Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 4. அரோகரா


பிடிச்சிட்டன்

குமரன் சொன்னதைக் கேட்ட கீர்த்திஎங்கடா?என்று திரும்ப எத்தனிக்கிறான்.

டேய் டக்கெண்டு திரும்பாத... நைசாப் பார்

கீர்த்தி கோபுரவாசலில் ஆரம்பித்து, விதானம் உயர்த்தி, அப்படியே வலப்பக்கம் திரும்பி, தேர்முட்டி உச்சி கண்டு, கீழே மெதுவாக வருகிறான்.

தேர்முட்டிண்டதெற்கு வாசல்இடக்கைப்பக்கம்கண்டிட்டியா?

அந்தச் சின்னப்பெடியனக் கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிற பெட்டையா?

அவள் இல்லை .. அவளுக்கு வலப்பக்கம்

அந்தக் கண்ணாடியா?

கறுப்புக் கலர் பிரேம் ... நீலக்கலர் மைசூர் சில்க்  .. மயில் போர்ச் குத்தியிருப்பாள் மச்சான்

கீர்த்தி கண்டுவிட்டான்.

நம்பேலாம இருக்கடா. இவ்வளவு வடிவான பெட்டை உன்னைப்பார்த்து சிரிச்சுதா?

பெட்டை எண்டாதஅவள் உனக்கு அண்ணி முறை

கீர்த்திக்கு மேலும் புகைந்தது. தனக்குள்ளே முணுமுணுத்தான்.

 “நீ வருசம் முழுக்கப் பிரதட்டை அடிச்சாலும் விழுத்தேலாது

என்ன?

இல்ல மச்சான் ... அண்ணி உனக்கேத்தமாதிரி இருக்கிறா

முருகன் வள்ளி, தெய்வானை சமேதராய் வடக்கு வாசல் நோக்கி நகருகிறார். 

 *****

நல்லூர்க் கந்தசுவாமி கோவில். 

பதின்மூன்றாம் நூற்றாண்டில் புவனேகவாகுவால் கட்டப்பட்டது. புவனேகபாகு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சன் என்று சொல்வார்கள். வரலாற்றில் புவனேகபாகு பற்றிப் பலவித ஆராய்ச்சி முடிவுகள் இருக்கின்றன.  இன்றைய கோயில் இருக்குமிடமான குருக்கள் வளவிலேயே ஆரம்பத்திலும் இந்தக்கோயில் கட்டப்பட்டது. பின்னர் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களுக்கேற்ப கோயில் இடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, இடம் மாற்றப்பட்டு என்று பல பாடுகள் பட்டது. செண்பகப்பெருமாள் என்ற மன்னன் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து கோயில்களை இடித்துத் துவம்சம் செய்தான். பின்னர் ஏதோ எண்ணத்தில் மீண்டும் இடித்த கோயில்களை புனருத்தானம் செய்தான்.  அப்படி அவன் நல்லூரை மீளக் கட்டிய இடம் தற்போதைய முத்திரைச் சந்திப்பக்கம். அந்த இடத்தில் ஒரு பழைய தேவாலயம் இருக்கிறதல்லவா. அங்கேதான். பின்னர் அந்தக்கோயிலும் பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டது. அத்திவாரமும் கிளறப்பட்டது. அவர்களால் அங்கே கத்தோலிக்க தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. 

அடுத்தது ஒல்லாந்தர் காலம். அந்தக் கத்தோலிக்க தேவாலயம் புரட்டஸ்தாந்து ஆலயமானது. நல்லூர் கோயில் பக்தர்களை, போனால் போகுதென்று பக்கத்திலேயே ஒரு சின்ன மடாலயம் கட்டிக் கும்பிட ஒல்லாந்தர் அனுமதித்தனர். ஒல்லாந்தரின் இந்த நெகிழ்வுப்போக்கை அப்போது சிறாப்பராகப் பணிபுரிந்த யாழ்ப்பாண முதலியார் நன்றாகவே பயன்படுத்தினார். தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஒல்லாந்தரிடம் அனுமதி பெற்றார். ஒல்லாந்தர் கோயிலை அது இறுதியாக இருந்த தேவாலயத்தடியில் கட்ட அனுமதி கொடுக்காமல் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த குருக்கள் வளவில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். அது ஒரு தந்திரம்.

அச்சமயம் குருக்கள் வளவில் முஸ்லிம்கள் குடியிருந்தார்கள். பின்னரென்ன? வழமைபோல இரு இனங்களுக்கிடையே மோதல். சிறுபான்மை முஸ்லிம்கள் குருக்கள் வளவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். எனினும் கோயில் பிரகாரத்துக்குள் அமையப்பெற்ற முஸ்லிம்களின் சமாதி ஒன்றினைத்  தொடர்ந்து பராமரிப்பதற்கும் தீபம் ஏற்றி வழிபடுவதற்கும் இரு இனத்தவரிடையே உடன்பாடு எட்டப்படுகிறது. அந்தச் சமாதியில் இன்றுவரைக்கும் விளக்கு ஏற்றப்படுகிறது. கோயில் முன்றிலில் கற்பூரம் விற்கும் ஏகபோக உரிமை கூட முஸ்லிம்களுக்கே இன்னமும் உண்டு.


நல்லூருக்குப் பின்னாலே இப்படி ஒரு நீண்ட நெடிய ஒரு வரலாறு இருக்கிறது. நல்லூர் முருகன் எம் மக்களின் எழுச்சியை, வீழ்ச்சியை, புரட்சியைக் காலங்காலமாகப் பார்த்தவன். நாங்கள் செய்த நல்ல செயல்கள், அநியாயங்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்ததோ என்னவோநன்றாக படட்டும்என்று அநேகமான சமயங்களில் வாளாவிருந்தவன் இந்தத் தீவினை அறுப்பான்.

 *****

நல்லூர்; எங்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த கலாச்சாரக்கூறு இந்தக் கோயில்.  செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்ற யோகிகள் நல்லூரடியிலேயே தங்கள் தியானங்களை மேற்கொண்டார்கள். போதனைகளை வழங்கினார்கள். நல்லூர் ஒரு காலகட்டத்துக்குப்பின்னர் மதம் என்பதையும் தாண்டி நம் மண்ணின் அடையாளமாக மாறியது. அதற்கு  ஏனைய மதத்தவர்களும் அதனோடு பின்னிப் பிணைந்தவிதம் கட்டியம் கூறும். சென்ஜோன்ஸ் கல்லூரி ஒரு கிறிஸ்தவ பாடசாலை. தேவாலயத் திருவிழாக்களுக்கே விடுமுறை விடாதவர்கள், நல்லூர்த் தேர்த் திருவிழாவுக்கு பாடசாலை விடுமுறை விடுவார்கள்.

நல்லூர் கோவிலின் கட்டடக்கலை சிறப்பானது. அதிலும் ஓவியர் மணியின் உள்வீதி ஓவியங்களின் தத்ரூபம் நம்மைக் கைலாயத்துக்கும் நம் கடவுள்கள் வாழுகின்ற ஒரு சுற்றுச்சூழலுக்கும் கொண்டுசெல்லும். கந்தபுராணத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும். 

கோயிலுக்குள்ளேயே ஒரு பூங்கா இருக்கிறது. தீர்த்தத் திருவிழா தவிர்த்து ஏனைய நாட்களில் அந்தப் பூங்காவின் வாசல் பூட்டுப்போட்டு சாத்தப்பட்டிருக்கும். சின்னவயதில் அந்தப் பூங்காவுக்குள் முருகனும் வள்ளியும் வாழ்க்கை நடத்துவதாகக் கற்பனை செய்திருக்கிறேன். ஒருபக்கம் கிழவன் துரத்துவதாகவும் மறுபக்கம் பிள்ளையார் யானைவடிவில் வந்து மறிப்பதாகவும் இடையில் வள்ளி நிற்பதாகவும் சுவரில் இருந்த ஓவியங்களுக்குப் பூங்காவினுள் உயிர் கொடுப்பேன். விளையாட்டில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேற்றுக்கு இந்தப்புறம் இருந்து கத்தியிருக்கிறேன். காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஆகம விதிகளுக்கு அமையக் கட்டப்படவில்லை என்பார்கள். இந்த விசயத்தில் ஆறுமுக நாவலருக்கும் நல்லூர் நிர்வாகத்தாருக்கும் இடையே ஒரு சண்டையே இருந்ததாக ஒரு பேச்சு வழக்கு உண்டு. நல்லூர் நிர்வாகம் யாழ்ப்பாண முதலியார் பரம்பரையால் காலங்காலமாக நடத்தப்படுகிறது. திருவிழாக்காலங்களில் வெள்ளை வேட்டியும் அதே கலரில் வெற்று மேலுடனும் செட்டியார் குடும்பம் சுவாமியோடு வீதிவலம் வருவார்கள். செட்டியாரின் மகன் இந்தியாவுக்குப் போய் கோயில் முகாமைத்துவக் கல்வி படித்துவிட்டு வந்ததாக அப்பா சொல்லுவார். நேர்த்தியும் நேரம் தவறாமல் எந்த விசயத்தையும் கையாளும் பண்பும் இவர்களின் தனிச்சிறப்பு. 

நல்லூர் கோயிலில் அர்ச்சனை டிக்கட் விலை எப்போதுமே ஒரு ரூபாய்தான். கஷ்டப்பட்டவருக்கும் ஒரு ரூபாய். பணக்காரருக்கும் ஒரு ரூபாய். நூறு ரூபாய்க்கு அர்ச்சனை என்றால் நூறு டிக்கட்டுகள் வாங்கவேண்டும். விஐபி டிக்கட் என்றெல்லாம் கிடையாது. பெரியவர் சிறியவர் என்று எவருமில்லை. 

கோயில் வழமையான நேரத்துக்கே எப்போதும் திறக்கப்படும். எழுபதுகளில் பிரதமர் ஸ்ரீமாவோ யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிக்கிறாராம். நல்லூருக்குப் பின்னேரம் மூன்றரைக்கு வந்திருக்கிறார். ஆலயத்தைத் திறக்கச் சொல்லுகிறார்கள். மணியக்காரர் மறுத்துவிட்டார். அதேபோலத்தான் ஆண்களின் மேலாடையும். ரணில் என்றாலென்ன, மகிந்த என்றாலென்ன வண்டி தொந்தியைக் காட்டியே தீரவேண்டும். 

நல்லூர்த் திருவிழாவுக்கு ஆறேழு வயதில் அப்பாவின் சைக்கிள் முன்பாரில் உட்கார்ந்து சென்றது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. திருவிழாவில் என்னை எப்போதுமே தோளில் தூக்கி வைத்திருக்கச் சொல்லி அடம்பிடிப்பேன். அப்பாவுக்குச் சலிக்குமா என்ன? திருவிழா முழுதும் தோளில் என்னைத் தாங்கியபடியே நாதஸ்வர, தவில் கோஷ்டியோடு வலம் வருவார். அளவெட்டி என். கே. பத்மநாதன் திருவிழாவின் அத்தனை நாட்களும் ஆஸ்தான வித்துவானாக நாதஸ்வரம் வாசிப்பார். இடையிடையே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இணைவார்கள். பத்மநாதன் வாசிக்கும்போது எங்கே அவரின் கழுத்து ஊதிப்பெருத்து வெடித்து விடுமோ என்று நான் அஞ்சுவதுண்டு. அப்புறம் அவருடைய நாதஸ்வரத்தில் தொங்கும் தங்க மெடல்களை எண்ணுவேன். பத்துக்கு மேலே இருக்கும். பக்கத்தில் நின்று ஊதும் ஒப்புக்கு வெறும் இரண்டு மெடல்கள் கிடைத்திருக்கும்.

 *****

எண்பத்தேழாம் ஆண்டு. இந்திய இராணுவம் இலங்கையில் ஊடுருவி கொஞ்சம் கொஞ்சமாகக் கிளை பரப்பும் சமயம். புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான தேனிலவு முடிந்து ஊடல் உருப்பெருத்துக்கொண்டு இருந்த நேரம்.  திலீபன், அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார். அதற்குத் தெரிவு செய்த இடம் நல்லூர் வடக்கு வீதி. காற்று அதிகமானால் கண்ணுக்குள் மண் பறக்கும் குறுமணல் வெளி அது. நடுவே உண்ணாவிரத மேடை. தொடங்கின நாள் முதல் மக்கள் கூட்டம் சாரை சாரையாக வந்து அடையாள உண்ணாவிரதம் இருந்து திலீபனுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தது. நான் கூட அப்பாவுடன் ஒருமுறை சென்று தரிசித்தேன். தண்ணீர் கூட அருந்தாமல் பத்தாவது நாள் உயிர்விடும்போதும் அகிம்சை தேசம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. 

நல்லூர் முருகனும்தான் 

பின்னர் யுத்தம் சீக்கிரமே வெடித்துவிட்டது. அடித்து நொறுக்கியபடி இந்திய இராணுவம் முன்னேறி வருகிறது. வரும் வழியில் பாலியல் வல்லுறவுகள், கொலைகள் என்று பல சம்பவங்கள். அக்காமாரின் கண்களில் திகில் தெரிந்தது. ஓடுவதாகத் தீர்மானித்தோம். முதலில் ஓடியது நல்லூர் கோவிலுக்கு. சைக்கிளில் கொஞ்சச் சாமான்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு நடு இரவில் குண்டுகள் நாலாபுறமும் விழுந்து வெடித்துக்கொண்டிருக்கையில் ஓடினோம். அவை ஷெல்லா அல்லது செயின் புளொக் குண்டா என்று தெரியவில்லை. ஏரியா முழுக்க விழுந்து வெடித்தபடி இருந்தன. 

ஓடிக்கொண்டிருக்கையில் சிவன்-அம்மன் கோயில் தாண்டி ஒரு பத்து மீட்டர் போயிருப்போம். குண்டு ஒன்று கூவிக்கொண்டு வந்து அருகில் விழுந்து வெடிக்கவே நாமெல்லாம் தொபுக்கடீர் என்று குப்புற விழுந்தோம். அப்பா குஞ்சைக் கோழி அணைப்பதுபோல என்னை அணைத்துக்கொண்டே படுத்தார். உடல் முழுதும் சிராய்ப்புக் காயங்கள். குண்டுச்சந்தம் கொஞ்சம் ஓய்ந்தபிற்பாடு மீண்டும் எழுந்து ஓடினோம். 

அங்கே நல்லூருக்குள் நுழைந்தால் கோயில் முழுதும் அகதிகளால் நிறைந்து வழிந்தது. உள்ளே ஒரு பெரிய கண்ணாடி மணிக்கூடு இருக்குமே, அதற்குப் பக்கத்துத் தூணருகில் எமக்கு இடம் கிடைத்தது. முன்னாலே சிவன் ஸ்டோர்ஸ் கடை முதலாளியின் குடும்பம். அவர்கள் பிஸ்கட்டும் பஃன்டா சோடாவும் கொண்டு வந்திருந்தார்கள். ஆவென்று பார்த்தேன். கொஞ்சம் தந்தார்கள். நித்திரை தூக்கி அடித்தது. அம்மாவின் மடியில் சாய்ந்து படுத்துவிட்டேன். பக்கத்தில் அந்த மணிக்கூடு நேரம் தவறாமல் மணிக்கொரு தடவை அடித்தது. டிங் டிங் டிங் டிங் என்று அந்த நாதம் அத்தனை சஞ்சலத்திலும் நன்றாக இருக்கும். முருகன் நம்மோடு இருக்கிறான் என்ற துணிவை எப்போதுமே கொடுக்கும்.

 *****

நல்லூர் திருவிழா என்பது எங்களுக்குப் பொங்கல் தீபாவளிபோல. ஒருநாள் இருநாள் இல்லை, இருபத்தாறு நாட்கள் நடக்கும் திருவிழா அது. கோவிலின் கூட்டமும் வெறும் பக்தர் கூட்டம் இல்லை. அது பண்டிகைக்கால கூட்டம். நாமெல்லாம் வேட்டி சால்வையில். பெண்கள் சாரி, ஹால்ப்சாரி, மைசூர் சில்க், த்ரீ இன் வன், காஞ்சிபுரம் வகையறாக்களில். குடைவெட்டுப் பாவாடையும் அப்போது பிரபலம். இந்தச்  சுடிதார், பஞ்சாபி எல்லாம் பின்னாளில் வந்தது. எனக்குச் சிறு வயது முதலே வேட்டிதான். எட்டு முழ வேட்டியை அப்படி இப்படி சுற்றிக் கட்டிவிட்டுப் பின்னர் சணல் கயிற்றால் ஒரு இறுக்கு இறுக்குவேன். அதுதான் பிடிமானம். இலாவகமாக வேட்டி நுனியை எடுத்து சைக்கிள் சீட்டில் வைத்து ஏறி மிதிக்கும் பாங்கு இருக்கிறதே. கொஞ்சம் சறுக்கினால் முன்னாலே வருபவள் மயங்கி விழுவாள்.

பின்னேரத் திருவிழா என்றால் கீர்த்தி, ரங்கன் என் வீட்டுக்கு வர, நாம் குகன் வீட்டுக்குப் போக, அங்கே பிரஷாந்தும் இணைய அப்புறம் சுட்டா, மக்கர், கோவிலடியில் மயூ, விஜயேந்திரா, நிஷாந்தன் என்று மொத்தக் கூட்டமும் சேர்ந்துகொள்ளும். கச்சேரி களை கட்டும். காலப்போக்கில் போராலும் இடப்பெயர்வாலும் நண்பர்கள் பெயர்கள் மாறின. ரமணன், ஆதீசன், செந்தூரன் எனப் புது நண்பர்கள். ஆனால் அந்தச் சைக்கிளும் வெட்டியும் மாறவில்லை. முருகனிடமும் இன்னும் அதே சிரிப்பும் மாறவில்லை. வேலுக்கும் வேளை வரவில்லை.

 *****

 ஐசே. அந்தத் தூணோட நிக்கிறானே. அவன் அப்பேலயிருந்து  என்னையே பாக்கிறான்

ஆரு? கஜனா? அவன் ஆனந்திக்குப் பின்னால திரியிற கேஸ் ... ஆனந்திட்ட நீர் அடி வாங்கப் போறீர்

ச்சிக் அந்த கறுவலை எவள் பாப்பாள்? பக்கத்தில லுக்கா, ரோஜா அரவிந்தசாமி மாதிரி நிக்கிறானே.  நான் அவனச் சொன்னன்

அவனாசென்ஜோன்ஸ்காரன் ... கொஞ்சம் எடுவைக்காரன்

.. இவன்தான் அந்த சுரேஷா?

இப்போது நண்பி இவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள்.

ஏன் சுத்தி வளைக்கிறீர்? இப்ப என்ன? அவனின்ட பெயர் தெரியோணுமா? ஆளிண்ட பெயர் குமரன்

இவள் நசுக்கிடாமல் சிரித்தாள். ‘குமரன்பெயர் அழகாய் இருக்கிறது. கள்ளனே. சிரித்தால் மட்டும் போதுமா? எப்போது வந்து அட்லீஸ்ட் ஒரு வணக்கமாவது சொல்லப்போகிறாய் குமரன்? அந்த நெரிசலிலும் அவள் தன் சேலையைச் சரிசெய்தாள். அட. மயில் போர்ச் குத்தியிருக்கிறேன். குமரனுக்கு மயில் என்றால் பிடிக்காமல் போகுமா? மீண்டும் தனக்குள்ளேயே சிரித்தாள். பின்னில் குத்திச் செருகி இருந்த சேலை இடுப்பில் இருந்து நழுவியது போன்ற ஒரு பிரமை. ‘குயிலே, குமரன் வரக்கூவுவாய்என்று மனதுக்குள் அபிநயம் பிடித்தாள். கோபுரத்து உச்சிக்கொடியில் பறந்த சேவல் கெக்கலித்தது.

முருகன் தெற்கு வாசல் தாண்டுகிறார்.

 *****

நல்லூர் திருவிழாக்காலங்களில் காலையில் ஆண்கள் பிரதிட்டை செய்வதும் பெண்கள் அடி அழிப்பதும் பிரசித்தம். என் நண்பன் பிரியா இருபத்தைந்து நாட்களும் நாளுக்கு மூன்று முறை என்று பிரதிட்டை செய்வான். அந்தப்பெரிய வெளிவீதியை மூன்று முறை சுற்றி நடப்பதே சிரமம். அவனோ கொஞ்சம் குண்டு. தன் உருவத்துக்கு, மூன்று முறை பிரதிட்டை செய்துவிட்டு மாலையில் ஜம்மென்று வேட்டியில் வந்து நிற்பான். பெண்கள் அதிகம் கோயில் உள்வீதியில் அடி அழிப்பர். அடி அழிப்பது என்றால் அடிக்கு அடி குனிந்து எழும்ப வேண்டும். நெற்றி நிலத்தில் முட்டும். கடவுள் சென்ற கால்தடத்தை தன் நெற்றியாலேயே துடைத்து நேர்த்திக்கடன் கழிப்பது என்பது அதன் ஐதீகம். எக்ஸ்ட்ராவாக இரண்டு அடி குனியாமல் தாண்டினால் முருகன் கோபிப்பான். அக்கா நெற்றி தேய்ந்து சற்றே இரத்தக்கறையுடன் வீட்டுக்கு வரும்போது பாவமாக இருக்கும். 

தேர்த்திருவிழா என்றால் அதிகாலை நான்கு மணிக்கே எழும்பிவிடுவோம். அதிகாலை வசந்தமண்டபப் பூசையை மிஸ் பண்ணக்கூடாது. பக்தி ஒன்றுமில்லை. வசந்த மண்டபப் பூசைக்கு அத்தனை பெட்டைகளும் புதுச்சேலை உடுத்தி கோயில் உள்வீதித் தூண்களுக்கு அருகில் இருப்பார்கள். நாங்கள் எதிர்ப்பக்கத் தூண்களின் அருகில் இருப்போம். ஐயர் மந்திரம் ஓதுவார். ஆனால் நாமோ உள்வீதி தூண்களைச் சுற்றிச் சிம்ரனோடு ஓடிப்பிடித்து டூயட் பாடுவோம். 

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா?
மௌனத்தினாலே கொல்வாயா?
சின்னத் திருவாய் மலர்வாயா?”

தகிடதகிடதகிட என்று கடம் முழங்க, தீபாராதனை காட்டவுஞ் சரியாக இருக்கும். சாமி வெளியே வரும்போது நல்லூர் வெளிவீதியைப் பார்த்தால் கறுப்பு கம்பளம் விரித்ததுபோல மனித தலைகளால் நிரம்பியிருக்கும். லவுட் ஸ்பீக்கரில் ஆறு. திருமுருகன் மூக்கால் அழுது அழுது அனவுன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பார். ஒருபக்கம் பேரிகை முழங்கும். மற்றப்பக்கம் நாயனக்காரர்கள். சூரியன் அதிகாலையிலேயே நல்லூரானை தரிசிக்க ஆஜராகிவிடுவான். நாங்களும் தேர் இழுக்கிறோம் பேர்வழி என்று தொடங்குவோம். வடம் பிடிக்கவே பெரும் தள்ளுமுள்ளு இருக்கும். வடத்தைத் தொட்டாலே வெற்றிதான். அதற்குமேலும் இழுக்கப்போகிறோம் என்று அடம்பிடித்தால் வேட்டியின்றியே வீடு போகவேண்டியிருக்கும்.

 நல்லூர்த் திருவிழாக் காலத்தில் கோயிற் சுற்றுப்புறங்களில் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் பிரசித்தம். மங்கையர்க்கரசி பள்ளிக்கூடத்துக்கு அருகில் கந்த புராண தொடர் பிரசங்கம், மேற்கு வீதியில் ஒரு பக்கம் பட்டிமண்டபங்கள், துர்க்கா மணிமண்டபத்தில் கர்நாடக இசை என்று தமிழும் இசையும் கமகமக்கும். அகிலன்-கஜனின் கச்சேரியும் இதில் அடங்கும். ஒருநாள் திலகநாயகம்போல் பாடுவார். இன்னொருநாள் பத்மலிங்கம். சிவஞானம். பொன் சுந்தரலிங்கம். சாந்தனின் மெல்லிசை கூட இடம்பெறும். எல்லாமே இறை பக்திப்பாடல்கள். மதுரை சோமு, சீர்காழி குரல்களில் ஜெயா சுகுமாரும் சாந்தனும் பின்னுவார்கள். கனலில் கருவாகி புனலில் உருவான கந்தனூர் எந்தனூர்? கச்சேரியின் நடுவில் ஒரு ஐயா, நல்லூரானைப்பற்றி தான் எழுதிய பாடலைத் துண்டுச்சீட்டில் கொடுப்பார். வித்துவான்களும் அதை வாங்கி, சோடா குடித்துக்கொண்டு வாசித்துவிட்டு ஒரு இழு இழுப்பார்கள்.

புலிகள் காலத்தில் அவர்களின் நிகழ்வுகள், ஒளிப்பேழைக் காட்சிகள் என்பவை விசேடமாக நல்லூர்த்திருவிழாவில் இடம்பெறும். விழுத்தப்பட்ட சியாமாசெட்டி பாகங்கள் காட்சிக்குக் கிடைக்கும். பொருண்மியக் கண்காட்சி இன்னமும் சிறப்பு. ஈழத்தின் முக்கிய பொருளாதார, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். 

அப்புறம் அந்தக் கிட்டுப் பூங்கா. சின்ன வயதில் நான் மலையையே பார்த்ததில்லை. தெரிந்த ஒரே ஒரு ஆறு மாரியில் மாத்திரம் தண்ணீர் ஓடும் வழுக்கை ஆறு. நீர்வீழ்ச்சி எல்லாம் மோட்டர் பம்பில் பார்த்ததுதான். கிட்டுப்பூங்காவைப் பார்க்கும்போதெல்லாம் இப்படித்தான் நுவரெலியா இருக்கும் என்று எண்ணிக்கொள்வேன். அங்கே மலை, நீர்வீழ்ச்சி, குகை என எல்லாவற்றையும் செயற்கையாக அமைத்திருந்தார்கள். கிளாசாக இருக்கும். மாணவருக்குக் கட்டணம் ஐந்து ரூபாய். சாமி உள்ளே போனவுடன்  ஐஸ்கிரீம் குடிக்க முனிசிப்பல் பக்கம் போய்விட்டு, அப்புறமாகக் கிட்டு பூங்காவுக்குப் போவது அந்தக்காலத்தில் வழக்கமான நடைமுறையானது.

கடைகள்; லிங்கம் கூல் பார் ஸ்பெசல் ஐஸ் கிரீம், கச்சான், கடலை, தும்பு முட்டாஸ், மூலைக்கடை மரக்கறிக் கொத்து இந்த எல்லாக் கடைகளும் ஒவ்வொரு திருவிழா நாளுக்கும் பிரபலமாகும். ஒருநாள் திருவிழாவுக்கு அம்மா தரும் கோட்டா ஐந்து ரூபாய். இரண்டு நாள் சேர்த்தால் மூன்றாம் நாள் பதினைந்து ரூபாய்க்கு ஏதாவது ஒரு விளையாட்டுப் பொருள் வாங்கலாம்.  ஒவ்வொரு முறையும் நல்லூர்த் திருவிழாவில் என்ன வாங்கித்தரோணும் என்று அப்பாவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன். தண்ணித்துவக்கு, பறக்கும் தட்டு, விளையாட்டுத் துவக்கு, ஆர்மிசெட், விதம் விதமான பலூன் என ஒவ்வொரு வருடமும் ஒவ்வொன்று. கடைகளில் விலைகளை விசாரித்து வைத்துவிட்டுத் திருவிழா இறுதி நாளன்றுதான் அப்பா அதை வாங்கித் தருவார். அன்றுதான் விலை மலியுமாம். சண்டை பிடித்து, ஒவ்வொரு ரூபாயாய்க் குறைத்து, கடைசியில் வேண்டாம் என்று வெளியேற, கடைக்காரன் திரும்பி அழைக்க, அப்பாவின் செயல்களைப் பார்க்கும் எனக்கோ பயம் பிடிக்கும்; வாங்கித்தரமாட்டாரோ? ஆனால் அப்பா இறுதியில் அவர் நினைத்த விலைக்கே வாங்கிவிடுவார். அம்மாமார் வைரவர்மடையன்று போய் பாய், நீத்துப்பெட்டி, சட்டி, பானை வாங்குவார்கள். அவர்களுக்கு அதில் ஒரு பரவசம். இன்றைக்கு வெளிநாட்டுப் பணத்தில் பத்து வயது இளைஞன் கூட சாவகாசமாக விலை எதுவும் விசாரிக்காமல் எல்லாவற்றையும் வாங்குகிறான். நாங்களும் வாங்கிக்கொடுக்கிறோம். பொறுப்பற்ற பெரியவர்களாக நாம் நடந்துகொள்ளுகிறோம். பணத்தின் அருமையை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கத் தவறுகிறோம். விவஸ்தை கெட்டவர்கள் நாங்கள்.

***** 

பூங்காவனத்திருவிழாவும் வந்துவிட்டது. இனியும் தாமதிக்கக்கூடாது. கீர்த்தியிடம் தூது சொல்லி அனுப்புகிறேன். இந்தியத்தூதர் பார்த்தசாரதி ரேஞ்சுக்கு செடில் காட்டிக்கொண்டு போனான்.

இங்க ஐசே, இந்த குமரனைச் சமாளிக்க முடியேல்ல, உங்களோட கதைக்கோணுமாம்

கீர்த்தி முதல்ல நீர் உம்மட ஆளோட கதைக்கப் பாரும் 

அவள் நண்பி. தானும் ஒரு ஆள்போலப் பதில் சொன்னாள். எண்ட ஆள் அமைதியாகவே இருந்தாள்.

மச்சான் உண்ட ஆள் ஓம் எண்டாலும் அவளிண்ட சிநேகிதங்கள் விடாதுபோல

எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.

விடுடா, நானே பார்த்துக் கொள்ளுறன்

அவளைத் தயங்கித் தயங்கி நெருங்கினேன். கொஞ்சம் தள்ளிக் காவல் துறை வேறு நின்றது. போட்டுக்கொடுத்தாள் என்றால் பங்கருக்குள் போகவேண்டிவரும். அவளுக்காகப் பங்கருக்குள் போனாலும் பிழையில்லை. மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன்.

நீங்க எங்க படிக்கிறீங்க? உங்கள நான் லேடீஸ் கொலிஜ் பக்கத்தில பாத்திருக்கிறனே

கிளுக்என்று சிரித்தாள். வாய் பொத்தினாள். நண்பிதான் இப்போதும் பேசினாள்.

குமரன். வாளி வைக்க வேண்டாம். அவள் படிக்கிறது வேம்படி 

துரோகி நண்பி. கீர்த்திக்குப் பொறுமை கெட்டுவிட்டது.

மச்சான் உவளிண்ட பிரண்ட் இருக்கும் மட்டும் காதலில்ல, ஒரு கச்சான் கூடச் சாப்பிட ஏலாது .. வெளிக்கிடு


முருகன் மேற்கு வீதி கடக்கிறார். 

 *****

பதினாலு வயசு. ஒருமுறை அக்காவின் நண்பிகள் கூட்டத்தோடு இணைந்து திருவிழாவுக்குப் போகிறேன். அக்காவின் தம்பி என்று எனக்குத் தனி மரியாதை. அவர்களே ஐஸ்கிரீம் கச்சான் வாங்கித் தருவார்கள். அவர்கள் பின்னால் பெடியள் கூட்டம் அலை மோதும். என்னைக் கொஞ்சம் பொறாமையாகப் பார்ப்பார்கள். எனக்கு ஒன்றும் அப்போது விளங்காது.  எனக்கு என் கவலை, என் வேஷ்டி எப்போது விழுமோ என்று. இந்தச் சமயம் பார்த்து என் நண்பர்கள் பார்த்தால் என்னடா பெண்களுடன் சேர்ந்து போகிறேன் என்று நக்கல் விடுவார்கள். ஆனாலும் அவர்களுடன் போவதில் ஒரு அழகு. நான்தானே அங்கே ஹீரோ. அன்றைக்குப் பூங்காவனம். அக்காவின் நண்பியிடம் கேட்டேன். 

அக்கா முருகன் இருப்பத்தஞ்சு நாளும் வள்ளி தெய்வானையுடன் சுற்றிவிட்டு இருபத்தாறாவது நாள் கலியாணம் முடிக்கிறாரே. இதான்  தமிழ் கலாச்சாரமா? 

அவர் சிரித்துவிட்டு அக்காவிடம் போட்டுக்கொடுக்க, அக்கா அம்மாவிடம் சொல்ல எனக்கு அன்று முழுதும் திட்டு விழுந்தது.  

யாழ்ப்பாணத்தில் டேட்டிங் செய்து பின்னர் திருமணம் முடித்த முதல் ஆள் முருகன். அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகள், ஒருத்தி நாட்டுக்கட்டை, மற்றயவள் காசுக்காரி. இரண்டு திருமணமும் ஒரேநாளில். 


உடம்பு முழுதும் மச்சம் என்பது இதைத்தான்.

 *****

சமீபகாலங்களில் நல்லூர் திருவிழாக்களில் அதன்நல்லூர்த்தனம்குறைந்து வருகிறதோ என்ற ஆதங்கம். இது வயதாவதன் பாதிப்பா அல்லது நிஜமாகவே நல்லூர் தன் கலாச்சார வடிவத்தை இழந்துவருகிறதா என்று தெரியவில்லை. இது இயல்பான தலைமுறை சமூக மாற்றமாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம். வெளிநாட்டுத் தமிழர் வருகை, அவர்களோடு சேர்ந்து வரும் டொலர்கள், பவுன்கள், யூரோக்கள்எல்லாமே சேர்ந்து அந்த அடையாளத்தை பெரிதும் மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையை நாமே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறோம். 

ஐயா நீங்கள் எல்லோரும் நன்றாக பணம் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோரிடமும் கம்கோடேர் இருக்கிறது. கனன் டிஎஸ்எல்ஆர் கமெரா இருக்கிறது. ஜி-ஸ்டாரும் ஆர்மனியும் இருக்கிறது. ஆனால் எதுக்கு அந்த ஷோ? யாருக்கு அந்த ஷோ? வெள்ளைக்காரன்தான் பெண்டர் வெளித்தெரிய ஜீன்ஸ் போடுகிறான் என்றால் நமக்கு என்ன மதி?  நல்லூரில் அது வேண்டாமே. இயல்பாக இருப்போம். எம் இனிய நினைவுகளை மீட்டவும், முருகனை இன்னமும்  நம்பிக்கொண்டிருப்பவர்கள் தரிசிப்பதற்கும் மனிதர் வரும் இடம் அது. அந்த இயல்பை, எமக்குச் சாத்வீகம் கொடுக்கும் தலத்தை, எங்கள் கேமரா பிளாஷ்களால் இருட்டடிக்க வேண்டாமே.  

 *****

முருகன் வடக்கு வீதியைக் கடக்கும் தருணம்.

இதற்குமேல் தாமதிக்கமுடியாது. பின்னாலே தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்தேன். 

இஞ்ச ... நீங்க திரும்பிப் பார்க்கவே மாட்டீங்களா? நான் அவ்வளவு கெட்டவன் இல்ல. கொஞ்சம் நல்லவனதான்

குமரன், நாங்களும் ரோஜா படம் பார்த்திட்டம். சொந்தமா ஒண்டும் சொல்ல மாட்டீங்களா?

மீண்டும் அவளோடு கூட இருக்கும் அந்தத் துரோகிதான். முதலில் இவள் நண்பியை  சமாளிக்கவேண்டும். அவள் நண்பிக்கே பதில் சொன்னேன்.

உங்கட பிரெண்டைப் பார்த்தாப் பிறகு அவ மட்டும்தான் சொந்தமா தெரியுது!”

ஐயோ. கவிதையா? புதுவையே தோத்துடுவார்

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவள் வாய் திறந்தாள்.

சும்மா இரும், இஞ்ச ... குமரன்என்ன ... பெயர் குமரன்தானே?.. எண்ட பேர் மேகலா …”

திடுப்பென்று பேசுவாள் என எதிர்பார்க்கவில்லை. தடுமாறிவிட்டேன். மேகலா... எவ்வளவு அழகான பெயர்.

மேகலா .. வெரி நைஸ் நேம் .. ”

ப்ச் இப்படியெல்லாம் பம்மாத்து விடேல்லாது ... லிங்கத்தில ஐஸ் கிரீமுக்கு ஸ்பொன்சர் பண்ணுறீங்களா... எங்கள் எல்லாருக்கும்? 

மேகலா புன்முறுவலுடன் கேட்கப் பொக்கட்டினுள் தடவிப்பார்த்தேன். ஐந்து ரூவா மாத்திரம் இருந்தது. கீர்த்தியிடம் கேட்போம் என்று திரும்பினேன். அவன் படக்கென்று முருகனை பார்த்துப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டான்.

அரோகரா

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .