Skip to main content

தவக்களை அண்ணை



தின்னவேலி மரக்கறிச்சந்தை வழமைபோலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

கொழுத்தும் வெயிலிலும் மரக்கறிகளாலும் பழங்களாலும் நிறைந்த கட்டடம் குளிர்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய்கள் குவிந்திருந்தன. விலையும் மலிந்துபோய். கிலோ நூறு ரூபாய்க்கு நல்ல இளங் காய்களை வாங்கக்கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தின் விலைவாசியைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. சில கடைகளில் பால் டீ எண்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்குச் செல்லும் லோஞ்சிக் கட்டணமும் எண்பது ரூபாதான். அம்மாச்சியில் சுடச்சுடக் கிடைக்கும் குரக்கன் புட்டும் சம்பலும் வேறொரு கடையில் மூன்று மடங்கு விலை அதிகமாக இருக்கும். பிக்மீயில் நூற்றைம்பது ரூபாயில் செல்லக்கூடிய பயணத்தை சந்தியில் நிற்கும் ஓட்டோவில் ஏறிச்சென்றால் முந்நூறு ரூபாய் செலவாகிவிடும். இப்படியெல்லாம் மற்றவர்கள் யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்குள் எப்போதுமே என்னை யாராவது ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் குடிகொண்டிருக்கும். சிறுவயதிலிருந்து அத்தனை பேரும் என் மண்டையில் மிளகாய் அரைத்ததினால் உருவான எச்சரிக்கை உணர்வு. ஆனால் அக்கா வேறுமாதிரிச் சொல்வார்.

“டேய் நீங்கள் அவுஸ்திரேலியாக்காரர்தான் பிச்சைக்காரர்கள். சுவிஸ், பிரான்ஸ்காரங்களைப் பார்த்துப் பழகுங்கடா. டீ எண்பது ரூபா எண்டால் அவங்கள் எண்பது யூரோவைத்தான் குடுப்பாங்கள்”

கல்வியங்காட்டுச் சந்தையில் சென்று ஆட்டிறைச்சி வாங்கினேன். தனி இறைச்சி என்றால் ஐயாயிரம் ரூபாய்கள். எலும்போடு சேர்த்து நான்காயிரம் ரூபாய். எலும்பில்லாத இறைச்சி ஆருக்கு வேணும்? நான் ஒன்றரைக்கிலோ இறைச்சி எலும்போடு சேர்த்து வாங்கினேன். அப்போது ஒரு இளம்பெண் வந்து கால்கிலோ தனி ஈரலை வாங்கினார். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஈரலைத் தனியாக நான் எப்போதும் யாழ்ப்பாணத்தில் வாங்கியதில்லை. வசதியில்லை என்பது ஒருபுறம். ஈரலைத் தனிக்கறியாகவோ அல்லது பொரியலாகவோ செய்தாலும் இறைச்சிக்கறி அளவுக்கு சுவையாகவும் இருக்காது. கேட்டுவிட்டேன்.

“தனி ஈரலில் எப்படிக்கறி வைப்பிங்கள்?”

அவர் என்னை ஆச்சரியமாகத் திரும்பிப்பார்த்தார். இப்படிப் பரஸ்பரம் சமையல் குறிப்புகளை சந்தைக்கடைகளில் பகிர்வது மெல்பேர்னில் அதிகம் இடம்பெறுவதுண்டு. ஒரு முறை சூடை மீனை எப்படிப் பொரிப்பது என்று ஒரு வெள்ளைக்காரிக்கு நான் விக்டோரியா சந்தையில் வைத்து ஐந்து நிமிடங்கள் விளக்கினேன். அந்தப்பெண்ணும் ஆர்வமாகக் கேட்டுவிட்டு, ஒரு கிலோ சூடையை வேறு வாங்கிக்கொண்டு வீடு சென்றார். அதைப்பொரித்தால் ஐந்து நாட்களுக்கு வீடு நாறும் என்று அவருக்கு நான் சொல்ல மறந்துபோனேன்.

“சும்மா பிரட்டல் கறிமாதிரித்தான் வைக்கிறனான் அண்ணா”

“பால் விடாமலா?”

“ஓம், நிறைய வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கிறது”

அவரோடு பேசிக்கொண்டிருக்கையிலேயே கடைக்காரர் ஈரலும் நுரையீரலும் என் இறைச்சிப்பங்குக்குப் போடுகிறாரா என்று பார்த்துக்கொண்டேன்.

“ஆனா இறைச்சியோட சேர்ந்தாத்தானே ஈரலுக்கு மரியாதை?”

“அது மெய்தான் அண்ணா. ஆனா எனக்கு இரத்தத்தில ஈமோகுளோபின் காணாதாம். அதாலதான் ஈரல் சாப்பிடுறனான்”

“அற்புதம். ஈரலில் இரும்புச்சத்து அதிகம். அதை அதிகம் வதக்கவேணாம். அரை அவியலிலே அடுப்பை அணைக்கோணும். வேணுமெண்டா மல்லி, சீரகத்தை எப்பன் வறுத்து அரைச்சுப் போட்டிங்கள் என்றால் அந்த மச்ச மணம் எடுபட்டிடும்”

அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி ஈரலை வாங்கிக்கொண்டு சென்றார். என் எலும்பிறைச்சியும் தயாராகியிருந்தது. காசைக்கொடுத்துவிட்டு மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு நேரே தின்னவேலிச்சந்தைக்குப் போனேன். கத்தரிக்காயும் லீக்சும்தான் வாங்கவேண்டும். அதனை கல்வியங்காட்டிலேயே வாங்கியிருக்கலாம். ஆனால் மரக்கறிச்சந்தை என்றால் அது தின்னவேலி என்று மனதில் பதிந்துவிட்டதால் சைக்கிள் அங்கே பறந்தது.

தின்னவேலிச் சந்தையைக் கண்டதும் சிறுவயதுக் குமரனின் குதூகலம் வந்துவிட்டது. நன்றாக முழிந்துகொண்டிருந்த சிவந்த சின்ன வெங்காயத்தை ஐந்து கடைகளில் விலை விசாரித்து வாங்கினேன். வெங்காயத் தாளும் வாங்கினேன். கருணைக்கிழங்கு, முருங்கக்காய், பயற்றங்காய் என்று பற்பல ஐட்டங்கள். கூடவே அம்பலவி, செம்பாட்டான் மாம்பழங்களையும் அள்ளிப்போட்டேன். எல்லோரும் யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் என்றுதான் அலைவார்கள். ஆனால் அற்புதமாக முற்றிப் பழுத்த செம்பாட்டானின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கூடவே ஒரு பலாப்பழத் துண்டையும் போட்டுக்கொண்டேன். வீட்டில் ஏற்கெனவே ஒரு பிலாப்பழம் அறுக்காமல் கிடக்கிறது.

இந்தப் புத்திக்கு அம்மா வைத்த பெயர் ‘அமர்’.

வெறும் கத்தரிக்காயும் லீக்சும் வாங்க வந்தவன் இரண்டு கைகளிலும் மரக்கறி நிறைந்த பைகளோடு இப்போது நிற்கிறேன். இவற்றை எப்படி மோட்டர் சைக்கிளில் கொண்டுபோவது என்ற குழப்பம் வந்தது. அப்போது அக்கா அழைப்பெடுத்து சம்பா அரிசியும் வாங்கி வரச்சொன்னார். அதனால் பலசரக்குக் கடைப்பக்கம் திரும்பி நடக்கையில்தான் தவக்களை அண்ணையைப் பார்த்தேன்.

உடனேயே அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஒரு தாடி வைத்த, கொஞ்சம் வயதான, கட்டையான மனிதர் தேசிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். கூர்ந்து பார்த்ததும் அது தவக்களை அண்ணை என்று உணர்ந்துகொண்டேன். இந்தப் பெயரை என்னுடைய “வெம்பிளி ஓப் ஜாப்னா” சிறுகதையை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

அந்தக் கதையில் பாத்திரத்தின் அறிமுகம் இப்படி நிகழும்.
“எங்கள் அணியில் தவக்களை என்றொருத்தன் இருந்தான். பெயருக்கேற்றபடியே ஆளும் மூன்றடித் தவ்வல். ஆனால் அவன் விளையாட்டில் பயங்கர விண்ணன். அண்ணர்தான் செல்சியின் பிரதான ஸ்றைக்கர். ஆட்டத்தின் முப்பதாவது நிமிடம் சுதா அக்கா பந்தை விரட்டிக்கொண்டு வரும்போது தவக்களை அதனை இலாவகமாகப் பறித்தெடுத்து, படுவேகமாக எதிர்ப்பக்கம் விரட்டிக்கொண்டுபோய் நான்கு பேர்களை அடுத்தடுத்து உச்சியபடி, தனியாளாக கோல் ஒன்றைப் போட்டான். போட்டவன் சனியன் போட்ட கையோடு பேசாமல் திரும்பியிருக்கலாம். ஆனால் புளுகம் அதிகமாகி தவக்களை தன் டீசேர்ட்டை கழட்டி சுழட்டு சுழட்டென்று சுழட்டிவிட்டான். அதுதான் பிரச்சனையாகிவிட்டது. ஏற்கனவே இரண்டு கோல்களைப்போட்டு செல்சி முன்னிலையில் இருந்ததைத் தாங்கமுடியாமல் கறுவிக்கொண்டிருந்த சுதா அக்காவை தவக்களை செய்த வேலை மேலும் உரு ஏற்றிவிட்டது. அக்கா காளியாட்டம் உக்கிரத்தோடு விளையாடத்தொடங்கினார்”
அந்த ஆட்டம் படு உச்சத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நிகழும்.

“தவக்களை ஓடிக்கொண்டிருக்கும்போது அவனுக்குப் பின்னாலேயே வேகமாக ஓடிய சுதா அக்கா, அவனை விரட்டிப்பிடித்து, அவனது கழுசானை இழுத்து கீழே விழுத்தினார். தவக்களை ‘அம்மோய்…’ என்று கத்தியபடியே தடக்கி விழுந்தான். விழுந்தவனை எழ விடாமல் சுதா அக்காவும் அவன்மேலேயே ஏறி விழுந்தார். அதைப்பார்த்த மேலும் இரண்டு லிவர்பூல்காரர்களும் சுதா அக்காவோடு சேர்ந்து தவக்களைமேல் விழ, தவக்களை ஈனக்குரலில் கத்தியபடி உள்ளே நசிந்துகொண்டிருந்தான். வழமைபோலவே செல்சிக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. எல்லோரும் தவக்களையைக் காப்பாற்றவென ஓடினோம். இந்தச்சமயம் பார்த்து அவன் கையிலிருந்த பந்தைப் பறித்து எடுத்த இன்னொரு லிவர்பூல்காரன் வேகமாக ஓடிப்போய் செல்சியில் கோல்போஸ்டுக்குள் அதை எறிந்துவிட்டான். உடனே தவக்களை மேலான மிதியை விடுவித்தபடி எழுந்த சுதா அக்காவும் ஆட்டம் முடிந்தது என்று விசில் ஊதவே, லிவர்பூல்காரர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் வளையம் அடித்துத் துள்ளினார்கள். செல்ஸி அணி அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றது. தவக்களை சப்பளிந்துபோய் எழமுடியாமல் அப்படியே கிடந்தது.”

அதன் பின்னர் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் கட்சி மாறிவிடுவார்கள். ஆனால் தவக்களை தன் நிலை மாறமாட்டான். ஈற்றில் தவக்களை என்ற பாத்திரத்தின் கதி இப்படி முடியும்.
“தவக்களைதான் பாவம், தவறுதலான ஒரு வெடிவிபத்தில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகி ஈழநாதத்தின் நான்காம் பக்க வீரச்சாவு அறிவித்தலோடு அவன் வரலாற்றில் காணாமல் ஆக்கப்பட்டான்.”
அந்தச் சிறுகதையில் அப்படியொரு பாத்திரம் தேவைப்படும்போது இங்கே சந்தைக்கடையில் நிற்கும் தவக்களை அண்ணாதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தார். கொல்லைப்புறக்காதலிகளிலும் “குட்டி” கதையில் அவர் வந்திருக்கவேண்டும். நிஜ பாத்திரமாகவே.

நான் அவரிடம் நெருங்கிச்சென்று வணக்கம் சொன்னேன்.

“எப்பிடி அண்ணை இருக்கிறிங்கள்? நான் ஆரெண்டு தெரியுதா?”

உண்மையில் எனக்குமே அவருடைய நிஜப்பெயர் மறந்துபோய்விட்டது. அல்லது எப்போதுமே எனக்கு அது தெரியாது. அவராலும் என்னை அடையாளம் காணமுடியவில்லை. சேவையரின் மகன் என்றவுடன் கண்டுபிடித்துவிட்டார். ஒரு நிமிடம் நலம் பேசினோம். அதற்குள் வாடிக்கையாளர்கள் வந்துவிட நான் சந்திக்கலாமென்றுவிட்டு சொல்லிவிட்டு சம்பா அரிசி வாங்கப் போய்விட்டேன்.

நா. முத்துக்குமாரின் வரிகள்தான் மறுபடியும் ஞாபகத்துக்கு வருகின்றன.
“காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே”
நம் மனது பெரு மரம் என்றால் நினைவுகள் அதன் இலைகள்போல. அதில் தவக்களை அண்ணைபோல பல மனிதர்கள் உட்கார்ந்துவிட்டு அப்புறம் பறந்துபோய்விடுவார்கள். பல சமயம் பறவைக்குத் தான் எந்தக் கிளையில் உட்கார்ந்தோம் என்று ஞாபகம் இருப்பதில்லை. ஆனால் இலைக்கு அது நிலையான பதிவு. சமயங்களில் அந்த நினைவு குதூகலத்தைக் கொடுக்கும். சில வேளை கோபத்தையும் ஆதங்கத்தையும் கொடுக்கும். சில நேரம் சோகத்தைக்கொடுக்கும். என் நினைவுகளில் எப்போதோ உட்கார்ந்து சென்ற தவக்களை அண்ணையை நினைத்து நான் ஆடிய நடனம்தான் அந்தச் சிறுகதைப் பாத்திரம். ஜூட் அண்ணாவின் ‘பரி. யோவான் பொழுதுகள்’ நூலிலும் சிவகுரு என்றொரு சைக்கிளில் ஐஸ்பழம் விற்கும் பாத்திரம் வரும். நிஜப் பாத்திரம். அந்தப் பாத்திரத்துக்கு ஜூட் அண்ணாவை ஞாபகம் இருந்திருக்குமோ தெரியாது. பின்னாளில் அவர் ஒரு விமானக் குண்டுவெடிப்பில் இறந்துவிடுவார். ஆனால் அவர் இருந்து சென்ற இலை ஆடிய நடனம்தான் ‘பரி யோவான் பொழுதுகள்’ நூலில் ஒரு அத்தியாயமாகவே மாறியிருந்தது.

இப்போது தவக்களை அண்ணையைச் சந்திக்கும்போதுகூட என் சிறுகதையின் முக்கிய பாத்திரமாக அவர் மாறியதை நான் அவருக்குச் சொல்லவில்லை. சொன்னாலும் ‘அப்படியா’ என்று அவர் அதனைக் கடந்துபோகக்கூடும். அவருக்குத் தான் என்னைப்போன்ற ஒரு சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பேன் என்பது தெரிந்திருக்க ஞாயமில்லை.

மனிதர்கள் தாம் அறியாமலேயே பிறர் மனங்களில் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

******

புகைப்படம்: கானா பிரபா 

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...