும் கூழும் காய்ச்சிக் குடுத்து, தர்ப்பையைப் போட்டு சாமியத் தூக்கெண்டு குடுக்கிறது என்னத்துக்காக?”
இம்முறை தயாளினி சிவகடாட்சத்தின் போனைப் பறித்து அழைப்பைக் கட் பண்ணிவிட்டார். சிவகடாட்சம் எதுவுமே சொல்லாமல் வரவேற்படிக்குப் போனார். அங்கே வரிசை நீண்டிருந்தது. ‘வேலை வெட்டி இல்லாதவன்தான் வரிசைல நிப்பான்’ என்று புறுபுறுத்துவிட்டு தயாளினியிடம் திரும்பி வந்தார்.
“இஞ்சதானே டொமினிக்கும் வேலை செய்யிறவன்? அவனைப் பிடிச்சா சனியன் பிடிச்ச வரிசைல நிக்கத் தேவையில்லை”
சிவகடாட்சம் டொமினிக்கு அழைப்பெடுக்கப் போக, தயாளினி தடுத்தார்.
“பிறகு அவர் ஏன் இஞ்ச வந்தனீங்கள் எண்டு கேப்பார். போட்டோ எடுக்கிறதுக்கு ஆயிரம் இடத்துக்குப் போற மனுசன். உலகம் முழுக்க கதை பரவிடும். தேவையா?”
சிவகடாட்சத்துக்கு தயாளினி சொல்வதும் சரியென்றுதான் பட்டது. அவர் மீண்டும் அந்த வரிசையை நோட்டம் விட்டார். அப்போது வரவேற்பில் நின்ற பெண் ‘அங்கிள்’ என்று கூப்பிடத் திரும்பிப்பார்த்தார்.
“உங்களைத்தான். என்ன விசயமா வந்தீங்கள்?”
அவர் தயாளினியைத் திரும்பிப் பெருமிதமாகப் பார்த்தார். முதலமைச்சர் என்றால் சும்மாவா?
“என்னைத் தெரியேல்லையா? நீங்கள்தான் எனக்கு முற்றாக்கினியள். அவர் ஈவினைல சயன்ஸ் டீச்சர்”
“சந்தோசம் தங்கச்சி, நாங்கள் முதலே புக்கிங் …”
“உங்கட மகளுக்கா? பெயர் என்ன?”
இவர் தயக்கத்துடன் ‘தயாளினி’ என்று சொல்ல அவள் கணினியில் பெயரைத் தேடினாள். ‘தயாளினி சிவராசன்’ என்று முழுப்பெயரை வாசித்துவிட்டு, இவரைக் கணம் சந்தேகமாகப் பார்த்தாள். பின்னர் ஒன்றும் சொல்லாமல் ஒரு கொப்பியைக் கொடுத்தாள்.
“இவவுக்கும் வீட்டில மாப்பிள்ளை பாக்கிறினம் சேர். ஒருத்தரை ஒப்பேத்திவிடுங்கோ”
தன் அருகிலிருந்த இளம்பெண்ணைக் காட்டி அவள் சொல்ல, சிவகடாட்சம் அந்தப் பெண்ணை ஏற இறங்க நோட்டம் விட்டார்.
“தங்கச்சி ஆயிலியம்தானே, பூனைக் கண்ணிலேயே தெரியுது. உமக்கு கந்தருவ ராசி. இளவரசன் குதிரைலயே வந்து தூக்கியோண்டு ஓடிடுவான். அப்பர்ட சொல்லும். சீதனம் சேர்க்க முக்க வேண்டாமெண்டு”
அவள் வெட்கப்பட்டுத் தலை குனிய, மற்றவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“குதிரை இல்லை. ஓட்டோ. சரி, நீங்கள் அதில போய் இருங்கோ. டொக்டர் வாற நேரம்தான்.”
இருவரும் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள். அரை மணி நேரம் கழிந்தது. வைத்தியர் வரும் சிலமனே இல்லை. சிவகடாட்சம் பொறுமையை இழந்தார்.
“வைத்தியரின் தாமதம்
காக்க வைப்பதல்ல.
உயிரைக் காத்து வைப்பதே”
சிவகடாட்சம் கிளினிக் சுவரில் ஒட்டப்பட்டிருந்த வாசகங்களை வாசித்துப்பார்த்து விசனப்பட்டார்.
“லேட்டாறதுக்கு சீலம்பா விளக்கமா திருக்குறளை எழுதி வச்சிருக்கிறாங்கள்”
அருகிலிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்துச் சொல்ல அவள் பதிலளிக்கவில்லை. இருபது வயதுப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது. அவர் பார்ப்பதைக் கவனித்து அவள் சற்றே முறைத்தாள். இவர் உடனே கிளினிக் சுவரிடம் திரும்பினார்.
Dr. S. Rajarajan (MS, MRCOG)
பெண்மைப் பிணியியல் மருத்துவர்
Obstetrician & Gynaecologist (VOG)
சிவகடாட்சத்துக்கு மகப்பேறு வைத்தியமும் பெண்மைப் பிணியியலும் ஒன்றுதானா என்ற குழப்பம் வந்துபோனது. தயாளினியிடம் கேட்கலாமா என்று திரும்பினார். அவள் கதிரையிலேயே சரிந்து தூங்க ஆரம்பித்திருந்தாள். பேசாமல் பெரியாஸ்பத்திரிக்கே போயிருக்கலாம் என்று தோன்றியது. அனகா பிறந்தது அங்குதான். இங்கே வைத்தியரின் திறமை எதுவும் இல்லையே. கிரக பலனே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கரு உண்டாவதும் கலைவதும் கிரகங்களின் இருப்புதான். இவர்கள் வெறும் கருவிகளே. மெனோபஸ் என்று நினைத்திருந்தபோது மனைவி கருத்தரித்தது கிரகங்களின் பரம பத விளையாட்டின்றி வேறென்ன? அவர் இலகுவாகக் கணித்திருக்கக்கூடிய கணக்குதான் அது. இந்த வயதில் குழந்தையா என்ற அஜாக்கிரதை. ஐந்து தடவைகள் விழுந்து வெடிக்காத சகடைக் குண்டு ஆறாவது தடவையா வெடித்துவிடப்போகிறது என்கின்ற அசிரத்தை. சுக்கிர லக்கினத்தில் சென்ம விரோதி குரு ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்த சாமத்தில் சபலப்பட்டதின் வினை இது. சிவனே என்று இருந்திருக்கவேண்டும். விதி வலியது. இதுவும் ஒரு பெட்டை என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. ‘அனகாவும் அனிருதையும் ஐயிரண்டு ஆண்டிடையில் தையலிடம் தங்குவர்’ என்று காண்டம் இவருக்கு முன்னமே வாசிக்கப்பட்டு விட்டது.
சிவகடாட்சம் யோசித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று கிளினிக் பரபரப்பாகியது. ஊழியர்கள் அங்குமிங்கும் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். அதுவரை செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த தாதிப்பெண் தொப்பியை அணிந்துகொண்டு எழுந்து நின்றாள். சிவகடாட்சம் தயாளினியைத் தட்டி எழுப்பினார்.
“டொக்டரிண்ட கார் வந்திட்டுது”
வாசலில் இராஜராஜனை இறக்கிவிட்டு கார் அப்பாலே போனது. நடுத்தர வயதை ஒட்டிய தோற்றம். முன் மண்டையில் மயிர் கொட்ட ஆரம்பித்திருந்தது. நீளக் காற்சட்டை, அரைக்கைச் சட்டை அணிந்து டை கட்டியிருந்தார். சாராய வண்டி முன்னே தள்ளியதில் சட்டை பட்டன் புடைத்திருந்தது. உள்ளே வந்ததும் மாட்டியிருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டியபோது கண்களில் குழி விழுந்திருந்தது தெரிந்தது. யாரையும் பார்த்துச் சிரிக்காமல் விசுக்கென்று அவர் அறைக்குள் நுழைந்தார். சிப்பந்தி ஒருத்தர் ஓடி வந்து கதவிலிருந்த “வெளியே”யை இழுத்து “உள்ளே” ஆக்கினார். இரண்டே நிமிடங்களில் முதலாம் இலக்கத்தை அவர் கூப்பிட சிவகடாட்சம் தயாளினியை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்.
“வாங்கம்மா, இருங்கோ. உங்கட பெயர், பிறந்த திகதி சொல்லமுடியுமா?”
தயாளினி சொல்ல இராஜராஜன் கணினியில் குறித்துக்கொண்டார். வேறும் சில ஆள் விபரக் கேள்விகள். பின்னர் கணினியை மடித்துவிட்டு நிமிர்ந்தார்.
“சொல்லுங்கம்மா, எத்தினை நாளாத் தெரியும்?”
சிவகடாட்சத்துக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அனகா வயிற்றில் இருந்த சமயம் திருச்சியில் நிகழ்ந்த சோதிட மாநாட்டுக்கு அவர் போய்விட்டார். தயாளினி தன் தாயாருடந்தான் வைத்தியரிடம் போய் வந்தார். பிள்ளைப்பேறு காலத்திலும்கூட அவர் வைத்தியர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். குழந்தை பிறப்பு என்பது பெண்களின் விசயம் என்பதால் அவருக்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லை. இப்போது வேறு யாரையும் இந்த விசயத்துக்கு அனுப்பினால் மானம் காற்றில் பறந்துவிடும் என்பதால்தான் இவரே வரவேண்டி வந்துவிட்டது. இப்படி நேரடியாக, அதுவும் ஒரு ஆண் வைத்தியரோடு மனைவியின் அந்தரங்க உடல் விசயங்களை வெளிப்படையாகப் பேசுவது அவருக்குச் சங்கடமாக இருந்தது. தவிர தயாளினியிடம் அவர் இப்படி ஒருபோதும் மென்மையாகப் பேசியதுமில்லை.
“டொக்டர் நான் வேணுமெண்டா வெளியே போகட்டா? நீங்கள் செக் பண்ணுங்கள்.”
“எதுக்கு வெட்கப்படுறீங்கள்? நீங்கதானே குழந்தைக்கு அப்பா? யூ கைஸ் டிட் திஸ் ரைட்?”
இராஜராஜன் அண்மையில்தான் லண்டனில் இரண்டு வருட மேற்படிப்பை முடித்துவிட்டுத் திரும்பியவர். வெளிநாடுகளில் எப்படி வைத்தியம் பார்க்கப்படுகிறதோ அதே கலாச்சாரம் இங்கேயும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பார். நோயாளிகளுடன் அன்புடனேயே பேசுவார். பிரச்சனைகளை விளங்கப்படுத்துவார். தன்னிடம் வருகின்றவர்கள் அவர்களது மகப்பேறு காலம் முழுதும், கணவன், மனைவி சேர்ந்து ஒன்றாகவே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
“அம்மா, உங்களை நான் கொஞ்சம் செக் பண்ணப்போறன். ஓகேயா?”
இராஜராஜன் தாதியிடம் தயாளினியை உள் அறைக்குள் அழைத்துச்சென்று உடை மாற்ற உதவுமாறு பணித்தார். கைகளைக் கழுவிவிட்டு கிளவுஸ் எடுத்து அணிந்தார். தலையில் டோர்ச் மாட்டினார். ஸ்பெக்கியூலத்தை எடுத்து நன்றாகக் கழுவினார். சற்று நேரத்தில் தயாளினி கவுண் அணிந்தபடி வெளியே வந்து, தாதிப்பெண்ணின் உதவியுடன் கட்டிலில் சென்று படுத்தார். இராஜராஜன் தயாளினிக்கு முன்னே சென்று உட்கார்ந்து, தான் செய்யப்போகும் பரிசோதனையைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். சிவகடாட்சத்திற்கு மேலும் சங்கடமாக இருந்தது. தயாளினிக்கு சங்கோசமே இல்லையா என்று அவருக்குக் கொஞ்சம் விசனமாக இருந்தது. இதைக் கவனித்த இராஜராஜன் நிலைமையைச் சமாளிக்க, அவரிடம் பேச்சுக்கொடுத்தார்.
“சொல்லுங்க மிஸ்டர் … சொறி உங்கட பெயரை மறந்துட்டன்”, என்றபடி அவர் கொப்பியைப் புரட்டிப் பார்த்தார். “ஆ, சிவராசன், சொல்லுங்க, நீங்கள் என்ன செய்யிறியள்?”
“நான் இந்தியாவில போய் சோதிட விஞ்ஞானம் படிச்சனான். கொஞ்சம் ஹோமியோபதியும் தெரியும். தெயார் ஆர் பிஃயூ பிசினசஸஸ். பொலிடிக்ஸிலயும் இருக்கிறன். கலியாணப் பொருத்தங்களும் நிறையைச் செய்வன்.”
சொல்லிவிட்டு சிவகடாட்சம் நாக்கைக் கடித்தார். பெயரை மாற்றிக் கொடுத்தது பிரச்சனையாகிவிடுமோ என்று யோசனையாக வந்தது.
“வட்? ஹாங் ஓன், நீங்கதான் அந்தச் சாத்திரியா? ஓ ஐ காண்ட் பிலீவ் இட்”
இராஜராஜன் கேட்டுக்கொண்டே திடீரென நிமிர்ந்தார். சிவகடாட்சத்துக்கு அந்த விளிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.
“சாத்திரி இல்லை. ஐ ஆம் எ புரபசனல் அஸ்டோலஜர்.”
“யியா ஐ நோ. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் எண்ட சாத்திரத்தை அம்மா உங்களிட்ட கொண்டு வந்தவா. இந்தக் குறிப்புக்குக் கலியாணமே ஆகாது எண்டு நீங்கள் திருப்பி அனுப்பிட்டியள்”
இராஜராஜன் சிரிக்காமலேயே சொல்லியபடி தயாளினியிடம் திரும்பினார். தயாளினி இன்னமும் கண்களை மூடியபடி கிடந்தார். பற்களை இறுக்கக் கடித்துக்கொண்டிருந்தாற்போலத் தோன்றியது.
“அம்மா, நீங்க ரிலாக்ஸா இருங்கோ. ஐ ஆம் ஜஸ்ட் கோயிங் டு எக்ஸாமின் யூ. மெதுவாத்தான். கஷ்டமா, நொந்தா, அந்தரமா இருந்தா சொல்லுங்கோ. வி வில் டேக் இட் ஸ்லோலி”
தயாளினிக்கு அவர் ஆங்கிலத்தில் பேசியது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கண்களைத் திறக்காமலேயே சரி என்று தலையாட்டினார். இராஜராஜன் தயாளினியைப் பரிசோதனை செய்தபடியே சிவகடாட்சத்திடம் பேச்சுக்கொடுத்தார்.
“அதுக்குப்பிறகு அம்மா நடேசக்குருக்களிட்டதான் சாத்திரம் பாக்கிறவா”
சிவகடாட்சத்துக்கு வெட்கம் மேலும் பிடுங்கித்தின்றது. அந்த அறையிலிருந்த இயல்புத்தன்மையே அவரை அதிகம் பாதித்தது. பொதுக் கழிப்பறையில்கூட அவர் சக ஆணோடு நின்று ஒன்றுக்கடித்துப் பழக்கப்படாதவர். தான் நிராகரித்த குறிப்புக்காரனே தன் மனைவிக்குப் பிள்ளைப்பேறு பார்க்க வருவான் என்பது அவர் எதிர்பாராதது. எல்லாவற்றையும் கணிக்கமுடிந்தால் அவன் சோதிடன் அல்ல, சோதி வானவன் என்று எண்ணிக்கொண்டார்.
“நீங்கள் சொன்னது கடைசில சரியாயிட்டுது. எனக்கு இன்னும் கலியாணம் ஆகேல்ல. நாப்பத்திரண்டு வயசு. ஆனாலும் ஒரு பொம்பிளைக்கும் என்னைக் கட்டக் குடுத்து வைக்கேல்ல. அம்மா, நீங்களே சொல்லுங்கோ. எனக்கென்ன குறை?”
தலை நிமிர்ந்து அவர் தயாளினியைப் பார்த்துக் கேட்டார். தயாளினிக்கு எரிச்சல் வந்தது. பேசாமல் ஒரு பெண் வைத்தியரிடம் போயிருக்கலாம். சிவகடாட்சம்தான், இவர் புது ஆள், வெளிநாட்டிலிருந்து வந்தவர், உள்ளூர் ஆக்களைத் தெரிந்திருக்காது என்று கூட்டி வந்தவர்.
“சோதிடம் பொய்க்காது. நீங்கள் ஒரு டொக்டர். அதால உங்களுக்கு ஊருலகத்தில என்னத்தைச் சொன்னாலும் விளங்கும். ஒரு விதியின் கீழ்தான் கிரகத் தானங்களும் அசைவுகளும் இயங்கும். ஆனா ஒரு அறுகம்புல்லை நாங்கள் மிதிக்கிற கணத்திலகூட அத்தனை தானங்களும் பிறிதொரு நிலையை எடுக்கும். அக்கணம் இது புதிய பிரபஞ்சமா உருவாகி வேறொரு விதிக்கு அமைய செயற்பட ஆரம்பிக்கும். இப்பிடி ஒவ்வொரு ஷணமும் புதிது புதிதா பிரபஞ்சம் மீள உருவாகிக்கொண்டிருக்கு. ஆனா அத உணருகிற சக்தி எங்களிட்ட இல்லை. ஷ்ரோடிங்கர் பூனை கேள்விப்பட்டிருப்பியள். அதைப் போன நூற்றாண்டிலதான் வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சான். ஆனால் தமிழன் அதைப் பத்தாயிரம் வருசத்துக்கு முன்னாலேயே எழுதி வச்சிட்டான்”
இராஜராஜன் அதைச் செவி மடுக்காமல் தயாளினியைச் தொடர்ந்து சோதித்து முடித்தார். பின்னர் அவரை எழுந்து உட்காரச் சொல்லிவிட்டு கிளவுசைக் கழட்டிக் குப்பைத் தொட்டியில் போட்டு, கைகளைக் கழுவினார்.
“எல்லாமே ஓகே அம்மா. சில டெஸ்டுகள் எடுக்கவேண்டும். பிளட், யூரின். அல்ட்றா சவுண்ட். எச்.பி.வி என்று ஒண்டிருக்கு. உங்கட வயசுக்கு அதையும் ஒருக்கா எடுத்து விடுறது நல்லம்.”
“பிரச்சனை ஒண்டுமில்லைத்தானே டொக்டர்?”
“ஒரு பிரச்சனையுமில்லை. லேட் பிரக்னன்சி இஸ் வெரி கொமன் தீஸ் டேஸ். நாங்கள் கவனமா பஃலோ பண்ணினாச் சரி. நீங்கள் போய் உடுப்ப மாத்தீட்டு வாங்கோ. நில்மானி, ஹெல்ப் ஹெர்”
இராஜராஜன் சொல்ல தாதிப்பெண் தயாளினியை மெதுவாக எழுப்பி அழைத்துச்சென்றார். அவர்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்றதும் இராஜராஜன் சிவகடாட்சத்திடம் மெதுவாகக் கேட்டார்.
“எப்பிடிச் சொல்லுறதெண்டு தெரியேல்ல, எனக்கொரு உதவி செய்யமுடியுமா?”
“சொல்லுங்கோ டொக்டர்”
“மெய்யாலுமே எனக்கேன் இன்னும் கலியாணம் நடக்குதில்லை?”
இராஜராஜன் கிசுகிசுக்க சிவகடாட்சம் நெளிந்தார். பெண்மைப் பிணியியல் மருத்துவருக்கு இதுகாறும் துணைக்கு ஒரு பெண் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இதற்கு முழுக்க முழுக்க சாதகத்தைக் குறை கூற முடியாது என்றே அவருக்குத் தோன்றியது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, லண்டனில் படித்து பிசிசன் ஆகிய ஒரு மணமகனுக்கு எப்படி நாற்பத்திரண்டு வயதுவரையும் திருமணம் ஆகாமலே போனது? இந்த வயதுக்கு கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று நாடு முழுதும் வீடு, வளவு, நகை, நட்டு, வாகனங்கள் எனச் சீதனத்துடன் ஒரு அழகான மணப்பெண் கிடைத்திருக்கவேண்டுமே. டொக்டரின் முகவெட்டையும் நிறத்தையும் சின்னதான திருநீற்றுக் கீற்றையும் பார்த்தால் ஆள் ஒரு மச்சம் சாப்பிடும் சைவ உயர் வேளாளராகத்தான் தெரிகிறார். இது எப்படித் தவறியது? சிவகடாட்சம் கட கடவென என்னவோ கணக்குகள் போட ஆரம்பித்தார்.
இராஜராஜன் தொடர்ந்தார்.
“இரவு கிளினிக் முடிய அம்மாவும் நானும் வீட்ட வரலாமா? ஒண்டிரண்டு பொருத்தங்கள் வந்திருக்கு. அம்மா செய்யெண்டு சொல்லிக் கடும்பிடி பிடிக்கிறா. எனக்கெண்டா செய்ய விருப்பமில்லை”
“மன்னிக்கோணும். எண்ட மகளிண்ட சாமத்திய வீடு வாற சனிக்கிழமை வச்சிருக்கு. அது முடியும்வரைக்கும் மிச்ச வேலை எல்லாத்தையும் நிப்பாட்டி வச்சிருக்கிறன். ஏன் டொக்டர், நான் சொல்லுறன் எண்டு கோவிக்கக்கூடாது. நல்ல பொம்பிளை, பொருத்தம் எண்டா அம்மா சொல்லிறபடியே செய்யவேண்டியதுதானே?”
“செய்யலாம்தான். ஆனால் கொஞ்சம் அந்திரமா இருக்கு. வந்திருக்கிற இரண்டு குறிப்புகளுக்கும் வயசு கூட. ஒரு பிள்ளைக்கு முதலில ஒரு சினேகிதம் இருந்து பிசகிப் போனதில இப்ப எங்களிட்ட வந்திருக்கிறினம்.”
“இதெல்லாம் ஒரு விசயமா டொக்டர். அவையளுக்கு எத்தினை வயசு?”
“ஒராளுக்கு முப்பத்தி மூண்டு, மத்ததுக்கு முப்பத்தி ஒண்டு”
சிவகடாட்சத்துக்குத் தூக்கிவாரிப்போட்டது. அப்போதுதான் உடை மாற்றிக்கொண்டு திரும்பிய தயாளினிக்கும் இவர்களுடைய உரையாடலை அரைகுறையாகச் செவிமடுத்ததில் கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன டொக்டர் சொல்லுறியள்? உங்களைவிடப் பதினொரு வயசு இளம் பிள்ளையள். ஆனா வயசு போயிட்டுது எண்டுறியள்?”
“விளங்குது, ஆனா நான் ஒரு டொக்டர் இல்லையா? அதோட நான் கொஞ்சம் சூசி. உங்களுக்குச் சொல்லுறதுக்கென்ன? எனக்கு மெல்லிசா, நீட்டு முகத்தோட ஒரு பொம்பிளை வேணும். கௌதமியைப்போல. ஓ.எல் படிக்கேக்க கௌதமில ஒரு கண் இருந்தது. பிறகும் கலியாணம் கட்டினா கௌதமிமாதிரி ஒரு பொம்பிளையைத்தான் கட்டுவன் எண்டு நிண்டனான. இதால முதலில வந்த சில சம்பந்தங்களை மிஸ் பண்ணிட்டன். இப்ப யோசிச்சா அதுகளையே கட்டியிருக்கலாம் எண்டு யோசிக்கிறன். அதையெல்லாம் அப்ப வேண்டாம் எண்டு சொல்லி, நல்ல பொம்பிளைக்கு வெயிட் பண்ணிட்டு, இப்பப் போய் வத்தலையும் சொத்தலையும் கட்டச்சொன்னா எப்பிடி?”
சிவகடாட்சத்துக்கு எதுவுமே விளங்கவில்லை.
“அப்பிடிண்டா அந்த கௌதமியையே போய்க் கேட்டிருக்கலாமே? டொகடர் படிக்கிற பெடியனை ஏன் யாழ்ப்பாணப் பெட்டையள் வேணாமெண்டப் போகுதுகள்? அதுகளுக்கென்ன விசரே?”
இராஜராஜன் தலை குனிந்தார்.
“நான் சொன்னது நடிகை கௌதமியை. அபூர்வ சகோதரர்களில கமலோட லொறிக்கு மேலே கிடந்து பிரண்டாவே, அவ”
சிவகடாட்சத்துக்குக் கொஞ்சம் புரிந்தாற்போலத் தோன்றியது. பாவம், பதின்மத்து வயதிலேயே நடிகைமீது காதல் வந்துவிட்டது. பின்னர் நடிகையைப்போலவே பெண் வேண்டுமென்று தேடியிருக்கிறார். உயர் படிப்பும் வைத்தியத் தொழிலும் தனக்கு எப்படியேனும் ஒரு கௌதமியைச் சீதனத்துடன் தேடிக்கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில் வந்த நல்ல பொருத்தங்களை எல்லாம் தட்டிக் கழித்திருக்கிறார். பின்னர் கொஞ்சம் வயதான பின்னர் சில சமரசங்களைச் செய்யலாம் என நினைத்தாலும் ஈகோ அதற்குச் சம்மதித்திருக்காது. ஒவ்வொரு தடவையும், இதைவிட அழகிய பெண்களை எல்லாம் நிராகரித்துவிட்டு இந்தப் பெண்ணை எப்படித் திருமணம் செய்வது என்று எண்ணி நிராகரித்திருக்கிறார். அவர்களுள் சிலரை அவருடைய நண்பர்களே மணந்திருக்கக்கூடும். வருடங்கள் போகப் போக, கௌதமிக்கு வயதானதுபோலவே இவரைத்தேடி வந்த குறிப்புகளுக்கும் வயதாக ஆரம்பித்திருக்கும். ஆனாலும் இவர் 'வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ கௌதமியைத்தான் நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறார். தன் நண்பர்களுக்கெல்லாம் அழகிய பெண்களும் குடும்பங்களும் வாய்த்த பிறகு, இனி ஒரு சாதாரணப் பெண்ணை எப்படித் திருமணம் செய்வது என்ற கேள்வி எழுந்திருக்கும். அதனால்தான் நாற்பத்திரண்டு வயதிலும் இருபது வயதுள்ள பெண்ணைத் தேடுகிறார். ஒரு கட்டத்துக்குப் பின்னர் சாத்திரிகளும் உற்றாரும் கலியாணத் தரகர்களும்கூட இவரைக் கைவிட்டிருப்பார்கள். இப்போது வேறு கதியின்றிப் பாவம், தன்னிடம் பிள்ளைப்பேறு பார்க்க வந்த மனுசரிடம் கிளினிக்கில் வைத்தே கெஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டது. சிவகடாட்சத்துக்கு இராஜராஜனைப் பார்க்கக் கழிவிரக்கமே ஏற்பட்டது. தனக்கு ஓய்வுபெறும் வயதிலும் காமத்தையும் குழந்தையையும் உவந்து கொடுக்கும் கடவுள், ஏன் நாற்பத்திரண்டு வயதாகியும் ஒரு மகப்பேற்று நிபுணருக்கு ஒரு மணமகளைக் கொடுக்காமல் ஏய்க்கவேண்டும் என்பதும் அவருக்குப் புரியவில்லை.
“அப்பா வெளிக்கிடுவமே”
தயாளினி சிவகடாட்சத்தின் இடுப்பைக் கிள்ளினார். ஆனால் இராஜராஜன் விடுவதாயில்லை.
“யாழ்ப்பாணத்தில இருக்கிற எல்லாப் பெட்டையளுக்கும் இப்ப புளிப்புக் கெட்டுப்போயிட்டுது. வெளிநாடு எண்டா கிழடு கட்டையள் எண்டும் பாக்காமல் பல்லை இளிச்சுக்கொண்டு ஓமெண்டுறாளவை. ஆனால் நாங்கள் வெளிநாட்டிலயிருந்து திரும்பி வந்து, ஊருக்கு சேவை செய்ய வெளிக்கிட்டா ஒரு பெட்டை மாட்டுதில்லை. எனக்கு அப்பிடி என்ன வயசாயிச்சு எண்டுறியள்? சேர்ஜன் முருகவேள் நாற்பத்தாறு வயசில தன்னற்ற கம்பசில படிச்ச பிள்ளையைக் காதலிச்சு கலியாணம் கட்டினவர். இப்ப இதுகளிட்ட சிரிச்சு பேசினாலே மீ.டூ போட்டு பேஸ்புக்கில மானத்தை வாங்கிடுவாளவை, எரிச்சல் எரிச்சலா வருது.”
“எல்லாமே கிரகப்பலன்படிதான் நடக்கும் டொக்டர். உங்களுக்கு என்னை இந்தச் சூழலில் சந்திக்கவேண்டும் எண்ட பலன் இருந்திருக்கு பாருங்கோ. எங்கட ஒவ்வொரு அசைவையும் பிரபஞ்சம் முழுதுமே சேர்ந்து தீர்மானிக்குது. நான் உங்கட குறிப்பை திரும்பவும் பார்த்திட்டுச் சொல்லுறன். சாமத்திய வீட்டு வேலை நிறைய இருக்கு. நாங்கள் வெளிக்கிடுறம்”
“ஒரு நிமிசம், குறிப்பைக் கையோட கொண்டு போங்கோ”
இராஜராஜன் மேசை இலாச்சியைத் திறந்து உள்ளிருந்த குறிப்புப் புத்தகத்தை வெளியே எடுத்தார். முப்பது வருடச் சலரோக நோயாளியின் மருந்துக் கொப்பிபோல அந்தப் புத்தகம் பல சாத்திரிகள் கைப்பட்டு மழுங்கிக் கசங்கிக் கிடந்தது. சிவகடாட்சம் அதனை வாங்கித் திறந்து பார்த்தார். ஏழாம் வீட்டில் சனியும் இராகுவும் சப்பாணி கட்டி நெருங்கி உட்கார்ந்திருந்ததை உடனேயே கவனித்தார். இந்தச் சாதகத்துக்கு ஆட்டுக்கல்லைக் கட்டி வைத்தாலும் அடுத்த நாளே அது சில்லுப்பூட்டிக்கொண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு ஓடிவிடும் என்பது புரிந்தது.
“எப்பிடியும் முற்றாக்கிடுவம் டொக்டர். கொஞ்சம் டைம் தாங்கோ. நாங்கள் போயிட்டு வாறம்”
இருவரும் வெளியேறி வாசலுக்கு வந்தார்கள். வரவேற்பில் கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஓட்டோ ஓட்டும் மெல்வின் வரவேற்பில் இருந்த அந்த இளம் பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
“வாரிசு பாத்தீரா? விஜய்ண்ணாண்ட ஆட்டம் இப்பெல்லாம் முந்திமாதிரி இல்லை என்ன?”
“அவர் நல்லாத்தான் ஆடுறார். இந்த வயசிலயும் ரொமான்ஸ் எவ்வளவு நல்லா செய்யிறார். எங்கிடை யாழ்ப்பாணப் பெடியள்தான் அவரிட்ட இருந்து பழகோணும்”
அவள் சிரித்தபடியே ஒரு யு.எஸ்.பியை அவனிடம் நீட்டினாள்.
“இந்தாரும் நீர் கேட்டது. மதிசுதா அண்ணனிண்ட வெந்து தணிந்தது காடு பார்த்திட்டிரா?”
“நீரும் வருவீர் எண்டாப் போய்ப் பாக்கலாம்”
மெல்வின் கண்ணடித்தபடியே கேட்க அவள் சிரித்தாள்.
“பின்ன என்ன மண்ணுக்கு நாங்கள் சொன்னமாம்? டிக்கற்றை புக் பண்ணும். இரவு பிட்ஸா ஹட்டில சாப்பிட்டு அப்பிடியே போவம். ஓட்டோல வரவேண்டாம். பைக்கைக் கொண்டுவாரும். எண்ட ஹெல்மெட்டையும் மறக்கவேண்டாம்”
அவள் கொஞ்சம் வெட்கமாகச் சிரிக்க, மெல்வின் ரஞ்சிதமே பாட்டை விசிலடித்தான். யு.எஸ்.பியை பொக்கற்றுள் போட்டுக்கொண்டு வெளியே தன் ஓட்டோவுக்கு விரைந்தான். சிவகடாட்சமும் தயாளினியும் அவனைத் தொடர்ந்து வந்தார்கள்.
“தம்பி, கல்வியங்காட்டில கொண்டுபோய் இறக்கமுடியுமா?”
“விசா எடுத்து கனடாவிலேயே கொண்டுபோய் இறக்கிறன். ஏறுங்கோ”
ஓட்டோ புறப்பட்டு வீதிக்குள் இறங்கியது. மெல்வின் ஜெயரத்தினத்துக்கு கோல் எடுத்தான்.
“காரியம் முடிஞ்சுது சேர். ஆனா கொஞ்சம் செலவாயிடிச்சு. புதுப்பெடியன் ஒருத்தன். சரியா பிரச்சனை குடுத்திட்டான். ஐம்பதாயிரம் வேணுமாம். ஓகேயா சேர்?”
மெல்வின் சற்று நேரம் பேசிவிட்டு அடுத்ததாக மதிசுதாவுக்கு அழைப்பெடுத்தான்.
“அண்ணை, எனக்கு ரெண்டு டிக்கட் வேணும். பொக்ஸில புக் பண்ணுறீங்களா?”

-- தொடரும் --

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...