பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.
பின்னர் 2021 ஆண்டில் திரு ஜெயமோகன் அவர்களின் ‘சங்கச்சித்திரங்கள்’ விகடனில் தொடராகவும்,பின் தமிழினி பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் வாசிக்கக் கிடைத்தது. அப்புத்தகத்தில் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் ‘கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது,வாழ்வை விரிவு படுத்துவது,வாழ்வை வைத்துத்தான் கவிதையை வாசிக்க வேண்டும்’ என்கிறார். வாழ்வில் தான் கடந்து வந்த பலவிதமான நிதர்சனங்களை அழகாக, மிக ரசனையான நாற்பது கட்டுரைகளாக வாசகனுக்குத் தந்து, அக் கட்டுரைகளில் குறுந்தொகை பாடல் மற்றும் விளக்கம் இரண்டையும் இணைத்திருப்பதின் வழியாக வாசக மனதில் குறுந்தொகைப் பாடல்களையும் அவர்களது வாழ்வையும் நினைத்துக் கடக்கும் ஒரு கவிதை மனதையும் நமக்குத் தருகிறார். ஒவ்வொன்றும் ஒரு சிறு கதை போன்ற வசீகரமான கட்டுரைகள் அவை.
2023 ஆண்டில் திரு. ஜேகே அவர்களின் ‘வெள்ளி’, மெல்பர்ன் வாசகர் வட்டத்தின் முதல் பொது நிகழ்வில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. மிகுந்த ரசனைக்குரிய பதினோரு குறுந்தொகைப்பாடல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்த மாய அறிவியல் புனைவை எனக்கும் வாசிக்க கிடைத்தது.
புத்தக வடிவமைப்பே அசத்துகிறது. அட்டைப்பட ஓவியங்களோ புத்தகத்தை பிரிக்கவிடாமல் ஓவியத்திலேயே தங்கிவிடச்செய்கின்றன. இளம் காலை வேளையில் மஞ்சள் வானமும், பட்டறையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பின் கணப்பும், நெருப்பின் வெளிச்ச தீற்றலில் வெள்ளியும். அப்படியே பின்னட்டைக்குத் தாவினால் அங்கும் கனன்று கொண்டிருக்கிறது நெருப்பு. திரைச்சீலை விலக்கிய ஜன்னலில் வெகு தொலைவில் வானில் மின்னும் வெள்ளியும், மாநகர நவீன கட்டடங்களில் சிறு வெள்ளிகளாக மின்னும் விளக்குகளையும் கடந்து அறைக்குள் வந்தால், அரை இருளில் மனச்சோர்வோடு அயர்ந்து அமர்ந்திருக்கும் கோடன்,அருகில் ஐஹோம்.
மெதுவாய்ப் புத்தகத்தை பிரித்தால், ‘ஆரம்பிக்கலாமா’ என அமர்க்களமாக ஆரம்பிக்கும் கதை பெரிய எழுத்துக்களில், வழு.. வழு.. பக்கங்களில் வழுக்கிச் செல்கிறது.பக்கத்திற்கு பக்கம் அற்புத ஓவியங்கள் கிராபிக் நாவல்போல நம்மை கதைக்குள்ளும் கவிதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் ஒட்டிக்கொள்ளவைக்கின்றன.
தாத்தாவிற்கு எழுதும் கடிதம் மூலமாக இந்த மாய அறிவியல் புனைவு நாவலுக்குள் நம்மை உடன் இழுத்து செல்கிறார் ஜேகே.
‘எப்போதும், எங்கோயோ, ஏதோ இடறுகிறது’, 'செருப்பில் ஏறிக்கிடக்கும் சிறு முள்ளு துருத்திக்கொண்டேயிருப்பதுபோல’ கோடனின் எண்ணவோட்டத்தோடு வாசகனையும் இணைத்து கொள்கிறார்.அதே கடிதத்தில் தாத்தாவிடம் ஒரு பாட்டு சொல்வீர்களே என பாடலின் பொருளை சொல்ல, உடனே ஐஹோம் அது என்ன பாடல், அப்பாடல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, அது எந்த சங்ககாலப் பாடல் என விவரிக்கிறது. உடன் வந்த ஞாபகம் திரு ஆதிஷா அவர்கள் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய ‘சர்வைவா’ தொடர்தான். அதில் அவர் திரு சுஜாதா அவர்களின் ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ பற்றிய குறிப்பும் தந்திருப்பார். ஐஹோமுடனான கோடனின் உரையாடல் அவ்வகை.
தாத்தாவின் ஆறுதலான பதில் கடிதம் ஆழ்ந்த அமைதியான வார்த்தைகளால் கோடனை(வாசகனையும்)சாந்தப்படுத்த முயலுகிறார். அவரின் அதி அற்புத மென்பொருளையும் (Augmented reality (AR)மற்றும் Virtual reality (VR) இரண்டும் கலந்த Mixed reality (MR) மூலமாக சங்ககால தமிழர் வாழ்க்கையை ஒரு மெய்நிகர் உலகத்தில் வளம் வரச்செய்யும் மென்பொருள் அறிமுகம் செய்ய, உடன் நாமும் கோடனோடு,
இந்திரவிழாவிற்குள் நுழைகிறோம் .
விழாக்கோலம் பூண்ட நகரும், பூக்களால் நிறைந்த ஆறும் ஆற்றில் துள்ளிடும் மீன்களும், முகிலுக்குள் ஓடி ஒளியும் நிலவும், படகில் காதலில் களித்து கிடக்கும் ஆண் பெண் காதல் இணைகளும், மணற் குன்றும், அதில் ஒற்றை புன்னை மரமும். ஜேகே தன்னுடைய virtual writing ஸ்டைலால் கண்முன் காட்சிகளாகத் தந்து நம்மையும் பயணிக்க வைக்கிறார் .
கதையோடு கலந்து குறுந்தொகை பாடல்களை வைத்தது மட்டுமில்லாமல்,
கவிஞர்களையும் பாத்திரங்களாக உலவ விட்டிருப்பது புது முயற்சி.
உணர்வுகளைக் கலவையாக்கி, கதையும் ஆக்கி மனித மனதின் மென்மையான பக்கங்களை வருடிச்செல்கிறார் ஜேகே. இறுதியில் ஐஹோமின் உதவியோடு, சங்கப்பாடல்களைக் குறிப்புகளாக வைத்து வெள்ளியை சென்றடையும் கோடன். வரும் ஆண்டுகளில் வெள்ளிகளைத்தேடி கோடன்கள் மெய்நிகர் உலகில் அலையப்போவதென்னவோ நிஜம் (பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கி வைப்பது உசிதம்)
நன்றி.
உங்களின் அன்பான ரசிகன்,
ராஜா
Comments
Post a Comment