Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்


விலாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது. மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால், கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது. குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன். ஏதோ ஒரு சத்தம். என்னடா இது? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற, ஒரு குரல். தெளிவாகக் கேட்டது. மீண்டும் அலவாங்கு போட்டேன். அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா. இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன். கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா? குரல் இப்போது தெளிவாக கேட்டது. 

அப்பனே .. முருகா .. பிள்ளையாரப்பா.”

*****

சும்மா போவணை ... இனி வெறுங்கல்லு ... என்னால தோண்ட ஏலாது

எண்ட அச்சாக் குஞ்சல்லோ, ரெண்டு அடிதான் ... தோண்டினா ...  குத்தியைப் போட்டு மண்மூடைய அடுக்கி வேலையை முடிச்சிடலாம்

அப்படீண்டா பின்னேரம் கிரிக்கட் விளையாட விடுவீங்களா?

சரி என்னத்தையும் போய் விளையாடு ... இப்ப இத கிண்டு

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிசன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, தின்னவேலி கல்லுநங்என்றது. கையால் மண்ணை கொஞ்சம் கிளறி, கல்லைக் க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியானகொட்டுபார்த்துப் பிக்கான் போட்டேன். சர்க்கென்றுப் பிக்கான் உள்ளே இறங்க, இந்தா, கல்லைப் பிறட்டுகிறேன் என்று நான் வேகமாகப் பிடியை ஒரு எம்பு எம்ப, சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது.

பிக்கான் போட்டு அதன் கைப்பிடி முறித்த அனுபவம். முக்கியமாக வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, வெறுங் கிழங்குதானே என்ற அசிரத்தையில் பிடி என்னதான் கடும்பிடியாக இருந்தாலும் விசயம் தெரியாமல் தெண்டிவிட்டோமென்றால் கதை சரி ... பிடி பிரிந்துவிடும். 

இந்த மரப்பிடி செய்யும் முறையே ஒரு தனியான கலை. கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வதற்குச் சரியான ஆள்பூவரசு’. இடியப்ப உரல், மாட்டுவண்டில்களின் சிலைக்கம்புகள்சில்லுக்கட்டைகள் எல்லாமே பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. பூவரசு மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரிலே வேலிக்குக்கதியால்போடும்போது முக்கிய சென்ரி பொயிண்டுகளில் பூவரசந்தடிதான் நடுவார்கள். அதுவும் அடைக்கத் தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து; யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிப்பெருப்பித்த பெருமை இந்தப் பூவரசுக்கு உண்டு. 

தீவகப்பகுதிக்குள் பயணம் செய்கையில், ஆங்காங்கே கவனிப்பாரற்றுச் சரிந்து உக்கிப்போய்க் கிடக்கும் வேலிகளைப் பார்க்கும்போது, அவற்றுக்குப்பின்னாலே இருக்கும் பல தலைமுறைகளின் வாழ்வு வெக்கையாய் வந்து தாக்கும். எப்போதோ நடந்த எல்லைச்சண்டைகள், உள்ளே இருந்த வீடுகள், மனிதர்கள், அவர்களின் நாளாந்த வாழ்க்கை என எல்லாமே இப்போது சிதிலமாகி, காணாமல் போயிருக்க, எல்லைக்குள் நட்டிருந்த பூவரசு மட்டும் வளர்ந்து வியாபித்து பக்கத்து காணிகளுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கும். 

பூவரசுக் கட்டையை காயவைத்து அடுப்பெரித்தால் கொஞ்சம் புகைச்சலாக எரியும். பாடசாலை விட்டு நடந்துவரும் வழியிலே வேலிமரங்களின் இலைகளைப் பிடுங்கிச் சுருட்டி நாங்கள் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி ஆவதுமுண்டு. அதுவே கொஞ்சம் பெரிய இலை என்றால் பிடுங்கிக்கொண்டுபோய் வைரவர் கோவிலின் பிரசாதத்தை ஏந்தவென நீட்டுவோம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் விபூதி, சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில்தான். பூவரசுக்கு அப்படி ஒரு வரலாறு இருக்கிறது.  

மரப்பிடி செய்வதற்கு பூவரசு மரத்திலிருந்து நல்ல பழுத்தக் கொப்பாகப் பார்த்து வெட்டி நெருப்புத் தணலில் போட்டுச் சுடுவார்கள். பொன் நிறத்தில் அது எரிந்து வரும்போது, தோலைக் கீறி அகற்றி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுப்பார்கள்அதை மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்குப் பிடியாகப் போட்டால் சிங்கன் அசையாமல் இருப்பார்.

இப்படி, கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்து கொண்டுவந்த பிடிதான் அன்றைக்கு முறிந்து போய்விட்டது. அம்மாவைக் கொஞ்சம் பம்மலுடன் பார்த்தேன். அவர் நெருப்பு எடுக்கப் போகிறார் என்ற பயம். ஆனால் அவரோ சோட்டியைக் கொஞ்சம் உயர்த்திச் செருகிக்கொண்டே, ‘சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய்க் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்யத் தெரியாதுஎன்று திட்டியவாறே, அங்கன கிடந்த சின்னச் சின்ன விறகுக் காம்புகளைப் பொறுக்கி எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாகச் சுவரில் நாலு அடி நன்றாக அடித்து இறுக்கினார். பிக்கான் மீண்டது. 

மீண்டும் பங்கர் வெட்ட ஆரம்பித்தேன். 


 *****


எங்கள் வீட்டு சாமியறை. மேல் தட்டில் சாமிகள் வரிசையாக அமர்ந்திருக்க, கீழே ஒரு இரகசிய நிலக்கீழ்ச் சீமந்துக் கிடங்கு இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எண்பத்தைந்து, எண்பத்தாறுகளில் சண்டைகள் நடக்கும் நாட்களில் நாங்கள் அந்தக் கிடங்குக்குள் போய்ப் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலிபோல முதல் பங்கர் அது. மேலே கடவுள்களைத் தாண்டிக் குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. பங்கர் வெட்டவேண்டியதில்லை, அது போதும் என்று சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் முன்னேறிக்கொண்டு வருகிறது. எங்கள் சாமியறைக் கிடங்கு இந்தியாவின் அடிக்குத் தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில் இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடி விழும்போது நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்குத்தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர்த் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். பாத்ரூம் பக்கத்திலேயே கக்கூஸ். ஆனால் பயத்தில நாற்றம் எல்லாம் பெரிசாத் தெரியாது. 

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும்போது அவர் வீட்டு பாத்ரூமினுள் பதுங்கியிருக்கிறார். குண்டு வீட்டின் மேலே நேர் குத்தென விழுந்துவிட்டது. ஒன் ஸ்பொட்டில் ஆள் க்ளோஸ். ஆள் குண்டுச்சன்னம் எதுவும் பட்டுச் சாகவில்லை. கொங்கிரீட் சிதறி மேலே விழுந்தே இறந்துபோனார். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நெரிசல்களுக்குள் சிக்கிச் செத்துவிடுவோமாம். அதுபோல.  

எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது.

பங்கர் வெட்டுவதற்குத் தோதான இடம் பார்க்கவேண்டும். வீட்டுக்குத் தொலைவிலையும் இருக்கக்கூடாது. கக்கூசுக்குக் கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். இப்படிப் பல சிக்கல்கள். கடைசியாகக் கிணற்றடி தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்குப் பக்கத்தால பங்கர். அது பெரிய மரம். பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தால் கண்டுபிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாயிற்று. ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க போய் வந்திருப்போம். கொஞ்சநாள்தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தைப் பிடிச்சுது. எங்கட முன்வீட்டில இந்தியன் ஆர்மியின் காம்ப் ஒன்று வந்தது. வளவுக்குள்ள பங்கர் இருக்கிறது தெரிஞ்சால் சிக்கல் எண்டு அப்பா குப்பையைப் போட்டு மூடிப்போட்டார். 

அடுத்த மூன்று வருடங்களுக்குப் பங்கரின் தேவை இருக்கவில்லை. இந்தியன் ஆர்மியை ஒரு வழியாகக் கப்பலில் ஏற்றி அனுப்பியாயிற்று. கொஞ்சநாளில் யாழ்தேவி காங்கேசன்துறைவரைக்கும் ஓடவும் ஆரம்பித்தது. கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் தினசரி உதயன் தலைப்புச்செய்தியில் சண்டை தொடங்கிவிட,  இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது.  கையோடு கோட்டைப் பிரச்சனையும் ஆரம்பித்தது. இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டுப் பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்டப் போய்விட்டு வருவார்கள். சமயங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சிலநேரம் பிரேதம் மட்டும் வரும்.

இயக்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம்; அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைக்காட்சி ஒன்று இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னாலேயே அதன் அலுவலகம் அமைந்திருந்தது. முன் வீடு ஒரு புரொக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டது. காலியாகக் கிடந்த அந்த வீட்டில் முதலில் இந்தியன் ஆர்மி காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்திலேயே விழும். அதை அறிந்த சுற்று வட்டாரத்திலிருந்த அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பித்தன. 

அது ஒரு முஸ்பாத்தி.

எங்கட ஆட்களுக்குப் பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்குக் கொலு வைப்பதுபோல. வீட்டுக்கு வீடு பங்கர் வெட்டுவார்கள். ஒருஎழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள்வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா ‘I’ வடிவ பங்கர்களையும் சிலர் வெட்டுவதுண்டு. நிதர்சனத்தில் பங்கர் வெட்டுவது பற்றி ஒரு வீடியோ அடிக்கடி ஒளிபரப்பாகும். பழைய கிளின்ட் ஈஸ்ட்வுட் படத்துப் பின்னணி இசையில். ஆட்கள் வரிசையில் நின்று மண் மூட்டைகளைக் கைமாறி, பங்கரை மூடி அடுக்கி என்று விறுவிறுப்பாக ஏதோ ஒரு அதிரடி அக்சன் பட ரேஞ்சுக்கு காட்டப்பட்ட வீடியோ அது. 

யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் போட்டியே இருக்கும். எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினால்கூடக் கல்லு வரத் தொடங்கிவிடும். இரண்டு அடிக்குப் பிறகு பிக்கான் போடவேண்டிவரும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். இதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின்தங்கிவிடும். கோண்டாவில்  அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமலேயே நிற்கலாம். 

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்ததால் கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர்காரனுக்கு அல்வாவை எடுத்து வாயில் வைப்பதுபோல. இடத்தை மாற்றவேண்டும். இம்முறை வீட்டுக்குப் பின்னால் நின்ற மாமரத்தடி தெரிவு செய்யப்பட்டது. தினந்தினம் பொம்மர் அடி யாழ்ப்பாணத்தில் நடக்கத்தொடங்கியதால் நாலாபுறமும் பங்கர் வெட்டு ஆரம்பித்திருந்தது. வீதியோரங்கள், பள்ளிக்கூடங்கள், பாடசாலைகள், ஆஸ்பத்திரி, கோயில் என எல்லா இடங்களிலும் பங்கர் வெட்ட ஆரம்பித்திருந்தார்கள். இதனால் பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது என்பது வலு கஷ்டமாகிப்போனது. கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. அதனால் நாங்களே வெட்டுவதாகத் தீர்மானித்தோம். பக்கத்து வீட்டுக்காரரும் சேர்ந்துகொண்டார்கள்.  

எங்கள் அயலில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காயில்கூட எல்லோருக்கும் பங்கு உண்டு. ஆனால் நடு இரவில் தேங்காய் விழுந்தால் காலையில் கிடைக்காது. ‘தொப்என்ற சத்தத்திலேயே எந்தச்சாமம் என்றாலும் எல்லோரும் எழுந்துவிடுவார்கள். தேங்காய்க்குப் பங்கில்லாதவன்தான் முதலில் ஓடுவான். அலறிப்பிடித்துக்கொண்டு ஓடி, இரவோடு இரவாகத் தேங்காயைக்கொத்திவிடுவாங்கள். அப்படி ஒரு ஒற்றுமையான பங்குக் காணி அது. 

இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை தறிக்க முடிவு செய்தோம்.  குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி. அடிக்குற்றி வைரம் என்பதால் அதற்காக சண்டை பிடிப்பார்கள். எடுத்ததுக்கெல்லாம் சண்டை. குருத்தை எவன் சாப்பிடுவது என்பதிற்கூடச் சண்டை. 

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்குமேல்போரைபையில் குறுமணல் நிரவி அடுக்கிவிட்டோம். குறுமணல் என்று சொல்வது கடற்கரை மணலை. ஷெல் அதற்குமேல் விழுந்தால் சரக்கென்று இறங்கிச் சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினால் கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் முட்டிய உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதில்லை. அணுகுண்டு போட்டால் எப்படித் தப்புவது என்று கண்டுபிடிப்பவரும் விஞ்ஞானிதான். ஏனோ அவர்களை உலகம் அதிகம் கொண்டாடுவதில்லை.

இப்போது பங்கர் ரெடி. இனி இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய்ப்பதுங்கி இருக்கும் பங்கர்தான். ஆனால் அதற்குள் நிறைய விசயம் இருக்கும்.  பங்கர் உள் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் அரை அடிக்கு அரை அடி சதுரவடிவக் குட்டிப் பொந்து ஒன்று போடுவோம். அதிலே ஒரு பிள்ளையார் சிலை, ஊர்க்கோயில் சாமிப்படம், மடு மாதா, நல்லூர் முருகன் என ஒரு மினிச் சுவாமி அறையே இருக்கும். அம்மா காலையில் சாமிக்குப் பூ ஆய்ந்து வைக்கும்போது பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்துக் கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களைத்தான் தனியாகக் கவனிக்கவேண்டும். 

அதேபோலவே இன்னொரு பொந்தும் தோண்டி, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், அவன் பார்க்கமுடியாதவாறு பங்கரின் வாசலை ஓலையால் அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து இழுத்து மூடிவிடுவோம். உள்ளே கும்மிருட்டு. வெளிச்சம் வேண்டும். ஆத்திர அவசரத்துக்குப் பங்கருக்குள் ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதற்குத்தான் முன்னேற்பாடாக இந்த மெழுகுதிரி. பகிடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்சன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு எல்ஈடி ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்கப்போவதுபோல அவர்கள் பங்கரை பார்க்கப் போவோம். கலாதியாக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அநேகமாக ஊரிலே கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால் அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகிச் சாகவேண்டியதுதான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்களைப்போல உலகத்தில வேற எங்கேயும் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்துப் பார்ட்டி வைத்த ஒருத்தரை எனக்குத் தெரியும்.  அம்மா இவர்களின் சேட்டைகளைபுறக்கோலம் காட்டுதுகள்என்று சொல்லுவா.

அந்த நாட்களில் பெரும் அடிபாடு ஏதும் தொடங்கிவிட்டால் எமக்கு ஒரே பம்பல்தான். பள்ளிக்கூடம் இருக்காது. டியூசன் இருக்காது. அக்கம்பக்கத்து பெடியள் கூடி விளையாடத் தொடங்கிவிடுவோம். என்ன ஒன்று,  குண்டுகள், பொம்மர்கள் அடிக்கடி ஊர்ப்பக்கம் உலாத்தும். அம்மா எங்களைபங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்கடாஎன்று சொல்லுவா. உள்ளே ஒரு பாயை விரித்து அநேகமாக விளையாடும் விளையாட்டு தாயம். முப்பத்திரெண்டு பெட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிக்கொண்டு சண்டை பிடிக்கும்வரைக்கும் ஆட்டம் தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை சமயங்களில், படிக்கும்போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பிவிடும் என்பதால் பங்கருக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கிப் படிப்பதுமுண்டு.

 பொம்மர் சத்தம் கேட்டுவிட்டால், ஆர் முதலில் பங்கருக்குள் போவது என்பதில் ஆளாளுக்குத் தயங்குவோம். பாம்பு, பூரான்,  புலிநகச் சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்குக் கடி நிச்சயம். அந்தச் சண்டையில் பத்துப் போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்குத் தூக்கிக்கொண்டு ஓட முடியாது. பங்கருக்குள் பாம்பு கடித்து மரணம் என்ற பத்திரிகை தலையங்கம் நம்மனைவருக்கும் பரிச்சயமானது. 

இதிலும் அம்மாவே சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து மைன்ஸ் கிளியர் பண்ணுவா. அதற்கப்புறம் அடிச்சுப் பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வரப் பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிளப்பிள்ளை மாதிரி ஓடிப் பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளியே வாசலில் நின்று பொம்மரை ஏமலாந்தி, அது எங்கட ஏரியாவுக்குக் குண்டு போடப்போகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனால் பின்னாடிக்குச் சுப்பர் சொனிக், கிபிர் விமானங்கள் போன்ற, ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் வந்தபிறகு  இவர்கள் தங்கள் வீரத்தைக் கொஞ்சம் குறைத்து  பங்கர் படிக்கட்டில் நின்றபடியேசெடில்காட்டுவார்கள்.


*****


கோட்டைப் பிரச்சனை நடந்த காலத்தில் பொம்மர் விமானிகள் எப்.எம் ட்ரான்ஸ்மிசன் மூலம் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் அலைவரிசையை டியூன் பண்ணிக் கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்குக் கொஞ்சம் விளங்கும். 

மே நண்டா காம்பேக்க டான்டோன்ன

தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன ... மங் கவர் ….”

என்னப்பா சொல்லுறாங்கள்

நண்டாவிண்ட காம்ப் அடிக்கப் போறாங்களாம்

எதெப்பா நண்டாவிண்ட  காம்ப்?

நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்

மாமிண்ட காமப் இஞ்ச எங்கயிருக்கு?

அப்பா நாசியைத் தடவியபடியே யோசித்தார். சடக்கென்று அவருடைய உடல் கலவரமானது.

டேய், மாமி எண்டு கிட்டிண்ட மாமியத்தான் சொல்லுறாங்கள், எங்கட ஏரியாதான். ஓடுடா, பங்கருக்க ஓடு

கிட்டு அண்ணைபோலவே அவரின் மாமியும் எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அவர் வீட்டில் குண்டு போடப் போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழித்துச் செய்தி பரவியது. கொக்குவிலில்  இருந்தநந்தாவில்அம்மன் கோவிலுக்குப் பக்கத்துக் காம்பின் மீதே குண்டு போட்டிருக்கிறாங்கள்.  வழமைபோலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்து வீடுகளில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும்தான். 

என்னடா இது பங்கர் வெட்டிக் கனகாலம் ஆயிட்டுதே? எப்பத்தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்குப் பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தோம். அந்தநாளும் வந்தது. 

தொண்ணூற்றோராம் ஆண்டு. ஒரு மாசி மாசத்துக் காலை நேரம்.  

காலையிலேயே, ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவைகள் ரவுண்ட் அடித்துவிட்டுப் போயின. பொம்மர் சுற்றும் போக்கைப் பார்த்தே, ‘இது நோட்டம் பார்க்க வந்திருக்கு, குண்டு போடாதுஎன்று அம்மா சொல்லிவிட்டார். நாங்களும் எங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர், ஓடிவந்தார்.  சைக்கிளிலிருந்து இறங்கவில்லை.

சந்திரா,  இப்ப சுத்தின பொம்மர்காரனிண்ட எஃப். எம் கேட்டனான், இஞ்சாலதான் குண்டு போடப் போறாங்கள்

என்ன கதைச்சவங்கள்?

கம்பசுக்க போட்டிடாத, அந்தக் காம்புக்குப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும்.  பார்த்துவை எண்டு பேசினவங்கள்

தாமரைக்குளமா? அது எங்க இருக்கு?

எங்கட பாங்கர் நடராசா,  தன்ர முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறானல்லோ? குண்டு போட்டா அங்கேயும் விழாது. காம்பிலேயும் விழாது. பின்னால உண்ட வீட்டதான் விழும்

சும்மா விசர்க்கதை கதையாத. அந்த சின்னக் குளம் மேல இருந்து பார்க்கேக்கத் தெரியுமே? நீ சும்மா எதையோ கேட்டிட்டு

சொல்லுறத சொல்லிப்போட்டன். நடப்புக் காட்டாம இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்கோ

சொல்லிவிட்டுச் செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அயல் முழுதும் விசயம் பரவிவிட்டது. அம்மா அவசர அவசரமாகச் சமைக்கத் தொடங்கினார்.  வீட்டு அறைக் கதவுகளை பூட்டித் திறப்புகளை எடுத்துவைத்தார். முன் வாசல் மட்டும் திறந்து இருந்தது. தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட ஆயத்தம். 

தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது.

பொம்மர் வருது என்றவுடனேயே எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமிக் கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் பூந்துவிட, நாங்கள் எல்லாம் உள்ளே போகத் தயங்கினோம். அந்தக் கிழவி சரியாகக் குளிக்காது. பக்கத்தில் போனாலேதாழம்பூவே வாசம் வீசுதான். ஆனாஅம்மா விறகு கட்டை எடுக்கட்டா?என்று மிரட்டவே மூக்கைப் பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேற்றைப் பூட்டிக்கொண்டு (பங்கருக்குள் இருக்கும்போதுதான் திருடர்கள் வருவார்கள்), உள்ளே வந்தார். 

பொம்மர் இரண்டாவது ரவுண்டும் சுற்றுகிறது. 

எங்கள் ஏரியாவை அடிக்கப் போகிறான் என்பது ஓரளவுக்கு விளங்கிவிட்டது. அப்பா இன்னமும் வெளியேதான். நாங்கள் எல்லோரும், அப்பாவைவாங்கோ வாங்கோஎன்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நிற்கிறார். எப்.எம் ரேடியோவில் பொம்மர்காரங்கள் பேசுவது இரைச்சலில் சரியாகக் கேட்கவில்லை.

பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்குப் பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி, ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டுஅப்பனே, முருகா, பிள்ளையாரப்பாஎன்று எல்லா கடவுள்களையும் பங்கருக்குள் வரும்படி இன்விடேசன் கொடுத்தபடி இருக்க, எமக்கோசெனிதாங்க முடியவில்லை. மேலே அவன் குண்டு போட்டானோ இல்லையோ, பயத்தில் கிழவி குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தது. 

மூன்றாவது ரவுண்ட். கீசிக்கொண்டு பதிகிறான். 

மாமரத்துக்கு இலைகள் எல்லாம் சடசடவென அடிக்கின்றன. அரை வினாடிதான், ‘டம்டமாங்என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காகத் திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில்அப்பாஆஆஆஆஆஆஎன்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே ஓட எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிக்கொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல்வரைக்கும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல், அதிர்வின்காரணமாக சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். 

அப்பா என்ன ஆனார்? 

அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். ‘அப்பனே, முருகா, பிள்ளையாரப்பாஎன்று நாங்கள் எல்லோருமே ஏகத்தில் அரற்ற ஆரம்பிக்கிறோம். இரண்டு செக்கன்கள் கழிந்திருக்கும், அண்ணன் சொல் வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் எங்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. அப்பாவும் அண்ணாவும் எங்கே? பொம்மர் பதிய ஆரம்பிக்கிறான்.

அடுத்த கணமே அண்ணா ஓடிவந்து பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்குப் பின்னாலேயே அப்பா. அவரைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது. அப்பாவைக் கண்டபின்னரும், அம்மா நிறுத்தாமல் வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார்.

 ... அன்று பிறந்த குழந்தைபோல.

*****

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...