இறுதி யுத்தக் காலத்தில் நம் மக்களுக்கு அளப்பரிய மருத்துவ சேவையாற்றிய வரதராஜாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் “Untold truth of Tamil genocide” என்ற நூலை வாசித்து அதனைப்பற்றிய சிறு அறிமுகத்தைச் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.
75ம் ஆண்டு திருகோணமலை தம்பலகாமத்தில் பிறந்த வரதராஜா கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக வடக்குக் கிழக்கு முழுதுமே நம் ஈழ வரலாற்றோடு கூடவே இழுபட்டுப்போயிருக்கிறார் என்ற எண்ணம்தான் அவர் கதையை அறியும்போது தோன்றியது.
முதலில் தம்பலகாமத்திலிருந்து கிண்ணியாய் கிராமத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயருகிறது. பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவுக்கு நகருகிறார்கள். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு வீடு அமையவில்லை. உதவி செய்ய நண்பர்களோ உறவுகளோ இருக்கவில்லை. பதினொரு வயதுச் சிறுவன் ஒரு கடையில் கூலியாளாக வேலை செய்கிறான். அப்போது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அவன் சித்தியடைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. அதனால் படிப்பைத் தொடரலாம் என்று புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் அவன் இணைந்துகொள்கிறான். பகலில் பாடசாலை. மாலையில் கடையில் வேலை என்று சிறுவனின் வாழ்க்கை தொடர்கிறது.
இப்போது இந்திய அமைதிப்படை ஈழத்துக்கு வருகிறது. நாட்டு நிலைமைகள் மறுபடியும் சீராகிவிடும் என்ற நம்பிக்கையில் வரதராஜாவின் குடும்பம் மறுபடியும் தம்பலகாமத்துக்குச் செல்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை மூன்று வருடங்களில் குலைந்துபோக, தொண்ணூறாம் ஆண்டு மீண்டும் அவர்களது குடும்பம் இடம்பெயர நேருகிறது. சிறுவனாக இருந்த வரதராஜாவுக்கு இப்போது பதினைந்து வயது. அதனால் அவரும் அந்த ஊரின் ஏனைய இளைஞர்களும் அச்சத்தில் காட்டினுள்தான் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்கள். பின்னர் இந்தத் துன்பம் வேண்டாமென்று அவர்கள் காட்டுக்குள்ளால் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்து மறுபடியும் புதுக்குடியிருப்புக்கு வந்து சேருகிறார்கள். அங்கு இவர் வாழ்ந்த காலத்தில்தான் புதுக்குடியிருப்பு சந்தை விமானக் குண்டுவீச்சுப் படுகொலை நிகழ்த்தப்படுகிறது. அதில் வரதராஜாவுக்குத் தெரிந்த சிலர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமுறுகிறார்கள். மொத்தமாக இருபத்தெட்டு மனிதர்கள் தமது உயிரை அங்கே இழந்திருக்கிறார்கள்.
வரதராஜா அங்கிருந்து படித்து உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் மருத்துவப் பீடத்துக்குத் தெரிவாகிறார்.
அவர் யாழ்ப்பாணத்தில் படித்த காலத்தில்தான் கிரிசாந்தி குமாரசுவாமியின் பாலியல் வல்லுறவும் கொலையும் இலங்கை அரசுப்படைகளால் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து செம்மணிப் புதைகுழிகள் பற்றிய விபரம் வெளி உலகுக்குத் தெரியவருகிறது. வரதராஜா மருத்துவப் படிப்பை முடித்து குருநாகலையில் பயிற்சி பெறுகிறார். அவர் 2004ல் விடுமுறையில் முல்லைத்தீவில் வந்து நின்ற சமயத்தில்தான் அங்கு சுனாமி தாக்குகிறது. அக்காலத்தில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நின்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றுகிறார்.
குருநாகலையில் பயிற்சி முடிந்ததும் வரதராஜாவுக்கு அம்பாறை மாவட்டம், கல்முனையில் மருத்துவச் சேவை நியமனம் வழங்கப்படுகிறது. இக்காலத்தில்தான் அவருக்குத் திருமணமும் நிகழ்கிறது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வாகரைப்பகுதியில் மருத்துவர்கள் எவரும் பணியாற்ற உடன்படாத காரணத்தால் வரதராஜா தானே அங்கு செல்வதற்கு முன்வருகிறார். அக்காலத்தில் முத்தூர், சம்பூர், ஈச்சிலம்பற்று கிராமங்களில் பணியாற்றும்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை வாசிக்கும்போது நம் உடல் நடுங்கி அடங்கும்.
வாகரையிலிருந்து பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றலாகிறார். ஆனால் அங்கேயும் பரா மிலிட்டரியினரின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி வன்னிக்குச் சேவையாற்ற வருகிறார். பின்னர் இறுதி யுத்தம்வரை அவர் வன்னியிலிருந்து மக்களுக்கு ஆற்றிய சேவை, போரில் செல்லடி பட்டுக் கடும் காயமுற்றது, பின்னர் இராணுவத்தினரிடம் விசாரணை என்ற பெயரின் அடைந்த பல துன்பங்கள் என்று வைத்தியர் வரதராஜாவின் வாழ்வு என்பது சொற்களினுள் எழுதி முடிக்க முடியாத ஒரு வரலாறு.
திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு என்று வரதராஜா ஈழத்தின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகள் முழுக்க வாழ்ந்த ஒரு வரலாற்றின் சாட்சியம். வரலாறு தன்னைக் குறிப்பெடுப்பதற்காக ஒருவரைக் கூடவே வைத்திருக்கவேண்டும் என்று அவரைத் தான் போகுமிடமெல்லாம் அழைத்துச்சென்றிருக்கிறது. தமிழர் நிலங்கள் பலவற்றில் வாழ்ந்து சேவையாற்றிய வரதராஜா போன்றோரின் வாழ்க்கைகளை நாம் இன்னமும் விரிவாக அறிந்துகொள்ளவேண்டும். அவற்றினூடாக நாம் நம்முடைய வாழ்க்கையினை அறிந்துகொள்ளமுடியும். நம்மை அறிந்துகொள்ள முடியும்.
History of Rain என்ற நாவலில் இடம்பெற்ற இந்த வாசகம் இக்கணம் ஞாபகத்துக்கு வருகிறது.
We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling.
நம் கதைகள்தான் நாம். நாம் தொடர்ந்தும் உயிர்த்திருக்க அவற்றைச் சொல்கிறோம். இப்போது வாழ்பவரை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் அவற்றைச் சொல்கிறோம்
வரதராஜாக்களின் கதைகளை நமக்காக நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
***
வெளியீட்டு நிகழ்வில் எனது உரை.
Comments
Post a Comment