Skip to main content

குமரன் வரக்கூவுவாய்


நல்லூர்க் கோயிலின் உள் வீதி.

மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில் வியர்வைத் துளிகள் புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருந்தன.
காலைப்பூசைக்கு பதினைந்து இருபது பக்தர்கள்தான் கூடியிருந்தார்கள். ஒரு சில பூசகர்கள். தீர்த்தக்கரையருகே பசு மாடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் கன்று பிறந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். நடக்கவே தள்ளாடிக்கொண்டிருந்த தலைவர் அங்கு நின்ற பக்தர்களிடம் சென்று ஒட்டிக்கொண்டிருந்தார். சமயத்தில் தாயின் கட்புல எல்லைக்கு அப்பாலும் சென்றுவிடுவார். அப்போது தாய் மாடு ஓலமிட்டுக் கத்தும். அது எதுவும் இவர் கேளாமல் பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். உள் வீதியில் சாணமிட்டார். ஒருநாள் அவரும் மரத்தில் கட்டப்படுவார். அதற்கு முன்னர் செய்யக்கூடிய அழிச்சாட்டியமெல்லாம் செய்துவிடவேண்டுமென்ற வேட்கையோ என்னவோ. தாயின் பக்கமே செல்லாமல் சுற்றிச் சுற்றி வந்தார்.

மூல மூர்த்திக்கு அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது. எனக்கோ “குமரன் வரக்கூவுவாய்” பாடல்தான் காதுகளில் ஒலித்தது. சற்று நேரம் கண்களை மூடி இரசித்துக்கொண்டிருந்தேன். பின்னர் காட்சிகளைத் தவறவிடலாகாது என்று கண்களைத் திறந்து பார்த்தேன். அப்போது மாடத்தில் நின்ற புறா ஒன்று சட சடவென இறக்கை அடித்துப் பறந்து வந்து என் அருகில் இறங்கியது. அதன் அலகுகளின் சிறு குச்சி ஒன்று. வீடு கட்டுகிறதுபோலும்.

“வருவார், வருவார் என்று வழி பார்த்து, விழி சோர்ந்தே”

முருகனேதான். நானில்லாத யாழ்ப்பாணத்தில் அவனுக்கும் துணை என்று யாருளர்? புறாவோடு இறைஞ்சியிருக்கிறான். இன்று என்னைக்கண்டதும் ஊடல் கோபத்தில் உள்ளே சென்று ஒளிந்துவிட்டான். ஆனால் பாவம், இந்த மாடப் புறாவுக்கு எங்கள் சிறுபிள்ளைத்தனங்கள் தெரியாதல்லவா? அது ஓடிவந்து விசயத்தைப் போட்டுடைத்துவிட்டது. எனக்குச் சிரிப்புதான் வந்தது. நான் புறாவிடம் தூதுவிட்டேன்.

“மயில்கள் உலாவி வரும் மாங்கனிச்சோலை, 
மருவி எனைப்பிரிந்த முருகன் அருகில் வர
குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக்கூவுவாய்”

அது கோபத்துடன் குச்சியைக் கீழே போட்டுவிட்டுச் சொன்னது.

“நான் குயில் கிடையாது, புறா”

சொல்லிவிட்டு குமரனைக் கூட்டிவர ஓடிவிட்டது.

எக்காலத்திலுமே நல்லூர் முருகன் எனக்குக் கடவுள் கிடையாது. சிறு வயதில் கடவுள் என்றொருத்தர் இருக்கலாம் என்று நினைத்தபோதுகூட நல்லூர் முருகனிடம் பெரிதாக எதுவும் வேண்டிக்கொண்டதில்லை. அவனை எப்போதுமே என் நண்பனாகத்தான் கொண்டாடியிருக்கிறேன். இதே தூண்களுக்கிடையில் நானும் அவனும் ஒளிச்சுப்பிடித்து விளையாடியிருக்கிறோம். என் அப்பா என்னை ஓர் தோளிலும் அவனை ஒரு தோளிலும் சுமந்து மூல மூர்த்தியை வணங்கியதுகூட ஞாபகம் இருக்கிறது. அந்த முருகன் தன் தோளில் அமர்ந்திருப்பதை அறியாமல்.

இன்றைக்கும் இப்பிரகாரம் முழுதும் என் இளவயதுக் குமரன்களையே காண்கிறேன். அப்பா தோளில் சுமந்த குழந்தையை. எண்பதுகளில் இந்திய இராணுவம் நம் வீட்டருகே குண்டுகள் போட, நாம் ஓடிவந்து அடைக்கலம் தேடியதும் இங்கேதான். இதோ என் முன்னேயிருக்கும் தூணுக்கடியில்தான் எம் குடும்பம் ஒரு போர்வையை விரித்து அமர்ந்திருந்தது. இந்தப் பிரமாண்ட பெண்டுல மணிக்கூட்டைக் கேட்டால் அதுவும் என் கதைகளுக்குச் சாட்சி சொல்லும். தூரத்தே குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போது கும்மிருட்டு. மெழுகுதிரி ஏற்றியிருந்தோம் என்று நினைக்கிறேன். அக்கா மலிபன் பிஸ்கெற்று பக்கற்றை உடைத்து நமக்குக் கொடுத்தார். குமரனும் ஒன்றை வாங்கிக்கொண்டான். அந்த இரண்டு குமரன்களும் ஒரு பிஸ்கற்றுக்காக சண்டை பிடித்தோம். அப்புறம் களைத்துப்போய் அங்கேயே அம்மாவின் மடியில் தூங்கிவிட்டோம்.

சிறுவன் குமரன் அப்பாவின் சால்வையை வேட்டியாகக் கட்டி உள் வீதி முழுதும் ஓடித்திரிவதும் அழகுதான். இந்தக் கன்றுபோல. நான் போட்ட உடுப்புகளை அப்படியே பிரதி செய்து நல்லூர்க் குமரனும் போட்டுக்கொள்வான். கொடியேற்றத்தன்று அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து கும்பிட்டுக்கொண்டிருக்க அவரிடம் தண்ணீர்த்துவக்கு வாங்கித்தருமாறு இந்தக் குமரன் கேட்கிறான். மற்றக்குமரனுக்கு ஆர்மி செற் வேண்டுமாம். பாவம் அம்மா. இரண்டு குமரன்களுக்கும் வாங்கிக்கொடுக்கக் காசுக்கு எங்கே போவார்?

“பொறுங்கடா, பூங்காவனத்தண்டு விலை மலியும். வாங்கலாம்”

அம்மாதான் எனக்குச் சிறு வயதுமுதலே வரலாற்றின்மீது ஆர்வத்தைத் தூண்டியவர். மூலத்தான மூர்த்திக்குப் பின்னாலே மேற்குவீதியில் ஏற்றிவைத்திருக்கும் சுட்டி விளக்கு ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதிக்கு என்று சொல்லியதும் அவர்தான். அக்காலத்தில் யாழ் மாநகரசபை நூலகம் நல்லூரடியில்தான் இருந்தது. அங்குச் சென்று பல செங்கை ஆழியானின் நூல்களை வாசித்த ஞாபகங்கள் வருகின்றன. சின்னப்பெடியன் அல்லவா? புத்தகங்களை வாசிக்க வாசிக்க, வரலாற்றுப் பாத்திரங்கள் எல்லாருமே நல்லூர் முழுதும் என்னோடு அலைய ஆரம்பித்துவிட்டார்கள். நான் சைக்கிளின் செல்லும் சமயம் மந்திரி மனைக்கருகே சப்புமல் குமாரயவும் சங்கிலியனும் குதிரையில் சவாரி சென்றார்கள். சிக்கந்தரும் அவருடைய படையும் கைலாசப்பிள்ளையார் கோயிலடியில் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போரிட்டனர். ஒல்லாந்தக் கப்பித்தான்களும் ஆங்கிலேயேப் பாதிரியார்களும்கூட ஆங்காங்கே தலை காட்ட ஆரம்பித்தனர். திலீபன் அண்ணாவைச் சைக்கிளில் மணத்தரை ஒழுங்கையில் ஒரு நாள் கண்டேன்.

பதின்மங்களின் நல்லூர் அனுபவங்களை என் கொல்லப்புறத்துக் காதலிகளில் சொல்லியிருப்பேன். ஒவ்வொரு திருவிழாவிலும் ஒவ்வொரு மேகலா. அப்போது ஹரிகரன் மோகம் பீடித்துக்கிடந்த நாட்கள். வசந்த மண்டபத்திலிருந்து தெற்கு வாசல்வரை உள்ள பிரகாரத்தில்தான் காதல் காட்சி நிகழும்.

 “நீயிருந்தால் நானிருப்பேன்.
நீ நடந்தால் நான் நடப்பேன்.
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்.
நீ என் காதலியானால்”

குறுக்கும் மறுக்குமாக ஒவ்வொரு தூணாக அவள் ஓட நான் பின் தொடர்வேன். ஆனால் என்னுடைய இந்த காதல் சேட்டைகளில் குமரன் பங்கெடுக்கமாட்டான்.

“மச்சான் தேவயானையைக்கூட சமாளிச்சிடலாம். வள்ளி நெருப்பெடுத்திடுவாள். நீ வாழு”

“நீராட நதி தருவேன்
நீ துடைக்க முகில் தருவேன்
நீ உடுத்த மலர் தருவேன்
நீ என் காதலியானால்”

ஒவ்வொரு திருவிழாவிலும் ஒவ்வொரு காதலி. ஆனால் அவனருளாலே அவளுகள் எவளும் கடைசியில் என் காதலியாகவில்லை.

இப்போது பார்க்கையில் அந்த எல்லா வயதுக் குமரன்களும் ஒரு சேர பிரகாரத்தில் நின்றிருந்தார்கள். சிறுவனான குமரன்கள் விளையாடித்திரிந்தார்கள். இளைஞர்கள் சில்மிசம் செய்தார்கள். ஏனோ முப்பதுக்குப் பிறகு எவனையும் காணவில்லை. சுடர்மிகு அறிவுக்கு அறியாமையின் அழகையும் இரசிக்கத் தெரிந்திருக்கவேண்டும். முப்பதுகளில் எனக்கு அது வசப்படவில்லைபோலும்.

மறுபடியும் புறா பறந்துவந்தது. கூடவே குமரனையும் அழைத்து வந்தது. அழைத்து வந்தது என்று சொல்லமுடியாது. தரதரவென இழுத்து வந்தது. நான் எழுந்து ஓடிச்சென்று அவனைக் கட்டியணைத்தேன்.

“என்னடா, கோபமா?”

“பின்ன என்ன, என்னை மட்டும் தனிய விட்டிட்டுப் பறந்திட்டாய்.”

நல்லூர்க் குமரனின் கோபம் என்பது நடு வெயில் பனிக்கட்டிபோல. ஒரு கணத்தில் உருகிவிடும். அடுத்த கணமே என் தோள்களில் கைபோட்டு ஒன்றிவிட்டான்.

“என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திறங்கிவிட்டாய்”

கேட்டானே ஒழிய அவனுக்கும் பதில் தெரியும். காலப்பயணங்கள் செய்யும்போது வரலாற்றில் சலனங்களைச் செய்யக்கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. ஊர்ப்பயணமும் எனக்கு அப்படித்தான். ஊருக்கென்று ஒரு இயல்பான பயணம் இருக்கிறது. இருப்பு உளது. ஊரிலே சில நாட்கள் தங்கி, எம் மகிழ்ச்சிக்காக அந்த இருப்பில் சலனங்களைச் செய்வது ஊருக்குத்தான் பாதிப்பு. ஆனால் அது எதையும் நான் அவனுக்குச் சொல்லவேண்டியிருக்கவில்லை.

“திருவிழாவுக்கும் நிக்கமாட்டாய்போல”

நான் சிரித்தேன்.

“உனக்கென்னடா, உலகமே ஒன்றுகூடி உனக்குத் திருவிழா எடுக்குது. நானெதுக்கு?”

அதற்கு அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால் கொஞ்சம் கவலைப்பட்டான் என்று தோன்றியது. தேவையில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டோம் என்று தோன்றியது. பேச்சை மாற்றினேன்.

“வா, பூங்காவனத்தைப் போய்ப் பார்க்கலாம்.”

“அதையேன் கேக்கிறாய், பூங்காவில ஒண்டுமில்லை. புழுதிதான் கிளம்பிக்கிடக்கு”

“அப்போ தாமரைக்குளம்?”

“எண்ட வாயைக் கிளறாத”

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனின் பூங்காவனமும் அதனுள் இருக்கும் சிறு தாமரைத் தடாகமும் இன்னமும் கண்களுக்குள் நிறைந்திருந்தது. அண்ணன் துணைகொண்டு வள்ளியோடு அவன் காதல் சேட்டைகள் விட்டதும் அங்குதான்.

“அப்போ வள்ளியும் தெய்வானையும் எங்கடா?”
“அதுகள் எந்நேரமும் வசந்த மண்டபத்துக்கதான் அடைஞ்சு கிடக்குதுகள். பாவம்”

நான் பெருமூச்சு விட்டேன்.

“ஜீவியைக் கேட்டதா சொல்லு. அடுத்தமுறை வரேக்க ஆளையும் கூட்டிவா. அந்த eliteகாரனோட எனக்கென்ன பேச்சு எண்டு சொல்லுவா. அதெல்லாம் இவனுக பண்ணுற கூத்து. நான் இன்னமும் அவவிண்ட குமரனோட சிறுவயதுத் தோழன்தான் என்று அவவுக்குச் சொல்லு”

“அது தெரியுமடா. She gets it.”

அப்போது மின் டமாரம் அடிக்க ஆரம்பித்தது. குமரன் அவசரப்பட்டான்.

“பூசை தொடங்கப்போறாங்கள். நான் போகோணும். இங்கேயே இரு. நான் திரும்பி வாறன். ஓடிடாத பிளீஸ்”

அவன் சொல்லிக்கொண்டே பிரிய மனமின்றி விலகிச்சென்றான். நான் தூணடியில் மறுபடியும் உட்கார்ந்து செல்போனில் நம் சந்திப்பைக் குறிப்பெடுக்கத் தொடங்கினேன். அப்போது ஒருவர் வந்து என்னைத் தட்டிக் கடுமையான தொனியில் பேசினார்.

“தம்பி, கோயிலுக்குள்ள செல்போன் பாவிக்கக்கூடாது”

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“கதைக்கக்கூடாது, படமெடுக்கக்கூடாது சரி, ஆனா குறிப்பும் எழுதக்கூடாது எண்டா?”

“அதெல்லாம் கிடையாது. போன் பாவிக்கக்கூடாது. அதுவும் பூசை நடக்கேக்க. அவ்வளவுதான்”

அடம்பிடிக்கலாம்தான். ஆனால் மனசில்லை. ஊரிலே சலனங்களை நிகழ்த்தாதே என்று மனம் சொன்னது. செல்பேசியை உள்ளே வைத்தேன். சற்று நேரம் அவர் சென்ற திசையையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். தன்னுடைய வளர்ந்த மகனுக்கு அட்டாங்க வணக்கம் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுத்தார். கனடா அல்லது இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடும். என்னிடம் வந்து அறிவுரை சொல்லவேண்டும் என்று அவருக்கு ஏன் தோன்றியது. நான் என் குமரனைப் பற்றிக் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த கணத்தில் ஏதோ ஒரு அதிகாரக் கணம் அவருள் எழுந்திருக்கும். சக மனிதன்மீது அதிகாரத்தைக் காட்டக்கூடிய பெரு வாய்ப்பு. எனக்கு அதற்குமேல் அங்கிருக்கத் தோன்றவில்லை.

“நேரமாகுது. நான் வெளிக்கிடப்போறன்”

புறாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வெளியே வந்தேன். கிழக்கு வானில் சூரியன் மெல்ல எழுந்துகொண்டிருந்தது. சற்று நேரம் நல்லூர்க் கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஊரே பக்தர்களால் நிறைந்துவிடும். கொண்டாட்டத்தில் ஊர் விழி பிதுங்கும். திருவிழாக்களில் நான் எப்போதுமே தனிமையைத்தான் அனுபவித்திருக்கிறேன். தனியே வீதி சுற்றுவேன். நாதஸ்வரக் கோஷ்டியோடு கூட இருப்பேன். கடைவீதியெங்கும் அலைவேன். பிரகாரத்தைச் சுற்றி நிகழும் பிரசங்கங்களையும் இசைக் கச்சேரிகளையும் பார்த்து இரசிப்பேன். ஆனால் இன்றுதான் புரிந்தது. இத்தனை காலமும் அந்தக் குமரனும் திருவிழாக்காலங்களில் தனிமையைத்தான் அனுபவித்திருப்பான். பாவம்.

கொஞ்ச நேரம் தேர் முட்டியடியில் அமர்ந்திருந்து மீதிக்குறிப்பையும் எழுதலாம் என்று யோசித்தேன். அப்போது கோயிலுக்குள்ளிருந்து இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள்.

“குமரன் அண்ணா, குமரன் அண்ணா”

வள்ளியும் தெய்வானையும்தான். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு வணக்கம்கூட வைக்காமல் வந்துவிட்டேன் என்பது புரிந்தது. என்ன மனுசன் நான். நெருங்கிப்போய் இருவரையும் கட்டியணைத்து சுகம் விசாரித்தேன்.

“வந்தனிங்கள்… எங்களை விசாரிக்கக்கூட இல்லை”

“Guilty as charged”

“ஜீவி எப்பிடி இருக்கிறா?”

மூவரும் தேர் முட்டியடியில் உட்கார்ந்திருந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். பூசை நேரம் முடிந்ததும் குமரனும் எம்மோடு வந்து இணைந்துகொண்டான். இப்படி உட்கார்ந்து பேசி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜீவியும் வந்திருந்தால் அவ்விடமே ஒரு கலக்கலாக இருந்திருக்கும். பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு விழித்திரையில் அக்காட்சி அப்படியே விரிய ஆரம்பித்தது.

வானின் உச்சியில் பறந்து திரிந்த இராசாளி ஒன்றும் அக்காட்சியைக் கண்ணுற்றது. கீழே கோபுரங்கள் சூழ் கோயில். ஆங்காங்கே காகங்களும் புறாக்களும் பக்தர்களும் பரந்திருந்தனர். அதிகாலை வெயில் இதமாய் உடல்களைத் தழுவிக்கொண்டிருக்க, தேர் முட்டியடியில் அந்த நால்வரும் உட்கார்ந்திருந்தனர். சிறு வயது நண்பர்கள் எத்தனை முறை சந்தித்தாலும் ஒவ்வொரு தடவையும் ஒரே விசயங்களை அசை போட்டுச் சிரித்து மகிழ்வதுபோல அவர்களின் பேச்சு இருந்தது. இடையில் ஒருத்தி ஓடிச்சென்று ஒரு சரை கச்சானும் வாங்கி வந்தாள். அவர்கள் இடைவிடாது பேசிக்கொண்டேயிருந்தார்கள். வீடியோ அழைப்பெடுத்து யாரோடோ பேசினார்கள். அவ்வப்போது ஒருவர் முதுகில் மற்றவர் செல்லமாகக் குத்தினார்கள். இராசாளி மனங்கேளாது மெதுவாக இறங்கிவந்து தேர் முட்டியில் உட்கார்ந்துகொண்டது. அவர்கள் பேசிக்கொள்வதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தது. சற்று நேரத்திலேயே காலைப்பூசை நேரம் முடிந்து கோயில் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. வந்தவர்கள் எல்லோடு வீடு திரும்பினார்கள். தேர் முட்டி உச்சியில் அமர்ந்திருந்த இராசாளி இரகசியமாய் இறங்கி நெருக்கமாக வந்து நின்று தன் காதுகளைத் தீட்டிக்கொண்டது.

இது எதையும் கவனியாமல் நாங்கள் பேசிக்கொண்டேயிருந்தோம்.
*****

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக