இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை நம்மில் பலர் கவனித்திருக்கக்கூடும். அவர்களுடைய கூட்டங்களில் பௌத்தம் பற்றிப் பேசப்படும். நேர்காணல்களில் அவர்களுக்குப் பின்னே புத்தர் வீற்றிருப்பார். இச்சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களில் புத்தர் சிலைகளைக் கவனிக்கமுடியும். இதற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது அம்பேத்கர். அவர் இலங்கைக்கும் பர்மாவுக்கும் சென்று பௌத்த துறவிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பின்னர் நீண்ட யோசனைக்குப் பின்னர் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று பௌத்தம் பிறப்பின் நிமித்தம் பிரிவினைகளைச் செய்யாது அனைவரையும் சமனாக ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.
ஒருமுறை வாசகர் வட்டத்தில் அயோத்திதாசருடைய நூலைப்பற்றிப் பேசினோம். அப்போது கூடுதல் தகவல்களுக்காகத் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியனோடு பேசும் சந்தர்ப்பத்தை அ. முத்துக்கிருஷ்ணன் ஏற்படுத்திக்கொடுத்தார். புனித பாண்டியனிடம் நான் முதன்மையாக வைத்த கேள்வி இதுதான்.
“எப்படி ஒரு அதிகார மார்க்கத்துக்கு எதிராக, அதற்கு சற்றும் குறையாத, அல்லது அதனைவிட அதிகமாக சமகாலத்தில் அதிகார சூறையாடல்களைச் செய்யும் பௌத்தத்தை நாங்கள் கையில் எடுப்பது?”
பௌத்தம் பிறப்பால் ஒருவரைத் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்று பிரிப்பதில்லை என்றார் அவர். பிரிக்கிறதே? மியான்மரில் ரோகிங்கியர்களுக்கு என்ன நிகழ்கிறது? இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன நிகழ்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் அங்கே இருப்பவை பௌத்தம் அல்ல. பௌத்தத்தைப் பயன்படுத்தி மேலே வந்த அதிகார பீடம் என்றார். அவ்வளவுதானே விசயம். இங்கு பிரச்சனை தத்துவங்கள் அல்ல. அவற்றைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடித்து அங்கேயே நிலைத்து நிற்கும் மனிதர்கள்தான். ஆனால் மதங்கள் எல்லாமே அவற்றுக்குத் துணை போகின்றன. தம்மை அவர்கள் பயன்படுத்த சந்தர்ப்பம் கொடுக்கின்றன. அதனாற்றானே பெரியார் பகுத்தறிவை முன்னிலைப்படுத்தினார். அவருடைய அக்கொள்கையை விட்டுவிட்டு ஏன் பௌத்தம் எனும் இன்னொரு அதிகார மையத்தைக் கையில் எடுத்தல் வேண்டும்? மதமும் அதிகாரமும் ஆலமரம்போல. அது ஒரு சிறு மரத்தை ஒட்டித்தான் வளர ஆரம்பிக்கும். ஆனால் பின்னர் செழித்து வேரூன்றியதும் ஆதார மரத்தை அப்படியே நெரித்துவிடும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிவிட்டு, வெறும் இருபது கிலோமீற்றர்கள் தூரத்திலிருக்கும் ஊரில் எந்த மதம் ஒடுக்குகிறதோ தன் மக்களை ஒடுக்குகிறதோ அதே மதத்தையே நீங்களும் உங்கள் ஆயுதமாக எடுத்துக்கொண்டால் என்னமாதிரியான போராட்டம் இது? சோகம் என்னவென்றால், பௌத்தம் மீது இருக்கும் அபிமானம் காரணமாக இந்தச் செயற்பாட்டாளர்களுக்கு ஈழத்தமிழரின் போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் அவ்வப்போது வந்துவிடுகிறது. அவர்களில் சிலர் இன அழிப்புபற்றிக்கூட மூச்சு விடுவதில்லை. ஒருவிதத்தில் அவர்களுக்கு அது “conflicts of interests”.
இதை இக்கணம் எழுதக் காரணமாக அமைந்தது குருந்து மலை சம்பவம். ஈழத்தின் குருந்து மலையில் ஒரு தொல்லியல் தடம் இருக்கிறது. அதன் எச்சங்களைப் பார்க்கையில் அங்கு ஒரு லிங்க வழிபாட்டுக்குரிய தலம் இருந்தமைக்கான சாத்தியங்கள் உண்டு என்று ஓரளவுக்கு வரலாறு பற்றிய தெளிவுள்ளோருக்குப் புலப்படும். அதனூடாக அங்கே தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உறுதியாகிறதா? சரி அதுதான் இல்லை என்றாலும் தொல்லியல் களத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்வதுதானே முறையாகும். ஆனால் இங்கு என்ன நிகழ்கிறது? அது ஒரு பௌத்த தலம் என்று இராணுவக் காவலில் அங்கு ஒரு மிகப் பிரமாண்டமான பௌத்த தூபி அவசர அவசரமாகப் பிக்குகளாலும் பௌத்த தீவிரவாதிகளாலும் அரசு இயந்திரத்தின் ஆதரவோடு (அல்லது அவர்களுடைய ஆசிகளோடு) கட்டப்பட்டு விட்டது. இத்தனைக்கும் நீதி மன்றமும் நாட்டின் சனாதிபதியும் இப்படி நடக்கவிடமாட்டோம் என்று தமிழ் அரசியல் தலைவர்களிடம் உறுதியளித்திருந்தார்கள். இதுபற்றி ஈழத்தமிழர்களுக்கு எழுதிப் புதிதாக எதையும் விளங்க வைக்கவேண்டியதில்லை. காலங்காலமாக இது நிகழும் ஒன்றுதான். அவர்கள் இந்நிலையை நன்றாகவே அறிவார்கள். இப்பதிவு அவர்களுக்கானதுமில்லை. இது தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கானது.
ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு புத்தர் எப்படி அடையாளமாக முடியும் என்பதைத்தான் என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடிவதில்லை. பௌத்தம் தம்மம் மயிர் மட்டை என்ற கதைகளை யாரும் சொல்லிக்கொண்டு வரவேண்டாம். ஒரு சமூகத்தை தானே போதிக்கும் அறத்தின் வழி முன்னகர்த்த முடியாத எந்தத் தத்துவத்தையும் நாம் கொண்டாடத்தேவையில்லை. அவற்றை முன்னிலைப்படுத்தத் தேவையில்லை. அதனாலேயே அதிகாரத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிகோலக்கூடிய இந்து, பௌத்தம், இஸ்லாம், கிருத்தவம், சயண்டோலஜி, யூதாயிசம் போன்ற எந்த மதங்களையும் அரசியல் அமைப்புகளோ, கல்விச்சாலைகளோ, சமூக நீதியாளர்களோ கையில் எடுக்கக்கூடாது என்கிறேன். கடவுள் நம்பிக்கை ஒருவரின் உளப்பிரச்சனைக்கும் தன்னம்பிக்கைக்கும் கைகொடுக்கும் என்றால் அது அவரது தனிப்பட்ட பிரச்சனை. சக மனிதரால் கொடுக்கமுடியாத ஆதரவை ஒரு நம்பிக்கை கொடுக்கிறது என்றால் அதனைத் தடைபோட நாம் யார்? ஆனால் காம இச்சையை, இயற்கை உபாதைகளை, நிர்வாணத்தை நாம் பொதுவெளியில் பொதுவாகப் பகிர்வதில்லையல்லவா? கடவுள் நம்பிக்கையும் அப்படியே இருத்தல் மற்றவருக்கு நலம். அது ஒரு குழு நிலை அமைத்து ஒரு ஆதிக்க மையத்தை நோக்கி நகருதல் எப்போதுமே ஆபத்தில்தான் போய் முடியும். பௌத்தம் இதற்கு விதி விலக்கு அல்ல. சொல்லப்போனால் அதிகாரத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் விதியாகவும் கருவியாகவும் இருக்கும் மதம் அது. அதனை ஒடுக்குமுறைக்கு எதிரான சின்னமாகப் பயன்படுத்துதல் எத்தனை அபத்தமானது?
அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைகளுக்குத் தீர்வாக அந்நாட்டிலிருக்கும் NRA என்ற தேசிய துப்பாக்கிகள் அமைப்பு அபத்தமான யோசனையை முன்வைப்பதுண்டு. “Good guys with guns stop bad guys with guns”. இதனையே அந்த அமைப்பின் ஊதுகுழலான டிரம்பும் முன்மொழிந்தார். உண்மையில் என்ன செய்யவேண்டும்? துப்பாக்கிகளையே தடை செய்து அகற்றிவிட்டால் சோலி முடிந்ததல்லவா? அவுஸ்திரேலியாவில் போர்ட் ஆர்தரில் ஒரு படுகொலை நிகழ்ந்த கையோடு அப்போதைய பிரதமர் ஜோன் ஹொவார்ட் தானியங்கித் துப்பாக்கிகளை உடனேயே தடை செய்துவிட்டார். அண்மையில் கிரைஸ்ட்சேர்ச் படுகொலைக்குப் பின்னர் யசிந்தா ஆர்டனும் அதே தடையை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இதுதானே சிறந்த தீர்வாக இருக்கமுடியும்? அதேபோலத்தான் மத அதிகாரத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் இன்னொரு மத அதிகாரத்தைக் கையிலெடுப்பதன்மூலம் எதுவுமே ஆகப்போவதில்லை. அதிகாரம் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்குப் போவதுதான் ஈற்றில் நிகழும். காற்றுத் திசைமாறியதும் திடீரென்று பார்த்தால் நாங்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ அவர்களே நம் மதத்தின் அதிகாரத்தில் அமர்ந்து நமக்கே ஆணையிட ஆரம்பிப்பார்கள். இந்து மதத்தை இத்தனை வருசங்கள் தம் அதிகாரத்துக்காகப் பயன்படுத்திய கூட்டத்துக்கு பௌத்தத்தையும் அதேபோலப் பயன்படுத்த எத்தனை காலம் எடுக்கும்? தானியங்கித் துப்பாக்கிகளைத் தடை செய்வதுபோல மதங்களையும் பொதுவெளியில் குழு நிலையில் பயன்படுத்தாமற் செல்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்கக்கூடும்.
அதிகாரத்துக்கு எதிராகப் போராட மனிதம் ஒன்றே போதுமானது. மதம் தேவையில்லை.
Comments
Post a Comment