Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - படலையில் மறுபடியும்



குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position' என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா, காது குடைகிறதா, காலிடுக்கை சொறிகிறதா என்று வெளியிலிருக்கும் எவருக்கும் தெரியாது. பெட்டி மூடிக்கிடக்கையில் உள்ளே அது எல்லாமுமாக இருக்கிறது. எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்யாமலும் இருக்கிறது. அதனைத்தான் 'Super Position' என்பார்கள். நாம் பெட்டியைத் திறந்து அதனைப் பார்க்கும் கணத்தில் அதன் நிலை ஒருப்படுகிறது. நான் அதனைப் பார்ப்பதாலேயே அதனுடைய 'Super Position' நிலை மாறி 'Solid State' நிலையை அடைகிறது. நடைமுறை யதார்த்தத்தில் பெட்டிக்குள் பூனையை அடைத்துவைத்தால் மூச்சுக்காற்று இன்றி அது இறந்துவிடும் என்பீர்களானால், fine, move on.

வெள்ளி நாவல் வெளியீட்டோடு ஒரு முடிவை எடுத்திருந்தேன். இனிமேல் ஒரு அன்றாடங்காய்ச்சியாட்டம் முகநூலில் எழுதுவதில்லை என்று. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் சமகால நாவல் ஒன்று ஒரு வருட காலமாக இழுபடுகிறது. அதனை ஒப்பேற்றவேண்டும். நிறைய வாசிக்கவேண்டும். சமையலில் கற்றுக்கொள்ள ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன. ஒரு சாதா தோசையை வட்டமாக ஒட்டாமல் பிரட்டி எடுப்பதே எத்தகு சாதனை என்பதை அண்மையில்தான் உணர்ந்தேன். ஒரு இசைக்கருவி கற்றுக்கொள்ளவேண்டும். ஏதாவது ஒரு மொழி படிக்கவேண்டும். பயணங்கள் செய்யவேண்டும். இப்படிப் பல திட்டங்கள். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி ஒரு கறுப்புப்பெட்டிக்குள் நான் முடங்கிப்போன பின்னர் இவை எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறேன். அல்லது எதையுமே செய்யாமல் வெறுமனே நெட்பிளிக்சில் ‘The Gentlemen’ பார்க்கிறேன். அந்த ஷ்ரோடிங்கர் பூனைபோல. யாருமே பாராதபோது என்னுடைய 'Super Position' என்பது பல வடிவங்களை எடுக்கிறது. அன்றொருநாள் புடாபஸ்டிலே இளையராஜா சிம்பனியை நான் conduct செய்துகொண்டிருந்தேன் என்றால் நம்பமாட்டீர்கள்.


இரண்டு வாரங்களுகு முன்னர்தான் அலிஸ் மன்றோ காலமானார். “Dear Life” அலிஸ் மன்றோ. சமகால இலக்கியத்தின் பீஷ்மர். ஒரு பெயர் தெரியாத கனேடிய சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், தனக்குத் தெரிந்த வாழ்க்கையை, தனக்குத்தெரிந்த எழுத்துப்பாணியில் எழுதிக் கலக்கிய மனுசி. தனது கதை மாந்தருக்கும் களத்துக்கும் எந்தத் தொடர்புமில்லாத, போர்ச் சூழலில் வாழ்ந்த, ஏழு கழுதை வயசிலும் ஆங்கிலம் தடுமாறுகின்ற ஒரு சாதாரண யாழ்ப்பாணத்து வாசகனைத் தேடிச்சென்று ஆட்கொண்ட பெருந்தகை அவர். சாகும்போது ஐந்தாறு செய்தித்தாள் கட்டுரைகளில் அவருடைய அஞ்சலிகள் சுருங்கிவிட்டன. நான் ஒருநாள் முழுதும் அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். மெல்பேர்னில் இப்போது இலையுதிர்காலம். நாம் வாழும் கிராமத்து மரங்கள் எல்லாம் பஞ்ச வர்ணத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. சருகுகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் எல்லாம் நான் மன்றோவின் எழுத்துக்களையே உணர்ந்தேன். வழிப்போக்கர்கள் எல்லாம் அவரின் கதை மாந்தர்கள் ஆனார்கள். இலக்கிய வாசிப்பு என்பது வெள்ளை யானையில் வாலைப்பிடித்து சொர்க்கம் செல்கின்ற சாலம்தான். லாகிரி, அலிஸ் மன்றோ, இன்றைக்கு நான் மிகத்தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கும் “Idra Novey” எல்லோரும் என்னை எங்கோ அழைத்துச் செல்வதாகத்தான் உணர்கிறேன். விருப்பமென்றால் நீங்களும் சேர்ந்து தொங்கலாம். அல்லது கீழே புல்வெளியிலேயே தொடர்ந்து மேயலாம். அல்லது வேறு ஒரு யானையில் வாலைப் பிடித்துத் தொங்கலாம். யானைகளுக்கா பஞ்சம்?

ஒரு மாதத்துக்கு முன்னர் என் புத்தகங்களின் ஆஸ்தான ஓவியரான ஜனகன் தொடர்புகொண்டார். 'ஜேகே, நம்முடைய கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி ஒருத்தர் இன்ஸ்டகிராமில் பதிவு செய்திருக்கிறார், பாருங்கள்’ என்றார்.

பாஃரா என்கின்ற ஒரு வாசகர். ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலிலிருந்து தனக்குப் பிடித்த சில பகுதிகளைக் காணொளியில் பகிர்ந்திருந்தார். வாசிப்பதும் பகிர்வதும் இயல்புதானே, இதிலென்ன சுவராசியம் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எனக்கு எழுத்திலே எப்போதும் இரண்டு தளங்கள் இருக்கவேண்டும். ஒன்று ஹெமிங்வே சொன்ன ‘read the literature for the pleasure of it’ தளம். பின்னர் அதனூடாக பிறிதொரு தளத்துக்கு வாசகரை அழைத்துச்செல்வது. அதை அறிவதும் அறியாததும் உங்களிஷ்டம். 'நீ பாதி நான் பாதி கண்ணே' என்றொரு பாட்டு இருக்கிறதல்லவா? இளையராஜாவின் மாயாஜாலம். பாடலை வெறுமனே கேட்கும்போதே அது நம்மை ஆட்கொண்டுவிடும். அதன் மெலடி அத்தனை அற்புதமானது. அதுதான் அந்த ஹெமிங்வே சொல்கின்ற ‘pleasure’. ஆனால் அதைக்கேட்கக் கேட்க, ராஜாவின் நகாசுகள் எல்லாம் நமக்கு மெதுவாகப் புரியத்தொடங்கும். கர்நாடக இசை அறிவு உள்ளவர் அதனை விளக்கினால் மலைப்பு வரும். அந்தப் பாட்டின் பிரதான இராகம் சக்கரவாகம் என்றால் ராஜா அதற்குள் நுழைய முதல் வேறு பல இராகங்களைத் தொட்டுத் துலாவுவார். ஒரு குழந்தை தன் பிறந்தநாள் பரிசுப்பொதியைப் பிரிக்கின்ற குதூகலம் பாடலைக் கேட்கும் நமக்கும் இருக்கும். என் எழுத்துக்கள் அனைத்திலும் நான் இதனை முயற்சி செய்வதுண்டு. அதில் நான் வெற்றி அடைகிறேனா, அது அபத்தமாக இருக்கிறதா என்பதெல்லாம் வாசகருடைய பிரச்சனை. எழுதும்போது அப்படியொரு முயற்சியை செய்வதே பேரின்பம். அதனிலும் பேரின்பம் அம்முயற்சியை வாசகர் ஒருவர் கண்டடையும்போது கிடைக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் ஆக்காட்டி சஞ்சிகையில் என்னுடைய நேர்காணல் ஒன்று வெளியாகியிருந்தது. எழுத்தாளர் சாதனா அந்த நேர்காணலைச் செய்திருந்தார். அதில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
“இலங்கையைப் பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன்.”

அதற்கு நான் கீழ்க்கண்டவாறு பதில் அளித்திருந்தேன்.

“முதலில் என் எழுத்துக்கள் சுவாரசியம் என்றமைக்கு நன்றி. என்னை நான் முன்னிலைப்படுத்துவதில்லை என்பதையும் ஓரளவுக்கு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். குறுகிய பரப்புக்குள் நிற்கிறேன் என்பதும் உண்மைதான். ஆனால் அதைவிட்டு வெளியே எப்படி வருவதென்று தெரியவில்லை. வரக்கூடாதென்றில்லை. வர எடுத்த முயற்சிகள் என்னை மீண்டும் அவ்வட்டத்தை குறுக்கியதாகவே முடிந்திருக்கின்றன.

நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை என்று நண்பர்கள் குறைப்படுவதுண்டு. ஆனால் அதில் உண்மை இல்லை. ஆனந்தவிகடன் எடிட்டருக்கு என்னுடைய 'குட்டி' என்ற சிறுகதையை அனுப்பினேன். 'கிடைத்தது' என்ற பதில்கூட வரவில்லை. அப்புறம் இன்னொரு கதையை எழுதி உடைந்த மூக்கை மீண்டும் உடைக்க மனம் ஒப்பவில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு என் சிறுகதைகளில் பத்தை அனுப்பி, அவை பதிப்பிடத் தகுதியானவையா என்று கேட்டேன். பதிலில்லை. நண்பர் ஒருவர் சொன்னதற்கமைய சுஜாதா விருதுகளுக்கு கூட விண்ணப்பம் செய்தேன். விருதை விடுங்கள், ஒரு ரிப்ளைகூட கிடைக்கவில்லை. ஒரு சிறுகதைப்போட்டியிலும் இப்படித்தான் அவமானப்படுத்தினார்கள். எழுத்தாளர்களையும் தொடர்புகொள்ள ஏதோ தடுக்கிறது. “இந்தா பாருங்கள் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன், வாசித்துச்சொல்லுங்கள்” என்று கேட்க அந்தரமாக இருக்கிறது. எதுக்கு கேட்கவேண்டும் என்று புத்தி தலையில் குட்டுகிறது. நீ ஏன் எழுத வந்தாய் என்பதை மறந்துவிடாதே என்கிறது. உன் அரிப்புக்கு எழுதுகிறாய். பிடிக்கிறவன் வாசிக்கிறான். அவ்வளவுதானே என்று தடுத்தாட்கொள்கிறது.

புத்தகம் பதிப்பிடுதல் என்பதும் இன்னொரு தலையிடி. தாவு தீர்ந்துவிட்டது. ஒரு பதிப்பாளர் இரண்டாயிரம் டொலர்கள் வேண்டுமென்றார். இன்னொருவர் காசே தேவைப்படாது என்று சொல்லி என்னிடம் வந்தார். கடைசியில் கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு என் கையால் நான்காயிரம் டொலர்கள் செலவாகிவிட்டன. பதிப்பாளர் ஒற்றைப்புத்தகம் விற்றுத்தரவில்லை. இந்தியாவிலாவது விற்றுத்தரக்கேட்டேன். ரிப்ளை இல்லை. நானே எல்லா புத்தகங்களையும் படலை மூலமே விற்கிறேன். நல்லகாலம், வாசகர்களால் முதலுக்கு மோசமில்லை.

இதில் எவரையும் குறை சொல்லவில்லை. எனக்கு இந்த விடயங்களில் அனுபவமில்லை. எழுதுவதில் இருக்கும் ஆர்வம், பதிப்பாளரை அணுகுவதில் இல்லை. அணுகும்விதமும் தெரியவில்லை. என் இயல்பும் இதற்கு பொருந்துவதில்லை. இதெல்லாவற்றையும் யோசித்தால் விசர் பிடிக்கும்! எழுதுவது இலகுவாகவும் இயல்பாகவும் அமைகிறது. படலைக்குள்ளேயே குறுக்கிக்கொள்கிறேன்.

ஒரு விடயம்.

என் எழுத்துகளை எனக்கு முந்தைய தலைமுறை வாசித்தால் நிறைய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் பின்னைய தலைமுறை வாசித்தால்தான் அது நிலைக்கும். எனக்கு அங்கீகாரம் அவ்வளவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டுதான். கொண்டையை மறைத்து பிரயோசனம் இல்லை. நான் ஒன்றும் யோகி கிடையாது. அதேசமயம் என்னைவிட ஒரு பத்து வயது குறைந்த தலைமுறை நிறைய வாசிக்கிறது என்பதில் அதீத பெருமையும் சந்தோசமும். ஒரு சிறு கதை எழுதினால் ஆயிரம்பேர் வாசிக்கிறார்கள். அது போதும். தமிழிலே எழுத முயலாதவர்கள்கூட பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அது சந்தோசம். அவர்கள்தான் அடுத்த கதை எழுத என்னை இருக்கையில் அமர வைப்பவர்கள். சாரு நிவேதிதாவைவிட ஓவராக புலம்பிவிட்டேன்போல. லூஸ்ல விடுவோம்!

சில வருடங்களுக்கு முன்னர், தற்போதைய அப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், இப்பதவிக்கு வரமுன்னர் லிங்கன் சொன்ன வாசகத்தை சொல்லியிருப்பார், அதை எப்போதும் நான் ஞாபகப்படுத்திக்கொள்வேன்.

“I will prepare, and someday my chance will come”

பாஃராவின் காணொளிகளைப் பார்த்தபோது இந்த நேர்காணல் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது. நான் எனக்குப் பிடித்ததை உவந்து செய்கிறேன். அதைப் பிறிதொரு தலைமுறை கண்டடையும்போது ஒரு கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறது. உத்வேகம் தோன்றுகிறது. பல நாட்களாக எட்டியே பார்க்காத நாவலின் அடுத்த வரிகள் அதிகாலையிலேயே தேடி வந்து என் வீட்டு அழைப்பு மணியை அடித்து வாசலில் காத்துக்கிடக்கின்றன. உன்மத்தம் என்க.

கடந்து இரண்டு மாதங்களில் ஏராளமான புதிய வாசகர்கள் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூலை எங்கு வாங்கலாம் என்று கேட்டு மின்மடல் அனுப்புகிறார்கள். புத்தகம் கிண்டிலில் கிடக்கிறது. அச்சுப்பிரதிகள் என்னிடம் சில இருக்கின்றன. அவற்றை படலையிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஆனால் சுமைகூலியால் அவற்றின் விலை அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவிலும் இலங்கையிலும் இதன் பிரதிகள் தீர்ந்துவிட்டன. புதிதாக ஒரு பதிப்பாளரைத் தேடிச்செல்லும் ஆர்வமும் இப்போது வடிந்துவிட்டது. யாராவது முன்வந்தால் பதிப்பிக்கலாம். ஆனால் அதற்காகக் காத்திருக்கமுடியாது என்று தோன்றுகிறது. 

அதனால் வாசகர்களுக்காக “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” தொகுப்பை மறுபடியும் படலையில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” தொடரை படலையில் ஆரம்பித்தபோது இருந்த மனநிலையை யோசித்துப்பார்க்கிறேன். I just wanted to write. எழுதவேண்டும் என்று அப்படி ஒரு வெறி இருந்தது. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று தொடர்களை அக்காலத்தில் படலையில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றில் சிலதுதான் ஈற்றில் தேறியது. ஆனால் எல்லாமே எனக்கு எழுத்துப் பயிற்சியைக் கொடுத்தது. இன்றைக்கு ஒரு வார்த்தைக்கு நான் அலைந்து திரிகிறேன். எழுதும் நாவலின் அடுத்த வரிகள் என்ன என்பதை யோசிக்கும்போதே பதட்டம் வருகிறது. எழுதும் ஒவ்வொரு சொல்லும் இதுவரை பூமியில் எழுதப்படாத ஒரு பாத்திரத்தை செதுக்குகிறது என்ற லாஹிரியின் வரிகள் விழிவெண்படலத்தில் திரண்டு மிரட்டுகிறது. எழுத்து அமைதியாகிறது. 

பாய்ந்தலைந்து ஓடிவந்த மலை நதி சமதரையில் சலனமின்றி நகர்வதைப்போல.

“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” தொடரின் அத்தியாயங்கள் ஜூன் மாதம் இரண்டாம் திகதியிலிருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளியாகும்.

*****

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...