Skip to main content

நிலத்திலும் பெரிதே

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல்.

இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும்.
குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து கூடி வாழவேண்டுமே என்ற சிந்தையே இவனுக்கு இல்லையே என்று அவள் பொருமுகிறாள். அதனால் அவனுக்குக் கேட்கும்வகையில் தலைவியிடம் தலைவனைப்பற்றிப் பழி சொல்கிறாள். ஆனால் அதைக்கேட்ட தலைவி வெகுண்டெழுந்துவிட்டாள். ‘என்ன பேச்சு பேசுகிறாய், நம் நட்பு எத்தனை உயர்ந்தது தெரியுமா?’ என்று தோழிக்குத் தலைவி விளிப்பாள்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுலத்தார் பாடிய பாடல் இது.
நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
இப்போது வெள்ளி நாவலில் ஒரு காட்சி. முழுமதி இரவொன்றின் நடுச்சாமம் கழிந்தும் தூங்காது தவிக்கும் கோடன் நிலவோடு பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனோடு வந்து இணைகிறாள் வெள்ளி. நிலவுக்கும் முகிலுக்குமிடையேயான நட்புபற்றி பேச்சு போகிறது. உள்ளிடை நெருப்பாக இருவரிடத்திலும் காதல். காதல் என்ற சொல்லுக்கு அதன் இக்காலத்து அர்த்தம் பின்னாளில் வந்தது. சங்க காலத்தில் காமமும் நட்பும்தான். இந்தக் காமமும் நட்பும் கலந்த உணர்வை எவர் ஆரம்பிப்பது என்கின்ற இயல்பான தயக்கம் இருவரிடத்தேயும் இருக்கும். அவன் சொல்லலாம் என்று எத்தனிக்கையில் வெள்ளி பேச்சை மாற்றி இக்கவிதையை ஆரம்பிக்கிறாள்.
“நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”
இவன் நவீனத்து இளைஞன் அல்லவா? தனக்கு விளங்குமாப்போல சொல்லு என்று அவன் வெள்ளியிடம் கேட்கிறான். அப்போது வெள்ளி சொல்லும் பாடல் இது.
“ஆழமது, கடலிலும் ஆழமாம்
அகலமது, புவியிலும் அகலமாம்
நெடியதிது, வானிலும் நெடியதாம்
கோதையது கோடனொடு நட்பு”
தேவகுலத்தாரின் நாடனொடு நட்பை வெள்ளி கோடனொடு நட்பாக்கிவிட்டாள்.
இதை எழுதிய கணமே ஒரு உன்மத்தம்தான். நாவலுக்கு வடிவமைப்பு செய்யும் வேலை நடக்கிறது. கஜன் இந்தக் கவிதை வந்தடைகின்ற இடத்தை வாசித்துவிட்டு ‘டேய் நல்லாத்தான் இருக்கு. திரும்பவும் காதலிக்கலாம்போல பீலிங் வருது’ என்றான். நாவல் பதிப்புக்குத் தயாராகிவிட்டது. ஸம்ரக்‌ஷணாவும் ஜீவியும் இந்த முத்தமிழ் அரங்கைப் பற்றிப் உரையாடிக்கொண்டிருக்கையில் இந்த “ஆழமது” பாடலுக்கு மெட்டுப்போட்டு தரமுடியுமா என்று ஸம்ரக்‌ஷ்ணாவிடம் கேட்டேன். ஸம்ரக்ஷணாவால் தமிழ் நன்றாக பேசமுடியும். ஆனால் வாசிப்பது கொஞ்சம் கடினம். அதனால் ஒரு கஃபேயில் வைத்து அவருக்கு வெள்ளி நாவலையும் பாடல்களையும் விளக்குகிறேன். எனக்கு இராகங்கள் பற்றிய பெருத்த அறிவு ஏதுமில்லை. ஆனால் இக்காலங்களில் ஹம்சத்வனி இராகம்மீது தீராத காதல் ஒன்று ஏற்பட்டதில் அந்த இராகத்துப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருப்பேன். அதனால் ஹம்சத்வனியில் மெட்டுப்போட முடியுமா என்று அவரிடம் அதிகப்பிரசிங்கித்தனமாகக் கேட்க, “அதுக்கென்ன அண்ணா?” என்று நான் கேட்ட கணத்திலேயே வந்து விழுந்தது ஒரு மெட்டு. மலைத்துப்போய் அதை அக்கணமே பதிவு செய்து மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டேயிருந்தேன். பின்னர் பேராசையில் சசி அண்ணாவுக்கு அழைப்பெடுத்து இதற்கு இசைக்கோர்ப்பு செய்து தரமுடியுமா என்று கேட்டேன். அவருக்குக் கொஞ்சம் தயக்கம். “நீ பாட்டையும் எழுதி மெட்டையும் போட்டுத்தந்தா எனக்கென்ன வேலை?” என்றார். ஆயினும் அன்பின் நிமித்தம் அதற்கு இசை கோர்த்துக் கொடுத்தார். அதுதான் வெள்ளி முன்னோட்ட இசையாக முன்னர் வெளியானது.
“ஆழமது” பாடல் முன்னோட்ட இசையைப் பல தடவைகள் கேட்டதாலோ என்னவோ, இப்போது அப்பாடலையும் இணைத்து மேடையேற்றலாம் என்ற எண்ணம் ஜீவிக்கும் ஸம்ரக்‌ஷணாவுக்கும் வந்துவிட்டது. அதன் நீட்சிதான் இந்த அரங்கு. நெடியதிது வானிலும் நெடியதாம் எங்கையில் ஜீவி வானையே வில்லாய் வளைத்து நிற்கும். என் கண்ணே பட்டுவிடும்போல. மூலப்பாடலையும் வெள்ளி சொல்லிய அதன் எளிமையான வடிவத்தையும் கோர்த்து இருவரும் மேடையேற்ற கேதா அதற்கு அழகாக விளக்கம்கொடுத்தார்.
சாந்தி அக்கா கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது. ஏன் எழுதவேண்டும்? யோசித்துப்பாருங்கள். சங்கப்பாடல் ஒன்று இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் வாழ்ந்து என்னை வந்தடைகிறது. அதைப் படித்த பிரவாகத்தில் நாவல் ஒன்று மலர்கிறது. அதை வாசித்து நான்கு பேர் இப்படி இணைகிறார்கள். அவர்களுடனான என் நட்பு கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பாய் ஆகிவிடுகிறது.
எழுதுவதற்கு வேறு காரணமேதும் வேண்டுமா என்ன?
கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன்
இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா
பொருளும் நயப்பும் - கேதா
காணொளியாக்கம் - வசந்த்


நன்றி : மெல்பேர்ன் வாசகர் வட்டம்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...