Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்

 

நித்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை. மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை, ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து, கொளுவி வளைக்கும்போது, சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி, தலை, முகம், கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும். திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில், மொட்டுத் தவிர்த்து, பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள்? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன். தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூ மரங்களில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ சாமிக்கு வைக்கக்கூடாது. கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்குத் தேவை. ரோசாப்பூவைப் பிடுங்கினால் அம்மா திட்டுவார்.  அது விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்கில் போறாமைப்படுவதற்கு. பொறாமைப்படுவார்கள்.

எப்பிடி உங்கட மண்ணில மட்டும் ரோஸ் நல்லா வளருது?

அது தியத்தலாவையில் இருந்து ஸ்பெசலாக் கொண்டுவந்தது. எங்கட கிணத்துத் தண்ணிக்கு கட கடவெண்டு வளந்திடும்

பதி வச்சுத் தாறீங்களா?

கற்றை கற்றையாய்ப் பூத்துத் தொங்கும் மஞ்சள் கோன்பூக்களில் கொஞ்சத்தை இழுத்துப்போட்டுக்கொண்டே பின் வளவுக்குச் சென்றால், அங்கே எக்ஸ்சோரா மரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர் கலர் என்று பல ரகம். கொத்தை அப்படியே அள்ளி, அம்மா செக் பண்ணுகிறாரா என்று பார்த்து, இல்லை என்றால் அந்தச் சின்னச் சின்ன ஸ்ட்ரோக்களில் தேனை உறிஞ்சி; தேன் எனும்போதுதான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள்? அப்படி என்றால் வாழைப்பொத்திகளில் தேன் குடிக்காமல் விட்டிருக்கமாட்டீர்கள். காலையில் அணில் பிள்ளைகள் வரும் முன்னரேயே தோட்டத்துக்குப் போய் பொத்திகளில் உதிராமல் இருக்கும் பூ இதழ்களை ஒவ்வொன்றாகக் கொய்து, அதில் சொட்டு சொட்டாய் ஒட்டியிருக்கும் தேனினைக் குடிக்கவேண்டுமே. சாதுவாக வாழைக் கயரும் சேர்ந்துகொடுக்கும் அந்தத் தேனின் சுவை, ‘தினைதனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதேஎன்ற மாணிக்கவாசகர் வரிகளை ஞாபகப்படுத்தும். 

கோத்தும்பி இப்போது தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தைத் தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறது. 

சாமியறைத் தட்டு. 

பிள்ளையார், முருகன், இலட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூசணி, குட்டியாகச் சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடுமாதா சிலை, வீட்டு குடிபூரலுக்குநமசிவாயம் குடும்பத்தார்உபயம் செய்த சரவணபவன், பிருந்தாவனத்துக் கிருஷ்ணன், சின்ன இயேசு, சிவனே என்று ஒரு புத்தர். இப்படியே தட்டு பூராகக் கடவுள்கள் பழைய உதயன் பேப்பருக்கு மேலே வீற்றிருப்பார்கள். பின்பக்கம் கரப்பான் பூச்சிகள் ஓடும். ஆங்காங்கே பூச்சி உருண்டைகள். சிந்திய வீபூதி. எப்போதோ செய்த காய்ந்துபோன அர்ச்சனை வெற்றிலைகள். தோத்திர பாடல் தொகுப்புகள். எல்லாமே படங்களுக்கு முன்னே இரைந்து கிடக்கும். நவராத்திரி, பொங்கல், வருடப்பிறப்பு என்றால் மட்டும் கடவுள்கள் துப்புரவாக்கப்படுவார்கள். புதுக்கோலம் கிடைக்கும்.  ஸ்பெசலாக இலட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மேலே வண்ண வண்ண பல்புகள் எரியும்.எங்கள் வீடு என்றில்லை. யாழ்ப்பாணத்தின் அநேகமான வீடுகளில் இப்படிக் கடவுள்கள் பல்பு வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

சாமித்தட்டிலும் யாருக்குப் பூ வைப்பது என்பதில் முன்னுரிமை இருக்கிறது. குடிபூரலுக்கு உள்ளே வந்த கடவுள்கள்தான் முதல் குடியேறிகள். அவர்களுக்குச் செவ்வரத்தை வேண்டும். பெரிய பிள்ளையாருக்குச் செவ்வரத்தை கிடைத்தால் சின்னப் பிள்ளையார் பாவம் அன்றைக்கு அவருக்கு வெறும் நித்தியகல்யாணிதான். ஒரே கடவுளுக்கு இரண்டு பெரிய பூக்களைக் கொடுக்கமுடியாது.  கணக்கு வழக்கு இல்லாமல் எல்லாப் பூக்களையும் கியூவில் முன்னுக்கு நிற்கும் கடவுள்களுக்குக் கொடுத்துவிட்டால் வரிசையில் பின்னுக்கு நிற்கும் குட்டி மரியாளுக்கு ஒரேயொரு எக்சோரா பூவிதழைச் சிவலிங்கத்திடமிருந்து பிய்த்துக்கொடுப்பேன். பவரைக் காட்டினால்தான் கடவுளுக்குக் கூட பூ கிடைக்கும். கன்னத்தைக் காட்டினால்? இயேசுக்கு வெறும் நித்தியகல்யாணி இலையே எஞ்சும். புத்தருக்கு அதுவும் இல்லை.  கச்சாமி.

எங்கள் சின்னம்மா ஒரு முறை தஞ்சாவூருக்குப் போய்வந்தபோது குட்டி பிள்ளையார் சிலை ஒன்றை வாங்கிவந்தார். முழுக்க முழுக்கச் சந்தனத்தாலான சிலை அது. திறந்து வைத்தால் வாசம் போய்விடும் என்று ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அவரை வைத்திருந்தோம். அவ்வப்போது கொஞ்சமாக மூடியைத் திறந்து பிள்ளையாரை முகர்ந்து பார்ப்பதுண்டு. அந்த வாசத்துக்காகவே அவருக்கு ஒரு ஸ்பெசல் மஞ்சள் கோன் பூ ஒன்றைத் தலையில் வைப்பேன். 

தொப்பி வாங்கிய பிள்ளையார்.


*****

 

பள்ளிக்கூடத்தில் தவணைப் பரீட்சை வருகிறது என்றால் கடவுள் பயம் பயங்கரமாக வந்துவிடும். புத்தருக்குக் கூட செவ்வரத்தை கிடைக்கும். முதல் நாள் பரீட்சைதமிழ்’. அதில் ஓரளவுக்கு நன்றாகச் செய்துவிட்டால் அடுத்தடுத்த பரீட்சை எல்லாம் அதே சப்பாத்து, அதே சொக்ஸ், பெனியன், ஷர்ட், ஷோர்ட்ஸ் எல்லாமே. பெண்டரைக் கூட மாற்றுவதில்லை. மாற்றினால் பரீட்சை பேப்பர் கடினமாகிவிடும். 

இதிலே எனக்கென்று தனிப்பட்ட வியாதியொன்றும் இருந்தது.  வீட்டிலிருந்து கேற்றுக்கு நடந்துபோய்க்கொண்டு இருப்பேன். அப்போது பார்த்து மனதில் கடவுள் தடுத்தாட்கொள்வார். 

டேய் குமரன், இன்றைக்குச் சரியாக ஐந்தாவதாக இருக்கும் குட்டி சிவலிங்கத்தைத் தொட்டுக் கும்பிட மறந்துவிட்டாய். நீ ஒழுங்காகவெளிப்படை உண்மைநிறுவலும் படிக்கவில்லை. தப்பித்தவறி கஷ்டமான கேள்வியாக வந்துவிட்டால்? 

என்னடா இது வில்லங்கம் என்று விறுவிறுவென மீண்டும் சப்பாத்து, சொக்ஸ் எல்லாம் கழட்டி, சாமியறைக்குள்ளே போய், அந்தச் சிவலிங்கத்தைக் கும்பிட்டுவிட்டுத் திரும்புகையில் ஏனைய கடவுள்களைக் கண்டும் காணாமல் போவதை மனம் கேளாது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்துபிள்ளையாரப்பா, லட்சுமி தேவியே, முருகப்பெருமானே, வள்ளி தெய்வானையே, எலியே, சேவலே, நாக பூசணி அம்மாளே, ஐந்து தலை நாகமே, சிவலிங்க பெருமானே, கங்கா தேவியே, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா’.

அப்பாடி இப்போதுதான் நிம்மதி என்று சாமியறைக்கு வெளியே வரும்போது, அடடா ஒன்பது இராவணன் தலைகளைத்தானே எண்ணினோம். பத்தாவது எங்கே? ஆகா அதைத்தானே கொய்து வீணை வாசிக்கிறார் தலைவர். அதை விட முடியாதே. மீண்டும் சாமியறை விரைந்து, ‘இராவணா ...’ எண்ணி முடித்து, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் கும்பிடத் தொடங்க, 

டேய் வெளிக்கிடுடா, விழுந்து விழுந்து கும்பிட்டாச் சரியாயிடுமா? ஒழுங்கா படிச்சல்லோ இருக்கோணும்?

அக்கா திட்டத் தொடங்குவாள். வெளியே வந்து சைக்கிள் எடுக்கவும், கீர்த்தி முழிவியலமாய் வந்து நிற்பான். நெற்றி முழுதும் பட்டையும் பத்து சந்தன பொட்டும் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க, அண்ணரின் வீட்டிலும் ஒன்றுக்கு ரெண்டாக இராவணன் படம் இருப்பது விளங்கும்.

இப்போது பரீட்சைக்குப் போகும் வழி. வழி முழுக்கக் கோதாரி பிடிச்ச யாழ்ப்பாணத்தார் கோயில் கோயிலாகக் கட்டி வைத்திருக்க எங்கள் பாடுதான் திண்டாட்டம். ஸ்டார்ட்டிங் பொயிண்ட் நேர்சிங்கோம்  பிள்ளையார் கோயிலடி. வலு விசேசமான கோயில். எங்கள் வீடு எந்த பொம்மர், ஷெல் அடிக்கும் ஆடாமல் அசையாமல் நின்றதுக்கு அந்தப் பிள்ளையார்தான் மெயின் காரணம் என்று எங்கள் குடும்பத்தில் ஒரு அலாதி நம்பிக்கை. ஒன்றுக்கு மூன்று முறை சுற்றிவிட்டுக் கையில் இருந்த ஐம்பது சதத்தை உண்டியலில் போடும்போது ஒரு நம்பிக்கை வந்தது. வெளியே வந்து சப்பாத்து போடும்போது கீர்த்தியிடம் கேட்டேன். 

எவ்வளவடா உண்டியலில போட்டாய்?
        
ஒரூவா ... நீ?
        
ரெண்டு ரூவாடா”’



 வழியில் சிவன் அம்மன் கோயிலில் சைன் வைத்துவிட்டு நல்லூருக்குப் போகிறோம். இறங்கி உள்ளேபோய் கோபுர வாசலில் மண்ணைத் தட்டிவிட்டு விழுந்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். ‘ஸ்ரீகணநாதா கழல் தொழுதேன் அடியேனா..’ என்ற கீதம் நிச்சயம் மூன்று முறை நல்லூர் முருகன் சந்நிதானத்தில் பாடுவேன். முருகன் கோயிலில் எதற்குப் பிள்ளையார் பாட்டு என்று ஒரு டவுட் வரலாம். இந்தப் பாட்டு கேட்டுவிட்டுப் போனதாலேயே ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் எக்ஸாம் பாஸ் பண்ணினேன். அதிலிருந்து எந்த எக்ஸாம் என்றாலும் ஸ்ரீகணநாதாதான். டிரைவிங் டெஸ்ட் உட்பட.

சுற்றிக்கொண்டு கோயில் வீதி பிடித்து, கைலாயபிள்ளையார் கோயிலில் கும்பிட்டு, நாவலர் வீதி தாண்டினால் இனி தேவாலயங்கள் அமையப்பெற்ற பகுதி.  ஒருவேளை இயேசுதான் உண்மையான கடவுளாக இருந்துவிட்டால்? சந்தேகம் வலுக்க, ஒவ்வொரு தேவாலயமாக ஏறி இறங்கி, சரியாகத் தெரியாத சிலுவைக் குறியைச் சைகை செய்து வணங்கி, சிலமுக்கியத்துவம்  குறைந்த வைரவர், பெண்டிக்கொஸ்தே, கோபுரம் இல்லாத குட்டி ஆலமரத்தடி கோயில்கள் இடையிடையே வந்தால் இறங்கி உள்ளே போகாமல் சைக்கிள் பெடலில் ஸ்டாண்டிங்கில் நின்று வணங்கி, சென்ஜோன்சுக்கு போகவும், மணி அடிக்கவும் சரியாக இருக்கும். 

நல்ல சகுனம்.

இன்றைக்கு என்னுடைய பதின்ம வயது கடவுள் பக்தியை மீட்டிப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் மேல் பக்தியா பயமா என்றால் பயம்தான் அதிகம். அதேநேரம் முறைப்பாடுகளுக்கும் பஞ்சமில்லை. அம்மா ஏசினால், அப்பா கம்பெடுத்தால்எனக்கேன் இப்படி ஒரு அம்மா அப்பாவைத் தந்தாய் தெய்வமே?என்பது முதல், வானதி அக்கா ஆனையிறவு அடிபாட்டில் இறந்த செய்தி கேட்டு, ‘ஏன் சோதி அக்காவை இப்படிக் கொன்று போட்டாய்?என எத்தனை புலம்பல்கள்.  கதிரைக்கால் முதிரை மரம், தெரியாமல் முழங்காலில் பட்டால் உடனே திட்டுவதும் கடவுளைத்தான். .எல் பரீட்சைப் பெறுபேறு கிடைத்தபோது ஒரு நல்ல முடியுள்ள தேங்காயை அம்மா என் கையில் தந்து, 


ஓடிப்போய் பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வா, உன்னைக் குழப்பாமப் படிப்பிச்சவர் அவர்தான்

*****

 தொண்ணூறாம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். நாச்சிமார் கோயிலில் சரஸ்வதி பூசை. அக்காமாரின் இசை நிகழ்ச்சி. எல்லோரும் ஹாஃப் சாரியில், பின்னால் கனகாம்பர சடை வைத்து, சாரிக்குப் போர்ச் குத்தி, கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து பாடுகிறார்கள்.

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ...”

என்று மெலடியாகத் தொடங்கி, 

அருள்வாய் நீ... இசை தர வா நீ...
இங்கு வருவாய் நீ... லயம் தரும் வேணி
அம்மா...”

முடிக்கும் இடத்தில் உச்சஸ்தாயியை எட்டமுடியாமல் திணறி, மூக்கு பிய்ந்து, சுருதி பிசகி, சங்கீத டீச்சர் முறைத்தது தெரியாமல் நாங்கள் எல்லாம் கைதட்டிகோயில் சார்ந்த கலாச்சாரத்தில்தான் எத்தனை இனிமை. கடவுள் மீது எனக்கு இருந்த ஒருவித ஈர்ப்புக்கு முக்கிய காரணம் தேவார இசையும் எங்கள் ஊர்க் கோவில்களும்தான். அத்தனை தேவாரங்களிலும் அருமையான மெட்டுகள். ‘மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதேஎன்பதை ஒருமுறை கண்கள் மூடி சந்திரமௌலீசன் சேர் வகுப்பில் பாடியபோது என்னை அறியாமல் கண் கலங்கியது. 

ஆளாயிருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்,
வாளாங்கிருப்பீர் திருவாரூரில்,
வாழ்ந்து போதீரே

கடவுளைச் சுந்தரர் கையாண்ட விதம் ஆச்சரியமானது. ‘இவ்வளவு சொல்லியும் பேசாமல் இருந்தால் என்ன மனுசன் நீ. எக்கேடு கெட்டும் போஎன்று கடவுளையே நொந்து கொள்கிறார் சுந்தரர்.

சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

என்று திருவெம்பாவையில் எள்ளி நகையாடும் விளையாட்டை இறைவன் பெயரில் செய்யும் துணிச்சல். இன்னும் கொஞ்சம் ஆழ்வார் பாடல்களில் இருக்கும் போர்னோகிராபியைப் பார்த்தால் ஆச்சரியம் விரியும். இறைவனைக் காதலுடனும், ஊடலுடனும், கூடலுடனும் பார்த்த மதம் எங்களது. நம் முன்னோர்களின் இந்த லிபரல் அணுகுமுறை இன்றைக்கு இல்லை. இறைவனை அப்படி எழுத முடியுமா? ஆண்டாள் காதல் எல்லாம் முடியுமா? மொட்டை அடிச்சுக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திவிடுவார்கள்.  

இடம்பெயர்ந்து வட்டக்கச்சியில் வசிக்கும் காலம். புளியம்பொக்கணை திருவிழா ஆரம்பிக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர் எல்லாம், புளிச்சோறு செய்து, மோர்ப்பந்தலுக்குரிய பொருட்கள், நேர்த்திக்கடாக்கள், சேவல்கள் ரெடி பண்ணுவார்கள். பெண்கள் அனைவரும் காஞ்சிபுரம், பாவாடை, சட்டை, ஆண்கள் புதுச்சாறம், சேர்ட் அணிந்து, மேலிரண்டு பட்டன்கள் போடாமல் வெளிக்கிட்டு வெளியே வந்தால், வீதியில் ஐந்தாறு ட்ரக்டர்கள் வரிசையாய் நிற்கும். வட்டக்கச்சியில் இருந்து புளியம்பொக்கணை ஒரு மணித்தியால ஓட்டம். இடையிடையே புளிச்சாதம். ஆளுக்கு ஆள் அடிக்கும் நக்கல்கள். சத்தம்போடாமல் செய்யும் காதல். கோயிலைச் சென்றடைந்தவுடன் பெண்கள் பொங்கலுக்கு அடுப்பு தயார் செய்வார்கள். ஆண்கள் மோர்ப்பந்தல் சரிக்கட்டுவோம். வேள்விச்சேவல்கள் மதியநேரத்திலும் கூவிக்கொண்டிருக்கும். ஆட்டுக்கிடாய்கள் மிரண்டுபோய்க் கத்தும். போன கடனுக்கு அம்மாளைக் கும்பிட்டுவிட்டு, கோயில் பிரகாரத்தில் நாங்கள் அடிக்கும் பம்பல். திருவிழா முடிந்து வேள்வி மிருகங்களைப் போடும் ஏலம். கிராமத்துக் கடவுள்களுக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி மிகக் குறைவு. அவர்களின் பக்தியும் புரிந்துணர்வும் மிக எளிமையானது. வாழும் வாழ்க்கையோடு பிணைந்திருப்பது. வாழ்ந்து பார்த்தாலேயே விளங்கக்கூடியது.

அடுத்த புளியம்பொக்கணை திருவிழாவுக்கு வண்டி கட்டிப்போக வேண்டும்.

நயினாதீவில் எங்கள் வீட்டிலிருந்துகூப்பிடுதூரத்தில் ஒரு கடற்கரைப் பிடாரி கோயில் இருக்கிறது. புழுதியும் கடல் காற்றும் மாலை ஆறுமணிக்கு மேலே காதோரங்களில் பல கதைகள் சொல்லும். அந்தக் காற்றில் கோயில் நாதஸ்வரம் ஒருவிதஸ்ஸ்ஸ்சத்தத்துடன் இசைக்கவும், வீட்டிலிருந்து வெறும்காலுடன் நடக்க ஆரம்பிப்போம். போகும் வழியில் பூவரசுமரத்தில் பீபீ செய்து, நான் கானமூர்த்தி, மச்சான் பஞ்சமூர்த்தி, இன்னொரு மச்சான் தவில் தட்சணாமூர்த்தி, வாசித்துக்கொண்டே கோயிலுக்குப் போவோம்.  பீபீயிலிருந்து எச்சில் வழியும். சாமி வெளியே வருவார். வடைமாலை சாத்தப்படும். வரிசையாக அடுப்புகளில் பொங்கல் பானைகள் பிடாரி அம்மனுக்காகக் காத்திருக்கும். தீ மிதிப்பார்கள். சில ரவுண்காரர் குடுகுடுவென்று அரக்கப் பறக்கத் தீக்கனல் மேலே ஓடுவார்கள். பூசை முடியச் சுண்டலும், பூவரசு இலையில் தரும் புக்கையும், ஐயர் வீட்டு மோதகமும் கோயிலடியில் வைத்துச் சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு தாண்டி வீடு  திரும்புவோம். 

பிடாரி கோயிலுக்கும் போகவேண்டும்.

 *****


பதினேழு வயசுவரைக்கும் கடவுள் பாசத்துக்குக் குறைவில்லை. அப்புறமாகக் கம்யூனிஸ்டாக மாறும் பருவம் என்று சொல்வார்கள். எனக்கு எப்படி அது நிகழ்ந்தது?  ‘இருவர்என்று நினைக்கிறேன். வவுனியா நெலுக்குளம் அகதி முகாமில் இருக்கும்போதுதான் இருவர் வெளியானது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டக் காலம், அதன் பின்னரான அரசியல் சுவாரசியம் என்னையும் பிடித்துக்கொள்ள, யாழ்ப்பாணம் திரும்பி வந்தபின்னர் தொடர்ந்து அந்த வரலாற்றையேத் தேடித்தேடிப் படித்தேன். இந்தியாவில் படித்த சுந்தரம்பிள்ளை அங்கிளை அரித்து அரித்துக் கேட்டதில் பெரியார் பற்றி நிறையவே அறிய முடிந்தது. திராவிடக் கழகத்தின் எழுச்சி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம், கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கருத்துகளில் இருந்த ஜனரஞ்சகத்தன்மை என்னைக் கவரத் தொடங்கியது.

பெரியார். 

எனக்கு முன்னம் பின்னம் தெரியாத நபர். எனக்கென்றில்லை, எங்கள் ஊரிலேயே பெரிதாக அறியப்படாதவர். யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட பெரியார் இருட்டடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதை இப்போது யாரும் நம்புவதில்லை. எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் இருந்தது. காந்திஜி இயக்கம் ஒன்று கூட கொழும்பில் இருந்தது. பெரியாரைச் சீண்டுவாரில்லை. காரணம் தங்கள் இருப்புக்கு மோசம் வந்துவிடுமோ என்ற கவலைதான். ஈழத்துத் தலைவர்கள் பெரியாருடன் தொடர்பில் இருந்தாலும், அது ஒருவித ராஜதந்திர ரீதியான தொடர்புகளே ஒழியப் பெரியாரின் கொள்கைகள்பால் கொண்ட பற்றில் இல்லை. அதற்குப் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பார்ப்பனிய எதிர்ப்பின் தேவை ஈழத்தில் பெரிதாக இருக்கவில்லை. பெரியார் கொள்கைகளைத் தேவையாகக்கொண்ட சமுதாயத்துக்குப் பெரியார் என்ற ஒருவர் இருந்ததே தெரியாது. தெரிவிக்கவும் ஆள் இல்லை. கூடவே எல்லோருக்குமான பொது எதிரி இருந்ததால் சமூகத்துக்குள் ஒரு விடுதலை என்ற எண்ணத்துக்கு எவருமே வரத்தலைப்படவில்லை.

இப்படியான சூழ்நிலையில் ஒரு தெளிவில்லாத பகுத்தறிவுவாதம் எனக்குள் உருவாகிறது. செலக்டிவ் பகுத்தறிவு. தேவைக்குக் கடவுள். பரீட்சை என்றால் இயல்பாக வரும் superstitious எண்ணங்களை என்பகுத்தறிவால்மேவ முடியவில்லை. ஒரு சிவப்புத் தொப்பியை இருபது வருடங்களாக வைத்திருந்த ஆள் நான். என் பேர்சுக்குள் காசு இல்லாமல் போனாலும் வெண்ணெய் தின்னும் கண்ணன் எப்போதும் இருப்பான். இடம்பெயரும்போதுகூடச் சேர்ந்து இருந்தவன். ஆர்மிக்கு .சி காட்டும்போது அவனும் என்னோடு சேர்ந்து பல்லிளிப்பான். ஆபத்பாந்தவன். இன்றைக்கும் என்னோடு இருக்கிறான். நான்கு மூலையிலும் பிய்ந்து உக்கிய தொண்ணூற்றிரண்டாம் ஆண்டு கலண்டர். ஏனோ எறிந்துவிட மனம் வரவில்லை. காஸ்ட் எவே(Cast Away) படத்தின் நாயகன் ஒரு வொலிபோலை எப்போதும் துணைக்கு வைத்திருப்பார் இல்லையா. அந்தப் பந்துக்கு வில்கின்சன் என்று பெயர் வைத்து, முடி வைத்து, முகம் வைத்து, அது நீரில் தத்தளிக்கும்போது போய்க் காப்பாற்றி... அவனுக்கு அந்தப் பந்துதான் ஒரே பிடிமானம். என் கண்ணன் படமும் அப்படியே. ‘பயப்படாதே நான் இருக்கிறேன்என்று சொல்கின்ற ஒரு பிடிமானம்.  

ஹர்ஷா என்கின்ற சிங்கள நண்பரோடு ஒருமுறை ஓஷோ பற்றி விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது . ‘கடவுள் என்று ஒன்றில்லை, அது நீயும் நீ வாழும் வாழ்க்கையுந்தான்என்ற ஓஷோவின் தளம்தான் எங்கள் விவாதப்பொருள். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று நான் கேட்க, அது ஏன் தோன்றியிருக்கவேண்டும் என்று நினைக்கிறாய் என ஹர்ஷா திருப்பிக் கேட்டபோது திக் என்றது. அதுதானே? ஒன்று ஏன் எப்போதுமே இன்னொன்றில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்? எங்களுக்கு எந்தப் பொருளுக்குமே ஆதியும் அந்தமும் இருக்கவேண்டும். அது இல்லாதது அருட்பெரும் சோதியாகிறது. எல்லாமே காரண காரியங்களுடன் நடக்கிறது என்பது இன்னொரு எண்ணப்பாடு. இயற்கை ஏன் முடிவில்லாமலேயே இருக்கக்கூடாது? அந்த முடிவில்லா இயற்கையின் ஒரு சேர்மானம்தான் நான். இன்னொரு சேர்மானம் நீங்கள். இந்த செதனக் கலவையின் ஆச்சரியமே யோசிக்கும் ஆற்றல்தான். நான் ஏன் இயக்கப்படவேண்டும்? இயல்பானதாகவே இருக்கமுடியாதா? எண்ணற்ற அனிச்சைச் செயல்களின் வண்ணத்துப்பூச்சி விளைவின் நீட்சிதானே நான்? அபூர்வமான இந்தக் கூறுகள் தங்களுடைய இருப்புக்காக, யுகம் யுகமாய்க் கூர்ப்படைந்து, திரிந்து உயிரிகளாக மாறியிருப்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறதா? என்னைக்கேட்டால் இல்லை என்றே சொல்வேன். எங்கள் அறிவுக்கு ஓரளவு சிந்திக்கலாம். அதிகமாகச் சிந்திக்க மூளையின் சிந்தெடிக் பவர் போதாது. கேவலம் பால்வீதிக்குள்ளேயே குதிரை ஓட்டமுடியாத அற்பப்பதர்கள் நாங்கள். அணுவுக்குள் இருப்பனவற்றையே அறியமுடியாமல் திகைப்பவர்கள். குவாண்டம் என்டாங்கில்மெண்ட் போன்ற விஞ்ஞான ஆச்சரியங்களை எங்கள் பௌதீகவியல் விதிகளுக்குள் இன்னமுமே அடக்க முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் எதற்குச் சிந்தித்து முறியவேண்டும் என்று யோசித்து, சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தியை இறைவன் என்று பெயர் சூட்டி இலகுவாக்கிவிட்டோம். x=1 க்கு நிறுவி, பின் x=n க்கு உண்மை என்றால் x=n+1 க்கும் உண்மை என்று முடிவு பண்ணி, உயிரியல் அமைப்புக்கு ஒரு வரைவிலக்கணம் கொடுக்கும் பேதைத்தனம். கணிதத்தில் எட்டா இடத்தை முடிவிலி என்று சொல்லி கேஸ் க்ளோஸ் பண்ணுவதுபோலத்தான் இதுவும். முடிவிலிக்கு ஆஸ்திகம் கொடுக்கும் பெயர்தான் கடவுள்.  

பைஃட் கிளப்என்ற ஆங்கிலப்படத்தில் வரும் வசனம் இது. 

Listen up, maggots. You are not special. You are not a beautiful or unique snowflake. You're the same decaying organic matter as everything else

இது புரிந்தால் வாழ்க்கை இலகுவாகிறது. இறப்புக்குப் பின் என்று எதுவுமே இல்லை. நான்என்ற விசயம் இங்கேயே தொடங்கி இங்கேயே முடிகிறது.  இறப்பின்போதுநான்என்ற சேர்மானம் சுக்கு நூறாக உடைய, அதற்குப் பிறகு எதுவுமே இல்லை என்று ஆகிறது. எதுவுமே. என்னோடு உயிர் வாழ்ந்த மற்றையநான்களின் ஞாபகங்களில் நான் இருக்கப்போகிறேன். அவ்வளவுதான். அது எனக்கு எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. Because I am gone, just gone. 

எங்கேயோ வாசித்தது ஞாபகம் வருகிறது. 

It’ll bring a great peace in accepting that there is no life after death

இந்த நம்பிக்கையை நாத்திகம், ஆங்கிலத்தில் ஏத்தியிசம் என்பார்கள் இல்லையா? இதைச் சரி என்று நினைத்து எம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பார்க்கும்போது ஒருவித அமைதி வருகிறது. ‘ஒரு பொல்லாப்பும் இல்லைஎன்று சொல்லத்தோன்றுகிறது. ஆங்கிலத்தில்வட் ஹெக்’. நாம் எதிலாவது வைக்கும் நம்பிக்கை கொண்டுவரும் அந்தப் பக்குவம் அபரிமிதமானது. அது கடவுளில் வைத்தால் என்ன? கடவுள் இன்மையில் வைத்தால் என்ன? 

நண்பி அமுதா, இவன் எப்போது பார்த்தாலும் நாத்திகம் பேசிக்கொண்டு இருக்கிறானே, ஒரு வழிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, தன்னுடைய மெதடிஸ்ட் சேர்ச்சில் தொடங்கவிருந்த கிறிஸ்தவப் போதனை வகுப்பில் வந்து இணையச் சொன்னார். சும்மா போய்ப்பாரேன் என்று சொல்ல, அப்படித்தான் நீங்கள் ஆரம்பிப்பீர்கள் என்றேன். ஆனாலும்  என்னதான் நடக்கிறது என்று பார்க்கப் போனேன். பதினாலு அமர்வுகள். பாலன் பிறந்ததில் ஆரம்பித்து, சிலுவையில் அறைந்தது, கட்டளைகள் என அந்தப் போதகருடன் உரையாடிய விடயங்கள் எல்லாமே நம்பிக்கைகள் சார்ந்தவை. போதகர் ஒரு சீன இனத்து வைத்தியர். எத்தனையோ தடவைகள் அறுவை சிகிச்சைகளுக்கு முன்னர் பிரார்த்தனை செய்திருப்பதாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது.

இயல்பாக நடக்கும் விடயத்தை ஏன் கடவுள் என்று பெயரிட்டுக் கொள்கிறோம்? சில விடயங்களுக்கு எங்களுக்கு விளக்கம் தெரியாது. அப்போது அதை அற்புதம் என்று நினைத்து மெருகூட்டி, பார்த்தவர்கள் எழுதிவைக்க, யுகங்கள் கடந்து அவையெல்லாம் உண்மைச் சம்பவங்களாக இன்றைக்கு உலாவுகின்றன.  உதாரணமாக இலங்கையின் மகாவம்சத்தையும், இராமன் பாலம் போன்ற விடயங்களையும் நான் அந்தப் போதகருக்கு விளக்கிக் கூறினேன். இதனால்தானோ என்னவோ தொழிற்புரட்சியின் பின்னர் கடவுள்கள் வருகை  இடம்பெறவில்லை என்றேன். ஓரளவுக்கு கடவுள்களை இல்லை என்று கண்டறியும் ஆற்றல் மனித குலத்துக்கு வந்ததால், ‘அற்புதங்களைகாரணப்படுத்தி விளக்க முடிவதால், இன்னொரு அவதாரமும் இறை தூதரும் நம்முள் உலவும் சாத்தியம் இல்லாமல் போயிற்று என்றேன். 

அமைதியுடன் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் போதகர், என் பக்கத்தில் இருந்த நபரிடம் அவர் கதையைச் சொல்லச்சொன்னார். அந்த நபருக்குப் புற்றுநோய். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குக் காத்திருப்பவர். மனைவியும் அவரும் இறைவன் தம்மைக் கவனிப்பான் என்ற நம்பிக்கையில் புத்த சமயத்தில் இருந்து கிறிஸ்தவப் போதனைக்கு மாறும் எண்ணத்தில் வந்திருந்தனர். அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கை பளிச்சிட்டது. வெளிச்சத்தை அணைத்துவைத்து, இயேசுவைச் சிலுவையில் அறைந்ததை விவரித்தபோது அவர்களும் விக்கி விக்கி அழுதனர். மூன்றாம் நாள் இயேசு மீண்டும் உதித்தபோது அந்த நபரின் மனைவியின் கண்களில் விளக்கமுடியாத ஒரு நம்பிக்கை. கணவனும் மனைவியும் மெலிதாகச் சிரித்தனர். அமர்வு முடிந்து வெளியே நடந்து போகும்போது போதகர் சொன்னார், 

உன்னுடைய நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலை சார்ந்து நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையை எல்லோராலும் சிக்கலாக அலச முடியாது. புரிந்துகொள்ள முடியாது.  இறைவன் இருக்கும்போது இந்த புரியாமைகளுக்கு இலகுவில் விடை கிடைக்கிறது. தன்னம்பிக்கை கிடைக்கிறது. அதைத்தேடி அவர்கள் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களுக்கு இறைவனும் அதைக் கொடுக்கிறார்

அதை இறைவன் கொடுக்கவில்லை. அது அவர்களின் மனத்தின் விந்தைஎன்று சொல்ல என் வாய் உன்னினாலும் பேசாமல் திரும்பிவிட்டேன். அதற்குப் பிறகு அந்தப் போதனை வகுப்புக்குப் போகவும் இல்லை. அமுதாவும்உன்னைத் திருத்த முடியாதுஎன்று விட்டுவிட்டார். 

*****

 ஒருமுறை சிங்கப்பூர் எம்ஆர்டி நிலையத்தில் புகையிரதத்துக்காகக் காத்திருக்கிறோம். கூட நின்ற சிரந்த என்ற பௌத்த நண்பன், புத்தரின் போதனைகளை ஓரளவுக்கு அறிவுப்பூர்வமாக உணர்ச்சிவசப்படாமல் சொல்லக் கூடியவன். அவனோடு இந்தக் கடவுள் என்ற விசயம் பற்றிய பேச்சு வந்தது. 'இல்லைஎன்பதால் நீ நாத்திகனா அல்லதுஇருக்கிறதுஎன்று தெரியாததால் நீ நாத்திகனா என்று கேட்டான். எப்படிக் கடவுள் இருக்கிறார் என்று நிறுவமுடியாதோ, அதேபோல இல்லை என்றும் நிறுவமுடியாது என்றேன். கடவுள் என்ற வார்த்தையை வரையறுப்பதே முதலில் கடினம் என்றேன். அப்படி என்றால் நீ ஏதிஸ்ட் இல்லை அக்னோஸ்டிக் என்றான். 

The view that there is no proof of either the existence or nonexistence of any deity, but since any deity that may exist appears unconcerned for the universe or the welfare of its inhabitants, the question is largely academic

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். அவர் இருந்தால் நன்மையே அதிகம் என்பதால் இருந்துவிட்டுப் போகட்டுமே? என்ன குறைந்துவிட்டது? அக்கா ஒருமுறை, ‘கடவுள் இல்லாமலேயே இருக்கட்டும். வளரும் தலைமுறைக்கு, புரியாத வயதில் தார்மீக நெறிகளைப் புகட்டுவதற்குக் கடவுளும், கடவுள் மீதான பக்தியும் மிகவும் கூர்மையான வழிகள்என்றார். நீ சின்னவயதில், களவெடுத்தால் கடவுள் கோபிப்பார் என்று நம்பியதால்தானே அதைச் செய்யவில்லை. இப்போது வளர்ந்து உனக்கெனத் தெளிவாகத் தார்மீக நெறிகள் வந்தபின்பு கடவுள் தேவையில்லை என்று சொல்வது என்ன நியாயம்? என் பிள்ளைக்கு நான் என்ன சொல்லி வளர்ப்பேன்?என்றார். 

எவ்வளவு உண்மை? நான் படித்த இலக்கியமும் இசையும் அந்தக் கலாச்சாரமும் நெறியும் ஆரம்பத்தில் கடவுள் சார்ந்த அமைப்புக்களாலேயே வந்தது. அதன் ஆதார விடயமே கடவுள்தானே. இல்லாமல் இருக்கும் ஒரு விடயத்தைக் கடவுளாக்கி இத்தனை நம்பிக்கையை, ஒரு நாகரிகத்தையே கட்டி எழுப்பும் மனிதக்குலத்தின் விந்தை வியக்க வைக்கிறது. அதன் தேவையை உணர்ந்து இயங்கிய  முன்னோர்களின் புத்திசாலித்தனத்தையும் மெச்சவேண்டும். இந்த அமைப்பில் பல சங்கடங்கள், தவறுகள், பாரபட்சங்கள் இருக்கின்றன. மனிதன் அமைக்கும் எந்தக் கட்டமைப்பிலும் அவை இருந்தே தீரும்கடவுள் என்ற அமைப்பே வேண்டாம் என்று ஒரு மாற்றுக் கொண்டுவந்தாலும் இதே சிக்கல்கள் காலப்போக்கில் உருவாகியே தீரும்.

ஆத்திகனாக ஆரம்பித்து நாத்திகனாக மாறி அப்புறம் அக்நோஸ்டிக் என்ற  மாறுதல்களைத் திரும்பிப் பார்க்கும்போது ஆச்சரியம்தான் வருகிறது. கொள்கைகளும் நம்பிக்கைகளும் எப்போதும் மாறக்கூடியது. மாறவேண்டியது. இருபது வயசில் உன் தேடலும் அறிவும் இன்ஸ்பிரேஷனும் உன்னை ஒரு கொள்கைக்குள் இழுக்கும். போகப் போக உன் ஆளுமைகளும் சேர்ந்து உன் தளங்கள் மாறும்போது கொள்கைகளும் மாறும். ஒருவர் முப்பது வருடங்களாய் மாறாமல் ஒரே கொள்கையில் விடாப்பிடியாக நின்றால், there is something fundamentally flawed. இந்த மாற்றம்தான் என்னைப் புதுப்பித்துக்கொண்டு இருக்கும்.  எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்ற எண்ணமும், எனக்குத் தெரிந்ததுதான் சரி என்ற எண்ணமும் என்னை அண்டாதவரைக்கும் நான் மாறிக்கொண்டே இருக்கும் சாத்தியமே அதிகம். நான் மாறமாட்டேன் என்பது பெருமைக்குரிய விடயமே அல்ல. பத்து வருடங்கள் கழித்தும் இந்த சேதனச் சேர்வை குலையாமல் இருந்தால் மீண்டும் மாற்றங்களை அலசலாம். யார் கண்டது? அப்போது நான்யாமறியோம் பராபரமேஎன்று எழுதுகிறேனோ தெரியாது.

கடவுளின் தேவை வாழ்க்கையில் சிக்கல் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகிறது. இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற அவா. ஒருகட்டத்தில் எம்மையறியாமலேயே இருக்கிறது என்று நம்ப வைத்துவிடுகிறது. அந்த நம்பிக்கை வாழ்க்கையைக் கொண்டு நடத்த ஏதுவாகிறது. லைப் ஒப் பை(Life of Pi)  என்ற ஒரு திரைப்படம். ஆழ்கடலில் ஒரு படகில் தன்னந் தனியனாக ஒரு புலி. சாப்பாடு இல்லை. கூட ஒரு துணை இல்லை. காட்டில் வாழ்ந்த புலிக்கு இந்த உலகத்தைப் பற்றியோ, கடலைப் பற்றியோ என்ன அறிவு இருக்கப்போகிறது? ஒழுங்காக மீன் பிடிக்கக்கூடத் தெரியாது. எப்படித் தப்புவது என்று தெரியாது. செய்வதறியாது திகைக்கிறது. உறுமுகிறது. வேறு என்ன செய்வது? சுற்றிவரக் கடல். வேறு ஒன்றுமே இல்லை. கடல் கொடுக்கும் மிரட்சி, பசி, பிணி, அலை, பேரலை, மழை என்று இதுவே வாழ்க்கையாகிப்போனால் இந்த கடலில் பயணம் செய்ய என்னதான் பிடிமானம்? அங்கே வருகிறார் கடவுள். ‘பை’. கடவுள் மீன் பிடித்துக்கொடுக்கிறார். ஆன்மபலத்தைக் கொடுக்கிறார். வாழ்க்கை என்ற கடலைக் கடக்க உதவுகிறார். மடியில் வைத்துத் தலை கோதிவிடுகிறார். இறுதியில் தத்தளித்து ஒருவாறாகக் கரையை அடைந்தபின்னர் கடவுள் எதற்கு? திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் ஓடுகிறது புலி. 

அந்தப் புலிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? 

எங்கள் வாழ்க்கையும் அப்படியே. இந்தக் கடலில் எங்கு போவது? எப்படி வழி அறிவோம்? எம்மை யாராவது வழி நடத்தவேண்டும் இல்லையா? பசித்தால் சோறு, களைத்தால் தோள், அயர்ந்தால் அறிவு, என்று எல்லாமே கொடுத்துத் தலையைக் கோதி நம்பிக்கை கொடுக்க, வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டுசெல்ல எமக்கும் ஒருபைவேண்டும். அதுதான் கடவுள். அதுதான் சிவன். விஷ்ணு. அல்லா. புத்தர். இயேசு. அந்த வொலிபோல். மனிதனுக்கு அது தேவையாக இருக்கிறது. அருவமாக, பலசமயங்களில் உருவமாக. அதனாலேயே மனிதன் அவதாரங்களைப் பூமியில் உலவவிட்டான். நம்பிக்கையை மக்கள் மத்தியில் துளிர் விடவிட்டான். இந்த நம்பிக்கைதான் தூண். அது இல்லாமல் போகும்போது கடவுளும் இல்லாமல் போகிறது. அந்த நம்பிக்கை அருவமாக இருக்கலாம், அம்மன் கோயில் சிலையாகவும் இருக்கலாம், அம்மாவாக இருக்கலாம், கட்டிய மனைவி, பிள்ளை, என் பையில் இருக்கும் கண்ணன் படம் என எதுவாகவும் இருக்கலாம். ‘நம்பிக்கை வைத்துக் கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா. அதுதான் உள்ளத்தின் காட்சியம்மாஎன்பார் கண்ணதாசன். அதே.

சமீபத்தில் அக்காவுடன் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலுக்குப் போகிறேன். அக்காவின் ஐந்து வயது மகன் நான் சின்ன வயதில் செய்ததுபோலவே ஒவ்வொரு சாமிகளையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுகிறான். தனக்குள் ஏதோ முணுமுணுத்துப் பேசுகிறான். ‘மாசில் வீணையும்சுருதி பிசகவில்லை.  கீழே யாரோ தவறுதலாக விழுத்திவிட்ட ஒரு டொலர் நாணயத்தைக் கண்டெடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து உண்டியலில் போடச் சொல்லுகிறான்.  பூசை முடிந்து பஜனையில்மூளா தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடிபாடும் சிறுமியின் குரல் பிசிறுகிறது. பக்கத்தில் கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருக்கும் எண்பது வயதுப் பாட்டியின் கண்ணால் கண்ணீர் வழிந்து ஓடுகிறது. துடைக்கும் பிரமை கூட இல்லாத பக்தி. 

கடவுள் ... இருந்துவிட்டுப் போகட்டும்.


*****



Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட