முந்திரி முத்தொளி சிந்திக்கோ,
மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே.
தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே.
தங்க கொலுசல்லே
குருகும் குயிலல்லே
மாறன மயிலல்லே”
‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலிலிருக்கும் மலையாள வரிகள் அவை. தமிழாக்கும்போது அவ்வரிகள் இப்படி அமைகின்றன.
“அழகிய நிறங்கள் நிறைந்த சுந்தரியே.
தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே.
உன் தலைவனோடு நீ,
புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு.
உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால்
சிரித்து அவனைச் சிதறவிடு.
நீ,
தங்கக் கொலுசல்லவா?
கூவும் குயிலல்லவா?
உன் மாறனின் மயிலல்லவா?”
தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே.
உன் தலைவனோடு நீ,
புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு.
உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால்
சிரித்து அவனைச் சிதறவிடு.
நீ,
தங்கக் கொலுசல்லவா?
கூவும் குயிலல்லவா?
உன் மாறனின் மயிலல்லவா?”
இரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில் அந்த இறுதி வரி மாத்திரம் சற்றே நெருடியது. பெண்ணை எப்படி அவளுடைய மாறனுடைய மயில் என்று ஒப்பிடலாம்? பெண் மயில் அத்தனை அழகல்லவே? தன் தோகையை விரித்து ஆடல் செய்வது ஆண் மயில்தானே? ஒரு ஆணுக்குத்தானே மயிலை உவமைப்படுத்தவேண்டும்? எப்போதிருந்து பெண்ணை ஒரு ஆணின் அழகுக்கு ஒப்பிட ஆரம்பித்தார்கள்?
பப்புவா நியூகினியிலிருக்கும் அடர்ந்த காட்டிடை வாழுகின்ற குருவி அது. ஒருவிதமான சாம்பல் வண்ணத்துச் சிறகுகளைக் கொண்ட பறவை. சாதாரணமாகப் பார்த்தால் அது அத்தனை அழகாகத் தெரியாது. ஆனால் பருவ வயதை எய்திய ஆண் குருவி என்றால் அதற்குப் பல நிறங்கள்கூடி கொள்ளை அழகாக இருக்கும். கூடல் பொழுது வந்ததும் ஆண் குருவி தன்னுடைய ஆடல் நிகழ்ச்சிக்கான மேடையைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடும். முதலில் புற்கள் அற்ற தரையை அது தேர்ந்தெடுக்கும். அருகிலே அதிகம் இலைகளைக் கொண்டிராத மரமும் இருக்கவேண்டும். அங்கெங்காவது பச்சை வண்ணத்தில் இலை விழுந்து கிடந்தாலோ, அல்லது இளங்குருத்து ஏதும் மரத்தில் துளிர்த்திருந்தாலோ அக்குருவி அவற்றைப் பிடுங்கி அப்பால் வீசிவிடும். சூழல் முழுதும் மண்ணின் நிறத்தை அடைந்த பின்னரே அது தன்னுடைய மேடை அலங்கரிப்பில் திருப்தியுறும். அதன்பிறகு அது ஒரு சில பயிற்சிகள் செய்யும். ஆயத்தங்கள் எல்லாம் இறுதிப்படுத்தப்பட்ட பின்னாடி அது தன் துணையை அழைக்கக் கூவ ஆரம்பிக்கும். அப்போது ஐந்தாறு இளம் ஆண் குருவிகள் அங்கு வந்து, எட்ட நிற்கும் மரக்கிளைகளில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். ஏகலைவன்போல இவர் செய்வதைப் பார்த்து அவை பாடம் படிக்கவேண்டும். பெண் குருவி ஒன்று வந்துசேரும்வரை தலைவன் கூவிக்கொண்டேயிருப்பான். சற்று நேரம் கழித்து ஒருவாறாகத் தலைவி வந்துவிடுவாள். நமக்குப் பார்க்கையில் அந்தத் தலைவிக்கும் கூடவே சூழ நின்ற இளம் ஆண் குருவிகளுக்கும் வித்தியாசமே தெரியாது. எல்லோருமே சாம்பல் நிறத்தில், ஒருவித சோபையிழந்த அழகில்தான் இருப்பார்கள். ஆனால் தலைவன் மட்டும் திருவிழாக்கூட்டத்திலும் தலைவி எங்கு நிற்கிறாள் என்று கண்டுபிடித்துவிடுவான். தொடர்ந்து அவளைப் பார்த்துக் கூவுவான். தலைவி மேடைக்கருகே நின்ற அந்த மரத்தில் தாழக்கிடந்த கிளையில் வந்து அமரும்வரை அது தொடரும். முன்வரிசை இருக்கை அது. அவள் அங்கு தரித்ததும் தலைவன் ஆட்டத்தை ஆரம்பிப்பான். முதலில் சாதாரண ஆட்டம்தான் நிகழும். அலாரிப்பு, புஷ்பாஞ்சலி வகை உருப்படிகள். இறக்கைகளை விரித்து அங்குமிங்கும் அவன் தத்தித் திரிகையில் அப்படியே மொஞ்சனி வர்ணச் சுந்தரன் தாங்குனக்க தகதியாடும் தங்க நிலாவாக ஜொலிப்பார். ஆனால் தலைவி ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள். அடேய், உன்னைவிட ஆயிரம் மடங்கு அழகான ஆண்களை இந்தக் காடு முழுதும் பார்த்தவள் நான். எனக்காகக் காடே தவம் கிடக்கிறது என்று அவள் இறுமாப்பு கொள்வாள். உடனே தலைவர் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை எடுத்துவிடுவார். தில்லானா. தலைவி நிற்கின்ற மரத்தைப் பிடித்தபடி, மேலே அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு, தன் இறக்கைகளைப் பரப்பி, மார்புப்பகுதியை விரித்துக் காட்டுவார். அப்போது அவருடைய மார்பு முழுதுமே பட்டுப்போல பச்சை வண்ணத்தில் தக தகவென மின்னும். இருபக்கமும் பல நிறங்களில் இறக்கையின் இறகுகள் பரவிக்கிடக்கும். நல்லூர் பூங்காவனத்தில் பச்சை சாத்திக்கொண்டு வருகின்ற நம் அலங்கார முருகனுடைய அழகு அது. அவ்வளவுதான். தலைவி அவரழகில் அக்கணமே மயங்கிக் கிறங்கிப்போக தலைவருக்கு ஜன்ம சாபல்யம் கிடைத்துவிடும். அதன்பிறகு அவர்களுக்கிடையில் இரண்டு மூன்று விநாடிகளே கலவி இடம்பெறும். அதற்கு இத்தனை பெரிய அக்கப்போர்.
இயற்கையின் கூர்ப்பிலே அதி சிறந்த, அழகிய, சக்தி வாய்ந்த ஆணோடு கலக்கவேண்டுமென்பதுதான் பொதுவாக பெண்ணுடைய தெரிவாக இருந்திருக்கிறது. இங்கே ஆண்கள் அணிவகுப்பு செய்ய பெண்தான் தன் துணையைத் தேர்ந்தெடுக்கிறாள். மனித வரலாற்றிலும் சுயம்வரங்களில் வித்தை காட்டி பெண்ணை இஷ்டப்பட வைப்பது ஆண்கள்தான். பெண்களுக்குப் பின்னால் திரிவது, படம் போடுவது, பிறரிலிருந்து தான் வேறு, பெரிது என்று காட்ட முனைவது, கவிதை எழுதுவது என ஆண் எந்நேரமும் முயன்றுகொண்டேயிருக்கிறான். பெண்களைக் கவர வீரனாக, அழகனாக, அறிவாளியாக அவன் தன்னை இனங்காட்டிக்கொண்டேயிருக்கிறான். அந்த பப்புவா நியூகினி பறவை தன் பெண் துணையைக் கவர அத்தனை ஆட்டம் போடுகிறது. ஆண் மயில் தனக்கு பசலை படர ஆரம்பித்ததும் தோகை விரித்து ஆடி பெண் மயிலைக் கவர எத்தனிக்கிறது. ஆண் சிங்கம் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது. இதுதான் இயல்பு. விலங்கினங்களில் ஆண்களே எப்போதும் அழகானவர்கள். கொம்பு கொண்டு நிற்கும் ஆண் மான் அழகு. ஆண் கிளி அழகு. பெட்டைக் கோழியைவிட கொண்டைச்சேவல் அழகு. பறவைகளில். மிருகங்களில். புழு, பூச்சி, சிலந்திகளில். எங்குமே ஆணே அழகானவன். ஆணின் இந்த அனிச்சைச்செயல் தொடரத் தொடர, கூர்ப்பில் அவன் மேன்மேலும் அழகாகிக்கொண்டேயிருக்கிறான். அழகெனப்படுவது இங்கு ஆய கலைகள் யாவுமே எனக்கொள்க.
நிலை இப்படியிருக்க, பெண்ணின் அழகை ஒப்பிடும்போது ஏன் ஆண் மயிலை நாங்கள் துணைக்கு அழைக்கவேண்டும்? எங்கோ இடிக்கிறதே? ஆணின் அழகைத்தானே ஆண் மயிலுக்கு ஒப்பிடவேண்டும் தமிழ் இலக்கியத்தில் எங்காவது தோகை விரித்தாடும் மயிலின் அழகை ஆணுக்கு ஒப்பிட்டிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். ஏமாற்றம்தான் வந்தது.
தொல்காப்பியத்திலேயே தோகை மயில் பெண்ணுக்குத்தான் ஒப்பிடப்படுகிறது.
“சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே”
பறவைகளில் ஆணை சேவல் என்றும் பெண்ணைப் பேடை என்றும் சொல்லவேண்டும் என்கிறார் தொல்காப்பியர். ஆனால் மயில் மட்டும் இங்கு விதிவிலக்காகிறதாம். ஆண் மயில் தோகையைக்கொண்ட மென்மையான ஒரு விலங்கென்பதால் அதனை சேவல் என்று அழைக்க முடியாதாம். ஆக தொல்காப்பியரே தோகை விரித்தாடும் மென் உணர்வு கொண்டவள் பெண் என்கிறார். ஆனால் என்னால் இதனோடு உடன்பட முடியவில்லை. நான் ஆண் மயில் தோகை விரித்தாடுவதை நேரிலே பார்த்திருக்கிறேன். அது கொள்ளை அழகுதான். ஆனால் அதன் ஆட்டத்தை மென்மையான ஒரு நடனம் என்று கூற முடியாது. நளினம்கூட சந்தேகம்தான். அதன் அகவலும் சிலிர்த்துக்கொண்டு அது தன் தோகையை விரிக்கும் கணமும் மிருகங்களில் ஆண் சிங்கம் சிலிர்ப்பதற்கு ஒப்பானது. இராவணன் பத்துத்தலையைக் காட்டி வீணை மீட்டுவதைப்போன்றது. அது மென்மை அல்ல. உலகம் முழுதுமுள்ள ஆண்களின் தன்மை அது. தன்னுடைய உடற்பலத்தையும் ஆற்றலையும் அழகையும் உயர்த்திக்காட்டுகின்ற ஆணுக்கேயுரிய ஒருவகைத் திமிர் அது. அப்போது அதன் கண்களைக் கவனித்துப்பாருங்கள். அகங்காரம் அங்கே மின்னித்தெறிப்பதை உணர்வீர்கள்.
ஆனால் தொல்காப்பியரே சொல்லிவிட்டபின்னர் நமக்கென என்று சங்க இலக்கியம் முழுதும் தோகை விரித்தாடும் மயிலை பெண்ணுக்கு ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ‘சங்க இலக்கியத்தில் மயில்’ என்று பாக்கியவதி சங்கரலிங்கம் என்பவர் இருநூறு பக்கங்களுக்கு ஒரு ஆய்வையே செய்து வெளியிட்டுள்ளார். ’கலிமயில் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்’ என்று தலைவியின் கூந்தல் ஆண் மயிலின் தோகைக்கு ஒப்பாகிறது. ‘நட்பின் மயில் இயல்’ என்று தலைவியின் அழகு மயிலுக்கொப்பானது என்று ஒரு தலைவன் சொல்கிறான். இப்படி குறுந்தொகை, எட்டுத்தொகை, புறநானூறு, பரிபாடல் என எங்கு பார்த்தாலும் ஆண் மயிலின் அழகு பெண்ணுக்கு உவமையாகிறது.
கம்ப இராமாயணத்திலும் மயில் பெண்ணுக்கு பல இடங்களில் உவமையாகிறது. மிதிலைக்கு வந்த இராமனைக் கண்ட ‘புனம் கொள் கார் மயில் போலும் ஒரு பொற்கொடி’, அவன்மேல் தான் கொண்ட காமத்தை மறைக்க முயன்று தோற்றுப்போனதாக கம்பர் சொல்வார். ஆனால் ஒரு விடயத்தில் கம்பர் தெளிவாக இருந்தார். கம்பராமாயணத்தில் எப்போதுமே அழகு என்பது இராமன்தான். சீதையோ மண்டோதரியோ அல்ல. ‘மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ, ஐயோ இவன் வடிவு’ என்று இராமனின் அழகை விவரிக்க மொழியின்றித் திணறுவார் கம்பர். ஆனால் அப்போதுமே ‘மையோ, மயிலோ, மறிகடலோ’ என்று சொல்ல அவர் துணியவில்லை.
ஆச்சரியமாக, திருக்குறளில் மயிலுக்கு அவ்வளவு மவுசு இல்லை. குறிப்பாக சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்களின் சாயல் நிறைந்த காமத்துப்பாற் குறள்களில்கூட மயிலைக் காணோம். ‘பீலிபெய் சாகாடும்’ குறள்கூட பொருட்பால்தான். எங்குமே பெண்ணுக்கு உவமையாக தோகை மயிலை திருவள்ளுவர் விளித்ததாகத் தெரியவில்லை. பாரதியும் இதில் கொஞ்சம் விதிவிலக்குதான். ‘வான மழை நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு’ என்று கண்ணம்மாவைப் பார்த்து பாரதி பாடும்போது அந்த வண்ண மயிலைத் தன்னோடுதான் அவர் ஒப்பிடுகிறார். ஆனாலும் அன்னாரும் “பொன்மயி லொத்திரு மாதர்தங் கற்பின்” என்று பெண்ணை மயிலுக்கு ஒப்பிடத்தவறவில்லை.
அதன் பின்னர் தமிழ்க் கவிதைகளில், திரைப்பாடல்களில் பெரும்பாலும் மயில் என்றால் அது பெண்தான். ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’, “மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று தமிழ்ப்பாடல்களில் எல்லாம் பெண் மயில்கள் தோகை விரித்தாட, சிவாஜி, எம்ஜிஆர், கார்த்திக், ரஜனிகாந்த், கமல், விஜய், அஜித், பகத் பாசில், அரவிந்த்சாமி, அசோக் செல்வன் என அத்தனை ஆண் மயில்களும் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றன. தம் அழகை அறியாமல்.
ஆங்கில இலக்கியத்திலும் தோகை மயிலைப் பெண்ணுக்கு உவமைப்படுத்தும் பண்பு உண்டா என்று தேடிப்பார்த்தேன். பெண்ணின் அழகை ஆண் மயிலுக்கு ஒப்பிடும் சூழல் ஆங்கில இலக்கியத்தில் பரவலாக இல்லை என்றே தோன்றுகிறது. தவிர ‘He was like a peocock among the hens’ என்று ஒரு ஆணைப்பார்த்து பெண் வியக்கவும் செய்கிறாள். ஆதாமும் ஏவாளும் சாத்தானின் பழத்தை உட்கொள்ளமுதல் அங்கிருந்த அத்தனை விலங்குகளையும்கூட அதைச் சாப்பிட வைக்கிறார்கள். ஆனால் மயில் மட்டும் மறுத்துவிட்டதாம். அதனால்தான் அது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பறவை என்கிறது அக்கதை. தவிர ஆண் மயிலின் தோகை விரித்தாடலை ஒருவித புறவயமான ‘vanity’ என்றும் அங்கு சொல்கிறார்கள். தன்னை முன்னிலைப்படுத்தும், தான் மட்டுமே அழகு என்று பறை சாற்றும், பிறரை பின்தள்ளி தன் இணையை அடையும் ஒருவித ஆணவம் நிறைந்த பறவையாம் அது. ஆபத்தான அழகாம் அது.
தமிழில் இலக்கியங்கள் பலவும் ஆண்களால் படைக்கப்பட்டதால் அவர்கள் இயல்பாகத் தம் அழகை விடுத்து பெண்களை வர்ணித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று கொள்ளலாம். அப்போதும் அவர்களின் ஆழ் மனதில் அழகு என்று படிந்திருந்தது என்னவோ தமது இனத்தின் அழகுதான். தோகை விரித்தாடும் ஆண் மயிலும் கொம்புகள் வளர்ந்து நிற்கும் புள்ளி மானும் பஞ்ச வர்ணத்து ஆண் கிளியும்தான் அவர்களுக்கு அழகாய்த்தெரிந்திருக்கிறது. இறை பாடலிலும் இதுவே வலிகிறது. ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’தானே? பக்தி மார்க்கத்தில் முருகனும் கண்ணனும்தானே அழகர்கள்? முருகன் அழகிய ஆண் தோகை மயிலைத் தன் வாகனமாக்கியதும். கண்ணன் மயிலிறகைச் சூடி நிற்பதும் தற்செயல் அல்ல. முன்னே தொல்காப்பியர் மயிலை சேவல் என்று அழைக்கப்படாது என்கிறார் என்று சொன்னேன் அல்லவா? கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் அதனை மீறிவிடுகிறார். ‘எழுந்து முன்னூறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறி’ என்று கந்தபுராணத்தில் முருகன் ஏறும் மயிலை அவர் சேவல் என்றே விளிக்கிறார். ஏனெனில் அப்போது அவருக்கு தோகை விரித்தாடும் மயில் மென்மையற்ற ஆண் குணம்கொண்ட பறவையாய்த் தெரிகிறது.
யாரேனும் ஒருத்தர், ஒருத்தர்கூட தோகை மயிலை ஆணுக்கு நேராகத் தெளிவாக உவமை செய்யவில்லையா என்று தேடிக்கொண்டேயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு பேர் இவ்வுவமைக்கு அருகே வந்தார்கள்.
முதலாமவர் கபிலர். குறுந்தொகையில் அவர் பாடிய பாடல் இது. தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் தோழிக்குச் சொல்லும் கூற்று.
"கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே."
தோழி.
மழை பலத்த ஓசையுடன் பெய்துகொண்டிருக்கிறது.
காட்டாற்றின் கரையிலே
தழைத்த நெடிய தோகை மயிலொன்று ஆடிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆண் மயில் தன் பேடினைக் கூவி அழைக்கிறது.
அதுபோல என் நாடனும் என்னைத்தேடி வருவான்.
என்மேல் படர்ந்து கிடக்கும் பசலை அப்போது காணாமல்போகும்.
நிம்மதிப்பெருமூச்சு வந்தது. அடுத்ததாக கவிஞர் தாமரை. ஒரு பெண் தான் விரும்பும் ஆணை மயிலுக்கு ஒப்புவமை செய்யும் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.
“தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகிலே போய் அதை அணைத்திட ஆசை கூடியதே”
என்று எழுதியது தாமரை. படத்தின் பெயர்கூட கலாபக் காதலன். கலாபம் என்றால் மயிலின் தோகை என்று பொருள் படும். அந்த வார்த்தையை பிரபல்யப்படுத்தியவரே தாமரைதான்.
தாமரை எழுதிய இன்னொரு திரைப்பாடல் ஒன்று.
“ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஒர் நாள் போதுமா?
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா?
என் கனவில் ஆ…
நான் கண்ட ஆ…
நாளிதுதான்
கலாபக்காதலா.
பார்வைகளால் ஆ…
பல கதைகள் ஆ…
பேசிடலாம்
கலாபக்காதலா”
அப்பாடி. ஈற்றில் ஒரு தோகை விரித்து ஆடும் மயிலை தன் தலைவனோடு ஒப்பிட்டு நினைந்து, ரசித்து, ஏங்கிச் சாகும் தலைவியின் மனதைக் கண்டடைந்தாயிற்று.
பெண்களே.
நீங்கள் ஆண்கள் கண்களுக்கு என்னவோ அழகுதான். ஆனால் இயற்கையின் படைப்பில் ஆணே அழகானவன். அதனால் தாராளமாக அவனை இரசியுங்கள். தோழியருடன் நீங்கள் செல்லும்போது தூரத்தில் அவனைக் கண்டால் “தோகை இளமயில் ஆடி வருகுது, வானில் மழை வருமோ” என்று குடையை எடுத்து விரியுங்கள். அவன் கொஞ்சம் அடக்கமொடுக்கமாக உங்களைக் கண்டும் காணாமலும் ஒதுங்கிப்போனால் “மயிலே மயிலே உன் தோகை எங்கே” என்று கேட்டு ஆடச்சொல்லுங்கள். உங்கள் காதலன் தூக்கமின்றித் தவிக்கையில் அவனை மடியில்போட்டு,
‘கண்ணே, கலைமானே, காளை மயிலெனக் கண்டேன் உனை நானே’ என்று தூங்க வையுங்கள்.
&&&&
Comments
Post a Comment