காதல் கவிதை திரைப்படம். தேம்ஸ் நதியின் படகொன்றில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழவும் இலண்டன் மாநகரின் அழகிய கட்டடங்கள். அப்போது சட்டென்று பவதாரிணியின் குரல் ஒலிக்கும்.
அகத்தியனின் இயக்கத்தில் முதன்முதலில் இளையராஜா இசையமைக்கும் படம். பாடல்கள் எல்லாம் ஏலவே எங்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தன. அதனால் முதல்நாளே வெக்டர் மாஸ்டரின் வகுப்பைக் கட் பண்ணி சந்திரன் மாஸ்டரிடம் படம் பார்க்கச் சென்றிருந்தேன். நான் அடித்து வைத்திருந்த கசட்டில் இந்தப் பாடல் ஏனோ இருக்கவில்லை. அதனால் முதன்முதலில் திரையில் பாடலைக் கேட்டதுமே அந்த மெட்டுக்கும் குரலுக்கும் ஆடிப்போய்விட்டேன். வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து நண்பர்களிடன் கேட்டால் அவர்களுக்கும் அப்பாடல் தெரிந்திருக்கவில்லை. பின்னர் பல வருடங்களுக்குப் பின்னர் இணையத்தில்தான் அதனைத் தேடி தரவிறக்கம் செய்யமுடிந்தது. இன்றும் அது என் பிளேலிஸ்டில் இருக்கிறது.
பவதாரிணியின் குரலுக்கு அந்த சக்தி உண்டு. கணீரென்ற தனித்துவமான பெண் குரல் அவருடையது. அருண்மொழியோடு சேர்ந்து பாடிய மஸ்தானா மஸ்தானாவோடுதான் அவர் எமக்கு அறிமுகமானார். அதன்பின்னர் அவர் குரலைக் கண்டறிவது அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. “நதியோரம் வீசுந்தென்றல்” என்று உன்னி உருகினால் “பூங்குருவி” என்று சரணத்தில் அவர் ஆர்ம்பிக்கையில் அமைதியான கோயில் பிரகாரத்தில் கணீர் என மணி அடிப்பதுபோல மிக அழகாக இருக்கும். அவர் ராஜா குடும்பத்துக்கு வெளியே பாடிய முதற் பாடல் அல்ப்ஸ் மலைக் காற்று. சிற்பி இசை. ஹரிகரனோடு இணைந்து பாடிக் கலக்கியிருப்பார். ஹரிகரனோடு பாடிய டைம் திரைப்படத்து ‘தவிக்கிறேன், துடிக்கிறேன், உனது நினைவாக’ தரம். ஹரிஹரனோடு பாடிய ‘தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா’ நிரந்தரம். அவர்கள் இணையில் வந்த ‘தாலியே தேவையில்லை’ துள்ளல். அக்காலத்தில் தேவயானிக்கு இவர் நிறையப் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
“ஒளியிலே தெரிவது”, what a song. “சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னன்னு” என்று அவர் சரணம் ஆரம்பிக்கவும் கார்த்திக் “கோயில் மணிய யாரு அடிக்கிறா” என்று தொடர்வதும் டிவைன் கணங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் பவதாரிணி இசையில் உச்சக்கணம் என்பது அமிர்தம் திரைப்படம் என்றே தோன்றுகிறது. பவதாரிணி இசையில் வெளியான படம் அது. அதில் இரண்டு பாடல்களை நான் எப்போதும் கேட்பதுண்டு. முதலாவது “நெஞ்சே நெஞ்செ ஏன் தித்திக்கிறாய்” என்ற பாடல். கார்த்திக்கும் சின்மயியும் பாடியது. உலகத்தர இசை அது. இண்டர்லூடில் பவதாரிணியும் குரல் கொடுத்திருப்பார். “முப்பது பௌர்ணமி வந்ததே” என்று சரணத்தில் ஓரிடம் வந்து கூடவே சுரம் அலாதியாக வந்து விழும். தலைவனுடய உயிரணு அல்லவா.
அதே அமிர்தம் திரைப்படத்தில் இன்னொரு பாடல் “முகிலினமே ஏனடி”. பாடலைப்பாடியது சுஜாதா. இந்தப் பதிவைத் தூக்கிப்போட்டுவிட்டு உடனேயே அந்தப் பாடலை ஓடிப்போய்க் கேளுங்கள். ரீதி கௌளையில் தலைவி கலக்கியிருப்பார். அப்பருக்கு சின்னக் கண்ணன் என்றால் அவரின் சின்னப் பொண்ணுக்கு “முகிலினமே” பாடல். இசையுள்ளவரை இவை நிலைத்திருக்கும்.
மயில்போல பொண்ணு ஒன்னு குயில்போலக் கொஞ்சநாள் இசைத்துவிட்டு பறந்துபோட்டுது.
Comments
Post a Comment