Skip to main content

லெ. முருகபூபதி



பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்றியிருக்கிறேன். அவரை இளவேனில் சஞ்சிகைக்காக ஒரு நேர்காணல் செய்திருக்கிறேன். அவரோடு மணிக்கணக்காகப் பேசியிருக்கிறேன். அவர் வீட்டுக்குச் சென்று அவர் கையால் புரியாணியும் இறைச்சிக்கறியும் சாப்பிட்டிருக்கிறேன். பல தடவை அவரோடு காரசாரமாகக் கருத்தியல்ரீதியாக முரண்பட்டிருக்கிறேன். நான் இலகுவில் மனிதர்களோடு நட்பு பாராட்டுவதில்லை. குறிப்பாக இலக்கியவாதிகளோடு எனக்கு என்றைக்குமே நெருங்கிய உறவு இருந்ததில்லை. அப்படியே நட்பு பாராட்டினாலும் என் நேர்படப் பேசும் குணத்தைப் பலரும் இரசிப்பதுமில்லை. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வாசிப்பினூடு பலர் என்னிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்களோடு எல்லாம் நேர்மையாகவே நான் பழகியிருக்கிறேன் என்று நம்புகிறேன். பல சமயங்களில் அந்த நேர்மையும் நெருங்கியவர்களிடம் எதையும் மறைக்காமல் பேசும் குணமும் என்னை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுமிருக்கிறது. ஆனால் பூபதி அங்கிள் முள்ளுப்பன்றிபோல நான் சிலிர்த்துக்கொண்டு நிற்கும்போதும் கம்பளிபோலப் போர்த்தி அரவணைக்கும் அன்பாளர்.

ஒரு புனைவு இலக்கியவாதியாக பூபதி அங்கிள் என் வாசிப்பு அனுபவத்துக்குச் செய்த பங்களிப்பை பல மேடைகளில் விளக்கியிருக்கிறேன். “வழிகாட்டி மரங்கள் நகர்வதில்லை”, “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படித்தான்” போன்ற பல நல்ல சிறுகதைகளை முருகபூபதி எழுதியிருக்கிறார். ஒரு அலைபேசியில் இருக்கும் புகைப்படங்களோடு நான் அவருடைய சிறுகதைகளை ஒப்பிடுவதுண்டு. கதைகளை செல்பேசியில் புகைப்படம் எடுப்பதுபோல அவர் பதிவுசெய்வார். சமயத்தில் அவற்றில் சரியான வடிவமைப்பு இருக்காது, ஒளி வெள்ளம் போதாமல் இருக்கும். பொருட்களுக்குப் பின்னாலே ஒளிமூலம் இருக்கும். பல எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் அவற்றையெல்லாம் கவனமெடுத்து ஓரிரண்டு புகைப்படங்களை மாத்திரம் தெரிவு செய்து, திருத்திய பின்னர் எல்லோரோடும் பகிர்வார்கள். முருகபூபதி தன் தரிசனத்தை அப்படியே பதிவுசெய்து திருத்தாமல் கொடுப்பார். அவற்றை ஆழ உள்வாங்கி வாசிக்கும்போது நமக்கும் அந்த தரிசனம் சமயத்தில் கைவரப்பெறும். முருகபூபதி அவர்களுடைய பல கதைகள் அந்த வகையைச் சேர்ந்தவை. முருகபூபதியினுடைய புனைவுகள் எதையுமே முன்னர் வாசிக்காதவர்கள் குறைந்தபட்சம் “வழிகாட்டி மரங்கள் நகர்வதில்லை” என்ற சிறுகதையையாவது வாசிக்கவேண்டும் என்பேன்.

ஈழத்து இலக்கியத்தின் உபாசகராக லெ. முருகபூபதிக்கு எப்போதுமே மிக உயரிய இடம் உண்டு. தனி நபராக அவருடைய ஆவணப்படுத்தல்களின் அளவு கணக்கிலடங்காது. எதை எழுதினால் கவனிக்கப்படும், எது மற்றவர்களால் இரசிக்கப்படும், எதை எழுதினால் இலக்கியவாதியாக இனம் காணப்படுவோம், எதை எழுதினால் சமூகம் நம்மைத் திரும்பிப்பார்க்கும் என்ற அன்றாடக் கவனயீர்ப்பு எழுத்துகளுக்கு மத்தியில் உவத்தல் காய்ச்சலுமின்றி நம் கலை உலகில் பங்காற்றிய அத்தனை ஆளுமைகளையும் அயராது ஆவணப்படுத்துபவர் முருகபூபதி. இதிலே அவர் பிரதி உபகாரங்களையும் யாசிப்பதில்லை. ஒருமுறை அவருடைய கணினி போஃல்டர் ஒன்றை எனக்கு அவர் காட்டினார். நூற்றுக்கணக்காக இலக்கியவாதிகளின் புகைப்படங்களோடு குறிப்புகளை அவர் அதில் சேர்த்து வைத்திருக்கிறார். இன்னமும் அவர்களைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் என் படம்கூட இருக்கிறது. திடீரென்று நாளை நான் மறைந்துபோனாலும் உலகம் தன் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும். அது இயல்பு. ஆனால் முருகபூபதியிடமிருந்து அடுத்த கணமே மூன்று பக்கங்களுக்கு ஒரு கட்டுரை உலகிலுள்ள அனைத்து தமிழ் தளங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். நியூ யோர்க்கர் போன்ற பெரும் பத்திரிகைகளில் இப்படி எல்லோருக்குமான கட்டுரைகளை ஏலவே எழுதித் தயார் செய்து வைத்திருப்பார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முருகபூபதி தனியராக அதைச் செய்துவருபவர். அவர் ஒரு வாழும் பத்திரிகை என்றால்கூட அது மிகை அல்ல.

இதனைவிட இலங்கை மாணவர் உதவி நிதியம் என்ற ஒரு அமைப்பை பல தசாப்தங்களாக முன்னின்று நடத்தி வருபவர் அவர். அதனூடாக பயன்பெற்று இன்று நல்ல நிலையில் வாழும் பல மாணவர்களின் கதைகளை அவர் பெருமையோடு பகிர்ந்துகொள்வார். ஒரு பக்கம் எழுத்து, இன்னொரு பக்கம் இலக்கிய நிகழ்வுகள். அவ்வப்போது உலகச் சுற்றுலா. ஊர்ப் பயணம். வீட்டிலே சமையல். இப்படி கால்கள் இரண்டிலும் சக்கரம் பூட்டிச் சுற்றி வருபவர் என் அன்புக்குரிய பூபதி அங்கிள் அவர்கள்.

அவர் இப்போது நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னர் நானும் ஜீவியும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். முழங்காலுக்குக் கீழே இரத்த ஓட்டம் இல்லாமல் அவதிப்பட்டதில் பல்வேறு உடற்சிக்கல்கள் அவரை ஆட்கொண்டிருந்தன. உணவுப்பொருட்கள் எதையும் கொண்டுவரவேண்டாம் என்று அவர் எம்மிடம் சொல்லியிருந்தார். அதனால் நாம் தாட்சாயியினியின் “வெண் சுவர்” புத்தகத்தை எடுத்துப்போயிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு" இந்த எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருக்கிறேன், நிச்சயம் வாசித்து கட்டுரை ஒன்றும் எழுதுவேன்” என்று சொன்னார். “அதை விடுங்க அங்கிள், நீங்கள் எப்படியிருக்கிறிங்கள்?” என்று கேட்டபோது அவருக்குக் கண் கலங்கிவிட்டது. “எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை வரவேண்டும்?” என்று குரல் குழறியது. “இங்கே ஒருவனின் நோயை அகற்ற ஒரு மாதமாக வைத்தியர்களும் தாதியர்களும் என்ன பாடு படுகிறார்கள். ஆனால் அங்கே அந்த புடினும் நேத்தன்யாகுவும் பாவப்பட்ட குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் குண்டுபோட்டுக் கொல்கிறார்கள்” என்று அவர் சொன்னபோது அவரின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடியது. தன் வலியை எங்கோ குண்டுத்தாக்குதலில் அல்லலுறும் குழந்தைகளின் வலியாகப் பார்க்கக்கூடிய மனிதம் அது. இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்தனம்?

“அங்கிள் விரைவில் குணமடைய வேணும். நாங்கள் மறுபடியும் வரும்போது பழைய உற்சாகத்தோடு உங்களைப் பார்ப்போம்”

என்று சொல்லியபடியே நாம் அன்று விடைபெற்றோம். பின்னர் சென்ற சனிக்கிழமை அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “தம்பி காலை எடுத்திட்டாங்கள்” என்று அவர் சிரித்தபடியே சொல்ல எனக்குக் கால்கள் உதறல் எடுத்தன. “என்ன அங்கிள் சொல்றீங்கள்?” என்றேன். கடந்த தடவையே அவர் எமக்கு அதனைப் பூடகமாகச் சொன்னபோது என் மனம் அதனை நம்ப இடம் கொடுக்கவில்லை. இப்போது உண்மையிலேயே அது நிகழ்ந்துவிட்டது என்றபோது மனம் ஒரு நிலை கொள்ளாது தள்ளாடியது. மறுபடியும் வைத்தியசாலைக்குச் சென்றேன். அவரைப் பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினேன்.

“தம்பி ஒரு குட் நியூஸ் தெரியுமா?”

எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. “என்ன அங்கிள்” என்று மெதுவாகக் கேட்டேன்.

“எங்க தோழர் சனாதிபதி ஆயிட்டார். நான் இண்டைக்கு நாட்டில நிக்கோணும் தம்பி. ஆனா இப்படியாப்போயிற்றுது”

முருகபூபதி ஆரம்ப காலத்து ஜேவிபி செயற்பாட்டாளர். அக்காலத்தில் நீர் கொழும்பிலும் மேலும் பல இடங்களிலும் ஜேவிபி மேடைகளில் உரையாற்றியவர். காவல்துறையால் தேடப்பட்டவர். அந்த அச்சுறுத்தல் காரணமாகவே அவுஸ்திரேலியாவுக்கு எண்பதுகளில் வந்து சேர்ந்தவர் அவர். தன்னுடைய பல நூல்களில் ஜேவிபிகால அனுபவங்களை அவர் எழுதியிருக்கிறார். இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து அதே ஜேவிபியின் உறுப்பினர் ஒருவர் அந்த நாட்டுக்கே சனாதிபதியாகியிருப்பதன் விந்தையை அவர் பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“தம்பி, எங்க தோழர் கல்வியையும் சுகாதாரத்தையும் கவனத்தில எடுத்தா போதும், நாடு சுபீட்சமாயிடும்”

நான் மெதுவாகச் சொன்னேன்.

“சரி அங்கிள், அவையள் அத பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் முதலில உங்கட சுகத்தை கவனியுங்க”

சத்திர சிகிச்சை செய்த இடம் ஆறிய பின்னர், சக்கர நாற்காலியை எப்படிப் பயன்படுத்துவது, எப்படித் தன்னுடைய காரியங்களைத் தானே செய்வது என்பது பற்றிய பயிற்சியை அவருக்குக் கொடுப்பார்களாம். அதன் பின்னர் காலப்போக்கில் புண் ஆறியதும் செயற்கைக் காலும் பூட்டுவார்கள். எல்லாமே காலக்கிரமத்தில் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

“தம்பி என்னுடைய பேத்தி என்னைப்பற்றி ஆங்கிலத்தில் கவிதை சொல்லுறா. ஆனா அவ எழுதின கவிதை இல்ல. கொம்பியூட்டரே என்னைப்பத்தி கவிதை சொல்லுது தம்பி”

நான் சிரித்தபடியே பக்கத்தில் நின்ற பேத்தியிடம் ‘chatGPT’யா என்று கேட்க அவரும் தலையாட்டினார்.

“இதை ஒரு நாவலா எழுதும் தம்பி. நான் ஒபரேசன் தியேட்டருக்க போகேக்க கந்தசாமியர் கலக்சிக்குள்ள போனமாதிரித்தான் இருந்துது தம்பி. சிரிப்பும் வந்திட்டுது”

எனக்கு சாதுவாகக் கண்கள் கலங்கிவிட்டன. எப்படி முடிகிறது இந்த மனிதரால்? உலகம் முழுதும் ஓடித்திரிந்தவரின் காலை அகற்றிவிட்டார்கள். ஆனால் மனுசன் அனுர ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடுகிறார். பாலத்தீனத்தில் குழந்தைகள் கொல்லப்படுவதை நினைத்து அழுகிறார். வருத்தம் பார்க்க வந்தவனிடம் உற்சாகமாகப் பேசி எழுத ஊக்குவிக்கிறார். என்ன மனுசனப்பா.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு விரக்தியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டு மின்மடல் அனுப்பியிருந்தேன்.

“முப்பது வருடங்களாக எப்படி நீங்கள் இந்த அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தைச் சமாளித்தீர்கள்? காசு இல்லாமலேயே இந்தப் பனங்கொட்டைச் சமூகம் ஊரில் அடித்த கொட்டத்துக்கு அளவு இல்லை. இங்கு வந்து, காசும் மெத்திப்போனபின்னர் அவர்களின் அட்டகாசத்தை நேற்று வந்த என்னாலேயே சமாளிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் எப்படியோ இத்தனை நாள் சமாளித்துவிட்டீர்கள். அதிலிருந்து கொஞ்சம் பாடம் படிக்க ஆசையாக இருக்கிறது.”

அங்கிள் உடனே எனக்குப் பதில் அனுப்பவில்லை. அடுத்த நாள் ஒரு நீண்ட மடல் அவரிடமிருந்து வந்திருந்தது.

அன்புள்ள தம்பி ஜே.கே. காலை வணக்கம்.


உங்களது மடல் இன்று காலைவேளையிலேயே என்னை மிகவும் சிரிப்பில் ஆழ்த்தியது. எனது கைத்தொலைபேசியிலேயே பார்த்துவிட்டு சிரித்தேன்.

"சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால், எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் கற்பனை செய்பவர்களும்தான் எம்மைப்போன்ற படைப்பாளிகள்."

இது நான் சொன்ன கூற்று அல்ல. 1989 ஆம் ஆண்டு நண்பர் செங்கைஆழியான் எனது சமாந்தரங்கள் கதைத் தொகுப்பிற்கான தனது விமர்சனத்தில் ( மல்லிகையில் வெளியாது ) குறிப்பிட்டிருந்தார். நான் இந்த கங்காரு தேசத்தில் 1987ஆம் ஆண்டு முதல் வசிக்கின்றேன். எனக்கு இனி இதுதான் கதி. தாயகம், எனது தன்னார்வத் தொண்டு பணிகளுக்கு அப்பால் (எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் - 35 வருடங்கள் ) தவிர்ந்து ஒரு சுற்றுலாத்தலமாகிவிட்டது.

இங்கு பெரும்பான்மையாக வாழும் எமது ஈழத்தமிழர்கள் குறித்து உங்கள் பார்வையில் ( கற்பகதருவை அடியொற்றி ) நீங்கள் சொன்னது எனக்கு உவப்பானது அல்ல. நீங்கள் உங்கள் படைப்புகளில் எத்தனை வகையான பாத்திரங்களை படைத்திருக்கிறீர்கள். அவற்றுக்கு உயிரும் உணர்வும் ஊட்டியவர் நீங்களேதான். அவை எமக்கு எங்கிருந்து கிடைக்கின்றன? இந்த சமூகத்திலிருந்துதானே?

எனக்கு தற்போது 73 வயதாகப்போகிறது. தாயகத்தில் 36 வருடங்களும் புகலிடத்தில் 36 வருடங்களும் கழிந்துவிட்டன. இடையில் இழப்புகள், சோதனைகள், ஏமாற்றங்கள், வேதனைகள்.. மன நிறைவுகள், மகிழ்ச்சிகள் என்று எத்தனையோ கடந்து சென்றுவிட்டன. தெளிவையும் - தெரிவையும் நோக்கிச்செல்ல வேண்டிய காலத்திற்கு வந்தாயிற்று. அந்தக்கட்டத்தை நோக்கி நீங்களும் ஒரு நாள் நகருவீர்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்தச் சமூகம் அறியாமை, ஆணவம், பொறாமை, எரிச்சல், துரோகம் என்பவற்றினால் சூழ்ந்திருக்கிறது. பணவசதி வந்த பின்னரும் அவை அதிகரித்துமிருக்கிறது. அத்தகைய சமூகத்துக்குள் சுழியோடித்தான் நாம் முத்துக்களை தேடுகின்றோம். நீங்கள் தேடியிருக்கிறீர்கள்( உதாரணம்: மெல்பன் வாசகர் வட்டம் )

என்றும் அன்புடனும் பக்கத் துணையுடனும்

உங்கள் முருகபூபதி

ஏனோ தெரியாது. எனக்கு இந்த அவ்வை பாட்டுதான் இக்கணம் ஞாபகத்துக்கு வருகிறது.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.


முருகபூபதி நம் காலத்தில் நமக்கு மத்தியில் வாழ்கின்ற மேன்மகன். அவரைக் கொண்டாடுவோம்.

****
இளவேனில் நேர்காணல்
சொல்ல மறந்த கதைகள்
சொல்லவேண்டிய கதைகள்
கந்தசாமியும் கலக்சியும்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...