Skip to main content

மூளா தீ


காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார்.

‘லாம்புக்கா? அடுப்புக்கா?’
‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’
காசிம் பாவா உற்சாகமடைந்தார்.
‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’
‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’
‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’
‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உதவாதவன், கொலைகாரன் என்று தெரிந்துதானே வாக்களித்து அனுப்பினோம். அவன் தன்னிலை மாறவில்லை. உண்மையில் எரிப்பதாக இருந்தால் அவனைத் தேரில ஏத்திவிட்ட எங்கள் வீடுகளைத்தானே எரிக்கவேண்டும்? அதைத்தான் செய்யப்போகிறேன்’
மாதனமுத்தா சொன்னதைக் கேட்டதும் டென்சனாகிய காசிம் பாவா வரிசையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டார். நாள் முழுதும் வரிசையில் நின்று ஒருவாறாக அரைப்போத்தில் எண்ணெயை வாங்கியபடி மாதனமுத்தா வீட்டுக்குத் திரும்பியபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மின் வெட்டும் வந்து சேர மாதனமுத்தாவின் மனைவி விளக்கை ஏற்றலாம் என்று நெருப்புப்பெட்டியைத் தேடி எடுத்தார். உள்ளே குச்சி இல்லை. குச்சி இல்லாமல் விளக்கை மட்டுமல்ல, வீட்டையும் எரிக்கமுடியாது என்ற உண்மை அப்போதுதான் மாதனமுத்தாவுக்கு உறைத்தது.
மாதனமுத்தா மீண்டும் கடைக்குப்போனார். கடையில் நெருப்புப்பெட்டி தீர்ந்துபோயிருந்தது. திரும்பும் வழியில் அவரது நண்பரான ஆறுமுகத்தின் வீட்டு கேற்றடியில் நின்று அவரை அழைத்தார். வெளியே வந்த ஆறுமுகத்திடன் ‘ஒரு நெருப்புப்பெட்டி கடனாகக் கிடைக்குமா?’ என்று கேட்டார். ‘பொறு, வாறன்’ என்று உள்ளே போன ஆறுமுகம் வெறுங்கையுடன் திரும்பிவந்தார். ‘விளக்கு வச்சாப்பிறகு நெருப்புப்பெட்டி குடுத்தா வீடு விளங்காது எண்டு மனிசி சொல்லுது’ என்றார். ‘யாருடைய வீடு விளங்காது? என் வீடு என்றால் பரவாயில்லை, நான் எப்படியோ எரிக்கத்தான் போகிறேன்’ என்றார் இவர். ‘இல்லை, தரித்திரம் வந்துவிடும், கொடுக்கமுடியாது, வீட்டை எரிக்கிறதென்றால் சிகரெட் லைட்டர் நல்ல சாமான்’ என்று ஆறுமுகம் உபரியாக ஒரு அறிவுரையும் கொடுக்க கடுப்பில் மாதனமுத்தா தொடர்ந்து நடந்தார்.
‘இந்தத் தமிழர்கள் ஒன்றுக்கும் விளங்காத கூட்டம். குச்சி கேட்டாக் குடுக்கமாட்டினம். ஆனா அவை நாடு கேப்பினமாம். நாங்கள் குடுக்கோணுமாம். ச்சைக். வீட்டைக் கட்டக்கூட இத்தனை சிரமம் இருக்காது, ஆனால் ஒரு வீட்டை எரிப்பது இவ்வளவு கடினமாக இருக்கிறதே? அவனவன் எப்படி ஒரே நாளில் நூறு வீடுகளை எரிக்கிறானோ?’
கவலைப்பட்டபடியே மாதனமுத்தா வீடு வந்து சேர்ந்தார். வீடு இருள் மண்டிக்கிடந்தது. இவர் வாயிற்படியால் உள்ளே நுழையவும் வாசல் நிலத்தில் படுத்திருந்த மனைவிமீது கால் பட்டு இடறி விழுந்தார்.
“ஏண்டி வாசலில கிடக்கிறாய்? வீட்டுக்குத் தரித்திரம்”
“காத்தோட்டமா இருக்கட்டும் எண்டுதான். உள்ள வெக்கையா இருக்கு”
“அதுக்கு மனுசன் வாற வழியிலயா கிடப்பாய்?”
“இது எண்ட அப்பனிண்ட வீடு. நான் கூரையிலகூடக் கிடப்பன், நீ கதைக்காதே”
“நல்லாக்கிட, இண்டைக்கு மட்டும்தான் இப்பிடிக்கிடக்கலாம், ஒரு தீக்குச்சி மட்டும் கிடைக்கட்டும். உன் அப்பன் கட்டின வீட்டை எரிச்சு உன் அப்பன் இருக்கிற இடத்துக்கே அனுப்பப்போறன்”
மாதனமுத்தாவின் மனைவிக்கு சுருக்கென்றது.
“என்னது வீட்டை எரிக்கப்போறியா?”
“பின்ன? இந்த பிஸ்ஸன்களை ஆட்சில ஏத்தினதுக்கு எங்கள் வீடுகளைத்தானே எரிக்கோணும்? அவங்கட வீட்டை எரிச்சு என்ன பிரயோசனம்? நாளைக்கும் நாங்கள்தானே இப்பிடியான பிஸ்ஸன்களை வாக்களிச்சு ஆட்சில ஏத்தப்போறம்?”
மாதனமுத்தாவின் மனைவிக்கு விளங்கிவிட்டது. மனுசனுக்கு முற்றிவிட்டது. அவர் இருட்டில் கையை எட்டினார். வாசல்கரையோரமாய்ச் சாய்த்து வைத்திருந்த பார்த்தடி கையில் சிக்கியது. எடுத்து உடனே சுற்றத் தொடங்கினார். 'குருடி புருசனுக்கு அடிப்பதுபோல' என்று ஊரில் ஒரு சொல் வடை இருக்குமே. அப்படி. சுற்றிச் சுழன்று அடிக்க ஆரம்பித்தார். ‘மின்சாரக் கண்ணா' பாட்டு இறுதியில் ரம்யாகிருஷ்ணன் சுத்திற சுத்துப்போல சுழன்றடித்தார். மாதனமுத்தா ஒரு மூலைக்குள் சென்று பதுங்கினார். ஆனால் இந்த மனுசி அது தெரியாமல் சுற்றிக்கொண்டேயிருந்தது. ‘மின்சாரக் கண்ணா… மின்..சார கண்ணா…’ ஷோகேஸ் உடைந்தது. ‘மின்சார…’ ஸ்டூலில் எரியாமல் வைக்கப்பட்டிருந்த மேசை விளக்கின் சிமினி பறந்தது. குடித்துவிட்டு மண்டியோடு அப்படியே வைத்திருந்த தேத்தண்ணிக் கப் நொறுங்கியது. ஊருலகம் சுற்றிக் களைத்ததில் பால் குடிக்கலாம் என்று உள்ளே நுழைந்த வீட்டுப்பூனையும் அடி வாங்கியது. மனுசி சூறாவளிபோலச் சுற்றிக்கொண்டேயிருந்தது. மாதனமுத்தா மாத்திரம் எந்த ஜதியும் சொல்லாமல் மூலையில் ஒடுங்கிப்போயிருந்தார். நித்யஶ்ரீயின் ஆலாப்பு உயரப்பறந்து ஈலோன் மஸ்குடன் செவ்வாய்க்கிரகத்துக்குப் போய்க்கொண்டிருந்தது. “மின்சார….கண்ணா…”. பஞ்சதன் ஸ்டூடியோவின் கண்ணாடி யன்னல்களும் தெறித்துப் பறந்தன. “மின்சார……கண்….”
மின்சாரம் வந்துவிட்டது.
டியூப் லைட்டுகள் தட்டுத்தடுமாறி ஒளிர ஆரம்பிக்க, மாதனமுத்தாவின் மனைவி இப்போது சுற்றுவதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். மல்டி பரல் அடி வாங்கிய சாவகச்சேரி வீடுபோல அவர்களுடைய ஹோல் நொறுங்கிப்போய்க்கிடந்தது. மனிசிக்கு இருந்த ஆத்திரம் இரட்டிப்பாகி மாதனமுத்தாவைத் தேடினார். சிங்கன் செற்றிக்கு அருகே மூலையோரமாக ஒடுங்கி உட்கார்ந்திருந்தார். பயத்தில் வியர்த்து அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட பொக்ஸ் அடிக்கப்பட்டிருந்தார். தப்பமுடியாது என்று தெரிந்துவிட்டது. அடி விழப்போகிறது. உயிர் தப்புவதே சிரமம் என்று தோன்றியது. தப்பினால் கைகால்கள் விளங்காமல் தன் மீதி நாட்களைக் கழிக்கவேண்டிவரும். என்ன செய்வது. அவள் கால்களில் விழுந்து அழுது பார்க்கலாம்.
மாதனமுத்தா யோசித்துக்கொண்டிருக்கையில் அவரது மனைவி பார்த்தடியும் கையுமாய் நெருங்கிவந்தார்.
“என்ன நீ என் வீட்டையே எரிக்கப்பார்க்கிறாயா? அவ்வளவு தைரியமா?”
“இல்லை, அது, சும்மாதான் அப்படிச்சொன்னேன். யாராவது தங்களது வீட்டைத் தாமே எரிப்பார்களா? லூசா எனக்கு?”
அவ்வளவுதான். மாதனமுத்தாவின் மனைவியின் கோபம் தணிந்துவிட்டது.
“அதானே பார்த்தன், நீயாவது எரிப்பதாவது. சரி எழும்பி வா. சாப்பிடுவம். பின்னர் வீட்டைத் துப்பரவு செய்யவேண்டும். பிஸ்ஸன்கள் திரும்பவும் கரண்டைக் கட் பண்ணிடுவாங்கள்”
அவர் பார்த்தடியை நீட்ட மாதனமுத்தா அதைப் பிடித்து நிதானமாக எழுந்தபடியே கேட்டார்.
“பலயா குழம்புதானே?”
“ம்ம்ம் … பலாக்காய்க்கறியும் இருக்கு.”
மனைவி சொல்ல, மாதனமுத்தா கவனமாக அந்த பார்த்தடியை வாங்கி சுவரில் சாய்த்து வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் போய்க் குந்தினார். மனைவி சாப்பாடு எடுத்துவர உள்ளே போனார். இவர் மேலே கூரையைப் பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னார். நல்லகாலம். தப்பிவிட்டேன். இவ்வளவும் போதும். ரிமோட்டை எடுத்து டிவியைப் போட்டார். டிவியில் சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. மூத்தவர் கோணமாமலையமர்ந்திருக்கிறார் என்று செய்தி சொன்னது.
இருவரும் சோறைப் பிசைய ஆரம்பித்தார்கள்.
சுபம்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...