நிலாப்தீன் நம்பமாட்டாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
“இராஜராஜனா? அந்த கைனோகோலஜிஸ்டையா சொல்லுறிங்க?”
அவர்கள் வாகனத் தரிப்பிடத்திலிருந்து பொலீஸ் கடவையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கோட்டையில் கூட்டம் அள்ளியது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. திடலை நிறைய இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் நிறைத்திருந்தனர். ஐந்தாறு செயற்பாட்டாளர்கள் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். கோட்டைக் கொத்தளத்தில் பெரிய அரங்கு ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. சிங்கள, பர்மிய பிக்குகள், இந்து மத யோகிகள், கிருத்துவப் பாதிரியார்கள், இஸ்லாமிய மௌலவிகள் என மத குருமார்கள் பலர் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். போர்த்துக்கல் நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவரும் மரியாதை நிமித்தம் அந்தக் கோட்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தெற்கிலிருந்து வருகை தந்திருந்த சில அரசியல்வாதிகளுடன் தமிழ் எம்.பிக்களும் இரண்டாவது வரிசையை நிறைத்திருந்தனர். கொத்தளத்தின் மத்தியிலிருக்கும் கொலைக்களனுக்குப் பெயிண்ட் அடித்து, அதனை அலங்கார வளையமாக்கி, நடுவில் ஒரு சிலை எழுப்பப்பட்டுக் காவித் துணியால் மூடப்பட்டிருந்தது. ஜெயரத்தினமும் நிலாப்தீனும் அரங்குக்குள் நுழையும்போது தமிழில் தேசிய கீதம் இசைத்து முடிந்து, பிக்குகள் சிலர் பிரித் ஓத ஆரம்பித்தனர். அவர்கள் முடிக்கவும் ஐயர் ஒருவர் எழுந்து மந்திரம் ஓதி பூசையைச் செய்யத் தொடங்கினார்.
“என்னாலே நம்பவே முடியில்ல சேர். எதுக்கும் காந்தாரி கிளினிக்கில போய் விசாரிச்சிட்டு வருவமா சேர்? அல்ல்து எஸ்.ஐயை அங்கிட்டு அனுப்பவா? இஞ்ச டொமினிக்கும் இல்ல. இராஜராஜனையும் காணேல்ல”
ஜெயரத்தினம் நிலாப்தீனின் தோளைச் சற்று அழுத்தி ‘ரிலாக்ஸ்’ என்றார். நிகழ்ச்சியில் அடுத்ததாகச் சிலையைத் திறந்து வைக்க வருமாறு இந்தியத் தூதர் அழைக்கப்பட்டார். அவர் எழுந்து சென்று எல்லோருக்கும் கும்பிடு போட்டுவிட்டு, சிலையின் மறைப்புத் துணியை மெதுவாக உருவினார். சிலை கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வைக்குத் தெரியவர, தயாராகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சமாதானப் புறாக்கள் கோட்டையைச் சுற்றிப் பறக்கவிடப்பட்டன. அரங்கு முழுதும் கரகோசம் எழுந்தது.
நிலாப்தீன் மலைத்துப்போனார்.
“யாரு சேர் இது? பார்த்தா புத்தர்மாரிக் கிடக்கு. ஆனா நெத்தில விபூதிப் பட்டை போட்டிருக்கு? ஆறுமுக நாவலரா?”
ஜெயரத்தினம் எந்த சலனமுமின்றிச் சொன்னார்.
“நாவலருக்கு மேலுக்குத் துணி இருக்காது நிலாப்தீன். உது புத்தர்தான். சைவப் புத்தர்”
“எப்பிடி சேர்? புத்தர் எப்ப சைவமா மாறினவர்?”
“அப்ப அவர் உங்களைப்போல முஸ்லிம் எண்டுறீரா நிலாப்தீன்? அந்தக்காலத்தில தமிழ் நிலத்தில இருந்த ஒரே மதம் சைவம்தான். புத்தர் காலத்தில பௌத்தம் வெறுமனே தத்துவமாத்தான் இருந்திருக்கு. மதமா இருக்கேல்ல. பிறகு பல வருசம் கழிச்சுத்தான் புத்த மதம் எண்டு ஒண்டு உருவாகிச்சு. அப்படிண்டா புத்தர் எந்த மதமா இருந்திருப்பார்? சைவம்தானே? ஏசுநாதர் கிரிஸ்டியன் இல்லத்தானே நிலாப்தீன்? பிறகுதானே கிறிஸ்தவம் வந்துது?”
நிலாப்தீனுக்குத் தலை சுற்றியது.
“அது முக்கியமில்லை சேர். ஒருத்தர் எதைப் போதித்தாரோ அதையொட்டித்தானே அவுர அடையாளப்படுத்தணும்? சனாதனத்தை நிராகரித்துத்தானே பௌத்தத் தத்துவம் உருவாகிச்சு? அப்புறம் எப்டி புத்தரை சனாதனியா காட்ட ஏலும்?”
“அது மயிர்க்கதை. ஊருலகத்தில இருக்கிற விகாரையள் எல்லாத்திலயும் இந்துக் கடவுள்கள் இருக்கே? நீர் பாத்ததில்லையா?”
“அதில்ல சேர். புத்தருக்கு பட்டையைப் போட்டா, அது புத்தர் சொல்ல வந்த கருத்தையே கொஞ்சம் மாத்திடும் இல்லையா?”
“புத்தர் என்ன சொன்னார் எண்டது ஆருக்கு வேணும் நிலாப்தீன்? அவர் கருணையை வைத்து மக்களை கவுத்தார். இவங்கள் கருணாவை வச்சு எங்களைக் கவுத்திட்டாங்கள். ”
“உது லூசுக்கதை சேர். நாய்க்கு எங்க அடிச்சாலும் கால்லதான் முண்டம்னமாதிரி எதுக்கெடுத்தாலும் தமிழாக்கள் கருணாவையே நல்லா சாட்டப்பழகீட்டிங்க”
“இது எங்கட அரசியல் இராஜ தந்திரம் நிலாப்தீன். இவங்கள் பௌத்தத்தை வச்சுத்தானே நம்மளை அடக்கப்பாக்கிறாங்கள். இது பௌத்த தேசம், பௌத்தத்துக்கு முன்னுரிமை எண்டுறாங்கள். எங்கட கோயிலுகளை இடிக்கிறாங்கள். சிலைகளைப் புடுங்கிறாங்கள். தொன்மங்களை சிதைக்கிறாங்கள். நாங்கள் ஏன் இவங்கள் இடிக்கிறமாதிரிச் சிலையை எழுப்போணும்? பேசாமல் புத்தருக்கே சிலையை எழுப்பிவிட்டம் எண்டால் அவங்கள் இடிக்கமாட்டாங்கள் இல்லியா?”
“ஆனா நீங்கள் ஒருத்தரும் பௌத்தர்கள் இல்லியே. முக்காவாசிப்பேர் சைவர்கள்தானே சேர்?”
“நிலாப்தீன். உங்களுக்கு இதுகள் விளங்காது. வடக்கு கிழக்கில முதலில இருந்தது தமிழ் பௌத்தர்கள்தான். அதாலதான் நிறைய புராதன புத்த கோயிலுகளிண்ட எச்சங்கள் இங்கனை இருக்கு. அத வச்சுக்கொண்டு பிக்குகளும் சிங்களவங்களும் ஊரை உரிமை கொண்டாடப் பாக்கிறாங்கள். இதைத் தடுக்கத்தான் தமிழ் புத்தரை நிறுவுற முயற்சியை நம்மட ஆக்கள் எடுக்கிறாங்கள்”
நிலாப்தீனுக்குத் தலையைச் சுழற்றியது.
“விளிங்கேல்ல சேர். தமிழர்கள் ஒருத்தரும் புத்தர கும்புடமாட்டீங்க. அப்புறம் புத்தர் சிலையை நிறுவினா, திரும்ப சிங்களன்தானே வந்து கும்பிடப்போறான்? தமிழாக்களிட்ட பிக்குகளும் இல்ல. பிள்ளையளை நேர்ந்துவிடவும் மாட்டியள். அப்புறம் ஒரு சிங்களப் பிக்குவை கூப்பிட்டுக்கொண்டு வச்சிருப்பியள். அவன் அதுக்குப்பிறகு அந்த ஏரியாவை பிடிச்சிடுவான். நீங்கள் பின்பற்றாத ஒரு விசயத்துக்கு எதுக்கு தேவையில்லாம சிலை வைக்கிறிங்க?”
“எந்த லூசன் அப்பிடிச் சொன்னவன்? சிலை ஒண்டை வைக்கிறம் எண்டதுக்காக அதைப் பின்பற்றோணும் எண்டதில்லை. நாங்கள் வள்ளுவருக்குச் சிலை வச்சிருக்கிறம். அதுக்காக அவர் சொன்ன அழுக்காறு, அவா, இன்னாச்சொல் எல்லாத்தையும் துடைச்செறிஞ்சிட்டா இருக்கிறம்? அவர்ட தலைல கிடக்கிற காக்கா பீயைக்கூட நாங்கள் துடைக்கிறதில்லை நிலாப்தீன். காந்தி சிலைக்கு கீழ பதுங்கி இருந்து கிளைமோர் வச்ச ஆக்கள் ஐஸே நாங்கள்”
நிலாப்தீனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. என்ன மயித்துக்கு தான் இங்கே வந்து நிற்கிறேன் என்பது அவருக்குப் புரியவேயில்லை. ‘எவன் பெண்டில் எவனோட போனா என்ன? லெவ்வைக்கு தேவை நாலு பணம்’ என்று உம்மா சொல்வதுதான் ஞாபகம் வந்தது. இவர்கள் எந்தச் சிலையையும் நிறுவி, பட்டையையும் நாமத்தையும் போட்டுக்கொள்ளட்டும், தாம் வந்த வேலையைப் பார்ப்பதே சிறந்தது என்று அவருக்குத் தோன்றியது. இராஜராஜன்தான் கொலையாளி என்பதற்கான எந்த முகாந்திரத்தையும் ஜெயரத்தினம் இதுவரை சொல்வதாயில்லை. காந்தாரி கிளினிக்கில் வேலை செய்தான் என்பது மட்டுமே அவன் கொலையாளி அடுத்ததாகச் சான்றாக ஆகிவிடாது அல்லவா?
“அதை வுடுங்க சேர், இந்த இராஜராஜன்…” என்று ஆரம்பித்த நிலாப்தீனை “உஷ்” என்று சைகை காட்டிய ஜெயரத்தினம், நிகழ்வின் அடுத்த அறிவிப்பைச் செவிமடுக்கச் சொன்னார்.
“அடுத்ததாக நாம் அன்போடு அழைப்பது நம் கௌரவ விருந்தினர் அவர்களை. நம் மதிப்புக்குரிய வைத்திய கலாநிதி இராஜராஜனை தமிழ் புத்தர் சிலைக்கு மலர் வணக்கம் செய்து, சில நிமிடங்கள் சிறப்புரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். வைத்திய கலாநிதி இராஜராஜன் அவர்கள் யாழ் …” என்று அவனின் கல்லூரி, படித்த பல்கலைக்கழகம், பட்டங்கள், வெளிநாட்டு மேற்படிப்பு என அறிவிப்பாளினி தொடர்ந்து வரிசைப்படுத்த, முன்வரிசையில் அமர்ந்திருந்த இராஜராஜன் மிதப்புடன் எழுந்து நின்றான். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா அணிந்திருந்தான். புத்தர் சிலையை நெருங்கிப்போய் சில கணங்கள் கண் மூடித் தொழுதுவிட்டு ஒலிவாங்கியின் முன்னால் போய்க் கம்பீரமாக நின்றான்.
“சேர்… ”, நிலாப்தீன் கண்களை ஆச்சரியத்துடன் அகல விரித்தபடி ஜெயரத்தினத்தினத்திடம் திரும்ப அவர் கண்ணடித்தார்.
“பாத்தீரா, நம்மட சிங்கன் வந்திட்டான்.”
“ஸ்டில்... எப்பிடி சேர்? விசாரிக்காமலேயே சொல்லலாமா? ஆள் வேற படிச்சவர். சிவலையாவும் இருக்கிறார். சேர்ஜன்வேற. ஒரு புத்தர் சிலயத் திறக்கிறவர் கொலையாளியா இருக்கமுடியுமா?”
“இந்த நாட்டில புத்தர் சிலையத் திறக்கிறவன் எல்லாமே கொலையாளிதான் நிலாப்தீன்.”
“அதுக்கு எங்களிட்ட அதுக்கு என்ன ஆதாரம் இரிக்கி?”
“முதலில தலைவர்ட பேச்சைக் கேட்டு ரசியும். இதுக்குப் பிறகு எங்களுக்குக் கேக்கிற சான்ஸ் கிடைக்காது”
இராஜராஜனின் பேச்சு ஆரம்பித்திருந்தது.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். எங்கள் தமிழ் மன்னன் இமயவரம்பன் சேரலாதன் எவரெஸ்டில் கொடியை நாட்டினான் அல்லவா. எவரெஸ்டில் முதற்தடவை காலடி வைத்ததே தமிழன்தான். டமிலன் இஸ் த பர்ஸ்ட் பேர்சன் டு ஸ்டெப் ஒன் மவுண்ட் எவரெஸ்ட். அக்காலத்தில் இமயம் முதல் குமரிவரை அன்பே சிவம் என்ற தமிழ் முழக்கம் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்போது நேபாளத்துச் சிற்றரசன் சித்தார்த்தன் நம் தமிழ் மன்னனுக்குத் திறை செலுத்த வந்த சமயத்தில் இந்த அன்பே சிவமென்ற தத்துவத்தில் முற்றிலும் ஈர்க்கப்பட்டான். அதனால் ஒரே இரவில் தன் அன்பான மனைவியையும் பிள்ளையையும் தவிக்க விட்டுவிட்டு, அன்பைப் போதிக்கவென வீட்டை விட்டு வெளிக்கிட்டுப் போயிட்டான். அந்த மன்னர்தான் இந்தக் கௌதம புத்தர். நம் பெருமைமிகு தமிழர். பௌத்தம் மேன்மையுற்றதே தமிழர்களால்தான் மக்களே. அயோத்திதாசர் ஒரு தமிழ் பௌத்தர். தமிழின் மிகச்சிறந்த வைத்தியர்களில் ஒருவர். காவி உடை அணிந்து சிகாகோவில் முழங்கிய எங்கள் விவேகானந்தர் ஒரு தமிழ் பௌத்தர். அவ்வளவு ஏன், திருவள்ளுவர் ஒரு பௌத்தர் தெரியுமா? சைவமும் பௌத்தமும் ஒரே சீப்பில் இருக்கும் இரட்டை வாழைப்பழங்கள்போல. பழம் இரண்டு. ஆனால் தோல் ஒன்று”
நிலாப்தீனுக்கு எதுவுமே புரியவில்லை.
“சேர், பழம் ரெண்டு, தோல் ஒன்னுன்னா என்ன?”
“ஆளைத் தோலுரிச்சு விசாரிக்கும்போது அதையும் கேளும், சீமான் சொல்லுவான்”
இராஜராஜன் இப்போது இரண்டாவது கியருக்குத் தாவியிருந்தான்.
“நண்பர்களே, நான் லண்டன் மாநகரில் மகப்பேற்று மேற்படிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது என்.எச்.எஸ் வைத்தியசாலையில் ஒருமுறை லண்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் காதலி பிரசவம் பார்க்க வந்திருந்தார். அவரிடம் நான் ‘ஐ ஆம் எ டமில்’ என்று பெருமையுடன் சொன்னபோது அவர் கேட்ட ஒரே விசயம் என்ன தெரியுமா? ‘உங்கள் திருவள்ளுவர் சுகமாக இருக்கிறாரா?’ என்று. நான் சொன்னேன், திருவள்ளுவரும் சுகம், அவர் தமிழ்ப் பாலைக் குடிக்கவெனக் கருவிலேயே சப்புக்கொட்டியபடி காத்திருக்கும் நம் யாழ்ப்பாணத்து எதிர்காலச் சந்ததிகளும் சுகம்”
கூட்டம் விசிலடித்துக் கைதட்டியது.
“அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் சேர்” என்று முழித்த நிலாப்தீனை சைகையாலே அடக்கிய ஜெயரத்தினம் தொடர்ந்து பேச்சைக் கேட்கச் சொன்னார்.
“அதைக்கேட்ட பொரிசின் காதலி உங்களைப்போலவே பெரிதும் இரசித்து என்னைச் சிலாகித்தார். அந்தச் சமயம் ஒரு வள்ளுவரின் மகனாக, ஒரு திருக்குறளையும் உரைத்து, அவரை வழி நடத்த வேண்டிய என் தமிழ்க் கடமையை உணர்ந்தேன். மனைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்த குறள் எனக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
‘வனிதைக்குப் பெருமை மனைமாட்சி, மற்றதன்
வதுவைக்குப் பின்னர் மகவு’
என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கிறார் தங்கையே. பெண்ணுக்கு இரண்டு பெருமைகள். ஒன்று அவள் தன் வீட்டை எப்படிப் பராமரிக்கிறாள் என்பது. பிரதமரின் மனைவியாக இருந்தாலும் டவுனிங் தெரு வீட்டை நீயே கூட்டித் துப்புரவாக்குவதுதான் பெண்ணாக உனக்குப் பெருமை. மற்றது இன்னமும் முக்கியமானது. வள்ளுவப் பெருமகனார் என்ன சொல்கிறார் என்றால், பெண் என்பவள் ஒருபோதும் திருமணத்துக்கு முன்னர் குழந்தை பெறுதல் கூடாது. நீ இப்போது கருத்தரித்து இருப்பது அழகல்ல தங்கச்சி. உடனே நீயும் பிரதமரும் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இப்படி நான் சொன்னவுடன், அடுத்த கணமே பொரிஸ் ஜோன்சனின் காதலி மனம் திருந்திவிட்டார். இரண்டு கிழமைகளில் அவர்கள் திருமணமும் முடித்துவிட்டார்கள். அவர்களது திருமணத்துக்கு வந்தவர்களிடம் திருக்குறளைப் பரிசாகக் கொடுத்தார்கள் நண்பர்களே. ஒரு பிரித்தானிய முதல் பெண்மணியின் கற்பினைக் காத்தவர் நம் வள்ளுவப் பெருந்தகை நண்பர்களே.”
கூட்டம் பெருமிதத்துடன் கைதட்டியது. நிலாப்தீன் வாய் பிளந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“திருவள்ளுவர் நெசமாவே நிக்காக்கு முன்னம் புள்ள பொறக்கூடாதுன்னு சொன்னாரா சேர்?”
“ஆருக்குத் தெரியும்? டொக்டர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்”
“என்ன சேர் இது? அரபுக்காரன் குசுன்னா அத்தருவாசம் என்னிறமாதிரி. உங்க ஊரில டொக்டரிண்டா தலைல தூக்கி ஆடுவீங்களா சேர்?”
“நாங்கள் எல்லாத்திக்கும் டொக்டர்மாரிட்டதான் அட்வைஸ் கேப்பம் நிலாப்தீன். எங்கட சமூகத்தில இருக்கிற மத்த ஆக்களை ஏன் நாயே எண்டுகூட நாங்கள் கணக்கெடுக்கிறதில்லை. ஒருத்தன் அஞ்சு டிறோலர் வச்சி அந்தமாதிரி மீன் பிடிப்பான். அவனைச் சட்டை செய்யமாட்டம். ஒருத்தி தாதியா ஆஸ்பத்திரில உயிரைக்குடுத்து சேவை செய்வா. ம்ஹூம். மேசன், கடைக்காரர், டீச்சர் எண்டு எத்தினையோ துறைல கலக்கிற ஆக்கள் இருப்பினம். கனபேர் கலக்காம கர்மவீரராய் சிவனே எண்டு வாழ்ந்திட்டும் போவினம். அவையள் எல்லாம் பெரியாக்கள் இல்லையா? ஆனாப் பள்ளிக்கூட பரிசளிப்பு விழா எண்டா நாங்கள் டொக்டரைத்தான் போய்க் கூப்பிடுவம். கூடப்படிச்ச நண்பனே, நீ டொக்டரா இருந்தா ஊருக்குத் திரும்பி வரேக்க பக்கத்தில நிண்டு செல்பி எடுத்து ‘மை பிரவுட் பிரண்டு’ எண்டு போட்டோ போடுவான் நிலாப்தீன். இல்லாட்டி மெசேஜ் பண்ணினா ரிப்ளையே பண்ணமாட்டான். ராணி காமிக்ஸ் மட்டுமே படிச்சிருப்பான். ஆனா அவன் டொக்டர் எண்டதுக்காக புத்தக வெளியீட்டில முதல் பிரதி வாங்க வருவான். உடுக்கைக்கும் கெஞ்சிராவுக்கும் வித்தியாசம் தெரியாத குஞ்சிரா எண்டாலும் டொக்டரா இருந்தாப் போதும், மிருதங்க அரங்கேற்றத்துக்கும் அதுதான் சீப் கெஸ்டு. சரி அறிவில்லாத கேனைக் கழுதையள்தான் அதுகளைக் கூப்பிடுது எண்டா இதுகளும் குண்டியை ஆட்டிக்கொண்டு போய் நிக்குங்கள் ஐஸே.”
நிலாப்தீனுக்கு ஒன்று புரிந்தது. ஜெயரத்தினத்துக்கு இந்தக் கொலையாளியைக் கண்டுபிடித்துக் கேஸை முடிப்பதில் ஆர்வமேயில்லை. அவரிடம் சொல்வதற்கு ஏராளம் விசயங்கள் இருக்கின்றன. ஆனால் கேட்பதற்கு ஆள் இல்லை. வயோதிபக் காலத்தில் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனுசனும் மனிசியும் ஆட்டுக்குக் குழை குத்திக்கொண்டு காலத்தைக் கழித்துச் சலித்துப்போயிருக்கவேண்டும். நிலாப்தீன் வசமாக வந்து சிக்கிவிட்டார். ஒர் பெருமூச்சுடன் ‘செரியா கேக்கலை சேர், வாங்க நாங்கள் அங்கிட்டு போலாம்' என்று நிலாப்தீன் ஜெயரத்தினத்தை அழைத்துக்கொண்டு ஒரு ஒதுக்குப்புறத்துக்குப் போனார்.
“சொல்லுங்கோ சேர். இராஜராஜன்தான் கொலையாளி என்னுறதுக்கு எவிடன்ஸ் இரிக்கா?”
ஜெயரத்தினம் மீண்டும் புன்னகைத்தார்.
“எனக்கு அப்பவே இவன்மேலதான் சந்தேகம் நிலாப்தீன். எல்லாக் கொலைகளும் நேர்த்தியா, அலுங்காம குலுங்காம செய்யப்பட்டிருந்தது. இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு இறந்தபின்னர் பண்டேஜ்வேற கட்டியிருந்தான். ஒரு சைக்கோதான் இப்பிடியான வேலையைச் செய்யமுடியும். போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட்டும் அதைத்தான் உறுதிப்படுத்துது”
“ஆனா சேர், அத பண்டேஜ் கட்டத் தெரிஞ்ச நேர்ஸ்கூட செய்திருக்கலாம்தானே. ஒரு முதலுதவி கோர்ஸ் செய்தாக்கூட பண்டேஜ் கட்டலாம். டொமினிக்கூட கிளினிக்கிலேயே வேலை செய்யிறவன். கட்டமாட்டானா என்ன?”
“யெஸ், ஆனா, மெல்வின் தந்த லிஸ்டில சிவகடாட்சம், தயாளினிண்ட பேர் மிஸ்ஸாகியிருந்தது அல்லவா? அவையள் காந்தாரி கிளினிக்குக்குப் போனது உண்மை. ஆனால் விசயம் வெளிய தெரியக்கூடாது எண்டு புது ஓட்டோல போய், பொய்யான பெயரில பதிஞ்சு, டொக்டரை சந்திச்சு செக் பண்ணீட்டு , கம்மென்று திரும்பியிருக்கிறினம். அவையள் போனதா சொன்ன நாளில டொமினிக் லீவு நிலாப்தீன். அண்டைக்கு அவன் கொழும்பில ஒரு கலியாண வீட்டில நிண்டதுக்கு ஆதாரம் இருக்கு. ஆக டொமினிக்குக்கு தயாளினி பிள்ளைத்தாய்ச்சியா இருக்கிறது தெரியிறதுக்குச் சான்சே இல்லை. அத்தோட நான் முதலே சொன்னதுபோல, முதல் மூண்டு கொலை நடந்த சாமத்திய வீடுகளிலும் டொமினிக் போட்டோகிராபர் இல்லை. அந்தக் கிளினிக்கில தயாளினி பிள்ளைத்தாய்ச்சி எண்டு தெரிஞ்ச, அவையளிண்ட விபரங்கள் தெரிஞ்ச ஒரே ஆள் இராஜராஜன்தான். பேச்சோட பேச்சா தங்கட மகளுக்கு சாமத்திய வீடு எண்டு அவையள் சொல்லியிருக்கலாம். ஏன் டொக்டர் எண்டபடியா இன்வைட் பண்ணி கார்டும் குடுத்திருப்பினம். இதைவிட இராஜராஜனுக்கும் சிவகடாட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததுக்கான ஒரு தடயமும் கிடைச்சுது. அந்தத் தடயத்தில இந்தக் கொலையளை அவன் ஏன் செய்தான் எண்டதுக்கான மோட்டிவும் கிடைச்சுது நிலாப்தீன்.”
“இவ்வளவு விசயம் தெரிஞ்சிருக்கு, எனக்கு ஏன் சொல்லலை சேர்?”
“எல்லாத்தையும் சொன்னால் டிப்பார்ட்மெண்ட் எனக்கு நாக்கை வழிச்சிட்டுப் போயிடும் நிலாப்தீன். ஏற்கனவே சாமிகா எண்ட முதுகில குத்தினவள். அதாலதான். நீங்கள் குறை நினையாதீங்கோ”
“பரவாயில்லை சேர். காரியம் ஆகணும்தானே. செரி அந்தத் தடயம் என்ன?”
“நாங்கள் சிவகடாட்சத்தின் அலுவலக அறையில் தயாளினியோடு பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? அப்போது மேசையில் சில சாதகக் குறிப்புகள் கிடந்தன. அனேகமா அதெல்லாம் அந்தக் கிழமை சிவகடாட்சம் பார்த்த குறிப்புகளாக இருக்கலாம் என்று சும்மா தட்டிக்கொண்டிருந்தன். கெஸ் வட் ஐ பஃவுண்ட்?”
“இராஜராஜனிண்ட குறிப்பா சேர்?”, நிலாப்தீனுக்குக் கண்கள் பளிச்சிட்டன.
“கரக்ட். வீரன் எண்பத்தொராம் ஆண்டு பிறந்திருக்கிறான். நாற்பத்திரெண்டு வயசு ஆயிட்டுது. கலியாணப் பொருத்தத்துக்கு அவனிண்ட குறிப்பு சிவகடாட்சத்திடம் சென்றிருக்கு”
“வட் டு யு மீன்? இராஜராஜன் இன்னமும் சிங்கிளா? யாழ்ப்பாணத்தில நாற்பத்திரெண்டு வயசுவரைக்கும் ஒரு எலிஜிபில் சேர்ஜனை விட்டு வைப்பாங்களா சேர்?”
“அதுதான் எனக்கும் ஆச்சரியமா இருந்துது நிலாப்தீன். நாடகத்தில டொக்டரா நடிச்சாலே, மேடையை விட்டு இறங்கமுதலே யாழ்ப்பாணி மாப்பிள்ளையா முற்றாக்கிடுவான். இவன் எப்பிடி இன்னமும் காதலிக்காமல், கலியாணம் சரிவராமல் திரியிறான் என்றொரு சந்தேகம் எனக்கு வந்தது. அப்புறம்தான் அந்தக் குறிப்புக்குக் கீழே எழுதியிருந்த சாத்திரக் கவிதையைக் கவனிச்சன்.”
“சாத்திரக் கவிதையா சேர்? என்ன அது?”
“நீறு அணிந்த கடவுள் நிறத்தவன்
சேறு அணிந்த மனத்தை வரித்தவன்
பேதை, பெதும்பை, மங்கை அன்றி
வேறு பெண்டிரை அகத்தில் தரித்திடன்”
“வாட் இஸ் திஸ் சேர்? சாத்திரக் கவிதையைக் கேட்டாலே எனக்கு மூத்திரம் வருது.”
“எனக்கும் விளங்கேல்ல நிலாப்தீன். அப்புறம் நம்ப நண்பன் ஒருத்தன், கவிஞன், மெல்பேர்னில இருக்கிறான். இப்ப பெரிசா ஆள் கவித எழுதிறதில்ல. ஆனா கேட்டா எல்லாத்துக்கும் மணியா விளக்கம் குடுப்பான். அவனுக்கு உடனேயே கவிதையை வாட்சப்பில அனுப்பி விளக்கம் கேட்டன். உடன பதில் வந்திட்டுது. இது சாத்திரிக்கு சாத்திரி எழுதின ஒரு எச்சரிக்கைக் கவிதையாம். பட்டை அடிச்சு சாமிமாதிரித் தெரியிற இராஜராஜனை நம்பாதீங்கை. அவனிண்ட மனம் முழுக்க சேறு. இவன் பேதை, பெதும்பை, மங்கையைத் தவிர வேற பொம்புளையளே வேண்டாமெண்டு நிக்கிறான், இவனுக்கு எந்தக் குறிப்பையும் பொருத்திக் குடுத்து பெண்ணோட வாழ்க்கையைச் சீரழிக்கவேண்டாம் என்று அலேர்ட் பண்ணிறதுக்காக எழுதின கவிதையாம். சாத்திரிகளுக்கிடைல மத்தாக்களுக்கு விளங்காதமாதிரி இப்பிடி சங்கேத பாசைல வெண்பா எழுதிக்கொள்ளுவாங்களாம். நான் கேள்விப்பட்டதில்லை.”
“சிவகடாட்சத்துக்கு இவ்வளவு தமிழறிவு இரிந்திருக்குமா சேர்?”
“எனக்கும் அந்த டவுட் வந்துது. அரசியல்வாதிவேற. தமிழ் தெரிஞ்சிருக்க சான்சே இல்ல. ஆனா இது சிவகடாட்சம் எழுதியிருக்கோணும் எண்டதுமில்லத்தானே. இதுக்கு முதல் இந்தக் குறிப்பைப் பார்த்த சாத்திரியாவும் இருக்கலாம். அல்லது அதுக்கு முந்தின ஆளாவும் இருக்கும். எங்களுக்கு மோட்டிவ்தானே முக்கியம் நிலாப்தீன்?”
“ம்ம்ம். அந்தப் பேதை, பெதும்பை, மங்கையைத் தவிர வேற பொம்புளையளே வேண்டாமின்ன என்ன அர்த்தம் சேர்?”
“பேதை எண்டால் அஞ்சு தொடக்கம் ஏழு வயசு சிறுமி. பெதும்பை எண்டால் எட்டு தொடங்கி பதினொண்டு. மங்கை எண்டால் பதின்மூன்று வயசுவரைக்கும். இந்தக் கேடு கெட்ட பயலுக்கு பதின்மூண்டு வயசுக்குள்ள இருக்கிற சின்னப் பெட்டையள்தான் கேக்குதாம். சனியன்.”
அதைக்கேட்டு நிலாப்தீன் வெலவெலத்துப்போனார்.
“அல்லாவே. என்ன கொடும இது? குடிக்கிறது மூத்திரம், கொப்பளிக்கிறது பன்னீரா இல்ல இரிக்குது கத? உடம்பு முழுக்க அழுக்கு. ஆனா ஊருக்குள்ள பெரிய ஆளாத் திரியிறானா?”
“இது மட்டும்தான் எண்டால் நான் நம்பியிருக்கமாட்டன் நிலாப்தீன். ஆனா எனக்கு எப்ப இவன்மேல சந்தேகம் வந்துதுதோ, அப்பவே நான் லண்டனில டொக்டரா இருக்கிற எண்ட மகளுக்கு கோல் பண்ணி, இவனைப்பத்தி சாதுவா விசாரிச்சுப் பார்த்திட்டன். அப்பத்தான் தெரிஞ்சுது. சிங்கன் அங்கையும் தமிழாக்களிண்ட பார்ட்டில யாரோ சின்னப்பிள்ளையோட தனகினவனாம். வேறையும் ரெண்டு மூண்டு கொம்பிளெயின் இருக்கிறதாக் கேள்வி. ஆனாலும் இது வெளிய வராமல் எங்கட ஆக்கள் அமுக்கிட்டாங்கள். ஏன் எண்டு கேட்டதுக்கு, உலகத்தில எல்லாரும் கள்ளர்தான், ஆனா இவன் பாவம் பிடிபட்டுட்டான் எண்டினமாம். மகள்தான் சொல்லிச்சு. படிச்ச டொக்டர் எண்டதால இதுக்குப் பிறகும் அங்கை தமிழ்ப்போட்டிகளுக்கும் பழையமாணவர் சங்க விழாக்களுக்கும் அவனை மேடைல ஏத்தி கௌரவிச்சிருக்கிறாங்கள்.”
“என்ன சேர்? அப்டி அந்த ஊரில ஒரு நல்ல மனுசன் இல்லியா? எறும்புக்கு மூத்திரம் ஏகப் பெரு வெள்ளம்மாதிரி காஞ்சு கிடக்குதா நம்முட தமிழினம்?”
“எங்கட சனத்துக்கு அறிவில்லை ஐஸே. அதுதான் பிரச்சினை. டொக்டர், எஞ்சினியர், எக்கவுண்டண்ட் எண்டால் எங்கட ஊரில ரேப் பண்ணினாலும் பரவாயில்லை. அவன் நல்லவந்தான் நிலாப்தீன். எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், இவங்கள் எல்லாரையும் நாலாம் மாடிக்குக் கொண்டுபோய்த் தொங்கவிடோணும் எண்டு சிலவேளை நினைப்பு வரும். ஆக்களைத் தலைகீழாக் கட்டிப்போட்டு, ஒவ்வொரு கேள்வியாக் கேட்டு உரிக்கோணும். நீ பொன்னகரம் வாசிச்சியா? இல்லை ஐயா. அப்புறம் எதுக்கு மூதேவி புத்தக வெளியீட்டுக்கு முன்னால போய்க் குந்தினி? உனக்கு கல்யாணி ராகத்திண்ட ஆரோகணம் தெரியுமா? இல்லை ஐயா. அப்ப எதுக்கு நாயே உனக்கு தியாகராஜ உற்சவத்தில ரிசர்வ்ட் சீற்று? உனக்கு பெண்டதலன் எண்டா என்னெண்டு தெரியுமா? இல்லை ஐயா. பிறகெதுக்கு கூலிங்கிளாசோட விளையாட்டுப்போட்டில வண்டியையும் தள்ளிக்கொண்டு போய் நிண்டு, கப்பைத் தூக்கிக் குடுக்கிறாய்? உனக்கு கார்ல் மார்க்சையோ, அடம் ஸ்மித்தையோ, திருவள்ளுவரையோ, அம்பேத்கரையோ, குறைந்தபட்சம் கேப்பாபுலவுல நடக்கிற பிரச்சனையாவது தெரியுமா? ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனைக்காக வீதியில
இறங்கி குரல் கொடுத்தியா? இல்லை ஐயா. இல்லை ஐயா.பிறகெதுக்கு நீ அரசியல், சிவில் சமூகம் எண்டு போய் முன்னுக்கு நிக்கிறாய்? தவறு செய்துவிட்டேன் ஐயா. மன்னித்தருளவேண்டும். அப்ப நீ இனி எங்கெல்லாம் போவாய் சொல்லு? ஒரு கிளினிக் திறப்பு விழாவுக்கு. மருந்தகம் திறப்பு விழாவுக்கு. பொறியியல் கருத்தரங்குக்கு. கணக்காளர் அவைக்கு, இப்படியான என் துறைசார்ந்த இடத்துக்கு மட்டுமே இனி நான் போவேன் ஐயா. யாராவது வந்து இன்வைட் பண்ணினால் மகனே நீ என்ன சொல்லுவாய்? ஐயா, எனக்கு உந்த விசயத்தில் அறிவில்லை, அந்த மேடையில் ஏறி நிற்கத் தகுதியில்லை. என்னைவிடத் தகுதியானவர்கள் கீழிருக்க நான் முன்னிலைப்படுத்தப்படுவது அழகில்லை. நான் வரமாட்டேன் என்று சொல்லுவேன். இல்லை, நீங்கள்தான் வரவேண்டும் எண்டு அந்த லூசுகளும் உன்னிடம் கெஞ்சிக் கேட்டால் என்ன சொல்லுவாய்? அப்போதும் ஐயோ நான் வரமாட்டேன் என்று காலில் விழுவேன் ஐயா. இப்படி அவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபின்னர்தான் செருகி வச்சிருந்த காய்ச்சின கம்பியை வெளியே இழுக்க வேணும் நிலாப்தீன்”
ஜெயரத்தினத்துக்கு சொல்லிமுடிய மூச்சிரைத்தது. ஆனாலும் உடனே துணுக்குற்றுச் சொன்னார்.
“எல்லா டொக்டர், எஞ்சினியர், எக்கவுண்டண்டகளும் அப்படியில்லை நிலாப்தீன். ஒரு சில முட்டாள்களால் எல்லோருக்கும் கெட்டபெயர் வந்துவிடுகிறது எண்டதையும் சொல்லிவைக்கிறன். விசயம் வெளில போனா ஆக்கள் நெருப்பு எடுத்திடுவாஙகள்.”
“அதெல்லாம் வேணாம் சேர். நீங்க செரியாத்தான் சொன்னீங்க. ‘பேசிற எடத்த பேசா வாய் எச்சி வாய்னு’ உம்மா சொல்லுவா சேர். ஆனா நாங்க இப்டியே பேசிக்கின்னு இரிந்தா அவன் தப்பிடுவான். வந்த வேலையைப் பார்ப்பம். வாங்க சேர் அவனைப் போயி அரெஸ்ட் பண்ணுவம்”
நிலாப்தீன் பரபரத்தார். இராஜராஜன் தொடர்ந்து மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். அவன் பேச்சை முதலில் முடிக்கட்டும் என்று ஜெயரத்தினம் அவரை அமைதிப்படுத்தினார்.
“இந்தச் சமூகத்தின் உயரிய மனிதர்களான வைத்தியர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் எல்லாம் தமிழுக்காகப் போராட முன்வரவேண்டும். மக்கள் மந்தைகளாக இருக்கின்ற இந்தச் சூழலில் படித்த நாங்கள்தான் அவர்களுக்குப் புத்தியைப் புகட்டவேண்டும். எம்மைப் போன்றவர்கள் சமூக சேவைக்கு வராவிட்டால் இந்த மக்களை யார்தான் வழிகாட்டமுடியும்?”
நிலாப்தீன் பொறுமை இழந்தார்.
“எனக்கே இழுத்து வச்சு அறையோணும்போல இரிக்கி. இவன் இந்த இழுவை இழுக்கிறான். பத்து மாசப் புள்ளத்தாச்சிக்கு பத்து வருசமா புள்ளபேறு பார்ப்பான்போல. ஆனா இந்த டியூப் லைட் மூளைக்கு ஒன்னு மட்டும் இன்னுமே புரியேல்ல சேர். இவன் ஏன் சாமத்திய வீட்டில தேடிப்போய்க் கொலை செய்யோணும்?”
“சிம்பிள் நிலாப்தீன். சைக்கோ புத்திதான். இவனுக்குச் சின்னஞ் சிறுமிகளில ஒரு கண். ஆள் ஒரு சைல்ட் அபியூசர். சரியா?”
“செரியில்ல சேர்…பரவாயில்ல, மேல சொல்லுங்க”
“இவனிண்ட கிளினிக்கில வாற பேசண்டுகளில, ஆரிட்ட சின்னப் பிள்ளையள் இருக்கு எண்டு பார்த்திருப்பான். ஒவ்வொரு சைக்கோவுக்கும் மூளைல ஒரு குறிப்பிட்ட பட்டேர்ன் ஆழமா பதிஞ்சிருக்கும். இவனிண்ட பட்டேர்ன் எண்டது சாமத்தியப்பட்ட சின்னப் பிள்ளையளை வளைக்கிறது. அதுக்குக் காரணமும் இருக்கு நிலாப்தீன்”
“என்ன சேர் அது?”
“எங்கட கேடு கெட்ட முட்டாள் தாய் தகப்பனுகளும் பிள்ளையள் சாமத்தியப்பட்டோன என்ன செய்யுதுகள்? ‘டேய் இஞ்ச வா, எண்ட பிள்ள பெரிசாயிட்டுது. இது கலியாணத்துக்குப் பூரணமா ரெடி. வந்து தாலியைக் கட்டி, கூட்டிக்கொண்டு போய்க் குடும்பம் நடத்து’, இப்பிடித்தானே மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, ஊரைக் கூப்பிட்டு, விசர்க்கூத்து ஆடுதுகள்? சரியா?”
“… ம்ம்ம் அப்பிடிச் சொல்லாதிங்க சேர். கொச்சையா இரிக்கி. அது ஒரு வழக்கம். பண்பாட்டில வந்துட்டுது. இதுகளும் யோசியாமச் செய்யுதுகள்”
“என்ன நிலாப்தீன் யோசியாமச் செய்யுதுகள் எண்டுறீர்? ஆர்மி மூவ் பண்ணுது எண்டா பக்கத்து வீட்டுக்காரனை வெளிக்கிடச்சொல்லிக் கலைச்சிட்டு, அவன் தாட்டு வச்ச நகைகளையும் எடுத்துக்கொண்டு ஓடின யாழ்ப்பாணி யோசிக்காம எதையும் செய்யுமா? இதுகளுக்கு ஷோக்காட்டுறதுக்கு வேற வழி தெரியேல்ல. பெட்டை சாமத்தியப்பட்டோனை தலை கால் தெரியாம ஆடத்தொடங்கிடுதுகள். அதை இந்த இராஜராஜன் சைக்கோவும் சீரியசா, லிட்டரலா எடுத்துக்கொண்டு, மாமா உன் பொண்ணைக் குடு எண்டு அவையளிண்ட வீடுகளில வீணியை வடிச்சுக்கொண்டு போய் நிண்டிருப்பான். அதுகளும் என்னடா இது விசர், இப்பிடி வந்து நிக்குதே எண்டு பேசிக் கலைச்சிருக்கும். செரியா?”
“ம்ம்ம் …அப்புறம் நானே சொல்லிறன் சேர். அதுக்கு இந்த இராஜராஜன், நீதானே சைத்தானு, என்னுட புள்ள ரெடி, வந்து நிக்காவை பண்ணிட்டு வூட்டுக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு சொன்னியே, இப்ப புளேட்டை மாத்திறியேன்னு கத்தியிருப்பான். புறவு அதுவே விரோதமாகி அவுங்களைத் திட்டமிட்டுக் கொல்லுமளவுக்குப் போயிருப்பான். முதல் கொலையை சிலவேளை உணர்ச்சிவசத்தில் செய்திரிப்பான். அப்புறமா அதுவே சீமானுக்குச் சுதியைக் கிளப்பிவிட, தொடர்ந்து சாமத்திய வூடுகளில கொலையளை செஞ்சிருப்பான். சைக்கோ கில்லருக்கே இருக்கிற சைக்கோ கிக், இல்லியா சேர்?”
“அவ்வளவுதான் நிலாப்தீன். ஒன்று சொல்ல மறந்துவிட்டன். முதல் நான்கு கொலைகளும் நிகழ்ந்த டைமில இராஜராஜன் தன்னுடைய கிளினிக்கில் இருக்கவில்லை என்பதற்கும் ஆதாரம் இருக்கு. டொக்டர் லேட்டாக கிளினிக்குக்கு வருவது சகஜம் என்பதால் எவரும் அவனைத் தேடவும் இல்லை. இந்த எவிடன்ஸுகள் போதும் எண்டு நினைக்கிறன். இனி ஆளைக் கூப்பிட்டு ரெண்டு தட்டுத் தட்ட வீரன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடுவான். சள்ளை வண்டி, சிங்கன் அடி தாங்கமாட்டார் நிலாப்தீன்.”
ஜெயரத்தினம் தன் வயிற்றைத் தடவியபடியே புன்னகையுடன் சொல்ல, நிலாப்தீன் இரண்டு அடிகள் பின்னாலே நகர்ந்து, நிமிர்ந்து நின்று, ஜெயரத்தினத்தைப் பார்த்து, ஓங்கி ஒரு சலூட் அடித்தார்.
“வயசானாலும் உங்குட மூளையும் வாயும் அப்பிடியே இரிக்கி சேர். நீங்கள் இண்டர்போலில இருக்கவேண்டிய ஆள்.”
“நீர் வேறை. எனக்கு ஆட்டுக்குக் குலை குத்திப்போடோணும். பின்னேரம் அவவுக்கு ஒரு சங்கீத அரங்கேற்றம் ஒண்டிருக்கு. கூட்டிக்கொண்டு போகோணும். நானொரு ஓட்டோவைப் பிடிச்சுப் போறன். இராஜராஜனை அரெஸ்ட் பண்ணேக்க நான் நிக்கிறது சரியில்லை பாரும்.”
ஜெயரத்தினம் நிலாப்தீனுக்குக் கைலாகு கொடுத்துவிட்டுக் கோட்டைக் கொத்தளத்திலிருந்து இறங்கி வெளியே சென்றார். நிலாப்தீன் காவல் நிலையத்துக்கு அழைப்பெடுத்து, இரண்டு பொலீஸ்காரர்களைத் தனக்குத் துணையாக அனுப்புமாறு சொல்லிவிட்டு, அரங்கின் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இராஜராஜன் பேச்சை முடிக்கும்வரை காத்திருக்க ஆரம்பித்தார். மதிய வெய்யிலில் தங்கத்தாரகையாய் தமிழ் புத்தர் மின்னிக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ வந்த கடற் காகம் ஒன்று, புத்தரின் தலைக்குமேலே சற்று நேரம் உட்கார்ந்து பேச்சைக் கேட்டுவிட்டு, புத்தரின் தலையில் பீச்சியபடி, யாழ்ப்பாண நூலகத்தின் விதானத்தை நோக்கிப் பறந்து சென்றது.
தொகுப்பாளினி நேரமாகிவிட்டது என்று சொன்னதையும் பொருட்படுத்தாமல் இராஜராஜன் இன்னமும் பேசிக்கொண்டேயிருந்தான்.
“நான் இறுதியாக ஒரேயொரு விசயத்தை மட்டும் சொல்லிவிட்டு அமர்ந்துவிடுகிறேன் மக்களே. நாங்கள் எல்லோரும் சோழர்களின் வம்சா வழிகள். எங்கள் குலத்தின் இளம் சிட்டுகள் எல்லாம் குந்தவைகளாகவும் நந்தினிகளாகவும் பூங்குழலிகளாகவும் தெரிவது அதனால்தான். தஞ்சையிலிருந்து இராசேந்திரன் படையெடுத்து வந்தபோது அவனுடனேயே மண்ணெடுத்து வந்து தம் வீடுகளைக் கட்டியவர்கள் எங்கள் முன்னோர்கள். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டு மண்ணிலும் தாமிரபரணியின் களிமண் கலந்திருக்கிறது. சேர நாட்டின் புட்டும் சோழ நாட்டின் குரக்கனும் பாண்டிய நாட்டின் பச்சரிசியும் உண்டுதான் நாம் வளர்ந்தோம். இதை உணர்ந்து பாரதம் நம்மைக் காத்தருள வேண்டும். முன்னர் எப்படி இந்தியா தன் அமைதிப்படையை அனுப்பி நம்மினத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றியதோ அதுபோலவே …”
ஜெயரத்தினம் கோட்டைக்கு வெளியே, வீதியைக் குறுக்கே கடந்து சென்று, மறுபக்கம் ஓட்டோவுக்காகக் காத்து நின்றார். அருகே பண்ணைக் கரைத் திடலில் சிறுவர்கள் உற்சாகத்துடன் ஊஞ்சலும் சேர்க்கசும் விளையாடிக்கொண்டிருந்தனர். பாலத்தருகே நின்ற ஐஸ்கிரீம் வண்டியில் தாய் ஒருவர் தன் மகளுக்கு ஐஸ் பழம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அதை அந்தச் சிறுமி ஆசையாக ருசித்துச் சாப்பிடும்போது அருகிலேயே நின்ற அவளது தந்தை, அவள் அசந்த கணத்தில் அந்த ஐஸ் பழத்தை விளையாட்டாகப் பறித்துத் தானும் சுவைக்க ஆரம்பித்தார். சிறுமி அடுத்த கணமே வீரிட்டுக் கத்தத் தொடங்க, உடனே தாய்க்காரி தந்தையைச் செல்லமாக ஒரு தட்டுத்தட்டி, ஐஸ் பழத்தை அவரிடமிருந்து பறித்து, தானும் சுவைப்பதுபோல நடித்தாள். சிறுமி இப்போது தந்தையை விட்டுவிட்டுத் தாயோடு மல்லுக்கட்டினாள். உடனே தந்தை தாயிடமிருந்து ஐஸ்பழத்தைப் பறித்து மகளிடம் திரும்பிக்கொடுக்க, சிறுமியும் அதை வாங்கி அவர்கள் இருவரையும் குறுகுறு என்று பார்த்தபடியே ருசிக்க ஆரம்பித்தாள். ஐந்தே நிமிடத்தில் சிறுமி அங்கு நடந்த சண்டையை மறந்து தாய் தந்தை இருவரோடும் கொஞ்சி விளையாடத் தொடங்கினாள். இந்த நிகழ்ச்சியை ஜெயரத்தினம் அப்படியே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தார். அருகே பண்ணைக்கரையில் முளைத்து நின்ற பனை வடலிகளும் மெல்லிய தலையாட்டலுடன் அவர்களின் விளையாட்டைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாற்போல அவருக்குத் தோன்றியது.
தூரத்தே கோட்டையில் இராஜராஜனின் குரல் இன்னமும் முழங்கிக்கொண்டிருந்தது.
“நாங்கள் ஒவ்வொருவரும் தமிழர்கள் என்று, அதுவும் இந்தப் புனித யாழ்ப்பாண மண்ணில் பிறந்த தமிழர்கள் என்று பெருமிதம் கொள்ளவேண்டும் மக்களே”
அத்தனையையும் அள்ளி வழங்கும் கற்பகதரு இந்தப் பனை. ஆனால் அதே கற்பகதருவிலிருந்து எப்படித்தான் இத்தனை பனங்கொட்டைகள் காலத்தின் போக்கில் உருவாகிவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டபடியே முன்னே வந்த ஓட்டோவை மறித்து ஜெயரத்தினம் உள்ளே ஏறினார்.
—- முற்றும் —-
Comments
Post a Comment