மழை நின்றும் தூவானம் அடங்காத மனநிலை எனக்கு. வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வு நிகழ்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மனது இறுதி நாள் நிகழ்வினதும் அதற்கான பயணத்தினதும் கணங்களையே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வை இவ்வண்ணமே நடத்தவேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. மன்றை அன்புடையோர் அனைவரும் நிறைத்திருக்க ஒரு பக்கம் ஜனகனின் ஓவியங்களும் மேடையில் அற்புத நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேணும். வெள்ளியின் பட்டறைக் காட்சி நாட்டிய அரங்காய் அமைதல் வேணும். என் மதிப்புக்குரிய முதலாந்தலைமுறை இலக்கிய ஆர்வலர் மட்டுமன்றி இங்கு வளர்ந்த இரண்டாம் தலைமுறை இலக்கியவாதிகளும் வெள்ளி பற்றிப் பேசிடுதல் வேணும். லாகிரியின் மேடைகளைப்போல, நூலை எழுதியவருடன் ஒரு தீவிர வாசகர் சோஃபா உரையாடலை உட்கார்ந்து செய்யவேண்டும். இப்படி ஏராளமான எண்ணங்கள். கனவு காண்பதும் கதை எழுதுவதும் தனித்த செயல். எளிது. ஆனால் எப்படி அவற்றை நடைமுறைப்படுத்துவது?
அப்போதுதான் என் அன்புக்குரிய மெல்பேர்ன் வாசகர் வட்ட நண்பர்களிடம் வெள்ளியின் கொண்டாட்டத்தை நிகழ்த்தித்தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர்களோ எந்தத் தயக்கமுமின்றி மனமுவந்து இந்நிகழ்வைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தம் குடும்ப நிகழ்வினைப்போல இதற்காக உழைத்தார்கள். நாட்கள் நகர நகர, என் மனதில் வெறும் தென்னங் குரும்பையில் செய்த தேராய்க் கிடந்த நிகழ்வு உருள் பெருந்தேராக மலர்வதைக் காண்கையில் உன்மத்தத்தில் திளைக்க ஆரம்பித்தேன்.
‘வினை நலம் வேண்டிய எல்லாம் தரும்’ என்ற குறளடிகளே ஞாபகத்துக்கு வருகின்றன. என் அத்தனை அன்புடையோரும் கூடிவந்து, கூட்டுச்சேர்ந்து இந்நிகழ்வை ஒரு கொண்ட்டாட்டமாக எதற்கு நிகழ்த்தவேண்டும்? நெடுந்தொலைவிலிருந்து ஒன்றரை மணி நேரம் வாகனம் ஓட்டிவந்தும் நிகழ்வில் கலந்துகொண்டவர் பலர். வாசக நண்பி ஒருவர் சிட்னியிலிருந்து இதற்காகவே பயணம் செய்திருந்தார். சங்க நிலத்தின் ஊற்றாம் மதுரையிலிருந்து என் அண்ணன் வந்திருந்தார். இவை யாவும் வினை நலம் செய் பயனன்றில் வேறேது?
யாருக்கு நன்றி சொன்னாலும் அன்பு சிறு மாற்று குறைந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அனைவரும் என் அன்புடையோரே. இவர்தம் உறவை விளிக்க வழியின்றித் தவிக்கையில் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகை வரிகளே துணைக்கு வருகிறது.
Comments
Post a Comment