வாசக நட்புகளுக்கு வணக்கம்.
ஈழத்திலிருந்து வெட்சி எனும் பெயரில் சிறு பத்திரிகை இதழ் ஒன்று அச்சில் வெளியாக ஆரம்பித்திருக்கிறது. வெட்சி தொடர்ந்து முக்கியமான பல இலக்கியப் படைப்புகளைக் கொடுத்து வாசகர்களை முன்னகர்த்திச் செல்ல என் மனப்பூர்வமான வாழ்த்துகள். வெட்சியை ஈழத்திலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நேரடியாகவோ அல்லது தபால்மூலமாகவோ பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த வெட்சி இதழில் நான் எழுதிய “பர்மா புத்தர்” என்கின்ற சிறுகதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இக்கதையின் காலமும் நிலமும் மனிதரும் எனக்கு அவ்வளவு பரிச்சயமானவை அல்ல. ஆனால் அந்தத் தகவல்களைத் துல்லியமாக எனக்கு விளக்கிய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நன்றி. இக்கதையை எழுதிய கணங்களில் எனக்குக் கிடைத்த அனுபவம், வாசிப்பின்போதும் வாசகர்களுக்கு வயப்படும் என்று நம்புகிறேன்.
கதையிலிருக்கும் சிறு துகள் ஒன்று.
//“அப்படிச் சொல்லாதீங்கோ. நீங்கள்தான் மனசு வைக்கவேணும். ஊரில வேற ஒருத்தரிட்டயும் நான் போய்க் கேக்கேலாது. நாகபூசணிண்ட ஊர் எண்டதால அவ்வளவு சவங்களும் கொடுக்குக்க விசத்த வச்சுக்கொண்டு திரியுதுகள். இதுகளிட்ட ஈடு வச்சா காணியை ஒருகாலமும் மீட்க ஏலாது. நீங்கள் நியாயம் தெரிஞ்சவர்.”
பங்கயமும் ஆமத்துறுவும் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் யோகு தனியனாக விகாரை வளவில் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் பொறுமை இழந்து விகாரைக்குள்ளே நுழைந்தான். அங்கே பர்மா புத்தர் நடு நாயகமாக வீற்றிருக்க அருகேயே அமைச்சர் பெருமக்கள்போல முருகனும் பிள்ளையாரும் நாகபூசணி அம்மனும் அவரை சூழ்ந்திருந்தார்கள். யோகு அந்தப் புத்தரையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். பர்மாவிலிருந்து இந்தப் புத்தரைத் தருவிப்பதற்கு அப்பாதான் காசு கொடுத்ததாகத் தாய் சொல்லிக் கேட்டிருக்கிறான். தங்க நிறத்திலிருந்த புத்தர் நன்றாகத் துடைக்கப்பட்டு பளிச்சென்று மின்னினார். தலையில் கோபுரம்போல மணிமுடி அணிந்திருந்தார். இரவுத் தூக்கம் தொலைத்த அதிகாலை சோர்வுக் கண்கள். தோடுகளின் எடை தாளாமல் தொங்கி விழுகின்ற கிழவியின் நீண்ட செவிகள். புத்தர் வேறு நகைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் முகத்தில் சீனத்து முகவெட்டுத் தெரிந்தாலும் ஊன்றிக்கவனித்தபோது அவரும் ஊரவராகத்தான் தோன்றினார். தங்கள் கொட்டிலின் சாமித்தட்டிலும் ஒரு புத்தரைக் கொண்டுவந்து வைக்கவேண்டும் என்று யோகு நினைத்தான். அவனுக்குத் தெரிந்த சாமிகள் எல்லோருடனும் இவன் விளையாடியிருக்கிறான். வீட்டு மாம்பழத்துக்காய் இவனும் முருகனும் சண்டை பிடித்திருக்கிறார்கள். அம்மாவின் செல்லம் யார் என்று பிள்ளையார் அவனோடு முரண்டு பிடித்ததுண்டு. பனங்காட்டில் நாகப்பாம்பு சரசரத்து படமெடுக்கையில் ‘அம்மாளச்சியிட்ட சொல்லிடுவன்’ என்று மிரட்டினால் அது பயத்தில் ஓடிவிடும். தான் புத்தரோடு என்ன விளையாடமுடியும் என்று யோகு யோசித்தான். இப்படியே உட்கார்ந்திருப்பார் என்றால் இவரோடு தாயம் விளையாடலாம் என்று தோன்றியது. அவரது சோகிகளையும் தானே உருட்டிப்போட்டு, அவர் அசந்த சமயத்தில் கூழ் விழுந்தால் அலாப்பி, நாலை எட்டாக்கி, எட்டைப் பழமாக்கி.
“தம்பி, சாமியைத் தொட்டுக்கிட்டு ஊத்தையாக்கிடாதை, அது ஒண்டும் விளையாட்டுச்சாமான் இல்லை”
பங்கயம் இவனைத்தேடி உள்ளே வர ஆமத்துறுவும் பின்னாலே தொடர்ந்தார்.
“அதுக்கென்ன? சாமிதானே, நல்லாத் தொட்டுப்பார்க்கட்டும்,”
//
Comments
Post a Comment