தாமதமாகச் சென்றதாலோ என்னவோ குருநகர்ச் சந்தைக்குள் நுழையும்போதே நாறல் வாசம் குப்பென்று மூக்கில் அடித்தது. நான் வழமையாக மீன் வாங்கும் செல்லர் அண்ணையைத் தேடினேன். ஆளை எங்குமே காணவில்லை. பல நாட்களாக மீன் சந்தைக்கு வராததால் இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சைக்கிள் பார்க்கிங் ரிசீப்ட்டைத் தேடி வந்து கொடுத்த தம்பியிடம் செல்லர் எங்கே என்று கேட்டேன். “அவர் மோசம் போய்க் கனகாலம் ஆயிட்டு. இப்ப பிள்ளையள்தான் கடையளை நடத்தினம்” அவர் காட்டிய திசையில் மூன்று வெவ்வேறு கடைகள் தெரிந்தன. மூன்றையுமே செல்லரின் பிள்ளைகள்தான் நடத்தினார்கள். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த கடை பின்னர் பிரச்சனைப்பட்டுக் கழன்று மூன்றாக மாறிவிட்டதாக பார்க்கிங் தம்பி சொன்னார். நான் அவர்களை நோக்கிப் போனேன். என்னைத் தூரத்தில் கண்டதுமே ஒருவன் கத்த ஆரம்பித்தான். “அண்ணை அந்தக் கடைக்குப் போகாதீங்க. பாரை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் எடுத்துப்பார்த்தா அது கட்டா அண்ணை. பேசி வெல்ல மாட்டியள். கட்டாவும் பாரை எண்டு வியாக்கியானம் கொடுப்பார். போயிடாதீங்கள்” நான் அவனிடம் கேட்டேன். “அவர் கிடக்கட்டும். நீ என்ன தம்பி விக்கிற