Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்



தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். , , என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்குஅட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும்அட்டைதான். நிவாரணத்தில்அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும். அரைப்போத்தல் மண்ணெண்ணெய், அரைக் கிலோ பருப்பு, அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும். அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும். குறைந்த சம்பளம், அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை.  காரணம் கவுன்மேந்து உத்தியோகம்.

அப்பாவின் சம்பளம் ஐயாயிரம் ரூபாய் வரும். நொச்சியாகமவில் அவரின் செலவு போக, ஓமந்தை தாண்டி எங்கள் கைக்கு வருவது நாலாயிரம் ரூபாய். அதுவும் ஏதாவது அடிபாடு, பாதை மூடீட்டாங்கள் என்றால் கதை கந்தல். அந்த நாலாயிரத்தில் ஆறுபேர் கொண்ட குடும்பத்தை அம்மா பார்த்துக்கொண்டார். கோட்டை, மண்டைதீவுப் பக்கம் பிரச்சனை என்றால் கொட்டடி மாமி ஆக்கள் வந்து இறங்குவினம். ஆறு பத்தாகும். அம்மா சமாளிப்பார். அதுவுஞ்சிக்கல் என்றால் இருக்கவே இருக்கிறது அடைவு. காப்பில் இருந்து தாலிக்கொடிவரைக்கும் போய்வரும். இல்லாவிட்டால் சிவன் ஸ்டோர்ஸில் கொப்பிக்குச் சாமான் வாங்குவோம். மாசக்கடைசியில் இருக்கிற சிந்தாமணி, வீரகேசரியில் இருந்து ஒருமுறை எண்டமூரியின் நாவல்கள் பத்தை ஒரே கட்டாக அரசடி ரோட்டு நூலகத்துக்கு நானே விற்று நூறு ரூபாய் வாங்கியிருக்கிறேன். இரண்டு, மூன்று நாட்கள் சமாளிக்கலாம். இப்படி விற்றிருக்கிறோமே ஒழிய, காசு இல்லை என்று ஒருநாளும் அடுத்த நாள் பேப்பர் வாங்காமல் விட்டதில்லை. எங்கள் குடும்பம் என்றில்லை, அந்தச்சமயத்தில் எந்த அரசாங்க உத்தியோகத்தர் வீட்டிலும் இந்தப் பஞ்சப்பாடு இருந்தது. ஊர் முழுக்க கடன் இருந்தது. வீடு வங்கியிலே இருந்தது. 

அட்டைக்காரர் நிலை இப்படி இருக்க’, ‘அட்டைக்காரர் பாடோ வலு கலாதி. ‘வருமானம் குறைந்தவர்கள்பிரிவு. அவர்களுக்கு நிவாரணம் டபுளாகக் கிடைக்கும். அவர்களில் ஒரு சிலர் நிஜமாகவே வசதி குறைந்தவர்கள். விட்டுவிடுவோம். ஆனால் தொண்ணூறு வீதமான அன்றையவசதி குறைந்தவர்கள்வேறு யாருமல்லர். இந்த வெளிநாட்டுக்காரரும் பிஸ்னஸ்காரரும்தான். வெளிநாட்டுக்காரர் அங்கேயும் டோல் வாங்கி இங்கேயும் டோல் வாங்கினார்கள்.

பொற்பதி ரோட்டில் எங்களுக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று. எட்டு பிள்ளைகளில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில். தகப்பனிடம் கேட்டால் ஒவ்வொரு நாட்டில் எத்தனை குழந்தைகள் என்று கணக்குச் சொல்லுவார். கூட்டிப்பார்த்தால் ஏழு வரும். கணக்கு அவ்வளவு வீக்கு. கடைசிப் பெடியன் டியூசனுக்கு இரட்டைப்பட்டு சங்கிலியை வெளில விட்டுக்கொண்டு வருவான். அவ்வளவு காசு. ஆனால் எட்டு பேருக்கும் சங்கத்தில கணக்குக் காட்டி, எல்லோருக்கும் வேலையில்லை என்று விதானைக்குக் கட்டா கருவாடு வாங்கிக்கொடுத்து எழுதிவாங்கி, கள்ள நிவாரணம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வெறும் கூடையில் கியூவில் நின்று நிவாரணம் வாங்கும்போது, அவர்கள் போறைபாக்கில் நிவாரணம் எடுத்து சைக்கிள் கரியரில் வைத்து பாரம் தாளாமல் உருட்டிக்கொண்டு போவார்கள். அதை விட எரிச்சல் என்னவென்றால்கூப்பனுக்குத் தாற புழுப்பிடிச்ச புழுங்கல் அரிசியை மனுசன் சாப்பிடுவானா?என்று அதை அம்மாவுக்கு விற்றுவிட்டு, அவர்கள் விலை அதிகமான முத்துச்சம்பா வாங்கிப் புரியாணி செய்வார்கள். 


***** 


வீட்டு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. சாமான்கள் விலை எக்கச்சக்கம். பால்மா எல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு விலை. இந்த நிலையில் கூப்பனுக்குத் தரும் விட்டாஸ்பிறே மாவை தேத்தண்ணியில் கலந்தடித்தால் வயித்தால போகுது என்று ஒரு பிரச்சனை. லக்ஸ்பிரே, நெஸ்பிறே எல்லாம் நாலு பிள்ளை சீதனம். சரிவராது. என்ன செய்யலாம்? என்று யோசித்ததில் ஒரு ஆடு வளர்த்தால் தேசியப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தீர்மானமானது. கேட்டு அனுப்பிய கையோடு ஒரு சினை ஆட்டை ஆனந்தம் அண்ணா அராலியில் இருந்து அவிட்டுக்கொண்டு வந்து வீட்டில் கட்டிவிட்டார். ‘எவ்வளவு?என்றதுக்குஅவசரமில்ல, பேந்து பார்ப்பம்என்றார். ‘பெயர் என்ன?என்று நான் கேட்கலச்சுமிஎன்றார்.

இப்படித்தான் எங்கள் வீட்டுக்கு லச்சுமி வந்தாள். 

பிள்ளைத்தாய்ச்சி. வெள்ளை நிறம். சமச்சீரான கொம்புகள். ஒருபக்க மடி மட்டும் நீண்டு மற்றயது குட்டையாக இருக்கும். அதை முதன்முதலில் லட்சுமி என்று அழைத்தபோது திரும்பவில்லை. நெருங்கியபோது மிரண்டது. முதுகைத் தடவிவிடச் சென்றவேளை கொம்பினாலே முட்ட வந்தது. வாளியில் தண்ணீர் கொண்டுபோய்க் கொடுத்தேன். தட்டி விழுத்திவிட்டுத் திமிறியது. நெல்லி மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கயிற்றைச் சுருக்கி, இறுக்கி, இதற்கு மேல் சுற்றமுடியாமல் மரத்தோடு சாய்ந்தபோது செய்வதறியாமல்மே மேஎன்று பாவமாய்ப் பார்த்தது.

மீண்டும் போய் இம்முறை முகத்தைத் தடவி விட்டு, கயிற்றை இளக்கி, முட்டு எடுத்துக் கட்டிவிட்டேன். தண்ணீர் எடுத்துவந்து தலையைத் தடவியவாறே கொடுத்தேன். குடித்தது. மிரளவில்லை. நான் பிரச்சனை இல்லாத ஆள் என்று உணர்ந்திருக்கவேண்டும். அம்மா கழனித்தண்ணி சரிக்கட்டிக்கொண்டு வந்தார். பிளாஸ்டிக் வாளிக்குள் வெட்டின கத்தரிக்காய் எச்சம், பூசணிக்காய்த் தோல், வாழைக்காய்த் தோல் என்று சமைக்கும்போது வந்த மரக்கறி மிச்சங்களைச் சோறு வடித்த கஞ்சிக்குள் கலக்கப்பட்ட கழனி. கொடுத்தேன். அது குடித்து முடிக்கும்வரை தோய்க்கிற கல்லிலே ஏறி இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். குடித்துவிட்டு என்னைப் பார்த்து மூசியது. அதன் பாஷையில் நன்றி சொல்லி இருக்கவேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் நெல்லி மரத்தில் உடம்பைத் தேய் தேய் என்று தேய்த்துவிட்டு, கால் மடித்து உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தது. ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் இருந்தபுது இடம்’, ‘புது ஆட்கள்என்ற சலனம் இப்போது இல்லை. ஹீரோ குரைக்கும்போது மட்டும் திடுக்கிட்டுக் கண் முழித்து, நான் முன்னே இருக்கிறேனா என்று செக் பண்ணிவிட்டு மீண்டும் அயர்ந்தது. 

பார்த்துக்கொண்டே இருக்க லச்சுமி மீது ஒருவித பாசம் பொங்க ஆரம்பித்தது. 

லச்சுமி வீட்டுக்கு வந்த நாள்முதல் என் டெய்லி ரூட்டின் மாறியது. பாடசாலை முடிந்து, வீடு வந்து, சாப்பிட்டு, டியூசன் இருந்தால் போய் வந்து, இல்லாவிடில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு, நான்கு மணிக்குப் பவுடர் எல்லாம் அடித்தபடி குழை குத்தும் கம்பியைத் தூக்குவேன். அப்புறம் என்ன? அந்த ஏரியா பூராகக் கண்ணிவெடி அகற்றும் வேலை எனக்கு. பழுத்த பலா இலைதான் ஆட்டுக்குப் போட அசல் சாமான். குத்திக் குத்தி ஒரு இருபது இலைகள் சேர்ந்த பின்னர் அப்படியே இழுத்து அதை உச்சத்தில் விடவேண்டும். பின்னர் மீண்டும் குத்தத் தொடங்கவேண்டும். நன்றாகக் காய்ந்த இலை என்றால் குத்தும்போது ஒட்டி நிற்காது. நைசாகக் குத்திச் செருகவேண்டும். அருமாத்தமாக எங்காவது சீமைக்கிளுவை கிடைத்தால் ஒடித்துக்கொண்டு வந்து கட்டித் தொங்கவிடலாம். கிளுவை கூட ஓகே. ஆனால் வாழை இலை குடுத்தால் மட்டும் லச்சுமி சீண்டாது. தவிடுஸ்ரீ மில்லில் இருந்து வாங்கிவந்து கலந்து கொடுக்கலாம். புண்ணாக்கு கோண்டாவிலில் ஒரு செக்கு இருந்தது. எடுக்கலாம். லச்சுமிக்கு என்ன டைம் என்ன சாப்பாடு என்ற டீடைல் என் நுனிவிரலில் இருந்தது. 


                                                                               *****


ஒரு மார்கழி மாசம். சாமம் மூன்று மணி இருக்கும். மழை அடிச்சுக் கொட்டுது. பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு நான் நல்ல நித்திரை. திடீரென்று டேய் என்று அக்கா அடிச்சு எழுப்புறா. எழுந்து பார்த்தேன். ஷெல்லடி, பொம்மர் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. நான் பேசாமல் திரும்பவும் படுத்துவிட்டேன். அக்கா மீண்டும் எழுப்பினார். என்னக்கா என்று எரிச்சலாகக் கேட்டேன். அக்கா பூரிப்பாகச் சொன்னார்.

லச்சுமி குட்டி போட்டுட்டுதடா 

பெட்ஷீட்டை உதறி எறிந்துவிட்டு பின்பத்திக்கு ஓடினேன். லச்சுமி ஒரு மூலையில் நின்றிருந்தது. கோயிலடி ஆலமரத்தில் கொண்டுபோய்க் கட்டவென்று அண்ணா நஞ்சுக் கொடியை எடுத்து உமலில் முடிஞ்சு கொண்டிருந்தார். அம்மா கடம்புப்பால் கறந்துகொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் …. தேடினேன்.

எங்கே ஆள்? 

லச்சுமிக்கு முன்னே குளிரில் நடுங்கியபடி ... குட்டிக் கால்கள்... குட்டித் தலைகுட்டி உடம்பு. சாதுவான பிரவுன் கலர். நல்ல நீண்ட செவி. நக்கி நக்கி ஈரமாய் உதிர்ந்தும் உதிராமலும் உரோமங்கள்.கண்களைத் திறந்தும் திறக்காமலும்… ‘தலைவர்’ ... நெருங்கினேன். அரவம் கேட்டு லச்சுமி திரும்பி என்னைப் பார்த்தது. சன்னமாய்மே...’ என்றது. அதன் கண்களில் ஒருவிதப் பெருமை. அருகில் போய்த் தலையைத் தடவி விட்டு நம்மட ஆளை இரண்டு கைகளாலும் தூக்கி முகத்துக்கருகே கொண்டு போனேன். கண் திறக்காமல் என் மூக்கை ஒரு நக்கு நக்கியது. முதல் முத்தம். பச்சக். 

ஈயா .. அம்மா இது எண்ட மூஞ்சியை நக்கீட்டுது! 

அம்மா சிரித்தபடியே தலைவரைக் கையில் வாங்கி லச்சுமியின் மடியருகே கொண்டுபோய் விட்டார். முதற்பால், கடம்புப்பால் குடித்தார். அவர் குடிப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘கிடாய்க் குட்டி. என்னடா பெயர் வைக்கலாம்?என்று அக்கா கேட்டார். நான் யோசிக்கவேயில்லை. 

குட்டியன்

வளர ஆரம்பித்தான். இரண்டு மூன்று நாட்களிலேயே எம்பி எம்பி நடந்தான். இப்போது எனக்குத் தாயையும் குழந்தையையும் சேர்த்துக் கவனிக்கும் வேலை. தண்ணி விடாய் என்றால் தலைவர் வீட்டுக் கதவடியில் வந்து நிற்பார். நான் போய் பால்போச்சிக்குள் நிரப்பி வந்து, குட்டியனை மடியில் தூக்கி வைத்துப் பருக்குவேன். ஏதோ லச்சுமி மடி என்ற எண்ணத்தில் முட்டி முட்டிக் குடிப்பான். குடிக்கும்போது அவனின் அடிப்பாதங்களை தடவிப்பார்ப்பேன். மென்மையாக இருக்கும். செவி ரெண்டையும் பிடித்துத் தூக்கினால் கண்களுஞ் சேர்ந்து மேலெழும். சொக்கிப்போவான். தூக்கித் தோளில் வைக்கலாம். என்னுடைய எல்லா விளையாட்டுக்கும் எடுபடுவான் என்ர குட்டியன். 

பின்னேரம் என்றால் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம். குட்டியன் செம ஓட்டம் ஓடுவான். துரத்துவான். அவன் பயங்கர இன்டெலிஜன்ட். நான்  வீட்டு சண்ஹூடைச் சுத்திச் சுத்தி ஓடுவேன். கொஞ்ச நேரம் சுத்திக் கலைத்துப்பார்ப்பான். பின்னர் திடீரென்று ப்ரேக் அடித்து மற்றப் பக்கத்தால் வந்து என் முன்னே நிற்பான். இது என்னைபார்த்து அவன் கற்றுக்கொண்ட டெக்னிக். நான் கலைக்கும்போதும் அப்படித்தான். கலைத்துக்கொண்டே போவேன். அண்ணரும் இம்மை மறுமை இன்றித் திரும்பிப்பார்க்காமல் ஓடுவார். திடீரென்று நான் மற்றப்பக்கத்தால் ஓடிப்போய் முன்னே நிற்பேன். சட்டென்று என்னை முன்னே கண்ட டென்சனில் சடக்கென்று ரிவேர்ஸ் எடுக்க, தேங்காய்ப்பூவில் போலிஷ் பண்ணப்பட்டத் தரையில் தலைவர் சரேலென்று வழுக்கியபடி போய் விழுவார். இந்த விளையாட்டில் நாய்க்குட்டி ஹீரோவும் இணையும்போது சுதி கிளம்பும். அம்மாவின் பூங்கன்று ஒன்று விடாமல் முறித்தபடி ஓடி விளையாடுவோம். அம்மா கத்தியபடி அடிக்கவந்தால் ஹீரோ கேற்றுக்கு வெளியே ஓடிவிடும். குட்டியன் மட்டும் என்னிடம் வந்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி என் வயிற்றில் வைத்தபடி தூக்கு என்று அடம்பிடிப்பான். தூக்கி வைத்தபடியே அப்போது பள்ளிக்கூடத்தில் படித்த பாட்டு ஒன்றை பாடுவேன். 

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கும் முத்தம் தந்திடுவேன்

பாடியபடி முகத்தை அதன் முகத்துக்கு கிட்டே கொண்டுபோகும்போது ஒரு நக்கு நக்குவான். முத்தம். பச்சக்... சொர்க்கம். இப்படித்தான் ஒரு நாள் மடியில் வந்து கிடந்தவனின் தலையைத் தடவிப் பார்த்தேன். ஏதோ முட்டுப்பட்டது. அட மென்மையான கொம்பு. 

குட்டியனுக்கு கொம்பு வளரத் தொடங்கியது. 

குட்டியன் பிறந்த கையோடு வீட்டிலே தேத்தண்ணிப் பிரச்சனையும் தீர்வுக்கு வந்தது. அதிகாலையிலேயே அம்மா பால் கறந்துவிடுவார். லச்சுமியின் மடியைக் கழுவி, ஒரு நிமிசம் குட்டியனை இடித்துக் குடிக்கவைத்துவிட்டு, பின்னர் பலகைக்கட்டை போட்டு உட்கார்ந்தால் கறத்தல் ஆரம்பிக்கும். சில்வர் சட்டியில் சரக் சரக்கென்று கறக்க, ‘கைங்’ ‘கைங்என்று சீறிக்கொண்டு பால் நிரம்பும். அரைவாசி நிரம்பிய பின்னர்கைங்சத்தம்கர்என்று மாறும். கறந்துமுடிந்த பின்னர் மீண்டும் குட்டியனைக் குடிக்கவிட்டு, அம்மா எங்களுக்குத் தேத்தண்ணி ஊற்றித்தருவார். பின்னேரத்துக்கும் எடுத்து வைப்பார். அப்போதும் அரைப்போத்தல் அளவில் மிஞ்சும். தயிர் உறை போட்டு அடுப்படியில் எடுத்து வைப்பார். அவ்வளவு கறத்தல் கறக்கும் லச்சுமி. 


                                                                                *****   


வருடங்கள் கழிந்தன. குட்டியன் இப்போது பெருங்கடா. முன்ன மாதிரி விளையாட்டு குறைந்துவிட்டது. ஆனால் இன்னமும் நெருங்கிப்போனால் சரக்கென்றுப் பாய்ந்து கொஞ்சு என்று மூஞ்சியை நீட்டுவான். டேய் கொம்பு கண்ணுக்க குத்திடும் எண்டு அம்மா வெருட்டுவார். எனக்கு என்ர குட்டியனில பயம் இல்லை. நல்ல நீட்டுக் கொம்பு. என்னளவுக்கு இப்போது குட்டியன் வளர்ந்து நின்றான். லச்சுமியை விட நல்ல உயரம். நான் வளர்த்த குட்டியன் அல்லோ.

அன்றைக்கு ஒருநாள், பொன்னுச்சாமி மாஸ்டரின் தமிழ் கிளாஸ் முடிந்து வீடு திரும்பினேன். என்றுமில்லாதவாறு ஒரு வித அமைதியாக  வீடு அன்று இருந்தது. ‘அப்பன் தேத்தண்ணி குடிக்கிறியா? என்று அம்மா வழமைக்கு மாறான பாசத்தைப் பொழிந்தார். என்னைக்கண்ட அக்கா கவனிக்காததுபோலக் கெமிஸ்ட்ரி வாய்ப்பாட்டை உரத்துச்சொன்னார். சம்திங் ரோங் என்று தெரிந்துவிட்டது. பாத்ரூமுக்குப் போகவெனப் பத்திக்குச் சென்றேன். லச்சுமி என்னைக் கண்டதும்மே மேஎன்று கத்தியது. வழமைக்கு மாறான கத்தல் அது. சந்தேகத்தில் அதனிடம் நெருங்க, இன்னமும் கத்தியது. தலையைத் தடவப்போக என்னை அது உதறித் தள்ளியது. லட்சுமியின் கத்தல் கூடிக் காட்டுக்கத்தல் ஆனது. என்னடா இது என்று குட்டியனைத் தேடினால் அவனைக் காணவில்லை. நெல்லிமரத்தடியில் பார்த்தால் அங்கேயும் இல்லை. ‘குட்டியன்... குட்டியன்என்று கத்தினேன். ஹீரோதான் ஓடிவந்து வாலாட்டியது. ‘டேய் குட்டியன் டேய் குட்டியன்... அம்மா குட்டியன் எங்கே?என்று சத்தமாகக் கத்தினேன். ‘இப்ப எதுக்கு கத்தி ஊரோச்சம் வைக்கிறாய்? அதை கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள்என்று அம்மா சொல்லத் திடுக்கென்றது.

 “எங்கே கூட்டீட்டுப் போட்டாங்கள்? யாரு கூட்டீட்டுப்போனது? 

அதுக்கு தவிடும் புண்ணாக்கும் வச்சுக் கட்டுமேவளர்ந்திட்டுது ... இறைச்சிக்கு வித்திட்டம் 

இறைச்என்ன சொல்லுறீங்கள் அம்மா? 

அக்கா உடனே ஓடிவந்து சமாளித்தார்.

இல்லையடா ... அத வளர்க்கபோறன் என்று ஆனந்தம் அண்ணை வந்து கேட்டார் ... குடுத்திட்டம்...” 

போய் சொல்லாதீங்கோ அக்கா ... அது என்ர குட்டியன்எப்பிடிக் குடுக்கலாம்?... அது எப்பிடி என்னை விட்டிட்டு இருக்கும்?அம்மானை மெய்யாச் சொல்லன ... இறைச்சிக்கா குடுத்தீங்கள்? ... ஐயோ ...” 

நான் உலுக்கிக் கேட்கவும் அம்மா பேசாமல் இருந்தார். அக்காவும் ஒன்றுஞ் சொல்லாமல் உள்ளே போய்விட்டார். எனக்கு முகம் எல்லாம் சிவந்து உடல் திடீரென்று குளிர்ந்ததுபோலத் தோன்றியது. ஹீரோ காலடியில் வந்து வாலாட்டிக்கொண்டு நின்றது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மே மே என்று லச்சுமி அழைத்தது. போனேன். தண்ணீர் வாளியை அது தட்டி விழுத்தியது. தடவிவிடப் போகையில் மிரண்டது. லச்சுமி என்றேன். திரும்பிப்பார்க்காமல் சுற்றிச் சுற்றி வந்து கையிற்றை இறுக்கியது. ‘மேஎன்று இன்னமும் பெரிதாகக் கத்தியது. கயிற்றுச் சிக்கலை இளக்கவென நெருங்கினேன். மூசி மூசி என்னைக் கலைத்தது. பக்கத்திலேயே குழை குத்தும் கம்பி தொங்கியது. குட்டியனுக்கு என்று பாதிக்குழை இன்றைக்குப் போடுவதற்கு விட்டு வைத்திருந்தேன். 

 





போகும்போது குட்டியன் காட்டுக்கத்தல் கத்தி இருப்பானா? என்னை நினைத்திருப்பானா? மனம் இறுகிப்போய் ஆட்டுக்கல்லின் மேல் போய் இருந்தேன். நான் வந்து இருந்தவுடன் குட்டியன் ஓடி வந்து நெஞ்சிலே குதிப்பது போன்ற உணர்வு. தலையைத் தடவிவிடும்போது அன்றுதான் அவனின் முளைக் கொம்பை தொடுவது போன்ற உணர்வு. செவி இரண்டையும் பிடித்துத் தூக்கும்போது கண்கள் சரேலென்று எகிறும் உணர்வு. போச்சியில் பாலூட்டுவது போன்ற உணர்வு. என் நெஞ்சிலே இரண்டு கால்களையும் ஊன்றித் தன் முகத்தை எனக்கு கிட்டே நெருங்கக் கொண்டுவருவது போன்ற உணர்வு. 

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையானச் சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கு முத்தம் தந்திடுவேன் 

என்று நான் நெருங்கும்போது குட்டியன் என் முகத்தை நக்கி .. பச்சக்குட்டியன்….. 

என அழத் தொடங்கினேன். 

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...