செங்கை ஆழியானின் "ஈழத்தவர் வரலாறு" என்ற நூலின் எட்டாவது அத்தியாயம் “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்”.
Buckle up folks!
கைலாயமாலையின் தனிப்பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை.
“அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக்
குல்விய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே.”
பத்தாம் நூற்றாண்டில் கந்தவேளுக்கு கோயில் கட்டி புவனேகபாகு A அழகு பார்த்திருக்கிறான். அது பூநகரியிலிருக்கும் நல்லூர் என்கிறார் செங்கை ஆழியான். காரணம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சமயம் பௌத்த செல்வாக்கும் சிங்கள மக்களதும் ஆதிக்கம் மேலோங்கி வந்ததால் உக்கிரசிங்க மன்னன் கந்தரோடையைக் கைவிட்டு சிங்கை நகருக்கு இடம்பெயர்ந்தான். பின்னர் சிங்கை நகர் மன்னனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பராந்தகனின் மந்திரிதான் புவனேகவாகு A. சிங்கை நகர் என்பது பெரு நிலப்பரப்பைச் சேர்ந்தது. அதனால் புவனேகவாகு A கட்டிய கோயில் பூநகரி நல்லூரில் அமைந்திருந்தது என்று செங்கை ஆழியான் வரலாற்று ஆதாரங்களைக் காட்டிக் குறிப்பிடுகிறார்.
இப்போது fast forward, பதின்மூன்றாம் நூற்றாண்டு. சிங்கை நகரில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலிங்கச் சக்கரவர்த்தி தன் தலைநகரை குடாநாட்டுக்கு மாற்றிக்கொள்கிறான். யாழ்ப்பாண நகரியை தனது மந்திரியைக் கொண்டு நிர்மாணிக்கிறான். அந்த மந்திரி புவனேகபாகு B. யாழ்ப்பாண நகரியை நல்லூர்க் குடியிருப்பில் உருவாக்கிய புவனேகபாகு B கந்தவேளுக்கும் ஒரு கோயில் கட்டுகிறான். தற்போதைய நல்லூர்க் கோயில் அமைந்திருக்கும் குருக்கள் வளவில்தான் அக்கோயில் அமைந்தது.
மறுபடியும் fast forward, பதினைந்தாம் நூற்றாண்டு. நம்மாள் சப்புமல் குமாரயா படையெடுக்கிறான். புவனேகபாகு C. ஆள் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகன். வந்தான். நகரத்தையும் நாசம் செய்தான். கோயிலையும்தான். ஆனால் பிறகு ஆளுக்கு பீதி வந்திருக்கவேண்டும். ஏன் சோலி என்று நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுகிறான். பழைய குருக்கள் வளவில் அல்ல. இப்போது முத்திரைச் சந்தியில் தேவாலயம் அமைந்திருக்கிறது அல்லவா? அங்கேதான் முன்னர் புவனேகபாகு C அக்கோயிலைக் கட்டியிருந்தான். அதுவும் சின்னக் கோயில் இல்லை. கோட்டை சைஸில் பெருங்கோயில் அது.
Fast forward. பதினாறாம் நூற்றாண்டு. போர்த்துக்கேயர் உள்ளே வருகிறார்கள். வீரமாகாளியம்மன் கோயிலடி இருக்கிறதல்லவா? அதற்கருகே பெரும் சண்டை. போர்த்துக்கேயப் படையும் தமிழர் படையும் முட்டி மோதுகிறது. அரசனின் பத்துப்படை உயிரை வெறுத்து சத்துருக்களை எதிர்த்துப் பொருதினராம். அதிலே கோயில் பூசகரும் ஒரு யோகியும்கூட மாண்டிருக்கின்றனர். சிக்கந்தர் என்று ஒரு யோகி. அவர் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும் கொண்டாடினார். சைவர்களையும் கொண்டாடினார். தமிழர் படையில் இரு மதத்தினரும் இருந்திருக்கிறார்கள். போர்த்துக்கேயரை எதிர்த்து அவர்கள் போரிட்டுள்ளனர். இக்காலத்தில் குருக்கள் வளவில் முஸ்லிம்கள் குடிவந்துவிட்டனர். சிக்கந்தர் போரிலே இறந்ததும் அவருக்கு ஒரு சமாதியை குருக்கள் வளவில் கட்டி அவர்கள் வழிபட்டு வந்தனர். அங்கு ஒரு பள்ளிவாசலும் கட்டினர்.
ஆக இடைவேளை summary, புவனேகபாகு A கட்டிய கோயில் பூநகரியில். புவனேகபாகு B கட்டிய கோயில் குருக்கள் வளவில். அதெல்லாவற்றையும் இடித்துவிட்டு புவனேகபாகு C கட்டிய கோயில் முத்திரைச் சந்தி தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தில்.
Slow forward, பதினேழாம் நூற்றாண்டு. பிலிப் தே ஒலிவெறா என்கின்ற போர்த்துக்கேய தளபதி நல்லூரை சூறையாடுகிறான். நல்லூர்க் கோயில் தரை மட்டமாகிறது. இவன் கிட்டத்தட்ட எல்லா கோயில்களையும் இடித்துவிட, அத்தனை சிலைகளும் கிணறுகளுக்குள் ஒளிந்துகொண்டன. பல கிருத்தவ தேவாலயங்களும் வீடுகளும் கோயிற் கற்களைக்கொண்டு கட்டப்பட்டன. கந்தசாமி கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் இப்போது கத்தோலிக்க தேவாலயம் எழுந்துவிட்டது.
Slow, slow forward, பதினேழாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றுகிறார்கள். Yes, you guessed it right. கத்தோலிக்கக் கோயில் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புரட்டஸ்தாந்து ஆலயம் வந்துவிட்டது.
Slow forward பதினெட்டாம் நூற்றாண்டு. சிவ சிவா, இயேசுவை மறப்பேனா வகை யாழ்ப்பாணத்தானை மொத்தமாக மாற்றுவது கடினம் என்பதை அறிந்து ஒல்லாந்தர் கொஞ்சம் மனம் இலகுகிறார்கள். வழிபடும் உரிமையை மக்களுக்கு வழங்குகிறார்கள். யமுனா ஏரிக்கு அருகில் இருந்த மடாலயம் இப்போது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஆகிறது.
Summary again. புவனேகபாகு A கட்டிய பூநகரி நல்லூர்க் கோயில்பற்றி யாருமே கணக்கெடுக்கவில்லை. புவனேகபாகு B குருக்கள் வளவில் கட்டிய கோயில் இடிக்கப்பட்டுவிட்டது. இப்போது அங்கே முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். புவனேகபாகு C கட்டிய கோயில் இடிக்கப்பட்டு அங்கு கத்தோலிக்க ஆலயம் கட்டப்பட்டுப் பின்னர் அதுவும் இடிக்கப்பட்டு புரட்டஸ்தாந்து தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. அருகே யமுனா ஏரியடியில் மடாலயம் பெரிதாக எழுகிறது.
ஒல்லாந்தருக்கு இப்போ மூன்று டென்சன். ஒன்று கந்தசுவாமி கோயிலை இடித்துக் கட்டிய தேவாலயத்தை மறுபடி இடித்து கந்தசுசாமி கோயிலைக் கட்டமுடியாது. தேவாலயம் அருகேயே அமைந்திருக்கும் மடாலயம் பெரிதாவதையும் அனுமதிக்கலாகாது. மற்றது சற்றுத்தள்ளி வர்த்தகப் போட்டியாளர்களான முஸ்லிம்கள் குருக்கள் வளவில் வாழ்கிறார்கள். அவர்கள் வளர்வதையும் பொறுக்கமுடியாது. ஒல்லாந்தர் புத்திசாலித்தனமாக குருக்கள் வளவில் நல்லூர்க் கோயிலைக் கட்ட சைவர்களுக்கு அனுமதிக்கிறார்கள். அதுக்கு இன்னொரு காரணம் தொன்யுவான் மாப்பாண முதலியார். அவர் ஒரு கிருத்தவர். என்னது மாப்பாண முதலியார் கிருத்தவரா? Yes. மாப்பாணர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி குருக்கள் வளவைத் தன் ஆட்களுக்கு எழுதிக்கொடுக்க வழி செய்கிறார். எப்படி? அதிகாரத் துஷ்பிரயோகம். தொன்யுவான் மாப்பாண முதலியார் அப்போது கச்சேரியில் சிறாப்பராக இருந்தார்.
ஆனால் சோனகரை எப்படி எழுப்புவது? அவர்கள் நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பணம் கொடுத்துப் பார்த்தனர். சோனகர் அசையவில்லை. மிரட்டிப் பார்த்தனர். ம்ஹூம். பின்னர் அவர்கள் நீர் அள்ளும் கிணறுகளில் எல்லாம் பன்றியிறைச்சியைப் போட்டனர். ஈற்றில் வேறு வழியின்றி சோனகரும் சைவரும் டீல் போடுகிறார்கள். குறைந்தது பெருநாட்களில் வந்து சமய வழிபாடு செய்யவாவது அனுமதி தாருங்கள் என்று சோனகர் கேட்க சைவர்கள் சம்மதிக்கிறார்கள். அறா விலையில் காணிகளைக் கொடுத்துவிட்டு அவர்கள் நாவாந்துறைக்குக் குடி புகுந்தார்கள்.
நல்லூர்க் கோயிலை மறுபடியும் குருக்கள் வளவில் கட்டும்போது அங்கிருந்த முஸ்லிம் பெரியார் ஒருவரின் சமாதியை என்ன செய்யலாம் என இவர்கள் யோசித்தார்கள். முஸ்லிம்கள் அதனை இடிக்கக்கூடாது என்று கலகம் செய்தனர். ஈற்றில் கோயில் மேற்கு வீதியில் ஒரு வாசல் அமைத்து அதனூடாக சமாதியை அணுகி வணங்கலாம் என இடம் கொடுத்ததால் கலகம் அடங்கியது. சிலகாலம் முன்வரை அங்கே பந்தல் போட்டு தொழுகை நடந்ததாக செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார். நானறிந்து என் அம்மா அந்தச் சமாதியை சிறுவயதில் எனக்குக் காட்டியிருக்கிறார். நல்லூர்க் கோயிலின் வடக்கு வீதியில் கற்பூரம் விற்கும் அனுமதியும் முஸ்லிம்களுக்கே இருந்ததாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் புலிகள் காலத்தில் மொத்த முஸ்லிம்களுமே வடக்கிலிருந்து துரத்தப்பட்டனர்.
Summary now.
புவனேகபாகு A கட்டிய நல்லூர்க் கோயில் பூநகரியில் இருந்தது. பின்னர் அதற்கு என்னானது என்று தெரியாது.
புவனேகபாகு B கட்டிய நல்லூர்க் கோயில் குருக்கள் வளவில் அமைந்திருந்தது. அதனை புவனேகபாகு C இடிக்கிறான். தமிழ் சைவர்கள் இருந்த குருக்கள் வளவில் காலப்போக்கில் தமிழ் முஸ்லிம்கள் குடிவருகிறார்கள்.
புவனேகபாகு C தற்போதைய முத்திரைச்சந்தியடியில் கட்டிய நல்லூர்க் கோயில் பின்னர் போர்த்துக்கேயர் காலத்தில் உடைக்கப்பட்டு கத்தோலிக்க தேவாலயமாகி அதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் உடைக்கப்பட்டு புரட்டஸ்தாந்து தேவாலயமாகிவிட்டது.
ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் சைவர்கள் ஆட்சியாளருடன் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களை வெளியேற்றி குருக்கள் வளவில் தற்போதைய நல்லூர்க்கோயிலைக் கட்டுகிறார்கள்.
என்ன தலை சுற்றுகிறதா. வரலாறு ஒரு பரத்தன். சில நூற்றாண்டுகளுக்கே இந்த நிலை என்றால் பத்தாயிரம் வருடங்களை யோசித்துப்பாருங்கள். எதைக் கட்ட. எதை இடிக்க என்று குழப்பம் வருகிறதா? இந்நிலத்தின் அத்தனை கட்டமைக்கப்பட்ட மதங்களும் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதை மறந்துவிடாதீர்கள். இதில் எது எவருக்கு சொந்தம் என்ற பேச்சுக்கு முடிவே இல்லை.
எல்லாமே சவக்கூட்டங்கள்.
Comments
Post a Comment