எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டினோம். பின்னர் நாவற்குழியில் தொலைந்தாலும் வட்டக்கச்சியிலும் ஒன்றாக அவர்களோடு வாழ்ந்தோம். அக்காவுக்கும் தம்பி என்றால் போதும். எனக்கும் அக்கா என்றால் போதும். அத்தானும் ஒரு அற்புதமான மனிதர். எழுபத்தெட்டு வயது. கார் ஓடுவதில்லை. நான் வருகிறேன் என்று இரண்டு பேருந்து அட்டைகளுக்குக் காசு போட்டுத் தயாராக வைத்திருந்தார். ஊபர் நிரலியும் அவர் செல்பேசியில் உயிர்த்திருந்தது.
“இல்லை அத்தான். சொந்தக்காரர், தெரிஞ்சாக்கள் என்று வெளிக்கிட்டா விடிஞ்சிடும். எனக்கு ஸ்கார்பரோவை சுத்திக்காட்டுங்கோ. பனங்கொட்டை பனிக்குளிரில் எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டாமா?”
அத்தான் சிரித்தார். யாருக்கோ ஒரு அழைப்பெடுத்தார். பின்னர் சற்று நேரத்தில் ஒரு ஊபர் வந்தது. அரை மணி நேரப்பயணம். நேரே ஸ்கார்பரோவிலிருக்கும் அடுக்கு மாடி மனைகளுக்கு முன்னே மகிழுந்து போய் நின்றது. நாம் இறங்கவும் ஒருவர் லிப்டிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. மூன்று அடுக்கு உடை, கழுத்துறை, பீனித் தொப்பி அணிந்தபடி அந்த அங்கிள் வந்தார். எண்பத்தைந்து வயது மதிக்கலாம். பத்து வருடங்களுக்கு முன்னர் என்றால் அவரை ஐயா என்றிருப்பேன். இப்போது எனக்கு நாற்பத்து மூன்று வயது. எண்பத்தைந்து வயது ஐயா அங்கிளாகிவிட்டார்.
“தம்பி வாரும். நான் இந்த வெயிலுக்கு இப்பிடி உடுப்புப் போடுறதைப் பார்த்து சிரிக்காதிம். வயசாயிடிச்சு. உடம்பு கொஞ்சக் குளிரையும் தாங்காது. சுடுற வெயிலையும் தாங்காது.”
நாம் பரஸ்பரம் கைலாகு கொடுத்தோம். வழமைபோல எவ்விடம் விசாரிப்புகள்.
“எவ்விடம்?”
“மெல்பேர்ன்”
“அதில்ல, ஊரில எங்க?”
“பிறந்து வளர்ந்தது தின்னவேலி. பூர்வீகம் நயினாதீவு. அதுக்கும் முன்னால ஆபிரிக்கா”
“தின்னவேலில எங்க?”
“இராமனாதன் ரோட்டு”
“அங்க புரக்டர் சுப்பிரமணியத்தை தெரியுமா?”
“அவர்ட வீட்டுக்குக்குப் பின்வீடுதான் நாங்கள் அங்கிள்”
“ஓ ..சேவயரிண்ட மகனா நீர்?”
அங்கிருந்த ஒரு ஷொப்பிங் மோல் உள்ளே சென்றோம். எல்லோரும் ஆளுக்கு ஒரு யாழ்ப்பாண ரீ வாங்கிக்குடித்தோம். என்னைக் காசு கொடுக்க அவர்கள் விடவில்லை. கனடாவிலிருக்கும் எம்மக்களின் வாழ்க்கை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த அங்கிள் முன்னர் யாழ் மாநகர சபையில் பணி புரிந்தவர். 93ல் இவர் கனடா வந்திருக்கிறார். அவர் வந்தபோது ஸ்கார்பரோ அதிகம் மனுசர் அண்டாத இடமாக இருந்ததாம். நிறைய வெள்ளைக்காரர்கள் வாழ்ந்தார்களாம். நம்மாட்கள் வரவர வெள்ளைகள் வெளியேறிவிட்டனவாம். தற்போது புதிதாக நம்மாட்கள் குடிபுகவும் பலகாலமாக இருந்த பழைய நம்மாட்கள் அப்பாலே போய்விட்டார்கள் என்றார். எப்போதுமே புதுக் குடியேறிகள் பழைய குடியேறிகளைத் துரத்திக்கொண்டேயிருக்கிறார்கள் தம்பி என்றார். நான் கேட்கும் மோடில் இருந்ததால் பதில் ஏதும் சொல்லவில்லை.
அவர் அந்த மோலை சுற்றிக்காட்ட ஆரம்பித்தார். இடையில் ஒரு பருப்பு வடையும் சூசியமும் வாங்கிக்கொடுத்தார். நூலகம், வங்கி, கிளினிக் என்று பல இடங்களுக்குக் கூட்டிச்சென்றார். நூலகத்தில் டொராண்டோ வரைபடத்தை எடுத்துத்தந்து கையோடு வைத்திருக்கச்சொன்னார்.
“போனில மப் இருக்கு அங்கிள்”
“சார்ஜ் போனா என்ன செய்வீர்?”
நான் கேட்கும் மோடில் இருந்ததால் பதில் ஏதும் சொல்லவில்லை. நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் பல இருந்தன.
“அடிக்கடி வந்து வாசிக்கறனிங்களா அங்கிள்?”
“இல்ல தம்பி. எண்பத்தஞ்சு வயசு ஆச்சுது. எனக்கு இனித் தெரியறதுக்கு என்ன இருக்கு? தெரிஞ்சுந்தான் என்ன செய்யிறது?”
மோலிலே பலர் நடை பயின்றுகொண்டிருந்தார்கள். எல்லோருமே வயதானவர்கள்தான். ஒரு கிரேக்க வயோதிபர் குழு கூடியிருந்து கோப்பி குடித்துக்கொண்டிருந்தது. தமிழர்கள் பலர் ஒலிம்பிக் உள்ளரங்கில் நடப்பதுபோல விசுக்கி விசுக்கி நடந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் அங்கிளைப்பார்த்ததும் நின்று சில வார்த்தைகள் பேசினார்கள்.
“இவர் மெல்பேர்னில இருந்து வந்திருக்கிறார். நல்ல தம்பி. நான் ஸ்கார்பரோவை அவருக்குக் காட்டுறன்”
நான் அந்தரப்பட்டு சிரித்தேன். என்னை நல்ல தம்பி என்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. நல்ல தம்பியா இரு என்ற அர்த்தமே அதில் இருந்ததாய்ப் பட்டது. ஒரு சீனத்துப் பல்பொருள் அங்காடியை அவர் இப்போது சுற்றிக்காட்டினார்.
“நீங்கள் ஸ்கார்பரோவை விட்டு வெளியே எங்கையாவது இருந்திங்களா அங்கிள்?”
“இந்தச் சந்தியை விட்டுக்கூட வேறேங்கையும் போகேல்ல. அந்தா தெரியுது பள்ளிக்கூடம். அதில வாட்ச்மேனா இருந்தன். பிள்ளையளும் அங்கேயே படிச்சுதுகள். அப்ப ஒரு வீடு இருந்தது. இப்ப அத வித்திட்டு பிளாட்டுக்குப் போயிட்டம். நானும் அவவும்தான். ஒருக்கா வீட்டுக்கு வாருமேன். இரசம் பிரிட்ஜுக்க இருக்கு. சூடாக்கிக் குடிக்கலாம். இரசத்தை பிரிட்ஜுக்க வைக்கலாம் எண்டதுகூட எனக்குக் கனடா வந்துதான் தெரியும் மோன்”
“நீங்களும் சமைப்பிங்களா?”
“மீன் குழம்பு அமர்களமா வைப்பன். ஒருக்கா வச்சா நாலு நாளைக்குக் காணும்.”
அந்த ஷொப்பிங் மோலை விட்டு வெளியே வந்தோம்.
“தம்பி, அவ்வளவுதான் ஸ்கார்பரோ. நீர் இந்த மோலுக்க பார்த்ததத்தான் எங்கை போனாலும் பார்ப்பீர். ஒரு பஸ் எடுத்தா மஜெஸ்டிக் சிட்டிக்கும் கொண்டுபோய்க் காட்டலாம். ஆனால் இந்தக் கிழவனால ஏலாது பாரும்”
“இல்லை அங்கிள். இவ்வளவு நேரம் நிண்டு உங்கட வாழ்க்கையை என்னோட பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி”
“நீர் நல்லாக் கதை கேக்கிறீர் ஐஸே. உமக்குக் கதை சொல்ல ஆசையா இருக்கு. இன்னொரு டீ குடிப்பமே?”
நான் சிரித்தேன். அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்பாவின் கதைகளை என்னாலே சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் என் நண்பர்கள் வந்தால் மணிக்கணக்கில் அவரிடம் விடுப்புக் கேட்பார்கள். எப்போதுமே நம் கதைகளைக் கூடவே இருப்பவர்கள் கொண்டாடாமல்விடுவதுபோல.
“இல்லை அங்கிள். இன்னொரு நாள் பார்ப்பம். நான் ஒருக்கா மஜெஸ்டிக் சிற்றிக்குப் போய் புங்குடு தீவு வீதியைப் பார்க்கவேணும்”
அவர் சிரித்தார்.
“போய் கேமைக் கேளும். மஜெஸ்டிக் சிற்றில புங்குடுதீவுக்கு ரோட்டுப் போட்டவங்கள் ஏன் நயினாதீவுக்குப் போடேல்ல என்று”
நான் சிரித்தபடி அவரைச் சென்று கட்டியணைத்தேன்.
“சந்திப்பம் அங்கிள்”
“பார்ப்பம். கனடாவுக்கு அடிக்கடி வாரும். கொஞ்சம் குளிர்தான். ஆனால் எங்களுக்கெல்லாம் வாழ்க்கை குடுத்த நாடு. உம்மளைக் கண்டது நல்ல சந்தோசம்”
செல்பி எடுக்க நான் தயாராக அவர் பீனித்தொப்பியைச் சரி செய்தார். பின்னர் விடைபெற்றுக்கொண்டு எதிரே இருந்த அடுக்கு மாடித்தொடரை நோக்கி நடந்தார். அவர் போவதை நின்று சில கணங்கள் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அவரை மறுபடியும் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்குமோ நான் அறியேன். ஏன் எதற்கு என்று தெரியாது. தன்னுடைய நாளின் பெரும்பகுதியை யாரென்றே தெரியாத ஒருவனுக்காக செலவழித்துவிட்டுப் பிரிய மனமின்றிச் செல்லும் அந்த சீவனை நினைக்கப் பேரன்பே கைகூடியது.
நானும் அத்தானும் பேருந்தில் ஏறி உள்ளே உட்கார்ந்தோம். அத்தானுக்கு அழைப்பு வந்தது. அங்கிள்தான்.
“சொல்லுங்க”
“அந்தத் தம்பி பஸ்ஸில கார்டை டப் பண்ணியிருக்கமாட்டார். ஒருக்கா சொல்லுங்கோ.”
“இல்ல டப் பண்ணிட்டார்”
“சரி. நானும் மஜெஸ்டிக் வந்திருக்கோணும். ஆனா ஏலேலை பாருங்கோ. அங்கயிருக்கிற கடைல தோசையும் ஆட்டிறைச்சிக் கறியும் நல்லாயிருக்கும். வாங்கிக்குடுக்கோணும் சரியா? நான் போன் பண்ணிச் சொல்லட்டா”
“வேண்டாம் நான் பார்த்துக்கொள்ளுறன்”
“வீட்டுக்க வந்தோனை பிரிட்ஜைத் திறந்து பார்த்தன். இரசம் நிறையக்கிடக்குது. அந்தத் தம்பிக்குக் குடுத்திருக்கோணும். பிழை விட்டிட்டன்.”
அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்க நான் புன்னகைத்தபடியே பேருந்தின் யன்னல் வழியே வெளியே பார்த்தேன். கனடாவின் இலையுதிர்காலத்தைக் காண ஆயிரம் கண் வேண்டும். மெல்பேர்னிலே பூங்காக்களில் வளர்க்கப்பட்ட மேப்பிள் மரங்கள் இலையுதிர்காலங்களில் நிறம் மாறிக்கிடப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் கனடாவின் வீதி மருங்குகள் எங்கும் பெருங் காடுகள் மொத்தமாகவே இலையுதிர்காலத்தில் பல வண்ணங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தன. மஞ்சள், செம்மஞ்சள். கடுஞ்சிவப்பு. இடையிடையே பச்சை என்று மதிய வெயிலிலும் அந்திவானம்போல அவை காட்சி கொடுத்தன. கொள்ளை அழகு.
அங்கிளின் குரல் அத்தானின் செல்பேசியூடாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
“போளி சுடச்சுடப் போட்டிருப்பாங்கள். மறக்காம வாங்கிக்குடும். கடை எதெண்டு தெரியும்தானே?”
மேப்பிள் மர காடுகளுக்கு நடுவே அந்த அங்கிளின் முகம் வண்ணமயமாகக் காட்சிகொடுக்கத் தொடங்கியது.
Comments
Post a Comment