பொன்னியில் செல்வனில் ரகுமான் தனியாக ஒரு தேவராளன் ஆட்டமே ஆடியிருக்கிறார். பொன்னி நதி, காதொடு சொல், அலை கடல், தேவராளன் ஆட்டம் என எல்லாமே ரிப்பீட்டு மோடு பாடல்கள். ஆயினும் இந்தத் தொகுப்பில் ஒரு பாட்டு சீவனை அங்கிங்கு அசைய விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
அதுதான் இராட்சச மாமனே.
தலைவரின் இசையைச் சொல்லவே வேண்டாம். ஷெரயா கோசலின் குரலையும் சொல்லத் தேவையில்லை. ஷெரயா அந்த மென்மையான குரலோடு செய்யும் சங்கதி உருட்டல்களும் பிர்க்கா சாலங்களும் ஆகா. முடிவில் மின்சாரக் கண்ணன் பாலக்காடு ஶ்ரீராமும் வந்து இணைய பாட்டு வேறு தளத்துக்குச் சென்று விட்டது.
பொன்னியின் செல்வன் பாடல்களை நான் ஸ்பொட்டிபையில் கேட்டு வந்ததால் எனக்கு அவற்றின் புகைப்பட வீடியோவைக் காண்கின்ற சந்தர்ப்பம் முதல் சில வாரங்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு நாள் கஜனுக்கும் கேதாவுக்கும் இந்தப் பாடலை அனுப்பி “மக்களே இது ஒரு இராட்சச பாட்டு, பாரு யாரோ ஒரு சிறுமி சுப்பர் சிங்கரில் பாடி, நாலு ஜட்ஜுமார் அழுதாப்பிறகுதான் இந்தப்பாட்டு மெயின்ஸ்றீமைச் சென்றடையும்” என்று மெசேஜ் பண்ணினேன். கேதா உடனேயே அழைப்பெடுத்து அதன் வரிகளைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தான். அதுவரைக்கும் நூறு முறையாவது நான் பாட்டைக் கேட்டிருப்பேன். ஆயினும் பாட்டு கம்சனுக்கும் கண்ணனுக்குமிடையான யுத்தக் காட்சி என்பது என் மண்டைக்குள் ஏனோ ஏறவேயில்லை.
எனக்குப் பாடல்களின் வரிகள் நீண்ட காலத்துக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வருவதுண்டு. சில சமயங்களில் அது பல ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும். யாருடைய பாடலென்றாலும் அப்படித்தான். ஆனால் கேதா அழுத்திச் சொன்னதன் பின்னர் இராட்சச மாமனின் வரிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
கபிலனின் வரிகள். கண்ணன் கம்சனைப் பார்த்து ‘நீ ஒரு வீரன்தான், ஆனால் தேர புத்திகொண்ட அறிவிலி’ என்று எள்ளி நகையாடுகிறான். கம்சன் தன்னை வம்சவழி வந்தரசன் என்றும் நக்கீரனின் புத்திரன் என்றும் பெருமை பேசுகிறான். டேய் பாலகனே அண்டங்களின் சுற்றுகளையும் கண்டங்களையும் வென்றெடுத்தவன் நான் என்று பீற்றுகிறான். ஆனால் கண்ணன் அசருவதாக இல்லை. 'டேய் நான் உனக்கு சின்னப்பிள்ளையாடா?, உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கம்சனிடம் வீம்பு பேசுகிறான். ஆனால் அடுத்த கணமே ‘டேய் ஒரு சின்னப் பிள்ளையை இப்படி வைவது தகுமா?’ என்று கண்ணனுக்கே உரிய பாணியில் தட்டைத் திருப்பிப்போடுகிறான். இப்படி மாறி மாறி பேச்சுவார்த்தைப்பட்டு ஈற்றில் ஜதியும் இசையும் உச்சம் கண்டு கம்ச வதை நிகழ்கிறது.
ஆனால் இந்தப் பாடலை சற்று உள்ளே சென்று கவனித்தால் இது ஒரு காதல் பாடல்தான். கண்ணனை ஷெரயா கோசல் குரலில் பாட வைத்தது வெறும் தற்செயல் அல்லவே. குந்தவை போன்ற ஒரு புத்திசாலி அழகி வந்தியத்தேவன் போன்ற அவசரக்குடுக்கை வீரனைப் பார்த்துப் பாடும் காதல் பாடல்தான் இது. “நீ காட்டு முள்ளில் வேட்டிபோல மாட்டிக்கொள்வதா?” என்பதும் தனக்குப் பிடித்தவனைப் பார்த்து “டேய் தேர புத்தி மூடனே” என்று வைவதும் பெண்களின் இயல்பு அல்லவா? “தொல்லை செய்வதா? பிள்ளை வைவதா? பள்ளி கொள்வதா (கொல்வதா என்று யோசித்தால் சாலப்பொருந்தும்)?” எல்லாமே ஊடலில் குறுந்தொகைப் பெண்கள் மருதத்திணையில் பாடும் தலைவன் ஏக்கப் பாடல்கள் இல்லையா?

ஆண்டாள் கண்ணனை நினைந்து ஏங்கும் பாடல்கள் தமிழில் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் இங்கு கண்ணன் கம்சன் முடிச்சைக் காதலுக்குப் பயன்படுத்திய அழகு இருக்கிறதே. ஆஹா.
“அண்ணை படத்தின் ஒவ்வொரு பாட்டிண்ட வரிகளும் இப்படித்தான், நெய்திருக்கிறாங்கள்” என்கிறான் கேதா.
இசையும் வரிகளும் இப்படி இணையும்போது வேறு என்ன வேணும் ரசிகர்களுக்கு?
Comments
Post a Comment